Tuesday, November 22, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(27)

பவள சங்கரி

ஒரு மனிதனின் அடிப்படைக் குணத்தையே மாற்றக்கூடிய வல்லமை காலத்திற்கு உண்டு. அவரவரின் சூழ்நிலைகளே பல நேரங்களில் அவர்களை ஆளுகின்றது என்பதுமே நிதர்சனமாகிறது. அதனை எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும், அதன் போக்கிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் போது அந்த வெப்ப வீச்சின் கடுமை சற்று குறையவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் ரிஷி விதியின் போக்கிலேயேப் போக பழகிக் கொண்டதாகவே நினைத்துக் கொண்டிருந்தான். வந்தனா என்ற ஒரு மென்மை மனம் படைத்த தேவதை , தனிமைச் சிறையில் அகப்பட்டு வதை படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தன் மீது உயிரையே வைத்திருந்த ரம்யாவை விட்டு விலகி வந்தனாவை ஏற்றுக் கொண்டாலும், ஆறே மாதங்களில் அவள் உடல் நிலையில் மாற்றம் தோன்றி, இன்று அடிக்கடி மருத்துவமனைக்கு படை எடுப்பதே முக்கிய வேலையாகவும் இருக்கிறது. இதெல்லாம் பழகிப் போனாலும், முகத்தில் சிரிப்பு என்ற ஒன்றே மறைந்து போனதும் மறைக்க முடியாமல் போனது.

தனக்கு நன்மை செய்வதாக எண்ணி இப்படித் தன் வாழ்க்கையையே கெடுத்துக் கொண்டாரே… வாழ வேண்டிய வயதில், எந்த சுகமும் இல்லாமல் சோர்ந்த முகத்துடனும், சுரத்தில்லாத பேச்சுடனும், இருப்பதோடு, அதனை மறைக்க அவர் படும் பாடு அதைவிடக் கொடுமையானது. தன்னால், அலுவலகப் பணியைக்கூட ஒழுங்காக கவனிக்க இயலாத சூழலில், எந்த பொழுது போக்கும் இன்றி தன் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வரும் இந்த நல்ல இதயத்திற்கு ஏதாவது களிம்பு இட வேண்டுமே என்று மனம் துடித்தாலும், தன் இயலாமையை எண்ணி நொந்து போவதைத் தவிர ஏதும் செய்வதறியாது தவித்து நின்ற போதுதான், ரம்யா ஊரிலிருந்து வந்திருக்கும் செய்தி, அவள் போன் செய்து விசாரித்ததன் மூலம் தெரிந்தது. அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. ரம்யா விரைவில் வந்து தன்னைச் சந்திப்பதாகக் கூறியிருந்ததை நம்பிக் காத்திருந்தாள். அவளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்றும் எண்ணியிருந்தாள்.

அன்று காலை எழுந்ததிலிருந்தே உபாதைகள் ஏதுமின்றி சற்று உற்சாகமாகவே இருந்தது. தன் அன்பு கணவனுக்கு ஆசையாக சமைத்துப்போட மனம் ஏங்கியது. ரிஷிக்குப் பிடித்த பால் கொழுக்கட்டை செய்து அசத்த வேண்டும் என்று முடிவும் செய்து, மளமளவென செயலிலும் இறங்கினாள். பக்குவமாக குங்குமப்பூ போட்டு, சக்கரையும் சேர்த்து பதமாகக் காய்ச்சிய பாலில், ஒரே அளவில், நீள வடிவில் உருட்டி, பாலில் வேக வைத்து, அதை அழகான ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் போட்டு, அதற்கு தகுந்த அளவிலான வெள்ளியிலான வேலைப்பாடுகளுடன் கூடிய அன்னப்பச்சி வடிவிலான சின்ன கரண்டியும் வைத்து அந்தக் கிண்ணத்தை ஒரு சின்ன வெள்ளித் தட்டில் வைத்து அன்பாக எடுத்துச் சென்று கொடுத்தவள், அவனுடைய ஆச்சரியமான பார்வையில் சற்றே நாணித் தலை குனிந்தாள்.

“ ஏய் என்னது, இது காலங்கார்த்தாலே, பால் கொழுக்கட்டையெல்லாம் செய்து அசத்தறே…:

“ ம்ம்… இன்று என்ன நாள்னு நினைவில்லையா.. அதுக்குள்ள மறந்தாச்சா?”

“ என்ன நாள்.. ஓ உன்னோட பிறந்த நாள் இல்லையா…. சாரிடா . மறந்தே போயிட்டேன். ஓ…. எப்படி மறந்தேன்.. சே.. நீயாவது நேற்றே சொல்லியிருக்கலாமில்லையா”

“ பரவாயில்லை ரிஷி. நான் எப்பவும் பெரிசா பிறந்த நாள் எல்லாம் கொண்டாடறதில்ல. சாய்பாபா கோவிலில் அன்னதானம் செய்வேன். அத்தோடு சரி. முடிந்தால் இன்று போய் வரலாம். “

“ அதற்கென்ன வந்தனா, இப்பவே கிளம்பு போகலாம். ஆபீசிற்கு 2 மணி நேரம் பர்மிஷன் சொல்லிடலாம்”

“ இல்லை ரிஷி, மாலையில் போகலாம். அனாவசியமாக எதுக்கு பர்மிஷன் எல்லாம்…”

“ இல்லை, வந்தனா அஷ்டலட்சுமி கோவிலுக்கும் அப்படியே போயிட்டு வரலாமே.”

“ உங்களுக்கு விருப்பம்னா அப்படியே செய்யலாம்… எனக்கு இன்னொரு ஆசை ரிஷி. ரம்யா வந்திருக்கறதா சொன்னீர்களே. அவங்களை நம் வீட்டிற்கு இன்று டின்னருக்குக் கூப்பிடலாமா….?”

“ எதுக்கு வீணா சிரமப்படறே வந்தனா. அவளையும் கூட்டிக்கிட்டு ஏதேனும் ரெஸ்டாரெண்ட் போகலாமே…..”

“ இல்லை ரிஷி. ரம்யாவை வீட்டிற்குக் கூப்பிட்டு அவளுக்கு என் கையால ஏதாவது சமைத்து அசத்த வேண்டும் . சும்மா சிம்பிளா செய்யறேன். இன்று நல்லாத்தானே இருக்கேன்”

“ இல்லை, அவள் புரோகிரோம் எப்படியோ தெரியல. அவ வேற ஷார்ட் ட்ரிப்லதான் வந்திருப்பா போல. நான் கேட்டுப் பார்க்கிறேன் . பார்க்கலாம் என்றான்.”

“இல்லை போனை கொடுங்கள் நானே பேசுகிறேன்” என்றாள் விடாப்பிடியாக..

ரம்யாவும் சொன்னவுடன் சற்றே யோசித்தவள், தானும் ஊருக்குச் செல்வதற்கு முன் ஒரு முறையாவது வந்தனாவை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்ததால், ஒப்புக் கொண்டாலும், அன்று மாலை அனுவைச் சந்திப்பதாகச் சொன்னதும் நினைவில் வர சற்றே யோசித்தவள், தன்னுடன் அனுவும் வருவாள் என்பதையும் சொல்லி தான் வருவதை உறுதி செய்தாள்.

மாலை அனுவை வரச் சொன்னதன் காரணமே, மாறனின் தந்தையிடம், அவந்திகா பற்றி பேசும் போது அவளும் உடன் இருப்பது நலம் என்பதனாலேயே. அன்று இருவரும் சேர்ந்து சென்று மாறனின் தந்தையை சந்திப்பதாக இருந்தது. வந்தனாவின் பிறந்த நாள் என்று சொன்னதனால் அன்று மாறனின் வீட்டிற்குச் செல்வதை அடுத்த நாளுக்குத் தள்ளி வைத்து, அனுவையும் அழைத்துக் கொண்டு ரிஷியின் வீடு நோக்கிச் சென்றார்கள் இருவரும். அனுவிடம், தன் நண்பன் ரிஷியின் வீட்டிற்குச் செல்வதாக மட்டுமே சொல்லியிருந்தாள்.

வந்தனாவை முதன் முதலில் அன்றுதான் நேரில் பார்த்தாலும் ஏதோ பல காலம் அவளுடன் பழகியது போன்று ஒரு உணர்வை ஏற்படுத்தியது அவளுடைய நெருக்கம். அத்தனை கனிவு அவள் பார்வையிலும், உபசரிப்பிலும். நல்ல உயரமான, ஒடிசலான உடல் வாகுடன், இளஞ்சிவப்பு நிறத்திற்கு பாந்தமாக, நல்ல அடர் செந்நிற ஷிப்பான் புடவையில், ஒரு தேவதையாகவே காட்சியளித்தாள். கண்களைச் சுற்றி லேசான கருவளையமும், லேசான சோர்வும் மட்டுமே அவளை வித்தியாசப்படுத்தியதே தவிர மற்றபடி அவளுடைய அந்த கொடிய நோய்க்கான அறிகுறி நல்ல வேளையாக ஏதும் இல்லை.

அவளுடைய அன்பான உபசரிப்பில் அதிகமாகவே சாப்பிட்டார்கள் ரம்யாவும், அனுவும். அனுவைப்பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். எதைப்பற்றி வந்தனா கேட்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாளோ , அதைச் சரியாக கேட்டே விட்டாள் நேரிடையாக. அவளுடைய திருமணம் பற்றி வீட்டில் ஏதும் ஏற்பாடு செய்திருக்கிறார்களா, என்ற கேள்விக்கு, பதில் அளிப்பதற்கு முன் தன்னையறியாமல், ரிஷியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை அவளால். அவனும் அவள் கண்களை நேரிடையாகப் பார்க்கத் திராணியற்றவனாக தலையை தாழ்த்திக் கொண்டான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அனுவிற்கு இவர்கள் மூவருக்குள்ளும் ஏதோ விசயம் இருப்பது மட்டும் புரிந்தது. ஒரு வேளை தன் வரவு இவர்கள் வெளிப்படையாகப் பேசத்தடையாக இருக்கிறதோ என்று கூட எண்ண ஆரம்பித்தாள். ஆனாலும் ரம்யா அது போன்ற தர்மசங்கடமான சூழலை விரும்பாதவளாக, பேச்சை மாற்ற முயற்சித்தாள்.

“ஏன் நீங்களிருவரும் ஒரு முறை அமெரிக்கா வரக்கூடாது. வந்து சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே. ரிஷி அழைத்து வாருங்கள்” என்றாள்.

புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்த ரிஷியின் போக்கு அனுவிற்கு ஐயம் ஏற்படுத்துவதாகவே இருந்தது. எதிலும் ஒட்டாதது போல ஒரு விரக்தியான மன நிலையும் அவனிடம் தெரிந்தது ரம்யாவிற்கும் உறுத்தலாகவே இருந்தது. ஆனாலும் தன்னால் வேறு என்ன செய்ய முடியும். வந்தனாவும் விடாமல் திருமணச் சாப்பாடு விரைவில் போட வேண்டும் என்று உரிமையுடன் திரும்பவும் கேட்கவும், அதற்கு மேல் அவளிடம் மறுப்பு சொல்ல விரும்பாமல், புன்னகையுடன் ஆமோதிப்பது போன்று பாசாங்கு செய்தது அனைவருக்கும் புரியாமல் இல்லை. ஒரு வழியாக சமாளித்து வெளிவந்தவள் அனுவிடம் தப்பிக்க முடியாமல் நடந்தது அனைத்தையும் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள். அனைத்தையும் கேட்டவளின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது.

அடுத்து நடக்கப் போவது என்ன என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த இரகசியம் அல்லவா. பேச வார்த்தைகள் ஏதும் கிடைக்காதலால் இருவரும் மௌனமாகவே வந்து சேர்ந்தார்கள். ரம்யாவை அவள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு அடுத்த நாள் வந்து அவளை மாறனின் தந்தையிடம் அழைத்துச் செல்வதாக வாக்களித்து விட்டு, தன் ஏமாற்றத்தையும் மறந்து, ரம்யாவைப் பற்றி நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெயவம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை! என்ற பாடல் எங்கோ வானொலியில் ஒலிக்க தன்னையறியாமல் பெருமூச்சு வர வீட்டின் உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டாள் ரம்யா……….

தொடரும்.

படத்திற்கு நன்றி - http://www.google.com/imgres?imgurl

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...