Thursday, July 11, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (18)


பவள சங்கரி
மகிழ்ச்சியின் ஒரு வாயில் அடைபட்டால், அடுத்தது திறக்கிறது, ஆனால் நாம் மூடிய அந்தக் கதவையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காகத் திறக்கப்பட்ட மற்றொரு கதவைப் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. – ஹெலென் கெல்லர்.



வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அப்படியே எதிர்கொள்வோம்!
“சில நேரங்களில் நம் வாழ்க்கையில் வருவதை, எந்தத் தடுப்பு நடவடிக்கையோ, முன்கூட்டிய திட்டமோ அல்லது தீர்மானமோ என ஏதுமின்றி உள்ளது உள்ளபடி, அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நாம் தொடர்ந்து அந்த விளைவை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, தற்செயலான மற்றும் வளர்ச்சிக்கு மிகக் குறுகிய இடமே அளிக்கிறோம்”.
ஜீனைன் கேரோன்
சில நேரங்களில் வாழ்க்கை தொடர்ந்த பற்பல எதிர்மறை விளைவுகளை வரிசையாக ஏற்படுத்திக் கொண்டிருப்பதை உணருகிறோம். நம் பாதையில் இடருகிற மிகப்பெரும் தடைக்கற்களை எதிர்த்து அப்புறப்படுத்த நினைக்கிறோம். வாழ்க்கை பெரும் பாரமாகவும், மகிழ்ச்சியை மொத்தமாக கபளீகரம் செய்யக்கூடியதாகக்கூடத் தோன்றலாம்.

வாழ்க்கை என்றுமே ஒரு சவாலாகத்தான் இருக்கிறது. சில நேரங்களில் சலிப்பும் கூட ஏற்படுகிறது. ஆனால் அறிவுடைமை என்பது அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வதிலேயே இருக்கிறது. நம் வாழ்க்கையில் தடைகளும், தவிப்புகளும் தவிர்க்க முடியாத பகுதிகளே. அதிலிருந்து எவரும் தப்பிக்க இயலாது. ஆகவே நம் பாதையில் இடறும் எதையும் பொறுமையுடன் மற்றும் கௌரவத்துடன் கடக்கப் பழக வேண்டும். துன்பமோ அல்லது மன அழுத்தமோ நம்மைப் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. வாழ்க்கையின் அழகை முழுமையாக இரசிக்கத் தடையாக இருக்கும் அளவிற்கு எந்த ஒரு பிரச்சனையையும் தீவிரமாக உணரக்கூடாது. மகிழ்ச்சி என்பது எப்பொழுதும் நம்மைச் சுற்றியே இருப்பதால், அதனை உணர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபாடு கொள்ள அதனைப் பயன்படுத்திக்கொள்ளல் வேண்டும்.
“அனைத்துமே உங்களுக்கு எதிராகப் போவதாகத் தெரியும்போது, விமானம் காற்றோடு இல்லாமல் அதனை எதிர்த்துக்கொண்டுதான் மேலெழும்புவதை நினைவில் கொள்ளுங்கள்”, என்கிறார் ஹென்றி ஃபோர்ட்.


பேட்ரீசியா நாராயணன் , 54 வயதில், இன்று ஒரு மிகப்பெரும் தொழிலதிபர். பிறநாட்டு கூட்டமைப்பின் இந்திய வர்த்தகக் குழு மற்றும் தொழிற்துறைகளின் , (FICCI) ஆண்டின் சிறந்த பெண்மணி விருதை வென்றவர். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு 20 வயது இளம் பெண்ணாக அவர் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. ஆம், ஒரு குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன்னுடைய 20வது வயதில் இரண்டு குழந்தைகளுடன், வேலையில்லாத கணவனுடன் நடுத் தெருவிற்கு வந்துவிட்டவர். தன் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்தபடியே, உழைத்து தன்னையும், தம் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்தார். மற்ற சாதாரணப் பெண்களைப் போல சோகத்தில் மூலையில் முடங்கிவிடாமல், அடுத்தவருக்கு பாரமாக இராமல் துணிவுடன் தம் வாழ்க்கையை தாமே எதிர்கொள்ளத் துணிந்தார். அவருடைய பெற்றோர் இருவரும் நல்ல வருமானத்துடன் பணியில் இருந்தபோதும், அவர்களை அண்டிப் பிழைக்க விரும்பவில்லை அவர். எப்படியும் வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும், தீவிர ஆவலும்தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. சமையல் கலையில் நல்ல தேர்ச்சி பெற்றவர் பேட்ரீசியா. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தம்முடைய கைப்பக்குவத்தைப் புகழ்ந்ததன் விளைவு, அதையேத் தம் தொழிலாக்கிக் கொள்ளத் திட்டமிட்டார். ஊறுகாய், பழக்கூழ், என நண்பர்கள் மத்தியில் சிறிய அளவில் தம் வியாபாரத்தைத் தொடங்கியவர், பின்பு சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு தள்ளு வண்டியில் சிறிய உணவகத்தை ஆரம்பித்தார். அதற்கான உரிமம் பெற ஓராண்டிற்கும் மேலாக பெரும் போராட்டத்தை நடத்தினாலும், இறுதியில் வெற்றி வாகை சூடி, முதலில் வீட்டில் தயாரித்த கட்லெட், ரொட்டி,பஜ்ஜி, சமோசா, தேநீர், காப்பி மற்றும் சிறு தீனி வகைகளை விற்க ஆரம்பித்தார். இதற்காக அவர் தம் கணவர் மற்றும் ஐந்து உதவியாளர்களுடன், நாளொன்றுக்கு 16 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் வாழ்க்கையின் மற்ற கோர முகங்களையும் அவர் சந்திக்க வேண்டி வந்தது. 1991ல் அவருடைய திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது. இதிலிருந்து மீண்டு வருவதற்குள், 2004ம் ஆண்டில் தன் அன்பு மகள் பிரதீபா, திருமணம் ஆன கையோடு, தன் கணவனுடன் ஒரு சாலை விபத்தில் இருவரும் உயிரிழந்தது பெரும் சோகமாகிப் போனது. அதற்குப் பிறகு மகன் பிரவீண் தம் வேலையை விட்டுவிட்டு வந்து தாயுடன் உதவியிருக்கிறார். மருத்துவ ஊர்தியின் உதவி இல்லாத பகுதியில் அடிபட்டதால் தம் மகளையும், மருமகனையும் காப்பாற்ற முடியாமல் போனதால், அதிகமாக விபத்து நடக்கக்கூடிய அந்த இடத்திற்கு விரைவாக மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் ஊர்தி (ஆம்புலன்ஸ்) வாங்கிக் கொடுத்தார். 2006ம் ஆண்டில் சந்தீபா என்ற தன்னுடைய சொந்த உணவு விடுதியை திறந்தார். சென்னையில் வெற்றிகரமாக 19 கிளைகளைப் பரப்பிக்கொண்டு நிற்கிறது இன்று அது. ஐம்பது பைசாவில் ஆரம்பித்த அவருடைய ஒரு நாளைய வருமானம் இன்று ரூபாய் 200,000 என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. முயற்சியும், மன உறுதியும் மட்டும் இருந்தால் எந்தத் தடையையும் தகர்த்தெறிந்து வெற்றி வாகை சூட முடியும் என்பதற்கு பேட்ரீசியா ஒரு உதாரணம்.
வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு , நாம் நினைத்ததைப் பிடிக்க வேண்டும். அதுதான் அறிவாளிகளின் திறன். வாழ்க்கையின் இனிய தருணங்களைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதிர்படும் சிக்கல்களை கருணையுடன் ஏற்று அதை நம் மதிப்பை உயர்த்திக்கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணிக்கொள்ள வேண்டும். வெற்றி பெற்றால் அதைக் கொண்டாடுவோம். இல்லையென்றால் நாம் துணிவுடன் முயற்சி எடுத்ததற்கு மகிழ்ச்சி கொள்ளலாம். இது நம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், சுய மரியாதையையும் அதிகரிக்கச் செய்யும். அதே சமயம்  நல்ல அனுபவங்கள் மூலம் வாழ்க்கையின் உச்சத்தை அடைவதும் திண்ணம்.
வாழ்க்கையின் வெற்றி என்பது சொத்துக்களையும், கோடி, கோடியாகப் பணம் சம்பாதிப்பதிலும் மட்டும் இல்லை. நல்ல உறவுகளையும், நட்புகளையும் சம்பாதித்துக் கொள்வதிலும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதிலுமே இருக்கிறது. பல நேரங்களில் அதிகமாகச் சேரும் இந்த சொத்தும், பணமும் மிக எளிதாக உறவுகளையும், நட்புகளையும் விலக்கி வைத்துவிடுகிறது. தம்மிடம் உள்ள பணம் ஏமாற்றி பிடுங்கப்பட்டுவிடுமோ அல்லது கொள்ளையடிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே, அதையே காவல் காத்துக்கொண்டு ஒருவரையும் அண்ட விடாமல் தள்ளி நிற்பவரும் ஒரு வகையில் உறவில்லாத ஏழைகளே. இதனை உணருவதற்கும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருந்து தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் வெறுமை மட்டும் உறவாகிப்போக நல்ல உறவுகளுக்காக ஏங்கியே தீர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுபவர்களும் உண்டு. வாழும் காலத்தில் நல்லவைகள் அனைத்தையும் சிந்திந்து செயல்பட வேண்டியது முக்கியம் இல்லையா.
மன நிம்மதியே ஒருவருக்கு மிகப்பெரும் சொத்து. ஏனைய மற்ற சொத்தும், காசு பணமும் மட்டும் ஒருவருக்கு மன நிம்மதியை அளிப்பதில்லை!
மீண்டும் சந்திப்போம்
படங்களுக்கு நன்றி:

1 comment:

  1. வாழ்க்கையை அதன் போக்கிலேயே தொடர வேண்டும் உட்பட, சிறப்பாக முடித்துள்ளதும் அருமை... பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete