Monday, May 30, 2016

கேழ்வரகு அப்பம்


கேப்பை, ராகி, ஆரியம் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கேழ்வரகு மிக சத்தானதொரு சிறுதானியம். இதில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைப்பதால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. கேழ்வரகு உணவு வகைகள் மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிப்பதால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை குறைக்க முடியும்.சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது. கேப்பையில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். அதோடு இதிலுள்ள தாவர வகை இரசாயனக் கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மற்றும் லெசித்தின் (Lecithin)மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றுவதோடு அதன் அளவையும் குறைக்கிறது. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தசோகையைக் குணப்படுத்துகிறது. மலச்சிக்கலை குறைக்கிறது.  உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களையும் குணமாக்குகிறது.
இதிலுள்ள சத்துகள்:

புஷ்டி-7.1%
கொழுப்பு-1.29%
உலோகம்-2.24%
கால்ஷியம்-0.334%
பாஸ்பரஸ்-0.272%
இரும்புச்சத்து -5.38%
விட்டமின் ஏ-70.
கேழ்வரகு அப்பம்
DSC_0742[1]
கேழ்வரகு அடை சற்று கெட்டியாக இருப்பதால் முதியவர்களும், குழந்தைகளும் சாப்பிட சிரமப்படுவார்கள். இந்த அப்பம் பஞ்சு போன்று மெதுவாக இருப்பதால் உண்பதற்கு எளிதாக இருப்பதோடு சுவையும் அபாரமாக இருக்கும்! கேழ்வரகு அப்பம், இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையாகவும் செய்யலாம். இதற்கு அடிப்படையாக முதலில் ஆப்ப மாவு தயார் செய்துகொள்ள வேண்டும். அந்த ஆப்ப மாவை 5 முதல் ஆறு மணி நேரம் புளிக்க வைத்து அதில் கேழ்வரகு மாவை சேர்த்து அடையாக வார்க்கலாம்.
ஆப்ப மாவு செய்முறை:
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 1 ஆழாக்கு
பச்சரிசி – 1 ஆழாக்கு
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
உளுந்து – 1/4 ஆழாக்கு
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
மேற்கண்ட பொருட்களை 2 மணி நேரம் ஊறவைத்து ஆட்டி எடுத்து தேவையான உப்பு போட்டுக்கொள்ளவும். மாவு ஆட்டியபின் ஆட்டுரல் அல்லது கிரைண்டரைக் கழுவிய தண்ணீரை கஞ்சியாகக் காய்ச்சி அதையும் அந்த மாவுடன் சேர்த்து கரைத்து வைத்து 5 முதல் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் அந்த மாவில் ஒரு பங்கு எடுத்து அத்துடன் இன்னொரு பங்கு அதே அளவு கேழ்வரகு மாவை கலந்து கெட்டியாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
இனிப்பு அப்பம்
DSC_0750[1]
நன்கு பொடித்த வெல்லம் தேவையான அளவு, தேங்காய் துருவல், தேவையானால் ஏலப்பொடி ஒரு சிட்டிகை என அனைத்தையும் கலந்து நன்கு கரைத்துக்கொள்ளவும். அதை மொத்தமாக ஊத்தப்பமாக ஊற்றி நெய் தேவையான அளவு ஊற்றி, மெல்லிய தீயில் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
கார அப்பம்
DSC_0755[1]
மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு அனைத்தும் கலந்து, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தோசையாக வார்த்தெடுக்கவும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, தக்காளி குழம்பு எதுவும் சுவையாக இருக்கும்.
சுவையான, சத்தான கேழ்வரகு அப்பம் தயார்.

நன்றி : வல்லமை

1 comment:

  1. கேழ்வரகு இனிப்பு தோசை என்று சொல்வோம். அப்பம் என்றால் எண்ணெயில் ஊற்றி எடுப்போம்.
    ஆப்பத்திற்கு செய்வது போல் செய்து இருக்கிறீர்கள்.
    நல்ல பஞ்சு போல் இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்லும் பக்குவத்தில் செய்து பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete