Wednesday, August 5, 2015

முறமா - சல்லடையா - எது சிறந்தது?







அந்தத் தாய்க்கு தம் இரண்டு பெண் குழந்தைகள் மீதும் சம அளவிலான பாசம் என்றாலும், மூத்தவளுக்கு, எப்பொழுதும் தம் அன்னை  தமக்குப் பின்னால் பிறந்த இளையவளையே பாராட்டிப் பேசுகிறார்களே என்ற பொறாமை இருந்துகொண்டே இருந்தது. எதற்கெடுத்தாலும் அவளை உதாரணம் காட்டுவது மூத்தவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அம்மாவிடம் எப்போதும் சண்டை போட்டவாறு இருந்தாள். அன்று பொங்கல் திருநாள். தம் மகள்களுக்கு பரிசு கொடுக்க விரும்பிய தாய், அதில் சின்ன சோதனை வைக்க எண்ணி, ஒரு அறையில் இரண்டு பொருட்களை வைத்துவிட்டு, அதில் யார் எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதற்குத் தகுந்த பரிசுதான் கிடைக்கும் என்று சொல்லியனுப்பினார். முதலில் மூத்தவளை அந்த அறைக்குள் அழைத்தார். அவள் வந்து பார்த்தபோது ஒரு புறம் மூங்கில் செதில்களால் உருவாக்கப்பட்ட முறமும், மற்றொரு புறம் பளபளவென மின்னும் பித்தளை சல்லடையும் இருந்தது. பார்வைக்கு பளபளவெனத் தெரிந்த அந்த பித்தளைச் சல்லடையை சற்றும் யோசிக்காமல் எடுத்து வந்தாள் மூத்தவள். சரி என்று சொல்லி அனுப்பிவிட்டு இளையவளைக் கூப்பிட்டு எடுக்கச் சொன்னார் அந்தத் தாய். அவள் சற்று நேரம் சிந்தித்தவள், மெல்லச் சென்று முறத்தை எடுத்து வந்தாள்.  மூத்தவளுக்கு நமட்டுச் சிரிப்பு. விலையுயர்ந்த பொருளை எடுத்த தனக்குத்தான் விலையுயர்ந்த பரிசு கிடைக்கப் போகிறது என்ற இறுமாப்பு அவள் கண்களில் தெரிந்தது. பரிசு தரும் நேரம் வந்தது. முறத்தை தேர்ந்தெடுத்த இளையவளுக்கு விலையுயர்ந்த பரிசும், சல்லடையைத் தேர்ந்தெடுத்த மூத்தவளுக்கு குறைந்த மதிப்பிலான பரிசுமே கிடைத்ததது... ஏன் தெரியுமா?  

சல்லடையை விட முறம் ஏன் உயர்ந்தது தெரியுமா? சல்லடை நல்ல சுத்தமான பொருளை கீழே தள்ளிவிட்டு, கப்பியை தன்னிடம் சேமித்துக்கொள்கிறது... ஆனால் முறம் அப்படியில்லை. கழிவுகளை வெளியேற்றிவிட்டு, சுத்தமான நல்ல பொருளை மட்டும் தக்க வைத்துக்கொள்கிறது.. எது சிறந்தது நீங்களே சொல்லுங்களேன்...


No comments:

Post a Comment