Wednesday, January 25, 2017

குடியரசுதின நல்வாழ்த்துகள்!பவள சங்கரி
சுக்கா, மிளகா சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்? இதற்கு எத்துணை போராட்டங்கள், எத்துணை உயிர்த் தியாகங்கள். அனைத்தும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாறுகள்!
1930 ஆம் ஆண்டு, அதாவது 1947 ஆம் ஆண்டான, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே, பூரண சுதந்திரம் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சனவரி 26ஆம் நாளில் சுதந்திர தினம் கொண்டாடி விட்டோம். அது எப்படி நடந்தது ?

வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்தியக் கம்பெனி கபடதாரிகள் நம் இந்திய அன்னையை மெல்ல மெல்ல அடிமைச் சங்கிலி பூட்டி மக்களையும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களையும் வேட்டையாடிக் கொன்றுகுவித்த காலங்களில் நம் இந்தியத் திருநாடு அடிமைத் தளையிலிருந்து விடுபடும் முன்னரே நம் தேசத்தந்தை காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு, சனவரி 26ஆம் நாளன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு செய்தார்.
ஏன் அப்படி செய்தார்?
பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டு நம் இந்தியா வறுமையின் பிடியில் சிக்கி உழன்றுகொண்டிருந்த காலகட்டமான, 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் லாகூரில் அகில இந்திய மாநாடு கூடியது. அதில் ‘பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை செயல்படுத்துவதற்கான திட்டம் குறித்து காந்தியண்ணல் முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர எழுச்சி தீவிரமாகக் கனன்றுகொண்டிருந்த காலகட்டமும் இதுதான். இதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்களும் நடந்துகொண்டிருந்தன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று காந்தி எண்ணினார். அதனால் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்குவதை கைவிட்டார். தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் நாடு முழுவதும், 1930, சனவரி 26ஆம் தேதியன்று அமைதியான முறையில் சுதந்திர தினம் கொண்டாடலாம் என வேண்டுகோள் விடுத்தார். உள்ளூரில் இருந்த மற்ற காங்கிரசு தலைவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமங்களிலும் கூட்டம் கூட்டி காந்தியடிகளின் சுதந்திர தின உறுதி மொழி பற்றி எடுத்துரைத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதன் வாசகம் இதுதான்:
“நமது தாய்த்திரு நாட்டிற்கு, பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் என்ற நான்கு விதங்களிலும் துன்பம் விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது என்பது மனிதர்களுக்கும் ஆண்டவனுக்கும் செய்யும் துரோகம்” .
ஆக, சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே குடியரசு தினம் நம்பிக்கையாகக் கொண்டாடிய காந்தியடிகள் ஏற்படுத்திய அந்த சுதந்திர தின நாள்தான் சனவரி 26. சுதந்திரம் பெற்றபின் அந்த நாளையே குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். மக்களாட்சி மலர்ந்த அந்நாளையே குடியரசு தினமாகக் கொண்டாட, 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ஆம் ஆண்டு முதல் இந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாழ்க சனநாயகம்!
ஓங்குக இந்திய குடியரசின் புகழ் !!
http://www.vallamai.com/?p=74741

No comments:

Post a Comment