Monday, September 1, 2014

ஆறில் ஒரு பங்கு - பகுதி (2)

பவள சங்கரி


“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று.  அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்திலென்ன இருக்கிறது? 

மீனாம்பா? - அட, போ! மீனாம்பாள் இறந்துபோய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே? .....  ஐயோ எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்?  ..... ” என்பதாக ஒரு க்ஷணத்திலே மனப்பேய் ஆயிரம் விதமாகக் கூத்தாடியதாம். 

பின் அவளைப் பற்றிய விவரங்களைத் தெளிவாகக் கூறும்படி ஸதீச பாபுவிடம் கேட்க, அவரும், கதையைச் சொல்லத்  தொடங்கியபோது, ‘ஒவ்வொரு வாக்கியமும் என் உள்ளத்திலே செந்தீக் கனலுள் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது’ என்கிறார்.  அவர் சொன்னது இதுதான்:


“அந்த யுவதிக்குத் ‘தாஞ்சோர்’. அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்கள் எல்லோரும் அவளைத் ‘தீன மாதா’ என்று பெயர் சொல்லி அழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனால் அந்தத் தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவ்ள் ஒரு போளீஸ் பென்ஷன் உத்தியோகஸ்தருடைய குமாரியாம். அவளது அத்தை மகனாகிய ஒரு மந்த்ராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டிருந்ததாம். அவ்வாலிபன் ’வந்தே மாதரம்’ கூட்டத்திலே சேர்ந்து விட்டான். அதிலிருந்து அவள் தகப்பன் அவளை வேறொரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில் அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று ஒரு பச்சிலையைத் தின்று விடவே, அவளுக்கு பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப் போய்விட்டது. அப்பால் தகப்பனாரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலனாகிய மந்த்ராஜ் வாலிபன், என்ன காரணத்தாலோ, அவள் இறந்து விட்டதாக எண்ணி, ஸன்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானாம்.”

“ஏழை மனமே, வெடித்துப் போய் விடாதே. சற்றுப் பொறு ” என்று என்னால் கூடியவரை அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. “ஐயோ, மீனா, மீனா!” என்று கூவினேன். பிறகு ’ஸதீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? சொல்லும், சொல்லும்’ என்று நெரித்தேன். 

கதை நாயகனின் பதட்டத்தைப் பார்த்த ஸதீச சந்திரருக்கு ஒருவாறு உளவு துவங்கிவிட, அவள் சௌக்கியமாகத்தான் இருக்கிறாள் என்று கூறியும் ஆற்றமாட்டாமல் தவித்துப் போனவன், பாரத தேவியின் ஹிருதயம் மற்றும் பகவத் கீதை மீதும் ஆணையிட்டுக் கேட்டதால் வேறு வழியின்றி கடுங்கோபத்துடன்,

“போமையா, மூட ஸந்யாஸி, என்ன வார்த்தை சொல்லி விட்டீர்! இதோ, உண்மை தெரிவிக்கிறேன். கேட்டுக் கொள்ளும். அந்தப் பெண், இங்கு நாம சூத்திரர்களைப் பஞ்சத்திலிருந்து மீட்கப் பாடுபட்டதில், தீராத குளிர் ஜ்வரங் கண்டு, வைத்தியர்கள் சமீபத்தில் இறந்து விடுவாள் என்று சொல்லி விட்டனர். அதற்கு மேல் அவள் காசியில் போய் இறக்க விரும்பியது பற்றி, அசுவினி பாபு அவளைக் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார், உண்மை சொல்லி விட்டேன், போம்” என்றார். 

காசியில் எந்த இடம் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, வழிச் செலவுக்கு பணம் ஏதும் இல்லாததால், அதையும் அவரிடமே கேட்டு வாங்குகிறான் நாயகன். வீசியெறிந்த பத்து ரூபாய்த் தாளை எடுத்துக்கொண்டு, “மானத்தைக் கண்டதார், மரியாதையைக் கண்டதார்?அங்கிருந்து அந்த க்ஷணமே வெளியேறிவிட்டேன். வழியெல்லாம் தின்பதற்கு நெஞ்சத்தையும், அருந்துவதற்குக் கண்ணீரையுமே கொண்டவனாய் காசிக்குப் போய்ச் சேர்ந்தேன்” என்கிறான்.

டாக்டர் ஸாஹப் இருக்குமிடம் கண்டறிந்து  அலறியபடி கோவிந்த ராஜன் அங்கு செல்கிறன். (நாயகன் பெயர் கோவிந்த ராஜன் என்று சொல்லப்படுகிறது). தன்னைப் பற்றி சொன்னவுடன், இவன் வருகைக்காகத் தான் காத்திருப்பதாகக் கூறுகிறார், பின், டாக்டர், ‘மீனா மிகவும் துர்ப்பல நிலையிலேதான் இருக்கிறாள். இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருப்பது கஷ்டம். அந்த நேரம் தப்பினால் பிறகு விபத்தில்லை” என்றார்.காதில் விஷந்தடவிய தீயம்பு போல இந்த வார்த்தை கேட்டது. 

 இவனை மேன்மாடத்திலுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச்சென்று, திரும்பி உட்கார்ந்து கண்ணை மூடச் சொல்லி, மாயமந்திரத்திற்கு உட்படுத்துவது தெரிந்தும், தவிர்க்க முடியாமல், இரண்டு நாட்களாக உறங்கிக் கிடக்கிறான். இது ‘பாரிஸால் கிழவன்’ செய்த கூத்து என்பதையும் அறிகிறான்.  கண் விழித்தபோது மனத்திலிருந்த ஜ்வரமும் நீங்கியிருக்கிறது. “ஓம்” என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். 

“பால ஸந்நியாசி, கபட ஸந்நியாசி, அர்ஜுன ஸந்நியாசி, உன் பக்கம் சீட்டு விழுந்தது” என்றார். மீனா பிழைத்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டேன்.

“முற்றிலும் சௌக்கியமாய் விட்டதா?” என்று கேட்டேன்.

“பூரணமாக சௌக்கியமாய் விட்டது. இன்னும் ஓரைம்பது வருஷத்திற்குச் சமுத்திரத்திலே தள்ளினாலும் அவளுக்கு எவ்விதமான தீங்கும் வரமாட்டாது” என்றார்.

அப்படியானால் நான் போகிறேன். அவள் இறந்து போகப் போகிறாள் என்ற எண்ணத்திலேதான் என் விரதத்தைக்கூட மறந்து, அவளைப் பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து அவளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் போய் வருகிறேன்” என்று சொன்னேன்.

அசுவினி பாபு சிரித்துவிட்டு, அவனுக்கு ஏதோ பால் கொண்டுவந்து கொடுக்கும்படி பணிக்கிறார். அதைக் குடித்த மறுகணம் திருக்குற்றாலத்து அருவியில் ஸ்நானம் செய்து முடிந்ததுபோல, எனது உடலிலிருந்து அயர்வெல்லாம் நீங்கிப் போய் மிகுந்த தெளிவும் சௌக்கியமும் அமைந்திருக்க, அவன், அவளை ஒரு முறை பார்த்துவிட்டு மட்டும் செல்வதாகக் கூறுகிறான். 

திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தா ரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், “மகனே, நீ மீனாம்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷிபத்தினியுமாக வேத யக்ஞம் செய்தது போல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதாவின் ப்ரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக் கடவீர்கள்” என்றார்.

”காளிதேவியின் கட்டளை என்னாகிறது?” என்று கேட்டேன். இந்த ஜன்மத்தில் நீ கோவிந்தராஜனை மணஞ் செய்து கொள்ளலாகாது என்று காளீ தேவி மீனாளுக்குக் கூறி அவளை விஷம் தின்னும்படியாகக் கட்டளையிட்ட செய்தியை அவருக்கு நினைப்புறுத்தினேன்.

அதற்கு அவர், ‘அந்த செய்தியையெல்லாம் நான் அறிவேன். மஹாஸக்தியின் கட்டளையை மீனாம்பாள் நன்கு தெரிந்து கொள்ளாமல் உனக்குக் கடிதம் எழுதிவிட்டாள். மீனாம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டுமென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலை தின்னும்படி கட்டளையிட்டது மீனாம்பாளுக்கு ஜ்வரமுண்டாய் தந்தை எண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே. அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினாள். ஆனால், மீனாம்பாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் நடக்கப் போகிறது என்ற தாபத்தால் படபடப்புண்டாகி உனக்கு ஏதெல்லாமோ எழுதி விட்டாள். நீயும் அவசரப்பட்டு, காஷாயம் தரித்துக் கொண்டு விட்டாய். உனக்கு ஸன்னியாஸம் குருவினால் கொடுக்கப்படவில்லை. ஆயினும் இதுவெல்லாம் உங்களிருவருடைய நலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது. உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப்பிரிவு அவசியமாயிருந்தது. இப்போது நான் போகிறேன்.இன்று மாலை நான்கு மணிக்கு பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீனாம்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்” என்று சொல்லிப் போய் விட்டார்.

மாலைப் பொழுதாயிற்று. நான் ஸன்யாசி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்கு உரிய ஆடை தரித்துக் கொண்டிருந்தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர், ஸ்த்ரீ ரூபங் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கு இதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது”

இப்படி கதை வந்தே மாதரம் சொல்லி முடிகிறது. 

இதனை  தடை செய்யப்பட்டிருப்பதன் காரணம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமலே முடிகிறது கதை....  பாரதியின் இந்த சிறுகதை தமிழின் முதல் கதை  என்றும் சொல்லப்படுகிறது. 

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment