Sunday, June 21, 2020

காலைக்களிப்பு!




காலைக்களிப்பில் காகங்களும்

கரைந்திருக்கும் காலம்

ஏனோ அந்த சோடிக்குயில்களை

காணவில்லை வெகுநாட்களாக.

வலசைபோன இடத்தில் வருவாய்

அதிகமாகி வளத்தில் மூழ்கி

பெருவாய் வேண்டா புண்ணியத்தில்

கனிவாய் தனித்திருக்கிறார்களோ?

அவ்வப்போது அணில்பிள்ளை வந்து

 பரபரவென தேடிச்செல்வதும்

அதற்கு நான் சமாதானம்சொல்லி

தடவிக்கொடுத்தும் சமாதானமாகவில்லை

என்மனம் நடந்ததென்ன கவிக்குயிலே

கார்மேகம் மறைத்துக்கொண்ட நிலவைக்

காணாமல் ஏங்கும் மின்னற்கீற்று

விசிலடித்து ஊர்கூட்டும் தென்றல்காற்று

சலசலத்து தாளமிடும் ஓடைநீர்

சங்கீதம் கேட்டு கரணமிடும்

குட்டிக்குரங்கு கதகளி ஆடும்

வண்ணமயில் கீச்சிட்டு கதைகேட்கும்

சின்னச்சிட்டு என நாங்களெல்லோரும்

தவித்துக்கொண்டிருக்கும் தருணத்தில்

தொலைந்து போகமாட்டீர்கள்! உங்கள்

பச்சிலைச் சத்தியம் பசுமையாய்

எங்கள் உள்ளத்தில் பட்டொளியாய்

பொன்னான நேரத்திற்காய் காத்திருக்கும்

உங்கள் சகியைக் காத்தருளுங்கள்.

 

 


No comments:

Post a Comment