Thursday, September 29, 2011

இன்கண் - கலீல் கிப்ரான் ( மொழி பெயர்ப்பு )


இன்கண்

வருடம் ஒருமுறை நாட்டின்பக்கம் தலை காட்டும் ஓர் துறவியும், அம்மகானை நெருங்கியே, இன்கண் குறித்து இயம்பும்படி வேண்டினாரே!

மறுமொழியாய் பகன்றாரே அம்மகானும்:

இன்கண் என்பது சுதந்திர - கானம்,
ஆயினும் அஃது சுதந்திரமன்று.
அது உம் இச்சைகள் மலரும் பருவம்,
ஆயினும் அஃது அவற்றின் கனிகள் அன்று.
அது உயர்ச்சி நோக்கி அழைக்கும் ஆழம்
ஆயினும் அஃது ஆழமும் அன்று உயரமும் அன்று.
அது கூண்டில் அடைக்கப்பட்ட சிறகுகளே.
ஆயினும் அஃது சூழ்ந்து கொண்ட வெற்றிடம் அன்று
ஓய், ஒவ்வொரு மெய்மையிலும் , இன்பமே சுதந்திர கீதம்.
மேலும், யாம் உவகையுடன் நிறைந்த  இதயத்துடன்
உம்மை இசைக்கச் செய்கிறேன்;
இருப்பினும் உம் இதயம் அந்த இசையினூடே
உம்மையே இழக்காமல் இருக்கச் செய்வேன்.

உம்முடைய இளவல்களோ உண்மகிழ்வே உன்னதமாக 
எண்ணி எதைஎதையோ நாடிச்செல்கின்றனர்.
அது காரணம் கொண்டு அவர்கள் விசாரணைக்கும்
கண்டிப்புக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
யாம் அவ்விளவல்களை ஒருகாலும் விசாரிக்கவோ, கண்டிக்கவோ செய்யோம். அவர்களின் தேட்டத்தை ஏற்போம்.
அவர்கள் இன்பத்தைக் கண்டுபிடிக்கலாம்;
ஆயினும் அவள் மட்டும் தனித்து அல்ல;

சகோதரிகள் எழுவராம் அவளுக்கு, அதிலும் கடையவள்,
இன்பத்தினும் இனியவள்.
வேருக்காக பூமியைத் தோண்டி ஆங்கே புதையலைக் கண்டெடுத்த
மானிடனை அறிந்திலையோ நீவிர்?

உம் மூதறிஞரில் சிலர், இன்பம் என்பது மயக்க நிலையில் இழைத்த தவறென துயருற்று நிற்கின்றனர்
ஆனால், துயர் என்பதெல்லாம் , மேகம்சூழ் மனமேயன்றி
அதற்கான தண்டனம் அன்று.
அவர்கள் தம் இன்பங்களின் நன்மையுணர்தல் நலம்,
காரணம் அவைகள் கோடையின் அறுவடைகளாகலாம்.
இருப்பினும் அந்த சோகமே சுகமாயின் அவர்கள் சுகமாக்கப்படட்டும்!

மேலும், உம்மவரில் தேட்டலில் திளைத்திருக்கும் இளவலாகவும் இல்லாமல்
நினைவலைகளைச் சுமக்கும் முதியோராகவுமன்றி இரண்டுங்கெட்டானாக
இருதலைக்கொள்ளியாய் இருப்போரும் உள்ளனரே;
அவர்களின் தேட்டலின் திணறலிலும், நினைவலைகளின் தீண்டலினாலுமே
அனைத்து இன்பங்களிலிருந்தும் விலகி இருக்கின்றனரே,
அவர்தம் இச்சைகளை புறக்கணிக்கவாவது செய்யலாம் அன்றி 
அதற்கெதிரான தவறைக்கூட இழைக்கலாம்.
ஆயினும் அவர்களை முன்னிறுத்துவது அவர்தம் உண்மகிழ்வுகளே!
ஆம், இப்படித்தான் அவர்கள் நடுங்கும் கரங்களுடன், வேருக்காகத் தோண்டும் குழிகளிலும் புதையலைக் கண்டெடுக்கின்றனர்.
ஆயினும் அந்த ஆர்வத்தை புண்படுத்தக்கூடியவர் எவர் 
என்று எமக்குக் கூறுங்கள்.
எங்கேனும் கீதமிசைக்கும்புள் , இரவின் இனிமையை புண்படுத்துமா,
அன்றி அந்த மின்மினிதான், நட்சத்திரங்களை புண்படுத்துமா?
உம்முடைய தீசுவாலையோ அன்றி கரும்படலமோ அவ்வளிக்குச் சுமையாகக்கூடுமோ?
பணிக்காரனால் இடர்பாடு இழைக்கும் நித்சலமான குளமாக 
எண்ணிப்பார் உம் இச்சையை?

மறுதலிக்கலாம் உம் இன்பங்களை அடிக்கொருமுறை, ஆயின்
உம் சரிவுகளின் விருப்பத்தை சேமித்துக்கொள்
இன்று புறக்கணிக்கப்படுவதாகக் காட்சியளிப்பது, மறு நாளுக்காகக் காத்திருக்கக்கூடும் என்பதை எவர் அறிவார் ?
தம் பாரம்பரியத்தையும்,  உண்மையான தேவையையும் உம் சரீரம்
அறிந்திருப்பதோடு , அது வஞ்சிக்கப்படாமலும் இருக்கலாம்.
உம் சரீரம் என்பது உம் ஆன்மாவின் நரம்பால் இசைக்கப்படும் யாழிசை,
அதிலிருந்து இனிய நாதத்தை மீட்டுவதோ அன்றி குழப்பி ஒலிகளை 
வெளிப்படுத்துவதோ எதுவாயினும் உம்மால் மட்டுமே .

“ நன்றாக இல்லாத இன்பத்திலிருந்து, நன்றாக உள்ள இன்பத்தை எவ்வாறு அடையாளம் காணப்போகிறோம்? “, என்று உம் இதயத்தைக் கேட்டுப்பார் இப்போது.
உம் வயலுக்கும், தோட்டத்திற்கும் சென்று பார், தேனீயின் இன்பம் மலரின் தேனைச் சேகரிப்பதிலேயே உள்ளதென்பதை உணர்வாய்
ஆயினும் தன் தேனை அந்த தேனீக்காக வழங்குவதிலேயே அம்மலரின் 
இன்பமும் உள்ளது.
அத்தேனீக்கு ஒரு மலர் என்பது வாழ்வின் நீரூற்றாகும்,
அம்மலருக்கோ ஒரு தேனீ காதலின் தூதுவனாகும்,
தேனீ மற்றும் மலர் என்ற அந்த இரண்டிற்கும் இன்பத்தைக் கொடுப்பதும், பெறுவதும் தேவையும் மற்றும் மெய்மறக்கச் செய்வதுமாகும்.

ஆர்பலீசு மக்களே, அந்த மலர்களையும், தேனீக்களையும் போன்று உங்கள் இன்பத்திலிருங்கள். 


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு -- குறள் (1152)

http://youtu.be/Yr3Ymt69Mi0


                                                               

No comments:

Post a Comment