Friday, October 19, 2012

நவராத்திரிக் கவிதைகள்


இயற்கைக்காட்சியே இறைக்காட்சியாய்
மறையாய்நிற்கும் மாலவன்காட்சியாய்
மறைந்திருந்து அருள்தரும் கற்பகத்தருவாய்
உள்ளமெலாம் நிறைந்திருந்து தண்ணளியாய்
கள்ளமெலாம் அழித்து கருணைமழையாய்
இகமும் பரமும் எமை உணரச்செய்த உத்தமமாய்
இச்சகத்தோரும் நற்கதி பெற்றுய்யுமாறு
வரமளித்தருளும் வண்ணப் பூங்கொடியே!
வ்ந்தெமைக் காத்தருளே! கோதைநாயகியே!
தத்துவமும் தவமும் தந்தெமைக் கனிவாய்
சூலமேந்தித்தாயே விரைந்துவந்து காப்பாயே!


அகமும் முகமும்  அற்புதமாய் மலர்ந்து
கணமும் உனை மறவாமல் நினைந்துருகி
கருத்துடன் நாளும் கவிபாடி கண்மலர்ந்தேன்
கற்பகத்தருவே! கார்மேகமே! கதிரொளியே!

போற்றி அருளுகநின் பாதமலர்
அம்பிகையே அகிலாண்ட நாயகியே
மாதவம் செய்து மணாளனை அடைந்த
கற்புக்கரசியே! இரட்சித்துக் காத்தருள்வாயே!

தேவியவள் திரிசூலியவள் பரிபாலியவள்
தேன்மதுர யாழ்மீட்டி துதிபாட நெகிழ்ந்து
வான்மழையாய் பொழிந்திடுவாள் கனிவாக
அருள்ம்ழையாய்  எம்உளம் நிறைந்திடுவாள்!

அம்மையாய் அப்பனாய் அமுதமாய்
எமை வழிநடத்தும் அற்புதமாய்
காவல் நிற்கும் கருந்தெய்வமாய்
கற்றவர் சபையில் எமைக்களித்திருக்கச்செய்த
கனிரசமாய் கற்கண்டாய் கவித்தேனாய்
கருப்பஞ்சாராய் காத்துநிற்கும் தேவியே!

லோச்சனியே.. லோகநாயகியே! ஈசனின்
இடப்பாகத்து இருப்பவளே! நேசமுடன்யான்
நின் திருப்பாதம் நாடிநின்று பாடிப பரவி
பணிந்தேத்துவனே! பார்போற்றும் நாயகியே!
காவிரியே கங்கையே கருணைக்கடலே!


No comments:

Post a Comment