Sunday, April 27, 2014

புரியாத புதிர்


பவள சங்கரி


வெள்ளை நிறத்தில் ஒரு குட்டி
கரும்புள்ளியுடன் மங்கிய நிறத்திலொன்று
அடர்கருமை நிறத்தில் மற்றொன்று
செழுமை நிறத்திலொரு கெடா

காய்ந்த கானகத்தில் கம்பு மேய்ந்தபடி
அவ்வப்போது இடையனை நோக்கியபடி
மண்மேட்டில் கையணையில் சாய்ந்தபடி
பகற்கனவில் சுகமாய் இலயித்தபடி!

சொடுக்கி அழைத்தவனின் சோதியில்
சொக்கப் பானையாய் மெய்மறந்ததில்
நிறமற்ற தனிமனமொன்று தாவியதில்
வேலிமுள்ளில் சிக்கி சின்னாபின்னமானது

வெம்மையும் கருமையும் செம்மையும் 
சீவத்தில் ஒடுங்கும் சிவமாய் - பாவமாய்
கல்லையும் முள்ளையும் தாங்கிநிற்கும்
தவமாய் தவிப்போடு தவழும் கோலம்

புரியாத புதிர்களாகக் கடந்துபோகும் காலம்
புரியாதது எதுவும் தனக்கானது அல்ல - வேறு
புரிதலுக்காகக் காத்துநிற்பது புத்தொளிவீசுவது
புரிந்தும் புரியாத புதுமணம் பொன்மனம்.


1 comment: