Monday, February 24, 2014

பாரதியின் , THE FOX WITH THE GOLDEN TAIL சிறுகதை!



பவள சங்கரி


1914ம் ஆண்டு பாரதியாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உருவகக் கதை! உயரிய நடையில் எழுதப்பட்டுள்ள மிக அரிதான இந்நூலை தமிழ் மொழிபெயர்ப்புடன்  ஈரோடு டாக்டர். வெ. ஜீவானந்தம் அவர்கள் 1983ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளார்கள். இந்தக் கதையின் காலச் சூழல், உருவகங்கள், குறியீடுகள் பற்றிய விளக்கம் இன்றிப் படிப்போருக்கு புரிய வாய்ப்பில்லை.  ‘பொன்வால் நரி’ என்ற மொழிபெயர்ப்பு நூலில் வழி நாம் அறிந்து கொள்ள வேண்டியதைப் பற்றி பாரதியே தம் முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தம் அணிந்துரையில் திரு பெ.சு. மணி அவர்கள் குறிப்பிட்டுள்ளது: 

“ஆதிக்கத்தை எந்த வடிவிலும் ஏற்க மறுத்து எதிர்க்கும் பாரதியை ‘பொன்வால் நரி’யிலும் காண்கிறோம். “ஏனைய நரிகள் கழுதைகளின் தேசத்திலிருந்தும் வெறும் பொருளாதார லாபங்களையே குறிவைக்கையில் நானோ அவற்றின் மீது ஆன்மீக ஆதிக்கத்தையே எளிதில் பெற்றுவிட்டேன்” என பொன்வால் நரி எக்காளமிட்டதை பாரதி அம்பலப்படுத்தினார்”. 

திரு பெ.சு. மணி அவர்களின் மிகச்சுவையான அணிந்துரையை முதலில் பார்த்துவிட்டு கதைக்குள் போனால் மேலும் சுவை கூடும்போல் உள்ளது! இதோ அவருடைய அணிந்துரை:


ஒரு வரலாற்றுப் பின்னணி (பெ.சு.மணி)

பண்டைய கிரேக்கத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஈசாப் எனும் ஒரு அடிமையால் புனையப்பட்ட கதைகள் ஈசாப் கதைகள் என உலகப்புகழ் கொண்டன. மனிதர்களுக்குப் பதிலாக மிருகங்களை வைத்துப் புனையப்பட்டவை. ஈசாப் கதைகள்.  பாரதியாரின் நவ தந்திரக் கதைகளில் ஈசாப் கதைகளின் சாயல்களைக் காணலாம். பாரதநாட்டின் பஞ்சதந்திரக் கதைகளும் இவ்வகையில் உலகப்புகழ் எந்தியவை. பாரதியார், “பொன்வால் நரி” எனப்படும் ஆங்கிலக் கதையில் - மிருகங்களை வைத்து பின்னப்பட்ட கதையில் - பரபரப்பான தமது சமகால ஒரு நிகழ்ச்சியை தமக்கே உரிய ஒரு வழியில் விமர்சனம் செய்துள்ளார். 

பாரதியாரின் புகழ்பெற்ற “THE FOX WITH THE GOLDEN TAIL ” எனும் நையாண்டிச் சிறப்புமிக்க கதைக்கு ஓர் அரசியல் - ஆன்மீக வரலாற்றுப் பின்னணி உண்டு. இந்தப் பின்னணியின் மையமாகத் திகழ்பவர் அன்னி பெசண்ட் அம்மையார். இந்திய அரசியலிலும், ஆன்மீகத் துறையிலும் தனிச் சுவடுகளைப் பதித்தவர் அன்னி பெசண்ட் அம்மையார். ”ஹோம்ரூல்” இயக்கம் எனும் அரசியல் அமைப்பு வழியாகவும், ‘தியோசாபிகல் சொஸைடி’ எனும் ஆன்மீக அமைப்பு வழியாகவும் செல்வாக்கு பெற்றவர்.

திலகர், அரவிந்தர் தலைமையில் தோன்றிய தீவிரவாத தேசியத்தை அன்னிபெசண்ட் எதிர்த்தார். இதன் அதிர்விளைவாக தீவிர தேசியவாதிகள், பெசண்ட்டை கடுமையாகத் தாக்கினார்கள். குறிப்பாக தமிழகத்தில் பாரதி, சுப்பிரமணிய சிவா, வ.உ.சி. மூவரும் பெசண்ட் எதிர்ப்பியக்கத்தில் முன்நின்றனர். 

பாரதியாரின் “இந்தியா” வாரப் பத்திரிக்கை பெசண்ட்டின் அரசியலைச் சாடியது. 1908, அக்டோபர் 31ம் இதழில்  ‘அன்னியபெசண்ட்’ என்ற தலைப்பின்கீழ் அன்னி பெசண்ட் அம்மையார் இந்திய சுதந்திர விருப்பத்திற்கு எதிராகச் செய்துவந்த முயற்சிகளையெல்லாம் வரிசைப்படுத்திக் கூறினார்” என பாரதியாரைப் பற்றி பாரதி அன்பர் அமரர் பா.கோதண்டராமன் அவர்கள் புதுவையில் பாரதி (1980) எனும் அரிய நூலில் குறிப்பிட்டுள்ளார். 1909 ஜூன் 5-ல் ‘இந்தியா’வில் (பக்.9) “மிஸஸ் அன்னி பெஸெண்டுக்கும் அவள் இனத்தாருக்கும்” எனும் தலைப்பில் ‘கல்கி’ எனும் புனைப்பெயரில் (பிற்காலத்தில் எழுதிய கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அல்ல, இவர்) ஒருவர் பெசண்டை கடுமையாகத் தாக்கி எழுதினார். இதில் ஒரு பகுதி வருமாறு:

“சுதேசியம் முதலிய விஷயங்களில் பெனாரஸ் ஹிந்து மாணவர்கள் தலையிடக் கூடாதென்று கடுமையான உத்தரவு செய்தார்....... போதாதற்கு புல்லடிமைத்தனத்தையும் அனாரிய நாகரீகங்களையும் போதிக்க”இந்தியா புத்திரர்கள்” (sons of India) ”இந்தியா புத்திரிகள்” (Daughters of India) என்னும் சங்கங்களும் ஏற்படுத்தி வருகிறார். இவளது ஸ்மாஜங்கள் துப்பும் போலீசுக்குத் துணைபோன ஏற்பாடுகளே...  நாளாக நாளாக நம்மவர்கள் பேடித்தனத்தையும் கவர்மெண்ட்டின் கொடுங்கோன்மையையும் பார்த்துவரும் இவ்வம்மை வரவர நமது சுதேசியத்தையும் தேசாபிமானிகளையும் பிரத்தியஷமாக தூஷிக்கத் தலைப்பட்டுவிட்டாள்”

அன்னிபெசண்ட், அரவிந்தரைப்பற்றி லண்டனில் வெளியான, “டெய்லி கிராணிகல்” எனும் இதழில் வெளியிட்ட கருத்தையும் எடுத்துக்காட்டி ‘கல்கி’ மேலும் குறிப்பிட்டதாவது;

“.................. இவன் தான் வெள்ளையர் விரோத முயற்சிக்கு மூல ஹ்ருதயம்...... இவன் ஓர் அபாயகரமான மனிதன் பிரிட்டிஷ் இராஜங்கத்தைப் புரட்ட எவ்வித முயற்சியும் செய்யக்கூடியவன்............... நேயர்களே மேற்கூறியது அவளது சொந்த வசனங்களே. ஸ்ரீயுத அரவிந்தர் விடுதலையானதும் சில ஆங்கிலேயப் பத்திரிகைகள் இவரை தேசப் பிரஷ்டம் செய்யத் தூண்டும் , இச்சமயத்தில் அவரைப்பற்றி மட்டு மரியாதையின்றிப் பேசும் பேச்சைப் பார்த்தீர்களா! ஒரே சமுத்திரத்தில் அம்ருதமும் ஹால ஹால விஷமும் பிறந்தாற்போல் மிஸ்டர் பிராட்லாவும் இந்த அன்னி பெசண்ட்டும் உண்டானார்கள்”.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும், நாத்திகவாதத் தலைவருமான சார்லஸ் பிராட்லா, இந்திய தேசிய இயக்கத்தை ஆதரித்தவர். இங்கிலாந்தில் பிராட்லாவின் நாத்திக இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியவர் பெசண்ட். பிற்காலத்தி “ஹோம்ரூல்” இயக்கத்தைக் கொண்டு இந்திய தேசத்தை வளர்ப்பதில் திலகருடன் ஒத்துழைத்தார். புதுச்சேரியில் வெளியான, “விஜயா” (ஆசிரியர் பாரதி) எனும் நாளிதழும் பெசண்ட் எதிர்ப்பில் பங்கேற்றது. 

அக்டோபர் 30, 1909 ஆம் இதழில், ‘விஜயா’ அன்னி பெசண்ட் எதிர்ப்புப் பிரசாரத்தில் தியோசாபிகல் சொசைட்டியின் உட்குழு கொண்டாடிய ‘மகாத்மாக்களை’ பற்றிய கண்டனத்தை வெளியிட்டது. ‘செண்ட்ரல் ஹிந்து காலேஜ் மேகனஸன்” எனும் தமது இதழில் பெசண்ட் அம்மையார் அரவிந்தர் மீதான மகாத்மாக்களின் கருத்தை வெளியிட்டார். ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைக்க மறுக்கும் அரவிந்தர் போக்கு ‘மகாத்மாக்களுக்கு’ ஆத்திரமூட்டியதாம். (P.34 Native News Paper Report) இந்த மகாத்மாக்கள் பற்றிய செய்திகள் எல்லாம் பொய்யுரைகளே என்றும் ‘விஜயா’ சாற்றியது. 

தேசிய திரிசூலத்தின் (பாரதி - வ.உ..சி. - சிவம்) ஒரு முனையாகிய சிவம் அவர்கள் பெசண்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கான காரணங்களைத் தொகுத்து மிகக் கடுமையாகத் தாக்கி ஆயிரக்கணக்கில், “வந்தே மாதரம்” என்னும் துண்டறிக்கைகளை வெளியிட்டுப் பரப்பினார். இந்த அறிக்கையின் வாசகங்களைக் கண்டித்து பெசண்டின் நியூ இந்தியாவில்’ (28.5.1920) திரு ஏ.ரங்கசுவாமி அய்யர் என்பவர் எழுதியிருக்கிறார். 

1920 மே, 24, 25 தேதிகளில் சாத்தூரில் நடைபெற்ற மதுரை - ராமநாதபுர மாவட்ட அரசியல் மாநாட்டில் சேலம் பி.வி.நரசிம்மய்யர், வ.உ.சி., சிவம், பெசண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பெசண்ட் அம்மையார் கலந்துகொள்வதை எதிர்த்து ‘வந்தே மாதரம்’ குறிப்பிட்ட சில பகுதிகள் வருமாறு.

“அன்னிய வஸந்து” அணங்கு இப்பொழுது இங்கு கூடவிருக்கும் மாநாட்டிற்கு வருகிறாள். இவர் நமது தேசத்திற்கு வந்தது முதல் நமக்குச் செய்துள்ள தீங்குகள் எண்ணற்றவை....... 1907 - 08 வருஷங்களிலே நடந்த தேசிய கிளர்ச்சியில் இவ்வணங்கு சமூகத் தலைவர்களான ஸ்ரீமான்களாகிய திலகர், அரவிந்த கோஷ் முதலானவர்களைப் பலவாறு நிந்தித்து அக்கிளர்ச்சிக்கு விரோதமாகப் பல வேலைகளைச் செய்து அரசாங்கத்தாரோடு உறவு கொண்டாடினார். தாம் நடத்தி வந்த ‘செண்ட்ரல் ஹிந்து காலேஜ்’ பத்திரிக்கையில் அரவிந்த கோஷ் அவர்களை இந்தியாவைக் கெடுக்கவென்று பிறந்திருக்கும் சனீஸ்வரன் என்று படமிட்டு வர்ணித்தும் பழித்தார். .......

.............. தேசம் முழுவதும் மஹாத்மா என்று போற்றுகிற ஸ்ரீமான் காந்தியவர்களை ஆட்டுத் தோலுடுத்த சிங்கமென்று ஒரு சமயத்தும், அராஜகத்திற்கு வழி திறந்து காட்டுகிறாரென்று மற்றொரு சமயத்தும் ராஜீய விசயத்தில் ஸ்ரீமான் காந்தியவர்களை கழந்தையே என்று வாயில் வந்தபடியெல்லாம் பிதற்றியும், நிந்தித்தும், பரிகசித்தும் வந்திருக்கிறார். ....... பழுத்த தேசாபிமானியான ஸ்ரீமான் பால், அவர்களை தூற்றுகிறவரென்றும், நிந்ந்தனைக்காரரென்றும் பழி கூறியுள்ளார். இந்தியாவின் கண் போன்ற திலகர் மஹாராஜரையும் சென்னை மாகாணத் தலைவரான ஸ்ரீமான் கஸ்தூரி ரெங்கையங்கார் அவர்களையும் இந்தியாவின் அபிவிருத்திக்குப் பயங்கரமான இடையூறுகளென்றும் சொன்னார். தமிழ்நாட்டுத் தலைவரான ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை அவர்களை ஏதோ தன்னால் ஜெயிலுக்கு அனுப்ப முடியுமென்றும்: ஆனால் அப்படிச் செய்ய விருப்பமில்லையென்றும் கையினால் ஆகாத கைம்பெண் கூறுவது போலக் கூறியுள்ளார். ...... நமது தலைவர்களான திலகர் பெருமானென்ன, கபர்தே என்ன, இவர்கள் இவ்வணங்கை பூதனையென்று வர்ணித்திருக்கிறார்கள்”. 

தொடரும்

4 comments:

  1. திரு பெ.சு. மணி அவர்களின் அணிந்துரை அருமை...

    தொடர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க சகோ. தனபாலன்.

      Delete
  2. My interest in history is continues with your post.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க புனைப்பெயரில் அவர்களே.. வாருங்கள் அவசியம்.. விரைவில் மீதமும் தொடருவோம்!

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete