63 நாயன்மார்கள் வரலாறு – 32 சோமாசிமாற
நாயனார்
“அன்பராம் சோமாசி மாறனுக்கும்
அடியேன்” என்று திருத்தொண்டத்
தொகையில் போற்றப்படும் சோமாசிமாற நாயனார், சுந்தரமூர்த்தி
நாயனார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
பாடல் பெற்ற திருத்தலமான,
மாஞ்சோலை சூழ்ந்த ஊரான ‘அம்பர்’ மாகாளம் (தற்போது "கோவில் திருமாளம்' என
அழைக்கப்படுகின்றது), சோழ வளநாட்டில் அமைந்துள்ள ஒரு புண்ணியத் தலமாகும். இவ்வூரில்
வேதங்கள் பயிலும் மறையவர் குலத்தில் அவதரித்தவர் சோமாசிமாற நாயனார். சோமயாகம் செய்பவர்கள் சோமையாசி என்று அழைக்கப்பட்டனர். இதுவே பின்னாளில் சோமாசிமாற நாயனார் என்று மாறியுள்ளது. தவறாது மழைபொழியவும், உலகம் செழிக்கவும்
செய்யப்படும் யாகமே சோம யாகம். இவர் சிவனடியார்கள் என்றால் அவர் எக்குலத்தவராயினும்
பேதம் பாராட்டாது தொண்டு செய்வதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார்.
அம்பர்நகர்
அந்தணர்சோ மாசி மாறர்
அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு
த்ளிப்பார்
உம்பர்நிகழ்
வகையாகம் பலவுஞ் செய்யும்
உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்
நம்பர்திகழ்
திருவாரூர் நயந்து போற்றும்
நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே
இம்பர்தொழ
உம்பர்பணிந்து ஏத்த வேலை
ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே
எந்நாளும்
சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து, சிவபெருமானின்
"நமச்சிவாய" எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் ஒழுக்கம் உடைய இவர்
தம் இளம் வயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும்
கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு வேண்டிய
பொருள் உதவிகளையும், உணவுகளையும் அளிப்பதைத் தமது தலையாயக்
கடமையாகவும் கொண்டிருந்தார்.
பல சிவத்தலங்களுக்குச்
சென்று வழிபாடு செய்த,
சோமாசிமாற நாயனார் பஞ்சபூத தலங்களில்
பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலுக்குச் சென்ற சோமாசிமாற நாயனார் தேவாசிரியத்
திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார் பரவை
நாச்சியாரோடு திருவாரூர் திருக்கோவிலுக்கு வந்திருந்தனர்.
சோமாசிமாற நாயனார் அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் சுந்தரமூர்த்தி நாயனாரின்
திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இந்த நேரத்தில் சோமயாகத்தின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும்
அவிர்ப்பாகத்தை எம்பெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவல்
அவருக்கு ஏற்பட்டது. சுந்தரரின்
பாதம் பணிந்தால் எம்பெருமானை எளிதில் அணுகமுடியும் என்று எண்ணியவர், சுந்தரரின் நட்பைப் பெறும் முயற்சியில், தினமும்
அவருக்கு தூதுவளைக் கீரையைப் பறித்து பரவை நாச்சியாரிடம் அளிப்பார். பரவை நாச்சியாரும்
சுந்தரருக்கு கீரையை சமைத்துப் போட, அவரும் தினமும் அவருக்கு
யார் அந்த தூதுவளைக் கீரையைத் தருகிறார் என்று கேட்டார்.
பரவை நாச்சியாரும், அவருக்கு சோமாசிமாற நாயனாரை அறிமுகம் செய்துவைத்தார். பணிந்து நின்ற
சோமாசி மாற நாயனாரைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அவர்களுக்கு
வேண்டுவது யாது என்று வினவினார். சோமாசிமாற நாயனாரும், தாம்
செய்ய இருக்கும் சோமயாகத்தின் அவிர்ப்பாகத்தை எம்பெருமான் தாமே வந்து
பெற்றுக்கொள்ள ஆவண செய்ய வேண்டும் எனத் தம் மனத்தின் ஆசையை அவரிடம் வெளியிட்டார்.
ஈசன் நிகழ்த்த இருக்கும் திருவிளையாடலைத் தம் மனக்கண்ணில் முன்னரே அறிந்துகொண்ட
சுந்தரரும், இறையருளால் அனைத்தும் நலமாகும் என்று
உறுதியளித்தார். வேள்விக்கான நாளும் வந்தது.
வேள்வி
நிறைவுபெறும் தருணத்தில் அவிர்ப்பாகத்தை சமர்ப்பிக்க வேண்டுமென அனைவரும் ஈசனின் வருகைக்காகக்
காத்திருந்தபோது,
பறை ஒலியும் கேட்டது. தெருவில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு வேடன் பறையை இசைத்தபடி, தோளில் இறந்த
மானின் உடல் கிடக்க நடந்து வந்துகொண்டிருக்கிறார். கைகளில் நான்கு நாய்களைக் கட்டி
இழுத்துக்கொண்டு வரும் அவருடன், தலையில் மதுக்குடத்தைச்
சுமந்தபடி வந்த அவர் மனைவி, தன் முதுகில் இரு பிள்ளைகளையும் கட்டிக்கொண்டிருந்தாள்.
ஆனால்
சோமாசிமாற நாயனாரோடு வேள்வியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேடரைக் கண்டதும், அதை அபசகுனமாகக் கண்டு அங்கிருந்து விலகி ஓடியபோது சோமாசிமாற நாயனாரோ,
அனைத்தையும் அறிந்திருந்தவராக அவிர்ப்பாகத்தை
எடுத்தார். நேரே அந்த வேடனிடம் எடுத்துச் சென்று அவரிடம் நீட்டினார்.
சுற்றியிருந்தவர்கள், எம்பெருமானுக்குத் தரவேண்டிய
அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டனர்.
அப்போதும் சோமாசிமாற நாயனாரோ மிகுந்த பக்தியோடு பணிந்து நின்று அவிர்ப்பாகத்தை
வேடனின் கைகளில் அளித்தார். அப்போதுதான் அங்கு அந்த அதிசயம் நடந்தது. அந்த வேடன் நாயனார் அளித்த அவிர்ப்பாகத்தைப் பெற்ற அதே கணத்தில் இடப
வாகனாக உமையம்மையோடும், விநாயகரோடும், முருகப் பெருமானோடும் பிரகாசமாகக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியைக் கண்ட
ஊர் மக்கள் மகிழ்ந்து கொண்டாடினர். 'காட்சி கொடுத்த நாயகர்'
என்ற பெயரும் சோமாசிமாற நாயனாருக்கு உண்டாயிற்று.
சோமாசிமாற
நாயனார் புராணம் சொல்லும் கருத்து
புகழ், பயன்
என ஏதும் கருதாது
உலக நலன்களுக்காகச் செய்யப்படும் வேள்விகளால் உலகத்தில் துன்பம் நீங்கும், மழை
பொழியும், வளம்
பெருகும் என்பது ஆன்றோர்
வாக்கு.
கற்றாங்
கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார்
வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா
வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா
நின்றாரைப் பற்றா பாவமே
என்பார் ஞானசம்பந்தப் பெருமான்.
ஆவுரித்துத்
தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!
என்னும்
அப்பர் பெருமானின் வாக்கிற்கிணங்க, ஒருவர் எந்தக் குலத்தில்
பிறந்தவராயினும் அவர் ஈசருக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் என்று இயல்பினர்.
எப்போதும் சிந்தை தெளிய சிவன் ஐந்தெழுத்தை ஓதுபவர். அப்படிப்பட்ட அடியவர்கள் யாராயினும் வேறுபாடு கருதாது அவர்களைப் போற்றி வணங்கினார்.
எத்தன்மையர்
ஆயினும் ஈசனுக்கு
அன்பர் என்றால்
அத்
தன்மையர் தாம் நமை
ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம்
தெளியச் சிவன்
அஞ்செழுத்து ஓதும் வாய்மை
நித்தம்
நியமம் எனப்
போற்றும் நெறியில் நின்றார்
அடியவர்களுக்குள் சாதி, இனம் பாராது, சிவபெருமானை அவர்கள் உருவில் கண்டு வணங்கல்
வேண்டும். இக்கொள்கையை சோமாசிமாற நாயனார் கடைபிடித்து இறைவனையும்,
இறையடியார்களையும் போற்றினார். நாயன்மார்களில்
அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள். தீண்டத்தகாதவராகப் பயிர்
பார்த்துக் கொண்டிருந்த நந்தனாரிலிருந்து, வேடர் (கண்ணப்பர்),
செம்படவர் (அதிபத்த நாயனார்) , வண்ணார் இனத்தைச்
சேர்ந்தவர் (திருக்குறிப்புத் தொண்ட நாயனார், குயவர் (திருநீலகண்டர்)
என்றும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் வரையில் அத்தனை சாதிகளையும்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் பார்க்கிறோம். இவர்களில் ஞானசம்பந்தர் உள்பட
பன்னிரண்டு வைதிக பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் சோமாசிமாற நாயனாரும்
ஒருவர்.
எம்பெருமானுக்குத்
தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத்
தருகிறாரே என்று கோபப்பட்டபோதும், அத்வைதத்தின் அரும்பொருள்
அறிந்த சோமாசி மாற நாயனாருக்கு அந்தக் காட்சியின் பொருள் விளங்கியது. அந்த வேடர்
பிடித்துவந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்றும் கொம்பு, தாரைத் தப்பட்டைகளை எல்லாம் இந்திராதி தேவர்கள் என்றும் புரிந்துகொண்டார்.
அருகில் இருந்த வேடரின் மனைவியை அன்னை பார்வதி என்றும் அவள் முதுகில் இருக்கும்
இரு மழலைகளும் 'விநாயகனும் முருகனும்' என்றும்
தெளிந்தார்.
திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்தலமான திருமாளம்
எனும் தலத்தில் ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச்
சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராசப்
பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முன்னதாகக் காலை 9 மணியளவில், சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாரும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமயாகத்தைத் தொடங்கி வைப்பர்.
சோமயாகம் செய்வதன் மூலம் மழைபொழியும் என்பது நம்பிக்கை. திருமாகாளம்
மகாகாளநாதர் கோயிலில் பிராகாரத்தில் சோமாசிமாற நாயனார் அவர் மனைவி சுசீலை தனி
சந்நிதி உள்ளது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு
வழிபாடுகள் நடைபெறும்.
"திருச்சிற்றம்பலம்”
No comments:
Post a Comment