Thursday, July 12, 2012

அருள்மிகு ராகவேந்திர சுவாமி ஆஞ்சநேய சுவாமி ஆலயம்



நம் தமிழகத்தின் தனிப்பெரும் பெருமையே திருக்கோவில்களதான். நம் திருக்கோவில்களின் கட்டிடக்கலை, தொன்மை வரலாறு, கலை வண்ணம் இவையனைத்தும் நம்மை வியக்க வைப்பதோடன்றி, உலகத்த்தவரையும் மிக வியப்புடன் நோக்கச் செய்கிறது. நம் திருக்கோவில்களின் தொன்மை வரலாறும், வழிபாட்டு முறைகளும் மிகவும் தனித்தன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.

அவ்வகையில், ஈரோடு காவிரிக்கரையில் அமைந்துள்ள பழம்பெரும் ஆலயமான அருள்மிகு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவன்ம் மிக அழகானதொரு ஆலயம். மந்திராலயத்தில் மூல பிருந்தாவனத்திலிருந்து புனித மண் எடுத்து வந்து ஈரோடு பிருந்தாவனத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோவிலின் முக்கியமான அம்சம் என்னவென்றால் சர்வ மத வழிபாடுதான்.

ஆம் இங்கு மக்கள் சாதி, மத, இன மற்றும் மொழி பேதமில்லாமல் அனைவரும் வந்து ஸ்ரீராகவேந்திரரை வழிபடுவதோடு சேவைகளும் செய்து பலன் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு

பதினைந்தாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம், ஹோஸபேட்டைக்கு அருகில் வாழ்ந்து வந்த சிறப்பான பிராமண தம்பதிகளான திம்மண்ண பட்டர் மற்றும் கோபிகாம்பாள் என்பவருக்கும் ஸ்ரீதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் அருளால் அவதரித்த மகான் ஸ்ரீராகவேந்திரர் ஆவார். இவருடைய இயற்பெயர் வெங்கடபட்டர்.


விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பத்ற்கிணங்க சிறு வயதிலேயே சகல சாத்திரங்களையும் முறைப்படி கற்றுத் தேர்ந்திருந்தார்.. உரிய பருவத்தில் சரசுவதி பாய் என்பவரை மணந்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானார்.



சில காலம் கும்பகோணத்தில் வசித்து வந்த ஸ்ரீசுதீந்தரரிடம் மாணவராக இருந்து மேலும் பல கலைகளையும் கற்றார். தன் மேன்மையான அறிவினால் மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டு விளங்கினார். இவர் இயற்றிய விளக்க நூலான “சுதா பரிமளம்” மூலம் பரிமளாசிசாரியார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார்.



இவருடைய குடும்ப வாழ்க்கை சிரமமானதாகவே இருந்தது. திரும்பவும் ஸ்ரீசுதீந்தரரிடம் சென்று கல்வி கற்ற்க முற்பட்ட போது ஆண்டவன் அருளால் சந்நியாசம் பெற்று ஸ்ரீராகவேந்திரர் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மனைவி மனமுடைந்து தஞ்சையில் ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு நற்கதி ஏற்படும்படி நம் தவ வலிமையால் அருளினார். இதன் பிறகு பல இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்தார்.

தான் சென்ற இடங்களிலெல்லாம தன் மகிமையால பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். ஆணவமாக செயல்பட்டு அனைவருக்கும் சிரமம் கொடுத்துக் கொண்டிருந்த அதர்ம அரசனை அடக்கியது, கருநாகம் தீண்டிய தன் சீடனை உயிர்பித்தது போன்ற பல சாதனைகள் புரிந்தார்.



ஒரு சமயம் இவர்தம் மகிமையை சோதிக்க எண்ணிய ஐதராபாத் நவாப் ஒருவர் சுவாமி நைவேத்தியத்திற்காக மூடி வைத்த பாத்திரத்தில் ஆட்டு இறைச்சியை போட்டு வைத்தார். இதனைத் தன் ஞானதிருட்டியால் கண்டுணர்ந்த சுவாமிகள் அந்த இறைச்சியை பழமாக மாற்றியதோடு அந்த நவாப் தானே தன் தவறை உணர்ந்து சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டதோடு அதோனி தாலுக்காவில் உள்ள மந்திராலயம் என்ற கிராமத்தையே இவருக்கு தானமாகக் கொடுத்தார்.

ஆதி காலத்தில் பக்த பிரகலாதன் யாகம் செய்த பூமியாக மந்திராலயம் இருப்பதனால் அங்கேயே தனக்கான பிருந்தாவனத்தையும் தானே நிர்மானம் செய்து கொள்வது என தீர்மானித்தார். சக 1593, விரோதி கிறித்து வருடம் சிரவண மாதம் கிருஷ்ண பட்சம், துவிதியை குருராயர் கி.பி.1671ம் வருடம் பிருந்தாவன பிரவேசம் செய்வது என்ற சங்கல்ப்பமும் செய்து கொண்டார். அதன்படி தன் தொண்டர்கள் முன்னிலையில் “இந்து எனகே கோவிந்தா” என்று தொடங்கும் பாடலை இயற்றி , அதை பாடிக்கொண்டும், “நாராயணா” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டும் பிருந்தாவன பிரவேசம் செய்து முக்தி அடைந்தார்.

ஸ்ரீராகவேந்திரர் பகவத்கீதை, பிரம்ம சூஸ்த்ரபாஷ்யம், உப நிஷத்துகள், வேதங்கள் இவைகளுக்கு ஸ்ரீமத்வாச்சாரியார் செய்த மூல நூல்களுக்கு உரைநடை நூல்கள் எழுதி, பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கங்களும் எழுதினார். அதனை மக்களிடம் பிரச்சாரமும் செய்தார். அவர் இயற்றிய முக்கிய நூல்கள், சுதா பரிமளம், சந்திரிகா பிரகாசா, சந்திர தீபிகா, நியாய முக்தாவளி, ரிக் அர்த்த மஞ்ஜரி, கீதா விவரித்த உபநிசத் கண்டாரித்தம் போன்றவைகளாகும். ராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளையும், சுருக்கி, மிக எளிமையாக மக்கள் கற்று பயனடையும் வகையில் சிறிய நூல்களாக அமைத்தார்.
தல வரலாறு :

திராவிட நாட்டின் தனிப்பெரும் சிறப்புடன்
மானிட உறுவில் மகிமைகள் செய்தாய்
பாபவிநாஸா பிருந்தாவன நிவாஸா
குருராகவேந்திரா சரணம் சரணம்.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே இந்து மதம் (சனாதன தர்மம்) தோன்றி இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. வேத வியாச முனிவரால் இந்து மதம், ரிக், யஜூர், சாம, அதர்வன எனும் நான்கு வேதங்களாக பிரிக்கப்பட்டது. மேற்படி நான்கு வேத விளக்கங்களை, ஸ்ரீசங்கரர், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்துவாச்சாரியார் ஆகியோர், முறையே, அத்வைதம், வஸிஷ்டாத்வைதம் மற்றும் தத்வைதம் எனப்படும் மூன்று கிரமங்களை ஏற்படுத்தினார்கள். இதில் மூன்றாவதாகத் தோன்றி மத்வாச்சார் கி.பி. 1238 ஆம் ஆண்டு வாயு பகவானின் அவதாரமாகத் தோன்றி த்வைத வேதாந்தத்தை நிர்மாணித்துள்ளார். அவர் கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ண திருவுருவத்தை நிர்மாணம் செய்து அட்ட மடங்களையும் நிர்வகித்து வந்தார். அவருடைய பிரதான சீடர்களில் ஒருவரான, சுமதீந்திர தீர்த்தரின் வழிவழியாக வந்த சீடர்களில் ஸ்ரீராகவேந்திர சுவாமியும் ஒருவர் ஆவார்.

ஈரோடு மாத்வ மக்களின் விருப்பத்திற்கு இணங்க வேத விற்பன்னர் ஆசாரசீலர் ஈரோடு திரு.ராமாச்சார் என்பவர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம், மந்திராலயம் சென்று அங்கிருந்து புனித மண் தலையில் சுமந்தவாரே, கால்நடையாக ஊர் ஊராக வந்து பூசைகள் செய்து கொண்டு ஈரோடு கொண்டு வந்து, காவிரிக்கரையில் சாத்திரப்படி சிறிய பிருந்தாவனம் அமைத்து குடமுழுக்கு செய்தார் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வருகிறது. இந்த பிருந்தாவனம் தமிழ்நாட்டிலேயே, முதலாவதாகவும், பழமையானதாகவும் . இந்தியா முழுவதிலும் உள்ள பிருந்தாவனங்களில் மூன்றாவது ஆகும். ஏற்கனவே ஸ்ரீஆஞ்சநேயர் கோவில் அங்கு பூசைகள் நடத்தப்பட்டு வந்தன.

விமான அமைப்பு

ஆஞ்சநேய சுவாமி சன்னதியின் மேல் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளுடன் கூடிய கலசத்துடன் கூடிய விமானம் அமைந்துள்ளது. முகப்பு வாசலில் மூன்று கலசங்களுடன் கூடிய ஸ்ரீராமர், சீதை, ஆஞ்சநேயர் சிலைகளுடன் கூடிய சிறிய கோபுரம் பரிமள மண்டபத்தின் மேல் 7 கலசத்துடன் கூடிய மகாலட்சுமி சிலையுடன் கோபுரமும் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கல்வெட்டுகள் ஏதும் இல்லை.

தினசரி பூசைக்காலங்கள் :

இந்த ஆலயத்தில் பாஞ்சராதிர ஆகம விதிப்படி சேவைகளும், பூசைகளும் செவ்வனே செய்யப்படுகிறது. குறிப்பாக மாத்வ சம்பிரதாயத்தை அனுசரித்து பூசைகளும், சேவைகளும் செய்யப்படுகின்றன. தினசரி காலை 6 மணிக்கு நிர்மால்ய விசர்ஜன பூசை, காலை 9 மணிக்கு பால்/பஞ்சாமிர்த அபிசேகம், காலை 11 மணிக்கு நைவேத்தியம், மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சந்தி கால பூசையும், தீபாராதனையும் நடைபெறுகிறது. ஆலயம் காலையில் 6 மணி முதல் 11 மணி வரையிலும், வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மறுபடியும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும்.

திருவிழா சிறப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று விசேச அபிசேகமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீராகவேந்தரின் ஆராதனை தமிழ்நாடு முழுவதும் அறிந்த மிகச் சிறப்பான நிகழ்வாகும். மேலும் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் குருமார்களான ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீஜெயதீர்த்தர், ஸ்ரீவியாசராஜ சுவாமிகள் ஆகியோருக்கும் ஆராதனைகள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமநவமி உற்சவம், ஸ்ரீநரசிம்ம சுவாமி உற்சவம், ஸ்ரீஅனுமந்த ஜெயந்தி உற்சவம் ஆகியவைகளும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஸ்ரீராகவேந்திரரின் அருள் பெற்று வருகின்றனர். இங்கு சர்வ மதப் பிரார்த்தனை நடை பெறுவதே குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.


த.ம.அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு பிறந்த நாள்!  ஆண்டு நிறைவைக் கொண்டாட அளிக்கப்பட்ட விழியம் இங்கே!

சுட்டி:


நன்றி 


1 comment:

  1. இங்கு சர்வ மதப் பிரார்த்தனை நடை பெறுவதே குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.

    சிறப்பான ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பதிவுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete