Friday, November 16, 2012

துர்காபாய் தேஷ்முக்


துர்காபாய் ஒரு பெண்ணல்ல்
அவர் ஒரு மனித டைனமோ (மின்னோட்டம் உண்டாக்கும் பொறி)

(சரோஜினி நாயுடு)


”இரும்புப் பெண்” என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற துர்காபாய் தேஷ்முக், மிக வித்தியாசமான, துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீராங்கனை மட்டுமல்லாது, தன்னலமற்ற ஒரு சிறந்த சமூகசேவகி, மிக வித்தியாசமான பெண்ணியவாதி.
அரசியலமைப்பு மன்றம் மற்றும் தற்காலிக பாராளுமன்றத்தில், 750 திருத்தங்களுக்கு குறைவிலாமல் கொண்டுவந்தவர். கோடிக்கணக்கான நிதியை மூலதனமாகக் கொண்டு ஆறு பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்தவர். பயிற்சி பெற்ற சரியாக நிர்வகிக்கப்படும் ஊழியர்கள் மூலமாக பல சமுதாய மாற்றங்கள் கொண்டுவர முடியும் என்ற கனவும் உடையவர். தம்முடைய சுதந்திர தாகத்தின் விளைவாக இளம் வயதிலேயே சிறைக்கம்பிகளைக் கண்டவர். ஒடுக்கப்பட்ட மற்றும், ஒதுக்கித்தள்ளப்பட்ட பெரும்பான்மையான மகளிருக்காகப் போராடியவர். அவருடைய வாழ்க்கை  இலக்குகள் நிறைந்ததாகவும், சாதனைக்ளை ஊக்குவிக்கின்ற சம்பவங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

ஜூலைத்திங்கள் 15ம் நாள், 1909ம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசம், இராஜமுந்திரியில், காக்கிநாடாவின் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய எட்டாவது வயதிலேயே, ஒரு வசதியான ஜமீந்தார் குடும்ப தத்துப் புத்திரனுக்கு பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு , அவர் பருவமடைந்த போதுதான் திருமணம் என்பதற்கான அர்த்தம் புரிந்தது. அதில் விருப்பமில்லாதலால் அந்த திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு பொது வாழ்க்கையில் ஈடுபட முடிவெடுத்தார். சுப்பாராவ் என்ற தன்னுடைய இளம் கணவரிடமும் தன் மனநிலையைச் சொல்லி புரியவைக்க முடிந்தது அவரால். சுப்பாராவும் அதனை ஏற்றுக் கொண்டு கொஞ்ச காலம் கழித்து ஒரு வழக்கறிஞரின் மகளை திருமணம் செய்து கொண்டார். 30 ஆண்டுகள் அவரோடு வாழ்ந்த பின்பு தம்முடைய மனைவியின் எதிர்காலம்  பற்றிய நம்பிக்கையாக துர்காபாயை நினைத்தார் என்பது ஆச்சரியமான விசயம்.


காகிநாடாவில் தக்‌ஷிண்பாரத் ஹிந்தி பிரசாரசபா ஆரம்பித்தபோது தானும் சேர்ந்து படித்துக் கொண்டே, மற்றவர்களுக்கு கற்பித்துக்கொண்டும் இருந்தார். பிற்காலத்தில், துர்காபாய் தன் பெரிய பிறந்த வீட்டின் ஒரு பகுதியை குழந்தைகள் ஹிந்தி மொழி பயிலும் கல்விக்கூடமாக மாற்ற வேண்டி கட்டாயப்படுத்தி ஒப்புக்கொள்ளச் செய்ததோடு அவருடைய தாயையும் ஒரு ஆசிரியையாக அங்கு சேர்த்து விட்டார். தாயும், மகளும் சேர்ந்து, 400 பெண்களுக்கு ஹிந்தி மொழி கற்பித்து அவர்களை பிரசார சபாவின் அறிவுத்திறன் சான்றிதழ் பெறச்செய்தார்.

துர்காபாயின் சமூக சேவைகள் அவருடைய 12 வயதிலேயே துவங்கிவிட்டது. ஒரு முறை ஒரு குடிகாரக் கணவன் தன்னுடைய மனைவியை அடித்துக் கொண்டிருக்க, துர்காபாய் தன்னுடைய நண்பர்களை திரட்டிக் கொண்டு, ஊர்வலமாகச் சென்று தங்கள் எதிர்ப்பைக் காண்பித்தனர். மனைவியை அடித்து துன்புறுத்தும் அனைவருக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.

ஆந்திர மாநிலத்தில் அந்த காலத்தில் தேவதாசி முறைகள், “கடவுளின் சேவகர்கள்” என்ற பெயரில் செல்வந்தர்கள் மற்றும் பிரபலமானவர்கள் மத்தியில் பரவலாக இருந்தது. அதனைக் கண்டு வேதனைப்பட்டிருந்தவர், 1921ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் காகிநாடா வந்தபொழுது, 12 வயதேயான துர்காபாய் அண்ணலை வரவேற்று, தேவதாசிகளையும், புர்தா போட்டு ஒடுக்கப்பட்ட மற்றொரு பரிதாபத்திற்குரிய முஸ்லிம் பெண்களையும் சந்திக்க வைக்க விரும்பினார். ஆனால் அதற்கான ஏற்பாட்டுக் குழுவினர் ரூ5000 நிதி திரட்டிக் கொடுத்தால்தான் அண்ணலைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவோம் என்று கூறிவிட்டனர். அந்தக்காலத்தில் அது மிகப்பெரிய தொகை. ஆனால் அவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்து காந்தியடிகளைச் சந்தித்து, பத்து நிமிடம் வாங்கிய அனுமதி ஒரு மணி நேரமாக நீண்டுவிடும் அளவிற்கு சுவையாக அமைந்ததோடு, காந்தியடிகளுடனான அவருடைய தொடர்பும் வலுப்பெற்றது. ஹிந்தி மொழியில் இருந்த அண்ணலின் உரைகளை தெலுங்கு மொழியில் அழகாக மொழிபெயர்த்த துர்காபாயின் வல்லமையைக் கண்டு மகிழ்ச்சி கொண்ட மகாத்மா தொடர்ந்து நடந்த கூட்டங்களிலும் அவரையே மொழிபெயர்க்கச் சொன்னார்.

துர்காபாயின் நாட்டுப்பற்று, 1930ல் உப்பு சத்தியாகிரகம் துவங்கியபோது, ஆரம்பித்தது. ஏ.கே.பிரகாசம் மற்றும் தேசோதாரகா நாகேஸ்வரராவ் போன்ற பிரபலங்களின் உதவியுடன் சென்னையிலும் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையான பிறகும் பிரித்தானிய அரசிற்கு எதிர்ப்புக்குரல் கொடுப்பதை நிறுத்தவில்லை அவர். மூன்று முறைகள் கைது செய்யப்பட்டார். இறுதியாக மதுரை சிறையில் கொலைக் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த அறையின் அருகில் வைக்கப்பட்டிருந்தார். 1946ல்  துர்காபாய் தில்லிக்கு மாற்றப்பட்டார். அரசியலமைப்பு மன்றத்தின் உறுப்பினரானார். ஜவஹர்லால் நேரு, கோபாலசுவாமி ஐயங்கார், பி.என். ராவ் போன்ற பெருந்தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு 1952ல் அதனை தம் திறம் கொண்டு  வடிவமைத்தார். பொதுத் தேர்தலில் பங்கு கொண்டு வெற்றியை இழந்தார். தன்னலமற்ற் அவர்தம் சேவையை பாராட்டி ’தாமரபத்ரா’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ஆரம்பக்கல்வி குறிப்பிட்டு சொல்லும்படி அமையவில்லை. ஐந்தாம் வகுப்பு வரையே படித்திருந்தவர், பண்டிட் மதன்மோகன் மாளவியாவின் ஆலோசனையின் பேரில், பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில்  மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிவிட்டு, மேற்படிப்பிற்கு பல்கலைகழகத்தில் சேரலாம் என்று முடிவெடுத்தார். கல்வியை பாதியிலேயே நிறுத்த வேண்டியவர்கள் இதுபோன்ற நுழைவுத் தேர்வு மூலம் மேற்படிப்பு படிக்க எளிதாவது நல்ல தகவலாகப்பட்டது அவருக்கு. பிற்காலத்தில் சமூகநலத் திட்டங்களில் இதுவும் ஒரு முக்கிய அம்சமாக வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கல்வியை கற்று முடிக்க இயலாமல் பாதியிலேயே நிறுத்தியவர்கள் அதனை மீண்டும் தொடரும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

துர்காபாய் இளங்கலையில், இளநிலை பட்டப்படிப்பை சென்னை பல்கலைகழகத்தில் முடித்து, இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர்ந்து கற்பதற்கு உதவித் தொகையும் பெற்றார். ஆனாலும் அவ்வமயம் அங்கு நடந்த போர் அவரை இலண்டன் செல்ல முடியாமல் தடைசெய்தது. அதற்கு பதிலாக சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று, 1942ல் வழக்கறிஞரானார்.  சுதந்திரத்திற்குப் பிறகு உச்சநீதி மன்றத்தின் பார் கவுன்சிலில் இணைந்தார். பெண்களுக்கு சற்றும் ஒத்துவராத துறை என்று கருதப்பட்ட குற்றவியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெற முடிவு செய்தார். அவருடைய முதல் வழக்கு ஒரு பெண்ணிற்கு அவருடைய பரம்பரைச் சொத்தை மீட்டுக்கொடுத்ததுதான். இவர் வ்ழக்கறிஞர்கள் சங்க உறுப்பினராக ஆவதற்கான கட்டணமான ரூ500 கட்ட முடியாமல் கருப்பு அங்கியும் பெற முடியாமல் இருந்தபோது, தென்பகுதியைச் சேர்ந்த இளவரசி ஒருவர் தம் கணவன் வழி குடும்பச் சொத்தை வழக்கு நடத்தி காப்பாற்றிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டவரிடம், ரூ 500 கடனாகப் பெற்று உறுப்பினர் கட்டணம் செலுத்தி, அங்கியும் பெற்று, வழக்கையும் நடத்தி அதில் வெற்றி பெற்று, அவருடைய பரம்பரை சொத்தை மீட்டுக் கொடுத்தார். அந்த மகிழ்ச்சியில் அந்த இளவரசி, ஒரு தட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும், பரிசாகக் கொடுக்க, அதையெல்லாம் மறுத்து விட்ட துர்காபாய் அம்மையார், தான் வழக்கு நடத்தியதற்குக் கட்டணமாக ரூ500 கொடுத்தால் போதுமென்று வாங்கி, அதையும் கடனாகப் பெற்றதால் திருப்பி அவருக்கே கொடுத்து விட்டார். அதன் பிறகு கிரிமினல் வழக்குகள் நடத்துவதில் பிரபலமானார்.

சமூக சேவைகள் சார்ந்த அவருடைய ப்ல தனிப்பட்ட சாதனைகளில் ஒன்று ஆந்திர மஹிள சபா பிற்காலங்களில்  மிக முக்கியமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இதுவும் ஒன்றானது. மருத்துவமனை, தாய் - சேய் நல விடுதி, செவிலியர் பயிற்சி மையம், கலை மற்றும் கல்வி மையங்கள் என அனைத்தும் அதன் கீழ் இயங்கின. துர்காபாய், சி.டி. தேஷ்முக் உடன் இணைந்து, இந்திய சர்வதேச மையம் மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் புது தில்லியில் இந்திய மக்களதொகை மையம் ஆகியவற்றை உருவாக்கினார்.

துர்காபாய் அம்மையார், ஆந்திர மஹிளா என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். அதன் மூலம், அர்த்தமற்று திணிக்கப்படும் சமூகக் கட்டுப்பாடுகளை பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதில் கல்வியின் பங்கு மற்றும் அதன் மகத்துவமும் கருத்தில் கொண்டு, அமைக்கப்பட்டதுதான், ஆந்திர கல்விக் கழகம். தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீ.வெங்கடேசுவரா கல்லூரியின் ஆரம்பத்திற்கு துணை நின்ற பெருமையும் துர்காபாய் அம்மையாரையேச் சேரும். மேலும் மத்திய சமூக நல வாரியம் அமைப்பதிலும் அவருடைய பங்கு இன்றியமையாததாக இருந்தது. அவருடைய சமூக சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக பால் ஹாஃப்மேன் விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது.

1950களில், மத்தாய் அவர்கள் திட்ட பொறுப்பாண்மைக் குழுவிலிருந்து (planning commission) வெளியேறிய பிறகு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மற்றும் அந்த நேரத்தில் திட்டக் கமிஷனின் உறுப்பினராக இருந்தவருமான டாக்டர். சிந்தாமணி துவாரகநாத் தேஷ்முக், இந்தியாவின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தேஷ்முக் அவர்கள் தலைசிறந்த பொருளாதார வல்லுநரும் மற்றும் நிர்வாகத்திறமை உடையவர் என்று அனைவராலும் பாராட்டப் பெற்றவருமாவார்.

துர்காபாய் போட்டியிட்ட முதல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், சென்னைக்குச் சென்று தம்முடைய வழக்கறிஞர் பணியைத் தொடர எண்ணியபோது, ஜவஹர்லால் நேரு அவரை தில்லியிலேயே தங்குவதற்கு கட்டாயப்படுத்தி, பல்வேறு பணிகளையும் கொடுத்தார். 1952ல் சீன நாட்டிற்குச் சென்ற இந்திய நல்லெண்ணக் குழுவினருடன் தாமும் கலந்து கொண்டார்.

இந்தியாவில் முதன் முதலில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்தவரும் அம்மையாரே. சீனாவில் இது போன்ற நீதிமன்றங்கள் செயல்படுவதை அறிந்து வந்திருந்தவர், எம்.சி. சாக்லா மற்றும் பி.பி. கஜேந்திரகாட்கர் ஆகியோருடன் தீவிரமாக விவாதத்தில் ஈடுபட்டார். தன்னுடைய சீனப்பயணம் குறித்த அறிக்கையை ஜவஹர்லால் நேருவிடம் அளித்தபோது அதில் குடும்ப நீதிமன்றங்கள் அமைப்பதற்கான உறுதியான பரிந்துரையை வைத்திருந்தார்.

துர்காபாய் திட்டக் கமிஷனில், சமூக நலப் பிரிவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது அவருடைய சக - உறுப்பினர்களான, தேஷ்முக், குல்சாரிலால் நந்தா, வி.டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் ஜி.எல். மேத்தா ஆகியோருடன் இணைந்து, சுகாதாரம், கல்வி, தொழிலாளர் நலம், கூட்டுறவுத்துறை, சமூகக் கொளகை, நிர்வாகம் போன்ற பெருவாரியான பல்வேறு துறைகளில் தங்களுடைய பங்களிப்பை ஓயாது வழங்கினர். சமூகநல நிதி ஒதுக்கீட்டை தனியாகப் பெறுவதற்கு அவசரப்படுத்தி ஒப்புதல் வாங்கியதன் மூலமாக மத்திய சமூகநல வாரியத்தை ஒரு சுதந்திரமான, தனிப்பட்ட வாரியமாக அமைந்தது தன்னிச்சையாக நடந்தேறியது.

திருமணம் என்பது அவருடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயமாக இருந்தது. 1950ல், முத்கல் ஊழல் வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் தேஷ்முக் அவர்களை சந்திக்க வேண்டி, அதில் மூத்த பொருளாதார வல்லுநராக இருந்த தன்னுடைய நண்பர் ஒருவரிடம் அதற்கான அனுமதி பெற  விருப்பம் தெரிவித்தார். அவரோ, குறிப்பிட்ட முக்கியமான அலுவலகப் பணி சம்பந்தமாக அன்றி வேறு எதற்காகவும் அவரை சந்திப்பது எளிதல்ல என்று கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு தேஷ்முக் அவர்கள் நிதி அமைச்சராக ஆனபோது நடந்த கூட்டத்தில் அவர் தன்னைப் பார்த்து புன்முறுவல் பூத்ததையும், தன்னுடைய ஆந்திர மஹிள சபாவிற்கு வரவேண்டி அளித்த அழைப்பை ஏற்றுக் கொண்டதையும் நினைவுகூர்கிறார். தேஷ்முக் துர்காபாயின் தைரியத்தையும், சரியான முறையில் மற்றும் முழுமையான ஈடுபாட்டுடன் தம் பணியை நிறைவேற்றும் தன்மை ஆகியவற்றை அமைதியாக இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்கிறார். சென்னைக்கு வந்திருந்தபோது, சபாவின் கல்வி நிறுவனங்களில் தன்னுடைய அதிக நேரத்தை செலவிட்டதுடன், துர்காபாய் அவர்களின் அன்னையாரையும் சென்று சந்தித்து வந்தார். அடுத்தொரு முறை துர்காபாயை தில்லியில் வெல்லிங்டன் கிரசெண்ட்டில் உள்ள தம்முடைய இல்லத்திற்கு மாலை தேநீர் விருந்திற்கு அழைத்து, பல்வேறு விசயங்கள் குறித்துப் பேசியவர், அவர்கள் இருவரின் வித்தியாசமான வாழ்க்கைப் பாதைகள் குறித்தும் அலசியவர்கள், இறுதியாக தேஷ்முக் தம் வாழ்க்கையை நிறைவடையச் செய்ய துர்காபாயால்தான் முடியும் என்று கூறியபோது அவர் மகிழ்ச்சியின் எல்லைக்கேச் சென்றதையும் ஆனாலும் தனக்கு யோசித்து பதில் சொல்ல அவகாசம் வேண்டும் என்று கூறியதையும் தம்முடைய ஒரு படைப்பில் நினைவுகூர்கிறார் 

அடுத்த நாள் முறையாக அவருடைய உதவியாளர் மூலமாக நிதி அமைச்சரைச் சந்திக்க ஒரு முன் அனுமதி வேண்டினார். தன்னுடைய வாழ்க்கை முறைகள் மிக எளிமையானவை, வீட்டில் காலணி அணிந்து நடக்கும் வழமை கூட இல்லாதவள் என்றும் தேஷ்முக் அவர்களின்  பழக்க வழக்கங்களும், உணவு, உடை, பேச்சு என அனைத்தும் அதிநவீன வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதால் தம்முடைய வாழ்க்கை முறையில் மிகுந்த வேறுபாடு இருந்தாலும் தன்னை மணக்க முழு விருப்பம் உள்ளதா என்பதைக் கேட்டிருக்கிறார். அதற்கு தேஷ்முக் ஏதும் பேசாமல் அவரை தம்முடைய தோட்டதிற்கு அழைத்துச் சென்று மாசற்ற அந்த மலர்களின் மத்தியில் அழகானதொரு சமஸ்கிருத சுலோகத்தைப் பாடினாராம்.. திருமணம் செய்து கொள்ள வேண்டுவதாக அமைந்த அந்த சுலோகத்தைக் கேட்டவுடன் தாமும் ஒப்புதல் அளிக்க தேஷ்முக் மிகவும் மனம் மகிழ்ந்து அன்பு முத்தம் வழங்கியதாகக் கூறுகிறார்...

சில மாதங்களுக்குப் பிறகு நேருஜி, சகோதரர் கோபால் ராவ் மற்றும் தோழி சுசேதா கிருபளானி ஆகியோர் சாட்சியாக இவர்களின் திருமணம் நடந்தது. இறுதிவரை மனமொத்த தம்பதியராக ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்திருக்கின்றனர்.

தமது கணவருடன் இணைந்து துர்காபாய் அம்மையார் இந்திய சர்வதேச மையம் மற்றும் புது தில்லி சமூக அபிவிருத்தி மற்றும் இந்திய மக்கள்தொகை குழுவின் கவுன்சில் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார். அவருடைய இறுதி மூச்சு இந்த பூவுலகை விட்டு 1981ல் பிரிந்தது. அனைத்து தலைமுறையினரும் பின்பற்றக்கூடிய ஒரு உன்னதமான வாழ்க்கை முறையைக் கொண்டதன் மூலமாக இந்திய வரலாற்றில் நீங்காததொரு இடத்தைப் பிடித்தவர், துர்காபாய் தேஷ்முக்!  அவரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்ட அன்னை இந்திரா காந்தி கூறியது போன்று துர்காபாய் தேஷ்முக் சமூகச் சேவைகளின் அன்னை என்றால் அது மிகையில்லை. .








No comments:

Post a Comment