Monday, July 18, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (18)

ராமச்சந்திரன் குளித்து, காலை உணவருந்தி இரண்டாவது முறையாக ஒரு வாய் காப்பியும் அருந்திவிட்டு திண்ணையில் வந்து உற்சாகமாக அமர்ந்து விட்டார். இன்று அவருடைய உற்ற தோழர் ராகவன் வருகிற நாள். ஆம் ஒவ்வொரு மாதமும் 4 ஆம் தேதி தவறாமல், அருகிலிருக்கும் இந்தியன் வங்கியில் ஓய்வூதியம் எடுப்பதற்காக காலை பத்து மணிக்கெல்லாம் வந்து விடுவார். விடுமுறை நாளாக இருந்தால் ஒரு நாள் முன் பின் எப்படியும் வந்து விடுவார். வங்கி வேலை முடிந்தவுடன் நேரே ராமச்சந்திரனைப் பார்க்கத் தான் வருவார். அவருடன் ஒரு சில மணிகள் அரட்டையில் கழித்து விட்டு திரும்புவது வழமையாக நடக்கும் ஒன்று. ராகவன் ஊர் வம்பை சாடை பேசுவதில் வல்லுநர். தன் வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமர்த்தாக மூடி மறைத்துக் கொண்டு அடுத்தவர் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டு சாடை பேசுவதில் வல்லவர். சில நாட்கள் இருவரும் நேரம் போவதே தெரியாமல் மணிக் கணக்காக வாதம் செய்து கொண்டிருப்பார்கள். இந்த நாளுக்காக ராமச்சந்திரனும் பரபரப்பாக காத்துக் கொண்டிருப்பார்.
அன்று மணி 11.30 ஆகியும் ராகவனைக் காணாமல் குட்டிப் போட்ட பூனையாக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார் ராமச்சந்திரன். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். வாசலில் ராகவனின் இரு சக்கர வாகனத்தின் பிரத்யேக ஒலி ராமச்சந்திரனுக்கு மட்டுமே பழக்கப்பட்ட ஒன்று. நான்கு வீடு தள்ளி தெரு முனையில் ராகவனின் வண்டி திரும்பும் போதே மனிதர் இங்கு பரபரப்பாகி விடுவார்.
‘ஆகா, ஒரு வழியாக ராகவன் வந்து விட்டான் போலிருக்கிறதே. மணி 11.50 ஆகி விட்டது. இவ்வளவு நேரம் ஏன் தாமதம் என்று எண்ணிக் கொண்டே வாசலுக்கு வரவும், ராகவன் வண்டியை ஓரமாக மரத்தின் அடியில் நிறுத்தி விட்டு வரவும் சரியாக இருந்தது.
“ வாப்பா ராகவா. என்ன வங்கியில் கூட்டம் அதிகமா. ஏன் இவ்வளவு நேரம்?”
“ இல்லைப்பா. என் வேலை வழக்கம் போல முடிந்து விட்டது. ஆனால் அங்கு ஏடிஎம் அட்டை வாங்குவதற்காக வந்த ஒருவர் என்னைப் பார்த்து விட்டு எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என்று பிடித்துக் கொண்டார். அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு வருவதற்கு சற்று தாமதமாகி விட்டது”
“ சரி வாப்பா, வந்து உட்கார். இன்று ஏதோ வெப்பத்தின் கடுமை சற்று குறைவாகத் தான் இருக்கிறது. காப்பி சாப்பிடுகிறாயா” என்று கேட்டுக் கொண்டே பதிலை எதிர்பாராமலே வீட்டிற்குள் தலையைத் திருப்பி,
“ மங்களம், ராகவன் வந்தாச்சு பார். காப்பி எடுத்துண்டு வா” என்றார்.
” சரி வங்கியில் யாரைப் பார்த்தாய். யாராவது நம் கல்லூரி நண்பரா…?” என்றார் ஆவலாக.
“ அதெல்லாம் இல்லப்பா. யாருனே தெரியல. அவர் மட்டும் என்னைப் பார்த்தவுடன், புன்னகைத்து விட்டு உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று பிடித்துக் கொண்டார். நல்ல மனிதர். படபடவென அவர் பாட்டுக்கு தன் குடும்ப வரலாறே சொல்லி விட்டார். சூது வாது தெரியாத அப்பாவி மனிதர்”
“ அப்படி இல்லை ராகவா, சில நேரம் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால் இப்படி தோன்றும். மிதுனம், கன்னி போன்றவைகள் புதன் ராசி . புதன் தான் பரந்துபட்ட நட்பிற்குரிய கிரகம். அதாவது நெருங்கிய உறவுகள், ரத்த சம்பந்தங்களைவிட திடீரென்று அறிமுகமாகிறவர்களிடம் தான் இறுதி வரைக்கும் நட்பாகவும், ஆலோசனைகளை பகிர்ந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். ஒரு வேளை அவரும் உன்னைப் போலவே மிதுன ராசிக்காரராக இருப்பாரோ என்னவோ……..
நம்முடைய ராசிக்கு நட்பு ராசிக்காரர்களுடன் இது போன்ற அனுபவங்களைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, புதன் திசை ஒருத்தருக்கு நடக்கிறதென்றால், அதே புதன் திசை நடக்கிறவர்கள், புதன் ராசிக்காரர்களுக்கு இவர்கள் பேசுவது, சொல்வதெல்லாம் பிடிக்கும். இதே புதன் திசை நடப்பவர்களுக்கு எதிர்ப்பான குரு, கேது, செவ்வாய் திசை நடப்பவர்களைப் பார்த்தால் பிடிக்காது. அவர்களுடைய கருத்துக்கள், பேச்சு, செயல் என எதுவும் பிடிக்காமல் போகும்.”
ஒரு புன்னகையை பதிலாக தவழ விட்ட ராகவனுக்கு சோதிட சாத்திரத்தில் அதிக நம்பிக்கை இல்லை. ஆனால் ராமச்சந்திரன் சோதிட ஆய்வு செய்கிறேன் என்று சொல்லி பல விசயங்களை பகிர்ந்து கொள்வதால் பொறுமையாகக் கேட்டுக் கொள்ள முயற்சி செய்வார். அரசியலில் ஆரம்பித்து அன்றாட வாழ்வியல் நடப்புகள் வரை அத்துனைக்கும் சாதகத்தையே காரணமாக காட்டிக் கொண்டிருப்பார். தலை வலி, காய்ச்சல் என்றால் கூட நேரத்தைக் குறை கூறுவதோடு அதற்கு வைத்தியம் பார்த்துக் கொள்ளவும் நேரம் காலம் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற செயல்கள் தான் ராகவனுக்கு நகைப்பிற்குரியதாக இருக்கும். சில நேரங்களில் கோபமூட்டுவதாகக் கூட இருக்கும்.
ராமச்சந்திரன் தன் மனைவிக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து கட்டியை நீக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியும், சனி திசையைக் காரணம் காட்டி, மருத்துவர் மற்றும் மருந்து மாத்திரையின் உதவியுடன் அதனை ஆறு மாதம் தள்ளிப் போட்டவர். அந்த அம்மா பாவம் அத்தனை சிரமப் பட்டபோது கூட மனிதர் விட்டுக் கொடுக்கவில்லை. அத்தனை நம்பிக்கை சோதிடத்தில். அதனால் ராகவன் அதிகமாக எதிர்த்து வாதிடுவதை தவிர்த்து விடுவார். மூத்த மகன் திருமணத்திற்கு சாதகம் என்ற ஒன்றை மட்டுமே கணக்கில் வைத்துக் கொண்டு வலிய வந்த பல நல்ல வரன்களையெல்லாம் தவிர்த்து விட்டு மகன் விரும்பியபடி தன் துறை சார்ந்த பெண்ணாக இல்லாமல் வேறு பெண்ணை திருமணம் முடித்து வைத்தார். தந்தை சொல் தட்டாத மகனும் பாவம் மௌனமாக ஏற்றுக் கொண்டதும் ராகவனுக்கு ஆச்சரியம் தான். இந்த காலத்திலும் இப்படி தந்தை சொல் தட்டாத குழந்தைகளை பார்ப்பது அரிதுதானே. அந்த வகையில் ராமச்சந்திரன் புண்ணியம் செய்தவர் என்று எண்ணிக் கொள்வார். இரண்டு மகன்களும் சொக்கத் தங்கங்கள்!
இரண்டாவது மகன் இளமாறனுக்கும் எங்கெங்கோ சாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு அலைந்தவர் இறுதியாக தன் ஒன்று விட்ட தங்கை மகள் அனுவின் சாதகமே அருமையாக இருந்ததால் வேறு எதைப் பற்றியும் சற்றும் யோசிக்காமல் முடிவு செய்து விட்டார். அனுரட்சிகா, பெயருக்குத் தகுந்தவாறு அனைவரையும் அனுசரித்துப் போகும் நல்ல பெண். அனைவரிடமும் சமமான அன்புடன் பழகத் தெரிந்தவள்.
அதைவிட ராமச்சந்திரனைப் பொருத்த வரை அனுவை அவர் தேர்வு செய்ததற்கான காரணமே அவள் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவள் என்பதால்தான். திருவாதிரை மிக உன்னதமான நட்சத்திரம். என்பது அவரது கணிப்பு. சிவனுடைய நட்சத்திரம் என்று சொல்லுவார். திருவாதிரை நட்சத்திரதிற்கு மிதுன ராசி. மிதுன ராசிக்காரர்களுக்குரிய புதன் நட்பிற்குரிய கிரகமாம். அதனால் அனைவரிடமும் நட்புடன் பழகத் தெரிந்தவர்களாம். அதனால் குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் அனுசரித்துப் போகும் வாய்ப்பு அதிகமாக இருக்குமாம். இப்படியெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்.
தன் நண்பரின் உறவினர் மூலம் கொண்டு வந்த அவந்திகாவின் சாதகத்தில் தான் ஏதேதோ குறைகளைச் சொல்லி, மாமனார், மாமியாருக்கு ஒத்துப் போகாத நட்சத்திரம், பிற் காலங்கள் சரியாக இருக்காது என்று ஏதேதோ காரணம் காட்டி நிராகரித்து விட்டார். பெண்ணும், பிள்ளையும் ஒரே துறையில், ஒரே ஊரில் இருப்பதால் பணியில் முன்னேற்றமும், பெண்ணிற்கு பாதுகாப்பும் இருக்கும் என்று பெற்றோர் பாவம் இன்னும் ராமச்சந்திரனின் மனம் மாறாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர் என்னவோ அந்தப் பேச்சே எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். அதுவும் அனுவைப் பற்றிய பேச்சு ஆரமபமானவுடன் ராகவன் சுத்தமாக அவந்திகா பற்றிய நினைவையே விட்டு விட்டார். ராமச்சந்திரன் குடும்பத்தில் எத்துனை ஈடுபாட்டுடன் அவள் இருக்கிறாள் என்பதை அவர் வாய் மொழியாகவே பல முறை கேட்டு மகிழ்பவர் ராகவன்.
ராகவனுக்கு நேரம் அதிகம் ஆனதை நினைவு கூறும் வகையில் அலைபேசி சிணுங்க ஆரம்பித்து விட்டது. அவர் மனைவி மணி 1.45 ஆகி விட்டது என்பதை உணர்த்துவதற்காக அழைத்திருந்தார். ராகவன் எவ்வளவு சொன்னாலும் ஒரு நாள் கூட அங்கு சாப்பிட மாட்டார். தனக்காக் சமைத்த உணவு வீணாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். ராமச்சந்திரன் சில நாட்களில் முன்பே கட்டாயப்படுத்தி அங்குதான் சாப்பிட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தால் ஒரு சில நாட்கள் தன் மனைவியிடம் முன்னாலேயே சொல்லி விட்டு வருவார். அப்போது மட்டும் தான் சாப்பிடுவார். அதுவும் ராமச்சந்திரனுக்கு நன்கு தெரியுமாதலால் ஏதும் பேசாமல் அவரை வழியனுப்பி வைத்தார்.

ரம்யா, ஒரு வழியாக தன் வேலைகளையெல்லாம் முடித்து தயாராகி விட்டாள். மாறனுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அன்று அருகில் இருந்த பிரிட்ஜ் வாட்டர் கோவில் செல்லலாம் என திட்டமிட்டிருந்தனர். ரம்யாவிற்கு பெருமாள் கோவிலுக்குச் செல்வதென்றால் தாய் வீட்டிற்குச் செல்வது போல ஒரு மகிழ்ச்சி. அதனால் தவறாமல் மாதம் ஒரு முறையாவது சென்று வருவதை வழமையாகக் கொண்டுள்ளாள் அதைவிட இன்னொரு முக்கியமான விசயம் அங்குள்ள தென்னாட்டு உணவு வகைகள் கிடைக்கக்கூடிய உணவகம். அருமையான சாப்பாடும் கிடைக்குமே என்ற மகிழ்ச்சி.
ரம்யா போன் செய்து பார்க்கலாம் என்று நினைத்த போது கதவு தட்டும் ஓசை கேட்டு மாறன் தான் வந்திருக்கக் கூடும் என்று உள் மனதில் மணியடிக்க அலைபேசியை அணைத்து விட்டு கதவைத் திறக்கச் சென்றாள். மாறன் ஓரளவிற்கு உற்சாகமாக வந்திருந்தான். அப்போதுதான் பெற்றோரிடம் பேசிவிட்டு வந்ததால், வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தந்தையும் நலமாக இருப்பார் போல என்று ரம்யா புரிந்து கொண்டதால் நிம்மதியாக இருந்தது அவளுக்கும்.


பரந்த ஒரு மைதானம் போன்ற இடத்தில் மிக அழகான கட்டிடக் கலையுடன் வடிவமைக்கப்பட்ட கோவில். பெருமாள் ஆலயம் என்றாலும், சிவ பெருமான், பார்வதி தேவி, இலக்குமி நாராயணன், சரசுவதி, இலக்குமி, ராதா கிருட்டிணன், அனுமன், நவக்கிரகம், சத்தியநாராயணன் என்று பெரும்பாலும் அனைத்து மூர்த்தங்களும் ஒரே தலத்தில் தரிசிப்பது பெரும் பாக்கியமாக ரம்யா பூரித்துப் போவாள். மாறனுக்கு பெரிதாக ஆழ்ந்த பக்தி இல்லா விட்டாலும், ரம்யாவிற்காகவோ, மற்ற நண்பர்களின் வற்புறுத்தலுக்காகவோ அவ்வப்போது கோவிலுக்குச் சென்று வருவது வழக்கம். கோவிலில் தரிசனம் முடிந்து நிம்மதியாக சாப்பிட்டு விட்டு இரவிற்கு வேண்டும் உணவையும் வாங்கி வந்து விடுவார்கள். சில நாட்களில் அடுத்த நாள் வைத்திருந்து உண்ணுவதற்கான புளியோதரை தயிர் சாதம் என்று பேக் செய்து வாங்கி வந்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்வார்கள்.
கோவிலுக்குள் சென்றவுடன் இனம் புரியாத ஒரு நிம்மதி சூழ்வதை உணர முடிந்தது ரம்யாவால். அவந்திகாவிற்கோ கைகள் பரபரக்க ஆரம்பித்து விட்டன. உடனே அந்த அழகை வண்ண ஓவியமாகத் தீட்டுவதற்கு. ஒவ்வொரு சிலை வடிவத்தின் அழகையும் உள் வாங்கிக் கொண்டிருந்தாள் இயன்ற வரை. மாறனுக்கோ அவந்திகாவின் அந்த குழந்தைத்தனமான வெளிப்படையான உற்சாகம் ஆச்சரியமாக இருந்தது.
கோவிலில் தரிசனம் முடிந்து சாப்பிட்ட பிறகும் அங்கிருந்து கிளம்பும் விருப்பமே இல்லாதவளாக சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் அவந்திகா. மாறனும் மூவருக்குமாகச் சேர்த்து அடுத்த நாளைக்குமான உணவு வாங்குவதற்காக போய் வரிசையில் நின்று கொண்டிருந்தான். கூட்டம் ஓரளவிற்கு குறைந்திருந்தாலும் கோவில் நடை சாத்தும் நேரம் ஆகிவிட்ட படியால், புதிதாக உணவு தயாரிப்பதை நிறுத்தி விட்டார்கள். அதனால் இருப்பதை வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள்.
காலணிகள் விடும் இடம் வந்து அவரவர் காலணிகளை எடுத்து அணிந்து கொண்டு மறக்காமல் உணவு வாங்கிய பையையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர். அவந்திகா முதல் முறையாக இந்த கோவிலுக்கு வந்தபடியால் அதன் அழகையும், ரம்மியமான சூழலையும், ஆழ்ந்த அமைதியையும், சர்வ அலங்கார மூர்த்தங்களையும் பற்றி உற்சாகமாக வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தாள்….
சிற்றுந்தை ஓட்டிக் கொண்டிருந்த மாறன், தன் அருகில் இருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்து பின்னால் இருந்த ரம்யாவிடம் கொடுத்து,
“ ரம்யா கேண்டீனில் இருந்ததை வாங்கியிருக்கிறேன் . பார் போதுமா என்று. எனக்கு ஒரு பகுதி எடுத்து வைத்துவிட்டு நீக்கள் எடுத்துச் செல்லுங்கள் “, என்றான்.
“ என்னது சாப்பாடா, அப்ப இது நீ வாங்கியது இல்லையா?” என்று அவந்திகாவின் அருகில் இருந்த பொட்டலத்தை எடுத்துக் காண்பித்தாள்.
அப்போதுதான் தெரிந்தது, அவந்திகா தவறுதலாக காலணி போடும் இடத்திலிருந்து பக்கத்தில் இருந்த யாருடைய பொட்டலத்தையோ எடுத்து வந்தது.
இதை சொன்ன்வுடன், மாறன் “ பாவம், நம் அருகில் ஒரு குரூப் பசங்க இருந்தாங்களே, அவங்களோடதாத்தான் இருக்கும். காணாமல் தேடுவார்கள். கொண்டு போய் கொடுத்து விடலாம் என்றான். அவர்கள் ஒரு 15 நிமிட தூரம் கடந்து வந்து விட்டிருந்தார்கள். இருந்தாலும் திரும்பச் சென்று கொடுத்து விடலாம் என மாறன் முடிவெடுத்தான். ரம்யா கூட, அவர்கள் இந்நேரம் கிளம்பியிருக்கக் கூடும் அதனால் விட்டு விடலாம் என்று கூறிய போதும் மாறன்,
“ வேண்டாம், ரம்யா, எதற்கும் போய் முயற்சி செய்து பார்க்கலாம். அவர்களும் நம்மைப் போலத்தானே நாளைய சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை என்று மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். இப்போது காணாமல் போனது தெரிந்தால் எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும். அங்கு கேண்டீனும் க்ளோஸ் செய்திருப்பார்கள் “
என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்த குறுக்கு திருப்பத்தில் சென்று வண்டியை திருப்பிக் கொண்டு கோவிலை நோக்கிச் செலுத்தினான். அங்கு சென்று பார்த்தால் சொல்லி வைத்தது போல மாறன் குறிப்பிட்ட அதே இளைஞர்கள் நான்கு பேர் உணவகத்தில் நின்று தங்களுக்கு ஏதாவது தயார் செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள். உணவகத்திலோ எல்லாம் முடிந்து விட்டதால் எதுவும் தற்போது தயார் செய்ய இயலாது என்று கூறவும், மிகவும் வருத்தமான முகத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர். மாறன் சென்று அவர்களிடம் அந்தப் பொட்டலத்தைக் காட்டி அது அவர்களுடையதா என்று விசாரித்த போது அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! ஆம நாடு விட்டு நாடு வந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் பெற்றவர்களையும், உற்றவர்களையும் விட்டு விட்டு வருபவர்களின் முதல் இழப்பு வாய்க்குச் சுவையான நல்ல உணவு தானே !.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த போது மாறனின் மனிதாபிமானத்தின் மீதும், நல்ல எண்ணத்தின் மீதும் முதல் முறையாக அவந்திகாவிற்கு நல்ல அபிப்ராயம் தோன்றியது!.
தொடரும்.

1 comment:

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...