Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு 2014!!!அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!!

அன்புடன்
பவள சங்கரி

Monday, December 30, 2013

பாட்டி சொன்ன கதைகள் - 23


பவள சங்கரி

சந்தர்ப்பவாதி எலிகள்


ஹாய் குட்டீஸ் நலமா?

எலியைப் பார்த்திருக்கிறீர்களா?  நீண்ட வால் கொண்ட ஒரு சிறிய உயிரினம் என்றாலும் அதன் வேலைகள் மிகப்பெரியது. சந்தர்ப்பவாதிகளான இந்த எலிகள் பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடத்தில்தான் வாழ்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எலிகளினால் உணவுப் பண்டங்களின் நாசம் அதிகம். எலிகள் பல பரிசோதனைச் சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மனித இனத்திற்குப் பயன்படக்கூடிய முக்கியமான சோதனைகளான மரபுணுக்கள், வியாதிகள், மருந்துகளின் பின்விளைவுகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பல்வேறு சோதனைகளுக்காக இந்த எலிகளே பயன்படுத்தப்படுகின்றன. வீட்டில் வளரும் எலிகளுக்கும், காட்டு எலிகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு.  வீட்டில் வளரும் எலிகள் அமைதியானதாகவும், மிகவும் அரிதாகவே கடிக்கும் வழக்கமும் கொண்டது. பெரும் கூட்டமாக வாழ்க்கூடிய இந்த எலிகள். மிக அதிகமாகக் குட்டி போடும் வழக்கமும் உடையது. பிரவுன் நிற எலிகளே அதிகமாக விஞ்ஞான பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் புத்தி கூர்மை, தீவிரம் மற்றும் ஒத்துப்போகும் தன்மை காரணமாக எலிகள் மிகப்பயனுள்ள ஒரு மரபணுக் கருவியாகப் பயன்படுகிறது. அதனுடைய உளவியல் பல வகையில் மனிதர்களைப் போலவே இருக்கிறது. பல நாடுகளில் இந்த எலிகள் உணவாக பயன்படுத்தப்படுகிறது. நம் இந்தியாவிலும்  உணவுப் பஞ்சம் வந்த காலங்களில் விவசாயிகள் எலிகளை உணவாக உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். பழமைவாதிகளான ஹாவாயி மற்றும் பாலினேசிய மக்களுக்கு இந்த எலிகள் அன்றாட உணவாக இருக்கிறது.  இது போன்று இன்னும் பல்வேறு நாடுகள் எலியை உணவாக உட்கொள்கின்றனர். பாம்புகளுக்கு மிக முக்கியமான உணவாகும் இந்த எலிகள்.

Tuesday, December 24, 2013

பாசத்தின் விலை
பவள சங்கரி


ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்


நண்பன் ஆராவமுதன் தன் இனிய குரலில் பதிவு செய்து அனுப்பிய பட்டினத்தடிகளின் பாடலை மெய்மறந்து, உடன் முணுமுணுத்துக்கொண்டே  ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சபேசன்.

ஏண்ணா.. ஏண்ணா, நான் கத்தறது காதில் விழலையா.. அதுசரி இவ்ளோ சத்தமா பாட்டை வச்சிண்டிருந்தா எப்படி அடுத்தவா பேசறது காதுல விழும்லேப்டாப்பில் கனெக்ட் செய்து வைத்திருந்த ஸ்பீக்கரின் ஒலி அளவைக் குறைத்த மறுகணம், கனவுலகிலிருந்து மீண்டவராக சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தவர்,

Sunday, December 22, 2013

Feather, Oh Feathers!!


Pavala Sankari
s1476587
Feathers, cute little peacock feathers
Bright and beautiful with multicolours
Brushing smoothly with rosy petals
Transcends through the flowery heart
Brings the cool breeze to float within
Carrys angel’s blessings to have light heart!

Friday, December 20, 2013

பாட்டி சொன்ன கதைகள் 22


பவள சங்கரி


ஹாய் குட்டீஸ் நலமா?


கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணையை!


ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவர், நம் இந்தியாவின்,  தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பழமையான,  திருச்சிக்கு அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை என்ற இந்த அணையை பலகாலம் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் நம் தமிழின மன்னனின் பெரும் சாதனையைப் போற்றி, பெரிதும் வியந்து அதனை,  ' பிரம்மாண்டமான அணைக்கட்டு '  என்று புகழ்ந்துள்ளார். இதன் பிறகு நம் கல்லணையின் புகழ் பாரெங்கும் பரவியது! இதைக் கட்டியது யார் என்று தெரியுமா?

Tuesday, December 17, 2013

கர்ம வீரர் காமராசர்


பவள சங்கரி

குட்டி ஜப்பான்என்று அழைக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்..  பொதுவாக பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதிலும் மழை வரும் முன்பு, லேசான மண் மணத்துடன், மெல்லிய தென்றல் குளிர் காற்றாய் வீச, உல்லாச உந்தின் கதவின் கண்ணாடிகளை இறக்கிவிட்டு அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு வாலியின் கவிதைகள் தேனிசையாய் முழங்க.. வேறு என்ன வேண்டும்? மதுரை தாண்டி விருதுநகரைத் தொட்டவுடன்அதுவரை வாய் மூடி மௌனமாக சாரதியாக வந்தவர், ஒரு மெல்லிய சிலிர்ப்புடன்,  ‘அட, விருதுநகர், நம்ம காமராசர் ஐயாவோட ஊரு.. புண்ணிய பூமிஎன்று சொல்லிவிட்டு அப்படியே நினைவில் ஆழ்ந்துவிட்டார். மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..  அதாங்க எங்க ஊட்டூக்காரவிக, திருநாவுக்கரசு அவிங்கதான்....

Monday, December 16, 2013

பாட்டி சொன்ன கதைகள் - 30
பவள சங்கரி

அங்கவை, சங்கவை

ஹாய் குட்டீஸ் நலமா?

முன் காலத்தில் நம் நாட்டை ஆண்ட அரசர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனிப்பட்ட குணாதிசயம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதை நம் வரலாறுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.  வீரம், தீரம், பராக்கிரமம், ஈகை, காதல், தன்னம்பிக்கை, நீதி தவறாமை, பரோபகாரம், வள்ளல்தன்மை இப்படி பலவிதமான தனித்திறன் கொண்டிருப்பவர்கள்தான் பெரும்பாலானவர்கள்.  தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்று நினைப்பதே மனித மனம். ஆனால் சில அரசர்கள் தங்களுடைய அத்தியாவசிய உடமைகளைக்கூட சற்றும் தயங்காமல், நிறைந்த மனதுடன் வாரி வழங்கும் அளவிற்கு தயாள குணம் உடையவர்களாக இருந்திருந்திருக்கிறார்கள்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பேகன் என்பவன், பழனிமலைப் பகுதியில் வாழும் ஆவியர் குடி என்ற இனத்தவரின் தலைவனாக இருந்தவன். கடை ஏழு வள்ளல்கள் என்று சொல்லக்கூடியவர்களில் பேகனும் ஒருவன். ஒரு முறை மழை காலத்தில் வழியில் சென்று கொண்டிருந்தவர், அழகிய ஆண் மயில் ஒன்று சாரல் நிறைந்த அந்த மலைப் பாதையில் கருமேகங்களைக் கண்டு மகிழ்ச்சியில் மனம் துள்ளி தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டார், உடனே அவர் அந்த மயில் குளிர் தாங்காமல்  நடுங்குவதாக நினைத்துக்கொண்டு, தான் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து அந்த மயிலுக்குப் போர்த்திவிட்டுச் சென்றாராம். அவருக்கு இப்பொழுதும் சிலையெல்லாம் வைத்திருக்கிறார்கள்.


அதேபோல கடையேழு வள்ளல்களில் முதன்மையானவரான, பாரி என்பவர்.  பேகனாவது நான்கறிவுள்ள ஒரு பறவைக்குத் தன் போர்வையைக் கொடுத்தான். இந்த பாரி பாருங்கள் ஓரறிவு உயிரான ஒரு முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொடுத்தவன்.  இது நடந்தது ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்.  இன்று சிவகங்கை மாவட்டத்தின் பிரான்மலை என்று அழைக்கப்படும், மிகச் செழிப்பான  நகரம். முன் காலத்தில் அது பறம்புமலை  என்று பெயர் பெற்ற முன்னூறு கிராமங்களைக் கொண்ட வேளிர்குல வழிவந்த சிற்றரசர்கள் ஆண்டு வந்த நாடாக இருந்தது. இவர்கள் பேரரசர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தனர்.  பாரி மன்னன் தம் குடிமக்களிடம் மிகவும் அன்பு கொண்டவனாக இருந்தான். பறம்பு மக்கள் உழைப்பிற்கு சற்றும் அஞ்சாதவர்கள். வீரமும் நிறைந்தவர்கள். பாரி மிகவும் தேகபலம் கொண்ட சிறந்த வீரனாக இருந்தான். தன்னைப்போலவே, தம் மக்களும்  பலசாலிகளாக இருக்க வேண்டும் என்பதற்காக தம் நாட்டின் ஊர்கள்தோறும் பல சிலம்புக் கூடங்களை நிறுவி, வாலிபர்களை எல்லாம் சிறந்த சிலம்பு வித்தைகளைப் பயிலச் செய்தான். பாரி, சிறந்த கொடை வள்ளலாகவும் இருந்தான். தம்மை நாடி வந்த புலவர்களுக்கும், கூத்தாடிகளுக்கும், ஏழைகளுக்கும், கிள்ளிக் கொடுக்காமல், அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இதனால் பாரியின் புகழ் அண்டை நாடுகளிலெல்லாம் பெரிதும் பரவியது. பாரியின் வள்ளல் தன்மையைப் பற்றி அறிந்த கபிலர், அவரிடம் பாடிப் பரிசில் பெறலாம் என்று வந்தார். பாரிக்கு, கபிலரை மிகவும் பிடித்துப்போக, இருவரும் சிறந்த  நண்பர்களாகி  இருந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர். கபிலரின் சிறந்த புலமையைக் கண்டு வியந்த பாரி, கபிலரை  தன்னுடனேயே  தங்கவைத்துக் கொண்டார் .  தம் நாட்டு மக்களையும், தம் நாட்டு வளங்களையும், மக்களின் நிறை, குறைகளையும் கண்டறியவும், பாரி, அடிக்கடி நகர்வலம் செல்வது வழக்கம். அப்படி ஒரு முறை நகர்வலம் போனபோதுதான் வழியில் ஒரு முல்லைப் பூங்கொடி, கொழுக்கொம்பு இல்லாமல் வாடி, வதங்கி இருப்பதைக் கண்டு மனம் வருந்தியவர் சற்றும் சிந்திக்காமல் மளமளவென தன் தேரைவிட்டு இறங்கி, அதில் பூட்டியிருந்த இரண்டு குதிரைகளையும் அவிழ்த்து அப்பால் நகரச் செய்து, அந்த முல்லைக் கொடியைத் தம் தேரின் மீது தாராளமாகப் படரும்படி எடுத்துவிட்டான். பின் அந்தக் குதிரை மீது ஏறி தம் அரண்மனை வந்து சேர்ந்தான். 

பாரியின் புகழ் இப்படியெல்லாம் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருந்ததை, மூவேந்தர்கள் விரும்பவில்லை. பாரியின் மீது பொறாமை கொண்டார்கள்.  அதன் காரணமாக அவன் மீது போர் தொடுத்து அவனை அடக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பலவாறாக முயன்றும், அவனுடைய கோட்டைக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. மிக அருமையாக அரண்கள் அமைத்து வைத்திருந்தான் பாரி. வீரதீரம் மிக்க அவனுடைய குடி மக்கள் அனைவரும் பாரிக்குக் கைகொடுத்து முழு மூச்சுடன் தங்கள் நாட்டைக் காக்கப் பாடுபட்டனர். பல நாட்கள் கடந்தும், மூவேந்தர்களால் பறம்புமலையினுள் நுழைய முடியாத அளவிற்கு அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தனர். எவ்வளவோ முயன்றும் பாரியின் கோட்டையைப் பிடிக்க முடியாத அந்த அரசர்கள், அவனை உறவாடிக் கெடுக்க முடிவு செய்தனர். பாரிக்கு அழகான இரண்டு மகள்கள் இருந்தனர்.  அங்கவை, சங்கவை என்ற அவர்கள் அழகு, அறிவு, அன்பு, பண்பு என அனைத்திலும் சிறந்து விளங்கினர். இதை அறிந்த மூவேந்தர்கள், தனித்தனியாக ஒவ்வொருவராக தங்களுக்குப் பெண் கொடுக்கும்படி தூது அனுப்பினார்கள்.  பாரி பெண் கொடுக்க மறுத்துவிட்டான். காரணம் ஒருவரை விட்டு மற்ற இருவருக்கும் பெண் கொடுத்தால் அது மற்றவருக்கு வேதனை அளிக்கும் என்பதாலேயே அதை மறுத்தார் பாரி. ஆனால் அவர்களுக்கு இந்த காரணம்  புரியவில்லை. 

ஒரு பௌர்ணமி நாள் வந்தது. பாரியை ஒரேயடியாக வீழ்த்துவதற்கு மற்றொரு திட்டத்துடன், மூவேந்தரும், புதிய புலவர்கள் போல வேடமணிந்து , கையில் யாழினை ஏந்திக்கொண்டு பாரியை வந்து சந்தித்தனர். பாரி அவர்களை அன்பாக வரவேற்று மரியாதையுடன் ஆசனங்களில் அமரச் செய்தான். அவர்கள் மூவரும் பாரியை வானளாவப் புகழ்ந்து பாடி அவனை பெரிதும் மகிழச் செய்தனர்.  அந்த நேரம் பார்த்து பாரி கொடுத்த எந்த பரிசிலையும் வாங்காமல் அவன் உயிரையே பரிசாகக் கேட்டான். ஐயோ அந்த மாபாவிகளால் இறுதியில் பாரி தன் இன்னுயிரை இழக்க நேரிட்டது. அந்த மூவேந்தர்களின் வஞ்சகம் பாரியின் உயிரையே பலிவாங்கிவிட்டது. 

பாரியின் மகளிர் இருவரும் அனாதையான வேதனையில் அலறித் துடித்தனர். செய்தி கேட்ட கபிலர் ஓடோடி வந்தார். அவரும் வேதனையில் துடி துடித்துப்போனார். பாரி மகளிரை நல்ல மணமகன்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காகப் பெரிதும் முயன்று, பலரையும் சந்தித்துக் கொண்டிருந்தார் கபிலர். தம் தந்தை இழந்த சோகத்தை அழகான கவிதை பாடி வெளிப்படுத்தினர் இருவரும். அதைக்கேட்டு ஊரே அழுதது. அங்கவை, சங்கவை இருவருக்கும் பாதுகாப்பான ஒரு நல்ல இடமான ஒரு அந்தணருடன் தங்க வைத்திருந்தார் கபிலர். இதையறிந்த ஔவைப்பிராட்டியார், அவர்களைத்  தேடிக்கண்டுபிடித்து, பார்க்கச் சென்றபோது ஔவைப் பிராட்டியாரைக் கண்டவுடன் மேலும் மனமுடைந்து அழுது புலம்பினர் இருவரும். மிகவும் ஏழ்மை நிலையில் அந்த அந்தணர் வீட்டில் இருந்தபோதும் அவர்கள் இருவரும் தங்களுக்கென்று  வைத்திருந்த ‘மொர, மொர’ வென புளித்த மோரையும் களைப்பாக வந்து சேர்ந்த ஔவைப் பிராட்டியாருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர். இது ஒன்றே அவர்கள் பாரி வள்ளலின் வாரிசுகள் என்பதற்கு ஆதாரமாக இருந்தது. சில நாட்கள் அவர்களுடன் தங்கி ஆறுதல் அளித்ததோடு, அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சொல்லிச் சென்றார். 

மலையமான் என்னும் நாட்டை ஆண்டுகொண்டிருந்த  குறுநில மன்னனான தெய்வீகன் என்பவன் நல்ல பண்பாளன் என்பதை அறிந்து கொண்ட ஔவையார் அவனிடம் சென்று பாரி மகளிரை மணக்கும்படி வேண்டினார். அவனும் இருவரையும் மணந்துகொள்ள சம்மதித்தான். மிகவும் மகிழ்ந்துபோன ஔவைப் பிராட்டியார் , சேர, சோழ, பாண்டியர் உட்பட அனைத்து அரசர்களுக்கும் திருமண ஓலை அனுப்பி, அவர்கள் முன்னிலையில் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தார்.  அங்கவையும், சங்கவையும் நல்ல இடத்தில் சேர்ந்துவிட்ட திருப்தியில் ஔவைப் பிராட்டியார் கிளம்பிச் சென்றார்.  செய்த தர்மம் தலை காத்தது. 

பாரியும், பேகனும் போன்ற அரசர்கள் மட்டுமே வள்ளலாக இருக்க முடியும் என்பதில்லை. நம்முடனும் அதுபோல வள்ளல்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், வெளியில் தெரியாமலே!   நம்ம கதைக்கு போவோமா...

குகன், காக்காபாளையம் என்னும் கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிப்பவன். அவனுடைய அப்பா, அந்த ஊரிலேயே தையல் வேலை பார்ப்பவர். அம்மா வீட்டு வேலையை முடித்துவிட்டு அப்பாவிற்கு உதவியாக சட்டைக்கு பட்டன் கட்டுவது, ஓரம் மடித்துத் தையல் போடுவது, போன்ற வேலைகளைச் செய்வார். குகன் எப்படியும் படித்து பெரிய அரசாங்க வேலைக்கு வரவேண்டும், ஊரிலேயே பெரிய அதிகாரியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் இருவருக்கும் ஆசை. அதனால் குகனை எப்படியாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று இரவு, பகலாக உழைப்பவர்கள்.  முடிந்தவரை தங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்து வசதிகளும் அவனுக்கு செய்துகொடுக்கத் தயங்காதவர்கள். குகன் மட்டுமே அவர்களின் உலகம் என்பது போலத்தான் வாழ்கிறார்கள் அவர்கள். 

”சாமி, குகா, நல்லா படிச்சு பெரிய அதிகாரியா வரோணுமப்பா நீ. நம்ம ஊருக்கு நிறைய நல்லதெல்லாம் பண்ணனும் நீ. நாங்க அதைப்பார்த்து பெருமைப்படோணும். இந்த ஊரே இதுதான் குகன் ஐயாவோட பெத்தவிங்கன்னு எங்களைப் பாராட்ட வேணுமப்பா....”

அந்தத் தாயின் உள்ளம் நெகிழ்ந்த கண்ணீரை அவனும் புரிந்து கொண்டு நல்ல பையனாக ஒழுக்கத்துடன், புத்திசாலியாகவும், தான் உண்டு, தன் படிப்பு உண்டு என இருப்பவன்.  

ஆறாம் வகுப்பில் நுழைந்ததிலிருந்து அவனுக்கு படிப்பு அதிகமாகியிருந்தது. எப்பொழுதும் முதல் மார்க் வாங்குவதோடு, ஒழுக்கமாகவும், மற்ற மாணவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டும் இருப்பதால் ஆசிரியர்களுக்கெல்லாம் அவன் மீது தனி பாசம் இருக்கும். ஆனால் கொஞ்ச நாட்களாக அவன் பள்ளிக்குச் சில நாட்களில் தாமதமாக வருவது, சில நாட்கள் மதியம் வருவது என்று சில மாற்றங்கள் தெரிந்தது. படிப்பில் எந்த குறையும் இல்லாதலால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவர்கள். காரணம் கேட்கும் போதெல்லாம் , வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை என்பது போலவே சொல்லுவான். அதே போல அவனுடைய அப்பா, அம்மாவிற்கும் அவனிடம் ஏதோ மாற்றம் தெரியாமல் இல்லை. கொஞ்ச நாட்களாக, அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி காசு கேட்பது, வீட்டிற்குத் தாமதமாக வருவது, கேட்டால் பள்ளியில் தனி வகுப்பு வைத்தார்கள் என்று சொல்வது என்று இருந்தான். மகன் ஏதாவது கெட்ட வழிகளில் செல்கிறானோ என்ற சந்தேகம் கூட வர ஆரம்பித்திருந்தது அவர்களுக்கு. 

”ஏம்ப்பா, குகா, என்னப்பா செய்யுற நீ. நமக்கு படிப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட ஒரு பங்கு அதிகமா ஒழுக்கம் இருக்கணும்ப்பா. ஒழுக்கம் கெட்டால், நம்மகிட்ட இருக்கிற சரசுவதியும் நம்மை விட்டு போயிடுவா. அப்பறம் படிப்பு எங்கிருந்து வரும்?  நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை. உனக்கு ஒவ்வொன்னா விளக்கமா சொல்றதுக்கு. அடுத்தவிங்க நம்ம முகத்தைப் பார்த்து விரலை நீட்டிப் பேசக்கூடாதுப்பா, நல்ல மகராசன்னு வாழ்த்தற மாதிரி நடந்துக்கணும் என் ராசா” என்று தந்தை உளம் நெகிழ்ந்து சொன்னபோது குகனுக்கும் கண்ணீர் பொங்கியது.

“அப்பா, அப்டீல்லாம் இல்லப்பா. நான் உங்க புள்ளப்பா. தப்பு தண்டாவுக்கெல்லாம் போவமாட்டேன். நீங்க கவலப்படாதீங்கப்பா” என்றான்.

இப்படி சொன்னாலும் அடுத்தடுத்த நாட்களிலும் அவன் போக்கில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. பள்ளியில் சென்று விசாரிக்கலாம் என்று நினைத்து சென்றபோது அவனுடைய ஆசிரியரும்,

 “ஏன் இப்போதெல்லாம் குகன் அதிகமாக விடுமுறை எடுக்கிறான். பல நேரங்களில்  பள்ளிக்கு தாமதமாகவும் வருகிறான். எப்பொழுது கேட்டாலும், உங்களுக்கு உடல் நலமில்லை, ஊருக்குப் போனோம் என்று ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறான். நன்றாகப் படிக்கிற பையன் என்பதால் அவனை அதிகம் மிரட்டாமல் இருக்கிறோம். அவனை ஒழுங்காக கவனித்துக்கொள்ளுங்கள்” 

என்று சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. அன்று மாலை குகன் வழக்கமாக வரும் நேரம் இல்லாமல் தாமதமாக வீட்டிற்கு வந்தவுடன் அவன் அம்மாவிற்கு சரியான கோபம். வழக்கம் போல ஸ்பெஷல் கிளாஸ் என்று வேறு சொன்னபோது வந்ததே கோபம் அம்மாவிற்கு. அவனை பட்டையாக வெளுத்துவிட்டார்கள்.  ’எங்கு போய் ஊரை சுத்திட்டு வரே ‘ என்று கேட்டு அடித்த அடி பாவம் அவன் உடலெல்லாம் அங்கங்கு வீங்கிவிட்டது.  

”பாவி, ஏண்டா இப்புடி பண்றே. எவ்ளோ சொன்னாலும் உனக்குப்புத்தியே வராதா? அப்புடி எங்கதாண்டா போய் தருதலையாட்டம் சுத்திட்டு வர நீ.. சொல்லித் தொலையேன். எவ்வளவு கேட்டாலும் கல்லுளிமங்கனாட்டம் நிக்கறயே. ஏண்டா இப்படி என்னை சாவடிக்கற?” என்று கத்தி கலாட்டா செய்தாள். 

அப்பொழுதும்கூட அவன் எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருந்தது மேலும் அம்மாவுடைய கோபத்தை அதிகமாக்கியது. அன்று இரவு அழுதுகொண்டே சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அவன் அம்மாவும், அப்பாவும், தங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒரே நம்பிக்கையான இந்த குகன் கூட நம்மைக் கைவிட்டுவிடுவான் போல இருக்கிறதே என்று புலம்பிக் கொண்டு இருவரும் தூங்கவே இல்லை. இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் இப்படியே ஒரே அமைதியாக ஒருவரும் ஒழுங்காக சாப்பிடாமல் கூட பொழுது போனது. ஆனால் குகன் மட்டும் எந்த கவலையும் இல்லாமல் சற்று அதிகமாகவே சாப்பாடை எடுத்துக்கொண்டு நேரமாக கிளம்பினான். வரவர காலை சாப்பாட்டையும் கையில் எடுத்துக்கொண்டு போகிறான். என்ன செய்வது என்றே தெரியவில்லை. பண்டிகை சமயம் என்பதால் துணியும் அதிகம் வந்திருக்கிறது. இந்த நேரத்தில் வேலையை விட்டுவிட்டு அவன் பின்னால் சென்று பார்க்கவும் முடியவில்லை. பொறுத்திருப்போம் என்று இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அன்று காலை குகன் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுவிட்டான். அவன் அம்மாவும், வீட்டு வேலையெல்லாம் முடித்து கடைக்குச் சென்று குகனின் அப்பாவிற்கு உதவியாக தைக்க ஆரம்பித்தபொழுதுதான், பள்ளியில் இருந்து பியூன் வந்து, அவர்கள் இருவரையும் உடனே தலைமை ஆசிரியர் அழைத்து வரச் சொன்னதாகச் சொன்னார். கடவுளே, குகன் என்ன வேலை செய்து வைத்திருக்கிறானோ தெரியவில்லையே, என்ற அச்சத்துடனேயே இரண்டு பேரும் கடையைப் பூட்டிவிட்டு, பள்ளிக்கு ஓடினார்கள். அன்று பள்ளியின் வாசலில் என்றும் இல்லாத திருநாளாக, மூன்று கார்கள், சில இரு சக்கர வாகனங்கள் என்று இருந்தன. தயங்கி வெளியே நின்றவர்களை ஒரு ஆசிரியை வந்து கையைப் பிடித்து உள்ளே கூட்டிச் சென்றார்கள். அங்கு அதிகாரிகளைப் போல ஒரு சிலர் உட்கார்ந்திருந்தார்கள். குகன் ஒரு ஓரமாக நின்றிருந்தான். ஒரு நாற்காலியில் ஒரு பெரியவர் மிகவும் சோர்ந்த நிலையில் உட்கார்ந்திருந்தார்.  அட, அவர் போர்த்தியிருந்தது, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தங்கள் வீட்டில் காணாமல் போன அதே போர்வை. ஒன்றும் புரியாமல் இருவரும், திரு திரு வென விழித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து தலைமை ஆசிரியர், 

“பதட்டப்படாமல் இருங்கள், எல்லாம் நல்ல விசயம் தான். உங்கள் பையன் நம்ம பேரையெல்லாம் காப்பாத்தியிருக்கான். நல்லா வளர்த்திருக்கீங்க உங்க புள்ளைய. ஊருக்கு நாலு புள்ளைக இப்படி இருந்தா போதும், நம்ம நாடும் நல்லாயிருக்கும்”  என்றவுடன் தான் அவர்களுக்கு உயிரே வந்தது.  மேலும் அவர் சொன்ன விசயம் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

குகன் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு குப்பைத் தொட்டியின் அருகில் நடைமேடையின் மூலையில் ஒரு பெரியவர் சுருண்டு படுத்துக்கிடந்திருக்கிறார். மூன்று நாட்களாக அவர் அப்படிக்கிடப்பதை ஒருவரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவருக்கு 65 வயது இருக்கலாம். சற்று மன நலம் குன்றியவராக இருந்திருக்கிறார். குகன் அவர் அருகில் சென்று மெல்ல அவரை விசாரித்திருக்கிறான். அவர் தன்னை மறந்த நிலையில் ஏதேதோ உளறியிருக்கிறார். காய்ச்சல் அதிகமாக வேறு இருந்ததால் அவரை மெதுவாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு, ஒரு ஆட்டோகாரரின் உதவியுடன் கூட்டிச் சென்றிருக்கிறான். அன்றிலிருந்து அவன் தான் அவருக்கு உறவாகவும், நண்பனாகவும், மகனாகவும் எல்லாமுமாக இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவருக்கு உடல் நலம் சற்று தேறியதோடு மன நலமும் சரியாகியிருக்கிறது. அவருக்கு கொஞ்சம் நினைவு திரும்பியதால் மருத்துவமனையில் அவரைப் பற்றிய விவரம் கேட்டு அறிந்ததில், அவர் சேலம் மாவட்டக் கலெக்டரின் நெருங்கிய உறவினர் என்றும், மனநலம் குன்றியதால் வழி தவறி இங்கு வந்து சேர்ந்திருக்கிறார், திரும்பிப் போக வழியும் தெரியாததால் பசியில் மயங்கிக் கிடந்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் குகன் அவரை மருத்துவமனையில் சேர்த்து அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதனால் அவர் இன்று உடல் நலம் தேறியதோடு, தன்னுடைய பழைய நினைவுகளும் சற்று வந்தவுடன், முகவரியெல்லாம் சொல்லியிருக்கிறார். கலெக்டரின் உறவு என்பதால் உடனே அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் இன்று கிளம்பி நேரிலேயே வந்திருக்கிறார். குகனுக்கு அவர்கள் வழங்கிய பாராட்டு மழை பெற்றவர்களின் உள்ளம் குளிரச் செய்தது. பூரித்துப் போனார்கள் இருவரும்.

கலெக்டர் கண்கள் கலங்கியவாறு, குகனின் தந்தையை தோளில் கைபோட்டு அணைத்தவாறு, ”இந்தப் பெரியவரைக் காணாமல் அந்தக் குடும்பமே தவித்துப் போயிருக்கிறது. சத்தமில்லாமல் எவ்வளவு பெரிய சேவை செய்திருக்கிறான் உங்கள் மகன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல இந்த வயசுலயே எத்தனை சேவை உள்ளம் அவனுக்குப் பாருங்கள். அவனை எதிர்காலத்தில் ஒரு நல்ல பணியில் அமர்த்தி, அவனுடைய இந்த சேவையுள்ளத்தால் இந்த நாடே போற்றும்படி அவனை உருவாக்குவோம். தைரியமாக இருங்கள். நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன்” 

என்று சொன்னபோது பெற்ற அந்த மனது எவ்வளவு மகிழ்ந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? அவர் மட்டுமல்லாமல் அவனுடைய தலைமை ஆசிரியர், மற்ற வகுப்பு ஆசிரியர்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். நல்ல குணமும், தர்ம சிந்தையும் நம்முள் இருந்தால் அது என்றுமே நம்மைக் காப்பதோடு, மன நிறைவையும், அமைதியான வாழ்க்கையையும் அருளும் என்பதே சத்தியம். இல்லையா குழந்தைகளே!!  

வாழ்க வளமுடன்!!

Sunday, December 15, 2013

சொந்தச் சிறை


பவள சங்கரி

இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க!
“இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே.. எத்தன பாடுபடுத்திச்சு என்னய.. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி.. கை குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும் போது தான தெரியும் இந்த ராசுவோட அருமை. நல்லா இருக்கும்போது என்னைய கண்டுக்காம இன்னைக்கு என்னை காப்பாத்துறதுக்கு மூச்சு முட்ட உசிர கையில புடிச்சிக்கிட்டு ஓடுறியே.. உனக்கு எம்மேல பாசம் இல்லாமயா இப்புடி ஒரு காரியத்தை பன்னற.. நீ நெம்ப நல்லவிகதான் மாமா.. ஆனா.. “
உடலெல்லாம் உணர்வற்று மரத்துப்போன நிலையில் மனம் மட்டும் அரை மயக்கத்தில் விழித்த நிலையில் எதை எதையோ பிதற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது, ராசுமணிக்கு. கழிப்பறை, மின்சார வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கேத் திண்டாடும் இந்த குக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று போராடி சாதித்து, அதற்காகத் தம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவன் வீரய்யன். ஆசை, ஆசையாக மாமன் மகளை மணந்துகொண்டு அவளையும் சீமாட்டியாக வாழ வைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறான். எல்லாம் என்ன சினிமா கதையா.. ஒரே பாடலில் நினைத்ததெல்லாம் நடந்து முடிந்து ஊரே சுவர்க்கபுரியாக மாறுவதற்கு. இந்த ஆரம்பப் பள்ளியை ஊரில் தொடங்குவதற்குள் அவன் பட்டபாடு சொல்லி முடியாது. பதினான்கு கிலோமீட்டர் அன்றாடம் நடந்து சென்று தான் படித்துவிட்டு வந்து பட்டபாடெல்லாம் இப்போதைய குழந்தைகளுக்கு இருக்கக் கூடாது, அவர்களும் நாலெழுத்துப் படித்து நன்றாக இருக்க வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் இன்று வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக ஒத்தாசையாக இல்லாவிட்டாலும் உபத்திரவமாக இல்லாமல் இருக்கச் சொல்லி, காலில் விழுந்து கும்பிட்டுக்கூட கேட்டாகிவிட்டது. ராசுவும் புரிஞ்சிக்கிற வழியைக் காணோம். அன்றாடம் சண்டை, சந்தேகம், குதர்க்கமான பேச்சு.. சே.. வாழ்க்கையே சலிப்பாகத்தான் போகிறது, வீராவிற்கு. வயிற்றில் குழந்தையை சுமக்கும் ஒரு தாய் போலவா நடந்துகொள்கிறாள். இன்னும் சின்னக் குழந்தையாட்டம் தொட்டதெற்கெல்லாம் அடம் பிடித்துக்கொண்டு, சொல்வதையும் புரிந்து கொள்ளாமல் கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால் ஒரு மனிதன் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். இதோ, வயிற்றில் எட்டு மாத குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் இப்படி ஒரு சாதாரண விசயத்திற்காக சண்டை போட்டு இன்று கீழே விழுந்து படாத இடத்தில் ஏதும் அடிபட்டு விட்டதோ என்னமோ தெரியவில்லை. திடீரென்று இரத்தப் போக்கு ஆரம்பித்துவிட்டது. மயங்கி விழுந்த ராசுவிற்கு தண்ணீர் தெளித்தும் தெளியவே இல்லை. பதறியடித்துக்கொண்டு ஊரில் இருக்கும் இரண்டே இரண்டு குதிரை வண்டியும் , மாட்டு வண்டிகளும், பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு சென்றுவிட்டது. மினி பஸ் காலையில் 11 மணிக்கு மட்டுமே ஒரே ஒரு முறை வரும். இரவு 8 மணிதான் ஆகிறது, தெருவே மயான அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த நேரத்தில் செய்வதறியாது, யோசிக்கவும் நேரமில்லாமல், அன்பு மனைவியை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு 14 கி.மீ. தள்ளி இருக்கிற மகப்பேறு மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறான் இந்த வீரா, கூடவே மனப்பாரத்தையும் சுமந்தபடி.

Friday, December 13, 2013

பாட்டி சொன்ன கதைகள் 21


பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! 


ஐந்தறிவு படைத்த மிருகங்கள் ஆறறிவு படைத்த நமக்கு பல வகையில் பாடம் புகட்டுகின்றன.  பறவைகள், மிருகங்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்க ஆரம்பித்தால், அவைகள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், தம் குட்டிகளைக் காக்கவும் தன்னால் இயன்றவரை எத்துனை வீரத்துடனும், விவேகத்துடனும் நடந்துகொள்கின்றன என்பது புரியும்.  ஒரு காட்டில் நான்கு மாடுகள் நண்பர்களாக வாழ்ந்து வந்தது. நான்கு மாடுகளும் என்றும் இணை பிரியாமல் ஒன்றாகவே மேய்ந்து கொண்டிருந்தன. அந்தக் காட்டில் ஒரு கொடிய சிங்கம் உலவிக்கொண்டிருந்தது. அதற்கு கொழுகொழுவென்றிருந்த இந்த மாடுகளின் மீது ஒரு கண். ஒவ்வொரு முறை இந்த மாடுகளை அடித்துத் தின்பதற்காக வரும்போதெல்லாம், இந்த நான்கு மாடுகளும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அந்த சிங்கத்தை வெகு சுலபமாக விரட்டிக்கொண்டிருந்தன. அந்த சிங்கத்திற்கு எப்படியும் அந்த மாடுகளை தன் உணவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை. அதையேச் சுற்றி சுற்றி வந்தும் கொன்று தின்ன முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இதைக் கண்ட ஒரு நரி, சிங்க ராஜாவின் வருத்தம் போக்க வேண்டும் என்று முடிவு செய்து, அந்த சிங்கத்திடம் சென்று, அந்த மாடுகளை மடக்கி இரையாக்கிக்கொள்ள,  தான் ஒரு யோசனை சொல்வதாகக் கூறியது. அந்த சிங்கமும் ஆவலுடன் கேட்டது. அப்போது அந்த தந்திரமான குள்ளநரி,

Thursday, December 12, 2013


பாட்டி சொன்ன கதைகள் - 26

ஏகலைவனின் குருபக்தியும் மந்திர வித்தையும்!

 

ஹாய் குட்டீஸ் நலமா?

ஏகலைவன் கதை தெரியுமா உங்களுக்கு? சொல்கிறேன் கேளுங்கள்.


ஏகலைவன் என்று ஒரு வேடுவக்குல வீரன் இருந்தான். வனவாசியான ஏகலைவன்  வேட்டையாடுவதிலும்வில் வித்தையிலும் சிறந்து விளங்கியவன். அந்தக் காட்டின் அரசனான இரண்யதனுஸ் என்பவனின் மகன். தன்னுடைய வில்வித்தைக் கலையை இன்னும் சிறப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறந்த வில்வித்தைக் குருவான துரோணாச்சாரியார் பற்றி அறிந்திருந்தவன் அவரிடம் எப்படியும் வில்வித்தையைக் கற்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் கொண்டான். ராஜகுடும்பத்தைச் சேர்ந்த சத்திரியர்களான தருமர், பீமர், அர்ச்சுனர், நகுலன், சகாதேவன் ஆகிய ஐந்து பஞ்ச பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும்துரோணர் வனத்தில் மரங்கள்  அடர்ந்த மையமான  இருட்டுப் பகுதியில் போர்ப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். வில்லாதி வில்லன், வில்லுக்கு விஜயன் என்று புகழ் பெற்றவர் அர்ச்சுணன் . ஏகலைவனுக்கு தானும் அது போன்று பேரு பெற வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டு தனது தந்தையுடன் துரோணாச்சாரியரிடம் வந்து சேர்ந்தான்தனது மகனுக்கு வில்வித்தைகள் கற்றுத் தருமாறு ஏகலைவனின் தந்தை துரோணரிடம் வேண்டி நின்றார்.

ஆனால் துரோணர், ஏகலைவன் வேடன் மகன் என்பதாலும், ஒரு வேடனுக்கு அம்பெய்தி விலங்குகளைக் கொல்லும் கலை மட்டுமே அறிந்தால் போதும் என்றும் காரணம் காட்டி, விற்பயிற்சி அளிக்க மறுத்துவிட்டார். காலம் ஓடிக்கொண்டிருந்தது. துரோணர் அந்த ஏகலைவனை சுத்தமாக மறந்தே விட்டார். இதனால் ஏகலைவன் பெரிதும் மனம் உடைந்து போனாலும், அவன் அதற்காக அப்படியே முடங்கி ஓய்ந்துவிடவில்லை! துரோணரைப் போலவே மெழுகினால் ஆன ஒரு பொம்மையைச் செய்துவைத்து, அதையேத் தன் மானசீகக் குருவான துரோணராக நினைத்துக்கொண்டு, அவர் பஞ்ச பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கற்றுக்கொடுத்த அனைத்துக் கலைகள் மட்டுமன்றி அதற்கு மேலும் கற்றுக்கொண்டான். ஒரு முறை ஒரு நாய் தன்னுடைய பிறவிப் பழக்கத்தைவிடாமல் தன் வேலையைக் காட்டவும், மிகவும் பலமாகக் குரைத்துக் கொண்டுமிருந்ததால் கோபம் கொண்ட ஏகலைவன் அதன் வாயில் அம்புத்தையல் போட்டுவிட்டான். அந்தப்புறமாக வந்த அர்ச்சுணன் இதனைக் கவனித்துவிட்டான். அவனுக்குப் பெருத்த ஆச்சரியம்தனக்கேத் தெரியாத இப்படி ஒரு அரிய கலையை இந்த வேடன் எப்படி அறிந்திருப்பான் என்று . உடனே நேரே தன் குருநாதரிடம் சென்று, ’குருவே வில்லுக்கு விஜயன், வில்லாதி வில்லன், என்றெல்லாம் எனக்குத் தாங்கள் கொடுத்த பட்டங்கள் எல்லாம் வீண்தானோ? எனக்குத் தெரியாத ஒரு வில் வித்தையை ஒரு வேடன் சர்வ சாதாரணமாகச் செய்கிறானே? இது எப்படி சாத்தியம் சுவாமி?’ என்று கேட்டான்.

இதைக்கேட்ட துரோணருக்கும் பெருத்த ஆச்சரியம்தான். தான் மட்டுமே அறிந்திருக்கும் இந்தக் கலையைக் கற்றிருப்பவன் ஒரு வேடன் என்று அறிந்தவுடன் அந்த ஆச்சரியம் பன்மடங்கானது. உடனே அவனைச் சென்று காணவேண்டும் என்று ஆர்வம் பொங்க, அர்ச்சுணனைக் கூட்டிக்கொண்டு காட்டிற்கு விரைந்தார். அங்கு ஏகலைவன் விற்பயிற்சி  செய்துகொண்டிருப்பதைக் கண்டார். அவனிடம் சென்று, ‘உனக்கு இந்தக் கலையைக் கற்றுத் தந்த குரு யார்?’ என்றார் ஆர்வம் பொங்க. உடனே ஏகலைவன், தன்னுடைய குருவான மெழுகு பொம்மையைக் காட்டினான். அதைப்பார்த்தவுடன் அவருடைய ஆச்சரியம் இன்னும் பன்மடங்கானது. காரணம் அங்கு இருந்தது குரு துரோணாச்சாரியாரின் இளவயது சிலை. அதனாலேயே ஏகலைவனுக்கு அவரை அடையாளம் காணமுடியவில்லை. பின் தானே ஏகலைவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஏகலைவன் இதைக்கேட்டவுடன் மகிழ்ச்சியில் மனம் நிறைந்து, அவருடைய காலில் விழுந்து ஆசி பெற்றான். ‘தாங்கள் எனக்கு அனுமதி மறுத்ததால், தங்களையே என் மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டு இந்த அற்புத வித்தைகளைக் கற்றுக்கொண்டே.ன் குருவேஎன்றான் பணிவாக.

துரோணாச்சாரியார் அத்தோடு நிறுத்தவில்லை. ’அப்படியா மாணவனே.. மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் குரு காணிக்கை  கொடுக்காமல் நீ எப்படி இந்த வித்தையைக் கற்கலாம்?’ என்று கேட்டார். உடனே ஏகலைவனும் , ‘என்ன வேண்டும் குருவே, சொல்லுங்கள் இப்போதே தருகிறேன்என்றான்துரோணரும், ‘அப்படியானால் உன்னுடைய கட்டை விரலை குரு காணிக்கையாகக் கொடுஎன்றார். சற்றும் தயங்காத ஏகலைவன் தன்னுடைய  கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான். ஏகலைவனின் குருபக்தியை மெச்சிக்கொண்ட  துரோணர் வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார்நம் மனதின் வலிமை பற்றி நாம் அறியாத பல விசயங்கள் உள்ளது தெரியுமா? இல்லையென்றால் ஏகலைவனால் இப்படி ஒரு அற்புதமான வித்தையை தன்னந்தனியனாக கற்றுக்கொள்ள முடியுமாகுருவின் உருவத்தை மட்டுமே சிலையாக வடித்துக் கொண்டே அத்தனை வித்தைகளையும் கற்றுக் கொண்டது அவனுடைய மனோதிடத்தினால் மட்டுமே இல்லையா?

ஆனால் பாவம் வெட்டிய கைகளை அவனால் மீண்டும் ஒட்ட வைக்கவா முடியும்? அந்தக் காலத்தில் இன்று போல மருத்துவச் சாதனையெல்லாம் இல்லையேஅப்படீன்னா, இப்ப மட்டும் வெட்டிய விரல் தானாக ஒட்டிக்கொள்ளுமா என்றுதானே கேட்கிறீர்கள்? நம்ம கதைக்குப் போவோம் வாருங்கள் அந்த மந்திர வித்தையைப் பற்றி தெரிந்து கொள்ள!

மந்திர வித்தை

ராமுவும், சோமுவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் எங்கு சென்றாலும் இணை பிரியாமல் இருப்பார்கள்அன்று பள்ளியில் நீதி போதனை வகுப்பு மாலையில் வைத்திருந்தார்கள்விருப்பப்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் சொல்லியிருந்தாலும், மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்திச்சொல்லுவார். ராமுவும், சோமுவும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி நீதி போதனை வகுப்பிற்குப் போகாமல் ஏமாற்றிவிடுவார்கள். பள்ளியில் பாடங்கள் அதிகம் இருந்தாலும், வாரத்தில் ஒரு நாள், 30 நிமிடங்கள் மட்டும் மாலை நேர வகுப்பு வைத்தும், மற்ற மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டாலும் ராமுவும், சோமுவும் ஒரு நாள் கூட  கலந்து கொள்ளமாட்டார்கள். அன்றும் அப்படித்தான் ராமு ஆசிரியரிடம் சென்று தன்னோட அம்மா சீக்கிரம் வீட்டிற்கு வரச்சொன்னார்கள் என்றும், அன்று ஒரு விசேசத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னார்கள் என்றும் சொல்லி அனுமதி பெற்று வந்துவிட்டான். அடுத்து சோமு கொஞ்ச நேரத்திலேயே, ஆசிரியரிடம் சென்று வயிற்று வலி மிகவும் அதிகமாக இருப்பதாகவும், வீட்டிற்குச் சென்று மருந்து குடிக்க வேண்டும் என்றும் சொல்லி முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டான். ஆசிரியருக்கு இவர்கள் இருவரைப் பற்றியும் தெரியும் என்பதால் ஆசிரியர் கோபமாக, ‘நீங்கள் நீதி போதனை வகுப்பிற்கு வரவில்லையென்றால் அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லிவிட்டு இந்த முக்கியமான வகுப்பை தவிர்ப்பதால் நஷ்டம் உங்களுக்குத்தான்என்று சொல்லி அனுப்பி வைத்தார். இருவரும் வழக்கம்போல நேராக கிரிக்கெட் மைதானம் மாதிரி ஒரு காலியிடத்தில் போய் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்கள். அங்கு ஏற்கனவே விளையாடிக்கொண்டிருந்த நண்பர்களுடன், ஆன மட்டும் விளையாடிவிட்டு, இருவரும் நேரமாகிவிட்டதே என்று வீட்டிற்குக் கிளம்பினார்கள்.
 சைக்கிளில் ஏறி உட்கார்ந்துவிட்டால் இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி வந்துவிடும். அவ்வளவு வேகமாகத்தான் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுவார்கள்சிக்னல் விழப்போகிறது என்ற அவசரத்தில் எல்லா வண்டிக்காரர்களும், கொஞ்சமும் பொறுமை இல்லாமல் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் ராமுவும், சோமுவும் பெரிய சாதனை செய்வதாக நினைத்துக்கொண்டு அந்த நெரிசலுக்குள்  நுழைந்து விட்டார்கள்கண்மூடி கண் திறப்பதற்குள் என்ன நடந்ததென்றே தெரியாமல், ‘வென்ற சத்தத்துடன் சோமு கீழே விழுந்தான். நல்ல வேளையாக நடை மேடைக்கு அருகே சென்று கொண்டிருந்ததால் உயிர் பிழைத்தார்கள். இல்லையென்றால் அத்தனை வண்டிகளும் ஒன்றன் மேல் ஒன்றாக நிலைகுலைந்து விழுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியிருக்கும்சிக்னலில் நின்று நிதானமாகச் செல்லும் பொறுமை ஒருவருக்கும் இருப்பதில்லைமுண்டியடித்துக்கொண்டு ஓடுவதற்குத் தயாராக இருக்கின்றனர். சோமுவின் சைக்கிள் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் தடுமாறி அப்படியே பக்கவாட்டில் விழுந்தான்விழுந்த வேகத்தில், அவன் பின்னால் அவனை ஒட்டியே வந்துகொண்டிருந்த ராமுவும் அவன் மேலேயே விழுந்தான். கீழே விழுந்த சோமுவின் வலது  கை விரலகளில் ஒன்றான  ஆள்காட்டி விரல் சைக்கிளின் ஹேண்ட்பாரில் சிக்கிக்கொண்டது. அதன் மேல் அவனுடைய  மொத்த உருவமும்  வைத்து அழுத்த ஹேண்ட்பாரில் சிக்கிய விரல் துண்டாகி தெறித்து விழுந்ததைக் கண்ட சோமு, அதிர்ச்சியில்  அப்படியே மயங்கிவிட்டான்இரத்தம் ஆறாகப் பெருகுகிறது. ராமுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லைமெல்ல எழுந்து தானும் சத்தம் போட ஆரம்பித்தான். அனைவருக்கும் அவரவர் அவசரம். வேடிக்கைப் பார்த்துக்கொண்டே  நகர்ந்து கொண்டிருக்கின்றனர் பலர். சிலர்அடடா....  பாவம் சின்னப் பையன்என்று சொல்லிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். யாரோ ஒருவர், ‘ஏம்ப்பா. யாராச்சும் ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்கப்பாஎன்றார்..  இந்த நேரத்தில்தான் தெய்வம் போல தன் தந்தையுடன் வந்து நின்றான் வகுப்புத் தோழன் செல்வம். உடனே பரபரவென இயங்க ஆரம்பித்தான், தன் தந்தையின் துணையுடன். முதலில் ராமுவை விலக்கி ஒரு புறம் உட்காரவைத்துவிட்டு, சோமுவை அந்த இடத்தை விட்டு சற்று விலக்கி, நடைமேடைக்குச் சென்று தந்தையின் மடியில் சோமுவை சாயவைத்து, முதலில் இரத்தம் கொட்டும் அவன் கையை சற்றே தூக்கிப்பிடித்து அப்பாவிடம் தன் சுத்தமான கைக்குட்டையை எடுத்து அதைத் தன்னுடைய குடிநீரில் நனைத்துக் கொடுத்து இரத்தம் வரும் இடத்தில் சுற்றி அழுத்திப் பிடித்து இரத்தம் வருவதை கட்டுபாட்டிற்குள் வரச் செய்தான். பின் ஒரு டாக்டரைப்போல அவன் செய்த காரியங்களையெல்லாம் ஆச்சரியத்தில் அப்படியே கண்கள் அகலப் பார்த்துக் கொண்டிருந்தனர் ராமுவும் மற்றவர்களும்!

 விபத்தின்போது உறுப்புகள் அறுந்து துண்டாகித் தனியாக விழுந்துகிடந்தால் அதைப் பத்திரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

துண்டான பகுதியை சுத்தமான ஒரு பிளாஸ்டிக் உறையில் போட்டு மூடி, அதை ஐஸ் போட்ட சுத்தமான தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு வருவது நல்லது.

துண்டான பாகத்தை நேரடியாக ஐஸ் பெட்டியில் கட்டாயம்  வைக்கக் கூடாது.

எக்காரணம் கொண்டும் சாதாரண ஐஸ் கட்டியின் மீது உடைந்த பாகத்தை அப்படியே வைக்கக்கூடாது. துண்டான பாகத்தை வைத்துக்கொண்டு ஒட்ட வைக்க முடியுமா, முடியாதா என்று யோசிக்காமல் உடனடியாக அதைப் பத்திரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது அவசியம். துண்டான இடத்தின் மீதம் உள்ள பகுதியை சுத்தமான தண்ணீரில் கழுவுவது மிகவும் அவசியம்அடுத்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால் துண்டான பகுதியை மீண்டும் ஒட்டவைத்து செயல்பட வைக்கலாம்.

செல்வம் மிக அழகாக மேற்சொன்னது போலச் செய்து சோமுவையும், உடைந்து துண்டான  அவன் விரலையும் எடுத்துக்கொண்டு உடனடியாகத் தன் தந்தையின் கார் மூலமாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றான். எல்லாம் பரபரவென நடந்து முடிந்தது.

அடுத்த நாள் மாலை சோமுவைக்காண தன் தந்தையுடன் மருத்துவமனைக்கு வந்தபோது, சோமுவின் அம்மா அவனைக் கட்டித்தழுவி, ’என் மகனையும் அவன் கையையும் காப்பாற்றிவிட்டாய் கண்ணா,’ என்று உள்ளம் நெகிழச்சொன்னார்கள். அருகில் இருந்த ராமுவிற்கு அப்படி ஒரு ஆச்சரியம். எப்படி செல்வம் இத்துனை அழகாக இப்படி ஒரு வேலையைச் செய்து முடித்தான் என்று. மெல்ல அவன் அருகில் சென்று அதை அவனிடமே கேட்டான். அப்போதுதான் அவன் பள்ளியில் நடக்கும் நீதிபோதனை வகுப்பில் சமீபத்தில் ஆசிரியர், அவசரகாலத்தில் எப்படியெல்லாம் முதலுதவி செய்யலாம் என்று சொல்லிக் கொடுத்தார்கள் அதன் மூலமாகத்தான் இன்று தங்கள் நண்பனைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமை பொங்கச் சொன்னான். ராமுவிற்கும், சோமுவிற்கும் தங்கள் தவறும் புரிந்தது. பிறகு இருவரும் தவறாமல் நீதிபோதனை வகுப்புகளில் கலந்துகொண்டார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?