Monday, July 18, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 (6)

ஹரித்துவார் – சுவர்கத்தின் தலைவாசல்!

நம் இந்திய மக்களின் மிகப் புனிதமான ஆன்மீகத் தலங்களின் முக்கியமான தலம், ஹரித்துவார். புனிதப் பயணம் மேற் கொள்பவர்கள், ஹரித்துவார் சென்று, அங்கிருந்துதான் ஸ்ரீகேதாரநாத் மற்றும் ஸ்ரீபத்ரிநாத் ஆகியத் தல்ங்களுக்குச் செல்லும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தி மொழியில் ‘ஹர்’, என்றால் சிவன் என்றும், ‘ஹரி’ என்றால் விஷ்ணு என்றும் மற்றும் ‘த்வார்’ என்றால் வாசல் என்றும் பொருள் படுவதால் ஹரித்துவார், ஸ்ரீகேதார்நாத் மற்றும் பத்ரிநாத், இரண்டிற்குமே தலை வாசலாகக் கருதப் படுகிறது. ஆக ஹர் மற்றும் ஹரி இரண்டிற்கும் வெகுக் குறைந்த வேறுபாடுதான் என்பது தெளிவாகிறது. ஆம் கண்ணிற்குத் தெரியாத ஒரு சிறு கொம்புதான் இடைவெளி அல்லவா?

‘யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவர்’

நாங்கள் தில்லியில் தங்கியிருந்த, மடத்திலிருந்து விடியற்காலை 5 மணிக்கு சிற்றுந்தில் கிளம்பினோம்.சிவ புராணம் பாடி பிரயாணம் துவங்கினோம். மனதில் உற்சாகமும், முக்தி நகரங்கள் ஏழினுள் ஒன்றான மாயா என்ற ஹரித்துவாரைக் காணப் போகிறோம் என்ற பரவசமுமாகக் கிளம்பினோம். பல ஆண்டுகளுக்கு முன் கபில் என்கிற சாது ஒருவர் இங்குத் தங்கி தவம் புரிந்து கொண்டிருந்த காரணத்தினால் இது கபிலஸ்தானம் என்றும் வழங்கப் பட்டிருந்திருக்கிறது. ஹரித்துவார் சாதுக்களும்,ஆன்மீகப் ப்யிற்சி நிலையங்களும் உறுவாக்கிய ஆசிரமங்கள் மற்றும் தர்மசாலைகளின் கூடாரமாகவே உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் அன்றாடம் வந்து செல்கிற பெருமை வாய்ந்த நகரம். யக்சனிகளும், தேவர்களும் விஷ்ணு பகவானின் தரிசனத்திற்காக இங்கு வந்து கொண்டிருப்பதாகப் புராணக் கதைகள் சொல்கின்றன. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா விழா மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்த கும்பமேளா ஆகிய விழாக்களைக் காண இந்தியா முழுவதிலிருந்தும் லட்ச்க்கணக்கான பக்தர்கள் வந்து கங்கைக் கரையில் குவிவதைக் காணலாமாம். கங்கை அன்னை இமயமலையை விட்டு இங்குதான் சமதரையை அடைகிறாள்.


இங்குதான் கங்கைத் தீர்த்தம் எடுக்க வேண்டும். இங்கு கங்கையில் மூழ்குதலும் நம் பாவங்களைப் போக்குகிறது என்கின்றனர். ஹரித்துவார் கடந்தால் மற்றும் பல நதிகள் வந்து கலந்து விடுகின்றன. மலைப் பிரதேசத்திலிருந்து சம தரைக்கு கீழ் நோக்கி வருவதனால் மிக வேகமாக கம்பீரமாக ஓடுகிறது கங்கை. இக்காட்சி கண்ணையும், கருத்தையும் என்றுமே விட்டு அகலாத காட்சிகள். ஆம் படித்துறையைச் சுற்றி பல ஆலயங்கள் உள்ளன. நதியை இரண்டு பகுதிகளாகப் பிரிந்து செல்லும்படி படித்துறைகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நடு மையத்தில் உயர்ந்த மணிக் கூண்டும், மதன் மோகன் மாளவியாவின் திரு உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. பிர்மகுண்டம் எனும் மேல் புறமுள்ள படித் துறையில் நீராடலாம்.அங்குள்ள ஆலயங்களில் வழிபட்டு விட்டு மதிய உணவு முடிந்து சற்று நேர ஓய்விற்குப் பிறகு மாலையில் மீண்டும் கங்கையை அடைந்து, இலைத் தொன்னைகளில் மலரிட்டு நெய்தீபம் வைத்து கங்கா பூசை செய்து கங்கையில் விட்டோம். இது போன்று நூற்றுக் கணக்கான பக்தர்கள் நெய்தீபம் இடுவதால், அந்தி மயங்கும் அவ் வேளையில் கங்கை நதியில் ஒன்றன் பின் ஒன்றாக அந்த தீபங்கள் நீரின் மீது ஆடி அசைந்து போகும் அற்புதக் காட்சி கண்ணிற்கு குளிர்ச்சியூட்டுவதாகும்!

இதற்கு பிறகு ஹரித்துவார் நகர அதி தேவதையான மாயாதேவி ஆலயம் சென்று வழிபட்டோம். அருகிலேயே ’கீதா மந்திர் ’ என்கிற கண்ணன் திருக் கோவிலும் உள்ளது. அங்கேயும் சென்று வழிபட்டு விட்டு — பிரம்ம குண்டம் சென்றோம்.: படித் துறையின் மேற்புறம் அமைந்துள்ள பிரம்ம குண்டம, உலகின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் வரும் பக்தர்கள் புனித நீராடி வழிபடும் முக்கிய தலமாகும். இங்கு மூழ்கி நீராடுவதன் மூலம் உலக பந்தங்களிலிருந்து விடுபட முடியும் என்பது ந்ம்பிக்கையாக இருக்கிறது.

பிறகு ரயில் நிலையம் அருகில் உள்ள வில்வேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டு வந்தோம். இந்த திருமூர்த்தி, இயற்கையிலேயே, முகம் போன்ற ஐந்து பகுதிகளை உடையதாக இருக்கிறது. இங்குள்ள புவனேசுவரி ஆலயத்தில் அழகான சிவக்குமரனைக் காண்லாம்.இம் மூர்த்தியை அருணகிரிநாதர் தரிசித்து,மெய் சிலிர்க்கச் செய்யும் திருப்புகழும் பாடியுள்ளார்.

ஹரித்துவார் திருப்புகழ்

சிகர மருந்த வாழ்வது சிவஞானம்
சிதறி யலைந்து போவது செயலாசை
மகர நெருங்க வாழ்வது மகமாய
மருவி நினைந்திடா வருள் புரிவாயே
அசுர நெருங்கி னாமய முறவாகி
அவ்ர் மொடுங்கை யாறொடு முனமேகி
ககன மிசைந்த சூரியர் புகமாயை
கருணை பொழிந்து மேவிய பெருமாளே.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இத்தல முருகனை வணங்கிப் பாடிய பாமாலை:

மாயை யகற்று மாயை யென்னும் மகிமை அரித்துவாரமென்னும்
தூய தலத்தில் தவழ் கங்கைத் துறையில் கருணை நிறைவுடனே
தாயை யனைய அருள்புரிந்து தழைக்கும் தனிவேற் பரம் பொருளாம்
சேயை வணங்கும் திருவாளர் சிவமாம் பேறு பெறுவாரே !

மானசா தேவி மற்றும் சண்டி தேவி ஆலயஙகள் ஹரித்துவார் நகரத்தின் இரு பகுதிகள் இணைந்த மலை உச்சியில் அமைந்த, இயற்கை அழகு மிளிரும் பழமையான கோவில்கள. கீழிருந்து மலை உச்சிக்குச் சென்று அம்மனை வழிபட கயிறு உந்து {rope car] இருக்கிறது. வழி நெடுக அழகான காட்சிகளை அள்ளிப் பருகிக் கொண்டே சென்றது இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது. காவி உடை தரித்த துறவி ஒருவர் அந்தப் பயணத்தின் வழி நெடுக கண்களை இறுக மூடிக் கொண்டு இறைவனின் திருநாமத்தையே செபித்துக் கொண்டு மிகுந்த மன அழுத்தத்துடன் வந்து கொண்டிருந்தார். கீழே இறங்கும் போது தன் உடன் வந்தவர்களுடன் உயரமான இடத்திற்கு செல்வதென்றால் தனக்கு பயம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஏனோ என் மனம் இந்த காவி உடை இந்த சிறிய பயம் போக்கும் பக்குவத்தைக் கொடுக்கவில்லையா அல்லது ஆண்டவனிடம் முழுமையான நம்பிக்கையுடன் கூடிய சரணாகதி இல்லாததாலா என்று சிந்திந்துக் கொண்டுதான் உள்ளது.

கன்கல் என்று பழைய வரலாறுகள் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இப் புனிதத் தலம் ஹர்கி பைரியிலிருந்து ஐந்துகிலோ மீட்டர் தொலைவில், கங்கை ஆற்றின் நீல் தாரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான இடமாகும். ஒரு காலத்தில் இந்த இடம்தான் புனித வேள்வியில் தன்னையே அர்ப்பணம் செய்த அன்னை பார்வதி தேவியின் தந்தையான தக்சனின் நாட்டின் தலைநகராக இருந்தது. இங்கு தக்சேசுவர மகாதேவன் ஆலயம் என்ற மிகப் பழமையான கோவிலும் உள்ளது..

கங்கைக் கரையில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் திருமூர்த்தியின் பாதங்களை கங்கையின் புனித நீர் தொட்டுச் செல்கிறது. தக்சனின் யாகத்தில் தன்னையே அர்ப்பணித்த அன்னை சக்தி தேவியை காக்கும் பொருட்டு சிவ பெருமான் கயிலையிலிருந்து வந்த்தாக புராணங்கள் கூறுகின்றன. அந்த இடத்தில் எழுப்பப்பட்ட கோவில். இந்த தக்சேசுவர மகாதேவன் கோவில் என்கின்றனர். மகா சிவராத்திரியின் போது விசேச பூசைகள் நடைபெறுகின்றது. சிரவண மாதத்திலும் இக்கோவிலில் பெருந் திரளாக பக்தர்கள் வந்து வழிபடுவதும் வழமை.

ரிசிகேசம்


ஹரிதுவாரிலிருந்து ரிசிகேசம் மிக இனிய பயணம். திருக்கயிலையைத் தன் முடியில் தாங்கியுள்ள இமயத்தின் மீது பயணிக்கிறோம் என்ற எண்ணமே புல்லரிக்கச் செய்தது. சாலையின் இரு புறமும் பனி மூடிய சிகரங்களும், காடுகளும், கானாறுகளும் காண்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு தன் வசம் இழுத்துக் கொள்வதைத் தவிர்க்க இயலாது. சுமாராக 18 மைல் தொலைவு இந்த அழகை கண் குளிர தரிசித்தோம்.

ரிசிகேசத்தின் இரு மலைத் தொடர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் கங்கை பேரிரைச்சலுடன் ஆர்பரித்துச் செல்வதைக் காணும் போது ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இந்த ஆற்றைக் கடக்க அழகிய இரும்பிலான தொங்கு பாலம் உள்ளது. அதில் நடந்து சென்று மறுகரையில் உள்ள லட்சுமண சூலா என்னும் இடத்தை அடைந்தோம். அங்கும் படித்துறைகள் நீராடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. பனிக் கட்டி உறுகியோடும் நீராதலால் உறைந்து போகும் அளவிற்கு சில்லிப்பு இருந்தது. அங்கு ஒரு பழமையான சிவாலயமும், ராம லட்சுமணர் ஆலயமும் உள்ளது. இங்கு தென்னாட்டில் தோன்றிய ஸ்ரீராமானுசரின் திருமடம் ஒன்றும் உள்ளது. இங்கிருந்து ஒரு கல் தொலைவில் சொர்காசிரமம் எனும் தலம் உள்ளது.

சொர்காசிரமம் செல்லும் பாதை நெடுக, மா, பலா, வாழை மற்றும் தேக்கு மரச் சோலைகள் மட்டுமன்றி சாதுக்கள் தங்கும் குடில்களும் காண முடிந்தது.ஆசிரமங்களும், தர்ம சாலைகளும் நிறைந்த ரிசிகேசம் அமைதியும், இயற்கை அழகும் ஒருங்கே இணைந்த ஒரு சொர்க்க பூமி என்றே கூறலாம். வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒரு இன்ப ஊற்று நம் மனதை நிறைப்பதை அவரவரே அனுபவத்தால் மட்டுமே உணர முடியும் என்பதே நிதர்சனம்! வட நாட்டில் தரிசனம் செய்வதென்றால் கூடுதலான ஒரு மகிழ்ச்சி, அங்கு பெரும்பாலான கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு நம் கையாலேயே நீர் ஊற்றி அபிசேகம் செய்ய முடியும் என்பதுதான்.

சுவர்க்க ஆசிரமும், கீதா பவனமும்!

சுவாமி ஆத்ம பிரகாஷ் காளி கம்பளி வாலா என்ற சாதுவால் கட்டப்பட்ட ஆசிரம் அன்றாடம் பல பக்தர்களால் தரிசிக்கப் படக் கூடியதாகும். இந்த ஆசிரமத்திற்கு வெகு அருகில் கீதா பவனம் இருக்கிறது. இங்கு, பகவத் கீதையின் சாராம்சங்களும், ராமாயணத்தின் சாராம்சங்களும் சுவர்களில் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன. கம்பளி வாலா என்கிற இப் பெருமகனார், கைலாய யாத்ரீகர்களுக்கு பல வகையில் சேவை புரிந்துள்ளாராம். இங்குள்ள திருமடங்களில் ஆயிரக் கணக்கானோர் தங்கும்படி விசாலமான கட்டிடங்கள் உள்ளன. சாதுக்களுக்கு இலவசமாக அன்ன தானமும் நடந்து கொண்டிருக்கிறது. அருகில் ஒரு பூங்காவில், புராண, இதிகாசத் திருவுருவங்களை அழகாக கண்ணாடிக் கூடுகளில் அமைத்துள்ளது கண் கொள்ளா காட்சியாகும். எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடும் அளவிற்கு இயற்கை அன்னையின் எழில் நடனத்தை திரும்பிய புறமெல்லாம் கண்டு களிக்க முடியும். இத் தலத்தின், அமைதியான சூழலும், இயற்கையின் வனப்பும், வெகு எளிதாக தவ நிலையை கூட்டுவிக்கக் கூடியதாகும். வாழ்நாளில் ஒரு சில நாட்களாவது இங்கு தங்கி இருப்பது வாழ்க்கையில் பெறும் பேராகும். சற்று தொலைவிலேயே சிவானந்த ஆசிரமம் உள்ளது.


சிவானந்த ஆசிரமம் 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஆசிரமம் ஆன்மீக வாழ்க்கை கூட்டமைப்பின் தலைமைச் செயலகம் என்று சொல்லும் அளவிற்கு உலகளவில் புகழ் வாய்ந்த பயிற்சி அரங்கமாகும். சுவாமிஜி ஆன்மீகம் பற்றிய பல்வேறு நிலைகளையும் குறித்து தெளிவாக பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிரமத்தில், கோவில், தவ மையம், சொற் பொழிவுக் கூடங்கள், மருத்துவ மனை மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு தன்னல மற்ற சேவை புரியும் பிட்சுகளின், யோகப் பயிற்சி மையம் மிகப் பிரசித்தம் ஆகும்.ஷாஜகான்பூர் மகாராஜாவால் கட்டப்ப்பட்ட ஆசிரமும் கைலாய ஆசிரமும் உள்ளது. மகரிஷி மகேஷ் யோகி அவர்களுடைய தலைசிறந்த தவ மையத்தின் தலைமைச் செயலகமும் சுவர்காசிரமத்தில் உள்ளது.

ராம் ஜூலா என்ற புதிதாக கட்டப்பட்ட தொங்கு பாலம் ரிசிகேசத்திலிருந்து 4கிமீ தொலைவில் உள்ளது. கங்கை நதியின் மீது 1939 ஆம் ஆண்டு கட்டப்பட்ட லட்சுமண் ஜூலா என்ற பாலம் 7 கீமீ தொலைவில் உள்ளது.லட்சுமணனுக்காக கட்டப்பட்ட புஷ்கர் கோவில் 6 கிமீ தொலைவில் உள்ளது. ரிசிகேசத்தின் மத்திய பகுதியில் மிகப் பழமையான பாரதமாதா கோவில் உள்ளது. இங்கிருந்து 2 கிமீ தொலைவில் ஸ்ரீராமர் வந்து நீராடியதாக நம்பப்படுகிற ரிஷி குண்டம் மற்றும் ரகுநாத் கோவில் உள்ளது. மிகப் பழமையான சத்ருகனனுக்கான கோவிலும் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

பிறகு கடைவீதியைச் சுற்றி வந்தோம்.நல்ல கமபளிகளால் ஆன உடைகளும், கை வேலைப்பாடுகளான எம்பிராய்டரி மற்றும் சரிகையால் ஆன அழகிய சேலை மற்றும் குழந்தைகளுக்கான உடைகளும் மிக அழகாக இருந்தது.இரவு 10 மணி வரை சுற்றிவிட்டு, உணவு உண்டபின் கிளம்பி தில்லி வந்து சேர்ந்தோம். அடுத்த பயணம் தலை நகரும் அதைச் சுற்றிய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும்!

you are invited to view ஹரித்துவார் – ரிஷிகேஷ்

ஹரித்துவார் – ரிஷிகேஷ்

pavala sankari

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...