Tuesday, October 18, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (24)


பவள சங்கரி
பொதுவாக காதலில் ஏமாற்றப்பட்டவர்களைவிட, ஏமாற்றியவர்களுக்கே, வலியும், வேதனையும் அதிகம். காரணம் நியாமானதாக இருப்பினும், ஏமாற்றம் என்பதின் நிறம் ஒன்றுதானே. அந்த வகையில் நொந்து போன ஒரு ஆத்மாவிற்கு வாழ்வு கொடுப்பது தியாகம் என்றால், நம்பிக்கையும், உயிரும் ஒரு சேர வைத்திருக்கும் ஒரு உன்னதமான இதயத்தை நோகச் செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லையே. காலம் கடந்த யோசனையால், நிம்மதி குலைந்து போனதும் தவிர்க்க முடியாமல் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான் ரிஷி. ரம்யாவை சந்திக்காமலே இருந்தால் தேவலாம் போல் இருந்தது அவனுக்கு. குற்ற உணர்ச்சியில் குமைந்து கொண்டிருந்தான் அவன். வந்தனாவின் நினைவு வர மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாரானான். வந்தனாவின் துவண்ட முகம் நினைவில் ஆட, பரபரவென பழைய எண்ணங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு கிளம்பத் தயாரானான். வந்தனா மருத்துவமனையில் இருப்பதை ரம்யாவிடம் சொல்லி அவளையும் வேதனைப்படச் செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அவளிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் அதிக நாட்கள் அதை மறைக்கவும் முடியாது என்பதும் தெரிந்துதான் வைத்திருந்தான் ரிஷி.
அவந்திகா துலிப் மலர்களின் அழகில் தன்னையே பறி கொடுத்தாலும், அத்துனை அழகையும் தன் தூரிகையின் நாட்டியம் மூலம் வண்ண ஓவியமாக்கினாள். உள்ளத்தின் உற்சாகத் துள்ளல் அவளுடைய படைப்புகளிலும் பிரதிபலிப்பதும் இயற்கைதானே…. ஏனோ மாறனின் விட்டேத்தியான போக்கு அவளுடைய உற்சாகத்திற்கு அவ்வப்போது ஒரு சிறு தடைக்கல்லை உருட்டிவிட்டுக் கொண்டிருந்தது. அதையும் மீறி தன்னுடைய உற்சாகம், வேலியில்லாத காற்றைப் போன்று கரை புரண்டு உரசிக் கொண்டுதானிருந்தது. மாறனின் மீது செல்லக் கோபமும் அதிகமானது, என்ன ஆணவம் இந்த மனிதருக்கு என்று. துரத்தி,துரத்தி வந்த காலம் போய், இன்று வலிய செல்லும் போது விலகி, விலகி விருப்பமின்மையை வெளிப்படுத்தினாலும், காரணம் மட்டும் புரியவில்லை அவந்திகாவிற்கு. இந்த சமயம் பார்த்து ரம்யா இல்லையே என்று வருத்தமாக இருந்தது. யதார்த்தமாக பேசக்கூடியவளாதலால் அவளிடம் மாறனின் இந்தப் போக்கிற்கான காரணம் கேட்பதில் சிரமம் இருக்காது. எப்படியோ ரம்யா வருவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கிறதே. அதுவரை காத்திருக்க வேண்டுமே என்று மலைப்பாகவும் இருந்தது அவளுக்கு. இந்த இயந்திர வாழ்க்கை ஏனோ திடீரென சுமையாகத் தெரிந்தது.
ரம்யாவிற்கு வந்தனாவை நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஊருக்குச் செல்வதற்கு முன் ஒரு முறை வந்தனாவை அவசியம் சந்திக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள். உலகம் எவ்வளவு குறுகிய எல்லைக்குள் இருக்கிறது என்பது பல நேரங்களில் சில ஆச்சரியங்கள் மூலம் நிரூபணம் ஆகும்.
மகாபாரதப் போரின்போது பார்த்தனின் சாரதி வடிவில் அற்புதக் காட்சியளிப்பவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி ஆலயத்தின் வேங்கடக் கிருட்டிணர். சென்னையில் மிகப்பழமை வாய்ந்ததும், மிக அழகான, புராதன வடிவான சிற்பங்களும், காண்போரின் கண்களையும்,அவர்தம் கருத்தையும் கவரக் கூடியதுமாகும் இந்த 1000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட திருக்கோவில். அரசன் தொண்டைமான் சுமத்திக்கு பார்த்தசாரதியாக காட்சியளிப்பதாக அளித்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, அவருக்கு திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகவே காட்சியளித்த பெருமானை, அகத்திய மாமுனி சிலையாக நிறுவியதாகப் புராணங்கள் சொல்லும். இந்த ஆலயம் இன்னொரு தாய் வீடு எனலாம் அனுவிற்கு! சனிக்கிழமை தோறும் வேங்கடவனை தரிசனம் செய்வதைத் தம்முடைய பல்லாண்டுகால வழக்கமாகக் கொண்டிருப்பவள்.மிக வித்தியாசமான மீசை உள்ள வேங்கடவனை தரிசிப்பதில் அத்துனை இன்பம் அவளுக்கு. அன்று சனிக்கிழமையாதலால் , தரிசனம் பெற வேண்டி மாலை அந்திக்கால பூசையைக் காண வந்திருந்தாள் .
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன்
தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும்
என்துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக் கேணி கண்டேனே
என்ற திருமங்கையழ்வாரின், அழகிய பாசுரத்தை இனிமையாக இசைத்தபடி மெய்மறந்து கண்கள் மூடி நிற்பதில் அத்தனை சுகம் அவளுக்கு!
கோவிலைச் சுற்றியுள்ள தெப்பக் குளத்தில் அல்லி மலர்ந்து கண்களில் தண்ணொளி பரவச் செய்து கொண்டிருப்பதைப் ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான், முதுகில் யாரோ செல்லமாகத் தட்டுவது உணர்ந்து மெலிதான சிலிர்ப்புடன் சட்டெனத் திரும்பியவள், அங்கு, அறிந்த இரண்டு முகங்களுடன், அறியாத ஒரு புது முகமும் கண்டு ஆச்சரியமாக கண்கள் அகல பார்த்துக் கொண்டிருந்தாள். ரம்யாவின் அம்மா, அனுவைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தாலும், திரும்பவும் அனுவை முதன் முதலில் சந்தித்த அந்த இக்கட்டானச் சூழலை நினைத்துக் கொண்டவராக, திரும்பவும் அது பற்றி சொல்ல ஆரம்பித்த போது அனுவும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் பதிலாக.
ஆனால் இவை எதுவும் காதுகளில் விழாதவளாக, இந்த முகத்தை எங்கோ வெகு அருகில் நெருக்கமாகச் சந்தித்திருக்கிறோமே என்ற குழப்பத்தில் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தாள் ரம்யா…….
‘ ஆகா, கண்டுபிடித்து விட்டேன்…. இந்த முகத்தைக் கணினியில், மாறன் அனுப்பிய மடலில் வெகு அருகில் கண்டிருக்கிறேனே… அட அந்த அனுவா இவள்……என்ன ஆச்சரியம். யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ, கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது போன்று, வந்து நிற்கிறாளே! சரி ஏதோ நல்லதும் நடக்கப் போகிறது…’
மனதில் தோன்றிய பிரகாசம் மின்னலாக கண்களிலும் வெளிப்பட்டதோ என்னவோ, அதன் பளபளப்பைக் கண்டு தன் கண்களும் கூச, சட்டென்று பார்வையைத் தாழ்த்தியவள், எதிரில் நிற்பவள் யாராக இருக்கும், இப்படித் தன்னை உற்று நோக்குகிறாளே என்ற எண்ணத்துடன் ஒரு வித குறுகுறுப்புடன், திரும்பவும் தலையைத் தூக்கி ஏறிட்டாள். மௌனம் பல மொழிகள் பேசி விட்டன அந்த நொடிப் பொழுதுகளில்!
ஆம், அனுவிற்கும் ரம்யாவின் பார்வை மூலம் ஏதோ தன்னை நன்கு உணர்ந்தவள் எதிரில் நிற்பதாக உள்ளுணர்வு உணர்த்தினாலும், ‘ யார் இவள், தான் முன் பின், கண்டிராத இந்த நவீன மங்கை…… ஓ இந்த அம்மாவின் மகளாக இருப்பாளோ…. பெயர் கூட என்னவோ சொன்னாரே… அமெரிக்காவில் இருப்பதகாச் சொன்னாரே, அவளாக இருக்குமோ’?
“ ஹலோ, ஐயாம், ரம்யா. யூ ஆர் அனு… ரைட்?” என்று கையை நீட்டினாள்.
அனுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவளுக்குத் தன்னைத் தெரியும். தாய் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே மிகவும் பழகிய பாவனையில் கை கொடுக்கும் இவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தவளுக்கு தன் வாழ்க்கையின் பாதையே இவளால்தான் மாறப் போகிறதுஎன்பது அப்போது தெரிந்திருக்க நியாயமில்லையே.
” ஹலோ, ஆம், நான் அனுதான். நன்றி……. என்னை…… உங்களுக்கு முன்பே தெரியுமா…..?” என்று புருவம் சுருங்க அவள் தாயையும், சகோதரனையும் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
அதைச் சரியாகப் புரிந்து கொண்ட ரம்யா, “ ஆம், எனக்கு உங்களை நன்றாகத் தெரியுமே…. உங்களை நான் முன்பே பார்த்து விட்டேன். அதாவது அமெரிக்காவில் இருக்கும் போதே… எப்படி என்று கெஸ் பண்ணுங்கள் பார்க்கலாம்” என்றாள் குறும்பாக பார்த்துக் கொண்டு.
அனுவிற்கு சற்று குழப்பமாகத்தான் இருந்தது. ரம்யாவின் அம்மா தன்னை ஏதும் புகைப்படமெல்லாம் எடுக்கவில்லையே. தன் மீது இருக்கும் அபிமானத்தில் ஒரு வேளை தன்னைப் பற்றி அதிகமாகக் கூட பெருமையாகச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் தன் புகைப்படம் போனது என்றால்……. ஏனோ சட்டென்று மாறனின் நினைவோ, அவனும் அமெரிக்காவில் தானே இருக்கிறான் … என்ற நினைவோ தோன்றவில்லை. அதற்குக் காரணம் மாறன் தன்னிடம் நெருங்கிப் பழகாததாகவும் இருக்கலாம்.
“ ஓகே… ஓகே. நானே சொல்லிவிடுகிறேன். குழப்பம் வேண்டாம். மாறனும், நானும் ஒன்றாக ஒரே அலுவலகத்தில், அடுத்தடுத்த கேபினில் வேலை பார்க்கிறோம்… இப்போது குழப்பம் தீர்ந்ததா?”
“ஓ, அப்படியா, …. “ என்றாள் நம்ப முடியாத ஆச்சரியத்துடன்.
“ ரொம்ப தேங்க்ஸ் அனு. அம்மா உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள். நீங்கள் அன்று செய்த உதவி மிகப் பெரியது..” என்றாள் கண்கள் கலங்க, கள்ளமற்று சிரித்துக் கொண்டிருக்கும் தன் தம்பியை பார்த்துக் கொண்டே……..
“அதெல்லாம் ஒன்னுமில்லை. விடுங்க ரம்யா” என்றாள் தர்ம சங்கடத்துடன்.
“ சரி, இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவீர்களாமே. அம்மா சொன்னார்கள். இன்று நீங்கள் சொன்னதால்தான் கட்டாயப்படுத்தி என்னையும் கூட்டி வந்தார்கள். எனக்கும் சீக்கிரம் திருமணம் ஆக வேண்டுமாம்”… என்றாள் கண்கள் சிமிட்டியபடி.
“ ம்ம்ம்.. இந்தக் கோவில் திருவேங்கடநாதர் மிகுந்த சக்தி உள்ளவர். அவரை வழிபட்டால் திருமண பாக்கியம் மட்டுமல்ல,குடும்பத்தில் அமைதியும் சுபிட்சமும் நிலவும். இங்குள்ள நரசிம்மர் அஞ்ஞானத்தை ஒழித்து ஞான தீபம் ஏற்ற வழி வகுப்பதில் வல்லவர். ஆம். இந்த நரசிம்மர் புத்தியை தெளிய வைத்து நன்கு கல்வி கற்கும் ஆற்றலை வளர்க்கக் கூடியவர். அதனால்தான் தம்பியை இங்கு அழைத்து வரும்படி சொல்லியிருந்தேன்” என்றாள் நாணத்துடன்.
“ தேங்க்ஸ் அனு. நீங்கள் நல்ல சமூக சேவகியாமே… அம்மா சொன்னார்கள்”
“ அப்படியெல்லாம் இல்லை. ஏதோ என்னால் ஆனதை அவ்வப்போது இயலாதவருக்கு உதவுவேன். அம்மாவிற்கு என் மீது அன்பு மிகுதியால் அதிகம் சொல்கிறார்கள், அவ்வளவுதான்”.
“ சரி, அவசியம் வீட்டிற்கு வாருங்கள் அனு. நான் இன்னும் மூன்று வாரங்கள் இங்கு இருப்பேன். அதற்குள் முடிந்த வரை சந்திப்போம். நானும் உங்களுடன் பல விசயங்கள் பேச வேண்டும்” என்றாள் பீடிகையாக.
அனுவிற்கு தன்னிடம் பல விசயம் பேச என்ன இருக்கிறது என்று ஏதோ நெருடியது. ஒரு வேளை மாறன் ஏதும் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகமும் எழத்தான் செய்தது அவளுக்கு.
பொழுது போய்க் கொண்டிருந்தது. இரவும் நெருங்கிக் கொண்டிருந்ததால், அனைவரும் கிளம்பத் தயாரானார்கள். அனுவிற்கு வழக்கத்தைவிட அன்று சற்று கூடுதலாகவே நேரம் ஆகிவிட்டதால் அம்மா தேட ஆரம்பித்து விடுவார்களே என்ற நினைவில் மற்ற எண்ணங்களுக்கு விடை கொடுத்து விட்டு கிளம்பத் தயாரானாள். தன் வீட்டு விலாசத்தை தெளிவாகக் கூறி அவளை அவசியம் வருமாறு அழைத்தாள். ரம்யாவும் மறக்காமல், அனுவின் செல்பேசியின் எண்ணையும் வாங்கிக் குறித்துக் கொண்டு தன் எண்ணையும் கொடுத்து விட்டு விரைவில் சந்திப்பதாகக் கூறிவிட்டு கிளம்பினார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அனைத்திற்கும் சாட்சியாக, நடக்கப் போவதற்கு காரணகர்த்தாவாக, அமைதியான புன்னகையுடன் அனைவரையும் வழி அனுப்பி வைத்தார்.
தொடரும்.

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...