Monday, September 20, 2010

'சுயம்' எங்கே இருக்கிறது ?

சிந்திக்க வேண்டியவைகள்

'நான்' மகிழ்ச்சியாக இருக்கிறேன். 'நான்' குலோப் ஜாமூன் உண்ணப் போகிறேன். 'எனக்கு' மனசே சரியில்லை, ஒரே குழப்பமாக இருக்கிறது.

இங்கே மகிழ்ச்சியாக இருக்கிற அந்த 'நான்' யார்? மனசே சரியில்லை என்று சொல்கிற 'நான்' [எனக்கு] யார்? குழப்பமான மனதைக் கண்டுபிடித்தது யார்? யார் மனது சரியில்லாமல் குழப்பமாக இருக்கிறது?...........................இதுதாங்க என்னோட பெரிய டவுட் இப்போ.....யப்பா.......கண்ணைக் கட்டுதே...........

'நான்' என் 'சுயம்' என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஆள் காட்டி விரலைத் திருப்பி என் மீதே காட்டுவதா? இல்லை தத்துவ ஞானிகளை நாடுவதா?

ஆதிகாலத்திய எகிப்தியர்கள் 'சுய' கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள் மற்றும் எண்ணங்கள் என்பது, 'ஹோமன்க்யூலஸ்' [homonculus] என்கிற குட்டி மனிதன் தலையினுள் உட்கார்ந்திருப்பதாக நம்பினார்கள்.

டெஸ்கார்ட்ஸ், [Descartes] ஆன்மா, மூளையில் உள்ள சுரப்பிகளில் [Pineal gland] உடலைத் தொடர்பு கொள்கிறது என்றார். மேற்கத்திய மதங்களோ, இந்தப் பிரச்சனையை வேறு விதமாக நோக்கியது. அதாவது, அழியக் கூடிய மூளைக்கும் அப்பால், அழிவேயில்லாத ஒரு 'சுயம்' அதாவது ஆன்மா இருக்கிறது என்றனர்.

ஆனால் பெரும்பாலான நவீன விஞ்ஞானிகள், 'மனம்' என்பது எப்பொழுதும் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே இருப்பதாகக் கருதுகின்றனர். பலவிதமான மதம் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள் இருந்தாலும், பலர் மனம் [mind] அல்லது 'சுய-விழிப்புணர்வு' [self-awareness] என்பதை, முன் பக்க மூளைப்பகுதியில் கார்டெக்சில் [cortex] உள்ள ஒரு பொருளே தவிர, "இயந்திரத்திற்குள் இருக்கிற பூதம்" அல்ல என்று கருதுகின்றனர். கார்டெக்சில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது பாதிப்பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டாலுமோ, ஒரு மனிதனின் 'சுய உணர்வு' ஏன் பழுது படுவதில்லை என்பதே விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

சில விஞ்ஞானிகள்,'சுய உணர்வு' என்பதே ஒரு பிரதி பிம்பம், மூளையின் முழுமையான செயல்பாடுகளின் விளைவாக கிடைக்கின்ற ஒரு வகையான உப பொருளாகவே கருதுகின்றனர்.

நரம்பியல் வல்லுனர்களோ நம்முடைய பல செயல்கள் மற்றும் தெரிவுகள் [choices] சுயநினைவுடனான பாதையில் செல்லாமல், தற்செயலாக நிகழக் கூடியதாகக் குறிப்பிடுகின்றனர்.

மனத்திட்பம் அல்லது துணிவு என்பதனை பயிற்சியளிக்கக் கூடிய மையம் என்று மூளையில் எதுவும் தனியாக இல்லையாம். அதைப் போலவே மூளை ஆய்வாளர் மைக்கேல்,'சுய உணர்வு' அல்லது நினைவு என்பதே ஒரு மாயத் தோற்றம் [illusion] என்கிறார்.

புத்த மதத்தின் போதனைகளில் 'சுயம்' என்பது தனிப்பட்ட பொருள் அல்ல. ஆனால் எண்ணங்கள், புலனறிவு, பொதுக்கருத்துக்கள் மற்றும் நொடிக்கு நொடி மாறும் உணர்வுகள் இவைகளின் கூட்டமைப்பேயாகும் என்கிறது.

தத்துவ மேதை சாக்ரடீஸ், 'சுயம்' ஒன்றுதான் ஆன்மாவை அடைக்கக் கூடிய சிறை என்கிறார்.

மனித மனத்தால், இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப் பெற்று கருவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மறை பொருள் சுரங்கம் தான் மனித மனம்.

மனிதனுடைய புலனறிவிற்கு எட்டாதது மனம், உயிர், மெய்ப்பொருள் ஆகும். மனமானது எங்கே, எப்படி இயங்குகிறது என்பது பற்றி இன்று வரையில், மனதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிற விஞ்ஞானிகளுக்கும் புலப்படவில்லை.

உடலில் உயிர் இல்லாத போது, உணர்ச்சிகளும் இல்லை. உயிரே உணர்வாக மாற்றம் பெறுகிறது. உயிர் உணர்ச்சியாக மலரும் கட்டத்தில்தான் மனம் பிறக்கிறது. எனவே உயிர்தான் மனம்.

மனத்தை அறிவென்றும் அழைக்கின்றோம். எண்ணம், சொல், செயல் என்ற மூன்றிற்கும், இயக்கக் களமாக இருப்பது மனம். இத்தகைய பருப் பொருளான மனத்திற்கு ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. உயிர் பொதுவானது. ஆண், பெண் என்ற பேதமற்ற அத்தகைய மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருபவர்களே மாமனிதர்களாகிறார்கள்.

"ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டென் உள்ளமும் போய்
நான் கெட்ட வாபாடித் தெள்ளேனம் கொட்டாமோ"
என்று மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் அருள்கிறார்.
'நான்' கெட்ட நிலையில் அவர்கள் செயல்கள் யாவும் இறை செயலாகவே நிகழும்.

இப்போது சொல்லுங்கள்! என்ன நினைக்கிறீர்கள். நம்முடைய 'சுயம்' எங்கே இருக்கிறது ? யார் நம் எண்ணங்களை செயல்படுத்துகிறார்கள் ?...................

16 comments:

  1. ஆழமான விஷயங்களாக தெரியுது..... அதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் மனப்பக்குவம் எனக்கு வந்து இருக்கா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  2. கண்டிப்பாக இருக்கிறது சித்ரா..... நன்றி.

    ReplyDelete
  3. ஒரு சுய அலசல். கொஞ்சம் ஆழமா சிந்திக்கவைக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. இந்த விசாரணையில் இறங்கினால் வேற வேலை எதுவுமே இருக்காது:)

    ReplyDelete
  5. நன்றிங்க அம்பிகா.

    ReplyDelete
  6. ஆமாம், வானம்பாடிகள் சார். புரிகிறது. நன்றி.

    ReplyDelete
  7. then idhaithan maayainnu solradha ... irukko illaiyo suyama irukka muyarchikkiradhu nalladhuthane .. hope this ur suyam article

    ReplyDelete
  8. சிந்திக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  9. sir of course this is my suyam article.......I too agree with you sir. irukko illaiyo suyama irukkamuyarchikkiradhu nalladhuthane Thank you for coming sir.

    ReplyDelete
  10. நல்ல அலசல் ங்க நித்திலம்

    ReplyDelete
  11. நன்றிங்க முத்துலெட்சுமி.

    ReplyDelete
  12. அருமையான ஆய்வுப் பதிவு.சுஜாதாவின் ‘தலைமைச் செயலகம்’புத்தகத்தில் தங்களது வினாக்களுக்கு விடைகள் உள்ளதாக உணர்கிறேன்.படிச்சுப்பாருங்க:)இன்னும் பல சிந்தனைப் பதிவுகளை எங்களுக்கு தர அது தூண்டுதலா இருக்கும்ன்னு என் நம்பிக்கை.

    நல்ல பகிர்தலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  13. நன்றிங்க ரசிகரே.........உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றிகள் பல. தலைமைச் செயலகம், இன்னும் படிக்கும் வாய்ப்பு அமைய வில்லை. விரைவில் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  14. நல்ல தொரு அலசல். நம் சமூகத்தில் ஆழமாய் வேறூன்றி இருக்கும் ஒரு கோட்பாட்டை தெரிய முயற்சித்து இருக்கிறீகள். மனம் மட்டுமல்ல....., விஞ்ஞானத்தால் விடை பகர முடியா விசயங்கல்.......இந்த பூமி முழுக்க, பிரபஞ்சம் முழுக்க நிறைந்து கிடக்கிறது. எல்லாவற்றுக்கும் ஆதார விளக்கம் தரமுடியாது. ஆனால் உணர முடியும். முயற்ச்சியுங்கள். ( you can't see. But, you can feel. try. ) நன்றி. வந்து போங்கள்....( ithayasaaral.blogspot.com ).

    ReplyDelete
  15. அருமையாகச் சொல்லியிருக்கிறீகள் நண்பரே, நன்றிங்க.

    ReplyDelete
  16. நான்' கெட்ட நிலையில் அவர்கள் செயல்கள் யாவும் இறை செயலாகவே நிகழும்.

    ReplyDelete