Monday, February 14, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -4


மனிதவாழ்வில் மறுக்க முடியாத ஒரு உண்மை ,நாம் சந்திக்கும் நபர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை விட, தான் மிகவும் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டவராகவே இருக்கின்றனர். நாம் அவருடைய இதயத்தை நெருங்க வேண்டுமாயின், நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவரைப் பற்றிய கடந்த கால நினைவுகளை ஓரளவேனும் நினைவில் கொள்வதோடு, அவர்களுடைய முக்கியத்துவத்தைமட்டும் அல்லாது ,அவருடைய தனித்தன்மையையும் கட்டாயம் நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். அதில் உண்மையாகவும் இருக்க வேண்டும இதுவே மனித மனங்களை நெருங்கும் டெக்னிக்.

எமர்சன் அழகாகச் சொல்லுவார்,
” Every man I meet is my superior in some way. In that, I learn of him".

அதாவது, நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், ஏதோ சில வகையிலேனும், என்னைவிட மேம்பட்டவராக,உயர்வான நிலையிலேயே இருக்கிறார்.அதில் நான் அவரைப் பற்றி அறிந்து கொள்கிறேன்.

நாம் பல எண்ண அலைகளும், குணநலன்களும் உடைய பல்வேறு விதமான மனிதர்களுடன் பயணம் செய்யும் போதுதான், நமக்கும் நம்மைப் பற்றியும் பல புதிய தகவல்கள் அறியும் வாய்ப்பு கிட்டும். ஆம் நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் சில மிருகங்கள் கூட முழித்துக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். அது நாள் வரை இப்படி ஒரு மிருகம் தம்முள் உறங்கிக் கொண்டிருப்பதே தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

நாங்கள் அடியார் குழுவுடன், பயணம் மேற்கொண்டது பல விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. ஆம் நாம் சுகமாக உல்லாச வாகனத்திலோ, தனிப்பட்ட முறையிலோ செல்லும் போது எந்த விட்டுக் கொடுத்தலோ அல்லது அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயமோ ஏற்படுவதில்லை. ஆனால் பொதுவாக இது போன்று திருப் பயணம் செல்லும் வேளைகளில், நம்முடைய ஆணவத்தை முதலில் மூட்டை கட்டி தூக்கிப் போட்டுவிட வேண்டும். அடுத்து கிடைத்ததை வைத்து தன்னிறைவு கொள்ளும் தன்மை வேண்டும். பசி, தாகம், ஓய்வு, போன்ற சாதாரண விசயங்களைக் கூட கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படும்.அதற்கு தகுந்தாற் போல நம் பழக்க வழக்கங்களை மாற்றியமைக்க வேண்டியும் வரும். இவ்வளவு பீடிகைக்கும் காரணம் இல்லாமல் இல்லை.


திருப்பெருந்துறை ஆன்மநாதர் அநாதி மூர்த்தராக இங்கே எழுந்தருளி ஐந்தொழில் நடத்தலால் இது அநாதி மூர்த்தித் தலமாகும். உருத்திர மூர்த்தி எழுந்தருளியுள்ள கையிலைமலை துவாத சாந்தத் தலம். ஆன்மநாதர் எழுந்தருளியுள்ள திருப்பெருந்துறை சோடாசாந்தத் தலம். இத்தலம் கையிலையைக் காட்டிலும் மேலானதாம். இத்தலத்திற்கு ஆதியும், அந்தமும் இல்லை என்கின்றனர். இத்தலத்தை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லையாம். புராணங்கள் இத்தலத்திற்கு பல பெயர்கள் கூறினாலும், தற்போது ஆவுடையார் கோவில் என்ற பெயர் வழங்கி வருகிறது.


அப்பர் தேவாரம் - மூவரால் முழுப்பதிகம் பெற்றதான பாடல் பெற்ற தலப்பெயர்களின் வரிசையில் திருப்பெருந்துறை இடம் பெறவில்லை. ஆயினும் அப்பர் தேவாரத்தில் இத்தலம் வைப்புத்தலமாக இடம்பெற்று இருக்கிறது.


திருவாசகம் - மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய தித்திக்கும் தேனான திருவாசகம் 51 பகுதிகள் கொண்டதாகும். இவற்றுள் 20 பகுதிகள் திருப்பெருந்துறையில் இருந்து அருளிச் செய்யப்பட்டனவாகும்.அவை, சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செந்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தப்பத்து, உயிருண்ணிப்பத்து, திருப்பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாயநான்மறை இவை மட்டுமன்றி, திருவாசகத்தில் இத்தலமும், குருந்தமரமும் ஆங்காங்கே மிகப் பாராட்டப் பெற்றுள்ளன.
அருணகிரிநாதர் திருப்பெருந்துறைக்கு வந்து முருகனை வழிபட்டு மூன்று திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளதும் இத்தலத்தின் சிறப்பு.

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து. - திருவெண்பா 4.11.


ஆவுடையார் கோவில் சிற்பங்கள் புகழ் வாய்ந்தவை. அதிலும் இங்குள்ள கொடுங்கை வேலைப்பாடுகள் உலகப் பிரசித்தமானவை.
தியாகராச மண்டபத்தில் மாணிக்கவாசகரின் மந்திரிக் கோலச் சிற்பமும் துறவுக் கோலச் சிற்பமும் உள்ளன. இந்த மண்டபத்தின் கொடுங்கையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது கருங்கல்லைத் தகடாக்கி அதிலே பல வளைவுகளை உருவாக்கிக் கூரை போட்டது போல் அமைந்திருக்கும் திறம் பெரும் வியப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். மரவேலையில் செய்யக் கூடிய நுண்கலை நுட்பங்களெல்லாம் இங்கே கருங்கல்லில் செய்யப்பட்டிருப்பதைக் காண கண் கோடி வேண்டும். மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தாற்போன்ற தோற்றங்களை கல்லிலும் காட்டி, தம் கைத்திறத்தைக் காட்டிய சிற்பியை புகழும் வார்த்தைகளும் அறியவில்லை. எனவேதான் திருப்பெருந்துறையின் கொடுங்கை உலகப் பிரசித்தமாக இருக்கிறது.

குதிரைச்சாமி - அசுவநாதர்:
பஞ்சாட்சர மண்டபத்திற்கு குதிரைச்சாமி மண்டபம் எனவும் மற்றொரு பெயருண்டு. இந்த மண்டபத்தூணில் குதிரைச்சாமி காட்சி தருகிறார். குதிரை பின்னிரண்டு கால்களை ஊன்றி முன்னிரண்டு கால்களை தூக்கி மேலே பாய்வது போல இருக்கிறது. வாதவூரருக்காக பெருந்துறை பெருமான் வேதப்புரவி ஏறிக் குதிரைச் சேவகராக போன தோற்றந்தான் இது. அதனால் இக்காட்சியை குதிரைச்சாமி அசுவநாதர் என்று அழைக்கின்றனர்.


மாணிக்கவாசகப் பெருமானின் பக்தி நெறியும் அவர்தம் ஒளி யாக்கை குறித்த தகவல்களும் ஐயா தங்கவிசுவநாதன் அவர்கள் ஆற்றிய உரையை ஆனந்தமாகக் கேட்டு மகிழ்ந்தோம். அவ்வுரையின் சாரத்தை மணிவாசகப் பெருமானின் பிறப்புத்தலத்திலேயே காண்பது மேலும் சிறப்பாகுமல்லவா.
திருப்பெருந்துறை தரிசனம் முடிந்து மதியம் 1.40 மணியளவில் ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டோம். மதிய உணவு வேளை ஆகியும் சாப்பாடு பற்றி ஏதும் சொல்லாமல் கிளம்பச் சொல்கிறார்கள். அதற்கு ஏதும் பதிலே பேசாமல் அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நல்ல பசி. காலை உப்புமாவே அதிக காரமாக இருந்ததால் எனக்கு இறங்கவில்லை. தண்ணீர் மட்டுமே குடித்து வயிரை நிரப்பகிக் கொண்டிருந்தேன். ‘உண்டி சுருங்குவது தானே பெண்டிர்க்கு அழகு’. ஆனால் அதற்கு மேல் பசி தாங்கும் வழியே தெரியவில்லை. அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. ஒருவரும் வாயைத் திறந்து கேட்பதாக இல்லை.இளஞ்சிறார்கள் நால்வர் இருந்தனர். சரி எப்படியும் அவர்களாவது பசி என்று கேட்பார்களே, என்ற ஆவலில் அவர்கள் முகத்தைப் பார்த்தால் அவர்களும் ஒன்றுமே கேட்காமல், தங்கள் பையில் இருந்து ஏதோ நொறுக்குத் தீனியும், வாழைப்பழமும் எடுத்து உண்ண ஆரம்பித்து விட்டனர்.

சரி இது வேலைக்காகாது, நாமே மெதுவாக கேட்டுவிடுவது என்ற எண்ணத்தில், எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த என் ஓரகத்தியிடம், அக்கா.....என்று ஆரம்பிக்க வாயைத் திறக்கவும், பேருந்து கிளம்பவும்,

“வேயுறு தோளிபங்கன்,விடமுண்டகண்டன் மிகநல்லவீணை தடவி.மாசறு திங்கள்கங்கை முடிமேலணிந்தென்உளமே புகுந்தவதனால்...................”

என்று கோளறு திருப்பதிகம் [ ஒவ்வொரு முறை, பேருந்து நிறுத்தி இறங்கி ஏறும் போதும் கோளறு திருப்பதிகம் முழுமையாகப்பாடப்படும். தேவார ஓதுவாருடன், சேர்ந்து, பயணிகளும் பாடுவர்.]. என் குரல் அப்பதிகத்தினுள்ளே கரைந்தே போனது. ஆனால் உடன் பாட ஆரம்பித்தவுடன், பசி சற்று மறந்தாற்போலத்தான் இருந்தது. கோளறு திருப்பதிகம் முழுமையாக பாடி முடித்தவுடன், ஒரு சிறு சலசலப்பு,. அதற்குப் பின் தலைவர் எழுந்து, அன்பர்களே, என்று ஆரம்பித்து,
அடுத்து வரக்கூடிய நிகழ்வுகள் குறித்து பேச ஆரம்பித்தார்............................

தொடரும்.

7 comments:

  1. படங்கள் அருமையா இருக்கு மக்கா...

    ReplyDelete
  2. அருமையான விவரிப்பு.

    ReplyDelete
  3. பக்திமயமா இருக்கு பதிவு.ஆன்மீகப் பயணக் கட்டுரை நல்லாயிருக்குங்க !

    ReplyDelete
  4. ஹேமா சொன்னதையே நானும் ..

    ReplyDelete