Friday, February 21, 2014

தோற்றப் பிழை



பவள சங்கரி



உள்ளத்தில் கள்ளம் புகுந்தால்
உறவுக்கும் உன்மத்தம் பிடிக்கும்
உள்ளதும் உள்ளமும் ஓய்ந்துதான்போகும்

விஷம்  கூட விருட்சமாய்
வீறுகொண்டு எழாதவரை
விகல்பமில்லாத அழகுதான்!

முள்ளம்பன்றியாய் உறுத்தும்
முயங்குமனம் குத்திக்கிழித்த
இதயத்தின் ஆறாத ரணம்.


கூடியிருந்து அகழ்வாய்ந்து
சாணக்யமாய் அகமகிழ்ந்து
வேதமோதுவதும்  உயிரின்வினை.

தோற்றம் என்றும் உரைப்பதில்லை
சத்தியத்தையும் தத்துவத்தையும்
மாசில்லா மகோன்னதத்தையும்.

வாழ்க்கைச் சதுரங்கத்தில்
அழிவிற்கு ஆசைப்படுதலும்
அவதிப்படுதலுமாகவே கழிகிறது

தப்போசையாய் ஒலிக்கும்
நப்பாசை கிளப்பிய மாசு
கந்தகமாய்த் தகிக்கும் மனசு.

ஆர்ப்பரித்துப் புரளும்  எதிர்பார்ப்பும் 
வெறுப்பூட்டும் ஏமாற்றமும் நட்பின்நச்சு 
பரிபூரண பரிமளிப்பின் வீழ்ச்சி.

கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்த தோண்டி
ஆத்தாடி மாஞ்ஞா போட்ட காத்தாடியாய்
சுத்தியடிக்குது கழுத்தையும் பதம்பார்க்குது!!



1 comment:

  1. அழிவிற்கும், ஆசைப்படுதலும், அவதிப்படுதலும் மாற வேண்டும்...

    ReplyDelete