Saturday, October 22, 2016

தாய் மொழி!




உலகளாவிய ஆய்வு நிறுவனத்தின் முடிவுகளின்படி, குழந்தைகள், வாசிக்கவும், எழுதவும் கற்கவேண்டிய முதல் மொழி தங்கள் தாய்மொழி மட்டுமேதான்! குறைந்தபட்சம், ஒரு நிமிடத்திற்கு  45 முதல் 60 வார்த்தைகள் வரை சரளமாக வாசிக்க முடிந்தால் மட்டுமே அவர்களால் வாசித்த அந்த விசயத்தை முழுமையாக உள்வாங்க முடியுமாம். இத்தன்மை அவரவர்கள் தாய்மொழியால் மட்டுமே சாத்தியமாகுமாம். இந்த அடிப்படை ஞானம் வாய்க்கப்பெற்ற குழந்தைகள் மிக எளிதாக இரண்டாம் மொழியில் வல்லமை பெற்று சாதனையும் படைத்துவிடுகிறார்களாம்... பெற்றோர்கள் அவசியம் சிந்தித்துணரவேண்டிய விசயம்!


பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே மழலைப்பள்ளியில் படித்துவிட்டு வரும் வசதியான குழந்தைகள் 3000 வார்த்தைகள் கற்று வருகிறார்கள். ஆனால் வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் முதல் வகுப்பில் சேரும்போது 500 வார்த்தைகள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இங்கேயே இவர்களின் போராட்டம் ஆரம்பித்து விடுவதால் இரண்டாம் மொழி கற்பதில் இவர்களுக்கு பெரும் போராட்டம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை..

பொதுவாக ஒருவர் ஒரு நொடிக்கு ஒரு வார்த்தை வாசிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். வெளி வட்டாரம் அல்லது செயல்பாட்டு வாசகர்கள் என்றால் 1.5 நொடியில் ஒரு வார்த்தை வாசிக்க வேண்டும். இதைவிட மெதுவாக வாசிக்கும்போது இறுதியாகப் படித்து முடிக்கும் அந்த பத்தியின் முதல் வரியை மறந்தவர்களாகிவிடுகிறார்கள். குழந்தைகள் புதிய மொழி எழுத்துகளின் குறியீடுகளை அறிவதில் சிரமப்படுகிறார்கள். அவர்களால் போதிய விரைவில் வாசிக்க முடியாவிட்டால் அவர்கள் கவனம் முழுவதும் அந்தக் குறியீடுகளிலேயே நிலைத்துவிடுவதால் அந்தப் பத்தியின் கருத்துகளை உள்வாங்குவதில் கவனம் சிதறிப்போய்விடுகிறது. விரைவாக வாசிக்க முடியாத குழந்தையால், பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தையோ அல்லது ஆசிரியர் கற்பிப்பதையோ உள்வாங்க முடியாது. இப்படிப்பட்ட குழந்தைகளை வெகு எளிதாக ஒதுக்கி வைத்துவிடுகின்றன பள்ளிகள். எட்டு ஆண்டுகள் பள்ளியில் படிக்கும் குழந்தையை மக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள். இந்நிலை நம் இந்தியாவில்தான் மிகப்பரவலாக இருக்கிறதாம். உலக ஆய்வறிக்கை சொல்லும் வருத்தமான செய்தி இது...

மழலை மாறா இளம் சிறார்களுக்கு ஆங்கிலம் போன்ற இரண்டாம் மொழியை முதலில் கற்பிப்பதனால் அக்குழந்தை தம் தாய் மொழியில் தேவையான அளவு வேகமாக வாசிப்பதற்கு தடை ஏற்பட்டுவிடுகிறது. குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி மிகவும் இன்றியமையாதது. இரண்டாம் வகுப்பில் சரளமாக வாசிக்க இயலாத குழந்தைகள் உயர் வகுப்புகளில் சக மாணவர்களுக்கு நிகராக நன்கு வாசிக்கும் திறன் கொண்டிருப்பது சாத்தியமே இல்லாமலும் போகலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

No comments:

Post a Comment