Friday, April 22, 2011

இரட்டை முகம்!

இரட்டை முகம்!

பனிக்காலம் முடிந்து கோடை தொடங்கி விட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை.கோடை மழை,வெப்பத்தைச் சற்று குறைத்ததனால் அசந்து தூங்கி விட்டாள் செல்வி. மேற்கூரையின் வேய்ந்த ஓடுகள், இரவு அடித்த பேய் மழையும், காற்றும் சேர்ந்து லேசான இடைவெளி விட்டிருந்தது. அதனூடே மெல்ல எட்டிப் பார்த்த கதிரோனின் வீச்சில் ஒரு வரி முன்னெற்றியிலும், இடது கண்ணிலும், ஒடுங்கிய கன்னத்திலும் பட்டு, ஆழ்ந்த நித்திரையிலிருந்தவளை முகச் சுளிப்போடு விழிக்கச் செய்தது.

அடடா, வெய்யில் வந்துவிட்டதா....நேரம் போனதே தெரியவில்லையே! வேலைக்குப் போகனுமே என்று வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள் செல்வி. வீடே நிசப்தமாக இருந்தது ஏன் என்று தெரியவிலை. அம்மாவும், அண்ணனும் வேலைக்குச் சென்றிருப்பார்களோ....

அண்ணன் பெயிண்டர் வேலைக்கும், அம்மா சித்தாள் வேலைக்கும் போவதனால், காலை 8 மணிக்குள் கிளம்பாவிட்டால் மேஸ்திரியிடம் சென்று வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பேருந்து மாறி செல்ல வேண்டும். ஆகவே நேரத்தோடு இருவரும் இளம்பி விட்டார்கள் போல

பணிக்குச் செல்ல நேரம் கடந்து விட்டது, விரைவில் கிளம்ப வேண்டும் என மனம் பணித்தாலும், உடல் அசைந்து கொடுக்கவில்லை..........
--
’என்னது... இது உடம்பு இவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு இரவிற்குள் அப்படி என்னதான் ஆகியிருக்கும். அடித்துப் போட்டது போல அசதி வேறு...தலைப்பாரம். தன் மீதிருந்து தனக்கே அனல் வீசுவது போல..பிரம்மையோ?’

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது, இரவு ப்டுக்கப் போகுமுன் அம்மா சொன்னது.

‘செல்விம்மா, உடம்பு அனலா கொதிக்குதும்மா. காய்ச்சல் நிறைய இருக்கும் போல, இந்த கஞ்சியை குடிச்சிப்பிட்டு மாத்திரையை போட்டுக்கிட்டு படுத்துக்க சாமி.. நாளைக்கு முடிஞ்சா வேலைக்குப் போ, இல்லாட்டி வயித்துக்கு கஞ்சியை குடிச்சிப்பிட்டு நல்லா தூங்கு. டாக்ட்ர் ஊட்டு அம்மாகிட்ட நான் சொல்லிப்புடறேன்...நீ வேலைக்குப் போகத் தேவல..’

‘இல்லம்மா. டாக்டர் வீட்டிற்கு ஒறம்பற [விருந்தாளிகள்] வந்திருக்காங்க...இன்னைக்கு லீவு எடுத்தா அந்தம்மா கண்டபடி கத்தும். நாளைக்கு மின்னைக்கு அந்தப் பக்கமே போவ முடியாது’

கஸ்தூரிக்கு பதில் பேச முடியவில்லை. அவளுக்கும் தான் அந்த டாக்டர் ஊட்டு அம்மாவைப் பத்தி தெரியுமே. ஒரு நாள் வேலைக்குப் போகாட்டாலும் ஆளு வந்துவிடும். வாட்ச்மேன் ஐயன் வந்திடுவாரே கையோடு கூட்டிச் செல்வதற்கு. அந்த டாக்டர் வீட்டு அம்மா பேசுகிற பேச்சு தெருவையே கலக்கும். அந்த அம்மாவின் கடுஞ் சொல்லிற்கு அஞ்சியே அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வர பலரும் அஞ்சுவர். இத்தனைக்கும், சம்பளம் என்று பார்த்தால், மற்ற வீடுகளில் கொடுப்பதை விட ஒரு பங்கு அதிகமாகவே கிடைக்கும். ஆனால் அதற்குத் தகுந்த வேலையும் இருக்கும். அந்த அம்மாவிற்கு வீடு பளபளவென கண்ணாடி போல இருக்க வேண்டும். வீட்டைக் கூட்டி மெழுகி முடித்தவுடன், காலிலிருக்கும், காலணியை (வீட்டில் பயன் படுத்தும் பிரத்யேக காலணி) கழட்டி வைத்து விட்டு, தேய்த்து, தேய்த்து நடந்து பார்ப்பார்கள். ஒரு சிறு மண் துகள்களோ, குப்பையோ காலில் பட்டால் அவ்வளவுதான்.....வசவு ஆரம்பித்து விடும். ’என்னத்த வீடு கூட்டுற.....’ என்று பெரும் பாட்டாக வரும்.

அழகான அந்த கரும் பசசை வண்ண பளபளக்கும் கிரானைட் கல் எங்கேனும் ஒரு துளி அழுக்கு இருந்தாலும் போதும் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்து விடும். இனி தாமதிக்க முடியாது என்ற ஞானோதயம் வர, சட்டென ஒரே மூச்சில் தம் கட்டி எழுந்திருக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றாள். மெதுவாக அப்படியே பொடக்களைப் பக்கம் சென்றவள் தட்டியின் கயிற்றுத் தாழ்ப்பாளை மெதுவே உறுவி, ஒடுங்கிப் போன ஹைதர் அலி காலத்திய அலுமினிய குவளையை எடுத்து தண்ணீர் மோந்து, கோபால் பல்பொடி போட்டு பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்து விட்டு தள்ளாடியவாறு வேளியே வந்தாள்.(வழக்க்ம் போல இன்றும் சம்பளம் வந்தவுடன் முதல் வேலையாக இந்த ஓட்டை குவளையை மாற்றி பிளாஸ்டிக் மக் வாங்க வேண்டும்) என்ற உறுதி மொழியோடு கழிவறையை விட்டு வெளியே வந்தாள்.

அம்மா கலையத்தில் வைத்துச் சென்ற கஞ்சி அவளைப் பார்த்து சிரித்தது......

‘நல்ல நாளிலேயே உனக்கு என்னைக் கண்டால் ஆகாது. இன்று காய்சல் அடித்த வாய் வேறு...கசப்பு கொடுக்கத்தானே செய்யும். என்னைச் சீந்தவா போகிறாய்’ என்பது போலப் பார்த்தது....

செல்வியோ, வெறும் வயிற்றில் மாத்திரை போட முடியாதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு நான்கு வாய் கஞ்சியைக் குடித்துவிட்டு மாத்திரையைப் போட்டுக் கொண்டாள். டாக்டர் வீட்டில் வேலை செய்வதில் இன்னொரு புண்ணியம், சகல வித வலிகளுக்கும் நிவாரணிகள் இலவசமாகக் கிடைக்கும்......எப்ப்டியோ டாக்டர் வீட்டிற்குப் போனால் சாப்பிட ஏதாவது மிஞ்சிப் போன காலைப் பலகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

மாத்திரை போடவும், காய்ச்சல் கொஞ்சம் குறைந்து வேர்த்து விட்டது. வேலைக்குக் கிளம்பத் தயரானாள். அப்போதுதான் அவர்கள் வீட்டின் விருந்தாளியாக வந்திருந்த அந்தப் பையனின் கழுகுப் பார்வை அவளுக்கு நினைவிற்கு வந்து சங்கடப்படுத்தியது..... பாழாய்ப்போன பதின்ம வயதின் பளபளப்பு....பன்னிக்குட்டிக் கூட அழகாய்த் தெரியும் பருவம்...

பதின்மம்.. ஒட்டிய கன்னமும், மாநிற்முமாக இருந்தாலும், பூசியவாறு சதையும், லேசான பளபளப்பும், உடல் முழுவதும் பெரும் மாற்றத்தின் துள்ளலும் பார்க்கின்ற வக்கிரமான கண்களுக்கு தீனிப் போடத்தான் செய்கிறது....எங்கு சென்று எதை மறைப்பது...எப்படி மறைப்பது. அந்தப் பார்வையின் வீச்சு தாங்காமல், ஆடையே நழுவி வீழ்ந்ததுபோல் கூனிக் குறுகி, இந்த வேதனை பாழாய்ப்போன அந்த கழுகுக் கண்களுக்குத் தெரியவா போகிறது.... குனிந்து வீடு பெருக்கக் கூட சங்கோஜம்....எங்கிருந்தோ இரண்டு புண்கள் [கண்கள்] தன்னையே நோட்டம் விடுவது போல ....சே,என்ன கொடுமை இது. இன்னும் எத்தனை நாள் இந்தக் கழுகு அங்கே இருக்கும் என்று தெரியவில்லையே,சென்று ஒழிந்தால் தேவலாம் போல இருந்தது அவளுக்கு..ஏழ்மையின் ரணத்தைவிட இந்தக் கொடுமை சற்று அதிகம்தான். அம்மாவிடம் சொன்னால் பாவம் ரொம்பவும் வருத்தப்படுவார்கள்.

அம்மாவிற்கு என்னமோ தன் செல்ல மகள் ஆபீஸ் உத்தியோகம் பார்ப்பது போல ஒரு நினைப்பு.. தன்னைப் போல வெய்யிலிலும், மழையிலும், கல் மண் சுமந்து சிரமப் படக்கூடாது என்றுதானே தன்னோடு வேலைக்கு வரக்கூடாது என்று பிடிவாதமாக டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டார்கள்.

அங்கேயும் இப்படி ஒரு பிரச்சனை என்று சொன்னால், அம்மா பாவம் என்ன செய்ய முடியும்? வேலையை தூக்கி எறிந்துவிட்டு வா என்று சொன்னாலும்,இது போன்ற கழுகுகள் இல்லாத இடம்தான் ஏது? எவ்வளவு நாள் ஓடி ஒளிய முடியும். சரி இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்பது புரிய,பரபரவென புறப்பட ஆயத்தமானவள், அன்று ஏனோ முதல் முறையாக துப்பட்டாவைத் தேட ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போகிற அவசரத்தில் பெரும்பாலும் துப்பட்டாவை மறந்து விடுபவள், புதிதாக இருந்த துப்பட்டாவை எடுத்து அழகாக போட்டு,மறக்காமல் பின் குத்தி வைத்தாள். வீட்டை பூட்ட மறந்தவள், நாலு எட்டு எடுத்து வைத்தவுடன் நினைவுவர, திரும்ப ஓடி வந்து சாவியை எடுத்து பூட்டிவிட்டு அதை எறவானத்தில் சொறுகி விட்டு, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே, இந்த பொக்கிச அறைக்கு ஒரு பூட்டு, அதற்கு ஒரு சாவி வேறு என்று நினைத்துக் கொண்டே, பரபரவென நடக்க ஆரம்பித்தாள். நாலு எட்டு வைத்தவுடன், வாட்சுமேனை பார்த்து விட்டாள்.

‘ என்னாச்சு, இவ்வளவு நேரமா, வேலைக்கு வர, அம்மா கோபமா இருக்காங்க...’

‘அண்ணே, நேத்தெல்லாம் ஒரே காய்ச்சல். இப்போதான் மாத்திரை போட்டுக்கிட்டு வரேன்’

‘சரி சரி, ஆனா விருந்தாளிக வந்திருக்கிற நேரத்தில இப்படி லேட்டா வந்தா திட்டுவாகல்ல’

‘ஆமாண்ணே, அதான் பயம்மா இருக்கு’

‘சத்தமில்லாம போய் வேலையைப் பாரு, விருந்தாளிங்க முன்னாடி ரொம்ப வைய மாட்டாக’

‘ சரிண்ணே......’

வீட்டிற்குள் காலடிவைக்கும் போதே கொல்லென்ற சத்தம். அனைவரும் பட்டாசாலையில் உட்கார்ந்து சினிமா படம் பார்த்துக் கொண்டு சத்தம் பண்ணிக் கொண்டிருந்தனர். நல்ல வேளை இந்த சத்தத்தில் அம்மா திட்டினால் கூட இவர்களுக்கு காது கேக்காது......சத்தம் நல்லதுதான் என்று எண்ணிக் கொண்டே மெதுவாக சமயலறைப் பக்கம் சென்றாள். எப்படியும் திட்டு விழும் என்ற பயத்துடனேயே மெதுவாக அடி மேல் அடி வைத்து சென்றாள். எந்த சாமி புண்ணியமோ, அம்மா திட்டுகின்ற மூடில் இல்லை. திரும்பி, ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு, முறைத்து விட்டு, திருப்பிக் கொண்டார்கள். என்ன நினைத்தார்களோ,

‘ ஏய் இங்க வா, என்ன குளிக்கலையா....நேத்து உடுத்தின துணியோட வந்திருக்க...அதுவும் புதுசா துப்பட்டாவெல்லாம் போட்டுகிட்டு., ஒரு மார்கமாத்தான் இருக்க.....பெரிய அழகு ராணியா நீங்க..... உங்க அழகை பாத்து இங்கே எல்லாம் கண்ணு வைக்க க்யூவுல நிக்கிறாங்களாக்கும்’இதுல ஒன்னியும் குறைச்சல் இல்ல. இந்த புத்தியெல்லாம் வந்தா நீ எங்கெ ஒழுங்கா வேலை செய்யப் போற... போ..போ...போய் பாத்திரத்தை சட்டுனு கழுவி எடுத்துட்டு வா..’

கொல்லைப்புறம் மலையாகக் குவிந்து கிடந்தது பாத்திரங்கள். மலைப்பாக இருந்தது....எப்பத்தான் கழுவி எடுக்கப் போறோமோ, கடவுளே.....வெய்யில் வேற.தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. இருந்தாலும்,அந்தக் கழுகுப் பார்வைக் கரடிக்கு இந்த சூரிய பகவானின் உஷ்ணமே தேவலாம் போல இருந்தது. மெதுவாக பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தாள்.

‘செல்வி....என்ன பண்றெ அங்கே.. சட்டுனு கழுவி எடுத்துட்டு வா பாத்திரத்த...வீடு கூட கூட்டாம கிடக்கு..’

அடக் கடவுளே, வீடு பெருக்கி துடைக்க வேண்டுமா.. அந்த நாய் போய் தொலைச்சப்புறம் கூட்டலாம் என்றால் இந்த அம்மா வேற.. இதுகிட்டசொன்னா புரிஞ்சிக்கவா போகுது.... என்னையே திட்டும் திருப்பி..

விதியை நொந்து கொண்டு சாமான்களை கழுவி திட்டுமேல் தண்ணீர் போக கவிழ்த்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தமாக அலம்பிவிட்டு, பாத்திரங்களை துடைத்து உள்ளே எடுத்துச் சென்றாள். நன்கு பளபளப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் அந்த அம்மா திருப்பி, திருப்பி எங்காவது அழுக்கு கண்டுபிடிக்க ஆலாய்ப் பறக்கும்.......

’செல்வி.....வந்துட்டியா, சரி எல்லாத்தையும் இங்கே வைத்துவிட்டுப் போய் சட்டுனு வீட்டை சுத்தம் பண்ணு’

‘சரிங்கம்மா...’

’ என்ன...ஏன் இழுத்துக்கிட்டு நிக்கற போய் வேலையைப் பாக்கலாமில்ல’

‘ இல்லம்மா...கொஞ்சம் தலை வலியா இருக்கு, கொஞ்சம் டீ தறீங்களா..’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

‘ வந்ததே லேட்டு, இது வேறயா..வரும் போது குடிச்சிடு வரலாமில்ல,..சரி இரு தறேன்..’

சூடான, டீ தலை வலியை சற்று போக்கியது. அதெல்லாம் அம்மா நல்ல டீதான் தருவாங்க....ஒவ்வொரு வீட்டில வீட்டுக்காரங்களுக்கு தனியா,நல்ல டீயும், வேலைக்காரங்களுக்குத் தனியா தண்ணி டீயும் போடுவாங்க. ஆனா அம்மா அந்த விதத்துல ரொம்ப நல்லவங்க. அவிங்க என்ன சாப்பிட்றாங்களோ அதைத்தான் எனக்கும் தருவாங்க..

கடவுளே அந்த பையன் எங்காவது போய் தொலைஞ்சிருக்கனுமே...வீடு பெருக்கி, மொழுகுற வரைக்குமாவது இல்லாம இருந்தா தேவலையே....

அப்பாடி...ஆளைக்காணோம். சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு போக வேணும். சரியா செய்யாட்டாக் கூட பரவாயில்ல...இன்னைக்கு அம்மாகிட்ட திட்டு வாங்கினாலும் பரவாயில்ல...எப்படியோ வேலை முடிஞ்சா சரி.

அப்பாடி, இத்தனை பெரிய ஹால், கூட்டி மெழுகறதுக்குள்ள இடுப்பே க்ழண்டு போகுது சாமி......ஆச்சு இன்னும் இரண்டு அறைதானே, பெரிய வேலை முடிஞ்சிடும்..

அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.சாதாரணமா போற போக்கில செய்யற வேலையெல்லாம் இன்னைக்கு இவ்வளவு சிரம்மா இருக்கு.. எல்லாம் இந்த காச்சல் படுத்துற பாடு..ம்ம்.....

குச்சியில் துடைத்தால் அழுக்கு போகாதாம், அதனால் துணியை வைத்து நன்றாக குனிந்து, அழுத்தி துடைக்கனும் அப்பத்தான் நல்லா அழுக்கு போகுமாம்...

படுக்கை அறை திறந்துதான் இருந்தது. போய் கூட்டி மொழுகிடலாம் என உள்ளே சென்றாள். அலங்கோலமாகக் கிடந்தது அறை. குளியல் அறையில் தண்ணீர் சத்தம். யாரோ குளிப்பார்கள் போல.....சீக்கிரம் அவுக வரதுக்குள்ள வேலையை முடிச்சிபிடலாம் என அவசர அவசரமாக கூட்டி முடித்தாள். மொழுகுவதற்காக துணி எடுத்து அலசிப் பிழிந்து குனிந்து மொழுக ஆர்ம்பித்த போது......

முதுகில் ஏதோ குறுகுறுப்பாக உணர முடிந்தது.சோப்பு வாடை வேறு கும்மென வந்தது.....ஏதோ புரிந்தது போல திரும்ப யத்தனிப்பதற்குள்.. அந்த முரட்டு உருவம் அவள் மீது பாய, தன்னால் முடிந்த மட்டும் பலமாக தள்ளி விட்டவள், ஒரு கணமும் தயங்காமல், துணியை அங்கேயே வீசி விட்டு ஓடினாள். இதற்கு மேல் பேசாமல் இருந்தால் தப்பாகிவிடும் என்று அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஓடினாள்.

அம்மா சமயலறையில் அவசரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். சென்ற வேகத்தில் அம்மா.....என்று மிகவும் பரபரப்பாக அதே படபடப்புடன் கூப்பிடவும், என்னவோ ஏதோவென்று படாரென திரும்பியவர் கையில் இருந்த வெண்ணெய் போல, அதை அப்படியே ச்மயலரை சிங்க்கில் கொட்டிவிட்டார்கள். செல்விக்கு கை காலெல்லாம் நடுங்கி விட்டது....

அந்த அம்மாவோ அவள் சொல்ல வந்ததைக் கேட்காமல் வெண்ணெய் கொட்டி விட்டதே என்ற கோபத்தில், ‘அடி நாயே, அறிவில்லை. எதுக்கு அப்பிடி கத்துற’ என்று சொல்லிக் கொண்டே,

அடடா இத்தனை வெண்ணெய்யும் கொட்டி விட்டதே. சிங்க் வேற கழுவவே இல்ல...சொல்லிக் கொண்டே அந்த வெண்ணெயை அப்படியே அள்ளி பாத்திரத்தில் போட்டு கழுவ ஆரம்பித்தார்கள். இதனைக் கண்ட செல்விக்கு பேரரதிர்ச்சியாக இருந்தது...சுத்தம், சுத்தம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் இப்படி தொட்டிக்குள் விழுந்த வெண்ணெயை எடுத்து வைத்துக் கொள்கிறார்களே.......

தான் சொல்ல வந்ததை இனிமேல் இவர்களிடம் சொல்லி ஆகப் போவது ஒன்றுமில்லை என்று முடிவு செய்தவள், வாய் பொத்தி மௌனமானாள்..


பவள சங்கரி திருநாவுக்கரசு.

Wednesday, April 20, 2011

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில்


அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் - ஆனைமலை - பொள்ளாச்சி.


8.jpg

மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உறையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் குடி கொண்டுள்ள மற்றைய தெய்வங்கள், மகா முனீஸ்வரர் மற்றும் நீதிக்கல் தெய்வம்.

மாசாணி அம்மனின் திரு உருவம் மிகவும் தனிப்பட்ட வடிவுடைய ஒன்றாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மன், 15 அடி உயரமானபொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி கொடுப்பதைக் கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமானக் காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம் . நான்கு கைகளில. இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு,மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.

pict2032.jpg

அன்றாடம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அன்னையை தரிசித்த வண்ணம் உள்ளனர். அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த கோவிலில் ஒரு பிரத்யேகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் பாதத்தில் பூசாரியின் மூலம் சமர்ப்பிக்கும் போது, அன்னை தங்கள் உண்மையான ஆழ்ந்த பக்தியைக் கண்ணுற்று, தங்கள் குறைகளுக்குச் செவி சாய்த்து அதனை மூன்று வாரங்களில் நிவர்த்தி செய்து விடுவதாகவும் நம்பிக்கை பரவலாக உள்ளது.

இந்த கோவிலின் மிக சுவாரசியமான விசயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளகாய் போட்டு அரைப்பார்கள்.அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழந்த பக்தியுடன் பூசுவார்கள்.இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் நம்புகின்றனர் .

pic4.jpg


இத்தலத்தின் வரலாறு :

இது சங்க காலத்தில் உம்பற்காடான, ஆனைமலையில் நடந்த கதை. இந்த பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தான்.

6.1.jpg

ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெணகள் குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து போனவளாக, அதனை உண்டுவிட்டாள். இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்தரவிட்டான். அப்பெண்ணின் தந்தை அதற்குப் பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டான்.பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தப் பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளாள். மக்கள் அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு , வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போக்கில் அது மருவி, மாசாணி என்றாகி உள்ளது.

இதே மாசாணி அம்மன், ஸ்ரீ ராமர் காலத்துடன் சம்பந்தப்படுத்தி சொல்லப்படுகிறது. விசுவாமித்திர முனிவர் கடகனாச்சி மலையில் யாகம் நடத்துவதற்கு முடிவெடுத்த போது, தீய சக்திகள் கொண்ட தடகா என்ற அரக்கன், அந்த மலையை வேட்டையாடி, முனிவரின் யாகத்திற்கும் ஊறு விளைவித்தான். ஆகவே விசுவாமித்திரரின் வேண்டுதலின் பேரில், தசரத மன்னன் ராம, இலக்குவனை முனிவருடன், யாகத்தைக் காக்கும் பொருட்டு அனுப்பி வைத்தார். பார்வதி தேவி ராம இலக்குவன் முன் தோன்றி, அந்த அரக்கனை அழிப்பதற்கு சக்தியையும், ஆசியையும் வழங்கி, அந்த அரக்கன் கொல்லப்பட்டவுடன், அந்த சிலையை அழித்து விடும்படியும் கூறினார். ஆனால் ஸ்ரீராமரோ அந்தச் சிலையை அழிக்க மறுத்து மக்களைக் காக்கும் பொருட்டு அங்கேயே விட்டு வைத்தார். அந்த பார்வதி சிலைதான் மாசாணி அம்மன் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீராமர் சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கைக்குச் செல்லும் வழியில் மாசாணி அம்மனை தரிசித்து, யாகம் நடத்தி, அந்த மயானத்தில் பூசை செய்யவும், மனம் குளிர்ந்த மாசாணி நேரில் தோன்றி ராவணனுடனான போரில் வெற்றி பெற ஆசி கூறி அனுப்பி வைத்தாராம்.

7.jpg

விசேடமான நாட்கள் :

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மாசாணி அம்மனுக்கு உகந்த நாட்கள். அன்று அம்மன் வழிபாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேட பூசைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் குண்டம் மிதிவிழா சிறப்புடன் நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டம் மிதி விழாவில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாதப் பௌர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேட பூசைகளுடன், 16 ஆம் நாள் தேர்த் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெறும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர். 18 ஆம் நாள் கொடி இறக்கி, 19 ஆம் நாள் விசேச அபிசேக, ஆராதனைகளுடன், விழா நிறைவு பெறும்.

திருவிழா நாட்கள்:

வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அம்மாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி.

திறக்கும் நேரம் :

கோவில் வளாகம், காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆனைமலை, கோவையிலிருந்து, 60 கிமீ தூரம் உள்ளது. கார் அல்லது பேருந்தில் செல்ல 1.30 மணி ஆகும்.

NH 209 => Kinattukkadavu => Pollachi => Anaimalai.
--

Sunday, April 17, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (5)

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (5)

பன்முக மனிதர்கள் இருப்பதைப் போல ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் பல முகங்கள் இருக்கிறது. ஆம், அக வாழ்க்கையின் முகம் ஒன்று, புற வாழ்க்கையின் முகம் வேறு. அந்த அகம் மற்றும் புற வாழ்விலும் உட்பிரிவுகளும் உண்டு. அகவாழ்வின் முகத்திற்கும், புறவாழ்வின் முகத்திற்கும் பல மாற்றங்கள் உண்டு. நிறைய முரண்பாடுகளும் இருக்கும். அதை தூக்கி எடை பார்க்க ஆரம்பித்தால் குடும்பம், உறவு, பந்தம் என்ற அக வாழ்வுதான் முற்றிலும் பாதிக்கப்படும். இதையெல்லாம் அதிக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாலே முடிவு பிரம்மச்சரியமோ அல்லது காவி உடையோ என்ற தப்பித்தல்தான். ஆனாலும அந்த தப்பித்தல் ஒரு தற்காலிகமானதாகத் தான் இருக்குமே தவிர அதுவே நிரந்தரமாகாது.

ரம்யா ஊருக்குச் செல்ல திட்டமிட்டாள். தன் தந்தை, தாய் அன்புத் தம்பி என்று சிறிய குடும்பம்தான். எல்லோரையும் பார்த்து வருடம் ஒன்றாகிவிட்டது. இதற்கு மேல் தான் ஒரு முறை சென்று வராவிட்டால் பிரச்சனை பலவாகிப் போகும்.

‘ என்ன ரம்யா, உனக்கு லீவ் சேங்க்‌ஷன் ஆகிவிட்டது போல. சரவணன் அங்கு கரிச்சி கொட்டிக்கிட்டு இருக்கான்’

‘ஆமாம்ப்பா, அவன் கடக்கிறான். நான் இரண்டு மாதம் முன்பே அப்ளை பண்ணியிருந்தேனே, உனக்குத் தெரியாதா’ என்றாள்.

’ம்.சரி விடு.எப்ப கிளம்பப் போகிறாய். டிக்கெட் பார்த்து விட்டாயா. நான் பார்க்கட்டுமா’ என்றான்

‘டிக்கெட் கன்பார்ம் ஆயிடிச்சு. அடுத்த மாதம், முதல் வாரத்தில் கிளம்பலாம் என்று இருக்கிறேன் மாறன்'.
--
'தம்பி இப்போது எப்படி இருகிறானாம் ரம்யா ?பெங்களூர் நிமான்ஸ் மருதுவமனையில்தானே ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது முனனேற்றம் தெரிகிறதா’

தம்பியைப் பற்றி பேச்செடுத்தவுடனே ரம்யாவின் முகம் உச்சி வேளை கதிரவனின் அனலில் துவண்டு போன ரோசா மலரைப் போன்று களையிழந்து போனது.

‘ம்ம்.அம்மா அப்படித்தான் கூறினார்கள் .குறும்பு மட்டும் குறையவே இலலை என்கிறார்கள். ஆளும் வாட்ட சாட்டமாக நன்கு வளர்ந்து விட்டானாம். அவனைச் சமாளிப்பது பெரும் பிரச்சனையாக இருப்பதாகக் கூறினார்கள்.அப்பாவிடமும் இப்போதெல்லாம் அடங்க மறுப்பதாகக் கூறினார்கள். இந்த முறை ஊருக்குப் போகும் போதுதான் , அவனை பிரத்யேகமாக கவனித்துக் கொள்வதற்கென்று ஒரு ஆளை ஏற்பாடு செய்ய வேண்டும்’

அதற்குள் மாறனுக்கு அலுவலக தொலைபேசி அழைப்பு வரவும் அதனைக் கவனிக்கச் சென்றாலும், ரம்யாவின் நினைவலைகள் மட்டும் தன் குடும்ப சூழலுக்குள் சிக்கி வெளி வர வழி தேடிக் கொண்டிருந்தது. தம்பி கோபாலகிருஷ்ணன் பிறந்த போது வீடே எப்படி கோலாகலமாக இருந்தது. 12 வருடம்...ஒரு மாமாங்கத்திற்குப் பிறகு வீட்டில் ஒரு மழலை தவழ்ந்தால் பெற்றோரை விட தனக்கு எத்துனை மகிழ்ச்சியான தருணமாக அது இருந்தது என்பதை அடிக்கடி நினைத்துக் கொள்ள தவறுவதில்லை.
பிறந்தவுடன், அன்றலர்ந்த மலர் போன்ற முகமும், கொவ்வைச் செவ்வாயும், குனித்த புருவமும், ரம்யாவை மிகவும் கவர்ந்து, தன் அன்புத் தம்பிக்கு கோபால கிருட்டிணன் என்ற பெயரையும் சூட்டச் செய்தது. அன்றிலிருந்து இன்று வரை, ஏன் தம்பிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்த பிறகும் கோபியின் மீது பாசம் பெருகிக் கொண்டேதானே இருக்கிறது.மூன்று, நான்கு வயது வரை மற்ற குழந்தைகளைப் போல சாதாரணமாக் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தவன் தானே. திடீரென வந்த காய்ச்சல் குறையாததனால் ஜன்னி போல வந்து மூளையை சிறிதாகப் பாதித்திருக்கலாம் என்று ஏதேதோ காரணம் கண்டு பிடித்தாலும், கோபி மற்ற குழந்தைகளைப் போல விரைவில் சகஜ நிலைக்கு திரும்பி வருவான் என்று நம்பிக் கொண்டுதான், அவனுடைய நோய்க்கான தீர்வு தேடி, நண்பர்கள் சொல்லும் அத்தனை முயற்சிகளிளும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாள்.

அப்பாவின் நினைவு வந்தவுடன் அவருடைய பதட்டமான முகம்தான் நினைவிற்கு வருகிறது இப்போதெல்லாம். வியாபாரத்தில் நண்பர்களை நம்பி மோசம் போனதை மறக்க முடியாமலும், விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் மேன் மேலும் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொள்வதும், அதில் இருந்து விடுபட முயற்சிப்பதும், இப்படியே பல வருடங்களாக வாழ்க்கையில், நம்பிக்கையை மட்டும் இழக்காமல் போராடிக் கொண்டே இருக்கும் அந்த உறுதியான மன நிலையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாதது அவளுக்கு ஆச்சரியமான விசயமாக இருக்கும்.

தொலைபேசி மணி மென்மையாக இசைக்கவும், தன் குடும்பச் சூழலிலிருந்து மீண்டுவர முடிந்தது அவளால். மாலை பணி முடிந்து வீடு திரும்பும் வரை ஒரு தியானம் போல வேறு எந்த நினைவிற்கும் இடம் கொடுக்க மாட்டாள்!

மாலை மணி ஐந்தாகிவிட்டது. வேலையெல்லாம் முடித்து விட்டு தன் சொந்த மெயில் பெட்டியைத் திறந்து பார்த்தாள் வழக்கம் போல. அன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு புதிய ஆனால் தன் உயிரோடு இணைந்த பெயராக ஒரு காலத்தில் இருந்த, ரிஷி என்ற பெயர் கொட்டை எழுத்தில் இருந்த ஒரு மெயில் கண்ணில் பட்டது......... ஏனோ அந்த மெயிலை திறக்க அவளுக்கு மனம் ஒப்பவில்லை. ஒரு காலத்தில் இந்த பெயர் எப்ப்டி எல்லாம் தன்னை மெய்சிலிர்க்கச் செய்தது என்று நினைத்துப் பார்த்த போது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.

ரிஷி என்ன அவ்வளவு எளிதாக மறக்கக் கூடிய காரியமா செய்தான். அவனை எவ்வளவு நம்பியிருந்தாள் அவள். ஆரம்பத்தில் காதல் மயக்கத்தில் இருந்த அவன், நாட்கள் வருடங்களாக மாறி மயக்கம் தெளிந்தாலும், யதார்த்த சூழலை உணர்ந்து கொள்ள முடியாதவனாகவே இருந்து விட்டானோ என்ற கோபம் மட்டும் அவன் மீது குறையவே இல்லை அவளுக்கு.......

மெயில் பெட்டி குப்பையாக குவிந்து கிடந்தாலும், ரிஷி என்ற அந்த கொட்டை எழுத்து மெயில் அடிக்கடி வரிசையாக பல முறை கண்ணில் பட்டது. யாராக இருக்கும் இத்தனை முறை கொடுத்துள்ளார்கள் , ஒரு வேளை அவனாக இருக்குமோ என்ற நினைவில் அதனைத் திறந்து பார்க்கும் எண்ணம் கூட வீண் என்று தோன்றியது அவளுக்கு.

எவ்வளவு ஆழ்ந்த காதல் வைத்திருந்தாள் அவள் ரிஷி மீது. இன்று அந்த பெயர் மெயில் கூட தீண்டத் தகாததாகப் போனது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் நொடிக்கொரு முறை நினைத்து பரவசம் அடைந்த காலத்தையும், அவனுடைய ஒவ்வொரு செயலையும் பெரிய சாதனையாக கண்ணுற்ற எண்ணமும் இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது.

‘ரம்யா போகலாமா, இன்னும் வேலை முடியலையா’, என்று கேட்டுக் கொண்டே வந்தான் மாறன்.

‘இல்லை மாறன், இதோ முடிந்துவிட்டது. சும்மா மெயில் பார்த்துக் கிட்டிருந்தேன். இதோ முடித்துவிட்டேன் என்று அவள் அதிலிருந்து வெளியேற நினைத்த போது, அருகில் இருந்த மாறன் கண்களில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட ரிஷி என்ற பெயர் படவும் அவன் முகத்திலும் ஒரு வாட்டமும், மாற்றமும் தெரிந்தது. ஆனாலும் இது அவனுடைய மெயில்தானா என்று அவளைக் கேட்க மனம் வரவில்லை. காரணம் அவன் செய்த காரியம் அப்படி. அவனைப் பற்றிப் பேசினால் அவள் வருத்தம் அதிகமாகுமே என்ற கவலை வேறு அவனை பேச விடாமல் செய்தது. இருந்தாலும் சட்டென மாறனைத் திரும்பிப் பார்த்தவள் அவன் முகத்தில் இருந்த சந்தேகக் கீற்றை உணர்ந்தவளாக லேசான புன்னகையை பதிலாக்கினாள்.

இருவரும் காரை நோக்கி பயணிக்கும் போதும், ஆழ்ந்த மௌனத்திலேயே ஆழ்ந்து போனாலும், மாறன் தொண்டையைக் கணைத்துக் கொண்டு,

’ரம்யா ரிஷின்னு இருந்த மெயில், அவன்தானா..... பார்த்தாயா நீ. நிறைய மெயில் அதே பேரில் இருந்தது போல. கொட்டை எழுத்தில் இருந்ததால் சற்று தொலைவிலிருந்த போதும் தெளிவாகத் தெரிந்தது. அதான் கேட்டேன் ’ என்றான்.

‘இல்லை மாறன் அந்தப் பேரைத் தொட்டு மெயிலைத் திறக்க எரிச்சலாக இருந்தது. அதனால் தான் பார்க்கவில்லை’ என்றாள் குறைந்த தொனியில்.

‘ஹாய், ரம்யா, மாஷன், என்று கூப்பிட்டுக் கொண்டே அருகில் வந்தான் ஜேம்ஸ். மாறன் என்ற அழகிய பெயர் அவன் வாயில் படும் பாடு, மிக அதிகம். ஆனால் ரம்யா என்ற பெயரை உச்சரிக்கும் போதே அவன் முகத்திலும், வார்த்தைகளிலும் ஒரு உற்சாகமும் ஆனந்தமும் வெளிப்படையாகத் தெரியும். அதை மறைக்கும் முய்ற்சியும் அவன் எடுக்க மாட்டான் என்பதால் அந்த யதார்த்தம் ரசிக்கும் வண்ணமே இருக்கும். ரம்யா மட்டும் அதை துளியும் சட்டை செய்ய மாட்டாள்.

‘ஓகே, கைய்ஸ், சீ,யூ டுமாரோ’ என்று சொல்லி கை ஆட்டிவிட்டு, ரம்யாவைப் பார்த்து லேசாக கண்ணையும் காட்டிவிட்டு சிட்டாகப் பறந்து விட்டான் ஜேம்ஸ்.

ரம்யாவின் அமைதி ஏனோ அவனுக்கு உறுத்தலாக இருந்தது. பல பிரச்சனைகள் அவளை அழுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்தக் கசப்பான நினைவுகளை எப்படியும் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவளிடம் பேச்சுக் கொடுக்க முயன்ற அதே நேரம்,

‘ என்ன மாறன் அப்பாவிடம் ஏதாவது பேசினாயா, அவர் என்ன சொன்னார்......அவந்திகா பற்றி ஏதேனும் பேசினாயா’ என்றாள்.

‘இல்லை ரம்யா. அப்பா திரும்ப அந்த இன்னொரு பெண், அதான் ஏதோ சொந்தம் அப்படீன்னு சொன்னாரே, அந்த போட்டோவை அனுப்பியிருப்பார் போல. போன் செய்து சொன்னார். நான் இன்னும் அதைப் பார்க்கவே இல்லை. ஒரே சங்கடமாக இருக்கிறது. என்ன செய்வது என்றே புரியவில்லை’ என்றான்.

‘நீ இப்படியே சொல்லிக்கிட்டே இரு, உன் அப்பா உன் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு......’

மேற்கொண்டு அவள் பேசப்போவதைக் கேட்க விரும்பாதவன் போல, நேரமாச்சு ரம்யா கிளம்பலாமா என்றான்.

அவள் ஏதோ சொல்ல முயற்சிக்கவும், மாறனின் செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

‘ ஹலோ, ஐயாம் மாறன் ஹியர்’.......என்றான்.

மறுமுனையில் ஒரு சிறு தயக்கம் தெரிந்தது. பின்பு மெதுவாக மாறன்தானே இது என்ற குரல் தயகத்தினூடே வந்தது.

‘ஹலோ, மாறன் நான் ரிஷி , எப்படி இருக்கிறாய். என் மீது உள்ள கோபம் இன்னும் தீரலையா உனக்கும். என்ன செய்வது சூழ்நிலை, அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டியதாகி விட்டது. ரம்யா எப்படி இருக்கிறாள்.நான் அவளுக்கு பல முறை மெயில் கொடுத்தும் பதில் இல்லை......அவளிடம் கொஞ்சம் பேச வேண்டும் மாறன்...’

மாறனுக்கு கோபம் தலைக்கேறியது. பாவி.....இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது...........

ஹலோ........ஹலோ....மாறன் இருக்கிறாயா .............

தொடரும்.


Wednesday, April 13, 2011

அறுசுவை அமுதம்

இனிய தமிழ் ‘கர’ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

சித்திரைப் பெண் சிரித்தோடி வரும் திருநாள். சித்திரைத் திருநாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழக்கங்களை நம் முன்னோர்கள் சுவைபட விளக்கியுள்ளனர். அதன் படி கொங்கு நாட்டில், இன்றும் பெரும்பாலானவர்கள் அதனைக் கடைபிடித்து வருகின்றனர் என்றே கொள்ளலாம்.

சித்திரைத் திருநாள்,ஸ்ரீராமபிரான், ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆதி சங்கரரும் அவதரித்த பொன்னான திருநாளாகும்.

முதல் நாளே வாசலில் சாணம் போட்டு மெழுகி, வண்ண கோலமிட்டு, அழகு மலர்களுடன் அலங்காரம் செய்து வைப்போம்.

விடியற்காலை, அதாவது பிரம்ம முகூர்த்த வேளையில் சித்திரைக் கனி மற்றும் பொன் ஆபரணம் வைத்து மஞ்சள் சரக்கொன்றை மற்றும் நறுமணம் கமழும் மலர்களும், மஞ்சள், குங்குமம போன்ற மங்கலப் பொருளும் வைத்து அதன் முகத்தில் தான் முதலில் விழிப்போம்.

காலையில் மங்கல நீராடி, அவரவர் விருப்ப தெய்வங்களை மனதார வணங்கி, அன்று அறுசுவை உணவும் உண்ண வேண்டும். அதாவது, வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களையும் குறிக்கும் வகையில், இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம் மற்றும் கசப்பு என்ற அறுசுவை உணவையும் அன்று உண்ண வேண்டும் என்பர்.

இந்தக் “கர” ஆண்டின் துவக்க நாளை கொண்டாட அறுசுவை உணவின் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.இனிப்பு வகை:


தேங்காய் பர்பி.

தேவையான பொருட்கள் :

1.2 கப் துறுவிய தேங்காய்.

2. 1 கப் பால் கோவா.[சக்கரை இல்லாதது]

3. 1 டே.ஸ்பூன் நெய்.

4. 1 கப் சக்கரை.

5. 2 கப் பால்

6. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்.

7. 1 சில்வர் இலை அலங்கரிப்பதற்கு.

செய்முறை :

1. ஒரு அடி கனமான பாத்திரம் எடுத்து, அதில் தேங்காய் துறுவல், ஏலக்காய் தூள், சக்கரை மற்றும் பால் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடமோ அல்லது செட்டியாகும் வரையோ வைத்திருக்க வேண்டும். நடுவில் கிளறி விட வேண்டும்.

2. கோவாவை அத்துடன் கலந்து, நன்கு கிளறி விடவும்.

3. நெய்யைக் கலந்து, நன்கு கிளறி விடவும்.

4. ஒரு குழி தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் பரப்பி, மேலே சில்வர் பேப்பர் அலங்கரம் செய்து ஆறவிடவும்

பிறகு அதனை தேவையான வடிவத்தில் துண்டு போடவும்.

புளிப்பு :

மாங்காய் பச்சடி :

தேவையான பொருட்கள் :

1 2 கப் பச்சை மாங்கயை சிறு சன்னமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவம்.

2 . 1 சுப் சக்கரை.

3.1 டீஸ்பூன் சீரகப் பொடி.

4. 1 டீபூன் - எள்ளு லேசாக நுணுக்கியது.

5 , 1/2ஸ்பூன் கடுகு.

6. 2 முழு சிகப்பு மிளகாய்

7 . தேவையான அளவு உப்பு

8. பெருங்காயம் ஒரு துளி.

9 .1 டிஸ்பூன் எண்ணெய்.

செய்முறை :

1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் அதில், கடுகு, சீரகப் பொடி, எள்ளு, பெருங்காயம் இவையெல்லாம் போட்டு, சிவந்தவுடன்,

2. அதில் உப்பு மற்றும் மாங்காய்த் துண்டுகளும் போட்டு அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

3. இறுதியாக சக்கரை சேர்த்து, நன்கு கெட்டியாகும் வரை சிறு தணலில் வேக விடவும்.

துவர்ப்பு :

விடாங்காய் பச்சடி :

1. விடாங்காய் ஓடை நீக்கி உள்ளிருக்கும் ஊனை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. அதில் தேவையான அளவு உப்பும் ஒரு பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3. இதை இப்படியே சாப்பிடலாம். அல்லது தேவையானால் தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளலாம்.

கசப்பு:

வேப்பம் பூ ரசம்:

வழக்கமாக ரசம் வைப்பது போல் வைத்து, அதில் வேப்பம் பூவை லேசாக வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அதை ரசத்தில் கொட்ட வேண்டும்.

காரம் :

காண்ட்வி :

தேவையான பொருட்கள் :

1. க்டலை மாவு - 1/4 கிலோ

2. தயிர் - 1/4 கிலோ

3. தண்ணீர் - 500 மி.லி.

4. பச்சை மிளகாய் 4 நன்கு அரைத்தது.

5. சீரகம் - 1/4 ஸ்பூன்.

அலங்கரிப்பதற்கு :

தேங்காய்த் துறுவல் - 1 டே.ஸ்பூன்.

கொத்தமல்லி இழை - 2 டே.ஸ்பூன்.

கடுகு தாளித்தது.

செய்முறை :

1. கடலை மாவை தயிருடன் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

2, அதனுடன், மிளகாய் விழுது, சீரகம், உப்பு, எல்லாம் கலந்து அடுப்பில் சிறு தீயில் வைத்துக் கிளறிவிட வேண்டும்.

3. கெட்டியானவுடன், அதனை ஒரு தட்டில் பரவலாக சன்னமாக வரும்படி ஊற்ற வேண்டும்.

4. ஆறியவுடன், அதனை சுருட்டி ரோல் போல செய்து, தேவையான அளவு கட் செய்து கொள்ளலாம்.

5. அதன் மீது தாளித்த கடுகையும், தேங்காய் துருவலும், மல்லி இலைகளும் தூவ வேண்டும்.



Tuesday, April 12, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 -( 3)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 -( 3.)


மனித உடல் என்பதே ஒரு வேள்விச் சாலை. தூய்மையான அந்த உடலுக்கு, அண்டம் அனைத்தையும் தம்முளவாக்கிய ஆண்டவனும் அடி பணிகிறான். காரணம் அந்த உடலில் கோவில் கொண்டிருந்த உயிரே சாட்சாத் அந்த ஆண்டவன் தானே! இதுவே கயைத் தத்துவம் என்பர்.

Apr 12, 2011

விந்திய மலைச் சாரலுக்கு வடக்கே, மகத நாட்டிலே சம்பகம் என்னும் பெயர் கொண்ட, தேன் சொரியும் மலர்கள் நிறைந்த வனத்திலே, ஆனந்த மலையெனத் திகழும் கோலாகல பர்வதத்திலே இத்திருத்தலம் அமைந்துள்ளது. அரக்கர் குலத்தில் அவதரித்த கயாசுரன் என்ற அசுரனின் பெயரால்தான், இத்தலம் கயை என்று அழைக்கப்படுகிறது.

கயாசுரனின் மெய்யான தவத்தை மெச்சிய காத்தல் கடவுளான விஷ்ணு பகவான், வேண்டிய வரம் அருள்வதாய் உறுதி கொடுத்ததைப் பார்த்த தேவர்கள் அஞ்சி நடுங்கினர். கயாசுரன் அப்படி என்னதான் வரம் கேட்டான்....?


“தேவர்கள், ரிஷிகள்,மந்திரங்கள், துறவிகள் இவர்களைக் காட்டிலும் என் உடல் புனிதமாக வேண்டும், என்னைத் தொடுபவர்களுக்கும் புனிதம் ஏற வேண்டும்” என்பதாகும்.அசுர குலத்தில் பிறந்த ஒருவருக்கு எத்துனை உயர்ந்த குணம்.......!

இவ்வரத்தின் பயனாய், நரகம் என்ற ஒன்றே செயலற்றுப் போய், தூய்மை வரம் சுவர்கத்திலேயே, இட நெருக்கடியை உண்டு பண்ணியதாம்.

’குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பர் பெரியோர்.

பிறவியால் சாதியா? செயலால் சாதியா?

இன்றளவும் விவாதத்திற்குரிய பிரச்சனை இது. வேதியர் குலத்தில் உதித்த இராவணன் தன் செய்கைகளினால் அசுர குலத்தவன் ஆனான்.அசுரர் குலத்தவரான பிரகலாதனோ, தேவர் உலகத்தினராகும் தகுதி பெற்றான். சத்திரிய குலத்தில் அவதரித்த விசுவாமித்திரரோ, பிரம்ம ரிஷியானாரே. அப்படித்தான் கயாசுரனும் தம் வரத்தால் மட்டுமன்றி, விஷ்ணு பகவான் தானமாக கேட்ட தன் உடலையே, நல்ல காரியம் என்பதனால் துளியும் யோசிக்காமல் மிக மகிழ்ச்சியுடன், தன் உடலைக் கீழே கிடத்தினான். அவன் படுத்த அந்த இடம்தான் மகத தேசத்தைச் சேர்ந்த சம்ப காரண்யம் என்ற மதுவனம், கோலாகலம் என்ற மலையைத் தலைக்கு உயரமாகக் கொண்டு, அவன் வேள்விக்குத் தன்னை அர்ப்பித்த இடமே கயை என்னும் சுதார சேத்திரமாகியது.இந்த வேள்வியில் பங்கு கொள்ள தேவர் உலகமே கூடியதாம்.


‘உயிர் ஒடுங்குவதற்கு இறை அனுமதி வேண்டும்’ என்பதும் உயிர் ஒடுங்கிய பின்னும் உடல் ஒடுங்கச் சிறிது நேரம் பிடிக்கும் என்பதையும் அவன் செயல்கள் உணர்த்தும். அந்த நேரத்தில் தேவர்கள் அவன் வேண்டும் வரம் கேட்கச் சொன்ன போதும் அவன் முக்தி வேண்டாமல், உலக நன்மைக்காக,வரம் கேட்டான்.


“ சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும் பூவுலகமும் இருக்கும் வரை எல்லாத் தெய்வங்களும், உருவமாகவோ, அருவமாகவோ இங்கேயே என்னில் உறைய வேண்டும். இந்த, தலம் தன் பெயரில் கயை என்று காலம் முழுவதும் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்பவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் பிரம்ம லோகம் சித்திக்க வேண்டும். அவர்களை எந்த பாவமும் தீண்டக் கூடாது.” என்ற வரம் கேட்டான்.

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார் கல்லால்
பிற வாழி நீந்தலரிது.

என்னும் ஐயனின் குறளுக்கு இலக்கணமாய் கயையில் விஷ்ணு பதம் அமைந்துள்ளது.

நம் முன்னோர்களுக்கு நாம் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையையும், நன்றியுணர்வையும் தெரிவிக்கும் வகையிலேயே, சிரார்த்தம் செய்யப்படுகிறது. நமது முந்தைய மூன்று தலைமுறைகளையும் நினைவு கூர்கிறோம். நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாராவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம்.கயைக்குச் சென்று பிண்டம் போட்டு,நன்றிக் கடன் செலுத்துவது,நம் கடமையாகும்.என்று பெரியவர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.


கயையிலே, தங்கள் முன்னோருக்கு மட்டுமன்றி, உற்றார், உறவினர், நண்பர், பகைவர் என்று எல்லோருக்குமே பிண்டம் போட்டு அவர்களுக்கு நற்கதியை கிடைக்கச் செய்யலாம்.தனக்கும், ‘ஆத்ம பிண்டம்’ போட்டு விஷ்ணு பதத்தில் ஒப்படைக்கலாமாம். இதனால்தான் கயைக்கு இத்துனை மகத்துவம் என்கின்றனர். பிராமணர்களைக் கொண்டு சிரார்த்தம் செய்வதற்கும் ஒரு புராணக்கதை நிலவுகிறது.


பல்குனி நதியில் பொதுவாகத் தண்ணீர் இருப்பதில்லை. ஊற்று நீரில் மூழ்கிப் பிண்டம் போடலாம். அடுத்த படியாக விஷ்ணு பத பிண்டம், பிறகு சிரார்த்தம். அஷய வடத்துக்குச் சென்று பிண்டம் போடுவது வழக்கம். அங்கே சிரார்த்தம் செய்தவருக்குக் கயை வாழ் அந்தணர்கள் மாலை போட்டு பித்ருக்கள் சுவர்க பதம் அடைந்ததாக்ச் சொல்லி வாழ்த்துவார்கள்.


கயை சென்று வருகிறவர்கள் அஷய வடத்தின் அடியில் ஒரு காய், ஒரு கனி, ஒரு கீரை இவற்றை உட்கொள்வதில்லை என்று விரதம் மேற்கொள்ள வேண்டுமாம்.ஆனால் நாங்கள் சற்று வித்தியாசமாக ஒரு முடிவு எடுத்தோம். அதாவது, அவரரிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள் ஏதாவதை விட்டு வருவது என்று. நான் சற்று அதிகமாகக் கோபப்படுவேன். அதை விட்டு விடுவது என்று முடிவு செய்து, முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.அதே போல் என் கணவரும், வியாபாரத்தில் இனி கடன் கொடுப்பதும், வாங்குவதும் முடிந்த வரை தவிர்ப்பது என்ற முடிவும் எடுத்து விட்டு வந்தோம். இன்றும் முடிந்த வரை காப்பாற்றுகிறோம்.


இரவு விஷ்ணு பதம் சென்று அபிசேகம் ஆகும் பொழுது பார்த்தால் விஷ்ணு பதம் பதிந்திருப்பதைக் கண் குளிர தரிசனம் செய்யும் பேரும் பெறலாம். ஆனால் நாங்கள் மதியமே தரிசனம் முடித்து கிளம்பி விட்டோம். பல வண்ண மலர்கள் மற்றும் குங்குமத்தினால் நிறைந்திருந்த விஷ்ணுபாத தரிசனம் பெற்று மன நிறைவுடன் புத்த கயா கிளம்பினோம்.

தொடரும்.


--
Apr 12, 2011
Apr 12, 2011
by coral shree







--



Sunday, April 10, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 4


தோள் கொடுக்கும் தோழமை பல நேரங்களில், மலை போன்ற துன்பங்களைக்கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் பனி போல உருகி ஓடச் செய்துவிடும்.
கணக்குப் பார்த்து வரும் காதலைப் போல, சூழல் பார்த்து வரும் நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நட்பில் பல வகை. தனக்கு மட்டுமே ஏவல் புரியும் சேவகனாக, தன் பெருமையைப் பறை சாற்றும் மத்தளமாகவும் இருந்தால்தான் அந்த நட்பு நிலைக்க முடியும் என்ற அவல நிலையுடைய நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல நட்பு என்பது, சிலருக்கு வெகு யதார்த்தமாக இளமைக் காலம் தொட்டே, தானாகவே சுகமான சுமையாக அமைந்துவிடும். ஆனால், பெரும்பான்மையோருக்கு, பல முறை சூடு பட்டும், வாழ்நாளில் பெரும் பகுதி தேடலிலேயே கரைந்து போய் விடுவதும் உண்டு. ஒருவர் வாழ்க்கையில், நல்ல பெற்றோர், நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கட்பேறு அமைவது எத்துனை அவசியமோ, அதைவிட ஒரு படி மேலாக, அமைதியான வாழ்க்கைக்கு நல்ல ஆத்மார்த்தமான நட்பும் அவசியமாகிறது. எந்த விதமான துயரங்களையும் கடக்கச் செய்யும் அசுர பலம் வாய்ந்தது நல்ல நட்பு.
அந்த வகையில் மாறன் பாக்கியசாலி என்றே சொல்ல வேண்டும். பள்ளி இறுதியாண்டில் முதன் முதலில் ரம்யாவைச் சந்தித்தான். தந்தையின் அலுவல் மாற்றத்தின் காரணமாக வட நாட்டிலிருந்து சென்னை வந்து சேர்ந்தவள். அதுவும் பள்ளி இறுதி ஆண்டு ஆனபடியால், டென்சனான ஒரு சூழலில் இவர்களின் முதல் சந்திப்பு…
பள்ளி இறுதி ஆண்டு, பிராஜெக்ட் வேலைகள் எல்லோரும் முடிக்கப் போகும் தருணத்தில், அப்போதுதான் புதிதாக வந்து சேர்ந்திருந்த ரம்யா, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல தவித்துக்கொண்டிருந்த நேரம். ஆசிரியரும் மற்ற மாணவர்களின் உதவியைப் பெற்று பணியை முடிக்கச் சொன்னாலும், ரம்யாவின் நுனி நாக்கு ஆங்கிலமும், ஆளை அடித்து வீழ்த்தும் அழகும் அவளிடம் நெருங்கிப் பழக, மற்ற மாணவர்களுக்கு சங்கோஜத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதே காரணம் மாறனுக்கு அவள் மீது பற்றும் ஒரு பாசமும் ஏற்படுத்தியது.
ஒரு நல்ல நட்பூவாக மலர்ந்தது, அவர்கள் சிநேகம். அதற்குப் பிறகு போட்டி நல்ல முறையில் இருந்தபடியால் இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, கல்லூரியும் மற்றும் பாடப் பிரிவும் இருவரும் ஒன்று போல் தேர்ந்தெடுத்துச் சேர்ந்த போது மீண்டும் போட்டி தொடர்ந்தது.
ரம்யாவின் சுறுசுறுப்பும் எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவளைப் படிப்பில் முதன்மை நிலையில் வைத்திருந்தது. மாறனும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை. இருவரும் இளங்கலை பொறியியல் படித்து முடித்து கேம்பஸ் நேர்முகத் தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தபடியால், இருவரும் ஒரு பிரபலமான கம்பெனியில் பணியில் அமர்ந்ததும், எல்லாம் விளையாட்டுத்தனமாக நடந்து முடிந்துவிட்டது.
இன்று இருவரும் ஒரே பிராஜெக்டில் பணி புரிந்தாலும், ரம்யாவிற்கு நல்ல தங்கும் இல்லம் ஏற்பாடு பண்ணிக் கொடுப்பதில் ஆரம்பித்து, ஒரு நல்ல பாதுகாவலனாக இந்த நட்பு மணம் வீசிக் கொண்டிருப்பது மற்ற நண்பர்களும் ஆச்சரியப்படும் ஒரு விசயமாகும்.
இரவு வெகு நேரம் தூங்காமலே ஏதேதோ, நினைவுகளின் அழுத்தம் கண்களில் குடிகொள்ள, காலை அசந்து உறங்கிவிட்டிருந்தான் மாறன்.
நல்ல ஆழ்ந்த உறக்கம், தொலைபேசி மணி ஒலித்தது வெகு தூரத்தில் கேட்டது.
“ஹலோ, மாறன்…. என்னப்பா இன்னும் துயிலெழவேயில்லையா…மணி என்னன்னு பார்த்தாயா?”
கண்ணைக் கசக்கிக்கொண்டு மணியைப் பார்த்தவன், அடடா, “ஒன்பது மணியா ஆகிவிட்டது” என்று பரக்கப் பரக்க எழுந்து காலைக் கடன்களை முடித்து அலுவலகத்திற்குத் தயாரானான்.
வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டி, அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தது. இரவு ஒரே நேர்க்கோட்டில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான வண்டிகள் இடையில் அங்கங்கே உறுவி எடுக்கப்பட்டிருந்தன. முழுவதுமாக வெண்பனி சூழ்ந்த ஒரு பனிக் குன்றாகக் காட்சியளித்தது… வழக்கமாகக் காலையில் சீக்கிரமாகவே அலுவலகம் கிளம்புபவனுக்கு.இந்தக் காட்சி சற்றே அரிதானது…….
சில்லென்ற குளிர்க் காற்று பலமாக வீச, தரையில் படிந்திருந்த வெண்பனியின் சறுக்கலில் மாட்டி விடாத வண்ணம், சர்வ எச்சரிக்கையுடன், அடி மேல் அடி வைத்து…. காலையில் இந்த அவசரத்தில், வெண்பனிக் குன்றாகச் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகளை விலக்குவது மிகச் சலிப்பான காரியமாக இருந்தது….. வேறு வழியில்லை என யோசித்துக்கொண்டே மளமளவெனக் காரியத்தை முடித்து வண்டியைக் கிளப்ப, பத்து நிமிடம்……..
காரிலேறி வழக்கம் போல ஒரு கையில் பிரெட்டையும் மறு கையில் ஸ்டியரிங்கையும் பிடித்துக்கொண்டு, காலை உணவை ஆரஞ்சு பழச் சாறுடன் முடித்துக்கொண்டான். ரம்யாவிற்கு போன் செய்து, தான் வழியில் இருப்பதைக் கூறலாம் என்று டயல் செய்தால், அவள் பிசியாக இருப்பது தெரிந்தது.
அலுவலகத்தில் நுழையும் போது, சற்று, மற்ற விசயங்களின் பாதிப்பு குறைந்தது போல ஒரு உணர்வு இருக்கத்தான் செய்தது.
“ஹாய், என்னப்பா…… இவ்வளவு லேட். எப்பவும் பங்க்சுவலா இருப்பாயே….” என்றவள், அப்போது தான் அவன் கண்களை நேராகப் பார்த்தவள், ஒரு குழப்பத்துடன் உற்று நோக்கினாள்.
அவன் பார்வை சற்றே தாழவும், ஏதோ உணர்ந்து கொண்டவளாக,
“என்னப்பா….. என்னாச்சு. அப்பா ஏதும் பேசினாரா? ஏன் அவந்திகாவைச் சந்திக்கச் சென்றாய் என்று கோபித்துக் கொண்டாரா…?” என்றாள்.
ஏனோ ரம்யா இவ்வாறு கேட்டவுடன், அவனையறியாமல், கண்கள் கலங்கி உள்ளம் பொங்க ஆரம்பித்தது. தான் இருக்கும் சூழலின் நிலை உணர்ந்தவனாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள பெரிதும் முயன்றான். இதை உணர்ந்த ரம்யா,
“சரி வா மாறன், கேண்டீன் வரை சென்று வரலாம். இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை” என்றாள். அவனுக்கும், தன் மனத்தில் உள்ளதைக் கொட்டினால் தான் அமைதி பெற முடியும் என்ற நிலை.
“சரி இப்ப சொல்லு, என்ன நடந்தது?” என்றாள் கேண்டீனில் ஒரு சேண்ட்விச் வாங்கி கையில் வைத்துக்கொண்டு.
எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்று எதுவுமே புரியாமல், ஒரு வினாடி தவித்தவன், நிதானமாகப் பேச ஆரம்பித்தான். பணி நேரமாக இருப்பதால் சுருக்கமாக, வேகமாகச் சொல்ல வேண்டுமே என்றும் நினைத்துக்கொண்டான்……..
“என்ன சொல்வது ரம்யா, ஆரம்பத்திலிருந்து நான் விரும்பிய அனைத்தும், தடையில்லாமல் கிடைத்து வந்த எனக்கு, வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் சோதனை வந்துவிட்டதே” என்றான் கண்கள் கலங்க.
அவன் முகத்தில் இருந்த வேதனையையும் கலங்கிய அந்தக் கண்களையும் காணச் சகியாதவளாக,
“ஹேய், என்னப்பா….இது? நீ இவ்வளவு மனம் நொந்து நான் பார்த்ததில்லையே. என்ன ஆச்சு, சொல்லு. எதுவானாலும் சரி பண்ணிடலாம். பதற்றம் இல்லாமல் அமைதியாக இரு மாறன். எந்தப் பிரச்சினையயும் நிதானமாகக் கையாண்டால், சரியான தீர்வு உண்டுன்னு நீயே அடிக்கடி சொல்லுவியே… இப்ப என்ன ஆச்சு மாறன், உனக்கு…?”
“இல்ல ரம்யா. இந்த விஷயத்தில் என்னால் அப்படி இருக்க முடியலை. என்னமோ தெரியல, அப்பா அவ்வளவு ஈசியா சொன்ன அந்த விசயம் என் மனத்தை இவ்வளவு பாதிக்கும்னு நானே நினைக்கல…..”
“அப்படி என்னதான் சொன்னாருன்னு சொல்லேன்..”
“திருமணப் பெண் போட்டோ மாறிப் போச்சுப்பா……. அப்படீன்னு சர்வ சாதாரணமாச் சொல்றார், ரம்யா…… அவந்திகா என் மனத்தில் சிம்மாசனமிட்டிருப்பதையும், அவள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்துக்கொண்டு வருவதையும் அவரிடம் நான் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது?”
“என்னப்பா…இது. ஏன் உங்கப்பா இப்படி இருக்கார்… இவ்ளோ ஈசியா போட்டோ மாறிப் போச்சுன்னு சொல்லியிருக்கார். நீ என்ன சொன்னே அவர்கிட்டே……?”
“என்ன சொல்றது ரம்யா…. எப்படி சொல்றது?”
“அட போப்பா… சொல்ல வேண்டிய நேரத்தில சொல்லாம இருக்கறது பெரிய தப்பாப் போயிடும். உனக்கு சிரமம்னா சொல்லு, அப்பாகிட்ட நான் பேசறேன்”
“இல்ல ரம்யா. அவந்திகாவோட ஜாதகம் எனக்குப் பொருத்தம் இல்லையாம். அதை அவர்கள் வீட்டில் திருப்பிக் கொடுத்துவிட்டாராம். அன்று ஏதோ அவசரத்தில் அவந்திகாவோட போட்டோவும் பயோடேட்டாவும் தவறி அனுப்பிட்டராம்.”
“சரி அதனால் என்ன? இப்ப திரும்பப் போய், உனக்கு அந்தப் பெண்ணை ரொம்பப் பிடித்த விசயம் பற்றிக் கூறி, மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டியது தானே”
“இல்லை ரம்யா, இப்ப பார்த்திருக்கிறது, என் ஒன்று விட்ட அத்தைப் பெண்ணை. அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த நேரத்தில் நான் எப்படி அவந்திகா பற்றிச் சொல்வது..?”
“ஓ, மணியாகிவிட்டது. சீட்டிற்குப் போகலாம் வா மாறன். மதியம் இது பற்றி பேசலாம். நீ ஒன்றும் கவலைப்படாதே. அவந்திகா உனக்குத்தான். இல்லாவிட்டால் அவள் ஏன் உன் கண்ணில் பட வேண்டும். இவ்வளவு நெருங்கி வர வேண்டும்?”
ரம்யாவின் வார்த்தைகள் சற்றே தெம்பளிக்கவும், உற்சாகத்தை வரவழைத்துக்கொண்ட மாறன், இருக்கைக்குச் செல்லத் தயாரானான், அப்பா அங்கே பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருப்பது தெரியாமலே…….
(தொடரும்………

Tuesday, April 5, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - 6


”மனிதர்கள் தங்களுடைய மனதின் உள்ளார்ந்த தன்மைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கையின் புறத்தன்மைகளை மாற்றிக் கொள்ள முடியும்” - வில்லியம் ஜேம்ஸ்.

அதாவது புற உலகம் என்பது நம்முடைய உள்மனத்தின் எதிர்வினையான பிரதிபலிப்பாகவே என்றென்றும் இருக்கிறது.

இதை உணர்ந்து கொள்ளும் போது சக மனிதர்களுடன் நம் பழக்கம் அன்புடையதாகவே இருக்கிறது.


சரி விசயத்திற்கு வருவோம். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் குறிப்பிட்ட நேரமே செலவிட முடிந்தது. காரணம் அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய உத்தர கோசமங்கை கோவிலில் திருவாசகம் முற்றோதல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. திருநெல்வேலியிலிருந்து 100 பெண்களும், ஆண்களும் வந்து திருவாசகம் முற்றிலும் ஓதுகிறார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. அதனால் விரைவாக வர வேண்டியதாகி விட்டது.



ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காலை 7 மணியளவில் கிளம்பி உத்தர கோச மங்கை 8.40 ம்ணியளவில் வந்து சேர்ந்துவிட்டோம்.



திரு உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவில், சேது வள நாட்டின் தலைநகரான இராமநாதபுரம் நகருக்கு தென்மேற்கே 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மங்களநாயகி அம்மன் சமேதராய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவில் மிகவும் பழமையும் , தொன்மையும் வாய்ந்தது. பாண்டி நாட்டு தலங்கள் 14 தோன்றும் முன்பே ஓர் இலந்தைத் தருவின் அடியில் சுயம்புவாக முளைத்த தூய மூர்த்தியாகிய திருக்கோவிலாகும்.



உத்தரம் என்றால் உபதேசம். கோசம் என்றால் ரகசியம். அதாவது உயர்ந்த தரமான வேதாகம ரக்சியத்தை தன்னில் பாதியாய் அமைந்துள்ள உமாதேவிக்கு உபதேசம் செய்த புண்ணிய தலமாகும்.

தாதாடு பூஞ்சோலை தத்தாய் நமையாளும்
மாதாடு பாகத்தன் வாழ் பதி என
கோதாட்டி பார்மேல் எல்லோரும் சிவபுரம் போற்
கொண்டாடும் உத்தரகோச மங்கை ஊர்


சிவபெருமானுக்கு சொந்த ஊரும் தங்கும் இடமும் பார்மேல் சிவபுரம் திரு உத்திரகோச மங்கையே என்று பாடுகிறார். காகபுஜண்ட மகரிஷிக்கு கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபம் விலகிட வழிபட்ட திருக்கோவிலாகும்

.சிவபுரம், தெட்சிண கைலாயம், ஆதி சிதம்பரம் என்னும் பல சிறப்பு பெயர்களும் கொண்ட இக்கோவில் மிகப் பிரம்மாண்டதாகவும், பழமை வாய்ந்ததாகவும் உள்ளது. விநாயகர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் இடம் மாறி அமைக்கப்பட்டுள்ளது கோவில் வாசலில் ப்ரும்ம தீர்த்தம் அமைத்து பிரம்மா வழிபட்டதும் சேதகை என்று சொல்லக்கூடிய தாழம்பூவிற்கு சாப விமோசனம் செய்தமையால் இத்திருக் கோவிலில் மட்டும் சுவாமிக்கு தாழம்பூ சாத்துப்படி செய்யப்படுகிறது.

காலை நேர வழிபாடு மனதிற்கு மிக இதமாக இருந்தது. மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், மயன், மண்டோதரி, பானாசுரன், வேத வியாசர், மிருகிண்டு மகரிசி, பானாசுரன், போன்றவர்கள் வழிபட்ட சுயம்புலிங்கத்தைக் காண கண் கோடி வேண்டும்.

உலகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்த பச்சை மரகதத்தால் ஆன ஸ்ரீநடராஜர் திருக்கோவில் இங்கு உள்ளது. பொதுவாக பெரும்பாலான ஆலயங்களில் நடராஜர் சன்னதி, ஆலயத்திற்குள்ளேயே தனிச்சந்நிதியாகவே இருக்கும். ஆனால் திரு உத்திரகோசமங்கை ஆலயத்திலோ, ஒரு ஆலயத்திற்குள்ளேயே, மற்றொரு திருக்கோவிலாக கருவரை,அர்த்த மண்டபம், மஹா மண்டபம், பிரகாரம் விமானங்கள் உள்பட தனிக் கோவிலாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு அருள்பாலிக்கும் 6 அடி உயரமுள்ள ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சந்தனக் காப்பிட்டு, மார்கழி மாத திருவாதிரை தினத்திற்கு முந்தைய நாள் சந்தனக் காப்பு களையப் பெற்று அபிசேக வேளையில், பச்சை வண்ண மேனியாய் தரிசிக்கும் வாய்ப்பு காணக் கிடைக்காத பெரும் பேராகும்.

இவ்வாலய ஸ்ரீநடராஜப் பெருமான் நவரத்தினங்களில் ஒன்றான மரகதத்தால் ஆனதால் இத்தலத்திற்கு ரத்தின சபை எனவும் சிறப்புப் பெயருண்டு.சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூசை சமயம் தனந்தோறும் பாடப்பட்டுவரும் ‘திருப்பொன்னூசல்’, மாணிக்கவாசாகப் பெருமானால், இந்த இடத்தில் தான் இயற்றி பாடப் பெற்ற சிறப்பையும் பெற்றது. ம்ணிவாசக்ப் பெருமானால் பாடல் பெற்ற இத்தலம், அவர்தம் திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புற புகழப்பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு சிறப்புக்களையுடைய இக்கோவிலை சுற்றி வலம் வரும் போதே மனதில் ஒரு ஆழ்ந்த அமைதி இருந்தது அனைவரின் முகத்திலும் அது பிரதிபலிக்கவும் செய்தது!

காலை சிற்றுண்டி எங்களுக்கும், மூற்றோதல் செய்ய வந்த குழுவினருக்கும் ஏற்பாடாகி இருந்தது. காலை சிற்றுண்டியை இனிதே முடித்து அனைவரும் முற்றோதல் நிகழ்ச்சிக்குத் தயாரானோம். இது மிக அருமையான ஒரு அனுபவமாகவும் அமைந்து போனது எங்களுக்கு........



400 பக்கங்கள் கொண்ட , மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட திருவாசக உரையின் ஆசிரியரான, ‘பெரிய புராணப் பேரொளி’ எனும் பட்டம் பெற்ற ஐயா தங்க விசுவநாதன் அவர்களின் தலைமையில் திருவாசக முற்றோதல் நிகழ்ந்தது சாலப் பொருத்தமாகவே இருந்தது.



சராசரியாக ஒரு 150 பெண்களும், 50 முதல் 60 ஆண்களும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை போன்று ஒன்று கூடி திருவாசகம், ஐயன் மனிவாசகப் பெருமான் பாடிய அதே தலத்தில் பாடியது ஒரு ஆன்ந்த எல்லைக்கே கொண்டு சென்றது எனலாம். ஆங்கிலத்தில் ‘Ecstasy', என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் உணர்வுப்பூர்வமாக அறிந்தேன் என்றால் அது மிகையாகாது.



ஆரம்பிக்கும் முன் சிவதீக்கை வைத்திருந்த அன்பர்கள் அனைவரும் அங்கேயே ஆண்டவன் திரு முன் சிவபூசை செய்து முடித்து பின்பு முற்றோதல் ஆரம்பித்தனர். இன்று கல்லூரி செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும், நாகரீகமாக உடை உடுத்தி அலங்காரம் செய்து கொண்டு சினிமா, பொழுது போக்கு அமசங்கள் என்று அலைவதைத்தான் அதிகமாகக் காணமுடிகிறது. இதற்கு மாறாக, பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு இந்த அளவிற்கு பக்தி வருவது சாத்தியமா என்று ஆச்சரியப் படும் வகையில் ஒரு இளைஞன், பெயர் மணிகண்டன் என்று
நினைவு, சிவ பூசை செய்வதோடல்லாமல், கையில் சிவலிங்கத்தை பெரிதாக பச்சை குத்திக் கொண்டு, அனைவருக்கும் ஓடி ஓடி உதவி செய்து கொண்டு........கண் கொள்ளா காட்சிதான்.



காலை 9.30 மணியளவில் ஆரம்பித்த முற்றோதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இடையில் , 12.30 மணியளவில், ஸ்படிக லிங்காபிசேகம் நடை பெறப் போவதாக அறிந்து நாங்கள் அந்த திருக்காட்சியை நாடி எழுந்து விட்டோம். ஆனால் முற்றோதல் குழுவினர் மட்டும் கருமமே கண்ணாயினராக விடாமல் திருவாசகம் ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அபிசேகம் முடிந்து திரும்ப வந்து முற்றோதலில் கலந்து கொண்டோம். இருந்தாலும் முழுவதும் முடிவதற்கு நீண்ட நேரம் ஆன படியால் எங்கள் பயணம் தொடர நாங்கள் முற்றோதலை முழுவதும் முடிக்க இயல்வில்லையே என்ற குறை இருக்கத்தான் செய்தது..............

அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது மாணிக்கவாசகர் அவதரித்த தலமான திருவாதவூர். செல்லும் வழியில் திருப்பூவணநாதரை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும். மாலை நான்கு மணியளவில் திரு உத்தரகோசமங்கையிலிருந்து கிளம்பினோம்.



திருப்பூவணம், வைகை ஆற்றின் தென்கரையில் மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.



திருப்பூவணநாதர் திருக்கோவில், வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள மிகப்பழமையான பாடல் பெற்ற தலமாகும்.திருஞானசம்பந்தப் பெருமான் திருப்பூவணநாதரை வழிபடும் பொருட்டு, அம்பாளின் தபசு செய்த இடமான ஆடித்தபசு மண்டபத்திலிருந்து வடகரையிலுள்ள திருப்பூவண நாதரை வணங்கி வழிபடும் போது ஆற்று மணல்களெல்லாம் சிவலிங்கமாகக் காட்சி கொடுக்க திருஞானசம்பந்தரோ செய்வதறியாது அங்கிருந்தே வழிபட சிவபெருமான் அருளால் நந்தியெம்பெருமான் தலை சாய்த்து ஐயனின் காட்சி கிடைக்க அருள் புரிகிறார்.

சிவலிங்கத்திற்கு வலப்புறம் அம்பாள் சந்நதியும் எதிர்புறம் தீர்த்தமும் உள்ளன. சுயம்புலிங்கமான பூவணநாதர் புட்பவணநாதர் என்றும் அம்மன் சௌந்தரநாயகி, அன்னபூரணி, மின்னம்மை என்ற திருப்பெயருடன் அருள்புரிகின்றனர். நேரம் மிகக் குறைவாக இருந்த காரணத்தினால் வெகு சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

திருப்பூவணநாதரின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு மனநிறைவுடன் கிளம்பி, இரவு 8 மணியளவில் திருவாதவூர் வந்து சேர்ந்தோம். அங்கு எங்களுக்காக அவ்வூர் மக்கள் பல்ரும், தேவார ஓதுவார்களும் காத்துக் கொண்டிருந்தனர்.


மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த திருத்தலம் என்ற உணர்வே மெய்சிலிர்க்கச் செய்தது. திருவாசகம் எனும் தேனை வழங்கிய மணிவாசகப் பெருமான் ஒரு மிகச் சிறந்த ஞானாசிரியர், தத்துவப் பேராசான், சிவஞானச் செல்வர் என்று இன்னும் பலவாறு போற்றிப் புகழப்படுபவர். சிந்தைக்கினிய, செவிக்கினிய பாடல்கள் மூலம் கல் மனமும் கரையச் செய்து கடவுளுக்கும் உயிர்க்கும் உறவுப்பாலம் அமைத்தவர்.

நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க !
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க !


மணிவாசகப் பெருமானின் அவதரிப்புத்தலமான திருவாதவூர், செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தலைநகரமாகிய மதுரையம்பதிக்குப் பதினைந்து கல் தொலைவில் அமைந்துள்ளது. இவருடைய தாய் சிவஞானவதி அம்மையார் மற்றும் தந்தையார் ஆதிசைவ மரபினரான சம்புபாதசிருதர் ஆவர்.

கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கிய மாணிக்கவாசகர் தம் பதினாறு வயதிற்குள் எல்லா நூல்களிலும் வல்லவராக சிறந்து விளங்கியதைக் கண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் அவரைத் தன் முதலமைச்சராக்கி, ‘தென்னவன் பிரம்மராயன்’ என்ற சிறப்புப் பட்டமும் வழங்கிச் சிறப்பித்தான். ஆனால் அவர்தம் மனமோ, மாதொரு பாகன்பால் மட்டில்லாப் பேரன்பு பூண்டொழுகியது.

ஐயா தங்கவிசுவநாதன் அவர்களின், திருப்பெருந்துறை சொற்பொழிவு நினைவில் வந்தது. அடியார் துன்பம் பொறாத ஆலவாய் அண்ணல், நரிகளைப் பரியாக்கித், தேவர்களைப் பாகர்களாக்கித் தாம் குதிரை வணிகரைப் போலப் பாய் பரிமேல் அமர்ந்து குதிரைப் படைகளுடன் மதுரை வந்து பாண்டியனிடம் ஒப்படைத்த வரலாற்றை அழகுற விளக்கினார்.


ஆண்டவனை அடையும் ஒரே வழி அவன் மீது மாறாத ஆழ்ந்த அன்பு ஒன்றேதான், என அவர் எளிமையாக விளக்கிய பாங்கு அனைவரையும் ஈர்த்தது. ஆம் பக்தி என்பதற்கு எத்தனையோ தத்துவங்களும், விளக்கங்களும், வியாக்கியானங்களும் கூறினாலும், அவையெல்லாம் ஆன்றோர்களும், சான்றோர்களும் மட்டுமே கடைப்பிடிக்கக் கூடியதாகவே உள்ளது. ஆனால் சாமான்யர்கள் ஆண்டவன் மீது பக்தி செலுத்த வேண்டுமானால், எங்கனம் அது சாத்தியம் ? அதைத்தான் ஐயா அவர்கள் எளிதாக புரியும் வண்ணம், மாணிக்கவாசகப் பெருமான் ஆண்டவன் மீது கொண்ட மாறாத பக்தி அவரை ஆண்டவனை நோக்கி அடி எடுத்து வைக்க வைத்தது. அவர் ஆழ்ந்த பக்தி என்ற அன்புடன் ஒரு அடி எடுத்து வைத்தால் ஆண்டவன் எட்டு அடி எடுத்து வைப்பானாம். அப்படித்தான் கைலாயத்திலிருந்து வந்த சிவனாரும், மதுரையிலிருந்து வந்த மனிவாசகரும் ஒன்றாகச் சந்தித்தனர். அந்த ஆழ்ந்த பக்தி ஒன்று சேர்த்தது.

கண்ணுக்குத் தெரிவது பருப்பொருள். நுண்மையும் பருப்பொருளும் சேராது. நுண் உடம்பு, ஒளி உடம்பு கண்ணுக்குத் தெரியும், ஆனால் கையால் ஸ்பரிசிக்க முடியாது. மணிவாசக்ப் பெருமானுக்கு மானுடமாக வந்து ஒளி செய்தார் தன்னையே ஒளிப்பொருளாக ஆக்கினார்.மணிவாசகப் பெருமானின் அன்பை நுகரும் பொருட்டேதான், இமய மலையிலிருந்து ஓடோடி வந்தாராம் அந்த சிவ பெருமான் !
இதே அன்புதான், காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனி வழங்கச் செய்தது. அதன் மூலம் அவரை ஆட்கொண்டது...ஆக அன்பில்லாமல் இன்பம் வராது...அது ஆண்டவனே ஆனாலும். அன்பு இல்லாது வந்த இன்பமும் நிலைக்காது !அதாவது அன்பு எனும் அந்த மொழி ஒரு மௌன மொழியாம். தந்தியில்லாத கம்பியைப் போன்றது, உள்ளத்து உணர்வுகள் !
மானுட ஆக்கை என்பது இறைவன் கொடுத்தது. அதைத் தன்னைப் போல ஒளி வடிவாக, பேரருள் வடிவாக மாற்றுவதற்காகவே படைக்கப்பட்டது. ஆண்டவனின் திருவருளை எண்ணி வியந்து 561,பாடல்கள் பாடி தம் அன்பை வெளிப்படுத்தினார் மாணிக்க வாசகர்.

அவருடைய பிறந்த ஊரில் அவருக்கு கோவில் சமீப காலங்களில் எழுப்பப்பட்டுள்ளது.இந்த அருமையான தலத்தில் மனமும், உணர்வும் ஒன்றுபட, அனைவரும் மாணிக்கவாசகரையும் வணங்கி வழிபட்டு, அங்கேயே எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவை உண்டு சுவைத்து, அவர்களுக்கு நன்றி பாராட்டிவிட்டு, காவிரிக்கரை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு 9 மணியளவில்தான் அங்கிருந்து கிளம்பினோம்.வழியில் ஆண்டவனின் அருள் வடிவத்தை தியானித்தவாறு ஊர் வந்து சேர்ந்தோம்!.

தொடரும்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...