Monday, December 26, 2011

சிலம்பும், பெரிய புராணமும் - பகுதி - 1

தமிழறிஞர்களுக்கு வணக்கம்.


பிரான்சு நாட்டில் திரு பெஞ்சமின் லெபோ அவர்களின் தலைமையில் நடைபெறப்போகும் உலகத்தமிழ் மகாநாட்டின் மலரில் பிரசுரிப்பதற்காக நான் அனுப்பியுள்ள கட்டுரை இது. தலைவரின் ஒப்புதலுடன் இங்கு வெளியிடுகிறேன். சற்றே பெரிய கோப்பாக உள்ளதால் பிரித்து அனுப்புகிறேன். தினமும் ஒரு பகுதியாக.இதை படித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் நன்றியுடையவளாக இருப்பேன். நன்றி, வணக்கம்.


பெரிய புராண வரலாறு

திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம் ,ஒரு மாபெரும் வரலாறறு இலக்கியம். இலக்கிய, இலக்கணச் சான்றுகள் மற்றும் புதை பொருள் ஆய்வாலும், இராசாங்க சமயம் என்று போற்றப்படுகின்ற சைவ சமயம் , தொன்மைச் சமயம் என்பது தெளிவு. இச்சமயத்தை களப்பிரர் காலத்தை அடுத்துத் , திருவருளையும், அவ்வருள்வழி பின்பற்றி வாழ்ந்து வந்த அரசர் பெருமக்களின் துணை கொண்டு நெறியோடு வளர்த்தவர்கள் நம் அருளாளர்கள். இவ்வருளாளர்கள் இரு திறப்படுவர். சார்பு நெறியுணர்ந்து அந்நெறியில் தாமும் நின்று, மனம், மொழி மெய்களால் திருத்தொண்டு புரிந்தவர்கள் ஒரு சாரார்; பிரிதொருசாரார் இறைவன் அருளிய மெய்ப்பொருளை வழிவழியாகப் பெற்று அப்பொருளை அடைதற்குரிய வழிவகைகளை நெறிப்படுத்தும் ஞான நூல்களை அருளிச் செய்தவர்களாவர். இவற்றில் முன்னவர்களால் அருளிச் செய்யப்பெற்றனவும், அவர்களைப்பற்றியவுமான நூல்கள் திருமுறைகள்எனப்படும். பின்னவர்களால் அருளிச் செய்யப்பெற்ற நூல்கள் மெய்கண்ட நூல்கள்எனப்படும். முன்னவை பன்னிரண்டாகவும், பின்னவை பதினான்காகவும் பகுத்துப் பேசப்பெறும்.இக்கால எல்லை, சைவ சமயத்தின் பொற்காலம் என்று போற்றப்படுகிற, கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை என்பர். இக்கால எல்லையில் மெய்கண்ட நூல்கள் தோன்றுவதற்கு முன்பே அவதரித்தவர் சேக்கிழார் பெருமான்.

அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழார் நாயனார்.

தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
வாக்கி நாற்சொல்ல வல்ல பிரானெங்கள்
பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழானடி சென்னி யிருந்துவாம்.
சிவஞான முனிவர்.

சேக்கிழார் பெருமான் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் . நம் தொன்மையான தமிழ் இலக்கியங்களில் எண்ணற்ற படைப்புகள் , பல விதமான சிறப்பான கருத்துக்களைக் கொண்டவைகளாக இருப்பதும் கண்கூடு. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனின் , எல்லையற்ற வல்லமைகளையும்,பெருமைகளையும் சுவைபட விளக்குகின்ற கந்தபுராணமும்ஒன்றாகும். நம் புனிதமான தமிழ் இலக்கியங்களின் முன வரிசையில் இருப்பவைகளில் பன்னிரு திருமுறைகள் இன்றியமையா ஒன்றாகும் என்பதும் நாம் அறிந்ததே.

தமிழின் முதல் காப்பிய நூல் என்ற பெரும் பேறு பெற்ற சிலப்பதிகாரத்தை சிலர் கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் சிலர் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார்கள். சமண சமயமும்,பௌத்த சமயமும் தமிழ் நாட்டில் நிலைபெற்றுவிட்ட , பக்தி இலக்கியங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இந்நூல் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அரச குலத்தில் பிறந்து ,துறவறம் பூண்ட இளங்கோவடிகள் , தமிழகத்தில் நடந்த ஒரு பழங்கதையை எடுத்துக் கொண்டு அதனைக் காப்பியமாக்கி அளித்தமை வியப்பிற்குரிய செயல் எனலாம். சோழ நாட்டில் தோன்றி, பாண்டிய நாட்டிற்குச் சென்று படாத துயரெல்லாம் பட்டு, சேர நாட்டில் வந்து தெயவ நிலையை அடையும் ஒரு சாதாரண சிறுமியைப் பற்றிய காவியம். கண்ணகி என்ற அந்த காவிய நாயகி தன் கணவனுக்கு மன்னன் அளித்த அநீதியைக் கண்டித்து மதுரையையே எரித்து தெய்வ நிலையை அடையும் வரலாறு உலக இலக்கியங்களிலேயே மிக அரிதான ஒரு எடுத்துக்காட்டாகும். மாகவி பாரதி, ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று வர்ணித்ததே இக்காப்பியத்தின் ஈடு இணையற்ற தன்மைக்குச் சான்றாகும்.

இலக்கியங்கள் என்பது அந்தந்த காலத்தின் கண்ணாடி எனலாம். குறிப்பிட்ட அந்த காலங்களின் மக்களின் வாழ்க்கை முறைமைகள், பழக்க வழக்கங்கள், மண்ணின் வளம், இப்படி பலவற்றையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டக் கூடியது. அந்த வகையில் பெரிய புராணம் மற்றும் சிலப்பதிகாரம் என்ற இவ்விரு அரிய காப்பியங்களின் ஒப்பீடு மூலம் பல சுவையான தகவல்களைப் பெறுவதும் இயல்பாம்.

திருவாரூர்த் திருநகரச் சிறப்பு - பெரிய புராணம்

சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது
மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.

வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணிமுழ வோசையும்
கீத ஓசையு மாய்க்கிளர் வுற்றவே.

சொன்ன சோழ நாட்டின் பல நகரங்களிலேயும், மிகப்பழமை வாய்ந்தது. நிலைபெறும் இலக்குமி தேவியால் வழிபடப் பெற்றது. வன்னியும், கங்கையும், நிலவும் தாங்கிய சிவந்த சடைமுடியை உடைய தியாகேசர் எழுந்தருளிய திருவாரூர்த் திருநகரமாம்.

வேதம் பயிலும் ஓசை, வீணை இசைக்கும் ஓசை, சோதி மிகுந்த வானுலகத்தவர்களான தேவர்கள் துதிபாடும் ஓசை, பெண்கள் ஆடலிலும், அதற்கு இசைய முழக்கும் முழவுகளிலும் கூடி எழும் ஓசை ஆகிய இவைகளனைத்தும் கீதங்களின் ஓசையுடன் ஒன்று கலந்து அந்நகரில் பெரும் கிளர்ச்சியைத் தந்தனவாம்.


சிலப்பதிகாரத்தின் புகாரின் சிறப்பு.


நாம நீர்வேலி உலகிற்கு , அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்.
பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்!

வீங்கு நீர்வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

ஆங்கு, பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய

பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.

கடலால் சூழ்ந்த உலகிற்கு வானிலிருந்து வளம் அளிப்பதால் , புகார் நகரைப் போற்றுவோம். கடற்கரையே அரணாக அமைந்து சோழ குலம் போன்று பரந்து விரிந்து இருப்பதால்.

பொதிகை, இமயம் போன்று, அனைத்துத் தேவைகளும் எப்போதும் குறைவற நிறைந்திருப்பதால் , மாற்று இடம் தேடி, இடம்பெயராத பழங்குடிகள் வாழும் சிறப்புடைய புகார் நகரம். அனைத்துத் துறைகளின் வல்லுநர்களும் அங்கு வாழ்வதால் அந்நகரம் என்றும் அழியாது என்பர் பெரியோர்.

அடியாரின் துயர் துடைக்கும் பொருட்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த இறையின் பெருமைகளை உரைக்கும் சேக்கிழார் பெருமான் , நம்பி ஆரூரர் அவதரித்த திருவாரூர் நகரின் சிறப்பை அழகுற எடுத்தியம்பியது போன்று, சிலம்பின் நாயகி ,கற்புக்கரசி கண்ணகி பிறந்த புகார் நகரின் பெருமைகளை இளங்கோவடிகள் நயம்பட விளக்கியிருப்பதும் சிறப்பு.


ஐயன் வள்ளுவனின் வாக்கின்படி,

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

குறையாத விளைச்சலும் நடுநிலைமை யாளரும் சோர்விலாத வணிகரும் உடையது நல்லதொரு நாடு என்கிறார்.

அந்த வகையில் ஒரு நாட்டின் வளம் என்பது அம்மண்ணின் விளைச்சலைக் கொண்டே இருக்கிறது. அத்தகைய நல் விளைச்சலின் ஆணி வேராக இருப்பது நீர் நிலைகளேயாம். சோழப்பேரரசில் புகுந்து பாயும் காவிரி அன்னையவளின் புகழை , சேக்கிழார் பெருமானும், இளங்கோவடிகளும் பாடிப்பரவுவதைக் காணலாம்!

வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை யெண்ணில் சிவாலயத்
தெம்பி ரானை யிறைஞ்சலி நீர்ம்பொன்னி
உம்பர் நாயகற் கன்பரு மொக்குமால்.


நறுமணமுடைய மலர்களாலும், நீரினாலும் வழிபாடு செய்து, செம்பொன் மணலையுடைய இரு கரையிலுமுள்ள எண்ணிலாத சிவாலயங்களிலே எம்பெருமானை வழிபடுதலால், வற்றாத சீவநதியான காவிரியாறு , தேவர்களுக்கெல்லாம் தேவராகிய சிவபெருமானின் அடியவர்களுக்கு ஈடாகிறதாம்.


இது காவிரிக்கும் அடியவர்களுக்கும் செயல் வகையால் ஒப்புமை கூறுவதாம்.

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி.


கரையிலெல்லாம் வண்டுகள் ரீங்காரமிட, பூக்களை ஆடையாகத் தரித்து கரிய கயல் போன்று கண் விழித்து நளினமாய் நடந்தாய் காவேரி வாழ்க! உன் கணவன் செங்கொல் வளையாமல் நடுநிலையுடன் ஆட்சி செய்வதை அறிந்தேன் வாழ்க!

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல் வெய்யோன் அருளே வாழி காவேரி.

வாழ்க அவன் நாடு. அந்நாட்டின் மகள் நீ! அந்நாட்டை வளர்க்கும் தாயும் நீ! காவேரி நீ வாழ்க! காரணம் இறுதிக் காலம் வரை பாதுகாக்கும் பேருதவியைச் செய்யும் சூரியகுலச் சோழன் நடு நிலைமையே வாழ்க காவேரி!


No comments:

Post a Comment