Thursday, March 21, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (5)



பவள சங்கரி

 
”ஒரு கொள்கையை எடுத்துக்கொள் அதற்காகவே உன்னை அர்ப்பணித்து, பொறுமையுடன் போராடிக் கொண்டிரு.  உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும் – சுவாமி விவேகானந்தர்.




 

ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதியான எண்ணம் கொண்டு அதை ஆரம்பிக்கும் போதே அதற்குரிய சக்தி தானகாவே கிடைத்துவிடும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். நமக்குள் புதைந்து கிடக்கும் சக்தியை பாதி அளவிற்கும் கூட நாம் பயன்படுத்துவது இல்லை என்றே கூறுகின்றனர். நம் முயற்சியை முழுமையாகப் போடும்போது அது பன்மடங்காகப் பெருகத்தான் செய்யும் என்பதும் நாம அனுபவத்தில் காணும் உண்மைதான். கண்ணிற்குத் தெரியாத கடவுள் போலத்தான் நம் சக்தியும் அல்லவா.நம் பார்வைக்குத் தெரியாவிட்டாலும் நமக்குத் தேவையான நேரத்தில் நம்முள் புகுந்து பெரும் சாதனைகள் புரிகிறதல்லவா?



எதையும் தள்ளிப்போடாமல் உடனே செய்யப் பழகுங்கள்!


 


எடுத்த காரியத்தை உடனடியாக முடிக்கப் பார்க்க வேண்டும். தேவையில்லாமல் தள்ளிப்போடும் வழக்கம் நம் வெற்றிப் படிக்கு ஓர் தடைக்கல்லாக ஆகிவிடும்.  தள்ளிப்போடாமல் காரியங்கள் செய்வது எப்படி?


முதல் நிலையாக நாம் எப்பொழுது, எப்படி, ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று பார்க்கலாமா? நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளியில்தான் இந்தத் தள்ளிப்போடும் வழமை வந்து தொற்றிக்கொள்கிறது. உதாரணமாக, பலர் தன் அன்றாடக் கடமைகள் அனைத்திலும் மிகத் தெளிவாக இருப்பவர்கள், வழக்கமாகச் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு, போன்றவற்றில் கோட்டை விட்டு விடுவார்கள். கடந்த 6 மாத காலத்தில் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் என்பதைப் புரட்டிப் பார்த்தோமானால் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் கண்டு கொள்ளலாம். இது ஒரு சுய பரிசோதனை. நம்முடைய தொழில் சம்பந்தப்பட்டதாகவோ, சமூக வாழ்க்கை, பொருளாதாரச் செயல்கள், இப்படி எதுவாகவும் இருக்கலாம். அது. எதனால் தள்ளிப் போடப்பட்டது என்று ஆராய்ந்தால் அதற்கான காரணம், பயம், சலிப்பு, களைப்பு, நன்றாக செய்ய வேண்டும் என்ற பேராவல் போனறவைகளாக இருக்கலாம். இல்லை என்றால் வேறு ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு, இதையெல்லாம் தள்ளிப் போட்டோமா என்பதைக் கண்டறிந்தாலே அதிலிருந்து, எளிதாக மீண்டு விடலாம்.


இரண்டாம் நிலையாக; மிக நன்றாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் எனற எதிர்பார்ப்பில்,   நிதானமாக நன்றாகச் செய்யலாமே என்று தள்ளிப் போடுவோம். ஒரு வேளை அது தகுதிக்கு மீறிய உயர்தரத்தை எதிர்பார்ப்பதாகக்கூட இருக்கலாம். அதனைக் கண்டறிந்து, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனைத் தவிர்த்தாலே, இது போன்று தள்ளிப் போடுதலை விட்டுவிடுவோம்.,  அதற்காக ஒழுங்கு முறையைக் கைவிட்டு விட வேண்டும் என்பது பொருளல்ல. அதிகப் படியான கவனம் தேவைப்படக்கூடிய பணியைக் கண்டறிந்து செயல்படுவதால் அவசியமான வகையில் நம் பொன்னான நேரத்தைச் செலவிட முடியும்.


அடுத்து மூன்றாம் நிலையாக, ஒரு வேலையை நாம் தள்ளிப் போடுவதற்கான காரணம் பல நேரங்களில் நம் அணுகு முறையால்தான். உதாரணமாக, வரவு செலவுக் கணக்கு போடுவது போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் பணியை இரவு 10 மணிக்கு மேல் ஓய்வெடுக்கும் வேளையில் செய்ய முனைவது.  குறிப்பிட்ட அந்த , வேலையைத் தள்ளிப் போடத் தூண்டுகிறது.
இது போன்று தொடர்ந்து தள்ளிப் போடுகிறோம் என்றால், அந்த வேலையச் செய்யும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டும் சலிப்படையச் செய்யக்கூடிய வேலைகளைச் செய்ய முற்படும் போது விடுமுறை நாளையோ, ஓய்வாக இருக்கும் நேரத்தையோ தேர்ந்தெடுத்து, மனம் விரும்புகிற நல்ல பாடலோ, பிடித்த உணவு வகைகளோ, பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்ய முற்பட்டால எப்படித் தள்ளிப் போடும் எண்ணம் வரும்? எந்த வேலையாக இருந்தாலும், அதை விருப்பத்துடன் உற்சாகமாக, நகைச்சுவை உணர்வுடன்,ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும். அப்படியும் செய்ய முடியவில்லையென்றால் வேறு ஒருவரது மூலமாகவாவது வேலையை முடிக்கப் பார்க்க வேண்டும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கப் பார்ப்பதால், அதை நிறைவேற்றுவதற்குரிய சக்தியையும், நேரத்தையும் விட அதிகமாகவே செலவிட வேண்டி வரும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.


சில நேரங்களில் நாம் மிகவும் விரும்பிச் செய்யக் கூடிய வேலைகளைக் கூடத் தள்ளிப் போட நேரிடுகிறது. உதாரணமாக நல்ல அழகான  ஓவியம் வரைந்து புதிதாகக் கட்டியிருக்கும்  நம்முடைய வீட்டின் வரவேற்பறையில் மாட்ட வேண்டும் என்ற ஆசை. நம்முடைய மற்றப் பணிகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக  தள்ளிப் போய்க்கொண்டே இருக்கலாம். தம்மைப் போன்றே இது போன்ற கலைகளில் நாட்டம் கொண்ட வேறு நண்பரையோ அல்லது பயிற்சி வகுப்பின் மூலமாகவோ ஊக்கச் சக்தியைப் பெற்று, மளமளவென வேலையை முடிக்க முயல வேண்டும். அப்படி முயற்சி எடுத்து ஒரு வேலையை முடிக்கும் பட்சத்தில் ,அதை நமக்குப் பிடித்த உணவோடு, குடும்பத்துடன், கொண்டாடலாமே.


சில நேரங்களில் ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதனால் அவமானப் பட்டுவிடுவோமோ அல்லது தவறாகப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகக் கூட, தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். இது போன்ற நேரங்களில் நாமே நன்றாக சிந்தித்து எதற்காக அஞ்சுகிறோம் என்பதைக் கண்டறிந்து, அதனைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும். முடியவில்லையென்றால், நண்பர்களிடம் ஆலோசனை பெற்றாவது, அக்காரியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும். அந்தக் காரியத்தின் மூலம் நமக்கு ஆதாயம் கிடைக்கும் என்று உணர்ந்தால் அதை எப்படியாவது முடிக்க முயல வேண்டும்.


அன்றாடம் நாம் முடிக்க வேண்டிய பணிகளை, நம் கைப்பட குறிப்பெடுத்து எழுதி வைத்துக்  கொள்ள வேண்டும்.

தேவையான ஓய்வு எடுக்கவும் தயங்கக் கூடாது. இல்லாவிட்டால்  அது வேலை செய்யும் நேரத்தை நம்மையறியாமலே கைப்பற்றிவிடும்.
மிகவும் சலிப்படையச் செய்யக் கூடிய நீண்ட வேலையாக இருந்தால், அதைப் பிரித்து ஒரு வாரத்திலோ அல்லது மாதக் கணக்கிலோ குறிப்பிட்டு நிர்ணயித்து சலிப்படையாமல் செய்து முடிப்பதற்கு வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.



நண்பர்களுடன் போனில் பேசுவது, படிப்பது, எழுதுவது, போன்ற மன உற்சாகம் அளிக்கக் கூடிய செயல்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து விசயங்களையும் உள் வாங்கி, செம்மையாக நம் கடமையை நேரந்தவறாமல் செய்யும் போது, வெற்றி நிச்சயம்தானே!


தொடரும் .

படங்களுக்கு நன்றி:


நன்றி : வல்லமை

2 comments:

  1. மிகச்சிறந்த பயனுள்ள கட்டுரை. பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அன்பின் திரு வை.கோ சார்,

    தங்களுடைய மனம் திறந்த பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete