Wednesday, October 5, 2011

அன்னையே! அம்பிகையே! கலைவாணியே!


அருள்மிகு மகாசரசுவதி ஆலயம் - கூத்தனூர்

தல புராணம்:



கையினில் வீணையும் கட்கமும் நூல்கொண்ட
கருணையின் வாணியுன்னை - என்றன்
மெய்யுநகப் பாடியே வேண்டுவேன் நித்தமும்
வெற்றியின் கொற்றமே வா - நெஞ்சில்.

ஐயமும் நீங்கிவிடத் தெய்வமே கூத்தனூர்
ஆண்டிடும் அருள்விளக்கே - நான்
செய்வதொன்றும் அறிய மாட்டேன் எத்தவறும்
செய்யாமல் காத்தருள் கவே!

உலகில் தோன்றிய சகல சீவராசிகளும், இன்பமாக வாழும் பொருட்டு நல்ல பல வழி முறைகளை அருளும் மிக உயர்ந்த நூலே வேதங்கள் என்பது முன்னோர் வாக்கு. இந்த வேதங்கள் ஈசுவரனின் திருவாய்மொழியாகவே தோன்றியதேயன்றி மனிதரால் இயற்றப்பட்டதன்று என்பதும் நம் முன்னோர் வழி நம்பிக்கையாம். வேதங்களின் இறுதியான தத்துவங்களை விளக்கும் பகுதிகளுக்கு வேதாந்தங்கள் என்றும் உபநிடதங்கள் என்றும் பெயராம். இவை நிலையான பேரின்பங்களை அடையும் முறைமைகளை விளக்குகின்றன. அவ்வித உபநிடதத்துள், “சரசுவதி ரஹஸ்யோ பனிஷத்” என்பது ரிக் வேதத்தை சார்ந்த ஒன்றாம். இதன் முதல் பகுதி சரசுவதி தேவியின் மகிமைகளையும், பிற்பகுதி ஆத்ம தத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.
saraswathi.jpg
மனிதர்களின் தீய பழக்க வழக்கங்களும், பாவச்செயல்களும், சிறந்த நூல்களைக் கற்பதன் மூலம் அகற்றப்படுகின்றனவாம். நூல்களின் வடிவாக விளங்கும் சரசுவதி தேவியே இப்பாவங்களைப் போக்கக்கூடியவளாம். நல்ல வாக்கு வன்மையையும் அருள்பவளும் சரசுவதி தேவியே. கலைமகளை முழு நம்பிக்கையுடன், மனதார வணங்கினால், வாக்கு வன்மையும், அறியாமை நீங்கிய நல்லறிவுத்திறனும், கிட்டும் என்பதும் ஐதீகமாகும்.

இத்தகைய பல்வேறு பெருமைகள் வாய்ந்த கலைமகளுக்கு, தமிழ்நாட்டில், “கூத்தனூர்” என்னும் இடத்தில் மட்டுமே தனிக்கோவில் கட்டப்பட்டுள்ளது. சோழ மன்னர்களால் பெரிதும் பராமரிக்கப்பட்டு வந்த , சரசுவதி தேவியின் பூரண அருள் பெற்ற ஒட்டக்கூத்தரின் நினைவாலேயே, இவ்வூர் கூத்தனூர் என்று பெயர் பெற்றுள்ளது.
saraswati - koopuram.jpg

புண்ணியபூமியாம் நம் பாரத நாட்டில், சிவபெருமானுக்கு உகந்த நால்வர் பெருமக்களால் பாடல் பெற்ற தலங்களும், சக்தி தலங்களும், வைணவத் திருப்பதிகளும், இப்படி தெய்வீக மணம் பரப்பும் பல்வேறு தலங்களும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சக்தி வழிபாடு என்பது அனைவராலும், பாகுபாடின்றி ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும். பிரபஞ்சத்தின் ஒரே அன்னையான சக்தி தேவியின் பல்வேறு வடிவங்களுள் ஒன்றான சரசுவதி தேவி அறிவு மற்றும் அன்பு ஆகியவற்றின் முழுமையான அம்சமாக விளங்குபவளாம். ஆதி பராசக்தியாகிய அம்பிகை , துர்கா, இலக்குமி, போன்ற வடிவங்களையும் கொண்டவளாவாள். அனைத்து உலக சீவராசிகளுக்கும் அன்னையாய் விளங்குபவள் இவளே!

ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என்னுள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்குவாராது இடர்
[சரசுவதி அந்தாதி]

கோவில்கள் நிறைந்த தென்னகத்தின் மிகச் சிறப்புடையது சோழநாடு எனலாம். அச்சோழ வளநாட்டில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் என்னும் ஊரில் கூத்தனூர் அம்மன் உறைகிறாள்.

கூத்தனூர், திருவாரூர் - மயிலாடுதுரை மார்கத்தில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தின் அருகே அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
திலதைப்பதி என்னும் நூலின் மூலம், இவ்வூர் முன் காலத்தில் அம்பாள்புரி என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஹரிநாகேஸ்வரம் என்று மற்றொரு பெயரும் உண்டு இத்திருத்தலத்திற்கு.

இரண்டாம் இராசராசன் தம் காலத்தில் அவைப்புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கியபடியால், அவர் பெயரால் கூத்தன் ஊர் - கூத்தனூர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஞானத்தின் பிறப்பிடம் அமைதி அல்லவா? அமைதியான சூழலில்தானே கல்வியும்,கலைகளும் வளர முடியும். ஞானவடிவமாகத் திகழும் அன்னை சரசுவதி தவம் செய்வதற்காகத் தேர்ந்தெடுத்த, அமைதியும், அழகும் நிறைந்த பூமியே கூத்தனூர் என்பது உணரமுடிகிறது. அம்மையின் விருப்பமான உறைவிடம் என்பதாலேயே அம்பாள்புரி என்றானது இவ்வூர்.

தல வரலாறு :

saraswati6.jpg

அன்னையின் அருள் விளையாடல்கள் பலப்பல. காளிதாசனுக்கு சம்புராமாயணம் பாட அருள் புரிந்ததோடு, கம்பனுக்காக கிழங்கும் விற்றாள். தயிர் கடையும் இடையர் மகளாக தோன்றினாள். தமயந்தி நளனைத் தேர்ந்தெடுக்க பேருதவி புரிந்தவள். ஆதிசங்கரரின் பெருமைகள் வெளிப்படவேண்டி, சரசவாணியாய் அவதரித்த நாமகள்.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் வல்லமை வேண்டி கலைமகளைப் பூசிக்க, கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்தும், தட்சிண வாகினியாய் ஓடும், அரிசொல் மகாநதியின் நீரினால் அபிடேகம் செய்தும் நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வரலானார். கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் அவரை மனமுவந்து வரகவியாக்கினார் என்பர். மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக விளங்கி கவிச்சக்கரவர்த்தி என்ற பெரும் புகழையும் அடைவதற்குப் பேரருள் புரிந்த கூத்தனூர் சரசுவதியை, “ ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய” என்று தக்கயாகப் பரணியுள் பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

சங்கமர்கள் ஒட்டக்கூத்தரை கொல்ல முயன்ற போது அவர் புகலிடம் தேடி காளி கோவிலினுள் தஞ்சம் புகுந்தாராம். பரணி நூல் பாடினால் அவரை விடுவிப்பதாக சங்கமர்கள் வாக்களிக்க, அது கேட்டு, ஒட்டக்கூத்தரும் பரணி நூலொன்று பாடியதாகவும், நாவிலிருந்து பாட துணைபுரிந்த நாமகளை, ” ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய” என்று பாடினார் எனவும் வரலாறு கூறுகிறது. ஒட்டக் கூத்தர் மறைந்திருந்த ஊர் வீரர்வாடி எனும் பெயர் பெற்றுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வீரர்வாடி, கூத்தனூரில் இருந்து 1/2 கி.மீ. தொலைவில், ஆற்றின் மறுகரையில் உள்ளது.

ஒட்டக்கூத்தர் என்ற பெயர் பெறுவதற்கு காரணமான நிகழ்ச்சியும் இவ்வூரில் நிகழ்ந்திருக்கலாம் என்று “ கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்” என்ற நூல் கூறுகிறது. செங்குந்தர்களின் தலைகள் ஆயிரத்தை வெட்டி அவற்றைக் கலைவாணியின் அருளால் ஒட்ட வைத்தார் கூத்தர். அதன் காரணமாகவே அவர் ஒட்டக்கூத்தர் என்று அழைக்கப்பட்டார். அவ்வாறு ஒட்டும் பொருட்டு அவர் பாடிய பாடல்கள் “எழுப்பெழுபது” எனப்படும். அந்நூலில் ஒட்டக் கூத்தர் கலைவாணியிடம் விடும் வேண்டுகோள்:

“கலைவாணி நீயுலகி லிருபதுவுங்
கல்வியுணர் கவிவல்லோரை
நிலையாகப் புரப்பதுவு மவர்நாவில்
வாழ்வதுவு நிசமேயன்றோ
சிலைவாண னரவிந்தா யிரம்புயங்க
டுணிந்துமுயர் சீவ னுற்றான்
தலையாவி கொடுத்திடுஞ் செங்குந்தருயீர்
பெற்றிடவுந் தயைசெய் வாயோ”

ஒவ்வொரு பாடலின் இறுதியும் வாணித்தாயே என்று முடிவதையும் காணலாம்.

வெண்ணிற ஆடை தரித்து வெண்டாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை இடக் கீழ்க்கையில் புத்தகமும், வலக்கீழ்க் கையில் சின் முத்திரையும், வலமேல் கையில் அட்சர மாலையும் , இடமேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி சடாமுடியுடன் துடியிடையும், கருணை புரியும் இரு விழிகளும், மூன்றாவது ஞானத் திருக்கண்ணும், புன்னகை தவழும் மென்னிதழுமாக, கிழக்கு முகமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள்.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்டதிரு” [ திருக்குறள்]

சரசுவதி தேவியை எவர் ஒருவர் ஒருமுறை வணங்குகின்றாரோ அவருக்கு, தேனும், பாலும், திராட்சையும் போன்ற இனிய சொற்றொடர்கள் சித்திக்கப் பெறுவார்கள் என்றும்,காவியங்கள் படைப்பவராகவும் விளங்குவர் என்று சவுந்தரியலகரி கூறுகின்றது.

koothanoor-b.jpg

அன்னை சரசுவதியை வழிபட்டு நம் நாளைத் துவங்குவது மூலம் நம் வித்தை சிறக்கும். நல்வாழ்வு அமைவதோடு, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் முடியும். அவள் அருள் வேண்டி, அவளது திருவடித்தாமரைகளை நம் மனதில் சுமந்து வழிபடுங்கால், கல்லாத உலகளவை, திளையளவாகச் செய்யும் வல்லமை அம்மகா சக்திக்கு உண்டு.

இக்கோவிலில் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இதன்படி, கலி 4314ல், சரசுவதி தேவிக்கு நடத்தப்பட்ட கும்பாபிசேக விவரங்களும் உள்ளன.
அம்பிகையின் பீடத்தில் உள்ள நான்காவது கல்வெட்டில் “ மஹாகணபதி சதா சேர்வை” என்று உள்ளது. நவராத்திரி பத்து நாட்களிலும் விநாயகர் வீதியுலா மட்டுமே நடைபெறுவது இக்கருத்தை வலியூட்டுவதாகவும் இருக்கலாம்.

வேறெங்கிலும் இல்லாது, தமிழகத்தில் மட்டுமே சரசுவதிக்கென்று தனிக்கோவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

இக்கோவில் பெரிய மதில்களுடன் அமைந்திருக்கிறது. ஒரே பிரகாரம்.பிரகாரத்தின் தென்மேற்கு மூளையில், நர்த்தன விநாயகர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும்.

அம்பிகையின் கோவிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. கருவறையின் மேலே ஐந்து கலசங்களுடன் ஞானத்தின் இருப்பிடத்தை உலகோருக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது. கர்பக்கிரகத்திற்குள் அம்பிகை ஞானத்தவம் இயற்ற, அர்த்த மண்டபத்துள் உத்சவ விக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. மிக அழகான நடராசர் சிலையும், அடுத்து மகாமண்டபத்தில் இடப்பக்கம் வேதம் ஓதும் நான்கு திருமுகங்களுடன், கைகூப்பிய வண்ணம் பிரம்மா நின்ற கோலத்தில் இருப்பது காண்பதற்கு அரியது. முன்புறம் சுப்பிரமணிய சுவாமியும் உள்ளார். இம்மண்டபத்தின் வெளியே இடப்புறம் ஒட்டக்கூத்தரின் சிலை உள்ளது.

இக்கோவிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி 12 நாட்களும் பின் பத்து நாட்கள் ஊஞ்சல் உற்சவமாக நடைபெறும். விஜயதசமியன்று குழந்தைகளுக்கு வித்யாப்பியாசம் என்கிற எழுத்தாணிப்பால் செய்விக்கப்படுகிறது. பல இசைக்கலைஞர்களும் நாட்டியக் கலைஞர்களும் இங்கு தங்கள் கலையை அரங்கேற்றி, கலைமகளின் அருள் பெற்று தங்கள் வித்தைகளில் மேன்மேலும் உயர்ந்து வருவதும் கண்கூடு. விஜயதசமியன்று நூற்றுக்கணக்கில் வாகனங்கள் ஆயுத பூசைக்குப் பிறகு இக்கோவிலை வலமாக வருவது கண் கொள்ளா காட்சியாகும்!

பெருந்திருவும் சயமங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றின் எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளும் தரும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ்சீர் தருமே
[ சரசுவதி அந்தாதி]

கல்வி வளர, மாணவர்கள் தேர்வில் நன்மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைய, தினமும் காலையில் 8 முறை சொல்ல வேண்டிய சுலோகம்:

புத்தகம் அக்க மாலை வராபயம் பொருந்து கையாள்
முத்தணி அணிவாள் வெள்ளை முளரி ஆசனத்தால் மண்ணிற்
சத்தமோடு அத்தங்கண்ட தவளமெய் வாணிவேதா
உத்தம மனைவி வெண்தூது உடையள் தாளிணைகள் போற்றி.

--

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...