Tuesday, March 29, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2. 1

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை. - பகுதி - 2-1

காசிப்பயணம். -1.

முன் காலத்தில் காசி யாத்திரை போவதென்றால், இறுதிப் பயணம் என்பதாகவே சொல்வார்கள். காரணம் போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் எத்துனை சிரமப்பட்டாலும், காசி விசுவநாதரை தரிசிப்பதையே வாழ்நாளின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர் பல்லோர்.

ஆனால் இன்றைய நிலையே வேறு. எத்துனை விதமான போக்குவரத்துகள். அதுவும் இந்த விமானப் பயணம் எளிமையாக்கப் பட்டவுடன், ஆண்டவனின் தரிசனம் பெறுவது எளிதான வரமாகிவிடுகிறது. காரணம், பழைய காலம் போன்று குடும்பம், தொழில் என்று அனைத்தையும் விட்டு மாதக்கணக்கில் நேரம் செலவிட வேண்டிய தேவை இருப்பதில்லை. எல்லாம் அவன் செயல்!

நாங்கள் கோவையிலிருந்து விமானம் மூலம் முதலில் தில்லி சென்று அங்கிருந்து காசி செல்வதாக முடிவெடுத்திருந்தோம் காரணம் எங்கள் மகள் தன் குடும்பத்துடன், அமெரிக்காவிலிருந்து, தில்லி வந்து எங்களுடன் சேர்ந்து கொள்வதாகத் திட்டம். இந்த இடத்தில் முதலில் நான் இன்னம்பூர் ஐயாவையும், திரு தேவ் அவர்களையும் நினைவு கூறாவிட்டால் நன்றி மறந்தவளாவேன். ஆம் நாங்கள் தில்லி பயணம் என்று ஆரம்பித்தவுடனே இ ஐயா , எனக்கு ஒரு அருமையான நண்பர் தில்லியில் இருக்கிறார். அவர் ஒரு நல்ல பத்திரிக்கை ஆசிரியர், அவர் பெயர் பெண்ணேஸ்வரன், மிக நல்ல மனிதர் என்று அறிமுகப்படுத்தினார். திரும்பவும் என் கணவரிடமும் கூறினார். ஆனால் நாங்கள்தான் ஏன் அவருக்கு சிரமம் கொடுக்க வேண்டும் என்று அமைதியாக இருந்து விட்டோம். ஆனால் திரு தேவ் ஐயாவோ, தானே திரு பென் ஐயாவை தொடர்பு கொண்டு எங்களைப் பற்றிச் சொல்லி முடிந்த உதவி செய்யுமாறு கூறிவிட்டார்.

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்பவர்கள் உலகில் வெகு சிலரே. அதில் திரு பென் சாரும் ஒருவர். அத்துனை நல்ல உள்ளம் கொண்ட மனிதர். தில்லியை சென்று அடைந்தவுடன், எங்களை முதன் முதலில் தொடர்பு கொண்டவர் அவர்தான். மனிதர் நாங்கள் போன் செய்து பேச வேண்டும் என்று கூட எதிர்பார்க்கவில்லை. பல் வலியினால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு, பல மணி நேரங்கள் மருத்துவமனையில் செலவிட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த அந்த சூழலில் கூட எங்களை மறக்காமல், தானே போன் செய்து தொடர்பு கொண்டார். அது மட்டுமல்ல, விமான நிலையத்திற்கே எங்களுக்கு காரும் அனுப்பி வைத்தார். ஆக தில்லி மாநகரத்தின் புறாக்கூட்டம் கூட பென் சாருக்குப் பிறகுதான் எங்களுக்கு அறிமுகம்! வட நாட்டுப் பயணம் எங்களுக்கு புதியதாகினும் பென் ஐயாவின் தயவால், மிக எளிதாக வாகன வசதி, தங்கும் இடம் (அதுவும் மிகவும் பாதுகாப்பான மற்றும் குறைந்த வாடகையில்) மட்டுமன்றி, பாராளுமன்றம் பார்ப்பதற்கான அனுமதியும் வாங்கிக் கொடுத்தார். ஒரு நல்ல சகோதரர் அங்கு இருந்தால் என்னென்ன உதவிகள் ஒரு சகோதரிக்குச் செய்வாரோ, அத்தனை உதவிகளும் செய்தாரவர். ஆனால் இத்தனைக்கும் அந்தப் பயணத்தின் போது ஒரே முறைதான் அவரைச் சந்திக்க முடிந்தது. டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி மதியம் 14.50 க்கு தில்லி சென்று அடைந்தோம். காலை 11.40 க்கு கோவை விமான நிலையத்தில் கிளம்பி 2 மணி 10 நிமிடத்தில் தில்லி சென்று அடைந்தோம்.

அன்று மாலை நாங்கள் தங்கியிருந்த வேதாந்த மடத்திலிருந்து, விமான நிலையம் வெகு தொலைவு அல்ல என்பதும் ஆறுதலாக இருந்தது. காரணம் நாங்கள் சென்ற அந்த டிசம்பர் மாதம் உச்சமான குளிர்காலம். நாங்கள் தேவையான குளிர் உடைகள் அனைத்தும் எடுத்துச் சென்றிருந்ததனால், ஓரளவிற்காகவாவது சமாளிக்க முடிந்தது. ஆனால் பனி மூட்டம் மிக மோசமாக இருந்த காரணத்தினால் ஓட்டுநர் மிகவும் சிரமப்பட்டார், பாதையைக் கனடுபிடிப்பதற்கு. அன்று எங்களுடைய முக்கிய நிகழ்ச்சியே பென் சாரைச் சந்திப்பதுதான். அன்று மாலை அவரைச் சந்தித்து நானும் என் கணவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். அந்த சில மணித்துளிகளில் வெகு சரளமாக தன் வாழ்க்கைப் பற்றியும், தில்லி வாழ்க்கை முறை பற்றியும், தன் பத்திரிக்கை வளரும் விதம் பற்றியும் மிக இயல்பாக பல நாட்கள் பழகியவர் போல பேசிக் கொண்டிருந்தார். அன்று இரவு கடுங்குளிர் காரணமாக வெளியில் எங்கும் செல்லும் எண்ண்ம் வரவில்லை. அடுத்த நாள் காசிப் பயணம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்து முடித்தோம்.

வருண பகவான் ஆசி கூறும் விதமாக தூறல்களாக இட்டு, குளிர்ந்து, இறைவன் தண்ணளி போல் விளங்கியது.


22 ஆம் தேதி மதியம் 14.20 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலமாக தில்லியிலிருந்து, கிளம்பி 15.45 மணிக்கெல்லாம் வாரணாசி வந்தடைந்து விட்டோம்.

நாங்கள் கிளம்பிய தினம் டிசம்பர் 21 ஆம் திகதி, புனித திருவாதிரைத் திருநாள். அன்று சிவபெருமானுக்கு மிக விசேசமான நாள். திருவாதிரை விரதம் என்பது சைவ சமயப் பெண்களுக்கு மிக முக்கியமான ஒரு விரதமாகும். இந்த விரதம் மட்டும் எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது என்பர் பெரியோர். திருமணம் ஆகாத பெண் குழந்தைகள் தனக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டியும், திருமணம் ஆன பெண்டிர் தன் கணவர் நீண்ட ஆயுளுடனும், சகல செல்வங்களுடன் மனம் நிறைந்து வாழ்வதற்கும் ஆண்டவனிடம் விண்ண்ப்பிக்கும் ஒரு விரதமாகும்.

இளையான்குடி மாற நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவனடியார்களுக்கு உணவு அளித்தபின்பே தங்கள் பசியாறும் வழக்கமுடையவர்கள். கடும் வறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த வேளையில், வயலில் விதை நெல் விதைத்திருந்தனர். இளையான்குடி மாறனாரும் அவர்தம் மனைவியாரும் உணவு உண்ணாது இருந்த நாளில் இறைவர் அவர் இல்லத்தில் எழுந்தருள, அவருக்கு உணவு சமைக்க வழி அறியாத தம்பதியர், வயலில் விதைத்த விதை நெல்லை வாரி கொண்டு வர செல்கின்றனர். புள்ளும் உறங்கும் நள்ளிரவு வேளையில், வயலுக்குச் சென்று கொண்டுவந்த நெல்லை அலசி உமி நீக்கி, அதை வீட்டில் இருந்த கொஞ்சம் வெல்லத்தைப் போட்டு, களி செய்து அதை ஆண்டவனுக்குப் படைக்கின்றனர். ஆண்டவன் மீது இந்த தம்பதியர் கொண்ட மாறாத அன்பு உலகிற்கு தெரிய வருகிறது. ஆண்டவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. இந்த நாளைத்தான் நாம் திருவாதிரை என களி செய்து வைத்து ஆண்டவனுக்குப் படைக்கின்றோம். இதையே தெய்வப் புலவராம், சேக்கிழார் பெருமான்,

உள்ளம் அன்பு னொண் டுக்கவோர் பேரிடாக்
கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்
புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார்
வள்ளலார் இளையான்குடி மாறனார்.

வாரணாசியில் விமானம் விட்டு இறங்கி அங்கிருந்து முன் கட்டணப் பதிவு ஊர்தி எடுத்துக் கொண்டு நாங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த ஆச்சி மடம் நோக்கி கிளம்பினோம். விமான நிலையத்திலிருந்து கோவில் இருக்கும் இடம் சுமாராக 22 கி.மீ. இருக்கும். வழி நெடுக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தினால்,ஸ்ரீ காசி நாட்டுக் கோட்டை நகர சத்திரம், சென்று அடைவதற்கு 1 மணி 20 நிமிடங்கள் ஆகிவிட்டது. ஊரே கோவிலாக இருக்கும் அதிசயம் அங்கு காணலாம். அதாவது பழமை மாறாத தெருக்கள்,அதைவிட நாங்கள் தங்கியிருந்த சத்திரம் பற்றி கூற வேண்டும். குறைந்தது 400 ஆண்டுகள் பழமையான கட்டிடம். அங்கங்கு வர்ணம் மட்டும் பூசி புதுப்பித்துள்ளார்கள். காலத்திற்கேற்றவாறு குளிர்சாதனங்கள் போன்ற வசதிகள், இவை மட்டும் தான் சற்றே புதுமையைத் தோற்றுவிக்கிறது. நாங்கள் சென்று சேர்ந்தது மாலை நேரம். 198 வருடங்கள் பழமையான கட்டிடம், மிக உயரமான படிகள், மூன்று மாடிகள் பெட்டியையும் தூக்கிக் கொண்டு ஏற வேண்டும். வெளி ஆட்கள் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

எப்படியோ பெட்டியையும் தூக்கிக் கொண்டு மேலே ஏறிச் சென்று அங்கு அந்த சத்திரத்தின் மேனேஜரைச் சென்று பார்த்தோம். எங்களைப் பார்த்தவுடன், என்ன....என்ன வேண்டும்........என்றாரேப் பார்க்கலாம்!

அவ்வளவு கரடு முரடாகக் கூடவா ஒரு புதிய மனிதரிடம் நடந்து கொள்வார்கள் என்று எண்ணியதென்னவோ உண்மைதான். ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்த போது தவறாக நினைத்ததற்கான வேதனை இருக்கத்தான் செய்தது. ஒருவரைப் பார்த்தவுடன் எடை போடுவது எவ்வளவு முட்டாள்தனம். என்பதற்கும் ஒரு உதாரணமானது அந்த சம்பவம்.

காசி விசுவநாதர் ஆலயத்திற்கு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக நித்ய பூசைக்கான நைவேத்தியங்கள் மேற்படி சத்திரத்திலிருந்துதான் செல்கிறது. அவர்கள் கொடுக்கிற அனுமதிச்சீட்டு எடுத்துக் கொண்டு போனால் இரவு நேர அர்த்த சாம பூசை முழுவதும் சுவாமியின் திருமுன் அமர்ந்து திவ்யமாக தரிசனம் பெறலாம் அங்கேயே சத்திரத்திலேயே முன் கூட்டியே பதிவு செய்தால் மூன்று நேர உணவும் தயார் செய்து கொடுக்கிறார்கள். அன்று இரவே அபிசேகம் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. இறைவன் திருமுன் அமர்ந்து, குடம் குடமாக பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என அனைத்து அபிசேகம் மற்றும் திருமணக் கோல அலங்காரமும் கண்டது கண் கொள்ளா காட்ட்சிகள். ஆண்டவன் திருமேனி அத்துனை அழகு, அதுவும் பெரிய வெள்ளியிலான ஐந்து தலை நாகம் கவசம், குடை பெரிய மாலைகள் என சுவாமியின் அலங்காரம் கண் கொள்ளா காட்சி!

கிழக்கு ரயில்வே, வடக்கு ரயில்வே இந்த இரண்டு ரயில்வேக்களை இணைக்கும் மோசல் சராய் ஜங்சனில் இருந்து காசி (ராஜ்காட் ஸ்டேசன் ) 7 மைல் தூரத்தில் இருக்கிறது. இதற்குப் பிறகுதான் பனாரஸ் கண்டோன்மென்ட் ஸ்டேசன் இருக்கிறது. காசி இரயில் நிலையத்திலிருந்து விசுவநாதர் கோவில் சுமார் 2 மைல் தூரத்தில் இருக்கிறது. காசி நகரத்தின் வடக்கில் வருணா நதியும், தெற்கில் அசி நதியும் கங்கை நதியில் கலக்கின்ற காரணத்தால், காசி வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது. ஆதி காலத்திலிருந்தே காசி இந்துக்களின் புனிதத் தலமாக இருந்து வந்துள்ளன.

சிவபெருமான், தன்னுடைய திரிசூலத்தின் மீது கால்களை வைத்து நின்று காசி மாநகரத்தைப் படைத்தார் என்பர் முன்னோர். பகவான் சங்கரர் இந்த காசி நகரத்திலிருந்துதான் வந்தார் என்றும் நம்பப்படுகிறது.ஆகவே எந்த ஒரு உயிரினமும், தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து, சிவலோகம் சித்திக்கப் பெறுவார்கள் என்பதும் ஐதீகம். ஆகையால் பலர் காசியிலேயே இறந்துவிட வேண்டும் என்ற பேராவலில், தங்கள் இறுதிக் காலங்களை இங்கேயே கழிக்க விரும்புகிறார்கள்.

காசி விசுவநாதர் கோவில் ஔரங்கசீப் அழித்து விட்டதால், தற்போது உள்ள கோவில் மகாராணி அகல்யா பாயினால் கட்டப்பட்டது என்கின்றனர். இதுமட்டுமன்றி பஞ்சாப் நாட்டு அரசர் ராஜா ரஞ்ஞித் சிங் என்பவர் தங்கங்களையும் பதித்து வைத்துள்ளார் என்கின்றனர். காசி விசுவநாதர் ஆலயத்தின் கோபுரம் 51 அடிகள் உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டுள்ளது.இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிப்பதாக உள்ளது இதன் சிறபம்சமாகும். கசி விசுவநாதரின் ஆலயத்தில் சாவன் மாதத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கின்றனர்.

இந்தோர் மகாராணி அகல்யா தேவியால், 1785 இல் கட்டப்பட்ட இக்கோவிலில் ரஞ்ஞித் சிங் ராஜாவால் 22 மனு தங்கம் வைக்கப்படுள்ளது என்கிறார்கள். அன்று இரவு இராக்கால பூசை முடிந்து சத்திரம் திரும்ப,11 மணி ஆகிவிட்டது. திவ்ய தரிசனத்தின் இன்பமான நினைவுகள் மனதிற்கு ஆழந்த அமைதியை ஏற்படுத்தியது. இதுதானே ஆன்மீகத்தின் நிதர்சனம்!

அடுத்த நாள் காலை விசுவரூபதரிசனமும், அபிசேகமும், விடியற்காலை 3 மணிக்கே ஆரம்பித்து விடும் என்றார்கள். அதற்கும் செல்வது என்ற முடிவுடன் தான் படுத்தோம். ஆனால் பயணக் களைப்பு மற்றும் இரவு நேரம் கழித்து வந்ததாலும் காலை எழுந்து கிளம்ப சற்று கால தாமதம் ஆகிவிட்டது. அந்த பயங்கரக் குளிரிலும், கொதிக்கும் வெண்ணீர் குளியல் இதமாகத்தான் இருந்தது. 7 மணிக்குத்தான் கிளம்பி கோவிலுக்குச் செல்ல முடிந்தது. நாமே நம் கையால் ஆண்டவனுக்கு பாலபிசேகம் செய்யும் வரமும் மற்ற வட நாட்டுக் கோவில்கள் போல இங்கும் கிடைக்கும்.

கோவிலுக்குச் செல்வதற்காக அறையை விட்டு வெளியே வந்தபோது மேனேசர் ஒரு தம்பதியினரிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பின் அறியாதவர்களிடம் கூட இப்படி இவ்வளவு கோபம் காட்ட முடியுமா என்று. உதவி என்று வருபவர்களுக்கு சற்று இன்முகத்துடன் பழகினால் நன்றாக இருக்குமே என்று உள்ளத்தினில் உறுத்தியது, முகத்தில் தெரிந்து விட்டது போல. இல்லாவிட்டால், சேவை செய்வதற்காக வந்திருந்த ஒரு முதியவர், தானே அருகில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த மனிதரை தவறாக எண்ண வேண்டாம், வேலைப்பளு அவரை அப்படி கோபப்படச் செய்கிறது. அவர்கள் முன் பதிவு செய்யாமல் திடீரென்று வந்து ரூம் கேட்கிறார்கள், அதனால்தான் அவர் டென்சன் அகி விட்டார். வாடிக்கையாக வருபவர்களாதலால், தவிர்க்கவும் முடியாமல் தடுமாறுகிறார். உடனே நான், இருந்தாலும்.......என்று இழுத்தேன்.

அவருக்கு லேசாக என் மீது கோபம் வந்தது போல இருந்தது. நெற்றியில் முடிச்சு விழ என்னை உற்று நோக்கியவர், பேசாமல் திரும்பிப் போனவர், என்ன நினைத்தாரோ திரும்ப வந்து, எங்கள் அருகில் வந்தவர், அம்மா அவரைப் பற்றி, நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் அம்மா, அவர் மாமனிதர் அம்மா என்றார்.. எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அப்பொழுது அவர் கூறிய விசயம் கேட்டு நாங்கள் மிகவும் நெகிழ்ந்துப் போனதோடு, இன்றளவும் அவரிடம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். .......

ஒரு முறை சில வருடங்களுக்கு முன்பு, ஒரு பெரியவர் காசி விசுவநாதர் தரிசனத்திற்காக வெகு தொலைவில் இருந்து வந்தவர், இங்கு வந்து கடுமையான நெஞ்சு வலி வந்து அவதிப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவ மனையில் சேர்த்து தன் கைக்காசு 40000 வரை செலவு செய்து, அவரின் உறவினர்கள் வருவதற்குள் அந்தப் பெரியவரை காப்பற்றி விட்டாராம். அவருடைய உறவினர்கள் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி சொல்லி பணமும் திருப்பிக் கொடுத்து விட்டுச் சென்றனராம். அது மட்டுமல்லாமல், துபாய்நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணை கூட்டி வந்து காசியில் விட்டுச் செல்ல அந்தப் பெண்ணும் மொழியும், வழியும் தெரியாமல் தவிக்க, சத்திரம் வந்து சேர்ந்த அந்த நடுத்தர வயது பெண்ணை எடைப்பாடி பக்கம் உள்ள அவருடைய சொந்த கிராமத்திற்கு தன் செலவிலேயே டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பியுள்ளார். இதையெல்லாம் அவர் எங்களிடம் சொல்லிவிட்டு பின்பு வேகமாக நிற்காமல் சென்று விட்டார். ஆனால் எங்கள் உள்ளம் நெகிழ கண்கள் பணிக்க தவறாக நினைத்ததற்கு மானசீகமாக வருத்தமும் தெரிவித்தோம்............

DSC06493.JPG

காலையில் சென்று விசுவநாதர் ஆலய தரிசனம் முடிந்து அன்று விசாலாட்சியையும் தரிசித்து விடுவது என்று கிளம்பினோம். இரவு கங்கை ஆர்த்தி சென்று பார்க்க வேண்டும் என்றும் திட்டம். காலை நேரம் கூட்டம் மிக நெரிசல். செக்யூரிட்டி செக்கிங், மிக கடுமை. பல அடி தூரத்திற்கு முன்பே, செக்கிங் ஆரம்பமாகிறது. புகைப்படம் எடுக்கும் வாய்ப்பே துளியும் இல்லை. செல்பேசி கூட எடுத்துச் செல்ல இயலாது. ஒரு புகைப்படம் கூட காசி விசுவநாதர் ஆலயத்தை எடுக்க முடியவில்லையே என்று வருத்தமாகத்தான் இருந்தது. தங்கக் கோவில் அழகை ஊனக் கண்ணால் ரசித்து, மனக்கண்ணால் ஆழ்ந்து நோக்கி, உள்ளிருத்தி சேமித்துக் கொள்வது மட்டுமே ஒரே வழி.

அண்ணபூரணி கோவில் விசுவநாதர் ஆலயம் அருகிலேயே உள்ளது. இக்கோவில் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அண்ணப்பூரணியை வீட்டில் வைத்து வழிபட்டாலே உணவிற்குப் பஞ்சம் இருக்காது என்பார்கள். கோவிலின் மகிமையைப்பற்றிக் கூறவும் வேண்டுமோ. தீபாவளி சமயம் மூன்று நாட்கள் மட்டுமே அண்ணப்பூரணி தங்கச்சிலை பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. நாங்கள் சென்ற சமயம் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

காசி ஒரு மாபெரும் தீர்த்த தலமாக இருப்பதற்கு மற்றொரு காரணம், அத்தலம் 1500 ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் கோவில்கள் உள்ளடங்கிய ஒரு ஆன்மீக உலகம் எனலாம். காசி விசாலாட்சி கோவில் ஒரு குறுகிய சந்தில், மீர் காட் அருகில் உள்ளது. இக்கோவிலின் அழகைச் சொல்லி முடியாது. லட்சுமி தேவியின் அம்சமான விசாலாட்சி கோவில் மன நிம்மதி அளிக்கும் மற்றொரு தலமாகும்.

அன்று இரவே கங்கா ஆர்த்தி செல்ல திட்டமிட்டோம். முன்கூட்டியே படகு ஏற்பாடு செய்து கொண்டோம். கரையில் இருந்தும் தரிசனம் செய்யலாம். ஆனால் கூட்டம் அலை மோதுவதால், படகில் சென்று தரிசிக்கலாம் என்றால் அங்கும் நெரிசல்தான். இருந்தாலும் மன நிறைவுடன் முழு பூசையும் கண்டு பரவசமடையும் வாய்ப்பும் அமைந்தது. ஒன்பது படித்துறைகளில் ஒரே நேரத்தில் இந்த பூசை நடைபெறுவதும் சிறப்பு. நூற்றுக்கணக்கான மணிகள் ஒலிக்க, மேள தாளங்கள் முழங்க, ஏழு அர்ச்சகர்கள் ஒரே வரிசையில் நின்று கொண்டு ஒரே நேரத்தில் தீபாராதனைகள் செய்யும் காட்சி பரவசமூட்டக் கூடிய ஒன்றாகும். காசி செல்பவர்கள் எக்காரணாம் கொண்டும் தவிர்க்கக் கூடாத நிகழ்ச்சியாகும் இது. இறுதியில் ஐந்து முறைகள் செய்யும் ஆர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.

இன்னும்பல கோவில்கள் காசியிலேயே தரிசிக்கப் போகிறோம்.

தொடரும்.


--

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை : பகுதி - 2.-2




எண்ணம் போல் வாழ்வு என்பர் பெரியோர். இதையே எமர்சன்,

The happiness of your life depends upon the quality of your thoughts 

என்று அழகாகச் சொல்லுவார். உண்மையல்லவா. நாம் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், நம் எண்ணம் தானே அந்தச் சூழலுக்கே உயிரூட்டுகிறது.ஆகவே நாம் நம் எண்ணத்தால் உயர்ந்து நிற்போமே! அதாவது, வெளித் தோற்றமானாலும்,[ நிமிர்ந்த நன்னடை] மனதளவிலும், ஆன்மீக நிலையிலும் உயர்ந்து நிற்போமேயானால், தன்னம்பிக்கையோடு, மன அமைதியும், அதன் மூலம், வாழ்க்கைப் பாதையில் நாம் சந்திக்கக் கூடிய இன்னல்கள் அது எத்தகையதாயினும், சமாளிக்கும் பக்குவமும் வந்துவிடுமல்லவா ?  மன்னிக்கவும், அதிக பிரசங்கம் பண்ணி விட்டேனோ.....எல்லாம் காசிவாசம் கொடுத்த பக்குவ நிலைதான்.

Sunday, March 27, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 2.


வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 2.

ஒரு மனிதரின் மன ஓட்டத்திற்கு அவருடைய வயது என்றுமே தடையாக இருப்பதில்லை. அவ்வாறு ஒருவருக்கு இருக்கிறதென்றால் அது அவருடைய பழக்கத்தின் குறையே தவிர இயற்கையின் விதி அல்ல. ராமச்சந்திரன் சற்றே கரடு முரடாக வெளித் தோற்றத்திற்குத் தெரிந்தாலும், தன் குடும்பம் என்று வந்துவிட்டால் மனிதர் சொக்கத் தங்கம்தான், அந்த ஆறடி உயரமும், ஆஜானுபாகுவான உருவமும், அதற்குத் தகுந்தாற்போன்ற கட்டையான குரலும் அவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுப்பதும் உண்மைதான். மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ ஒரு தலைவலி, காய்ச்சல் என்றால் கூட துடித்துப் போய்விடுவார். மனைவி பள்ளியில் உயர் வகுப்பு ஆசியையாக இருந்தாலும கணவர் முன்பு பெட்டிப் பாம்பாக அடங்கி இருப்பவர்.

குலதெய்வம் கும்பிடுவது என்றால் ராமசந்திரனுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விசயம். குடும்பத்தில் எந்த நல்ல காரியமாக இருந்தாலும் தன் குலதெய்வமான அங்காள அம்மனை தரிசித்து ஆசி வாங்காமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார். குலதெய்வம் வரம் கொடுத்தால் அந்த காரியம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையும் கொண்டவர். இன்று மகன் இளமாறனின் திருமணம் பற்றி அம்மனின் நல்வாக்கு பெறவே கோவில் நாடி வந்திருக்கிறார். கோவிலில் அம்மனுக்கு விசேச பூசை செய்வதற்காக முன் கூட்டியே பூசாரியின் மூலமாக ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்திருந்தார். பொதுவாகவே அவருடைய குணம் அப்படி. எந்த காரியமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டது போல் நடக்க வேண்டுமென்பதில் கட்டுப்பாடாக இருக்கக் கூடியவர். சென்ற முறை கோவில் வந்தது, மூத்தவன் முத்துமாணிக்கம் திருமணப் பேச்சின் போது தான். . ஆச்சு அவன் திருமணாம் முடிந்தும் 2 ஆண்டுகள் ஆகிவிட்டதே. அவனுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தால் இந்நேரம் குழந்தைக்கு மொட்டை போடவானும் கோவிலுக்கு வந்திருக்க வேண்டும். இன்னும் அம்மன் அந்த விசயத்தில் கருணை காட்டவில்லை. யார் கண்டது இந்த காலத்துப் பிள்ளைகள் குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டு, பிளானிங் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, பிறகு 4 அல்லது 5 ஆண்டுகள் ஆன பின்பு பொறுமையாக ,பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யும் போது அது சில நேரங்களில் காலங்கடந்த செயலாகப் போவதாலோ என்னவோ, பிறகு மருத்துவமனையே கதியாகாக கிடந்து பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். பல விசயங்களை அவர்கள் பெற்றோரிடம் கலந்து கொள்ளவதில் கூட நாட்டம் கொள்ளாமல், தாங்களே முடிவு எடுக்கும் பழக்கமும் ஏற்படுத்திக் கொள்கின்றனரே. எல்லாம் கால மாற்றம். எது எப்படியோ, குடும்பத்தில் அமைதி வேண்டுமென்றால் சிலவற்றைக் கண்டும் காணாமல் இருந்து கொள்வதுதான். நல்லது.

பூசாரி பூசைக்குத் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டார். சுவாமிக்கு பாலபிசேகம் செய்யப்பட்டு, மங்களா, அழகாக தானே கட்டி எடுத்து வந்த செவ்வரளியும், மஞ்சள் கொன்றையும், இடையே பச்சை மருகும்,(அம்மன் வாசனை மலர்கள் பிரியையாயிற்றே ) சேர்த்துக் கட்டிய மாலையும், ஒற்றை நந்தியாவட்டை பூவினால் ஆன மாலையும் கொண்டு, புத்தாடை சாத்தி, அம்மனுக்கு, மஞ்சள் காப்பு சாத்தி, கண் கொள்ளா காட்சியாக அம்மன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். ராமசந்திரன் நினைத்துக் கொண்டார், தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால், இப்படித்தான் அங்காளம்மன் போல் அழகே உருவாய் இருந்திருப்பாளோ. ஏனோ தன் குடும்பத்தில் மட்டும் பெண் வாரிசுகள் பிறப்பது அரிதாக இருக்கிறது என்று அம்மா கூட சொல்லிக் கொண்டே இருப்பாள். ராமசந்திரனுக்கு உடன் பிறந்ததும் ஒரே அண்ணன் மட்டும்தான், தன் குடும்பம் போலவே. மாறனின் நினைவு வந்தது. என்ன பண்ணிக் கொண்டிருப்பான் இந்தப்பயல். ஊருக்கு வரும் போது கூட பேச நேரம் வாய்க்கவில்லை. இங்கிருந்து சிக்னலும் கிடைக்காது. இந்நேரம் மகன் பெண்ணின் போட்டோ பார்த்திருப்பானோ என்னவோ. இரவு நேரத்தில் அனுப்பியதால், சரியாகக் கூட கவனிக்கவில்லை. பெண் நல்ல கலராக இருப்பதாகத்தான் தெரிந்தது. நல்ல படிப்பு, வேலை, நல்ல சொந்தம், தனக்கு ஒன்னுவிட்ட அக்கா முறை. எல்லாவற்றிற்கும் மேலாக பெண் நன்கு பாடுவாள், வீணை வாசிப்பாள், நல்ல ஜாதகப் பொருத்தம் என பல பிளஸ் பாயிண்ட்கள், மாறனுக்கு பெண் பிடிப்பதற்கு..

ஊருக்குப் போனதும் இது பற்றி மாறனிடம் பேசலாம் என்று முடிவு செய்து, மங்களத்திடம்,

’என்னடி மங்களா, ஒன்னுமே பேசாம உட்கார்ந்திண்டிருக்கே. உன் பையன் என்ன சொல்லப் போறான்னு யோசிக்கிறயா ?

‘ இல்லன்னா இதுல யோசிக்க என்ன இருக்கு. அவன் பெண் பிடிச்சாத்தான் மேற்கொண்டு பேசுவான். இல்லாவிட்டால், எந்த காம்ப்ரமைசும் பண்ணப் போறதில்ல.இதுல அலட்டிக்க என்னன்னா இருக்கு. அவனுக்கு பிடிச்சா மேற்கொண்டு பேச வேண்டியதுதான்.’

அது சரிண்ணா, .........என்று ஏதோ பேச வாயெடுத்தவள், அலங்காரம் முடிந்து, திரை விலகியவுடன், பேச வந்ததை மறந்து, அம்மன் அலங்காரத்தில் சொக்கி நின்று, தன்னை மறந்த நிலையில்,

சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனயே
மாதேவி நின்னைச் சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில்
துதிக்கும்உத்தமருக்கு இறங்கி மிகவும் அகிலமதில்,
நோயின்மை, கல்வி, தன தான்யம், அழகு, புகழ்,
இளமை பெருமை, வளி, துணிவு,சந்தானம்,
வாழ்நாள் வெற்றி, ஆகு நல்லூழ் நுகர்ச்சி,
தொகைதரும், பதினாறு பேறும், தந்தருளி, சுகானந்த
வாழ்வளிப்பாய்,சுகிர்த குணசாலி பரிபாலி, அனுகூலி,
மங்கலி, விசாலி, மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ
மகிமை, வளர் திருக்கடவூரில் வாழ்நாமி. சுபநாமி,
மகிழ்வாமி அபிராமி, உமையே!

என்று அழகாக மோகன ராகத்தில் மெய் மறந்து பாடி வழிபட்டாள். அம்மன் திருமுன் நின்றாலே தன்னையறியாமல் இந்த பாடலை அவள் வாய் ராகம் போட ஆரம்பித்துவிடும். சிறு வயதிலிருந்தே அந்தப் பழக்கம் அவளுக்கு. எத்துனை கருத்தாழம் மிக்க பாடல் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வாள்.

காலை எழுந்திருக்கும் போதே ஒரே பரபரப்பு மாறனுக்கு. இரவு சரியான தூக்கமே இல்லை. அந்த அழகு பிம்பமே கண்ணில் நின்றது அவனுக்கு.........இது என்ன வேடிக்கை, ஒரே முறைதானே அவளை பிம்பமாக பார்த்தேன், அதற்குள் எப்படி இப்படி பல்லாண்டுகள் பார்த்துப் பழ்கி குடும்பம் நடத்தியது போல ஒரு உணர்வு. இது தான் முன் ஜென்ம தொடர்பு என்பார்களோ......... சே அவனுக்கே இது சற்று அதிகப்படியாகத் தெரிந்தது.

‘ என்னைத் தாலாட்ட வருவாளோ.....’ செல் பேசி சிணுங்கியது. யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே கையில் எடுத்தான்.

‘ ஹலோ, என்னடா மச்சி, இவ்ளோ நேரமா போன் எடுக்காம என்ன பண்ற....... சரி சரி, இப்ப கிளம்பி இங்க வர, நம்ம சூர்யா, இன்னைக்கி இரு சூப்பர் ஐட்டம் குக் பண்றான், நீயும் வாடா இங்கே சாப்பிடலாம்’ என்றான்.

‘ இல்லடா மச்சி, கொஞ்சம் வேலை இருக்குடா.......’

என்ன வேலைடா, வாஷிங் போகனுமா? நாளை போகலாம்.......

இல்லடா, சொந்தக்காரர் ஒருவர் வீட்டுக்கு ஒருவேலையாகப் போக வேண்டும். ......

இல்லேன்னா நாங்க அங்கே வரோம்டா......

இல்லடா, நிசமாத்தான் போகனும், போயிட்டு, சீக்கிரம் வந்துடுவேன்.....

சரிடா மச்சி.......என்னமோ முழுங்கறே.....நடத்து......தெரியாமத்தான் போகுமா என்னா.......

அதெல்லாம் ஒன்னுமில்லைடா. .....ம்.......

சரி உடு......ஜாக்கிரதையா டிரைவ் பண்ணு, சரியா......பை.

அப்பாடி ஒரு வழியா போனை வச்சான்......மளமளவென கிளம்ப வேண்டியதுதான்.

புறப்படத்தாராகியும், ஒரு தடுமாற்றம். போகலாமா, வேண்டாமா என்று. ஒரு வேளை அப்பா ஏதாவது சொன்னால் என்ன செய்வது. எப்படியோ சமாளிப்போம். இனி மனதை கட்டுப்படுத்த இயலாது. எதற்கு கட்டுபடுத்த வேண்டும். திருமணம் என்பதே இரு மனம் இணைந்த, ஒரு சுதந்திர நிலைதானே. இதில் தேவையில்லாத கட்டுப்பாடு எதற்கு.

அவந்திகா...........இத்தோடு காலையிலிருந்து இந்தப் பேரை ஒரு 50 முறையாவது சொல்லிப் பார்த்திருப்பேனா....... அது அவளுக்கு எங்கே தெரியப் போகிறது......பார்க்கலாம் எப்படிப்பட்ட பெண் என்று. ஒரே முறை பார்த்தால் என்ன குணம் தெரிந்தா விடப் போகிறது. ஓரளவிற்கு தெரியலாம் என்றாலும் பழக பழகத்தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

இவ்வளவு தூரம் தனியாக வந்து தங்கி வேலை பார்த்து, ஓவியக் கண்காட்சி நடத்தி, இதெல்லாம் சாதாரண விசயமா, நல்ல துணிச்சலானப் பெண்ணாகத்தான் இருப்பாள். நாம் திடுமென்று போய் நின்றால் அதிர்ச்சியாகி விடுவாளோ. சே, அப்படி இருந்தால் அவள் வீட்டில் ஏன் போன் நம்பர், விலாசம் எல்லாம் தரப் போகிறார்கள். ஆச்சு இன்னும் 30 நிமிடத்தில் வாஷிங்டன் சென்று சேர்ந்து விடலாம். பின்பு அட்ரஸ், G.P.S. இல் வந்துவிடப் போகிறது. வேறு என்ன பிரச்சனை இருக்கப் போகிறது. திடீரென்று போய் நின்றால் நன்றாக இருக்காதே. ஒரு வேளை எங்காவது வெளியே சென்றிருந்தால் என்ன செய்வது. சரி எதற்கும் ஒரு போன் செய்து விடலாமே என்று தோன்றியது. அதுதான் சரி என்றும் உள் மனதும் கூறவும், அடுத்த ரெஸ்ட் ஏரியாவில் வண்டியை நிறுத்தி விட்டு போனை எடுத்து பேச முற்பட்டான்.

கொஞ்சம் தொண்டை வறண்டது போல இருந்ததால், வண்டியில் இருந்த கோக் பாட்டிலை எடுத்து ஒரு சிப் குடித்து விட்டு தொண்டையை ஒரு முறை கணைத்துக் கொண்டு,

ஹலோ...........

ஹலோ.....எஸ்....ஹூஸ் திஸ்........

தேனினும் இனிய நாதமாக ஒலித்தது அவன் காதுகளில்......குரல் கூடவா இவ்வளவு இனிமையாக இருக்கும். .......

ஹலோ......ஹலோ.......ஹூஸ் ஆன் த லைன்............

அவனுக்கு அப்பதான் சுய நினைவு வந்தவனாக, ம்ம் குட் ஐ டாக் டு மிஸ் அவந்திகா ப்ளீஸ் என்றான், குரலை மிகவும் மென்மையாக்கிக் கொண்டு.........

யா........மே ஐ நோ ஹீ ஈஸ் ஆன் த லைன்.........

நான் மாறன், .......நானும் சென்னைதான்.

ஓ, அப்படியா, வாட் கேன் ஐ டூ ஃபார் யூ ...

உங்கள் அப்பா ஒன்றும் சொல்லவில்லையா என்னைப் பற்றி என்றான்.......

இல்லையே, நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா, என்றாள்.

எனக்கு உங்கள் போட்டோவும், விலாசமும் என் அப்பா கொடுத்தார்கள். ஜாதகம் சரியாக இருப்பதாகச் சொன்னர்கள். ( சொதப்புகிறேனோ )

என்ன சொல்றீங்க ஒன்னுமே புரியலயே.. என் அப்பா எதுவும் சொல்லலையே.

சரி பரவாயில்லை, சீக்கிரம் சொல்வார்கள். இப்போது நீங்கள் ஃப்ரீயாக இருந்தால், என்னோடு சற்று வெளியே ரெஸ்டாரெண்ட் வர முடியுமா, உங்களிடம் பேச வேண்டும்.

என்னது என்ன சொல்கிறீர்கள். முன்ன பின்ன தெரியாத பெண்கிட்ட எப்படி இப்படி கேட்கிறீர்கள். எனக்கெல்லாம் யாரையும் தெரியாது. தேவையில்லமல் பேசாதீர்கள் என்று போனை கட் பண்ணச் சென்றவள்,

ஹலோ...... ஒரு நிமிடம் என்ற தாழ்வான குரல் கேட்டு சற்றே தயங்க, கிடைத்த இடைவெளியில், மாறன் அவசரமாக சாரி, உங்கள் அப்பாவை வேண்டுமானால் கேட்டுப் பாருங்களேன், என்னைப்பற்றி. என் பெயர் மாறன், இங்கு இன்ஃபோசிஸ் எம்ப்ளாயி. ....என்று இழுத்தான், மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல்,

அதற்குள் அவள் இருங்கள் நானே என் அப்பாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன். ..என்றாள்.

10 நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் போனைக் காணோம். ஒரு வேளை பண்ண மாட்டாளோ, என்று யோசிக்கும் போதே, போன் ஒலிக்க ஆரம்பித்தது.......வழக்கமாக கேட்கிற தாலாட்ட வருவாயா பாட்டு அன்று மட்டும் என்னவோ மிக வித்தியாசமாக ஒலித்தது.......

கோவிலில் பூசை முடிந்து பிரசாதம் கொண்டு வந்து கொடுத்த பூசாரி, ஐயா,உங்களிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும்., என்று மிகவும் தயங்கினார்.

என்ன ஐயரே, சொல்லுங்கள், என்றார் ராமசந்திரன்.

ஐயா சொல்ல சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் மறைத்தால் பாவம் அதனால்தான்......வந்து தாங்கள் வாங்கி வந்த தேங்காய் அழுகி இருந்தது.......நான் வேறு தேங்காய் உடைத்து விட்டேன். ஆனாலும், தம்பி திருமணத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது ஐயா.... எல்லாம் அந்த அம்மா பார்த்துப்பாள்........கவலை வேண்டாம் ஐயா. சென்று வாருங்கள் என்றார் ஐயர்.

ராமச்சந்திரனுக்கு மனது ஒரு நிலையில் இல்லை...இது என்ன இப்படி ஆகிவிட்டதே.............என்ன செய்வது....

தொடரும்.