Sunday, October 30, 2011

வாழ்க்கை வாழ்வதற்கே!

மனித வாழ்க்கை கிடைத்தற்கரிய அரியதோர் வரம். இதனை எந்த அளவிற்கு நாம் உணர்ந்துள்ளோம் என்பது ஐயமாகவே உள்ளது. உலக பக்கவாத தினமான இன்று, பக்கவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான விழிப்புணர்வு பெறுவதற்கான அவசர தேவை ஏற்பட்டுள்ள தருணம் இது என்பதை உலக பக்கவாத அமைப்பு (WSO) தெரிவித்துள்ளது.

குடும்பம்,குழந்தைகள் எதிர்காலம், தொழில் என்று விரைவாக சுழன்று கொண்டிருக்கிற காலச்சக்கரம், இந்த 50 வயதில் தன் உடன் பிறப்புகளை அடிக்கடி சந்தித்து அளவளாவும் வாய்ப்பை வெகுவாகக் குறைத்து விட்டிருந்தது வையாபுரிக்கு. ஆம், தான் பிறந்து வளர்ந்த பசுமையான கிராமத்தை விட்டு, பிழைப்பைத் தேடி பட்டணம் வந்து சேர்ந்து கிட்டத்தட்ட இந்த 27 ஆண்டுகளில் தன்னுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவிற்கு உயர்ந்திருந்தாலும், நகர, நாகரீக வாழ்க்கை கற்றுக் கொடுத்த தீய பழக்கங்களான மதுவும், புகைப்பழக்கமும், தவிர்க்க முடியாமல் தொற்றிக் கொண்டதும் நிதர்சனமாகிப்போனது அவருக்கு. உடன் பிறந்த ஒரே தங்கையையும் அதே கிராம வாழ்க்கையில் இணைந்திருக்க, ஏதோ ஆடிக்கொரு முறை, அம்மாவாசைக்கொரு முறையே தன் தங்கையை காணக்கூடிய வாய்ப்பு அமைவதும் வாடிக்கையாகி விட்டது.

அன்றும் அப்படித்தான், ஒரு ஆண்டிற்குப் பிறகு தங்கையைக் காண வருவதாகத் தகவல் கொடுத்து விட்டு சென்ற மனிதர், பேருந்தை விட்டு இறங்கி புகை வண்டி, தண்டவாளப் பாதையைத் தாண்டிச் சென்றால் வெகு அருகிலேயே தங்கையின் இல்லம் இருப்பதால் நடந்து சென்றவர், அன்புத் தங்கை தனக்காக வழி மேல் விழிவைத்து தண்டவாளத்தின் மறுபுறம் காத்திருந்தவர் , சகோதரரைக் கண்ட ஆர்வத்தில், புகை வண்டி வருவதைக்கூட கவனியாமல், வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயல….. அந்தோ… பரிதாபம். வெகு விரைவாக வந்த புகை வண்டியில் அடிபட்டு உடல் இரண்டாக சிதறியதைக் கண் முன்னால் கண்ட சகோதரர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனவர், மயங்கிச் சரிந்தார். மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவருக்கு பக்கவாதம் வந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உடலின் வலது புறம் முழுவதுமாக செயலிழந்த நிலையில் வாய் பேச்சும் தடைபட்டு, தொழிலும் முடங்க…. பல மாதங்கள் வரை படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் இந்த பக்கவாத நோயினால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றெந்த நோயைவிடவும் இந்த பக்கவாத நோய் அதிகளவிலான உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது. வருடத்திற்கு சுமார் ஆறு மில்லியன் மக்கள் இந்த பக்கவாதத்தினால் உயிரிழக்கின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களே பக்கவாத நோய் ஏற்பட வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அக்டோபர் 29 ஆம் தேதி உலக பக்கவாத தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் அல்லவா. அந்த வகையில் மருத்துவர்கள் கூறும் பக்கவாதத்திற்கு எதிரான ஆறு முக்கிய சவால்கள் :

1) விழிப்புணர்வு கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் : உயர் இரத்த அழுத்தம், சக்கரை மற்றும் இரத்தத்தின் கொழுப்புச் சத்தின் அதிகளவு ஆகியன.

2) எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், அன்றாட உடற்பயிற்சி பழக்கம்

3) உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு கொள்வதன் மூலம், உடல் எடை அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

4) கட்டுப்பாடான மதுப்பழக்கம்.

5) புகைப்பிடிக்கும் வழக்கத்தை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

6) பக்கவாத நோயின் அறிகுறிகள் குறித்த முன்னெச்சரிக்கையின் விழிப்புணர்வு மிக அவசியமானதாகும்.

இந்தியாவில் இந்நோய் அண்மைகாலமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தாக்கி வந்த இந்த பக்கவாத நோய் . அண்மைக்காலமாக 20 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களை அதிகமாக தாக்கத்தொடங்கியுள்ளது. இந்நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், தோராயமாக 130 முதல் 225 பேருக்கு இந்நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமே ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித மூளையின் ஒரு பகுதி செயலிழப்பதால், பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால், உடலின் ஒரு பகுதி செயல் இழந்து, உடல் உறுப்புகள் இயங்காமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேச முடியாமலும் போகிறது. இதற்கு உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அதனை குறித்த நேரத்தில் சரியாக மேற்கொண்டால் விரைவாக இதிலிருந்து மீண்டு வரவும் வாய்ப்புள்ளது.

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது மூலம் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை பெற முடிகின்றது என்கின்றனர். அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 ‌விழு‌க்காடு தடுக்கப்படுகின்றதாம்.

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாசிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் பக்கவாதம் நோயைத் தடுக்க இயலும் என்றும் கூறப்படுகிறது.

தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டாசியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் பற்றிய குறிப்பேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாசியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடலின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது எ‌ன்றும் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நல்ல ஆரோக்கியமான பழக்க, வழக்கமும் , நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு இவைகளே இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து நம்மைக் காக்கவல்லது என்பதே நிதர்சனம்.

படத்திற்கு நன்றி

7 comments:

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு! அருமையான கருத்துக்கள்!!‌

    ReplyDelete
  2. நல்லதொரு பிரயோசனமான பதிவு !

    ReplyDelete
  3. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4(PART-2)
    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

    Online Books(Tamil- சாகாகல்வி )
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete
  4. மிகவும் நன்றி பவளசங்கரி. டயபெடிஸ் இருக்கும் எனக்கு வாழைப்பழம் சாப்பிட முடியாதே. வேறு மாற்று இருக்கிறதா.

    ReplyDelete
  5. நனி நன்றி மனோ சாமிநாதன்.

    ReplyDelete
  6. வில்லிசிம்ஹன் அவர்களுக்கு,

    மிக்க நன்றி. நான் அளித்திருக்கும் கருத்துகள் அனைத்தும் பொதுவானவையே. தாங்கள் த்யைகூர்ந்து மருத்துவரின் ஆலோசனைப்படியே தொடர வேண்டுகிறேன். ஊன் உடம்பு ஆலயம் அல்லவா, அதில் எந்த கவனக் குறைவும் இருக்க வேண்டியதில்லை அல்லவா. மீண்டும் நன்றி, தங்கள் சக்கரை நோய் விரைவில் கட்டுக்குள் வர பிரார்த்தனைகள். நாளும் நல்லன மலர்க.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...