Thursday, May 26, 2011

வள்ளல் பாரிராசன்.


ரயில் பயணங்கள் கூட மிக இனிமையானவைதான்.முன் பதிவு செய்யப்பட்ட குளுகுளு வசதியுடனான பஞ்சு மெத்தை இருக்கைகள். அத்தோடு கலகலவென அரட்டை அடித்துக் கொண்டு, நல்ல பொழுது போக்கான ஆசாமிகளுடன், நேரம் போவதே தெரியாமல் வம்பை வளர்த்துக் கொண்டு, அவ்வப்போது கொறிப்பதற்கு ஏதாவது தீனி.இடையில் சுகமான உறக்கம் கொஞ்சம். இப்படி ஒரு இரயில் பயணம் என்றால், ஏன் ஒருவர் வெறுக்கப் போகிறார்....?

பாரிராசன், வியாபார நிமித்தமாக அடிக்கடி பயணம் செல்லக்கூடியவர்.ஆனால் சரியான சுகவாசி. ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும், அவருக்கு பயணச்சீட்டு, அது தொலைதூர விமானப் பயணம் ஆனாலும் சரி அல்லது எட்டிப் பிடிக்கும் துரத்தில் இருக்கும் எட்டயபுரமானலும் சரி, வேலையாட்கள் முன்கூட்டியே பயணச்சீட்டை பதிவு செய்வதோடு,அவரை ரயிலில் வழியனுப்ப இரயில் நிலையம் வரை வந்து பெட்டி, படுக்கைகளை அடுக்கி வைத்துச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான், அவர்கள் வந்து எல்லாம், சரி செய்துவிட்டு சென்றார்கள். மனிதர் வந்து நிதானமாக ஆசுவாசமாக உட்கார்ந்தவர், சுற்றிலும் நோட்டம் விட்டார்.அருகில் இரண்டு இளைஞர்கள்,கலகலவென மலையாளத்தில் சம்சாரிச்சிக்கினு இருந்தார்கள்.

இரயிலில் கூட்ட நெரிசல்.கோடை விடுமுறை சமயம். நம் வள்ளல் பாரிராசனோ, சொகுசாக ஆடல் பாடலாக, தன் இரட்டை சரீரத்தை யதார்த்தமாக பரப்பி உட்கார்ந்து கொண்டார். பக்கத்தில் இருப்பவர்களை சரி கட்டுவது அவருக்கு அவ்வளவு சிரமான காரியம் அல்ல. ஒற்றை நாடி சரீரம்தான் என்றாலும் பாவம் உட்காருவதற்கு சிறிதளவாவது இடம் கொடுக்க வேண்டுமல்லவா.......

அந்த இளைஞர்கள் அவருடைய படாடோபத்தையும், வயதையும், பந்தாவையும் பார்த்துவிட்டு சற்றே ஒதுங்கி வேறு பவ்யமாக உட்கார்ந்து கொண்டால்,நம் வள்ளலுக்கு கேட்கவும் வேண்டுமோ! சுகமாக காலை நீட்டி சாய்ந்துவிட்டார். வழியெல்லாம் போன் வேறு....தான் பெரிய வியாபார காந்தம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக.. பசங்கள் மிரண்டுத்தான் போனார்கள். கொஞ்சம் அவர் அசைந்தாலும், அவர்கள் இன்னும் கொஞ்சம் ஒடுங்கி உட்காருவது பார்ப்ப்தற்கு வேடிக்கையாகவும் இருந்தது. எப்படியாவது இந்த பெரிய மனிதரிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டால் தங்கள் வாழ்க்கைக்கும் ஒளி கிடைக்கலாம் என்ற நப்பாசை வேறு.

‘தம்பி, அந்த பேண்ட்ரியில் போய் ஒரு தண்ணீர் பாட்டில் கூலா வாங்கி வர முடியுமா’ என்று கேட்டதுதான் தாமதம் இருவரும் எழுந்து கொண்டார்கள். ‘இதோ ஐயா’ என்று.

அவரும் பெருமையாக புன்னகைத்துக் கொண்டு ஒரு ஐநூறு ரூபாய் தாளை அனாவசியமாக உருவி,

‘ இந்தாப்பா, சில்லரை இல்லை’ என்று கூறி நீட்டினார்.

வெகு பவ்யமாக வாங்கிச் சென்ற இளைஞர்கள் கர்மசிரத்தையாக பாட்டிலை வாங்கி வந்து நீட்டினார்கள்.

ஒரு பெரிய மனிதரின் பழக்கம் கிடைத்த பெருமிதம் அவர்கள் முகத்தில். இருக்காதா பின்னே........ஏதோ நண்பன் அவனுடைய அவசர வேலைக்காக, இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு கிடைக்காதலால் முதல் வகுப்பு ஏ.சி கோச்சில் டிக்கெட் வாங்கிக் கொடுக்க அடித்தது யோகம் என்று இருவரும் வந்திருப்பது இங்கு மற்றவர்களுக்குத் தெரியவாப் போகிறது....? வேலை வெட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு, பயணச் சீட்டும், தங்கும் இடமும் கொடுத்து, சாபாட்டிற்கும் பணம் கொடுத்து , யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு! எப்படியோ இந்த பெரிய மனிதரைப் பிடித்து ஒரு நிரந்தர வேலைக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கணக்கு போட்டார்கள் இருவரும். ஆனாலும் பேராசைதான் என்றாலும், இவ்வளவு பெரிய மனிதருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது பெரிய விசயமா...தாங்களும் பள்ளியிறுதி வகுப்பு வரை படித்திருக்கிறோமே என்ற தன்னம்பிக்கை வேறு. அவ்வளவுதான், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பாரிராசன் வள்ளலுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அவர் எள் என்றால் எண்ணெய்யாக நின்றார்கள். பாவம் இந்த பெரிய மனிதர்களின் வள்ளல் தன்மை பற்றி அறிந்திலர் இருவரும்!

மனிதர் இது போன்று ஏமாளிகள் கிடைத்தால் விடுவாரா என்ன....அவ்வப்போது பேண்ட்ரிக்கு அனுப்புவது, பெரிய மனது பண்ணி அவர்களுக்கும் சிறு தீனி வாங்கிக் கொள்ளச் சொல்வது [ ஆனாலும் அவர்கள் இருவரும் நல்ல பெயர் வாங்குவதிலேயே குறியாக இருந்தவர்கள் அதெல்லாம் சாப்பிடவேயில்லையே !] கால் மட்டும்தான் அமுக்கிவிடவில்லை இருவரும். அதைத்தவிர அவருடைய சொகுசுக்குண்டான அத்தனை பணிவிடைகளையும் சங்காமல் செய்தார்கள்.

வயிறு நிறைந்து, கண்கள் சுழட்ட ஆரம்பிக்க , இவர்கள் பாவம் அப்போதுதான், தங்களுடைய சுய புராணத்தை ஆரம்பிக்க இருந்தார்கள்.ஆனால் மனிதரோ தூங்குவதற்கு மும்முரமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பெட்டியை மேலே இருந்து எடுக்கச் சொல்லி அதிலிருந்து, காற்று ஊதும் தலையனையை எடுத்து ஒருவர் கொடுக்க, ஒருவர் ஊத, மகராசன் அதை சுகமாக தலைக்குப் பின்னால் வைத்துக் கொண்டார். பிறகு பெட்டியை பூட்டி எடுத்து தலைமாட்டில் வைத்துக் கொண்டார். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொள்ள மனிதர் எதையுமே கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சென்னையிலிருந்து ஆலப்புழா செல்லும் விரைவு வண்டி அது. அவர் இறங்க வேண்டிய இடம் கோவை. கோவை வந்தவுடன் எழுப்பி விட வேண்டும் என்ற கண்டிசன் வேறு போட்டுவிட்டு ஆனந்தமாக நித்திரை கொள்ள ஆரம்பித்து விட்டார். இந்த அப்பாவி இளைஞர்கள் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு கோவை வரக் காத்திருந்தார்கள்.

கோவை நெருங்கும் நேரம் மனிதர் எழுப்பினாலும் எழுந்திருக்கும் வழியைக் காணோம். இளைஞர்களுக்கு அவரைத் தொட்டு எழுப்ப பயம். அவருடையது ஒரு சிறிய பெட்டியும், ஒரு பெரிய பெட்டியும் ஆக இரண்டு உருப்படிகள். சிறிய பெட்டியைத்தான் தலைமாட்டில் வைத்துக் கொண்டார் பத்திரமாக.

இதற்குமேல் பொறுமை காக்க முடியாது என்று ஒரு இளைஞன் அவரை மெதுவாக தட்டி எழுப்பினான். மனிதர் அப்படியே ஆடி அசைந்து எழுந்திருக்க முயன்றார்.

‘ஐயா, வண்டி கோவை நெருங்கி விட்டது. சீக்கிரம் எழுந்திருங்கள். அங்கு 10 நிமிடம்தான் நிற்கும்.’

‘அட்ப்பாவிங்களா, முன்னாடியே எழுப்ப மாட்டீங்களா.......என்னடா ஒரு சூட்டிப்பே இல்லாத பசங்களா இருக்கீங்க....நீங்கள்ளாம் என்னாத்த வேலை பார்த்து கிளிச்சி பெரிய ஆளா வரப்போறீங்க...?’

அவ்வளவுதான், அவர்கள் முகம் பொசுக்கென்று வற்றிப் போய் தாங்கள் அவருடைய விலாசம் கேட்க நினைத்ததைக் கூட மறந்து விட்டார்கள். நல்ல வேளையாக அவருடைய விசிட்டிங் கார்ட் ஒன்று கீழே விழ அதை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர் இருவரும். எப்படியும் ஊருக்குப் போயாவது அவரைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டு விட வேண்டும் என்று திட்டம் இருவருக்கும்......ஆனால் ஒரு பெரிய ஆப்பு காத்திருப்பது பின்னால்தான் தெரிந்தது இருவருக்கும்.

ஆம் மனிதர் கழிவறைக்குச் சென்றவர் அங்கு 10 நிமிடம் எடுத்து கொண்டதோடு ஆடி அசைந்து வருவதற்குள் வண்டி கோவை ரயில் நிலையம் வந்து நின்றுவிட்டது. அரக்கப் பரக்க ஓடிவந்தவர், சின்ன பெட்டியைத் தான் எடுத்துக் கொண்டு, பெரிய பெட்டியை அந்த இளைஞரில் ஒருவரை கொண்டுவந்து கொடுக்கச் சொன்னார். அவர்களும் இந்த ஒரு வேலைதானே செய்துவிடலாம் என்று முடிவெடுத்து வேகமாக செயலில் இறங்கினர்.

‘அப்பாடி.........மனிதர் ஒரு வழியாக இறங்கவும், வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.ஒரு பெரிய கடமையை முடித்த திருப்தியுடன் இருவரும் நிம்மதியாக கண்ணயர்ந்தனர்.தூங்கி விழித்து, புறப்படத்தயாராகும்போது தான் ஒரு பெரிய அதிர்ச்சி இருவருக்கும். பெட்டி மாறியிருந்தது. ஆம் பாரிராசன் இறங்கும் அவசரத்தில் தன் பெட்டியை வைத்துவிட்டு அவர்களுடைய சிறிய பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார். இருவருக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அட்டா பெட்டியில் என்னென்ன் முக்கிய சாமான்கள் வைத்துள்ளாரோ தெரியவில்லையே என்று அச்சம் அடைந்தனர். சரி கீழே இறங்கியவுடன் முதலில் அவருக்கு போன் செய்து விவரத்தைச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

போன் எண்ணை எடுத்து ஒரு வழியாக போன் செய்ய எண்ணைப் போட்டு,

‘ஹலோ, பாரிராசன் ஐயாங்களா........’

‘ஆமாம், நீங்க யாரு...?’

‘ஐயா, நாங்கதான் ரயிலில் உங்களோடு பயணம் செய்தோமே. அவங்கதான். ஐயா.....நீங்க...’

‘டேய், திருட்டு பசங்களா.......என் பெட்டியை ஏண்டா மாத்தினீங்க...இப்ப பெட்டியைத் திறந்து பார்த்துட்டு அதில பெரிசா பணமெல்லாம் இல்லன்னதும் ஒன்னும் தெரியாத மாதிரி போன் பண்றீங்களா.....?’

‘ ஐயோ, இதென்ன, இப்படி பேசறீங்க...உங்க பெட்டியில என்ன இருக்குன்னே எங்களுக்குத் தெரியாதே...இப்பதான் உங்க பெட்டி மாறினதே எங்களுக்குத் தெரியும். உடனே போன் பண்ணறோம்...’

’அடேய், அதெல்லாம் எனக்குத் தெரியாது......அந்த பெட்டில முக்கியமான பில்லு, கிரெடிட் கார்ட் எல்லாம் இருக்கு. உங்களால அதை வைச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது. ஆனா எனக்கு அது ரொம்ப முக்கியம். மரியாதையா கொண்டாந்து குடுத்துபிடுங்க......இல்லேன்னா போலீசுல புடிச்சி குடுத்துடுவேன் பார்த்துக்கோங்க.........’

இருவருக்கும் வேர்த்துப் போய் குலை நடுங்க ஆரம்பித்து விட்டது. இது ஏதுடா வம்பாகப் போய்விட்டதே.......யார் முகத்துல இன்னைக்கு முழிச்சோமோ தெரியலையே.....ஆண்டவனே என்று விதியை நொந்து கொண்டு,

‘ஐயா, அவசரப்பட்டு வார்த்தையைக் கொட்டாதீங்க.....உண்மை தெரியாம ஒரு பெரிய மனிதர் வாயில் இப்படி கீழ்த்தரமான வார்த்தையெல்லாம் வரலாமா.....உங்களை எவ்வளவு பெருமையா நினைச்சிருந்தோம். இப்படி இவ்வளவு அநாகரீகமாக நடந்துக்கறீங்க......நல்லாயிருங்க ஐயா. உங்களோட பெட்டியை அப்படியே திறந்து கூட பார்க்காம கொரியர் பண்ணுகிறோம். திறந்து நீங்க சரி பார்த்துக்கோங்க.......இன்னொரு முறை இது போல அடுத்தவர் மனதை புண்படுத்துகிற பாவத்தைச் செய்யாதீங்க.......நன்றி ஐயா..’

பாரிராசனுக்கு முகத்தில் ஈயாடவில்லை....கன்னத்தில் யாரோ பளார் என்று அரைந்தது போல் உணர்ந்த மனிதர் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே திருதிருவென விழித்தார்!



பவள சங்கரி திருநாவுக்கரசு.







--


Monday, May 23, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் ! (10)

வெண்ணிலவில் ஒரு கருமுகில் !(10)

'விரும்பிப் போனால், விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் ‘ என்பது வாழ்க்கையின் ஒரு விதி.

மாறன் தந்தையைப் பர்த்தவுடன் அழுதுவிடக் கூடாது, தைரியமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தது, தந்தையின் கலங்கிய விழிகளைப் பார்த்த அந்த நொடியில் தவிடு பொடியாகிவிட்டது.தன்னையறியாமல் கண்களில் மாலையாக கண்ணீர். என்னதான் கண்டிப்பான அப்பாவாக இருந்தாலும், சிறு வயதிலிருந்தே தங்களுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்து பார்த்து செய்த மனிதராயிற்றே. இன்று இப்படி படுக்கையில் இருப்பதை காணச் சகிக்காமல் மனதைப் பிழிந்தது.

‘அப்பா, இப்ப தேவலையாப்பா....’ அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை.

‘நன்னாயிருக்கேன்ப்பா......ஏதோ நம்ம பார்த்தசாரதி என்னை மீட்டுண்டு வந்துட்டான்......அன்றாடம் அவனை சேவிச்ச பலனை மொத்தமா கொடுத்துட்டான்..பாவம் அம்மாதான் ரொம்பவும் நடுங்கிப் போயிட்டா..’ கண்களைச் சுழற்றி அம்மாவைத் தேடுவதைக் கவனித்த் மாறன்,

‘அப்பா, அம்மா வெளியில இருக்காப்பா. டாக்டர் ஒருத்தர்தான் உள்ளே இருக்கனும். அதுவும் 5 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம்.

‘சரிப்பா...நீயும் இப்பத்தானே ஊரிலிருந்து வந்திருக்கே. பிரயாணமெல்லாம் நன்னாத்தானே இருந்தது,’

‘ம்ம்..ஆமாம்ப்பா.நீங்க ஓய்வெடுத்துக்கோங்கோ...நானும் ஆத்துக்குப் போய் ஸ்நானம் பண்ணிண்டு வரேன்’

‘ம்ம் சரிப்பா. அம்மாவை வரச்சொல்லு.நாக்கு வரண்டு போறது. குடிக்க ஏதானும் வேணும்’

வெளியில் வந்தவன்,அம்மாவிடம் அனு நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து சற்றே தயங்கி நின்றான். இரட்டைப் பின்னலும், பட்டுப்பாவாடையும் கட்டிக் கொண்டு,ஓயாமல் வாய் பேசிக் கொண்டிருந்த சுட்டிப் பெண்ணாக, பார்த்தசாரதி கோவில் தேர்த்திருவிழாவின் போது இறுதியாகப் பார்த்தது அவளை.இப்போது நேர் மாறாக, மிக அமைதியாக, பொறுப்பான, பெண்ணாக சுத்தமாக மாறிவிட்டிருந்தாள். அம்மாவிடம் மிக அனுசரனையாக அவள் நடந்து கொண்டது நிறைவாக இருந்தது அவனுக்கு.துளியும் சங்கோஜப்படாமல், யதார்த்தமாக் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அவள் நடந்து கொண்ட விதம் மாறனுக்குப் பிடித்திருந்தது.குடும்பத்திற் கேற்ற நல்ல பெண் என்று அப்பா சொன்னது சரியாகத்தான் இருக்கிறதென்று நினைக்கத் தோன்றியது.

இந்த ஒரு வாரத்தில் தந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது மனதிற்கு அமைதியளிப்பதாக இருந்தது.அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறியிருந்தாலும் வீட்டிற்குச் சென்று க்வனமாக இருக்க வெண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கியிருந்தார் மருத்துவர். இன்னும் இரண்டொரு நாளில் நாளில் ஊருக்குக் கிளம்ப வேண்டும். அப்பா நலமாக இருப்பதில் மன நிம்மதியுடன் கிளம்ப முடியும். இந்த முறை இந்தியாவிற்கு வந்து 10 நாட்களே தங்க முடிந்தாலும், மனதிற்குள் ஒரு அமைதி இருந்தது.மலை போல் வந்த துன்பம் பனிபோல் நீங்கியது போல ஒரு நிம்மதி.அனுவின் அமைதியான தோற்றமும், நட்புறவுடன் பழகும் அவளின் குணமும்,தன் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் நல்ல மனதும் அவளிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது மாறனுக்கு. அதற்கு மேல் எதைப்பற்றியும் நினைத்துப் பார்க்க இயலாத சூழல்.

ஊருக்குக் கிளம்பும் போது அப்பாவின் கணகளில் துளிர்த்திருந்த சிறிய கண்ணீர் முத்துக்கள் மனதை நெகிழச் செய்தது.பழைய தெம்பு இன்னும் வரவில்லை.மரணபயத்திலிருந்து மீள கொஞ்ச காலம் பிடிக்கும் போன்று தெரிந்தது. எப்படியும் அனு அடிக்கடி வந்து பார்த்து இவர்களை சரி செய்துவிடுவாள் என்று நினைப்பது தவறோ என்று மனம் தயங்கத்தான் செய்தது.எது நடந்தாலும் நன்மைக்கே, என்று பொத்தாம் பொதுவாக முடிவு செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. அப்பா விமான நிலையம் வந்து வழி அனுப்பி வைக்க இயலாதது பெரும் மனக்குறையாக இருந்தது அவனுக்கு.அண்ணனும் முதல் நாளே கிளம்பிப் போய்விட்டான்.மன்னி வேறு அங்கு தனியாக இருந்து கொண்டிருக்கிறார்களே. வாயும், வயிருமாக இருப்பவர்களுக்கு ஒத்தாசைக்குக்கூட அங்கு அக்கம், பக்கத்தில் ஆட்கள் இல்லை.அதுதான் நகர வாழ்க்கை. மக்கள் அவரவர்களின் பாட்டைப் பார்ப்பதே பெரும்பாடு நகரங்களில்.இதில் அடுத்த வீட்டு பிரச்சனைகளைப் பார்ப்பது சாமான்யமான காரியம் அல்லவே.

ரம்யாவிற்கு தான் கிளம்பப்போவதை முன்பே தெரிவித்திருந்ததால், அவள் விமான நிலையத்திற்கு உல்லாச ஊர்தியுடன் வந்திருந்தாள்.பனிக் குன்றுகளின் சொச்சம் அங்கங்கே குத்தவைத்திருந்தது கணகளுக்கும் குளிர்ச்சிதான். சுட்டெரிக்கும் சென்னை வெய்யில்,எவ்வளவு கொடியது என்பதை இந்த மிதமான குளிர் நன்கு உணர்த்தியது.நெவார்க் விமான நிலையம், மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி.சரியான நேரத்திற்கு விமானம் தரையிறங்கிவிட்டாலும், பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து வெளிவர சற்று தாமதம் ஆனது. பாவம் ரம்யா வந்து காத்துக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாக ஓடி வந்த மாறன் வெளியில் ரம்யாவைக் காணாமல் தலையைத் திருப்பி அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தான்.

வலது புறம் நுழைவாயிலில் ஒரு சீனக் குழந்தை, குண்டு கன்னம், சப்பை மூக்கு, ரோசா வண்ண இதழ்கள், அழகான மழலையில் உடன் வந்த இன்னும் சற்றே பெரிய குழந்தையிடம் ஏதோ கையை நீட்டி, நீட்டி பேசிக் கொண்டிருந்தது...நடு நடுவே, தன்னையே யாரோ உற்றுப் பார்ப்பதை உணர்ந்து, சற்றே நாணத்துடன், லேசான புன்னகையைப் பூத்தது.....அந்த அழகில் அப்படியே மெய்மறந்து நின்று கொண்டிருந்த போதுதான், முகத்தின் வெகு அருகில் சாவி ஆடியது. யாரது, என்ற கோபத்துடன், திரும்பி பார்த்தவன், அட ரம்யா...நீதானா?

‘ஆமாம் மாறன், கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வழியில் ஒரே போக்குவரத்து நெரிசல் வேறு.வந்து சேருவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது.சாரிப்பா’’

பரவாயில்ல விடு, எனக்கு நேரம் போனதே தெரியலப்பா....இந்த குழந்தைகள் அத்தனை அழகு...என்னமா பேசறாங்க......ஆங்கிலமும், சீனமும், கலந்து தூள் கிளப்புறாங்க.......பொழுது போனதே தெரியல.

‘என்னப்பா, அதுக்குள்ள குழந்தை ஆசை வேறு வந்துவிட்டதா.ரொம்ப டூ மச்சா இல்ல இருக்கு இது.அது சரி அப்பாகிட்ட,மேட்டரை போட்டு உடைச்சு எனக்கு வேலை இல்லாம பண்ணிட்ட போல’

‘அட ஏன்ப்பா, நீ வேற,அங்க இருக்கற நிலைமை தெரியாம பேசிக்கிட்டு இருக்கே.அதெல்லாம் இருக்கட்டும், நம்ம் ஆபீஸ்ல என்ன விசேசம். நீ பேக்கிங் எல்லாம் ஆரம்பிச்சுட்டியா?’

ஆபீஸ் எப்பவும் போலத்தான்...நாளொரு இஷ்யூவும், பொழுதொரு சங்கடமுமாக போய்க்கொண்டு இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை.இப்பத்தான் ஊருக்கு, ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன்.இனிமேதான் பேக்கிங் ஆரம்பிக்கனும். இன்னும் 2 வாரம் இருக்கே...

இருவரும் பேசிக் கொண்டே, கார் பார்க்கிங்கிற்கு வந்து தரையில் பரவிக் கிடந்த பனிக்கட்டிகளில் வெகு கவனமாக அடி எடுத்து வைத்து நடந்து சென்று வண்டியினுள் ஏறினர்.ரம்யா, எடுத்த எடுப்பிலேயே, சர்ரென, ஆக்சிலேட்டரை தூக்கி விட்டு வேகமாகக் கிளப்பினாள்.

‘என்ன ஆச்சு, ரம்யா. ஏன் இப்படி...பார்த்து நிதானமா எடு’

‘ம்ம்ம்’

பார்க்கிங் ஏரியாவை விட்டு வெளியே வந்த்வுடன், திரும்பவும் வேகத்தை அதிகமாக்க முயன்றாள். ஸ்பீட் லிமிட் 40 மைல் என்று தெரிந்தும், அதற்கு மேலும் வேகம் எடுக்க ஆரம்பித்தாள். பல முறை ஏற்கனவே டிக்கெட் வாங்கியவள்தான் என்றாலும், அங்கங்கே இன்னும் பனிக்கட்டிக்ளின் மீதம் பரவிக் கிடக்கையில் இப்படி சர்ரென்று வண்டி எடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்தும் இப்படிச் செய்கிறாளே என்று யோசிக்கும் போதே, ரம்யா வண்டியை அப்படியே பனிக்கட்டியின் மீது வேகமாக ஏற்ற, வண்டி ஒரு சுற்று சுற்றி சர்ரென வழுக்கிக் கொண்டே ........இழுத்துச் சென்றது. கத்துவதற்குக்கூடத் தோன்றவில்லை இருவருக்கும்.நல்ல வேளையாக ஒரு மரம் சாலையோரம் இருந்தது. வண்டி அதில் சென்று மோதி நின்றது. இன்னும் இரண்டு அடி சென்றிருந்தால், அவ்வளவுதான், ஒரு பெரிய பள்ளம். ஏழு, எட்டு அடி இருக்கும். நல்ல வேளையாக எந்த சாமி புண்ணியமோ, மரம் வந்து காப்பாற்றியது. வண்டியைத் திறந்தால் திறக்க முடியாமல், கதவு இறுகிக் கொண்டது.

ரம்யா அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டாள் படபடப்பாக......

மாறன் அவளிடமிருந்த செல்பேசியை வாங்கி 911 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து, செய்தியைச் சொல்லி உதவி கேட்டு, அவர்கள் வந்து ஒரு வழியாக வண்டியைத் திறந்துவிட, பிறகு இருவரும் ஓரளவிற்கு சரி செய்து கொண்டு புறப்படத்தயரானார்கள்.மாறன் தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வருவதாக எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்து தானே ஓட்டி வந்து சேர்ந்தாள்.

‘என்ன ரம்யா....இன்னும் இவ்வளவு டென்சனாவே இருக்கே.....என்ன ஆச்சுப்பா.’ என்றான் கனிவாக.

‘அதெல்லாம் ஒன்னுமில்ல மாறன். இந்தா உனக்கு சாப்பாடு. ஏதோ செய்திருக்கேன். சுமாராத்தான் இருக்கும். நாளைக்குத் தனியா சப்பாத்தியும், சன்னாவும் வைத்திருக்கிறேன். இப்போ போய் சாதம் சாப்பிடு. தக்காளி சாதம். உனக்குத்தான் பிடிக்குமே. நாளைக்குப் பார்க்கலாம். சரியா....’

‘ரம்யா, பார்த்துப் போ ரம்யா. நாளைக்குப் பேசலாம்’என்று கூறி அனுப்பினாலும், ரம்யாவை நினத்து மேலும் கவலையாக இருந்தது மாறனுக்கு. ஏன் இவ்வளவு டென்சனாக இருக்கிறாளோ தெரியவில்லையே. நாளை ஆபீஸ் சென்றவுடன் முதல் வேலையாக அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.வீட்டில் நுழைந்து பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, கழிவறைக்குச் சென்று முகம் அலம்பிக் கொண்டு வந்து உட்கார்ந்தான். அம்மா இத்தனை நெருக்கடியான மனநிலையில் கூட தனக்காகவும், அண்ணன், மன்னிக்காகவும், பலகாரங்கள் செய்து கொடுத்ததை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை அவனால்.தாய்மை என்ற அந்த உணர்வு இந்த உலகத்தில் வேறு எந்த உறவுக்கும் ஈடாகுமா என்று கற்பனைகூட செய்து பார்க்க இயலாத ஒன்று.இட்லி பொடி, பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி என்று எல்லாம் பார்த்து பார்த்து பக்குவமாக தயார் செய்து, அழகாக அதை பேக் செய்தும் கொடுத்திருந்தார்கள். எப்பொழுதும் பேக்கிங் தந்தையின் வேலை.இந்த முறை அம்மா, அப்பாவின் மேற்பார்வையில் அதே போல் அழகாக பேக் பண்ணி அனுப்பியிருந்தார்கள். அம்மா கைபட்ட அந்த பொட்டலத்தின் ஸ்பரிசம் கூட அவனுக்கு அந்த நேரத்தில் இதமாக இருந்தது. ஏதோ தன் தாய் அருகாமையில் இருப்பது போன்று ஒரு உணர்வு. இதற்காகவே அவன் தன் அம்மாவிடம் எதையாவது இப்படி கேட்டு வாங்கி வைத்துக் கொள்வான். முடிந்தவரை அதை கொஞ்சமாவது சேமித்து வைத்தும் கொள்வான், அடுத்த முறை ஊருக்குச் செல்லும் வரை. ரம்யா கூட பல முறை இதைக் கிண்டல் செய்திருக்கிறாள், தேவையில்லாத செண்டிமெண்ட் என்று......ரம்யா கொடுத்த தக்காளி சாதம் சுவை சற்று மட்டுதான் என்றாலும்,பசிக்கு தேவாமிர்தமாக இருந்தது. அம்மா கையால் சுவையாக சாப்பிட்டு வந்ததனால் ஒரு வேளை இது மட்டாக தெரிகிறது போலும் என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டான். திடீரென புரை ஏற ஆரம்பித்தது அவனுக்கு.யாரோ தன்னை நினைத்துக் கொள்வார்கள் போலிருக்கிறதே...யாராக இருக்கும்......?



வாஷிங்டன் - நண்பன் தினேஷின் வீடு.இரண்டு பேருக்குப் போதுமான அளவில் சிறிய வீடு. ஒரு படுக்கை அறை, சமயலரை, சின்ன வரவேற்பு அறை என சிறிய வீடுதான். அங்கு வாங்குகிற சம்பளத்தில் கனிசமான செலவு என்றால் அது வீட்டு வாடகையும், குழந்தை பராமரிப்பு செலவும்தான்.கணவன், மனைவி இருவருக்குப் போதுமான வீடுதான். ஆனாலும் யாராவது இப்படி விருந்தாளி வந்துவிட்டால் கொஞ்சம் திண்டாட்டம்தான்.தினேஷின் மனைவி அனிதாவின் தூரத்து உறவினரின் பெண் அங்கே குடியிருப்பதாகவும், அவள் தனியாக இருப்பதனால் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்யும்படியும், அனிதாவின் பெற்றோர், ஏற்கனவே தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார்கள். அதனால் இன்று அவள் வீட்டிற்கு வந்து நேரில் சில விசயங்கள், அலுவல் சம்பந்தமாக பேச வேண்டும் என்பதாலும் தினேஷின் இல்லம் தேடி வந்திருக்கிறாள்.

அப்போதுதான் அவள், தனக்கு கம்பெனியில், டெப்புடேஷனாக 2 மாதங்களுக்கு நியூ ஜெர்சிக்கு மாற்றல் செய்திருக்கிறார்கள், என்றும் அங்கு ஒருவரையும் தெரியாததாகையால் தனக்கு உதவ யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

அப்போதுதான் மாறனின் நினைவு வந்தது தினேஷிற்கு. மாறனின் நல்ல குணங்கள் குறித்தும், அவன் கல்லூரிக்காலத்திலேயே, அனாதை ஆசிரமம் ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் பல குழந்தைகளின் வாழ்வில் இன்றும் ஒளியேற்றிக் கொண்டிருப்பதையும், அந்த வகையில்தான், தனக்கும் மாறனின் அறிமுகம் கிடைத்ததையும் குறித்து விளக்கமாகக் கூறி, அவனை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் கூறினான் தினேஷ், அவந்திகாவிற்கு. ஆம் அதே அவந்திகாதான்.............

தொடரும்.

Tuesday, May 17, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 (5)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை -பகுதி - 2 (5)



அடுத்து நாங்கள் சென்ற கோவில்களில் மிக இனிமையான, அதாவது இனிப்புகளாலேயே அலங்கரிக்கப்பட்ட கோவில் இருந்ததே........சொல்கிறேன்....சற்று பொருங்கள் சாமி.....

கால பைரவர் சிவனுடைய பக்தர்.இவருடைய கோவிலில்தான் முழுவதும் விதவிதமான இனிப்பு தின்பண்டங்களினாலேயே அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இவருடைய மகிமை எத்தகையது என்பதற்கான ஆதாரம், பனாரஸில் ஔரங்கசீப்பின் கையிலிருந்து தப்பித்தது இந்த கால பைரவர் கோவில் மட்டும்தானாம்.கால பைரவர் நீதிமான் என்று கருதப்படுகிறார் ஒரு கவளம் சோறுண்டு, ஒரு கோடி சொத்தானாலும், சோர்வின்றி விடிய விடிய காக்கும்,நாய் என்ற அந்த நன்றியுள்ள ஜீவன்.கால பைரவரின் வாகனமாக இருக்கக்கூடிய தகுதி வாய்ந்த ஜீவன்!நகரத்தின் ஒவ்வொரு முக்கிலும் நின்று காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.ஊரில் உள்ள அத்துனை விதமான இனிப்பு வகைகளையும் அந்த கால பைரவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அலங்க்காரம் செய்திருந்தனர்.

அடுத்து துர்கையம்மன் கோவில் தரிசனம்! மகா துர்கா கோவில், காசி நகரத்தின் தெற்கே உள்ளது. இக்கோவில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கோவிலாம்.ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், நவராத்திரி காலங்களிலும், விசேட பூசைகள் நடப்பதுடன், கூட்டமும் அதிகமாக இருக்கிறது. ஒரு ஆங்கிலேய அதிகாரி, ஏதோ ஒரு சண்டையில் வெற்றி கொண்டால் ஒரு மணி வாங்கி வைப்பதாக வேண்டிக்கொண்டு அச்சண்டையில் வெற்றி கண்டதால் ஒரு மணியும் வாங்கி தொங்க விட்டுள்ளார். அந்நிய நாட்டவருக்கும், நம்பிக்கையை ஏற்படுத்திய அற்புத சக்திவாய்ந்த அம்மன்!இந்தக் கோவிலில் குரங்குகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனாலேயோ என்னவோ இக்கோவிலை குரங்கு கோவில் என்றும் அழைக்கின்றனர்.

அடுத்து, சோளியம்மன் கோவில் என்ற மிகப் பழமையான சிறிய கோவில். காசிவிசுவநாதரின் தமக்கை இந்த சோளியம்மன் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.சற்றே உயர்ந்த குன்றின் மீது தனியளாக கம்பீரமாக வீற்றிருக்கிறாள் சோளியம்மன்.

சிரி சுவாமி பாஸ்கரானந் சமாதி:

துர்கா கோவிலின் அருகில் சுவாமி பாஸ்கரானந் சமாதி மிகவும் அழகாக சங்மர்மங் என்ற கல்லினால் கட்டப்படடு இருக்கிறது.இந்த சமாதியின் பூந்தோட்டம், கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக வடிவமைக்கப்பட்டு, பாதுகாக்கவும்படுகிறது.சிவலிங்கத் திருமேனி வடிவில் கட்டப்பட்ட இச்சமாதி எந்நேரமும் திறந்திருக்கிறது.இங்குதான் அருகில் நாங்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டுச் சென்றோம். பயணிகளுக்கு வரப்பிரசாதம் இந்த ஏடிஎம் வசதி. கையில் பணம் அதிகமாக வைத்துக் கொள்வது பாதுகாப்பற்ற சூழலை எற்படுத்துகிற காலகட்டத்தில் அங்கங்கே, ஏடிஎம் வசதி, மிகுந்த பயனளிப்பதாகாவே இருக்கிறது!அதிகமான கல்வியறிவற்ற கிராமத்து மக்கள் கூட பழக்க தோசத்தில் அழகாக ஏடிஎம்மை பயன்படுத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

துளசி மனாஸ் கோவில் :

துளசி மனாஸ் கோவில் துர்கா கோவிலுக்குப்பின் 1964ல் இரண்டு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் சுவர்களில் ராமர், சீதை, விஷ்ணு,இலக்குமி, அண்ணபூரணி, ராமாயணம் வடித்த துளசிதாசர் ஆகியவர்கள் அழகிய சித்திர வடிவமாக அருள்பாலிக்கின்றனர். அருகில் சிவபெருமான் தன் தலையில் கங்கையைத் தாங்கியுள்ளது போல் அழகாக வடிவமைக்கப்பட்ட கோவிலும் அதனருகில் அழகான பூந்தோட்டமும் உள்ளது.

பாரத மாதா கோவில் :

இந்த கோவில் 1936ல் மகாத்மா காந்தியடிகள் திறப்பு விழா செய்த பெருமை வாய்ந்த கோவில்.ஆங்கிலேயர்களுடன் நடந்த சுதந்திரப் போராட்டத்தின் நினைவாக சிரிசில் பிரசாத் குப்தா என்பவர் இக்கோவிலைக் கட்டியுள்ளார். இக்கோவிலில் இமாலய பர்வதத்தின் சிகரம் , திபெத் முதலிய இயற்கை காட்சிகளுடன், அழகான சித்திரங்களும் மேலும் அழகூட்டுகிறது. அருகில் ஒரு நூலகமும் இருக்கிறது.

சமஸ்கிருத பல்கலைக்கழகம் :

காசியில் சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்பவர்கள் அதிகம். பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் கட்டப்பட்ட ‘குயீன்ஸ் காலேஜ்’ என்ற பிரபலமான கல்லூரி, அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த டாக்டர் சம்பூர்ணா நந்தி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பல்கலைகழகத்தில் அருங்காட்சியகம் மற்றும் நூலகமும் இருக்கிறது. இந்த பல்கலைக் கழகத்தில் அழகாக கோவில்களும் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த பல்கலைக்கழகம் ஆயுர்வேத கல்லூரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் :

பனாரசின், தெற்கு எல்லையில் 1300 ஏக்கர் நிலம் காசி ராஜாவினால் கொடுகப்பட்டுள்ளது.இது மிகப் பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது.மதன் மோகன் மாளவியர் 1916ல் இந்த பல்கலைக்கழகத்தை கட்டியுள்ளார்.முதல் வாசலில் இவருடைய சிலையும் இருக்கிறது.இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, நூலகம், சமஸ்கிருத அறிவியல், விவசாய நுட்பம், இசைக்கல்லூரி முதலியவைகள் இருக்கின்றன.இன்னொரு சுவையான தகவல், இந்த பல்கலைக்கழகத்தில், சுயமின் உற்பத்தி செய்யப்படுகிறது.

காசி ராஜாவின் அரண்மனை கங்கை நதியின் தெற்குப் புறம் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. ராஜா பயன்படுத்திய விதவிதமான பல்லக்கு,வண்டிகள் மற்றும் அவருடைய உடைகள், ராணியின் உடைகள், அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் மிக மோசமான நிலையிலேயே உள்ளது.

அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலமான சாரநாத் சென்றடைந்தோம். பண்டைய அரண்மனைகளும், தர்பார்களின் நினைவுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், இன்றும் செவ்வனே பராமரிக்கப்பட்டு வருகிறது.சாரநாத் காசியிலிருந்து, 6 மைல் தொலைவில் வடக்குப் பகுதியில் இருக்கிறது.இதுவே புத்த மதத்தின் தாய்நாடு. காசியிலிருந்து கார் அல்லது இரயில் மூலம் செல்லலாம்.சாரநாத்தில் இரயில் நிலையம் உள்ளது. பிர்லா சத்திரமும் உள்ளது. சுமார் 2 அல்லது 3 ஃபர்லாங்க் தூரத்தில் கி.மு.5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாக்குண்டி இருக்கிறது. அசோகர்,கனிஷ்கர்,குப்தர் முதலிய அரசர்கள் காலத்தில் சாரநாத் நகரம் மென்மேலும் சிறப்படைந்திருக்கிறது. பாஹினி, ஹியின் சங் ஆகிய இரண்டு சீன யாத்ரீகர்கள் கி.மு.5,7ம் நூற்றாண்டில் மிகவும் புகழ்ந்துரைத்துள்ளார்கள். சாரநாத்தில், செங்கற்களால் கட்டப்பட்ட மிக அழகிய புத்தர் கோவில்கள் உள்ளன. புத்த மதத்தினர்கள்,அழிந்து போன, செங்கற்கள், கருங்கற்கள் முதலியவைகளையும் வணங்குகின்றனர். புத்த பகவான் இங்கே ஒரு சாதாரண குடிலில் 4 மாதங்கள் தங்கி இருந்துள்ளார். அந்த இடத்தில் 200 அடி உயர புத்தர் கோவில் கி.மு 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.

இந்த அருங்காட்சியகம் கி.மு.3ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.இதில் புத்த மதத்தின் வரலாற்று சின்னங்கள் மற்றும், அசோகச் சக்கரத்தின் சிதைந்த பாகங்களை அதன் மூல வடிவம் போல் செய்து பாதுகாத்து வருகின்றனர். அதன் முகப்பில், அசோக ஸ்தூபியில் உள்ள நான்கு புறமும் இருக்கக்கூடிய சிங்க உருவ அமைப்பை அப்படியே வைத்து பாதுகாக்கின்றனர்.

முல்காஞ்குடி விஹார் :

இந்தக் கோவில் தங்கத்தில் இலங்கை ஆளுநர் காதர்மபாலினால் கட்டப்பட்டது.ஜப்பானிய சிற்ப வல்லுநர்களால் கட்டப்பட்டுள்ளது. அஜந்தா பெயிண்டிங்கும் உள்ளது.

அடுத்து நாம் தரிசிக்கப் போவது சுவர்க்க லோகத்தின் முகப்பு வாயிலான ரிசிகேஷ் மற்றும் ஹரித்துவார் ஆகிய புண்ணியத்தலங்களை!

தொடரும்.


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 (5)
May 15, 2011
by coral shree

Sunday, May 15, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 9

வெண்ணிலவில் ஒரு கருமுகில் ! (9)


பரந்து விரிந்த வனாந்திரம். திரும்பிய புறமெல்லாம் வறண்ட் நிலங்கள்! காய்ந்து சருகாய்ப் போன மரங்கள். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் முகம் தெரியாத விதவிதமான மூகமூடிகளுடன், எள்ளி நகையாடும் மனிதர்கள். இதில் அழகான முகமூடிகளைத் தாங்கிய உருவங்களை நாடிச் சென்ற மற்றொரு முகமூடி அதன் உண்மை முகத்தைக் கண்டு அலறிக்கொண்டு காத தூரம் ஓடும் காட்சி..........மத்தியில் மரக்கட்டையாய் நீண்ட ஒரு உருவம் மல்லாந்துக்கிடக்க, சுற்றிலும் கருமையான, பயங்கர தோற்றத்துடன் கொத்தித் திங்கக் காத்திருக்கும் இராட்சத கழுகுகள்..........அய்யோ பாவம் யாரந்த உருவம் என்று உற்று நோக்க.......... அம்மாடியோவ்.......... நானா அது ?

வியர்வை வெள்ளம் ஆறாய்ப் பெருக, க்ண்கள் திறக்க மறுக்க, மிகச் சிரமப்பட்டு போராடி மீண்டு வந்தது போல் கண் விழித்தாள ரம்யா. டிஜிட்டல் கடிகாரம் இரவு 2 மணியைக் காட்டியது. ஓ.......கனவா.......சே.........
என்ன மோசமான கனவு!

இரவு வெகு நேரம் தூங்காமல் எதை, எதையோ நினைத்து மனக் குழப்பத்தோடேயே கண் அசந்ததின் விளைவுதான் இப்படி ஒரு மோசமான கனவு என்பது புரிந்தாலும், அதைத் தவிர்க்கும் உபாயம்தான் அவளுக்குப் பிடிபடவில்லை. ரிஷியின் மனைவி சொன்ன விசயம் தன் மனதை மிகவும் பாதித்திருந்ததையும் உணர முடிந்தது அவளால். ரிஷி மீது இருந்த அத்துனைக் கோபமும் நொடியில் மறைந்து போனது அவளுக்கே ஆச்சரியமாகவும் இருந்தது. ஆம் ரிஷி செய்தது சாதாரண தியாகமா? எந்த குறையும் இல்லாத பெண்களைத் திருமணம் செய்யவே ஆயிரம் யோசனை செய்யும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெண் என்பதற்கு ஆதாரச்சுருதியான, கருவைச் சுமக்கும் அந்த கர்பப்பையே இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன்வந்த அவன் தியாகச் சிந்தையை எப்படி பாராட்டுவது. தன் தாய், அந்த கொடிய வியாதியால் அவதிப்பட்டு, உருக்குலைந்து உயிர்விட்ட ரணம் அந்த இளகிய உள்ளத்தை ஆழமாக பாதித்ததன் விளைவு, அதே வியாதியால், திருமண வயதில் பாதிக்கப்பட்டு, நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்ததனால், அந்த ஒரு பகுதியின் இழப்போடு உயிர் பிழைக்க முடிந்த, தன்னுடைய தூரத்து உறவினரின் பெண்ணை மனமுவந்து மணந்து கொண்ட அவனைத் தன் நண்பன் என்று சொல்வதில் பெருமையாக இருந்தது அவளுக்கு.

சுட்டித்தனமும், குறும்பும் நிறைந்திருந்த இந்த ரிஷிக்குள் இத்துனை நல்ல மனம் இருக்கும் என்று நினைக்க முடியவில்லை. ஆனாலும் தனக்கு அந்த பேரிழப்பைத் தாங்குவது சிரமமான காரியம் என்றாலும், காலம் எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த மருந்து என்பதும் அவளால் உணர முடிந்தது.

மாறனின் தந்தையின் உடல் நலம் குறித்த பெரும் கவலையும் சேர்ந்து கொண்டது.மூன்றாவது நாளாக இன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது வேதனையான விசயம் தான். மாறன் மருத்துவரிடம் தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தாலும், அவன் உடனே கிளம்பி செல்ல முடியாத அளவிற்கு சில பிரச்சனைகள். விரைவில் கிளம்பும் ஏற்பாடுகளும் செய்து கொண்டுதான் இருக்கிறான். தந்தை அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அறிந்தவுடன் தான் சற்றே நிம்மதிப் பெருமூச்சு அவனிடமிருந்து வந்தது.


--
சில நேரங்களில் விதியின் போக்கை எவராலும் உணர முடிவதில்லை. எப்படியும் அவந்திகா பற்றி அம்மாவிடமும், அப்பாவிடமும் சொல்லிவிட வேண்டும் என்று அவன் எடுத்த முயற்சியை எவ்வளவு எளிதாக முறியடித்ததோடு, அதே அத்தையிடமும், அத்தை பெண்ணிடமும் தானே வலியச் சென்று அப்பாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க வேண்டி அடிக்கடி பேசவும் வைத்து விட்டதே......

ரம்யாவின் நிலையோ அதனினும் பரிதாபமானது. இவ்வளவு நாள் ரிஷி தனக்கு பெரிய துரோகம் இழைத்து விட்டதாக கற்பனை பண்ணிக் கொண்டதன் விளைவு,அவன் மீது ஏற்பட்ட கோபம், காதலை மறக்கச் செய்தது. ஆனால் இன்று அவனுடைய தியாக மனநிலையை உணர்ந்து கொண்டபின், காரிருள் விலகிய கதிரவன் போல் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது மனது.ரிஷியின் மீது எப்படியும் தப்பு கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று மனம் திட்டம் போட்டு வேலை செய்ததையும் அவளால் மறுக்க இயலவில்லை.

தனக்கு நிறைவேறாமல் போன காதலை எப்படியும், தன் நண்பனை அவன் அன்பிற்குப் பாத்திரமான அவந்திகாவுடன் சேர்த்து வைத்து விடுவது என்று முடிவு செய்த பிறகுதான் சற்றே ஆறுதல் அடைந்தது.நினைப்பதெல்லாம் நடத்திவிடத்தான் அனைவருக்கும் ஆசை, விதி என்ற ஒன்று இருப்பதை மறக்கும்வரை.

மாறன் அலுவலகத்திலும் இருப்பு கொள்ளாமல், தந்தையின் உடல் நலம் குறித்த கவலையில் பணியிலும் கவனம் செலுத்த இயலாமல் பரிதவித்ததை உணர்ந்த உயர் அதிகாரி, அவனுக்கு விடுமுறையும் கொடுத்து, பயணச் சீட்டிற்கான ஏற்பாடும் பண்ணிக் கொடுத்தார்.ரம்யாவிற்கு முன்பாகவே தான் இந்தியா கிளம்பி வருவோம், அதுவும் இப்படி ஒரு சூழலில் வருவோம் என்ற நினைத்துப் பார்க்கவில்லையென்றாலும், காலத்தின் கட்டாயம்.

விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன், தன்னையறியாமல் மனது அப்பாவைத் தேட ஆரம்பித்தது. ஒவ்வொருமுறை தான் செல்லும் போதும் வரும் போதும் தந்தையை வரவேண்டாம் என்று கூறினாலுல் அவர் அதை சட்டை செய்யாமல், காலந்தவறாமல் சரியாக வந்து சேர்ந்துவிடுவார். கண்கள் தன்னையறியாமல் தந்தையைத் தேட, மூத்த அண்ணன் கண்ணில் பட்டான். ....

‘ அண்ணா, நீ எப்ப மும்பையிலருந்து வ்ந்தாய்’?

‘நானும், நேற்றுதான் வந்தேன், மாறன்’

‘அண்ணியும் கூட வந்திருக்காங்கல்ல.எப்படி இருக்காங்க’.

‘இல்லப்பா. அண்ணியை டாக்டர் டிராவல் பண்ண வேண்டாம்னு சொல்லியிருக்காங்க.....குழந்தை உண்டாகியிருக்கு. கொஞ்சம் வீக்கா இருக்கறதுனால ரெஸ்ட்ல இருக்கச் சொல்லியிருக்கா, டாக்டர்.

இருவரும் ஏதும் பேசத்தோன்றாமல், ஆழ்ந்த யோசனையினூடே, மருத்துவமனை வந்து சேர்ந்தார்கள்.

அண்ணன் வீட்டிற்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு வந்து அப்பாவைப் பார்க்கலாம் என்று சொல்லியும் கேட்காமல், மாறன் அடம்பிடித்து நேரே மருத்துவமனை வந்து சேர்ந்தான். கட்டிலில் கிழிந்த நாராய்க் கிடந்த தந்தையைப் பார்க்கவே வேதனையாக இருந்தது . இந்த ஒரு வாரத்தில் எத்துனை மாற்றம் .அசந்து உறங்கிக் கொண்டிருந்ததால், சத்தம் செய்ய மனம் வராமல், அம்மாவை வெளியே வரும்படி கையை ஆட்டிவிட்டு, வெளியில் வந்தான்.

மாறனைப் பார்த்தவுடன், தாய்மை உணர்ச்சி மேலிட,மகனின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘எனக்கு பயமா இருக்குப்பா’........என்று நாத்தழுக்க சொல்ல,மாறனின் கண்களிலும் கண்ணீர் தழும்புவதைப் பார்த்த அண்ணன்,

‘என்ன மாறன் இது. அம்மாதான் உணர்ச்சிவசப் படுகிறார்களென்றால், நீயும் இப்படி இருப்பது சரியல்ல. அம்மாவிற்கு ஆறுதல் சொல்வதைவிட்டு, நீயும் இப்படி இருந்தால் எப்படி..?’

‘சரி அண்ணா, டாக்டர் என்ன சொன்னார். ஒன்னும் பயம் இல்லையே’


‘சரி . மருத்துவமனையைப் பார்த்தவுடன் அப்பாவிற்கு நல்லபடியாக விரைவில் குணம் அடைந்து விடும் என்ற நம்பிக்கை வருகிறது.அம்மா, நீங்க ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க. பயப்படாதீங்க அம்மா. அப்பா விரைவில் குணமடைந்து விடுவார்’என்றான், தாயின் கைகளைப்பிடித்துக் கொண்டு.

அம்மாவின் செல்பேசி அழைக்கவும், மாறன் அதை எடுத்து ஹலோ என்று அழைக்க,மறுமுனையில், அத்தை.

‘ ஹலோ, மாறனாப்பா..... எப்படி இருக்கிறாய். அப்பா நல்லா இருக்கார். கவலைப்படாதீங்கப்பா. விரைவில் வீட்டிற்கு நல்லபடியாக கூட்டிச் செல்லலாம் ‘ என்று சொல்லிவிட்டு,மங்களத்திடம் போனை கொடுக்கச் சொல்லி,

‘ மங்களம், அனுவிடம் சாப்பாடு கொடுத்தனுப்புகிறேன்.இன்னைக்கு அவளுக்கு ஆபீஸ் லீவ்தான்.’

‘சரி, அக்கா,நீங்களும் முடிந்தால் ஒரு எட்டு வந்துட்டுப் போனேள்னா பரவாயில்லை’

‘ அதுக்கென்ன. நான் சாயங்காலமா, வரேன்’

அத்தை போனை வைத்தவுடன், மாறன் அம்மாவின் முகத்தைப் பார்க்க, அம்மாவும்,

‘இந்த ஒரு வாரமா, அனுதான் தினந்தோறும் வந்து அப்பாவிற்கு தேவையான காரியங்களெல்லாம் செய்துண்டிருக்கா........இதோ இன்னும் சித்த நாழில வந்துடுவோ......’

அனு வரப்போகிறாளா.....மாறனுக்கு அதுக்கும் மேல் அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காவிட்டாலும், தந்தை முழித்தவுடன் அவரைப் பார்த்து பேச வேண்டுமென்ற ஆவலில் மௌனமாகக் காத்திருந்தான்.....


தொடரும்.

--

Monday, May 9, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! - 8

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! - பகுதி - 8.


மாறன் எப்போதும் மிக ஆவலாக தந்தையின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவன், அன்று மட்டும் ஏனோ அந்த தொலைப்பேசியின் அழைப்பு மணி, ஏதோ தனக்கு வேண்டிய ஒன்று மறுக்கப்பட்டதன் விளைவாக ஒரு குழந்தையின் அழுகையாக ஒலிப்பது போலக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை இது தம்முடைய மனப்பிரம்மையாக இருக்குமோ?

’ஹலோ மாறன், எப்படிப்பா இருக்கிறாய்’?

‘ அப்பா.......சொல்லுங்கோப்பா. நீங்களும், அம்மாவும், நலம்தானே’.

‘ நன்னா இருக்கோம்ப்பா... நீ சௌக்கியமா இருக்கியோன்னோ’.

‘ இருக்கேம்ப்பா........ம்ம்..’

‘ என்னப்பா. என்னமோ சொல்லத் தயங்கறாப்போல இருக்கு. எதானாலும் சொல்லுப்பா’

’அடேய் பாவி, இப்பாவாவது உன் உண்மை நிலையை எடுத்துச் சொல்லுடா. அவந்திகா மட்டுமே உன் வாழ்விற்கு ஒரு வழி காட்ட முடியும் என்பதை எடுத்துச் சொல்லுடா...இப்ப விட்டா இனி எப்பவுமே அது பகல் கனவாயிடும்டா.......’

மாறனின் மனச்சாட்சி, இடித்துரைத்தும் ஏனோ இன்னும் அவன் மனம் மௌனம் சாதிக்கவே செய்கிறது.பெற்ற பாசம் , அந்த நல்ல உள்ளங்கள் வேதனை படக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம், அவன் வாயை மட்டுமல்லாமல், தன் மனக்கதவையும் மூடி வைக்கச் செய்கிறது. தந்தை அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்ற வேதனை ஒரு புறம் வாட்டினாலும், ஒரு நல்ல மகனாகத் தன் கடமையில் இருந்து சற்றும் தவறக் கூடாது என்பதிலும் தெளிவாகவே அவனால் சிந்திக்க முடிந்தது! இந்த பெரும் போராட்டம் ஒரு நாள் நல்ல விதமாக முடிவுறும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

‘ம்ம்..ஒன்னுமில்லைப்பா........
.அம்மா இருக்காங்களா’

‘இருப்பா தறேன். நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும். நாங்க உன் கௌரி அத்தை ஆத்திற்கு சென்று இருந்தோம்ப்பா. அவளோட பெண்ணை நாங்கள் ரொம்ப நாளைக்கப்புறம் இப்பத்தான் பார்க்கிறோம். நன்னா லட்சுமி கடாட்சமா , களையான முகம். குடும்பத்துக்கு தோதான பெண். பூஜை, புனஸ்காரம் எல்லாம் ஒழுங்கா செய்யறா. இந்த காலத்தில படிச்ச பொண்ணு இவ்வளவு ஆச்சாரமா பார்க்கிறது அபூர்வம்தான். அதுவும் நாங்க போகும் போது அவா வீட்டு வாசல்ல, பசு மாடும், கன்றுமா ஒரு நல்ல காட்சி கிடைத்து, சகுனமும் அருமையா, மனதிற்கு நிறைவா இருந்ததுப்பா. அவளோடபோட்டோவும் உனக்கு அனுப்பறேன். பார்த்துட்டு நீ சொன்னால் மேற்கொண்டு பேச சௌகரியமா இருக்கும்........’

அப்பா....

ம்ம்... சொல்லுப்பா. எதுவானாலும் சொல்லு. ஏன் தயங்கறே. ஜாதகம் எல்லாம் அருமையா பொருந்தி இருக்கு. பெண்ணும் அஸ்தம் நட்சத்திரம். எல்லா ராசிக்காராளோடும் எளிதா ஒத்துப் போற குணாம்சம் இருக்கும். நம்ம வீட்டிலும் எல்லோரோடும் நன்னா அனுசரணையா இருப்போ...... நீ அத பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம்ப்பா’

அதில்லைப்பா....சரிப்பா அம்மாவிடம் போனை குடுங்களேன். ‘

‘ சரிப்பா......என்னமோ மென்னு முழிங்கிண்டிருக்கே. உங்க அம்மாகிட்ட தான் சொல்லுவேன்னா அதையாவது செய். ஏண்டி, மங்களா....வாடி உன் செல்லப் புத்திரன் உன்னாண்டத்தான் பேசுவானாம், இந்தா ‘

. ஹலோ, எப்படிப்பா இருக்கே.....’

‘ ம்ம்ம்...அம்மா..நீ நல்லாயிருக்கியாம்மா....’

’ ம்ம்..சொல்லுடா ராஜா....என்ன உன் குரலில் உற்சாகமே காணோமே....என்னப்பா. உடம்புக்கு எதானும் பிரச்சனையா, ஒழுங்கா சாப்பிடரையோன்னோ?’

‘அதெல்லாம் நன்னாத்தான்ம்மா சாப்பிடறேன். என்னமோ தெரியலம்மா. எனக்கு உன் மடியில தலை வச்சு படுத்து அழணும் போல இருக்கு. ‘

‘ மாறன்...என்னப்பா ஆச்சு. ஏன் இப்படியெல்லாம் சொல்லற. ஊருக்கு ஒரு எட்டு வந்துட்டுப் போலாமில்ல.... நீ வந்து இரண்டு வருசம் ஆச்சேப்பா. அதான் உனக்கு வீட்டு நினைவு வந்துவிட்டது போல இருக்கு....’

‘ ம்ம்ம்....வறேன்மா.. என்னம்மா அப்பா எதோ சொன்னாரே. பெண் பார்த்துவிட்டு வநதோம்னு...’

‘ஆமாம்ப்பா....உங்க கௌரி அத்தையோட பெண் அனுராதாவைத்தான் பார்த்து விட்டு வந்தோம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த பெண். மனதிற்கு நிறைவா இருக்குன்னு அப்பா சொல்லிண்டிருக்கார். ஜாதகமும், சகுனமும் நன்னா இருக்குன்னு சந்தோசமா இருக்கார். ‘

‘ நீ, என்னம்மா சொல்றே.....உனக்கும் பிடிச்சிருக்கா...’

‘ ஆமாம்ப்பா. நீ விரும்பற மாதிரி நல்லா அழகா பாட்டு பாடறா. இந்த காலத்துல இப்படி ப்டிச்ச பொண்ணுங்க இருக்கறது அபூர்வ்ம். அதனாலேயே எனக்கும் பிடிச்சிருக்கு’

‘அம்மா.......அதெல்லாம் சரி. ஒரு சின்ன விசயம். கௌரி அத்தைக்கு ஏதேனும் வாக்கு கொடுத்தீங்களா..?’

‘ புரியலயேப்பா.......என்ன கேட்கறேன்னு......என்ன வாக்கு கொடுக்கறது...?

‘ இல்லம்மா....அவங்க பெண்ணை கட்டிக்கறதா, ஏதாவது வாக்கு கொடுத்துட்டீங்களான்னு கேட்டேன்’

‘ஏம்ப்பா........என்ன ஆச்சு. நீ இன்னும் பெண் போட்டோ கூட பார்க்கலியே. அதுக்குள்ள என்ன ஆச்சு. சொந்தம் வேண்டாம்னு நினைக்கறியா....?’

‘ இல்லம்மா.....அப்பா எங்கே இருக்கார்?’

‘ தெரியலப்பா. அவர் பெட் ரூம் பக்கம் போனார். சத்தம் காணோம். தூங்கறாரோ என்னமோ தெரியல.
அம்மா.....நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்கதானே.......
‘ஏதோ பெரிய பீடிகையாப் போடப்போகிறானோ.....என்னன்னு தெரியலியே. ஆரம்பத்தில் பெண் பார்க்க ஆரம்பிக்கும் போது அவனைக் கேட்டுவிட்டுத்தானே ஆரம்பித்தோம். அதற்குள் என்ன ஆச்சுன்னு தெரியலியே....அவர் வேறு ரொம்ப சந்தோசமா இருக்கார், நல்ல பெண்ணா அமைஞ்சிருக்கான்னு. இந்த நேரத்துல இவன் வேறு என்னமோ சொல்ல வரானே...என்று யோசிக்கும் போதே,
‘அம்மா, என்னம்மா, பேசாம இருக்கீங்க........
‘இல்லப்பா . நீ என்னமோ சொல்ல வந்தாயே. அதை எதிர்பார்த்துத்தான் காத்திருக்கேன். வேறு ஒன்னுமில்லப்பா...
அது வந்தும்மா.......அவந்திகா.............
மங்களம்.......அப்பாவின் குரல்.
என்னன்னா..... இருப்பா அப்பா என்னமோ இப்படி கூப்பிடறார். என்று பதட்டமாகச் சொல்லிவிட்டு போனை கீழே வைத்துவிட்டு அம்மா சென்றுவிட, மாறனோ ஏதும் புரியாமல் 10 நிமிடமாக லைனில் காத்திருக்க, அம்மா திரும்பவும் வந்து அதே பட்டத்துடன்,
‘ மாறன், அப்பா என்னமோ நெஞ்சு வலிக்கறா மாதிரி இருக்குன்னு சொல்றார். வேர்த்து விடறது. வாய்வா இருக்கும்னு சொல்லி டாக்டர் இப்ப வேண்டாம், பிறகு பார்க்கலாம்னு சொல்றார். நேக்கு ஒன்னும் புரியலப்பா.....
‘அம்மா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் உடனே டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போங்க. பக்கத்தாத்து ராஜாராம் மாமா இருக்காருரில்ல. அவரைக் கார் எடுக்கச் சொல்லி டாக்டர்கிட்ட கிளம்புங்க...வேற ஏதும் யோசிக்காதீங்க ப்ளீஸ். கிளம்புங்க. . ‘
பக்கத்தாத்து மாமா ஊரில் இல்லைப்பா. அவரோட பெண் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். ஏதாவது டாக்சி எடுத்துக்கிட்டு போலாமான்னு பார்க்கிறேன்
‘இல்லம்மா யாராவது கூட வந்தால் பரவாயில்ல. சரி இருங்க. என்ன பண்றது........அந்த நேரத்தில் உடனே நினைவிற்கு வந்தவர் கௌரி அத்தைதான்...........
அம்மா உடனே கௌரி அத்தைக்குப் போன் செய்ங்கம்மா. அத்தையும் மாமாவையும் நேரே மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு நீங்க டாக்சி வரச்சொல்லி அப்பாவை கூட்டிக் கொண்டு கிளம்புங்கம்மா........
மாறனுக்கு அப்பாவின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலை ஏற்பட்டது அத்தையின் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டான்.அம்மா அப்பாவை மருத்துவமனைக்கு அழைட்துச் சென்று மருத்துவரைப் பார்த்து பரிசோதனைக்குப் பிறகு அப்பாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ளும் வரை காத்திருப்பதை தவிர பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் தன்னால் வேறு என்ன செய்ய முடியும்.....?

-- தாயே
வரமருள்வாய் நீயே
மாயமாய் மறையும் நிம்மதியே
தாயே மீண்டும் சேயாய் மாறி
உன் மடிசாய வேண்டுமம்மா
நித்தியச் சொரூபமே!
தாயே!

அவன் மனம் வேண்டுதலில் உரைந்து போனது.......

தொடரும்.

Thursday, May 5, 2011

மனம் எனும் மாயக்கண்ணாடி!

”புலன்களின் எல்லா வாயில்களையும் அடைத்து வைத்து, வெளி விசயங்கள் புகாமல் தடுத்து நிறுத்தி மனதையும், இதயத்தில் நிலையாக நிறுத்திப் பின் அவ்வாறு வசப்படுத்தப்பட்ட மனதால், ப்ராணனை உச்சந்தலையில் நிலை பெறச்செய்து, பரமாத்மா ஸம்பந்தமான யோக தாரணையில் நிலைத்து நின்று எவன் ‘ஓம்’ என்னும் ஒரே எழுத்தான ப்ரம்மத்தை உச்சரித்துக் கொண்டு அந்த ‘ஓம்’ என்ற ஏகாபுரத்தின் பொருளான நிர்குண ப்ரம்மமான என்னைச் சிந்தனை செய்து கொண்டு இவ்வுடலை நீத்துச் செல்கிறானோ அந்த மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான்!”
பகவத்கீதை.

250px-Ars.moriendi.pride.a.jpg

'எத்துனை முறை இதனை மனனம் செய்திருப்பேன். ஒர் ஆயிரம் முறை இதனை மனக்கோவிலில் நிறுத்தி புண்ணிய மலர்களால் அர்ச்சித்திருப்பேனே. ஆயினும் இந்த இறுதி நேரத்தில் எனக்குப் பயனளிக்கவில்லையே ' என்று சுயநலமாகச் சிந்திக்கக் கூட இயலவில்லை, மரணப்படுக்கையில் மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருக்கும் மகேந்திரனுக்கு. ஐம்புலன்களும் அடங்கப் போகும் நேரத்தில் சிந்தனை பின்னோக்கிச் சென்று, அசைபோட ஆரம்பித்தது.

வழக்கமாக விடியற்காலை 5 மணிக்கு எழுந்து பம்பரமாகச் சுழலும் திலகவதி அன்று படுக்கையை விட்டு எழவே மனம் வராமல், மணி ஆறாகியும் படுத்துக் கொண்டே இருந்தாள். இந்த பத்து நாட்களில் அவள் வாழ்க்கையை விதி எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு விளையாடிப் பார்த்து விட்ட்து.

விடிய, விடிய சேர்ந்தாற்போல் 10 நிமிடமாவது கண் அசந்திருப்போமோ என்றே
தெரியவில்லை திலகவதிக்கு. 5 நிமிடத்திற்கு ஒரு முறை கணவனின் முகத்தை,
தொட்டுப்பார்த்து, கைகால்களில் எதேனும் அசைவு தெரியாதோ, திடீரென கண் விழித்து , திலக்ஸ்’ என்று வழக்கமாக செல்லமாக கூப்பிடுவாரே அப்படி கூப்பிடமாட்டாரோ ஒரு முறையாவ்து என்று ஏக்கமாக பார்த்துக் கொண்டேயிருப்பதிலேயே இந்த வாரம் முழுவதும் ஓடியேவிட்டதே. லண்டனில் இருக்கும் மகனும், மருமகளும் இன்று வரப்போகிறார்கள்.

என்ன நடக்கப் போகிறதோ. விசயம் அறிந்தவுடன், ஓடோடி வர அவனுடைய பணியின் பொறுப்பே காரணம் என்று அவன் ஆயிரம் காரணம் கூறினாலும், அந்த பழைய பந்தம், பாசம் எல்லாம் காணாமல் போய்விட்டதோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. நல்ல வேளை மனிதர் சுய நினைவின்றிக் கிடக்கிறார். இல்லையென்றால் இதையெல்லாம் தாங்கக்கூடிய மனதா அவருக்கு.காசு, பணம் என்று வந்துவிட்டால், பந்தமாவது, பாசமாவது என்று அலுத்துக் கொண்டே கணவனைத் தொட்டுப்பார்த்து விட்டு, தலையை வருடிவிட்டு எழுந்து போய் கடமைகளைச் செய்ய ஆரம்பித்தாள். கணவன் ஒரேயடியாக இப்படி படுத்த படுக்கையாக விழக்கூடும் என்று கனவிலும் நினைத்ததில்லை அவள். இந்த 45 வருட வாழ்க்கையில் அதிக பட்சமாக சேர்ந்தாற் போல் தன்னிடம் 1 வாரமாக பேசாமல் இருந்தது இதுதான் முதல்முறை. வருத்தமும், கோபமும் கூட வெகு நேரத்திற்கு நீடிக்காது. 18 வயதில் அடி எடுத்து வைத்து அன்றிலிருந்து இன்று வரை கணவனின் ஒரு சொல் கூட தன்னைத் தாக்கிய நினைவு இல்லை. சே! அப்படி இருந்தால் கூட தேவலாம் போல இருந்தது அவளுக்கு. அதை நினைத்தாவது ஆறுதல் பெற முடியுமே. ஆனால் தான் இன்னும் சுய நினைவுடன் நடமாடிக் கொண்டிருப்ப்தே ஆச்சரியமாக இருந்தது.. கணவனை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கூட்டி வந்த..............என்று சொல்வதைவிட எடுத்து வந்த என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம், மருத்துவர் இனி பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறிய பிறகு, தான் கட்டிய தன் வீட்டிலேயே உயிர் போக வேண்டுமென்று பல முறை அவர் விருப்பத்தில் உறுதியாக இருந்தபடியாலும், அவரை வீட்டிற்கு எடுத்து வர சம்மதித்தாள் திலகா.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல காலம் எத்துனை பெரிய அதிர்ச்சியிலிருந்துத் தன்னை வெளிக் கொண்டுவந்துவிட்டது என்று எண்ணி ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. எல்லோரும் சுயநலமாக உனக்கு முன்னாலேயே நான் போய்விட வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் மனிதர் எப்போது பார்த்தாலும்,

“உன்னை தனியாக விட்டுச் செல்வதுதான் எனக்கு பெரிய வேதனை திலக்ஸ..... உன்னை எளிதாக ஏமாற்றிவிடலாம். கொஞ்சம் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டால் போதும். உயிரைக் கேட்டால் கூட கொடுத்து விடுவாய் நீ. யாரையும் சீக்கிரமாக நம்பி விடுகிறாய். இந்த உலகம் நீ நினைப்பது போல அவ்வளவு நேர்மையான மனிதர்கள் நிறைந்தது கிடையாது என்பதை பல முறை கூறியும் அதைப் புரிந்து கொள்ளும் சக்தி கூட உனக்கு இல்லை. நீ,யாரை நம்பியும் இருக்காதே. சுயமாக இருந்து பழகு. ......”

எத்தனை அறிவுரைகள் இது போல் கூறியும் மண்டையில் ஏற்றிக்கொள்ளும் முயற்சி கூட எடுத்ததில்லை அவள். கணவனை மலை போல் நம்பி கடமையேக் கண்ணாகக் காலத்தை ஓட்டியவள். கணவனின் பேச்சை மீறி இன்று வரை எந்த முடிவையும் நினைத்துக் கூடப்பார்த்ததில்லை. உடுத்தும் உடையிலிருந்து, உண்ணும் உணவு வரை அவருக்குப் பிடித்தது தான் தனக்கும் பிடிக்கும் என்று சுய விருப்பம் என்ற ஒன்று பற்றிய உணர்வே அற்றவளாகவே காலத்தை ஓட்டியவள். ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் அவள் உறுதியான நம்பிக்கை கொண்டவளாக இருக்கிறாள். ஆம், கணவர் எக்காரணம் கொண்டும் தான் தனியே சிரமப் படுவதைப் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கமாட்டார். எப்படியும் தன்னையும் விரைவில் அழைத்துச் சென்றுவிடுவார் என்ற எண்ணமே அவளை தைரியமாக இந்தத் துன்பத்தை எதிர் கொள்ளச் செய்தது என்றே எண்ண வேண்டியிருந்தது.

ஆயிற்று. நேரம் ஓடிவிட்டது. மகனும், மருமகளும் பேரக்குழந்தையுடன் வரப்போகும் நேரம் வந்துவிட்டது. கணவனிடம் நெருங்கி,

“ ஏனுங்க......நான் பேசறது உங்களுக்குக் கேக்குதோ இல்லையோ எனக்குத் தெரியாது. நம்ம சந்திரு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவான். அவனிடம் ஏதாவது ஒரு வார்த்தையாவது பேசோணும் நீங்க.....அவன் என்னதான் கோபமாக இருந்தாலும், பிற்காலத்துல நீங்க பேசாமையே போயிட்டீங்களேன்னு நினைச்சு ஏங்கிப் போயிடுவான். அது நரக வேதனையில்லியா.......ஒரு வருசமாச்சு நீங்க அவன்கிட்ட பேசி....அவந்தான் சின்ன பையன் ஏதோ கோபத்துல இருக்கிறான். நீங்களும் இப்படியே போய்ட்டா அவனால தாங்க முடியாதில்ல...”

மனைவியின் பேச்சைக் கேட்டு சிரிக்கத் தோன்றினாலும் தன்னால்தான் எந்த உணர்வையும் காட்ட முடியவில்லையே......வீட்டில் நடப்பது அத்தனையும் தெரிந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாதே....இளைய மகன் படிக்கும் காலத்தில் விளையாட்டுப் பிள்ளையாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்துவிட்டு படிப்பைக் கோட்டை விட்டு, ஏதோ வியாபாரம் பண்ணுகிறேன் பேர்வழி என்று எதையோ செய்து கொண்டிருக்கிறான். மனைவி, குழந்தை என்று ஆன பிறகும் பொறுப்பு வரவில்லை.

மூத்தவன் சந்திரு, படிப்பில் மட்டுமல்ல எல்லா விசயத்திலும் சூட்டிப்பு.
படிக்கும் காலத்திலேயே, கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் ஒழுங்காக படித்து,
பொறியியல் பட்டம் முடித்து கல்லூரியை விட்டு வெளியே வரும்போதே கேம்பஸ் இண்டர்வ்யூவில் தெரிவு செய்யப்பட்டு, நல்ல கம்பெனியில் வேலையும் வாங்கிக் கொண்டுதான் வெளியில் வந்தான்.

பெற்றவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகளிடையே பாரபட்சம் தோன்றாது. அதுவும் சிரமப்படுகிற குழந்தை என்றால் ஒருபடி அதிகமாகவே பரிவு காட்டத் தோன்றும் என்பதுதானே இயற்கை. அந்த வகையில் மகேந்திரன், தனக்கு மிஞ்சிய ஒரே பரம்பரைச் சொத்தான 2500 சதுர அடி நிலத்தை மகன் சந்திரு வீடு கட்டிவிடலாம் எனக் கூறியபோது எந்த விகல்பமும் இல்லாமல் ஒப்புக் கொண்டு அவன் லண்டனிலிருந்து அனுப்பிய பணத்தை வைத்து கட்டி முடித்தார். சின்ன மகன் பெரிதாக ஏதும் சேமிக்க இயலாத நிலையில், கைக்கும், வாய்க்குமாக சம்பாதனை சரியாகிவிடுகிறதே என்று நொந்து போனதால், பாலமுருகனுக்கு, ஏதானும் செய்ய வேண்டும் என்று தோன்றியதால் அவனுக்கு ஊருக்குச் சற்றுத் தொலைவில் 3000 சதுர அடியில் ஒரு பிளாட் விலை மலிவாக தன் நண்பன் மூலமாகக் கிடைக்கவும், அதை கையில் இருந்த மீதிப்பணத்தில் வாங்கிப் போட்டுவிட்டார். ஆனால் அதைப்பற்றி ஏதும் பேசவில்லை. நிலம் வாங்கியிருப்பது மட்டுமே அனைவருக்கும் தெரியும். பாலமுருகனுக்கு அவனுக்காகத்தான் வாங்கியிருப்பது தெரிந்தால், அதையும் வங்கியில் வைத்து வியாபாரத்திற்கு பணம் புரட்ட நினைப்பான். அதனால் அதைப்பற்றி ஏதும் சொல்வதைத் தவிர்த்து விட்டார்.

ஆனால், சென்ற வருடம் சந்திரு லண்டனிலிருந்து வந்த போது, அந்தப்பக்கமாக இருக்கும் தங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்றிருந்தனர், அந்த பகுதியில் நிலமெல்லாம் நல்ல விலை ஏற்றத்தில் இருப்பதையும், 2,3 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்து அந்த இடத்தில் தாங்களும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டலாமே என்ற யோசனையுடன் தந்தையிடம் வந்து கேட்கப் போக, அவர் சொன்ன பதில் அவனுக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது.

அதாவது, அந்த இடம் பாலமுருகனுக்காக வாங்கியது என்று தந்தை சொன்ன பதில்தான் அவனுக்கு அந்த அளவிற்கு கோபத்தை வரவழைத்தது. அதை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தான் அனுப்பிய பணத்தில்தானே அப்பா வாங்கினார், அதனால் அந்த இடம் தனக்குத்தானே வரப்போகிறது என்று பல திட்டம் போட்டு வைத்ததன் விளைவு அவனை இந்த அளவிற்கு கோபமூட்டிவிட்டது. தந்தையை என்றுமே எதிர்த்துப் பேசியிராத மகன், அன்று சற்று குரல் உயர்த்திப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

ஆனாலும் மகேந்திரன் சற்றும் கோபப்படாமல் எவ்வளவோ பொறுமையாக நிலைமையை எடுத்துச் சொல்லியும் சந்திரு புரிந்து கொள்வதாக இல்லை. அந்த இடம் தனக்குக் கட்டாயம் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கவும் , வேறு வழியில்லாமல் தந்தையும் கணக்குப் பார்க்க வேண்டிவந்தது. சந்திரு வீடு கட்டியிருப்பது தன் தம்பிக்கும் பொதுவான சொத்துதானே, அதனால் அதில் பாதியை அவனுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா என்று கேட்டார்.

இதைச் சற்றும் எதிர்பாராத, சந்திரு,

‘ அப்பா, தம்பியை படிக்க வைக்கவும், அம்மாவிற்கு ஆபரேசன் செய்த போதும் நான் தானே பணம் கொடுத்தேன். அதற்கு இதுவரை 5 லட்சம் ஆகியிருக்கிறது. அந்த இடம் 3 லட்சம் பெரும் என்றாலும் என் காசுதான் உங்களிடம் 2 லட்சம் இருக்கிறது’ என்று ஏதோ கோபத்தில் வார்த்தையை விட்டுவிட்டான்

இதற்கு எந்த பதிலுமே சொல்லாமல் அத்தனையும் செயலில் காட்டினார் மகேந்திரன். உடனடியாக, தனக்கு வரவேண்டிய இன்சூரன்ஸ் பணம் மற்றும் சிறுசேமிப்பு என்று அனைத்தையும் புரட்டிப் போட்டு, மகனிடம் கொடுத்தவுடன்தான் ஓய்ந்தார் மனிதர். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத சந்திரு பேரதிர்ச்சியில், சற்று கோபமாக அந்த இடம்தான் தனக்கு வேண்டும் என்றும் பாலமுருகனுக்கு வேறு இடம் வாங்கிக் கொடுக்கும்படியும் விவாதம் செய்ய ஆரம்பித்தான். விவாதம் முற்றியதில் இருவருக்கும் ஏற்பட்ட வருத்தத்தில் பேச்சு ஒரேயடியாக நின்றுவிட்டது.

அதற்குப் பிறகு இருவரும் திலகவதி மூலமாக பேசிக்கொள்வதே வழக்கமாகிவிட்டது. பாலமுருகன் பக்கத்து ஊரில் இருப்பதனால், அடிக்கடி பெற்றோரை வந்து பார்த்துச் செல்வான், குடும்பத்துடன். தந்தை படுத்ததிலிருந்து இங்கேயே வந்து தங்கியிருக்கிறான்.

மாலை நெருங்க, நெருங்க, வீட்டில் உறவினர்கள் வர ஆரம்பித்தனர். மகேந்திரனைப் பார்ப்பதற்கும், திலகவதிக்கு ஆறுதல் சொல்லவும் பலர் வந்திருந்தனர். ஒரு மனிதனின் இறுதிக்காலத்தில்தான் அவன் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தமே விளங்கும். தனக்காக உண்மையாக ஒரு சொட்டு கண்ணீர் விடுபவர்கள் இருந்தால் அதுவே பெரும் மனநிறைவைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இன்று மகேந்திரனின் நிலையும் அதுதான். தன்னைச் சுற்றி நின்று கண்ணீர் சிந்தும் அத்துனை உள்ளங்களின் ஆறுதலும் தன் மரண வேதனையைச் சற்றேனும் குறைப்பதாகவே இருந்தது. தன் நண்பன் திடீரென மாரடைப்பால் இறந்து போன போது, அவனுடைய மகனின் படிப்பு கெடக்கூடாது என தன்னால் ஆன உதவியும், கல்லூரியில் சேருவதற்கான ஏற்பாடுகளும் என்று இப்படி இயன்றவரை சின்ன சின்ன உதவிகள் செய்ததை மனதில் வைத்துக் கொண்டு, இன்று மனைவி குழந்தையுடன் தன்னைப் பார்க்க வந்ததோடு, காலில் வீழ்ந்து அசி பெற்றுக் கொண்டு, “ என் வாழ்க்கைக்கு விளக்கேற்றிய தெய்வம் “ என்று கண்ணீர் மல்க நெகிழ்ந்துப் போனது மகேந்திரனின் உணர்வினுள் ஊடுறுவி மரண வேதனைக்கு அருமருந்தானது. மனிதன் வாழும்போது, உடலில் நல்ல ரத்தம் பாயும் நேரம் நம்மையறியாமல், மிக எளிதாக செய்யக்கூடிய பெரிய உதவிகள், ரத்தம் சுண்டிப்போய் மரணப்படுக்கையில் இருக்குங்கால் எப்படியெல்லாம் ஆறுதளிக்கிறது என்பதை ம்கேந்திரனின் உள்ளுணர்வுகள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டின.

காலையும், மாலையும் இரு வேளைகளும் தந்தையை நெருங்கி சற்று நேரம் உற்று நோக்கிவிட்டு கையைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டு சில துளி கண்ணீரைக் காணிக்கையாக்கிவிட்டு, மற்ற முக்கிய பணிகளைக் கவனிக்கச் செல்வது பாலமுருகனுக்கு சமீபத்திய வாடிக்கையாகியிருந்தது. மனதில் எத்தனைதான் துக்கமும், பாரமும் இருந்தாலும், அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளை நிறுத்தி வைக்க இயலாதே.....பசி வந்தால் ப்த்தும் பறந்துபோம் என்பது போல் இரண்டு நேரம் பாழும் வயிறு காய்ந்தால் கூட மூன்றாம் நேரம் மரணப்படுக்கையில் கிடக்கும் தந்தையைப் பற்றிய நினைவையும் தாண்டி பசி நோய் வந்து தாக்கிவிடுகிறதே.

திருமணம் ஆகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாமல், எத்துனை மலைகள் ஏறி, இறங்கியிருப்போம், மனைவியோ வாரத்தில் 5 நாட்கள் விரதம், பூசை, புனஸ்காரம் என்று இருந்து, கோவிலில் மண் சோறு உண்டு, குழந்தை வரம் பெற்ற நாளில் அடைந்த இன்பம் இனி தன் வாழ்நாளில் இன்னொரு முறை சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது தம்பதியினருக்கு. அப்படி தவமிருந்து பெற்ற பிள்ளை, இன்று 1 வருடம் கழித்துத் தன்னை வந்து பார்க்கப் போகிறான். என்னதான் தன்னிடம் ஊடல் கொண்டு பேசாமல் இருந்தாலும், ஒவ்வொரு முறை தன் தாயிடம் பேசும் போதும் தன்னைப் பற்றியே அதிகம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனிக்கத் தவறவில்லை மகேந்திரன். ஆனாலும் ஒரு சிறிய விசயம், தந்தை சொன்னால் அது சரியாக இருக்கும் என்று எண்ணத் தோன்றாமல், இந்த அற்ப காரணத்திற்காக, ஒரு வருடம் தன்னோடு பேசாமலே இருந்து விட்டானே என்று நினைக்கும் போது, தன்னால்தான் அவனை சமாதானம் செய்ய முடியாமல் போய்விட்டதோ என்ற ஞானோதயமும், உதயமானது. எது எப்படியிருந்தாலும், எல்லாம் முடியப் போகும் தருணம் வந்துவிட்டதே.

வாசலில் கார் வ்ந்து நிற்கும் ஓசை கேட்டது. வீட்டில் இருந்த அத்துனை உறவினர்களின் கவனமும் வாசலை நோக்கி இருந்தது. காரைவிட்டு இறங்கியவனின் தோற்றத்தைப் பார்த்தவுடன் அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை. அவ்வளவு உருக்குலைந்து வந்திருந்தான் சந்திரு. தினந்தோறும் தன் தந்தையின் உடல் நிலை குறித்து தங்கள் குடும்ப மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டு அறிந்து வைத்திருந்ததால், அவருடைய இன்றைய நிலை எவ்வளவு கவலைக்குரியது என்பதையும் புரிந்தே வைத்திருந்ததன் விளைவுதான் இந்த தோற்ற மாற்றம். காலில் அணிந்திருந்த காலணிகளைக் கூட கழ்ட்டி விடவேண்டும் என்ற உணர்வே இல்லாமல், பதை பதைக்கும் மன நிலையுடன் இருப்பது அப்பட்டமாகத் தெரியும் தோற்றத்துடன், பெட்டி,கைப்பை என எதைப் பற்றியும் சிந்திக்கும் திராணி கூட இல்லாத சூழலில் அவனுடைய மனைவியே, அனைத்தையும் தூக்கி வருவதைப் பார்த்த மற்ற உறவினர்கள், சென்று அவளுக்கு உதவினர்.

தந்தையை நெருங்கியவன், “அப்பா......” என்ற அவனுடைய விளிப்பு, இதயத்து வேதனை, துக்கம், குற்ற உணர்வு, அன்பு, பாசம், இப்படி அனைத்தும் கலந்த கலவையான ஒரு தொனியாக வெளியானது. அதற்கு மேல் தொண்டை அடைத்து பேச முடியாத நிலை ஏற்பட , ஓ வென்று அழுதபடி, தந்தையின் மார் மீது தலையைச் சாய்த்துக் கொண்டு விம்மி, விம்மி அழலானான்..........

அடுத்த கணம், மகேந்திரனின் உடல் ஒரு குலுங்கு குலுங்கியது. கண்ணில் கண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.....பத்து நாட்களாக மூடிய நிலையிலேயே, பஞ்சடைந்த தோற்றத்துடன் கிடந்த கண்கள் அசைய ஆரம்பித்தது. முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. உதடு லேசாக புன்னகைக்க ஆரம்பித்தது...வாய் எதையோ சொல்லத் துடித்தது.....முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. ஆம் அணையப் போகும் தீபத்தின் பிரகாசம்தான்.........!!

--

Monday, May 2, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - 7

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - 7


மனித ஆற்றலின் சக்தியைத் திருடும் களவாணி அந்த மனிதனுகுள்ளேயே உட்கார்ந்துகொண்டு ஆட்சி செய்வதை அந்த மனிதனே உணரத் தவறுவதும் இயற்கையாக நடக்கக்கூடியதுதான். ஒரு சில விசயங்களை நம் மனது திட்டவட்டமாக ஒரு முடிவு எடுத்துவைத்துக் கொள்கிறது. அதை உள் மனது ஆழமாக நம்பிக் கொண்டு, இப்படித்தான்நடந்திருக்கும் என்று உறுதியான முடிவும் எடுத்துக் கொள்கிறது. ஆனால்பிற்காலங்களில் அது உண்மை அல்ல என்று தெரிய வரும்போது, அதாவது அறிவாற்றலின்மீதிருக்கும் அந்த திரை விலகும் நேரம் காலங்கடந்த நிலை ஏற்பட்டு விடுகிறது.

ரிஷியின் மனைவி வந்தனா கூறிய விசயங்கள் நம்பக் கூடியதோ என்ற சந்தேகம்
ஆரம்பத்தில் இருந்த போதும், அவளுடைய பேச்சில் தெரிந்த நேர்மை அவள் கூறியவிசயமும் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பச் செய்தது. அந்தக் குழப்பமே,மாறன் போன் செய்த போது , பேச மனமில்லமல் அடுத்த நாள் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

ரிஷியைத் தான் முதன் முதலில் சந்தித்த சூழல் நினைவிற்கு வந்தது. கன்னிமாரா
நூலகத்தில் அந்த ஊசி முனை அமைதியில் சில புத்தகங்களிலிருந்து முக்கியமானகுறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அருகில் இருந்த அடுத்த மேசையில் ஏதோ சலசலப்பு ஏற்பட, தன்னையறியாமல், நெற்றியைச் சுருக்கியவாறு சலசலப்பு வந்த திசையை நோக்கித் திரும்பினாள்.ரம்யாவிடம் எப்போதும் ஒரு நல்ல பழக்கம், தான் செய்யக்கூடிய வேலை எதுவாயினும் அதில் நூறு சதவிகித ஈடுபாடு கொண்டு தெளிவாக செய்வது. அதுவும் நூலகம் வந்துவிட்டால், நன்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் கூட, மிக மெல்லிய புன்னகை மட்டுமே தயக்கத்துடன் வரும். அன்று விடுமுறை தினமாதலால் கூட்டமும் சற்று அதிக்மாகத்தான் இருந்தது. இருந்தாலும் ரம்யா,தன்னுடைய இறுதியாண்டு பிராஜெக்ட் சம்பந்தமான குறிப்புகள் எடுப்பதில் தீவிரமாக இருந்தாள்.

சலசலப்பு வந்த திசையை சலிப்புடன் நோக்கியவள், முதன் முதலில் ரிஷியைப்
பார்த்தாள். அருகில் இருந்த தன் நண்பனுடன் சாடையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். புரியாததை எழுதிக் காண்பித்துக் கொண்டிருந்தான்.அவள் முறைத்துப் பார்ப்பது கூட அறியாதவர்களாக ஏதோ சீரியசாக சாடை பேசிக்கொண்டிருந்தார்கள். மற்றவர்களுக்கு உபத்திரவமாக இப்படி, நூலகத்தில் வந்து பேசிக் கொண்டிருக்கிறோமே என்ற சுயநினைவு கூடவா இருக்காது என்று யோசிக்கும் போதே, சட்டெனத் திரும்பி ரம்யாவைப் பார்த்தவன், அடுத்த வினாடி ஏற்கனவே அறிமுகமானவ்ன் போல புன்னகை பூத்தான். அந்தக் குறும்புப் பார்வையும், விகல்பமில்லத புன்னகையும், பளிச்சென்ற முகமும், ஒரு கணம் தானும் கோபத்தை மறந்து,புன்னகை செய்ய வைத்தது. அடுத்த கணம் அதனை மறைத்துக் கொண்டு கோபமாக பார்வையைச் செலுத்த முயன்று தோற்றுப் போனாள். ஆனாலும் இதில் எதையும் சட்டை செய்யாதவனாக ரிஷி வெகு இயல்பாக திரும்ப புன்னகையுடன் கையையும் ஆட்டிவிட்டு கிளம்பி விட்டான்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் இரண்டு மூன்று முறை அவனை பேருந்து நிறுத்தத்திலும், ஒரு முறை தன் தங்கும் விடுதியின் அருகன்மையில் இருக்கும் ஸ்பென்சர் பிளாசாவிலும் சந்தித்தாள்.
--
ஏனோ ஒவ்வொரு முறை அவளைப்பார்க்கும் போதும் மிகவும் பழகியவன் போல கையை ஆட்டி விட்டுச் செல்வதை வழக்கமாகவேக் கொண்டிருந்தான்.
ரிஷியின் குறும்புப் பார்வையும், களங்கமற்ற அவனுடைய புன்னகையும் ஒரு ஈர்ப்பை அவன் பால் ஏற்படுத்தியது. அவன் படிக்கும் கல்லூரி பற்றி அறிந்து கொள்ளவும் மனம் விழைந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஏதோ கோபமாக இருப்பது போலவே ஒரு முகபாவத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அதுவே தனக்கு ஒரு பாதுகாப்பு என்று கூட நினைக்கத் தோன்றியது அவளுக்கு. தன்னுடைய அன்பான பார்வையை மறைக்க ஒரு முகமூடி தேவைப்பட்டது அவளுக்கு. ஆனால் ரிஷியோ அதற்கு நேர்மாறாக, ஒவ்வொரு முறை
பார்க்கும் போதும், பார்வையாலேயே அவளை நெருங்கிக் கொண்டிருப்பதையும் அவள் உணராமல் இல்லை.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் , கல்லூரிகளுக்கிடையேயான, காலச்சாரப் போட்டிகளில், ரம்யா மிக அழகாக, அத்துனை உணர்வுகளையும் கூட்டி, பாரதியாரின், சின்னஞ்சிறு கிளியே..செல்வக் களஞ்சியமே.. என்று மெய்மறந்து பாடியபோது அரங்கமே, கைதட்டி முடித்தவுடன், தனக்குப் பின்னால், ஒரு சோடிக் கைகள் மட்டும் தனியாக வெகு நேரம் தட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தவள், தன்னையுமறியாமல் யாராக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் திரும்பிப் பார்த்தவள், அங்கு அதே குறும்ம்புப் பார்வையும், மலர்ந்த முகமும் கண்டு தன்னையறியாமலே, தன் கையைத் தூக்கி ஆட்டியதை, அதுவும் மேடையில்,............அந்த இனிமையான நினைவுகள் பல நாட்கள் அவளுடைய தூக்கத்தைக் கெடுத்ததும் உண்மை.

சில நேரங்களில், இப்படி ஒரு பொழுதுபோக்காக அந்த ஆண்டவன் சிலப் பார்வைகளைச் சந்திக்கச் செய்து, உறவாடவும் வைத்து, மொட்டு, விட்டு மலரும் வேளையில் அதனை வேரோடு பிடுங்கி எறிந்து எள்ளி நகையாடுவது சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், தன் உயிர்த்தோழி ஒருவரின் உறவினர் இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, நிறைய இரத்தம் தேவைப்படும் சூழலில், சிநேகிதிகள் அவருக்கு உதவும் வகையில், அடையார் புற்று நோய் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அதுவரை பட்டாம்பூச்சிகளாக துள்ளித் திரிந்து வளைய வந்து கொண்டிருந்த தோழிகள் , அந்த மருத்துவமனையின் எல்லையில் நுழைந்தபோதே, இறுக்கமான ஒரு சுழலை உணர்ந்தவர்கள் மனதிற்குள்ளும் இனம் புரியாத ஒரு சோகம் ஒட்டிக் கொள்ள அமைதி மட்டுமே மொழியானது அங்கே. நம்முடைய சக மனிதர்கள், குழந்தைகள் முதற்கொண்டு, வலியினாலும், வேதனையினாலும், உருக்குலைந்து, துடிப்பதைக் காண உள்ளம் உறைந்துதான் போனது.......

இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், இலட்சமாக, கோடியாக பெருகி, சிவப்பணுக்களைத் தின்று, பாதிக்கப்பட்டவரை இரத்த சோகையால் , சக்தியிழந்து, அதனால், தலைவலி, காய்ச்சல், நரம்பு மண்டலம் பாதிப்பு, போன்று பல்வேறு உபாதைகளைக் கொடுத்து காண்போரையும் வேதனைக்குள்ளாக்குகிறது. அதைவிட அதற்கான மருத்துவமும், கீமோதெரபி,
ரேடியேசன், எலும்பு மஞ்சை மாற்றம் என்று இப்படி வேதனைக் கொடுக்கக்கூடிய பெரிய வைத்தியமாகவே இருப்பதுதான் கொடுமை.

தன் தோழியின் உறவினராக இருந்த போதிலும், அவர் படும் வேதனைகளை அறிந்த பின்பு ஒன்றும் பேசத் தோன்றாமல், ஆறுதல் கூட சொல்லாமல் அமைதியாக இரத்த தானம் செய்துவிட்டு வெளியே கிளம்புவதற்காக வந்தவர்கள், அங்கே ஓர் ஓரமாக தலை கவிழ்ந்து சோகமே உருவாக அமர்ந்திருப்பது, யாரோ தான் அறிந்தவர் போல் இருக்கவும், திரும்பவும் சற்று நெருங்கிச் சென்று பார்த்தவள், அங்கே ரிஷியை சந்திப்பாள் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. அவனுடைய பெயர் ரிஷி என்பது
கூட ஒருமுறை அவனுடைய நண்பன் அவனை அந்தப் பெயர் சொல்லி அழைத்தது கண்டுதான் தெரிந்து கொண்டாள். ஆனால், இன்று அவனுடைய வாடிக்கையான குறும்புப் பார்வையும், மந்திரப் புன்னகையும் காணாமல், அப்படி ஒரு சோகமான முக அமைப்புடன் காண நேர்ந்ததை எண்ணி நொந்துப் போனாள். தன் தோழியின் முகத்தை சந்தேகத்துடன் பார்த்தவளின் மனநிலையை புரிந்து கொண்டவளாக,

“ இது ரிஷி, என் பெரியம்மா மகன். இவருடைய அம்மாதான் அவர்கள்’, என்று சொன்னதைக் கேட்டவுடன், ஒரு கணம் அவள் இதயமே கனத்துப் போனதாக உணர்ந்தாள் ரம்யா.........

உடனே அவன் கைகளைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் மனம் துடித்தாலும், அதனை சமாளித்துக் கொண்டு, பேச்சே ஏதும் வாராமல், பார்வையாலேயே அவன் வேதனைக்கு ஆறுதல் சொல்ல முயற்சித்தாள். அவனும் அதை உணர்ந்து கொண்டவனாக, நன்றி என்ற ஒற்றைச் சொல்லை தடுமாறிச் சொன்னான். கண்கள் கண்ணீரைச் சொரிந்தபடி!

அவந்திகாவின் நினைவை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்ந்தாலும்,மாறனின் இதயமோ, தன்னையறியாமல் அவளை நெருங்கிக் கொண்டே இருப்பதை அவனால் தடுக்க இயலவில்லை. அப்பாவிடமும், அம்மாவிடமும், எப்படியாவது தன் நிலையை விளக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். இந்த சனிக்கிழமை எப்படியும் பொறுமையாக எடுத்துச் சொல்லி விட
வேண்டும் என்று உறுதியும் கொண்டான். இந்த சில நாட்கள் பிரிவு, மாறனுக்கு
அவந்திகாவிடமிருந்து எந்த விலகலையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அவளைப்பற்றி ஏதும் தெரியாமலே, நெருக்கம் மட்டும் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதற்கு மேலும் இது பற்றி பெற்றோருடன் பேசாவிட்டால், பிறகு காலம் முழுவதும் வருந்த வேண்டியிருக்கும் என்பதும் புரிந்தது அவனுக்கு. ரம்யா தன் தந்தையிடம் இது பற்றி பேசுவாதாகக் கூறியிருந்தாலும், இன்று அவள் இருக்கும் நிலையில், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லையே.......

அன்று வெள்ளிக்கிழமை. பொதுவாக அலுவலகத்தில் எப்படியும் ஏதேனும், ஒரு பார்ட்டி இருக்கும். அல்லது உடன் பணி புரியும் சகாக்களுடன், குஷியாக உணவு விடுதி சென்று வித்தியாசமான உணவு வகைகளை முயற்சிப்பது வழக்கம். இரவு அரட்டை அடித்து விட்டு, தாமதமாக வீடு திரும்பி, அடுத்த நாள் மிக தாமதமாக துயிலெழுவது என்று வாரக்கடைசி என்றாலே கொண்டாட்டம்தான்.....எல்லாம் தனக்கென்று ஒருத்தி வரும்வரைதானே.. பின்பு குடும்பம், குழந்தைகள் என்று வந்துவிட்டால் பொறுப்பும், பொது நலமும் தானே வந்துவிடுமே! அவந்திகா தன் வாழ்க்கையில் வந்தால், தான் அவளை எப்படி இளவரசி போல
வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் ஒரு சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது. அந்த தேவதைக்கு ஒரு மனக்கோவிலே அல்லவா எழுப்பி வைத்திருக்கிறான்...... இதை எங்கே அவள் அறிந்திருக்கப் போகிறாள். அவள்தான் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பவளாயிற்றே.....அவந்திகாவைப் பற்றி நினைத்தாலே ஒரு வெட்கம் வந்து தன் முகம் மேலும் சிவந்து போவது போல் இருக்கும்..

இந்த இனிமையான நினைவுடன் வந்தது, நேரம் போனதே தெரியாமல் மகிழ்வுந்துப்பயணம் மேலும் மகிழ்வுறச் செய்வதாகவே, அலுவலகம் வந்து சேர்த்து விட்டது. இப்படியெல்லாம் ஏதோ நினைவாக வண்டி ஓட்டியது தெரிந்தால் அம்மா என்ன சொல்வார்கள் என்று நினத்தவன், முன்பெல்லாம் இது போன்று பல விசயங்கள் அம்மாவிடம் ய்தார்த்தமாக பகிர்ந்து கொள்ள முடிந்த தன்னால், அவந்திகா விசயத்தில் மட்டும் கள்ளத்தனம் புகுந்தது ஏன் என்று மட்டும் அவனுக்கு விளங்கவில்லை. ஒரு வேளை தான் மறுதலிக்கப்படுவோம் என்ற அச்சமாகக் கூட இருக்கலாம்.

அலுவலகம் உள்ளே நுழைந்தவுடன் ரம்யா இருக்கை வெறுமையாக இருப்பது தெரிந்தது. சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது மாறனுக்கு. ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு தாமதமாக வந்தவளில்லை அவள். இன்று என்னவாகியிருக்கும் என்று யோசிக்கும் போது, முதல் நாள் ரிஷி, தன் மனைவி ரம்யாவிடம் பேச விரும்புவதாகக் கூறியது நினைவிற்கு வந்தது. அப்படி என்னதான் பேசியிருப்பாளோ தெரியவில்லையே, என்று யோசிக்கும் போதே
தன்னுடைய செல்பேசி சிணுங்கவும், ரம்யாவின் அழைப்பாகத்தான் இருக்கும் என்ற முடிவுடனே போனை எடுத்தான்.

‘ஹலோ, மாறன்.....நான் ரம்யா...’

‘ ம்ம்ம் சொல்லு ரம்யா. ஏன் ஆபீஸ் வரவில்லையா’

‘ஆமாம்....மாறன். இன்று கொஞ்சம் தலைவலியாக இருக்கிறது. அதனால் சிக் லீவ் அப்ளை பண்ணி மெயில் அனுப்பிவிட்டேன்’, என்றாள்.

‘ஏதாவது உதவி தேவையா ரம்யா? நான் வேண்டுமானால் சீக்கிரம் வேலையை முடித்து விட்டு கிளம்பி வரட்டுமா ரம்யா’ என்றான்.

’இல்லை , மாறன், கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். மாலை தொடர்பு
கொள்கிறேன்’, என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

வாழ்க்கையின் மறு புறம் ஒவ்வொருவருக்கும் ஒரு இறுக்கத்தையும்,
எதிர்பார்ப்பையும் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அப்படி
இல்லையென்றாலும் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமாக இல்லாமல் போய்விடுமே...

அடுத்த நாள் தன் தந்தையிடம் பேச எண்ணியிருந்தவன், மாலை தான் வீடு வந்ததும் தந்தை அழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லையென்றாலும், அவர் தொலைபேசியில் அழைத்து ஒரு குண்டை அல்லவா தூக்கிப் போட்டுவிட்டார்......

தொடரும்.


காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...