Sunday, July 10, 2016

‘அப்பா’வின் அருமை - (திரை விமர்சனம்)

பவள சங்கரி
வழக்கமான காதல், டூயட், சண்டை, இரட்டை அர்த்த வசனங்கள், இத்யாதி எதிர்பார்த்து ‘அப்பா’ திரைப்படம் செல்பவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சீராக உள்ளத்தை இறுக்கிப்பிடித்தபடி நகர்வதே இப்படத்தின் மாபெரும் வெற்றி எனலாம். கதை என்று பார்த்தால் நான்கு வரிகளில் சொல்லக்கூடிய சாதாரண கதைதான் என்றாலும் இயக்குநர் சமுத்திரக்கனி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டிவிட்டுப் போயிருக்கிறார். வித்தியாசமான காட்சியமைப்பு, நவீன யுக்தி, தொழில்நுட்பம் என்ற எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமலே உள்ளத்தை நிறையச் செய்திருப்பதற்கும், இப்படி ஒரு அப்பா எல்லா குழந்தைகளுக்கும் வாய்த்தால் நாட்டின் எதிர்காலம் தலை நிமிர்ந்து நிற்கும் என்று இயல்பாக எண்ணத் தூண்டியதற்கும் சமுத்திரக்கனிக்கு பாராட்டுகள்.  ஒரே சமயத்தில் அப்பாவாகிற மூவர்களான சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணன்  ஆகியோரைச் சுற்றியே பின்னப்பட்ட கதைதான். தன்னுடைய ஆசைகள், கனவுகள் என அனைத்தையும் மகன் மீது திணிக்கும் அப்பா - தம்பி ராமையா, தாழ்வு மனப்பான்மையில் தானும் உழன்று தம் மகனுக்கும் அதையே ஊட்டி வளர்க்கும் அப்பா - நமோ நாராயணன் ஆகியோர் வளர்ப்பினால் ஏற்படும் அபத்தங்களும், ஒரு நல்ல அப்பாவான சமுத்திரக்கனி தன் குழந்தைக்குக் கொடுக்கும் சுதந்திரம், தனித்தன்மை, ஆகியவற்றின் மூலம் நல்ல வளர்ப்பு, தவறான வளர்ப்பு என்பதன் வேறுபாடுகளை வெகு இயல்பாக எந்த மேல்பூச்சோ, முகமூடியோ இல்லாமல் சுட்டிக்காட்டியிருக்கிறார். 


குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தேவை, தேவையில்லை என்கிற வாதம் முடிவிற்கு வந்ததாக இல்லை. ஆனால் ஒரு அப்பாவைவிட வேறு எந்த பாடசாலையும் இந்த அளவிற்கு புரிதலுடன் எடுத்துரைக்க இயலுமா என்பது கேள்விக்குறிதான். ஒரு அப்பா தன் மகனுக்கும், ஒரு அம்மா தன் மகளுக்கும், தான் கடந்து வந்த பதின்மத்தின் இயற்கையான மனோ நிலையையும், சுரப்பிகளினால் ஏற்படும்  இம்சைகளையும் விளங்கவைக்க முடியாத விசயங்களையா பாடத்திட்டங்களும், பாடசாலைகளும் விளங்க வைக்கமுடியும்?  வசனங்களிலோ, காட்சியமைப்புகளிலோ, நடிப்பிலோ  எங்கும் துளியும் அதிகப்படியாகிவிடாமல், எந்த பொழுதுபோக்கு அம்சமும் இல்லாவிட்டாலும் துளியும் சலிப்பு தட்டாமல் இரண்டு மணி நேரம் கட்டிப்போட்டு வைத்துவிட்டார் எனலாம். ஒவ்வொரு பெற்றோரும், மாணவர்களும் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் இது. சில இடங்களில் சிறுவர்கள் வயதிற்கு மீறிய வசனங்கள் பேசுவதுபோல் தெரிந்தாலும் இன்றைய குழந்தைகளின் பேச்சில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதும் உண்மைதானே. ‘காதல்’ என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை என்ற காலங்கள் மலையேறிவிட்டதும், ஊடகங்கள் மூலமாக குழந்தைகளுக்கு அனைத்தும் அறிமுகம் ஆகிவிடுகிறபடியால் இதை குறையாகக் குறிப்பிட முடியவில்லை. இன்றைய காலத்திற்கேற்ப மிகத் தெளிவான சிந்தையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற வகையில் இயக்குநருக்கு பாராட்டுகள். இளையராஜாவின் இசை உறுதுணையாக படக்காட்சிகளை உச்சத்திற்கு எடுத்துச்செல்கிறது. ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா வெகு இயல்பாக காட்சியின் ஊடே பயணிக்கிறது. மனதில் நிற்கும் வசனங்கள் படத்தோடு ஒன்றிவிடச் செய்கின்றன என்றாலும் அது மிகையில்லை. இறுதிக் காட்சிகளில் இருக்கையின் நுனியில் அமரச்செய்து இதயத்தின்மீது ஏறிய பாறாங்கல்லை திரையரங்கை விட்டு வெளிவந்தவுடன் குளுகுளுவென்று ஒரு பனிக்கூழ் உள்ளே தள்ளியே வெளியேற்ற முடிந்தது! வெகு நாட்களுக்குப் பிறகு சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த திருப்தியுடன் வரமுடிந்தது! 

நன்றி ; வல்லமை

No comments:

Post a Comment