Monday, June 13, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (13


பவள சங்கரி திருநாவுக்கரசு
அவந்திகா என்ற பெயரைக் கேட்டாலே உள்ளம் பூரித்து, உடல் சிலிர்க்க ஆனந்தப் பரவசம் அடையும் தன் மனநிலையிலா, இத்தனை மெத்தனம். என்ன ஆயிற்று? கால மாற்றம்,எதையும் புரட்டிப் போடக்கூடிய சர்வசக்தி படைத்த ஒன்று அல்லவா?

மனித மனங்களில் ஏற்படுகிற மாற்றங்கள் மிக ஆச்சரியமான விசயம்தான். இன்று மிக ஆழ்ந்து நேசிக்கிற ஒரு விசயம் ஏதோ சில காரணங்களுக்காக, திடீரென, வேண்டாதவையாகவோ அல்லது பற்றில்லாமலோ சென்று விடுகிறது. அவந்திகாவிற்காக ஏங்கிக் கிடந்த காலம் போய் இன்று அவள் வருகிறாள் என்று தெரிந்தும் ஏனோ பெரிய உற்சாகம் இல்லை மனதில். பலவிதமான குழப்பங்களே மண்டிக் கிடந்தது.


மதியம் 2 மணிக்கு அவந்திகா வரக்கூடிய விமானம் வந்து சேரும் என தினேஷ் கூறியிருந்த்தால், விமான நிலையம் செல்ல வேண்டிய தேவையும் ஏற்பட்டது. ஏனோ அவனுக்குத் தனியாகச் சென்று அவளை அழைத்து வருவதில் நாட்டம் இல்லை. ரம்யாவை துணைக்குக் கூப்பிட்டு, அவளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு, அப்பவும் விடாமல் அவளை நச்சரித்து அவளையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் செல்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது.இன்று லேசான மழைத்தூரல்….பழைய மாறனாக இருந்தால் இந்நேரம் எத்துனை ஹைக்கூ கவிதை பொழிந்திருப்பான். இன்று இருக்கும் மனநிலையில் அது சாத்தியமாகவில்லை.

“மாறன், என்னது இது பேச்சையேக் காணோம். ஒரே அமைதியாய் …..யோசனையா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை ரம்யா. ஒரு யோசனையும் இல்லை”
“உன் ஆள் வரப்போறா. எத்தனைப் பெரிய விசயம் அது. நீ நினைச்ச மாதிரியே நடக்கப் போகுது. இப்ப போய் ஏதேதோ செண்டிமெண்ட்டா பேசிக்கிட்டு …”


ரம்யாவிற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை மாறன். அவள் பேச்சிற்கு எந்த விதமான பிரதிபலிப்பையும் அவனால் காட்ட இயலவில்லை.மனம் மரத்துப் போன நிலையில் இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஏதேதோ யோசனையில் மனம் குழம்பிய நிலையில் இருந்தாலும்,உள்ளத்தின் ஒரு மூலையில் ஒரு சின்ன மழைச்சாரல் சிலிர்க்கச் செய்து கொண்டிருந்ததையும் அவனால் தடை போட இயலவில்லை.அதன் காரணம் அவந்திகாவின் வருகைதான் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான் மாறன்.விமான நிலையத்தை நெருங்கி விட்டதை ரம்யா சொல்லிக் கொண்டிருந்தது லேசாக காதில் விழுந்தது….’ஓ, இவள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாளோ….நான் அதை கவனிக்கவில்லையோ’………..


” மாறன், என்ன ஆச்சு நான் பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன். அப்படி என்ன ஆழ்ந்த யோசனை? முகத்தை கொஞ்சம் நார்மலா வைச்சிக்கக் கூடாதா.”
“ ம்ம்…பார்க்கலாம். சரி அவந்திகாவிற்கு லஞ்ச்சிற்கு ஏதும் ஏற்பாடு செய்திருக்கிறாயா.லோக்கல் விமான சேவையில் ஒன்னுமே சாப்பிட கொடுக்க மாட்டான்.இல்லைன்னா போகும் வழியிலேயே ஏதாவது ரெஸ்டாரெண்ட் போகலாமா…”

“ அடப்பாவி….இந்நேரமா நான் கரடியா கத்திக்கிட்டு இருந்தது உன் காதில விழலியா? எந்த உலகத்துல இருக்கறப்பா நீ…போகிற போக்கில் அப்படியே பட்டிணத்தார் போல போயிடுவ போல…”
“ அட ஏன் ரம்யா நீ வேற. ஏதோ நினைவா இருந்துட்டேன். சரி சொல்லு நேரமாச்சே , சமைச்சியா இல்லையா.”
“அதைத்தானே சொல்லிக்கிட்டிருக்கேன். உனக்கும் சேர்த்துத்தான் சமைத்து வைத்திருக்கிறேன். நீயும் வா, நாமெல்லாம் சேர்ந்து இன்னைக்கு சாப்பிடலாம்”
“இல்லை ரம்யா.எனக்கு இன்னைக்கு மூட் இல்லை. நான் வீட்டிற்குப் போய் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும்.இன்னொரு நாள் வருகிறேன்”
“ஏன் சாப்பிட வேண்டாமா.சாப்பிட ஏதும் ஏற்பாடு செய்த மாதிரி தெரியவில்லையே…..ஒழுங்கா வந்து சாப்பிட்டுப் போ, ரொம்ப ஃபீலிங்கஸ் வேணாம்ப்பா…..போர் அடிக்குது”

இதற்குமேல் அவளிடம் வாதம் பண்ணும் எண்ணமும் இல்லாதலால் அமைதியாக இருந்ததை, ரம்யாவும் சம்மதமாக எடுத்துக் கொண்டு அவந்திகாவின் வருகைக்காக இருவரும் காத்திருக்க ஆரம்பித்திருந்தனர்.

காலை மணி 5 அடித்தால் போதும், ராமச்சந்திரன் அதற்கு மேல் ஒரு நொடி கூட படுக்கையில் இருக்க மாட்டார்.எழுந்தவுடன் காலைக்கடன், நடைப்பயணம், குளியல், சந்தியாவந்தனம், மனைவிக்கு சின்ன சின்ன உதவிகள் இப்படித்தான் அவருடைய காலை வேளைகளில் பொழுது பறக்கும்.ஆனால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்ட இந்த சமீப காலங்களில் பல மாற்றங்கள் அவருடைய அன்றாட செயல்களில்கூட!இது சற்று மன அமைதியைப் பாதித்திருந்தாலும் அனு அவ்வப்போது நேரில் வந்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் உற்சாகப்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்பதே மனதிற்கு நிறைவாக இருப்பதையும் உணரமுடிந்தது அவரால்.இப்பொழுதெல்லாம் வாசலில் இருசக்கர வாகனச் சத்தம் கேட்டாலே அது அனுவாக இருக்குமோ என்று மாலை வேளைகளில் கண்கள் தேடத் துவங்கியிருந்தது. காரணம் பெரும்பாலும் மாலை வேளைகளில் அனு ஏதோ வேலை காரணமாக வர வேண்டியதாக இருக்கும்.

பெற்றோரிடம் பேசுவதற்காக மாறன் எப்போது போன் செய்தாலும் இப்போதெல்லாம் பாதி நேரம் அனுப்புராணம் தான் கேட்க வேண்டியிருப்பதாக இருப்பதையும் தவிர்க்க இயலவில்லை அவனால்.தந்தையின் குரலில் இருக்கும் உற்சாகம் அவனை மகிழ்ச்சியோடு, அனுவிற்கு நன்றி சொல்லவும் தோன்றத்தான் செய்தது.அம்மாவின் மகிழ்ச்சியும் வெளிப்படையாகவேத் தெரிந்தது. பெற்றோர் அமைதியாக, பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டுமென்பது தானே ஒரு மகனின் கடமையாக இருக்க முடியும். அந்த வகையில் மாறனையும் நிம்மதியாக வைத்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் பெற்றோருக்கு இருந்ததும் நிதர்சனம்.

இந்தச் சூழலில் மாற்றங்கள் வரும்போது அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை காலம் தானே பதில் சொல்ல முடியும்?

தொடரும்.

Wednesday, June 8, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(12)

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (12)

”உலக அறிவில் எப்போதும் இந்த எதிரொலியும், எதிர்ச்செயலும், எதிர்வினையும் இருக்கத்தான் செய்யும். நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களிடம் திரும்பி வரும். நீங்கள் எதைச் சொன்னாலும் அது திரும்பி வந்து உங்கள் காதில் ஒலிக்கும். நீங்கள் எதை நினைத்தாலும் அந்த எண்ணம் திரும்பத் திரும்ப எழுந்து கொண்டேயிருக்கும் “........(கீதை)

எப்போது ஒரு மனிதன் இறப்பின் விளிம்பைத் தொட்டு வருகிறானோ, அப்போதே அவன் மனநிலையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிலது, தற்காலிகமாக மறைந்து போவதும், சில குணங்கள் எஞ்சிய வாழ்க்கையில் நிலைத்து நின்று விடுவதும் கூட உண்டு. ராமச்சந்திரனின் நிலையும் அப்படித்தான்.மங்கிய நிலவொளியில் மண்டிய புதரினுள் மறைந்துக் கிடக்கும் மாய மோதிரத்தைத் தேடும் மாவீரன் போல
அவர்தம் மனமும் நினைவலைகளின் இறுதி வேர் வரைச் சென்று ஆழ்ந்த தேடல்களைச் செய்து கொண்டுதான் இருந்தது. தன் தவறுகள், தன்னையறியாமல் செய்த பிழைகள் மற்றும் அடுத்தவர் மனம் நோகச் செய்தத் தருணங்கள் என்று பலதும் மனக் கண் முன் காட்சிகளாக விரிந்தது. இந்த்த் தேடல்தானே பக்குவத்தின் அடிப்படை!

’சுயநலம்’, என்பது மனித வாழ்வில் தவிர்க்க இயலாத ஒரு குணம் என்றாகிப் போவதே நிதர்சனமாகிறது.இந்த சுயநலமே வாழ்க்கை ஓட்டத்தின் அடி நாதமாக விளங்குவதும் உண்மை. எத்தனைதான் வெளிவேடமிட்டாலும், ஒரு நிலையில் அது காட்டிக் கொடுத்தும் விடுகிறது, தன்னுடைய செயல்களாலேயே. அது உறவுகளானாலும், நட்பு மற்றும் காதல் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.எல்லாமே ஒரு கணக்குத்தான்!எதிர்காலம் என்ற பெரிய கேள்விக்குறியின் பிரதிபிம்பம்.அந்த வகையில் தன் தங்கை மகள் தன் மருமகளாக வந்தால் தனக்குப் பிறகு தன் மனைவிக்கும் பாதுகாப்பு என்று அவர் நினைப்பதிலும் தவறில்லை. அனுவின் பொறுமையான குணமும் , பக்குவமும், சூழலுக்கு ஏற்றவாரு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் திறனும் அவள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவது இயற்கை. பெரிய அழகி இல்லையென்றாலும், அவளுடைய நடை, உடை மற்றும் பாவனை அவளை பெரிய அழகியாகக் காட்டும். அழகு என்பதே அவரவர் பார்க்கும் பார்வையில் தானே இருக்கிறது. இரசிக்கத் தெரிந்த மனம் இருந்தால், இறைவன் படைப்புகள் அனைத்துமே ஒரு அதிசயமான அழகுதானே!ஆனாலும் இன்றைய நிலையில் தன்னைச் சார்ந்த எவர் மனதையும் நோகச் செய்வதைவிட முடிந்த வரை அவர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருந்தது அவருக்கு.

மாறன் காலை கடன்களையெல்லாம் முடித்து, நல்ல ஸ்டிராங்காக ஒரு ஃபில்டர் காபி போட்டு குடிக்க ஆசையாக இருந்தாலும், அதற்கெல்லாம் பொறுமை இல்லாதவனாக, ப்ரூ காப்பியே போதும் என்ற நிலையில், ஒரு கப் காப்பியுடன் வந்து, ரம்யாவின் போன் எண்ணைச் சுழற்றினான். சட்டென உடனே போனை எடுக்கும் வழக்கம் கொண்ட ரம்யா, நாலைந்து மணியொலிக்குப் பிறகும் எடுக்காததால், ஏதோ வேலையாக இருக்கிறாள் போல் உள்ளதே, என்று சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்ளலாம் என்று காத்திருந்தான்.ஒரு ஐந்து நிமிடம் இருக்கும், காபியை சுவைத்து முடிப்பதற்குள், அவளிடமிருந்து அழைப்பு மணி.

”ஹலோ, மாறன் என்ன விசயம், இன்று இவ்வளவு காலையிலேயே போன்.நான் போன் பண்ணினால், கத்துவாய், அலுவலகம் கிளம்பும் நேரம் தொந்திரவு செய்வதாக......”

“அட ஆமாம்ப்பா, அதை ஏன் கேட்கிறே. நேற்று இரவே உனக்கு போன் செய்யலாம் என்று இருந்தேன். நீ வேறு வீர சாகசங்கள் எல்லாம் செய்த அலுப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாயே, ஏன் தொந்திரவு செய்ய வேண்டுமென்று விட்டு விட்டேன்”

”அப்படி என்ன அவசரம், ஏதேனும் முக்கியமான விசயமா?”

“ அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா.....என் நண்பன் தினேஷ் வாஷிங்டனில் இருக்கிறானே, அவன் நேற்று இரவு வந்த சிறிது நேரத்திலேயே அழைத்திருந்தான்”

ஓரளவிற்குத் தெளிவாக தினேஷ் சொன்ன அத்தனை விசயங்களையும் எடுத்துச் சொன்ன போதும் ரம்யாவிடமிருந்து ஒரு மௌனமே பதிலாக இருந்தது.

“ என்ன ரம்யா.....இவ்வளவு யோசனை? அந்தப் பெண்ணை உன் அறையில் தங்க வைக்க விருப்பமில்லையென்றால், வேறு ஏதும் ஏற்பாடு செய்யலாமா?”

“இல்லை மாறன், நானும்தான் ஊருக்குச் செல்கிறேனே, திரும்பிவர எப்படியும் ஒரு மாதம் ஆகும். அதற்குப் பிறகு ஒரு 50 நாட்கள்தானே,அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால் அவர் அனுசரித்துப் போகிறவரா என்று தெரியவில்லையே”

“ஆமாம், ரம்யா...நானும் அவரைப் பற்றி எதுவும் விசாரிக்கவில்லை. நேற்று இருந்த பயணக் களைப்பில் எனக்கு ஏதும் தோன்றவில்லை. பெயர் கூடச் சரியாகக் கேட்கவில்லை.பார்க்கலாம், இன்று அவனே அழைக்கக் கூடும், அப்போது நான் விவரமாகக் கேட்டுக் கொள்கிறேன்”

அலுவலகத்தில் அன்று முக்கியமான மீட்டிங். அது மட்டுமல்லாமல் விடுமுறைப் பணிகளும் சேர்ந்து கொண்டது. எதைப்பற்றியும் நினைக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது.மதியம் உணவு இடைவேளையின் போது கூட அவசரம்தான். மாலை ஓரளவிற்கு முக்கியமான பணிகளையெல்லாம் முடித்துவிட்ட திருப்தியில், நாற்காலியில் சாய்ந்து காலை நீட்டி ஓய்வெடுக்கும் வேளையில்தான் தினேசின் நினைவு மெல்ல எட்டிப் பார்த்தது.......

‘அடடா, ரம்யாவிடம் பேசிவிட்டு தினேசைக் கூப்பிடுவதாகக் கூறினோமே, மறந்தே போய்விட்டதே’ என்று எண்ணியவன், செல்பேசியை எடுத்து எண்ணை தேடப்போக.....

‘என்னைத் தாலாட்ட வருவாளோ’ என்று பாட ஆரம்பித்தது செல்பேசி....

“ ஹலோ, தினேஷ், சொல்லுங்கள், உங்களுக்கு ஆயுசு 100! இப்போதுதான் உங்களிடம் பேசலாம் என்று போனை எடுத்தேன், அதற்குள் நீங்களே கூப்பிட்டு விட்டீர்கள். ரம்யாவிடம் பேசிவிட்டேன். அவள் தன் அறையிலேயே உங்கள் உறவினரைத் தங்க வைத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டாள். எனக்குத்தான் அதை உங்களுக்குத் தெரியப்படுத்த நேரமில்லாமல் போய்விட்டது.”

“பரவாயில்லை, மாறன், நீங்களும் விடுமுறைக்குப் பிறகு இப்போதுதான் அலுவலகம் வந்திருக்கிறீர்கள். பல வேலைகள் இருக்கும். அதனால்தான் நானும் தொந்திரவு செய்ய விரும்பவில்லை. ஆனாலும், இது கொஞ்சம் அவசரத் திட்டமாக ஆனதால், உங்களை இப்படி தொந்திரவு செய்ய வேண்டியதாக உள்ளது”

“பரவாயில்லை. அதனாலென்ன, அவர்கள் எப்போது வருகிறார்கள்.வழி தெரியுமா, விமான நிலையம் சென்று அழைத்து வர வேண்டுமா, எல்லா விவரமும் சொன்னால் பரவாயில்லை”

“ஆமாம், மாறன், அவர் நியூ ஜெர்சி ஏரியாவிற்கு புதிதாக இருப்பதால், நீங்கள் விமான நிலையம் வந்தால் நன்றாக இருக்கும். நான் அவர் பற்றிய மற்ற விவரங்களை மெயிலில் அனுப்புகிறேன்”.

மாறன் இருக்கும் மன நிலையில் இது சற்று சிரமமான காரியம்தான் என்றாலும், சனிக்கிழமையன்று ஓய்வு நாளாக இருப்பதனால் சமாளிக்கலாம் என்று எண்ணியவன், திரும்பவும் பெயர் கூடக் கேட்க மறந்து போனதை எண்ணி லேசாகப் புன்னகைத்துக் கொண்டான்.இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது, ரம்யாவிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணி அவள் இருக்கைப் பக்கம் பார்வையை நோட்டம் விட்டவன், அவள் இருக்கையில் இல்லாதது கண்டு அறை முழுவதையும் நோட்டம் விட்டான். சற்று தொலைவில் ரம்யா, ஒரு அமெரிக்கப் பெண்மணியிடம் கையை ஆட்டி, ஆட்டி பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.ரம்யா இப்படித்தான், யாராக இருந்தாலும் தன் அன்பான பார்வையாலும், துடுக்கான பேச்சாலும் எளிதாக கவர்ந்து விடுவாள்.முதல்நாள் தான் பணிக்கு அமர்ந்த அந்தப் பெண்ணிடமும் இவ்வளவு எளிதாக நட்பானது ஆச்சரியம்தான்.. அவளுடைய இந்த குணத்தை நம்பித்தானே தினேசின் உறவினரை அங்கு தங்க வைக்க ஏற்பாடு பண்ணினான் அவன்.

வெள்ளிக் கிழமை இரவு, தினேசின் மெயில் வ்ந்திருந்தது. சனிக்கிழமை காலை வாஷிங்டனிலிருந்து கிளம்பி மதியம் வந்து சேருவார் எனவும், விமானத்தின் எண் மற்றும் அவருடைய பெயர், தற்போதைய முகவரி, பணியாற்றும் அலுவலகம் போன்றத் தகவல்களை மேலோட்டமாக நோட்டம் விட்டவன், முதலில் பெயரைப் பார்க்க வேண்டும், அப்போதுதான் அறிமுகப் படுத்திக் கொள்ள முடியும்.உள்நாட்டு விமான சேவையாதலால், சிறிய போயிங் விமானமதான் வரும். அதில் பயணிகளின் எண்ணிக்கையும் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதாலும், வருபவர் நம் தென் நாட்டவர் என்பதாலும் முகத்தை வைத்தேக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்காது.

திரும்பவும் அவரின் விவரம் பற்றிய பட்டியலை நோட்டம் விட்டவன், முதலில் பெயரைப்பார்த்தவன் அதற்கு மேல் தன் கண்கள் அகல மறுக்க அங்கேயே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஆம் அதில் ‘அவந்திகா’ என்ற அந்த தேனினும் இனிய பெயரை உச்சரித்துப் பார்க்கையிலேயே தன்னைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றுவது போல் உணர்ந்திருந்த அந்த ஒரு காலத்தின் மிச்சம் இப்போதும் மெல்ல எட்டிப் பார்க்க எத்தனித்தது.........

அவந்திகா, அவளாக இருக்குமோ.............சரி இன்னும் ஒருநாள் தானே காத்திருப்போம் என்று எண்ணியவாறு கிளம்பத் தயரானான் மாறன்!

தொடரும்.

Wednesday, June 1, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (11)

வெண்ணிலவில் ஒரு கருமுகில் ! (11)


ஹோவென 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக கர்சித்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி! வெண்பனி நுரையாக பொங்கி வழியும் நீர்க்கோலம்.1846 ஆம் ஆண்டிலிருந்து உலக மக்களையெல்லாம் கவர்ந்து இழுக்கின்ற ஒரு கற்பனைக்கெட்டாத அற்புத கலைக் களஞ்சியம்! வாழ்நாளில் ஒரு முறையேனும் அந்த அதிசயத்தைக் கண்டுவிடத் துடிக்கும் மனித மனம்.கண்டபோதும் மீண்டு வர மனமின்றி அதற்குள்ளேயே கரைந்து போய்விடத் தோன்றும் மாயத் தோற்றம்! வட அமெரிக்காவின் மிகப்பழமையான,வரலாற்றுப் புகழ் வாய்ந்த நயாகரா நீர்விழ்ச்சியின் அழகை வர்ணிக்க சாமான்ய மனிதரால் ஆகாது.இயற்கையை அள்ளிப் பருகி, அதை அற்புத முத்துக்களாக வெளிக்கொணர்ந்து கோர்த்து அழகிய கவி மாலையாக்கித் தந்திட ஒரு கவியாக இருக்க வேண்டுமன்றி அவந்திகா போல ஓவியராக இருக்க வேண்டும். படகில் நீர்வீழ்ச்சியின் மிக அருகே செல்லும் போது அந்த நீர்வீழ்ச்சியின் நீர்த்திவலைகள் நம்மைச்சுற்றி பூமாறிப் பொழிந்து நனையச் செய்து இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் இனிய சூழல்.கடந்த மாதம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்த போது தன் நண்பர்கள் குழுவுடன் இந்த அற்புதத்தில் நனைந்து திளைக்க வேண்டி, வந்திருந்தாள் அவந்திகா.

படைப்பாளிகள் இது போன்று காணக்கிடைக்காத அரியக் காட்சிகளை கண்டபின்பும் வாளாவிருக்க இயலுமோ? அவந்திகாவும் அப்படித்தான். இந்த அழகை அள்ளி எடுத்து வரும் முயற்சியுடன் தயாராகத்தான் சென்றிருந்தாள், வரைப்பலகை மற்றும் வண்ணங்களுடன். அடக்கவொண்ணாத ஆவலுடன் அவள் வரைந்த அந்த ஓவியம் ஒரு சரித்திரம் படைத்தது. படைப்பாளிகளின் பார்வைகளில் அகப்படுவதே வித்தியாசமான காட்சிகள்தானே.ஆம், நயாகரா நீர்வீழ்ச்சியின் குளிர் சாரலுடன் ஆனந்தமாக குலவிவிட்டு அத்துணை காட்சிகளையும் கண்களில் தேக்கிக் கொண்டு, அதை வண்ணங்களுடன் குழைத்து ஓவியமாகத்தீட்ட கையும், மனமும் துடிக்க, அதற்காக பசும் புல்வெளியினூடே, சீகல் பறவைக் கூட்டங்களினூடே, ஓர் இடத்தைத் தேர்வு செய்தவள், அங்கு ஒரு தென்னிந்தியத் தம்பதியினர் அழகான ஒரு பச்சிளங்குழவியை கொஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டு அந்த தாய்மையின் அழகிலும், மழலையின் சிரிப்பிலும் உள்ளம் பறிகொடுத்து நின்றிருந்த சமயம், அக்குழந்தையின் தந்தை தாங்கள் உண்டு மீந்து போன உணவுப் பொட்டலத்தை குப்பைத் தொட்டியில் கொண்டு சென்று போட, அதையே கவனித்துக் கொண்டிருந்த, நெடிதுயர்ந்த ஒரு அமெரிக்க, மனிதர், முதுமையின் வாசலில் இருந்த அவர், அந்த உணவுப் பொட்டலத்தை பாய்ந்து சென்று எடுத்து வேகமாக உண்ண ஆரம்பித்ததையும் ஆச்சரியமாக கண் கொட்டாமல் கண்டவள், இக்காட்சிகள் அனைத்தையும் அழகான வண்ண ஓவியமாகத் தீட்டினாள். அந்த நிதர்சனமான காட்சியின் ஓவியத்தைக் காண ஒரு சிறு கூட்டமே அங்கு கூடிவிட்டது.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர், இந்த ஓவியத்தின் அழகில் மயங்கியவர் அவந்திகாவைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு, அவளுடைய மற்ற ஓவியங்கள் பற்றியும் அறிந்து கொண்டதன் விளைவாக ஒரு ஓவியக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்து, அதன் மூலம் நல்ல வரவேற்பும் பெற்றிருந்தாள் அவந்திகா! மிக இளகிய மனம் படைத்த அவந்திகாவின் கண்களில் சிக்கிய அத்துனை காட்சிகளும் உயிர் பெற்று எழுவதைக் காணக் கண் கோடி வேண்டும் என்றுதான் அவளைப் புகழ்ந்து கொண்டிருப்பர் அவள் நண்பர்கள்.அதேக் கண்காட்சியை திரும்பவும் நியூ ஜெர்சியில் நடத்த வேண்டுமென்ற நண்பர்களின் கட்டாயத்தினால் இந்த டெபுடேஷன் சமயத்தையே இதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாமே என்று முடிவெடுத்தாலும் அதற்கு அவளுக்கு பல உதவிகள் தேவைப்பட்டன. இதற்குத்தான் முக்கியமாக தினேஷிடம் கேட்டிருந்தாள்.அவந்திகா பொதுவாக எவரிடமும் உதவி என்று பெரும்பாலும் வந்து நிற்கக்கூடிய பெண் அல்ல என்பது அனிதாவும் அறிந்திருந்ததால், அவள் வேறு வழியின்றியே தங்கள் உதவி நாடி வீடு தேடி வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு அவளுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்ற உறுதியுடன் தான் மாறனைப் பற்றிக் கூறினார்கள்.

அவந்திகாவிற்கு இளமாறன் என்ற அந்த பெயர் எங்கோ கேட்டதுபோல் இருந்தாலும், அவளுக்கு அதுபற்றி ஆய்வு செய்யும் எண்ணம் தோன்றவில்லை. மேலும் இளமாறன் என்ற அந்த இளைஞன் குறித்து அவளுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் உருவாகியிருந்தது. நாடு விட்டு நாடு வந்து தனி ஒரு பெண்ணாக ஓவியக் கண்காட்சி நடத்துவது என்பது சாமன்ய காரியம் அல்ல என்பதை அறிந்திருந்தாலும், நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால், துணிச்சலுடன் ஒப்புக் கொண்டாள். அவர்களும் நல்ல படியாக கண்காட்சியை, வாஷிங்டன் வாழ் மக்கள் மெச்சும்படி நடத்தி விட வழிவகுத்தனர்..அதே போல் எளிதாக நியூ ஜெர்சியிலும் நடத்த முடிய வேண்டுமே என்ற கவலை இருந்தாலும், தினேஷும் அனிதாவும், இளமாறன் பற்றிக் கூறியதும் அங்கேயும் நல்லபடியாக கண்காட்சியை நடத்த முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்தது அவளுக்கு.
--
மாறன் பயணக் களைப்புத்தீர சுகமாக வெண்ணீரில் ஷவர் குளியல் போட, நேரம் போனதே தெரியாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரம், விடாமல் தொலைபேசி அழைப்பு இடையில் நுழைந்து சுய நினைவிற்கு கொண்டு வந்தது.

‘ஓ....எவ்வளவு நேரமாக குளித்துக் கொண்டிருக்கிறோனோ தெரியவில்லையே என, அவசரமாக பூத்துவாலையை எடுத்து சுற்றிக் கொண்டு ஓடி வந்தான்.

‘ஹலோ.....

‘ஹலோ, நான் தினேஷ். மாறன்தானே..?’

‘ஹலோ, ஆமாம் தினேஷ். நலம்தானே.

' ம்ம்..நலமாக இருக்கிறேன். நீயும், உன் மனைவியும் நலம்தானே ?’

’ ம்ம்...நலம்தான், மாறன். சரி அப்பா இப்போது எப்ப்டி இருக்கிறார். நாலைந்து நாட்களாக உன்னை தொடர்பு கொள்ள நினைத்து முடியாமல், ரம்யாவை தொடர்பு கொண்டேன். அவர்தான் நீ ஊருக்குச் சென்றிருக்கும் விவரத்தைக் கூறினார். அப்பா இப்போது நலமாக இருக்கிறார் அல்லவா?’

‘ ம்ம் .. நன்றாக இருக்கிறார். ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆண்டவன் அருளால் இப்போது தேறிக் கொண்டிருக்கிறார்.’

‘ நல்லது மாறன். எனக்கு ஒரு உதவி ஆக வேண்டும் உன்னால். அதனால்தான் நாலைந்து நாட்களாக உன்னை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ‘

‘ சொல்லுப்பா, என்ன விசயம்’

‘ ஒன்றுமில்லை. என் மனைவியின் உறவினர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருக்கிறார். ஒரு பிரபல கம்பெனியில் பணிபுரிகிறார். அவர் கம்பெனியில் வேலை சம்பந்தமாக நியூ ஜெர்சியில் மூன்று மாதம் தங்க வேண்டியுள்ளது. அதனால் அங்கு தங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து த்ர முடியுமா. அவர் மற்றவர்களிடம் எளிதில் பழகத் தயங்குபவர். எனக்கும் அங்கு வேறு ஒருவரையும் பழக்கம் இல்லை. ‘

‘ ஓ அவ்வளவுதானே, பார்த்தால் போகிறது. அவருக்கு எவ்வளவு நாட்கள் தங்க வேண்டும், எது போன்று தங்குமிடம் வேண்டும், தனியாகவா அல்லது வேறு யாருடனாவது பகிர்ந்து கொள்ள முடியுமா என்று தெரிந்தால் அதற்கு தகுந்தது போல் பார்க்கலாம். ‘ என்றான்.

’ ஏன் மாறன், உங்கள் குரலில் ஒரு உற்சாகமே இல்லையே, இன்னும் தந்தையின் நினைவாகவே இருக்கிறீர்களா. நானும் சிரமம் கொடுக்கிறேனா?’

‘அதெல்லாம் ஒன்றுமில்லை தினேஷ். நீங்கள் சொல்லுங்கள். போகப் போக சரியாகிவிடும். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். சொல்லுங்கள்’

தினேஷிற்கு மாறன் இருக்கும் மன நிலையில் அவனை தொந்திரவு செய்வது தவறாகப் பட்டாலும், வேறு வழி தெரியவில்லை. புதிய இடத்தில் ஒரு பெண் தனியாகப் போய் தங்க வேண்டுமானால் அதில் எத்துனை சிரமம் இருக்கும் என்பதும் அறிந்ததுதானே. அதனால் மாறனிடம் அவந்திகா பற்றி அனைத்து விவரங்களும் கூறி தகுந்த உதவி செய்யச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

அவந்திகாவும் வேறு யாராவது பெண் தோழிகள் கிடைத்தால் அவர்களுக்கு சிரமம் இல்லையென்றால் அறையைப் பகிர்ந்து கொள்வதில் சிரமம் இல்லை என்றே கூறியிருந்தாள். அதனால் தினேசும் அது போன்றே ஏதாவது தங்குமிடம் கிடைத்தால் அவந்திகாவிற்கும் துணையாக இருக்கும் என்று முடிவு செய்து மாறனிடம் அது போன்றே பார்க்கும்படி கூறினான்.

மாறனும், ரம்யாவிடம் கேட்டால் ஏதாவது செய்வாள், அல்லது அவள் அறையிலேயே தங்குவதிலும் சிரமம் இருக்காது என்றும் நினைத்தான். இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடாக இருந்தாலும் அதில் இருவர் தங்கியிருக்கிறார்கள். ரம்யாவும் ஊருக்குச் சென்றால் திரும்புவதற்கு எப்படியும் 30 நாட்கள் ஆகும். அதனால் அது வரையிலாவது அவள் அறையில் தங்கிக் கொள்ளலாம் என்றும் நினைத்து, காலையில் ரம்யாவிடம் கேட்டு விட்டு முடிவு சொல்வதாகச் சொல்லி முடித்தான் தினேசிடம். போனை வைத்தவுடன் தான் அவனுக்கு நினைவு வந்தது அந்தப் பெண் யார், பெயர், வேலை பார்க்கும் கம்பெனி விவரம் ஏதும் கேட்காமல் விட்டு விட்டோமே என்பது. சரி நாளை ரம்யாவிடம் பேசிவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் படுக்கையறைக்குச் செல்ல முற்பட்டான்.

மனதில் எந்த சலனமுமில்லாமல் அமைதியான உறக்கமாகவே இருந்தது. காலையில் ரம்யாவிடம் மறக்காமல் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டான். தன்னுடைய எதில்கால வாழ்க்கையைப் பற்றி எந்த முடிவும் எடுக்கும் நிலையில் தனது சூழல் இல்லயென்றாலும், பெற்றோரின் நிலையை அனுசரித்தே தன் முடிவும் இருக்க வேண்டியதன் அவசியமும் உணர்ந்திருந்தான்.

ஆனாலும், நாம் எடுக்கும் எந்த முடிவும் விதியின் போக்கைக் கட்டுப்படுத்துவதில்லையே.அதன் விருப்படியேதானே ஒருவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தன் மனக்கோவிலில் தெய்வமாக வீற்றிருக்கும் மகராசியை பூரண கும்பம் கொண்டு வரவேற்கப் போகிறானோ அல்லது அஞ்சி ஒடுங்கி தன்னையே ஏமாற்றிக் கொள்ளப் போகிறானோ என்பதை முடிவு செய்யப் போகும் அந்த விதியின் தேவதையும், மாற்னைப் போலவே, அமைதியாக சலனமில்லாமலுறங்கிக் கொண்டிருக்கிறதோ...........காலம் பதில் சொல்லும்!

தொடரும்.


Thursday, May 26, 2011

வள்ளல் பாரிராசன்.


ரயில் பயணங்கள் கூட மிக இனிமையானவைதான்.முன் பதிவு செய்யப்பட்ட குளுகுளு வசதியுடனான பஞ்சு மெத்தை இருக்கைகள். அத்தோடு கலகலவென அரட்டை அடித்துக் கொண்டு, நல்ல பொழுது போக்கான ஆசாமிகளுடன், நேரம் போவதே தெரியாமல் வம்பை வளர்த்துக் கொண்டு, அவ்வப்போது கொறிப்பதற்கு ஏதாவது தீனி.இடையில் சுகமான உறக்கம் கொஞ்சம். இப்படி ஒரு இரயில் பயணம் என்றால், ஏன் ஒருவர் வெறுக்கப் போகிறார்....?

பாரிராசன், வியாபார நிமித்தமாக அடிக்கடி பயணம் செல்லக்கூடியவர்.ஆனால் சரியான சுகவாசி. ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும், அவருக்கு பயணச்சீட்டு, அது தொலைதூர விமானப் பயணம் ஆனாலும் சரி அல்லது எட்டிப் பிடிக்கும் துரத்தில் இருக்கும் எட்டயபுரமானலும் சரி, வேலையாட்கள் முன்கூட்டியே பயணச்சீட்டை பதிவு செய்வதோடு,அவரை ரயிலில் வழியனுப்ப இரயில் நிலையம் வரை வந்து பெட்டி, படுக்கைகளை அடுக்கி வைத்துச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான், அவர்கள் வந்து எல்லாம், சரி செய்துவிட்டு சென்றார்கள். மனிதர் வந்து நிதானமாக ஆசுவாசமாக உட்கார்ந்தவர், சுற்றிலும் நோட்டம் விட்டார்.அருகில் இரண்டு இளைஞர்கள்,கலகலவென மலையாளத்தில் சம்சாரிச்சிக்கினு இருந்தார்கள்.

இரயிலில் கூட்ட நெரிசல்.கோடை விடுமுறை சமயம். நம் வள்ளல் பாரிராசனோ, சொகுசாக ஆடல் பாடலாக, தன் இரட்டை சரீரத்தை யதார்த்தமாக பரப்பி உட்கார்ந்து கொண்டார். பக்கத்தில் இருப்பவர்களை சரி கட்டுவது அவருக்கு அவ்வளவு சிரமான காரியம் அல்ல. ஒற்றை நாடி சரீரம்தான் என்றாலும் பாவம் உட்காருவதற்கு சிறிதளவாவது இடம் கொடுக்க வேண்டுமல்லவா.......

அந்த இளைஞர்கள் அவருடைய படாடோபத்தையும், வயதையும், பந்தாவையும் பார்த்துவிட்டு சற்றே ஒதுங்கி வேறு பவ்யமாக உட்கார்ந்து கொண்டால்,நம் வள்ளலுக்கு கேட்கவும் வேண்டுமோ! சுகமாக காலை நீட்டி சாய்ந்துவிட்டார். வழியெல்லாம் போன் வேறு....தான் பெரிய வியாபார காந்தம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக.. பசங்கள் மிரண்டுத்தான் போனார்கள். கொஞ்சம் அவர் அசைந்தாலும், அவர்கள் இன்னும் கொஞ்சம் ஒடுங்கி உட்காருவது பார்ப்ப்தற்கு வேடிக்கையாகவும் இருந்தது. எப்படியாவது இந்த பெரிய மனிதரிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டால் தங்கள் வாழ்க்கைக்கும் ஒளி கிடைக்கலாம் என்ற நப்பாசை வேறு.

‘தம்பி, அந்த பேண்ட்ரியில் போய் ஒரு தண்ணீர் பாட்டில் கூலா வாங்கி வர முடியுமா’ என்று கேட்டதுதான் தாமதம் இருவரும் எழுந்து கொண்டார்கள். ‘இதோ ஐயா’ என்று.

அவரும் பெருமையாக புன்னகைத்துக் கொண்டு ஒரு ஐநூறு ரூபாய் தாளை அனாவசியமாக உருவி,

‘ இந்தாப்பா, சில்லரை இல்லை’ என்று கூறி நீட்டினார்.

வெகு பவ்யமாக வாங்கிச் சென்ற இளைஞர்கள் கர்மசிரத்தையாக பாட்டிலை வாங்கி வந்து நீட்டினார்கள்.

ஒரு பெரிய மனிதரின் பழக்கம் கிடைத்த பெருமிதம் அவர்கள் முகத்தில். இருக்காதா பின்னே........ஏதோ நண்பன் அவனுடைய அவசர வேலைக்காக, இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு கிடைக்காதலால் முதல் வகுப்பு ஏ.சி கோச்சில் டிக்கெட் வாங்கிக் கொடுக்க அடித்தது யோகம் என்று இருவரும் வந்திருப்பது இங்கு மற்றவர்களுக்குத் தெரியவாப் போகிறது....? வேலை வெட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு, பயணச் சீட்டும், தங்கும் இடமும் கொடுத்து, சாபாட்டிற்கும் பணம் கொடுத்து , யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு! எப்படியோ இந்த பெரிய மனிதரைப் பிடித்து ஒரு நிரந்தர வேலைக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கணக்கு போட்டார்கள் இருவரும். ஆனாலும் பேராசைதான் என்றாலும், இவ்வளவு பெரிய மனிதருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது பெரிய விசயமா...தாங்களும் பள்ளியிறுதி வகுப்பு வரை படித்திருக்கிறோமே என்ற தன்னம்பிக்கை வேறு. அவ்வளவுதான், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பாரிராசன் வள்ளலுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அவர் எள் என்றால் எண்ணெய்யாக நின்றார்கள். பாவம் இந்த பெரிய மனிதர்களின் வள்ளல் தன்மை பற்றி அறிந்திலர் இருவரும்!

மனிதர் இது போன்று ஏமாளிகள் கிடைத்தால் விடுவாரா என்ன....அவ்வப்போது பேண்ட்ரிக்கு அனுப்புவது, பெரிய மனது பண்ணி அவர்களுக்கும் சிறு தீனி வாங்கிக் கொள்ளச் சொல்வது [ ஆனாலும் அவர்கள் இருவரும் நல்ல பெயர் வாங்குவதிலேயே குறியாக இருந்தவர்கள் அதெல்லாம் சாப்பிடவேயில்லையே !] கால் மட்டும்தான் அமுக்கிவிடவில்லை இருவரும். அதைத்தவிர அவருடைய சொகுசுக்குண்டான அத்தனை பணிவிடைகளையும் சங்காமல் செய்தார்கள்.

வயிறு நிறைந்து, கண்கள் சுழட்ட ஆரம்பிக்க , இவர்கள் பாவம் அப்போதுதான், தங்களுடைய சுய புராணத்தை ஆரம்பிக்க இருந்தார்கள்.ஆனால் மனிதரோ தூங்குவதற்கு மும்முரமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பெட்டியை மேலே இருந்து எடுக்கச் சொல்லி அதிலிருந்து, காற்று ஊதும் தலையனையை எடுத்து ஒருவர் கொடுக்க, ஒருவர் ஊத, மகராசன் அதை சுகமாக தலைக்குப் பின்னால் வைத்துக் கொண்டார். பிறகு பெட்டியை பூட்டி எடுத்து தலைமாட்டில் வைத்துக் கொண்டார். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொள்ள மனிதர் எதையுமே கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சென்னையிலிருந்து ஆலப்புழா செல்லும் விரைவு வண்டி அது. அவர் இறங்க வேண்டிய இடம் கோவை. கோவை வந்தவுடன் எழுப்பி விட வேண்டும் என்ற கண்டிசன் வேறு போட்டுவிட்டு ஆனந்தமாக நித்திரை கொள்ள ஆரம்பித்து விட்டார். இந்த அப்பாவி இளைஞர்கள் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு கோவை வரக் காத்திருந்தார்கள்.

கோவை நெருங்கும் நேரம் மனிதர் எழுப்பினாலும் எழுந்திருக்கும் வழியைக் காணோம். இளைஞர்களுக்கு அவரைத் தொட்டு எழுப்ப பயம். அவருடையது ஒரு சிறிய பெட்டியும், ஒரு பெரிய பெட்டியும் ஆக இரண்டு உருப்படிகள். சிறிய பெட்டியைத்தான் தலைமாட்டில் வைத்துக் கொண்டார் பத்திரமாக.

இதற்குமேல் பொறுமை காக்க முடியாது என்று ஒரு இளைஞன் அவரை மெதுவாக தட்டி எழுப்பினான். மனிதர் அப்படியே ஆடி அசைந்து எழுந்திருக்க முயன்றார்.

‘ஐயா, வண்டி கோவை நெருங்கி விட்டது. சீக்கிரம் எழுந்திருங்கள். அங்கு 10 நிமிடம்தான் நிற்கும்.’

‘அட்ப்பாவிங்களா, முன்னாடியே எழுப்ப மாட்டீங்களா.......என்னடா ஒரு சூட்டிப்பே இல்லாத பசங்களா இருக்கீங்க....நீங்கள்ளாம் என்னாத்த வேலை பார்த்து கிளிச்சி பெரிய ஆளா வரப்போறீங்க...?’

அவ்வளவுதான், அவர்கள் முகம் பொசுக்கென்று வற்றிப் போய் தாங்கள் அவருடைய விலாசம் கேட்க நினைத்ததைக் கூட மறந்து விட்டார்கள். நல்ல வேளையாக அவருடைய விசிட்டிங் கார்ட் ஒன்று கீழே விழ அதை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர் இருவரும். எப்படியும் ஊருக்குப் போயாவது அவரைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டு விட வேண்டும் என்று திட்டம் இருவருக்கும்......ஆனால் ஒரு பெரிய ஆப்பு காத்திருப்பது பின்னால்தான் தெரிந்தது இருவருக்கும்.

ஆம் மனிதர் கழிவறைக்குச் சென்றவர் அங்கு 10 நிமிடம் எடுத்து கொண்டதோடு ஆடி அசைந்து வருவதற்குள் வண்டி கோவை ரயில் நிலையம் வந்து நின்றுவிட்டது. அரக்கப் பரக்க ஓடிவந்தவர், சின்ன பெட்டியைத் தான் எடுத்துக் கொண்டு, பெரிய பெட்டியை அந்த இளைஞரில் ஒருவரை கொண்டுவந்து கொடுக்கச் சொன்னார். அவர்களும் இந்த ஒரு வேலைதானே செய்துவிடலாம் என்று முடிவெடுத்து வேகமாக செயலில் இறங்கினர்.

‘அப்பாடி.........மனிதர் ஒரு வழியாக இறங்கவும், வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.ஒரு பெரிய கடமையை முடித்த திருப்தியுடன் இருவரும் நிம்மதியாக கண்ணயர்ந்தனர்.தூங்கி விழித்து, புறப்படத்தயாராகும்போது தான் ஒரு பெரிய அதிர்ச்சி இருவருக்கும். பெட்டி மாறியிருந்தது. ஆம் பாரிராசன் இறங்கும் அவசரத்தில் தன் பெட்டியை வைத்துவிட்டு அவர்களுடைய சிறிய பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார். இருவருக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அட்டா பெட்டியில் என்னென்ன் முக்கிய சாமான்கள் வைத்துள்ளாரோ தெரியவில்லையே என்று அச்சம் அடைந்தனர். சரி கீழே இறங்கியவுடன் முதலில் அவருக்கு போன் செய்து விவரத்தைச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

போன் எண்ணை எடுத்து ஒரு வழியாக போன் செய்ய எண்ணைப் போட்டு,

‘ஹலோ, பாரிராசன் ஐயாங்களா........’

‘ஆமாம், நீங்க யாரு...?’

‘ஐயா, நாங்கதான் ரயிலில் உங்களோடு பயணம் செய்தோமே. அவங்கதான். ஐயா.....நீங்க...’

‘டேய், திருட்டு பசங்களா.......என் பெட்டியை ஏண்டா மாத்தினீங்க...இப்ப பெட்டியைத் திறந்து பார்த்துட்டு அதில பெரிசா பணமெல்லாம் இல்லன்னதும் ஒன்னும் தெரியாத மாதிரி போன் பண்றீங்களா.....?’

‘ ஐயோ, இதென்ன, இப்படி பேசறீங்க...உங்க பெட்டியில என்ன இருக்குன்னே எங்களுக்குத் தெரியாதே...இப்பதான் உங்க பெட்டி மாறினதே எங்களுக்குத் தெரியும். உடனே போன் பண்ணறோம்...’

’அடேய், அதெல்லாம் எனக்குத் தெரியாது......அந்த பெட்டில முக்கியமான பில்லு, கிரெடிட் கார்ட் எல்லாம் இருக்கு. உங்களால அதை வைச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது. ஆனா எனக்கு அது ரொம்ப முக்கியம். மரியாதையா கொண்டாந்து குடுத்துபிடுங்க......இல்லேன்னா போலீசுல புடிச்சி குடுத்துடுவேன் பார்த்துக்கோங்க.........’

இருவருக்கும் வேர்த்துப் போய் குலை நடுங்க ஆரம்பித்து விட்டது. இது ஏதுடா வம்பாகப் போய்விட்டதே.......யார் முகத்துல இன்னைக்கு முழிச்சோமோ தெரியலையே.....ஆண்டவனே என்று விதியை நொந்து கொண்டு,

‘ஐயா, அவசரப்பட்டு வார்த்தையைக் கொட்டாதீங்க.....உண்மை தெரியாம ஒரு பெரிய மனிதர் வாயில் இப்படி கீழ்த்தரமான வார்த்தையெல்லாம் வரலாமா.....உங்களை எவ்வளவு பெருமையா நினைச்சிருந்தோம். இப்படி இவ்வளவு அநாகரீகமாக நடந்துக்கறீங்க......நல்லாயிருங்க ஐயா. உங்களோட பெட்டியை அப்படியே திறந்து கூட பார்க்காம கொரியர் பண்ணுகிறோம். திறந்து நீங்க சரி பார்த்துக்கோங்க.......இன்னொரு முறை இது போல அடுத்தவர் மனதை புண்படுத்துகிற பாவத்தைச் செய்யாதீங்க.......நன்றி ஐயா..’

பாரிராசனுக்கு முகத்தில் ஈயாடவில்லை....கன்னத்தில் யாரோ பளார் என்று அரைந்தது போல் உணர்ந்த மனிதர் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே திருதிருவென விழித்தார்!



பவள சங்கரி திருநாவுக்கரசு.







--


Monday, May 23, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் ! (10)

வெண்ணிலவில் ஒரு கருமுகில் !(10)

'விரும்பிப் போனால், விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் ‘ என்பது வாழ்க்கையின் ஒரு விதி.

மாறன் தந்தையைப் பர்த்தவுடன் அழுதுவிடக் கூடாது, தைரியமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தது, தந்தையின் கலங்கிய விழிகளைப் பார்த்த அந்த நொடியில் தவிடு பொடியாகிவிட்டது.தன்னையறியாமல் கண்களில் மாலையாக கண்ணீர். என்னதான் கண்டிப்பான அப்பாவாக இருந்தாலும், சிறு வயதிலிருந்தே தங்களுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்து பார்த்து செய்த மனிதராயிற்றே. இன்று இப்படி படுக்கையில் இருப்பதை காணச் சகிக்காமல் மனதைப் பிழிந்தது.

‘அப்பா, இப்ப தேவலையாப்பா....’ அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை.

‘நன்னாயிருக்கேன்ப்பா......ஏதோ நம்ம பார்த்தசாரதி என்னை மீட்டுண்டு வந்துட்டான்......அன்றாடம் அவனை சேவிச்ச பலனை மொத்தமா கொடுத்துட்டான்..பாவம் அம்மாதான் ரொம்பவும் நடுங்கிப் போயிட்டா..’ கண்களைச் சுழற்றி அம்மாவைத் தேடுவதைக் கவனித்த் மாறன்,

‘அப்பா, அம்மா வெளியில இருக்காப்பா. டாக்டர் ஒருத்தர்தான் உள்ளே இருக்கனும். அதுவும் 5 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம்.

‘சரிப்பா...நீயும் இப்பத்தானே ஊரிலிருந்து வந்திருக்கே. பிரயாணமெல்லாம் நன்னாத்தானே இருந்தது,’

‘ம்ம்..ஆமாம்ப்பா.நீங்க ஓய்வெடுத்துக்கோங்கோ...நானும் ஆத்துக்குப் போய் ஸ்நானம் பண்ணிண்டு வரேன்’

‘ம்ம் சரிப்பா. அம்மாவை வரச்சொல்லு.நாக்கு வரண்டு போறது. குடிக்க ஏதானும் வேணும்’

வெளியில் வந்தவன்,அம்மாவிடம் அனு நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து சற்றே தயங்கி நின்றான். இரட்டைப் பின்னலும், பட்டுப்பாவாடையும் கட்டிக் கொண்டு,ஓயாமல் வாய் பேசிக் கொண்டிருந்த சுட்டிப் பெண்ணாக, பார்த்தசாரதி கோவில் தேர்த்திருவிழாவின் போது இறுதியாகப் பார்த்தது அவளை.இப்போது நேர் மாறாக, மிக அமைதியாக, பொறுப்பான, பெண்ணாக சுத்தமாக மாறிவிட்டிருந்தாள். அம்மாவிடம் மிக அனுசரனையாக அவள் நடந்து கொண்டது நிறைவாக இருந்தது அவனுக்கு.துளியும் சங்கோஜப்படாமல், யதார்த்தமாக் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அவள் நடந்து கொண்ட விதம் மாறனுக்குப் பிடித்திருந்தது.குடும்பத்திற் கேற்ற நல்ல பெண் என்று அப்பா சொன்னது சரியாகத்தான் இருக்கிறதென்று நினைக்கத் தோன்றியது.

இந்த ஒரு வாரத்தில் தந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது மனதிற்கு அமைதியளிப்பதாக இருந்தது.அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறியிருந்தாலும் வீட்டிற்குச் சென்று க்வனமாக இருக்க வெண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கியிருந்தார் மருத்துவர். இன்னும் இரண்டொரு நாளில் நாளில் ஊருக்குக் கிளம்ப வேண்டும். அப்பா நலமாக இருப்பதில் மன நிம்மதியுடன் கிளம்ப முடியும். இந்த முறை இந்தியாவிற்கு வந்து 10 நாட்களே தங்க முடிந்தாலும், மனதிற்குள் ஒரு அமைதி இருந்தது.மலை போல் வந்த துன்பம் பனிபோல் நீங்கியது போல ஒரு நிம்மதி.அனுவின் அமைதியான தோற்றமும், நட்புறவுடன் பழகும் அவளின் குணமும்,தன் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் நல்ல மனதும் அவளிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது மாறனுக்கு. அதற்கு மேல் எதைப்பற்றியும் நினைத்துப் பார்க்க இயலாத சூழல்.

ஊருக்குக் கிளம்பும் போது அப்பாவின் கணகளில் துளிர்த்திருந்த சிறிய கண்ணீர் முத்துக்கள் மனதை நெகிழச் செய்தது.பழைய தெம்பு இன்னும் வரவில்லை.மரணபயத்திலிருந்து மீள கொஞ்ச காலம் பிடிக்கும் போன்று தெரிந்தது. எப்படியும் அனு அடிக்கடி வந்து பார்த்து இவர்களை சரி செய்துவிடுவாள் என்று நினைப்பது தவறோ என்று மனம் தயங்கத்தான் செய்தது.எது நடந்தாலும் நன்மைக்கே, என்று பொத்தாம் பொதுவாக முடிவு செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. அப்பா விமான நிலையம் வந்து வழி அனுப்பி வைக்க இயலாதது பெரும் மனக்குறையாக இருந்தது அவனுக்கு.அண்ணனும் முதல் நாளே கிளம்பிப் போய்விட்டான்.மன்னி வேறு அங்கு தனியாக இருந்து கொண்டிருக்கிறார்களே. வாயும், வயிருமாக இருப்பவர்களுக்கு ஒத்தாசைக்குக்கூட அங்கு அக்கம், பக்கத்தில் ஆட்கள் இல்லை.அதுதான் நகர வாழ்க்கை. மக்கள் அவரவர்களின் பாட்டைப் பார்ப்பதே பெரும்பாடு நகரங்களில்.இதில் அடுத்த வீட்டு பிரச்சனைகளைப் பார்ப்பது சாமான்யமான காரியம் அல்லவே.

ரம்யாவிற்கு தான் கிளம்பப்போவதை முன்பே தெரிவித்திருந்ததால், அவள் விமான நிலையத்திற்கு உல்லாச ஊர்தியுடன் வந்திருந்தாள்.பனிக் குன்றுகளின் சொச்சம் அங்கங்கே குத்தவைத்திருந்தது கணகளுக்கும் குளிர்ச்சிதான். சுட்டெரிக்கும் சென்னை வெய்யில்,எவ்வளவு கொடியது என்பதை இந்த மிதமான குளிர் நன்கு உணர்த்தியது.நெவார்க் விமான நிலையம், மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி.சரியான நேரத்திற்கு விமானம் தரையிறங்கிவிட்டாலும், பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து வெளிவர சற்று தாமதம் ஆனது. பாவம் ரம்யா வந்து காத்துக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாக ஓடி வந்த மாறன் வெளியில் ரம்யாவைக் காணாமல் தலையைத் திருப்பி அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தான்.

வலது புறம் நுழைவாயிலில் ஒரு சீனக் குழந்தை, குண்டு கன்னம், சப்பை மூக்கு, ரோசா வண்ண இதழ்கள், அழகான மழலையில் உடன் வந்த இன்னும் சற்றே பெரிய குழந்தையிடம் ஏதோ கையை நீட்டி, நீட்டி பேசிக் கொண்டிருந்தது...நடு நடுவே, தன்னையே யாரோ உற்றுப் பார்ப்பதை உணர்ந்து, சற்றே நாணத்துடன், லேசான புன்னகையைப் பூத்தது.....அந்த அழகில் அப்படியே மெய்மறந்து நின்று கொண்டிருந்த போதுதான், முகத்தின் வெகு அருகில் சாவி ஆடியது. யாரது, என்ற கோபத்துடன், திரும்பி பார்த்தவன், அட ரம்யா...நீதானா?

‘ஆமாம் மாறன், கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வழியில் ஒரே போக்குவரத்து நெரிசல் வேறு.வந்து சேருவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது.சாரிப்பா’’

பரவாயில்ல விடு, எனக்கு நேரம் போனதே தெரியலப்பா....இந்த குழந்தைகள் அத்தனை அழகு...என்னமா பேசறாங்க......ஆங்கிலமும், சீனமும், கலந்து தூள் கிளப்புறாங்க.......பொழுது போனதே தெரியல.

‘என்னப்பா, அதுக்குள்ள குழந்தை ஆசை வேறு வந்துவிட்டதா.ரொம்ப டூ மச்சா இல்ல இருக்கு இது.அது சரி அப்பாகிட்ட,மேட்டரை போட்டு உடைச்சு எனக்கு வேலை இல்லாம பண்ணிட்ட போல’

‘அட ஏன்ப்பா, நீ வேற,அங்க இருக்கற நிலைமை தெரியாம பேசிக்கிட்டு இருக்கே.அதெல்லாம் இருக்கட்டும், நம்ம் ஆபீஸ்ல என்ன விசேசம். நீ பேக்கிங் எல்லாம் ஆரம்பிச்சுட்டியா?’

ஆபீஸ் எப்பவும் போலத்தான்...நாளொரு இஷ்யூவும், பொழுதொரு சங்கடமுமாக போய்க்கொண்டு இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை.இப்பத்தான் ஊருக்கு, ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன்.இனிமேதான் பேக்கிங் ஆரம்பிக்கனும். இன்னும் 2 வாரம் இருக்கே...

இருவரும் பேசிக் கொண்டே, கார் பார்க்கிங்கிற்கு வந்து தரையில் பரவிக் கிடந்த பனிக்கட்டிகளில் வெகு கவனமாக அடி எடுத்து வைத்து நடந்து சென்று வண்டியினுள் ஏறினர்.ரம்யா, எடுத்த எடுப்பிலேயே, சர்ரென, ஆக்சிலேட்டரை தூக்கி விட்டு வேகமாகக் கிளப்பினாள்.

‘என்ன ஆச்சு, ரம்யா. ஏன் இப்படி...பார்த்து நிதானமா எடு’

‘ம்ம்ம்’

பார்க்கிங் ஏரியாவை விட்டு வெளியே வந்த்வுடன், திரும்பவும் வேகத்தை அதிகமாக்க முயன்றாள். ஸ்பீட் லிமிட் 40 மைல் என்று தெரிந்தும், அதற்கு மேலும் வேகம் எடுக்க ஆரம்பித்தாள். பல முறை ஏற்கனவே டிக்கெட் வாங்கியவள்தான் என்றாலும், அங்கங்கே இன்னும் பனிக்கட்டிக்ளின் மீதம் பரவிக் கிடக்கையில் இப்படி சர்ரென்று வண்டி எடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்தும் இப்படிச் செய்கிறாளே என்று யோசிக்கும் போதே, ரம்யா வண்டியை அப்படியே பனிக்கட்டியின் மீது வேகமாக ஏற்ற, வண்டி ஒரு சுற்று சுற்றி சர்ரென வழுக்கிக் கொண்டே ........இழுத்துச் சென்றது. கத்துவதற்குக்கூடத் தோன்றவில்லை இருவருக்கும்.நல்ல வேளையாக ஒரு மரம் சாலையோரம் இருந்தது. வண்டி அதில் சென்று மோதி நின்றது. இன்னும் இரண்டு அடி சென்றிருந்தால், அவ்வளவுதான், ஒரு பெரிய பள்ளம். ஏழு, எட்டு அடி இருக்கும். நல்ல வேளையாக எந்த சாமி புண்ணியமோ, மரம் வந்து காப்பாற்றியது. வண்டியைத் திறந்தால் திறக்க முடியாமல், கதவு இறுகிக் கொண்டது.

ரம்யா அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டாள் படபடப்பாக......

மாறன் அவளிடமிருந்த செல்பேசியை வாங்கி 911 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து, செய்தியைச் சொல்லி உதவி கேட்டு, அவர்கள் வந்து ஒரு வழியாக வண்டியைத் திறந்துவிட, பிறகு இருவரும் ஓரளவிற்கு சரி செய்து கொண்டு புறப்படத்தயரானார்கள்.மாறன் தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வருவதாக எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்து தானே ஓட்டி வந்து சேர்ந்தாள்.

‘என்ன ரம்யா....இன்னும் இவ்வளவு டென்சனாவே இருக்கே.....என்ன ஆச்சுப்பா.’ என்றான் கனிவாக.

‘அதெல்லாம் ஒன்னுமில்ல மாறன். இந்தா உனக்கு சாப்பாடு. ஏதோ செய்திருக்கேன். சுமாராத்தான் இருக்கும். நாளைக்குத் தனியா சப்பாத்தியும், சன்னாவும் வைத்திருக்கிறேன். இப்போ போய் சாதம் சாப்பிடு. தக்காளி சாதம். உனக்குத்தான் பிடிக்குமே. நாளைக்குப் பார்க்கலாம். சரியா....’

‘ரம்யா, பார்த்துப் போ ரம்யா. நாளைக்குப் பேசலாம்’என்று கூறி அனுப்பினாலும், ரம்யாவை நினத்து மேலும் கவலையாக இருந்தது மாறனுக்கு. ஏன் இவ்வளவு டென்சனாக இருக்கிறாளோ தெரியவில்லையே. நாளை ஆபீஸ் சென்றவுடன் முதல் வேலையாக அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.வீட்டில் நுழைந்து பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, கழிவறைக்குச் சென்று முகம் அலம்பிக் கொண்டு வந்து உட்கார்ந்தான். அம்மா இத்தனை நெருக்கடியான மனநிலையில் கூட தனக்காகவும், அண்ணன், மன்னிக்காகவும், பலகாரங்கள் செய்து கொடுத்ததை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை அவனால்.தாய்மை என்ற அந்த உணர்வு இந்த உலகத்தில் வேறு எந்த உறவுக்கும் ஈடாகுமா என்று கற்பனைகூட செய்து பார்க்க இயலாத ஒன்று.இட்லி பொடி, பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி என்று எல்லாம் பார்த்து பார்த்து பக்குவமாக தயார் செய்து, அழகாக அதை பேக் செய்தும் கொடுத்திருந்தார்கள். எப்பொழுதும் பேக்கிங் தந்தையின் வேலை.இந்த முறை அம்மா, அப்பாவின் மேற்பார்வையில் அதே போல் அழகாக பேக் பண்ணி அனுப்பியிருந்தார்கள். அம்மா கைபட்ட அந்த பொட்டலத்தின் ஸ்பரிசம் கூட அவனுக்கு அந்த நேரத்தில் இதமாக இருந்தது. ஏதோ தன் தாய் அருகாமையில் இருப்பது போன்று ஒரு உணர்வு. இதற்காகவே அவன் தன் அம்மாவிடம் எதையாவது இப்படி கேட்டு வாங்கி வைத்துக் கொள்வான். முடிந்தவரை அதை கொஞ்சமாவது சேமித்து வைத்தும் கொள்வான், அடுத்த முறை ஊருக்குச் செல்லும் வரை. ரம்யா கூட பல முறை இதைக் கிண்டல் செய்திருக்கிறாள், தேவையில்லாத செண்டிமெண்ட் என்று......ரம்யா கொடுத்த தக்காளி சாதம் சுவை சற்று மட்டுதான் என்றாலும்,பசிக்கு தேவாமிர்தமாக இருந்தது. அம்மா கையால் சுவையாக சாப்பிட்டு வந்ததனால் ஒரு வேளை இது மட்டாக தெரிகிறது போலும் என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டான். திடீரென புரை ஏற ஆரம்பித்தது அவனுக்கு.யாரோ தன்னை நினைத்துக் கொள்வார்கள் போலிருக்கிறதே...யாராக இருக்கும்......?



வாஷிங்டன் - நண்பன் தினேஷின் வீடு.இரண்டு பேருக்குப் போதுமான அளவில் சிறிய வீடு. ஒரு படுக்கை அறை, சமயலரை, சின்ன வரவேற்பு அறை என சிறிய வீடுதான். அங்கு வாங்குகிற சம்பளத்தில் கனிசமான செலவு என்றால் அது வீட்டு வாடகையும், குழந்தை பராமரிப்பு செலவும்தான்.கணவன், மனைவி இருவருக்குப் போதுமான வீடுதான். ஆனாலும் யாராவது இப்படி விருந்தாளி வந்துவிட்டால் கொஞ்சம் திண்டாட்டம்தான்.தினேஷின் மனைவி அனிதாவின் தூரத்து உறவினரின் பெண் அங்கே குடியிருப்பதாகவும், அவள் தனியாக இருப்பதனால் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்யும்படியும், அனிதாவின் பெற்றோர், ஏற்கனவே தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார்கள். அதனால் இன்று அவள் வீட்டிற்கு வந்து நேரில் சில விசயங்கள், அலுவல் சம்பந்தமாக பேச வேண்டும் என்பதாலும் தினேஷின் இல்லம் தேடி வந்திருக்கிறாள்.

அப்போதுதான் அவள், தனக்கு கம்பெனியில், டெப்புடேஷனாக 2 மாதங்களுக்கு நியூ ஜெர்சிக்கு மாற்றல் செய்திருக்கிறார்கள், என்றும் அங்கு ஒருவரையும் தெரியாததாகையால் தனக்கு உதவ யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

அப்போதுதான் மாறனின் நினைவு வந்தது தினேஷிற்கு. மாறனின் நல்ல குணங்கள் குறித்தும், அவன் கல்லூரிக்காலத்திலேயே, அனாதை ஆசிரமம் ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் பல குழந்தைகளின் வாழ்வில் இன்றும் ஒளியேற்றிக் கொண்டிருப்பதையும், அந்த வகையில்தான், தனக்கும் மாறனின் அறிமுகம் கிடைத்ததையும் குறித்து விளக்கமாகக் கூறி, அவனை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் கூறினான் தினேஷ், அவந்திகாவிற்கு. ஆம் அதே அவந்திகாதான்.............

தொடரும்.

Tuesday, May 17, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 (5)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை -பகுதி - 2 (5)



அடுத்து நாங்கள் சென்ற கோவில்களில் மிக இனிமையான, அதாவது இனிப்புகளாலேயே அலங்கரிக்கப்பட்ட கோவில் இருந்ததே........சொல்கிறேன்....சற்று பொருங்கள் சாமி.....

கால பைரவர் சிவனுடைய பக்தர்.இவருடைய கோவிலில்தான் முழுவதும் விதவிதமான இனிப்பு தின்பண்டங்களினாலேயே அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இவருடைய மகிமை எத்தகையது என்பதற்கான ஆதாரம், பனாரஸில் ஔரங்கசீப்பின் கையிலிருந்து தப்பித்தது இந்த கால பைரவர் கோவில் மட்டும்தானாம்.கால பைரவர் நீதிமான் என்று கருதப்படுகிறார் ஒரு கவளம் சோறுண்டு, ஒரு கோடி சொத்தானாலும், சோர்வின்றி விடிய விடிய காக்கும்,நாய் என்ற அந்த நன்றியுள்ள ஜீவன்.கால பைரவரின் வாகனமாக இருக்கக்கூடிய தகுதி வாய்ந்த ஜீவன்!நகரத்தின் ஒவ்வொரு முக்கிலும் நின்று காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.ஊரில் உள்ள அத்துனை விதமான இனிப்பு வகைகளையும் அந்த கால பைரவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அலங்க்காரம் செய்திருந்தனர்.

அடுத்து துர்கையம்மன் கோவில் தரிசனம்! மகா துர்கா கோவில், காசி நகரத்தின் தெற்கே உள்ளது. இக்கோவில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கோவிலாம்.ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், நவராத்திரி காலங்களிலும், விசேட பூசைகள் நடப்பதுடன், கூட்டமும் அதிகமாக இருக்கிறது. ஒரு ஆங்கிலேய அதிகாரி, ஏதோ ஒரு சண்டையில் வெற்றி கொண்டால் ஒரு மணி வாங்கி வைப்பதாக வேண்டிக்கொண்டு அச்சண்டையில் வெற்றி கண்டதால் ஒரு மணியும் வாங்கி தொங்க விட்டுள்ளார். அந்நிய நாட்டவருக்கும், நம்பிக்கையை ஏற்படுத்திய அற்புத சக்திவாய்ந்த அம்மன்!இந்தக் கோவிலில் குரங்குகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனாலேயோ என்னவோ இக்கோவிலை குரங்கு கோவில் என்றும் அழைக்கின்றனர்.

அடுத்து, சோளியம்மன் கோவில் என்ற மிகப் பழமையான சிறிய கோவில். காசிவிசுவநாதரின் தமக்கை இந்த சோளியம்மன் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.சற்றே உயர்ந்த குன்றின் மீது தனியளாக கம்பீரமாக வீற்றிருக்கிறாள் சோளியம்மன்.

சிரி சுவாமி பாஸ்கரானந் சமாதி:

துர்கா கோவிலின் அருகில் சுவாமி பாஸ்கரானந் சமாதி மிகவும் அழகாக சங்மர்மங் என்ற கல்லினால் கட்டப்படடு இருக்கிறது.இந்த சமாதியின் பூந்தோட்டம், கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக வடிவமைக்கப்பட்டு, பாதுகாக்கவும்படுகிறது.சிவலிங்கத் திருமேனி வடிவில் கட்டப்பட்ட இச்சமாதி எந்நேரமும் திறந்திருக்கிறது.இங்குதான் அருகில் நாங்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டுச் சென்றோம். பயணிகளுக்கு வரப்பிரசாதம் இந்த ஏடிஎம் வசதி. கையில் பணம் அதிகமாக வைத்துக் கொள்வது பாதுகாப்பற்ற சூழலை எற்படுத்துகிற காலகட்டத்தில் அங்கங்கே, ஏடிஎம் வசதி, மிகுந்த பயனளிப்பதாகாவே இருக்கிறது!அதிகமான கல்வியறிவற்ற கிராமத்து மக்கள் கூட பழக்க தோசத்தில் அழகாக ஏடிஎம்மை பயன்படுத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

துளசி மனாஸ் கோவில் :

துளசி மனாஸ் கோவில் துர்கா கோவிலுக்குப்பின் 1964ல் இரண்டு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் சுவர்களில் ராமர், சீதை, விஷ்ணு,இலக்குமி, அண்ணபூரணி, ராமாயணம் வடித்த துளசிதாசர் ஆகியவர்கள் அழகிய சித்திர வடிவமாக அருள்பாலிக்கின்றனர். அருகில் சிவபெருமான் தன் தலையில் கங்கையைத் தாங்கியுள்ளது போல் அழகாக வடிவமைக்கப்பட்ட கோவிலும் அதனருகில் அழகான பூந்தோட்டமும் உள்ளது.

பாரத மாதா கோவில் :

இந்த கோவில் 1936ல் மகாத்மா காந்தியடிகள் திறப்பு விழா செய்த பெருமை வாய்ந்த கோவில்.ஆங்கிலேயர்களுடன் நடந்த சுதந்திரப் போராட்டத்தின் நினைவாக சிரிசில் பிரசாத் குப்தா என்பவர் இக்கோவிலைக் கட்டியுள்ளார். இக்கோவிலில் இமாலய பர்வதத்தின் சிகரம் , திபெத் முதலிய இயற்கை காட்சிகளுடன், அழகான சித்திரங்களும் மேலும் அழகூட்டுகிறது. அருகில் ஒரு நூலகமும் இருக்கிறது.

சமஸ்கிருத பல்கலைக்கழகம் :

காசியில் சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்பவர்கள் அதிகம். பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் கட்டப்பட்ட ‘குயீன்ஸ் காலேஜ்’ என்ற பிரபலமான கல்லூரி, அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த டாக்டர் சம்பூர்ணா நந்தி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பல்கலைகழகத்தில் அருங்காட்சியகம் மற்றும் நூலகமும் இருக்கிறது. இந்த பல்கலைக் கழகத்தில் அழகாக கோவில்களும் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த பல்கலைக்கழகம் ஆயுர்வேத கல்லூரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் :

பனாரசின், தெற்கு எல்லையில் 1300 ஏக்கர் நிலம் காசி ராஜாவினால் கொடுகப்பட்டுள்ளது.இது மிகப் பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது.மதன் மோகன் மாளவியர் 1916ல் இந்த பல்கலைக்கழகத்தை கட்டியுள்ளார்.முதல் வாசலில் இவருடைய சிலையும் இருக்கிறது.இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, நூலகம், சமஸ்கிருத அறிவியல், விவசாய நுட்பம், இசைக்கல்லூரி முதலியவைகள் இருக்கின்றன.இன்னொரு சுவையான தகவல், இந்த பல்கலைக்கழகத்தில், சுயமின் உற்பத்தி செய்யப்படுகிறது.

காசி ராஜாவின் அரண்மனை கங்கை நதியின் தெற்குப் புறம் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. ராஜா பயன்படுத்திய விதவிதமான பல்லக்கு,வண்டிகள் மற்றும் அவருடைய உடைகள், ராணியின் உடைகள், அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் மிக மோசமான நிலையிலேயே உள்ளது.

அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலமான சாரநாத் சென்றடைந்தோம். பண்டைய அரண்மனைகளும், தர்பார்களின் நினைவுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், இன்றும் செவ்வனே பராமரிக்கப்பட்டு வருகிறது.சாரநாத் காசியிலிருந்து, 6 மைல் தொலைவில் வடக்குப் பகுதியில் இருக்கிறது.இதுவே புத்த மதத்தின் தாய்நாடு. காசியிலிருந்து கார் அல்லது இரயில் மூலம் செல்லலாம்.சாரநாத்தில் இரயில் நிலையம் உள்ளது. பிர்லா சத்திரமும் உள்ளது. சுமார் 2 அல்லது 3 ஃபர்லாங்க் தூரத்தில் கி.மு.5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாக்குண்டி இருக்கிறது. அசோகர்,கனிஷ்கர்,குப்தர் முதலிய அரசர்கள் காலத்தில் சாரநாத் நகரம் மென்மேலும் சிறப்படைந்திருக்கிறது. பாஹினி, ஹியின் சங் ஆகிய இரண்டு சீன யாத்ரீகர்கள் கி.மு.5,7ம் நூற்றாண்டில் மிகவும் புகழ்ந்துரைத்துள்ளார்கள். சாரநாத்தில், செங்கற்களால் கட்டப்பட்ட மிக அழகிய புத்தர் கோவில்கள் உள்ளன. புத்த மதத்தினர்கள்,அழிந்து போன, செங்கற்கள், கருங்கற்கள் முதலியவைகளையும் வணங்குகின்றனர். புத்த பகவான் இங்கே ஒரு சாதாரண குடிலில் 4 மாதங்கள் தங்கி இருந்துள்ளார். அந்த இடத்தில் 200 அடி உயர புத்தர் கோவில் கி.மு 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.

இந்த அருங்காட்சியகம் கி.மு.3ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.இதில் புத்த மதத்தின் வரலாற்று சின்னங்கள் மற்றும், அசோகச் சக்கரத்தின் சிதைந்த பாகங்களை அதன் மூல வடிவம் போல் செய்து பாதுகாத்து வருகின்றனர். அதன் முகப்பில், அசோக ஸ்தூபியில் உள்ள நான்கு புறமும் இருக்கக்கூடிய சிங்க உருவ அமைப்பை அப்படியே வைத்து பாதுகாக்கின்றனர்.

முல்காஞ்குடி விஹார் :

இந்தக் கோவில் தங்கத்தில் இலங்கை ஆளுநர் காதர்மபாலினால் கட்டப்பட்டது.ஜப்பானிய சிற்ப வல்லுநர்களால் கட்டப்பட்டுள்ளது. அஜந்தா பெயிண்டிங்கும் உள்ளது.

அடுத்து நாம் தரிசிக்கப் போவது சுவர்க்க லோகத்தின் முகப்பு வாயிலான ரிசிகேஷ் மற்றும் ஹரித்துவார் ஆகிய புண்ணியத்தலங்களை!

தொடரும்.


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 (5)
May 15, 2011
by coral shree

Sunday, May 15, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 9

வெண்ணிலவில் ஒரு கருமுகில் ! (9)


பரந்து விரிந்த வனாந்திரம். திரும்பிய புறமெல்லாம் வறண்ட் நிலங்கள்! காய்ந்து சருகாய்ப் போன மரங்கள். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் முகம் தெரியாத விதவிதமான மூகமூடிகளுடன், எள்ளி நகையாடும் மனிதர்கள். இதில் அழகான முகமூடிகளைத் தாங்கிய உருவங்களை நாடிச் சென்ற மற்றொரு முகமூடி அதன் உண்மை முகத்தைக் கண்டு அலறிக்கொண்டு காத தூரம் ஓடும் காட்சி..........மத்தியில் மரக்கட்டையாய் நீண்ட ஒரு உருவம் மல்லாந்துக்கிடக்க, சுற்றிலும் கருமையான, பயங்கர தோற்றத்துடன் கொத்தித் திங்கக் காத்திருக்கும் இராட்சத கழுகுகள்..........அய்யோ பாவம் யாரந்த உருவம் என்று உற்று நோக்க.......... அம்மாடியோவ்.......... நானா அது ?

வியர்வை வெள்ளம் ஆறாய்ப் பெருக, க்ண்கள் திறக்க மறுக்க, மிகச் சிரமப்பட்டு போராடி மீண்டு வந்தது போல் கண் விழித்தாள ரம்யா. டிஜிட்டல் கடிகாரம் இரவு 2 மணியைக் காட்டியது. ஓ.......கனவா.......சே.........
என்ன மோசமான கனவு!

இரவு வெகு நேரம் தூங்காமல் எதை, எதையோ நினைத்து மனக் குழப்பத்தோடேயே கண் அசந்ததின் விளைவுதான் இப்படி ஒரு மோசமான கனவு என்பது புரிந்தாலும், அதைத் தவிர்க்கும் உபாயம்தான் அவளுக்குப் பிடிபடவில்லை. ரிஷியின் மனைவி சொன்ன விசயம் தன் மனதை மிகவும் பாதித்திருந்ததையும் உணர முடிந்தது அவளால். ரிஷி மீது இருந்த அத்துனைக் கோபமும் நொடியில் மறைந்து போனது அவளுக்கே ஆச்சரியமாகவும் இருந்தது. ஆம் ரிஷி செய்தது சாதாரண தியாகமா? எந்த குறையும் இல்லாத பெண்களைத் திருமணம் செய்யவே ஆயிரம் யோசனை செய்யும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெண் என்பதற்கு ஆதாரச்சுருதியான, கருவைச் சுமக்கும் அந்த கர்பப்பையே இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன்வந்த அவன் தியாகச் சிந்தையை எப்படி பாராட்டுவது. தன் தாய், அந்த கொடிய வியாதியால் அவதிப்பட்டு, உருக்குலைந்து உயிர்விட்ட ரணம் அந்த இளகிய உள்ளத்தை ஆழமாக பாதித்ததன் விளைவு, அதே வியாதியால், திருமண வயதில் பாதிக்கப்பட்டு, நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்ததனால், அந்த ஒரு பகுதியின் இழப்போடு உயிர் பிழைக்க முடிந்த, தன்னுடைய தூரத்து உறவினரின் பெண்ணை மனமுவந்து மணந்து கொண்ட அவனைத் தன் நண்பன் என்று சொல்வதில் பெருமையாக இருந்தது அவளுக்கு.

சுட்டித்தனமும், குறும்பும் நிறைந்திருந்த இந்த ரிஷிக்குள் இத்துனை நல்ல மனம் இருக்கும் என்று நினைக்க முடியவில்லை. ஆனாலும் தனக்கு அந்த பேரிழப்பைத் தாங்குவது சிரமமான காரியம் என்றாலும், காலம் எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த மருந்து என்பதும் அவளால் உணர முடிந்தது.

மாறனின் தந்தையின் உடல் நலம் குறித்த பெரும் கவலையும் சேர்ந்து கொண்டது.மூன்றாவது நாளாக இன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது வேதனையான விசயம் தான். மாறன் மருத்துவரிடம் தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தாலும், அவன் உடனே கிளம்பி செல்ல முடியாத அளவிற்கு சில பிரச்சனைகள். விரைவில் கிளம்பும் ஏற்பாடுகளும் செய்து கொண்டுதான் இருக்கிறான். தந்தை அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அறிந்தவுடன் தான் சற்றே நிம்மதிப் பெருமூச்சு அவனிடமிருந்து வந்தது.


--
சில நேரங்களில் விதியின் போக்கை எவராலும் உணர முடிவதில்லை. எப்படியும் அவந்திகா பற்றி அம்மாவிடமும், அப்பாவிடமும் சொல்லிவிட வேண்டும் என்று அவன் எடுத்த முயற்சியை எவ்வளவு எளிதாக முறியடித்ததோடு, அதே அத்தையிடமும், அத்தை பெண்ணிடமும் தானே வலியச் சென்று அப்பாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க வேண்டி அடிக்கடி பேசவும் வைத்து விட்டதே......

ரம்யாவின் நிலையோ அதனினும் பரிதாபமானது. இவ்வளவு நாள் ரிஷி தனக்கு பெரிய துரோகம் இழைத்து விட்டதாக கற்பனை பண்ணிக் கொண்டதன் விளைவு,அவன் மீது ஏற்பட்ட கோபம், காதலை மறக்கச் செய்தது. ஆனால் இன்று அவனுடைய தியாக மனநிலையை உணர்ந்து கொண்டபின், காரிருள் விலகிய கதிரவன் போல் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது மனது.ரிஷியின் மீது எப்படியும் தப்பு கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று மனம் திட்டம் போட்டு வேலை செய்ததையும் அவளால் மறுக்க இயலவில்லை.

தனக்கு நிறைவேறாமல் போன காதலை எப்படியும், தன் நண்பனை அவன் அன்பிற்குப் பாத்திரமான அவந்திகாவுடன் சேர்த்து வைத்து விடுவது என்று முடிவு செய்த பிறகுதான் சற்றே ஆறுதல் அடைந்தது.நினைப்பதெல்லாம் நடத்திவிடத்தான் அனைவருக்கும் ஆசை, விதி என்ற ஒன்று இருப்பதை மறக்கும்வரை.

மாறன் அலுவலகத்திலும் இருப்பு கொள்ளாமல், தந்தையின் உடல் நலம் குறித்த கவலையில் பணியிலும் கவனம் செலுத்த இயலாமல் பரிதவித்ததை உணர்ந்த உயர் அதிகாரி, அவனுக்கு விடுமுறையும் கொடுத்து, பயணச் சீட்டிற்கான ஏற்பாடும் பண்ணிக் கொடுத்தார்.ரம்யாவிற்கு முன்பாகவே தான் இந்தியா கிளம்பி வருவோம், அதுவும் இப்படி ஒரு சூழலில் வருவோம் என்ற நினைத்துப் பார்க்கவில்லையென்றாலும், காலத்தின் கட்டாயம்.

விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன், தன்னையறியாமல் மனது அப்பாவைத் தேட ஆரம்பித்தது. ஒவ்வொருமுறை தான் செல்லும் போதும் வரும் போதும் தந்தையை வரவேண்டாம் என்று கூறினாலுல் அவர் அதை சட்டை செய்யாமல், காலந்தவறாமல் சரியாக வந்து சேர்ந்துவிடுவார். கண்கள் தன்னையறியாமல் தந்தையைத் தேட, மூத்த அண்ணன் கண்ணில் பட்டான். ....

‘ அண்ணா, நீ எப்ப மும்பையிலருந்து வ்ந்தாய்’?

‘நானும், நேற்றுதான் வந்தேன், மாறன்’

‘அண்ணியும் கூட வந்திருக்காங்கல்ல.எப்படி இருக்காங்க’.

‘இல்லப்பா. அண்ணியை டாக்டர் டிராவல் பண்ண வேண்டாம்னு சொல்லியிருக்காங்க.....குழந்தை உண்டாகியிருக்கு. கொஞ்சம் வீக்கா இருக்கறதுனால ரெஸ்ட்ல இருக்கச் சொல்லியிருக்கா, டாக்டர்.

இருவரும் ஏதும் பேசத்தோன்றாமல், ஆழ்ந்த யோசனையினூடே, மருத்துவமனை வந்து சேர்ந்தார்கள்.

அண்ணன் வீட்டிற்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு வந்து அப்பாவைப் பார்க்கலாம் என்று சொல்லியும் கேட்காமல், மாறன் அடம்பிடித்து நேரே மருத்துவமனை வந்து சேர்ந்தான். கட்டிலில் கிழிந்த நாராய்க் கிடந்த தந்தையைப் பார்க்கவே வேதனையாக இருந்தது . இந்த ஒரு வாரத்தில் எத்துனை மாற்றம் .அசந்து உறங்கிக் கொண்டிருந்ததால், சத்தம் செய்ய மனம் வராமல், அம்மாவை வெளியே வரும்படி கையை ஆட்டிவிட்டு, வெளியில் வந்தான்.

மாறனைப் பார்த்தவுடன், தாய்மை உணர்ச்சி மேலிட,மகனின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘எனக்கு பயமா இருக்குப்பா’........என்று நாத்தழுக்க சொல்ல,மாறனின் கண்களிலும் கண்ணீர் தழும்புவதைப் பார்த்த அண்ணன்,

‘என்ன மாறன் இது. அம்மாதான் உணர்ச்சிவசப் படுகிறார்களென்றால், நீயும் இப்படி இருப்பது சரியல்ல. அம்மாவிற்கு ஆறுதல் சொல்வதைவிட்டு, நீயும் இப்படி இருந்தால் எப்படி..?’

‘சரி அண்ணா, டாக்டர் என்ன சொன்னார். ஒன்னும் பயம் இல்லையே’


‘சரி . மருத்துவமனையைப் பார்த்தவுடன் அப்பாவிற்கு நல்லபடியாக விரைவில் குணம் அடைந்து விடும் என்ற நம்பிக்கை வருகிறது.அம்மா, நீங்க ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க. பயப்படாதீங்க அம்மா. அப்பா விரைவில் குணமடைந்து விடுவார்’என்றான், தாயின் கைகளைப்பிடித்துக் கொண்டு.

அம்மாவின் செல்பேசி அழைக்கவும், மாறன் அதை எடுத்து ஹலோ என்று அழைக்க,மறுமுனையில், அத்தை.

‘ ஹலோ, மாறனாப்பா..... எப்படி இருக்கிறாய். அப்பா நல்லா இருக்கார். கவலைப்படாதீங்கப்பா. விரைவில் வீட்டிற்கு நல்லபடியாக கூட்டிச் செல்லலாம் ‘ என்று சொல்லிவிட்டு,மங்களத்திடம் போனை கொடுக்கச் சொல்லி,

‘ மங்களம், அனுவிடம் சாப்பாடு கொடுத்தனுப்புகிறேன்.இன்னைக்கு அவளுக்கு ஆபீஸ் லீவ்தான்.’

‘சரி, அக்கா,நீங்களும் முடிந்தால் ஒரு எட்டு வந்துட்டுப் போனேள்னா பரவாயில்லை’

‘ அதுக்கென்ன. நான் சாயங்காலமா, வரேன்’

அத்தை போனை வைத்தவுடன், மாறன் அம்மாவின் முகத்தைப் பார்க்க, அம்மாவும்,

‘இந்த ஒரு வாரமா, அனுதான் தினந்தோறும் வந்து அப்பாவிற்கு தேவையான காரியங்களெல்லாம் செய்துண்டிருக்கா........இதோ இன்னும் சித்த நாழில வந்துடுவோ......’

அனு வரப்போகிறாளா.....மாறனுக்கு அதுக்கும் மேல் அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காவிட்டாலும், தந்தை முழித்தவுடன் அவரைப் பார்த்து பேச வேண்டுமென்ற ஆவலில் மௌனமாகக் காத்திருந்தான்.....


தொடரும்.

--

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...