Tuesday, February 21, 2012

நாங்களும் மாணவர்கள்தான்!

நேர்காணல் – சித்தார்த்தா பள்ளி மாணவர்கள்

உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.! – காந்தியடிகளின் இந்த சத்தியமான வார்த்தைகள் எக்காலத்திற்கும், மனிதராய்ப் பிறந்த எந்நாட்டவருக்கும் பொருந்தக்கூடியது.

ஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றவர்களுக்குத் தம் குழந்தையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளும், கற்பனைகளும் உடன் தோன்றுவதும் இயற்கை. அதனை நன்முறையில் செயல்படுத்தும் வகையில் அவர்கள் மனதில் தோன்றக்கூடிய அடுத்த விசயம் குழந்தையின் கல்வி. தம் குழந்தையை, ஒரு பிரபலமான பள்ளியில் சிறந்த மாணவனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது. அவரவர் குடும்பச் சூழலுக்கேற்றவாரு பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிரம்மாண்ட கட்டிடங்களுடன், அதிகக் கட்டணமும் வசூலித்து, அதிக மதிப்பெண்கள் வாங்க வைத்து, நூறு சதவிகித தேர்வு முடிவுகள் காட்டும் வல்லமை பெற்ற பள்ளிகளே சிறந்த பள்ளிகளாகவும் முடிவு செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்து பயிலச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு, பிரம்மப் பிரயத்தனப்பட்டு அது போன்ற பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோரே அதிக அளவில் உள்ளனர்.

அண்ணல் காந்தியடிகள் தம்முடைய, ‘நயீ தலீம்’ என்ற கல்வி முறையின் மூலம் இந்தியாவில் தொழில் மூலம் கல்வி கற்கும் முறையை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தார். குழந்தைகள், தங்கள் கைகளினாலேயே பொருட்கள் தயாரிப்பதை, மிகவும் விரும்பி வரவேற்றனர். அனைத்துக் கல்வியும், ஏதாவது, கைவினைப் பொருட்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார். உதாரணமாக, குழந்தைகளை, பஞ்சு பொறுக்கிப் போடுவதற்கு, அழைத்துச் சென்று, அது எப்படி விளைகிறது என்கிற விளக்கங்களையும் கற்பிக்கலாம். பஞ்சு விளையக் கூடிய நாடுகள், பலதரப்பட்ட பஞ்சு வகைகள், அதனைப் பயிரிடும் முறைகள் மற்றும், அதன் வளர்ச்சி குறித்த தகவல்கள் போன்றவற்றையும் கற்பிக்கலாம்.

இந்த முறையில் குழந்தைகளின் கற்கும் ஆவல் கட்டமைக்கப்பட்டு, தெளிவான விளக்கங்கள் அளிப்பதன் மூலம் மண் எப்படி நீரை உரிஞ்சுக் கொள்ளுமோ அது போல அவர்களுடைய ஆழ்மனதில் அனைத்தும் பதிந்துவிடும். எதையும் சிரமப்பட்டு மனப்பாடம் பண்ண வேண்டியத் தேவையுமில்லை. படிப்பும்,
எழுத்தும், பின்னாளில் வந்து விடும். ஆனால் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாரு சில மாற்றங்களுடன், படிப்பும், எழுத்தும் சேர்த்துக் கூட இது போன்ற கல்வி முறைகளை முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு கல்வி கற்பது ஒரு சுமையாக இல்லாமல் அது வாழ்க்கைக்குத் தேவையான, வகையில் அமையலாம். உடல் உழைப்பும் சேர்ந்த தாய் மொழி வழி – தொழில் சார்ந்த கல்வி என்பது நமக்கு கனவாகவே இருக்கப் போகிறதா? என்பதும் நம் கல்வியாளர்களின் கவலையாகவும் உள்ளது

Hong Kong Institute of Educational Research, The Chinese university of Hong Kong பல்கலைக்கழகங்கள் இளம் சிறார்கள் முதல் பதின்மப் பருவத்தினரின் (6 முதல் 18 வயது பருவத்தினர்) கல்வி முறைமைகளின் மூலம் கல்வித் தகுதியில் முன்னேற்றம் இருப்பது போன்று சமூக வளர்ச்சியின் முன்னேற்றம் குறித்த ஆய்வுகள் உலகளாவிய முறையில் 2006, ஜூன் 3ஆம் தேதியில் மேற்கொள்ளப்ப்பட்டது.
OST (out-of-school-time services.என்ற பள்ளிக்கு வேளியேயான செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் மூலம், உலகளவில் பள்ளி மாணவர்களுக்கான ஐந்து பொதுவான, பரிமாணங்கள குறிப்பிடப்பட்டுள்ளன.

1. குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும் – நான் மிகச்சிறந்து விளங்குவதற்கு உதவி புரிபவரான எம் ஆசிரியர் இருக்கும் இடமே எம் பள்ளி என்ற எண்ணம்.

2. சமூக ஒருங்கிணைப்பு: மாணவர்களின் சக மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பழகும் தன்மை. என் பள்ளி என்பது நான் நானாக அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் இடம் என்ற எண்ணம்.

3.வாய்ப்பு: பள்ளி வாழ்க்கை அனுபவங்கள் தொடர்புடைய அவர்தம் கருத்துகள்- என் வாழ்க்கைக்கு மிக முக்கியமான விசயங்களைக் கற்கக் கூடிய இடமே எம் பள்ளியென்பது…..

4. சாதனை: பள்ளிக் காரியங்களில் வெற்றியாளராக இருக்கக் கூடிய தன்மை – ஒரு மாணவனாக நான் வெற்றியடைந்திருக்கக் கூடிய ஓர் இடமே எம் பள்ளியென்பது.

5. சாகசம் : கல்வி கற்பதற்கான சுய ஊக்கம் மற்றும் கற்பது தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று என்ற தெளிவு – நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என்னை உற்சாகமடையச் செய்ய்க்கூடிய இடம் எம் பள்ளியென்பது.

உலகளவில், பள்ளிக் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களாக குறிப்பிடப்படுவன,

1. பொதுவான மன நிறைவு: தம் பள்ளியைப் பற்றிய ஆக்கப்பூர்வமான எண்ணங்கள். கொண்டிருப்பது. அதாவது, நான் தினமும் விரும்பிச் செல்லும் இடம் எம் பள்ளி என்ற என்ணம் மேலோங்கியிருப்பது.

2. எதிர்மறையான பாதிப்பு: பள்ளியைப் பற்றிய எதிரான எணணங்களைத் தோற்றுவிப்பது. அதாவது, பள்ளி என் மனநிலையைப் பாதித்து வருத்தமேற்படுத்தக்கூடிய இடமாக இருக்கிறது என்ற எண்ணம் கொண்டிருப்பது.

ஒரு நூற்றாண்டாக, பள்ளிக்கு வெளியே ஆற்றும் செயல் திட்டங்களின் மீதான ஆர்வம் அமெரிக்க மக்களிடமும் வெகுவாகக் குறைந்திருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற திட்டங்களில், பள்ளிப் பருவக் குழந்தைகளின் பயிற்சியாளர்கள், இளைஞர் மேம்பாட்டு வல்லுநர்கள், கல்வியாளர்கள், குற்றவியல் மற்றும் சிறார் நீதித்துறை வல்லுநர்கள், வறுமை ஒழிப்பு வல்லுநர்கள் போன்றவர்கள் இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவிலிருந்து தற்காத்துக் கொள்ளக் கூடிய ஓர் உபாயம் இத்திட்டம் என்பதனை வாதிட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய இந்த பிரம்மாண்ட ஆய்வுகளின் முடிவில், கிடைத்த மதிப்பீடுகளின்படி, கல்வி கற்றலில் நல்ல ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும், சாதனைகளும் தென்பட்டதோடு, போதைப் பழக்கம், பெண் குழந்தைகளின் இளவயது கர்ப்பம், சிறார்களின், சிறு குற்றங்கள், போன்றவைகள் கணிசமாகக் குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சங்கடமான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் பக்குவமும், பள்ளியில் கல்வி கற்பதில் மட்டுமே முழு நேரமும் ஈடுபட்டிருக்கும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு பேருதவி புரிவதாகவும், இதனால் மன உளைச்சலிலிருந்து விடுபடுவதால், தேர்வில் மதிப்பெண்களில் நல்ல முன்னேற்றமும் கிடைப்பதாகவும் , குறிக்கோள்களை நிர்ணயிப்பதில் ஆழ்ந்த ஈடுபாடும் ஏற்படுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் சூழலுக்கு இத்தகைய ஆய்வுகள் எந்த வகையில் பயன்படுகின்றன, குழந்தைகள் இதனால் பயனடைகிறார்களா என்று அறிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், கல்வி கற்றலைத் தாண்டி ஒரு சில கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஏதோ ஓரிரு முறைகள் உல்லாசப் பயணங்கள் செல்வது போன்றவைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கல்வி சார்ந்த பிராஜக்ட் மட்டுமே வழ்மையாக் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் குழந்தைகளின் மனநிலையில் அழுத்தம் ஏற்படுவதோடு, தொடர்ந்து கல்வி கற்றலில் ஈடுபடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் அத்தகைய இறுக்கமான மனநிலையே அவர்களை தவறிழைக்கவும் தூண்டுகிறது. பள்ளிப்பாடத் திட்டங்களைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கே கால அவகாசம் இருப்பதில்லை. இதில் இது போன்ற சமூக வளர்ச்சித் திட்டங்கள் செயல்பாடுகள் என்பதெல்லாம் சாத்தியமாவது கடினம் என்பதே பல பள்ளிகளின் நிலைப்பாடாக உள்ளது.

அந்த வகையில் ஈரோடு சித்தார்த்தா மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இது போன்று திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1989-90இல் பவானியில் சாயக்கழிவு நீர் மூலம் ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் ஈரோட்டிலிருந்து, மிதிவண்டி பயணம் சென்று பாதுகாப்பு குறித்த பிரச்சாரம் மேற்கொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அது போன்று ஒவ்வொரு வகுப்பிற்கும், ஒரு திட்டம், அதாவது சமூக நலம் தொடர்பாகவும், அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் மற்றும் நம் நாட்டில் வறுமைக் கோட்டில் வாழும், குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்க்கைத் தரம் பற்றி அறிந்து கொள்ள்வும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான தீர்வுகளையும் ஆய்ந்து அறிக்கை வெளியிடுகின்றனர். சென்ற ஆண்டில் தெருவோரங்கள் மற்றும் நடைமேடை போக்குவரத்து பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் மாணவர்கள் எடுத்த முயற்சியும் அதற்கான அவர்களின் பரிந்துரையும், அத்துறை மேலாளர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டும் இப்பள்ளி மாணவர்கள், சவரத் தொழில் செய்பவர்கள், சலவைத் தொழில், தையற்கலைஞர்கள், கட்டிடம் கட்டுமானத் தொழிலாளர்கள் ,காய்கறி விற்பவர்கள் என அனைத்து சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், அவர்களின் தொழில் மற்றும் வியாபாரம் குறித்த முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான ஆய்வேடுகளும் சமர்ப்பித்துள்ளனர். ஆசிரியர்களின் ஆலோசனையுடன், வெகு நேர்த்தியாக அவர்கள் திட்ட அறிக்கை தாயரித்திருந்தது பாராட்டுதலுக்குரியது.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் சவரத் தொழிலாளர்களின் கணக்கெடுப்பைச் செய்தனர். மாண்வர்கள் தங்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து, நகர எல்லைக்குள் ஒவ்வொரு குழுவும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கு உள்ள ஒவ்வொரு சவரத் தொழிலாளர்கள், அதாவது பெட்டி தூக்கிக்கொண்டு மரத்தடியில் சவரம் செய்யும் மிகச் சாதாரண கடைநிலை சவரத் தொழிலாளி முதல், ஆண்களுக்கான அழகு நிலையம் வரையிலான அனைத்துத் தரப்பு தொழிலாளர்களான சராசரியாக 80 பேரிடம், அவர்களுடைய வாழ்க்கைத்தரம், தொழில், அவர்தம் குடும்பச் சூழல், அவர்தம் மக்களின் கல்வி, எதிர்காலத் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் திரட்டியதோடு, அவர்தம் வாழ்க்கை உயரவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரை அனைத்துத் தரப்பு ஆய்வுகளையும் மிக நேர்த்தியாக செய்திருந்தனர். சவரத் தொழில் செய்யும் நபர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர் முன்னிலையில் தாங்கள் அறிந்து கொண்ட கலைகளை செயல் முறை விளக்கமாகவும் நடித்தும் காண்பித்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் அந்தக் கழிவுகள் சரியாக அப்புறத்தப்படுத்தப்பட வேண்டும் அது மட்டுமல்லாமல் நோய்த் தொற்று வராமல் இருக்கும் வகையில் சுத்தமான கைத்துண்டுகள் மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளேடுகளை பயன்படுத்தலாம் என்பதற்கான விழிப்புணர்வை சிறிய சவரத் தொழிலாளிகளுக்கு ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர, தம் தொழிலில் முன்னேறக் கூடிய வழிகள், , வங்கிக் கடன் பெறும் வழி முறைகள் போன்றவற்றிற்கான ஆலோசனைகளும் அளித்துள்ளனர். ஆசிரியர்கள் இதற்கான பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இறுதியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றிருந்த சவரத் தொழிலாளி நண்பர், கண்கள் கலங்கி, உள்ளம் நிறைந்து, இக்குழந்தைகளை வாழ்த்தியதோடு, அந்தத் தெளிவான ஆய்வறிக்கையை தங்கள் சங்கத்தில் வைப்பதற்காக ஒரு கோப்பு வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். உள்ளம் நெகிழ்ந்து அவர் நன்றி சொன்னதும், அவர் தன்னம்பிக்கையுடன் மேடையிலிருந்து கீழிறங்கிச் செல்வதையும் காண முடிந்தது.

அடுத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சலவைத் தொழிலாளர்களை இதே முறையிலும், அவர்தம் வாழ்க்கை முறைகளைக் கேட்டறிந்து கொண்டதோடு, அவர்களுக்கான முன்னேற்றத்திற்காக , இன்று வெகுவாக குறைந்துவிட்ட வெள்ளாவி வைத்து துணியை வேகவைத்து சுத்தம் செய்யும் முறையை சற்றே நவீனமாக, பெரிய மின்சாரத் தானியங்கி இயந்திரங்கள், முக்கியமாக, அதிக அளவிலான மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில், வெளிநாடுகளில் உள்ளது போன்று ,வைத்து மக்கள் கட்டணம் செலுத்தி தாங்களே வெளுத்துக் கொள்ளும்படி வைக்கலாம். அதற்கு அரசாங்கம் மற்றும் வங்கிக் கடன் உதவியும் பெறலாம். சலவைத் தொழிலாளகள் குழுக்களாக இணைந்து கூட இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளலாம். இதனால் சுற்றுப் புறமும், படித்துறைகளும். நீர்நிலைகளும் மாசுபடுவதைச் சுத்தமாகத் தவிர்க்க இயலும் என்பதையும் இந்தக் குழந்தைகள் தங்கள் ஆய்வேட்டில் குறித்துள்ளதோடு அதனை அம்மக்களிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் இது போன்ற கருத்துகள் மெல்ல மெல்ல நடைமுறைபடுத்தப்படும் வாய்ப்பும் உருவாகும் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். அவர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் வரலாற்றை சிறு நாடகமாக ஆக்கி, ஆண்டவனே அவ்வடியாருக்குக் காட்சி கொடுத்த வகையில், அவர்தம் தொழில் எத்துனை சாலச்சிறந்தது என்பதை எளிதாக விளக்கியும் காட்டி , சிறப்பு விருந்தினராக வந்த அந்த சலவைத் தொழிலாளியை நெகிழ வைத்தனர்.

அடுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், காய்கறி வியாபாரிகளைச் சந்தித்து அவர்தம் தொழிற்முறைகள், வாழ்க்கை முறைகள், குழந்தைகள் கல்வித் தகுதி போன்ற பல வகையான விளக்கங்களை அலசி ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கான செயல்முறை விள்க்கங்களும் செய்து காட்டினர். காய்கறி சந்தை போன்றும், தள்ளு வண்டியில் காய்கறிகள் விற்பது போன்றும் மிக நேர்த்தியாக நடித்துக் காட்டியது, அவர்கள் அத்தொழிலை ஆழமாக புரிந்து கொண்ட விதத்தை தெளிவாகக் காட்டியது. தராசில் நிறுக்கக் கூடிய முறைகள், அதைச் சரியாகப் பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார்கள் அவர்கள். அதுமட்டுமல்லாமல் அக்காய்கறிகளின் சத்துகள், அவைகள் விளையக்கூடிய இடங்கள் , அதற்கான தட்பவெட்ப நிலைகள், போன்ற அனைத்துச் செய்திகளையும் மிக நேர்த்தியாக சேகரித்து அறிக்கையாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அழுகிய காய்கறிகளை உரமாக மாற்றக்கூடிய முறையையும் அதனால் வியாபாரிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கக் கூடும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தியதோடு, அப்பள்ளித் தாளாளர், திருமதி ஜெயபாரதி அவர்கள், மண்புழு உரம் தயாரிக்க இது போன்று அழுகிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் அதற்கான இடம் ஒதுக்குவது மற்றும் அதற்கான செலவுகளுக்கான வங்கிக் கடன் பெறுவதற்கோ வழியமைத்துக் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதும் பாராட்டிற்குரியது. அக்குழந்தைகள் ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து பெட்ரோல் தயாரிக்க இயலும் என்ற சமீபத்திய ஆய்வையும் எடுத்துரைத்ததும் அவர்களுடைய சமுதாய விழிப்புணர்வைப் பறை சாற்றுவதாக அமைந்திருந்தது. காய்கறிக் கழிவுகளை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் அப்புறப்படுத்தும் ஆய்வையும் அழகாக மேற்கொண்டு அதற்கான அறிக்கையும் அளித்திருந்தனர். அனைத்திற்கும் மேலாக பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டித் தேசிய பசுமைப்படை இயக்கம் மற்றும் சுற்றுச் சூழல் மன்றம் மூலம் தம் பள்ளியில் தயாரித்த துணிப்பைகளை அங்காடியில் வழங்கி அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த அங்காடியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஓர் பெண்மணி இக்குழந்தைகளின் திறமை மற்றும் பொறுமை போன்ற விசயங்கள் குறித்து உள்ளம் நெகிழ்ந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து கட்டிடக் கலைத் தொழிளாளர்களின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த எட்டாம் வகுப்பு மாணவர்களின் திறமை வெளிப்படையாகத் தெரிந்தது அவர்கள் வடிவமைத்திருந்த சிறு மாதிரிக் குடில் மூலம். ஆம். அத்துனை அழகாக தாங்களே ஒரு கட்டிடத் தொழிலாளியின் ஆலோசனையுடன் மிக நேர்த்தியாக கட்டியிருந்தனர். உறுதியான கட்டிடம் எழுப்புவதற்கு எந்த அளவிலான கலவை இருக்க வேண்டியது அவசியம் என்பது முதற்கொண்டு மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தண்ணீர் வரும் குழாய்களைக் கூடத் தங்களின் கற்பனைத் திறனுடன், ஒரு சிறு புட்டியுடன் சேர்த்து இணைத்து, அதற்கான வால்வுகளையும் பொறுத்தி தண்ணீர் வரும்படி செய்து வைத்திருந்ததும் ஆச்சரியப்பட வைத்தது. அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்தம் குழந்தைகளின் கல்வித் திறம் குறித்த தகவல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தையும் மிக அழகாக அறிக்கையாக்கியிருந்தனர். கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும், கற்கள், ஓடுகள், மார்பிள், டைல்ஸ், வர்ணங்கள், மரப்பொருட்கள் என அனைத்துத் துறைகளையும் மிக நேர்த்தியாக காட்சியாக்கியிருந்தனர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து தையற்கலைஞர்களை ஆய்விற்கு எடுத்துக் கொண்டிருந்தனர் 11ஆம் வகுப்பு மாணவர்கள். அவர்களும் அதற்கான தெளிவான அறிக்கை சமர்ப்பிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை. வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து சிறு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மற்றும் அசையாச் சிலையாக அழகாக நின்று ஆச்சரியப்பட வைத்த மாணவர் மற்றும் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது போன்று துணிகளைப் பற்றியும், தையல்கலை பற்றியும் அழகாக விளக்கமளித்த மாணவர் மற்றும் நவீன முறை தையலகம் வடிவமைப்பு போன்ற பல விசயங்களில் தெளிவான விளக்கம் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண் தையற்கலை வல்லுநர்கள் இருபாலருக்கும் ஆடைகள் தைக்கும் வல்லமை பெற்ற அளவிற்கு பெண் தையற் கலைஞர்கள், பெண்களுக்குரிய ஆடைகளை மட்டுமே தைக்கும் வழக்கமே பெரும்பாலானவர்கள் கொண்டிருப்பதாக அவர்கள் சமர்பித்த அறிக்கையில் இருந்ததும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.

அனைத்து மாணவர்களையும் இறுதியாக வாய்மொழித் தேர்வாக எழுப்பப்பட்ட வினாக்கள் மூலம் அவர்கள் அறிந்து கொண்டதாகக் கூறிய விசயங்கள்தான் சித்தார்த்தா பள்ளியின் உன்னதமான இம்முயற்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது எனலாம். ஆம், அக்குழந்தைகள் அனைவரும் ஒன்று போல சொன்ன விசயங்கள்:

எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. நாம் செய்யும் தொழிலே நமக்கு தெய்வம்.

செய்யும் தொழிலை வைத்து அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கொள்வது முறையல்ல.

கைத்தொழில் சிறு வயது முதலே கற்றுக் கொள்வது பிற்காலத்தில் கட்டாயம் பயன்படும்.

நவீன முறைமைகளை பின்பற்றுவது மூலமாக தனி மனித வாழ்க்கை உயர்வடைவது போன்றே சமுதாயமும் உயர்வடைந்து நம் நாடும் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பும் அதிகம்.

ஓய்வு நேரங்களை இது போன்று ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட பயன்படுத்தும் போது, மன இறுக்கமும் குறைந்து, சமுதாயத்திற்காக தம் பங்களிப்பையும் வழங்கியுள்ள மன நிறைவும் கிடைக்கிறது.

தேவையற்ற தீய சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் அறவே நெருங்க முடியாத அளவிற்கு உள்ளத் தெளிவு ஏற்படுகிறது .

சமுதாயத்தில் பொது மக்களிடம் பழகும் தன்மை மற்றும் சக மனிதரை மதித்துப் போற்றும் வள்ளல் தன்மையும் இயல்பாவதும் சிறப்பு.

தம் எதிர்காலம் குறித்த தெளிவான குறிக்கோள் அமைப்பதற்கான அடிப்படை விழிப்புணர்வு பெற முடியும் நிலை.

தன்னம்பிக்கை, குழுவாக இணைந்து பணிபுரியும் திறன், விடாமுயற்சி, பொறுமை, தாம் நினைத்ததை சொற்கள் மற்றும் செயல்கள் மூலமாக வெளிப்படுத்தும் திறமை.

ஆசிரியர்களிடம் நட்புறவுடன் மற்றும் அன்புடன் பழகும் வாய்ப்பு.

சமுதாயத்தில் தானும் ஒரு சாதனையாளர் என்ற மன நிறைவு.

தங்களுக்கு இது போன்ற சமூகப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான கால அவகாசம் எவ்வாறு கிடைக்கிறது என்று கேட்ட பொழுது தாளாளர் ஜெயபாரதி அவர்கள் அமைதியான புன்சிரிப்புடன், மனம் இருந்தால் மார்கமுண்டு என்று கூறியதில் அர்த்தம் இருப்பதாகவே உணர முடிந்தது.

இப்படி இன்னும் பலப்பல காரணங்களை மாணவர்கள் குறிப்பிட்டதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இம்மாணவர்களின் எண்னங்கள் சரியான பாதையில் வழி நடத்தப்படுவதற்காக அப்பள்ளித் தாளாளர் திருமதி ஜெயபாரதி மற்றும் முதல்வர் , ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து, நாமும் இனி ஆசிரியர் உமாமகேசுவரி அவர்களுக்கு நடந்த கொடுமை நடக்காது என்ற நம்பிக்கையும் முளைவிட மன நிறைவுடன் வந்தோம்!

நன்றி : வல்லமை வெளியீடு.

Tuesday, February 14, 2012

கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் காதலின் இரு வேறு மாறுபட்ட கோணங்கள்!

பேரானந்தம்!

கண்களை மறைத்த என் காதலே
கூசச்செய்யும் அடர்ந்த ஒளி வெள்ளத்தினால்
சோற்வுற்றிருக்கும் என் கண்கள்
கானம் பாடி சோர்வுற்றிருக்கும்
என் அதரங்களை உன் முத்தத்தினால் அமைதியாக்கு.
ஓ என் காதலே!
என் ஆன்மாவின் தங்கலாகட்டும்.
மழையினால் தாக்கப்பட்ட ஒரு பரிதாபமான மென்மலரைப் போன்று
காதலின் சுமை தாளாமல் வேதனையால்
வளைந்த என் ஆன்மா
ஓ உம்முடைய முகத்தினுள் அடைக்கலமாகட்டும் அந்த ஆன்மா!




காதல் எனும் மாயை!

அனைவரும் சொல்வதுபோல் ,
நீ அன்புக்குரியவனாக இருக்கலாம்
ஒரு நிலையற்ற தீப்பொறியே இது
களிமண் வண்டலில் பொதிந்து மின்னும் சிறு கனல் --
இருண்ட என் மனமதை நித்தம் ஒளிரும்
அந்த பகலவனைக் கொண்டு
நீ ஒளிரச் செய்தாலும் - அக்கரையில்லை எனக்கு

அனைவரும் எண்ணுவது போல் ,
நீ காதலனாகவும் ஆகலாம்
கடலிலிருந்து - கடற்காற்று தூற்றிய
சாதாரண சிப்பியாகவும் இருக்க நேரிடலாம்,
ஆயினும் அழிவற்று நிலைத்து நிற்கும்
சூட்சுமமானதொரு முணுமுணுப்பு மட்டுமே.
மனிதனைப்போல அழியும் தன்மையதாக இருப்பினும் -
நீ மகிழ்ச்சியற்ற விடயம் மட்டுமே!
இறப்பை அழிக்கலாம் -
விதியையும் அழித்து விடலாம்
கடவுளின் இருப்பிடத்தையே
என் கண்முன் காட்சியாக்கினாலும்,
இருதயத்தினுள்ளே ஊடுறுவினாலும்கூட
சஞ்சலமேயில்லை எனக்கு!

Ecstasy
--
Cover mine eyes, O my Love!
Mine eyes that are weary of bliss
As of light that is poignant and strong
O silence my lips with a kiss,
My lips that are weary of song!
Shelter my soul, O my love!
My soul is bent low with the pain
And the burden of love, like the grace
Of a flower that is smitten with rain:
O shelter my soul from thy face!


The Illusion of Love

Beloved, you may be as all men say
Only a transient spark
Of flickering flame set in loam of clay –
I care not …since you kindle all my dark
With the immortal lustres of the day.

And as all men deem, dearest, you may be
Only a common shell
Chance-winnowed by the sea-winds from the sea –
The subtle murmurs of eternity.

And tho’ you are, like men or mortal race,
Only a hapless thing
That Death may mar and destiny efface –
I care not … since unto my heart you bring
The very vision of God’s dwelling-place.

Saturday, February 11, 2012

இந்தியத் திருநாட்டின்மறுமலர்ச்சியில் பெண்கள் - பகுதி - 13





இந்தியாவின் கோகிலம், வானம்பாடி!


கவிக்குயில் சரோஜினி அம்மையார் - (1879 - 1949)


சரோஜினி நாயுடு அம்மையார் 1879 ஆம் ஆண்டு, பிப்ரவரி 13 ஆம் நாள் , ஐதராபாத் நகரில் அவதரித்த கவியரசி. அவர்தம் இளம் வயதிலேயே விசேச குணங்கள் அமையப்பெற்ற அதிசயப் பிறவி. சுப்பிரமணிய பாரதிக்கு இணையாகத் தம் எழுச்சிமிகு கவிதைகள் மூலம் நாட்டு மக்களிடையே, சுதந்திர தாகத்தையும், விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு தாமும் அப்போராட்டத்தில் பங்கு கொண்டவர்.இந்தியாவின் , முதல் பெண் மாநில ஆட்சித் தலைவர் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவரும் ஆவார். அரசியல் சமுதாய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர். கவிக்குயில், கவியரசி, இந்தியாவின் கோகிலம்,வானம்பாடி என்றெல்லாம் பல்வேறு பட்டங்களுடன் சிறப்பிக்கப்பட்டவர். சரோஜினி என்ற தம் பெயருக்கேற்றவாரு, குளத்தில் மலர்ந்த செந்தாமரை மலராக புகழ் மணம் வீச புவியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். உருது, ஆங்கிலம், வங்காளி மற்றும் பெர்சியன் மொழிகளில் வல்லவர்.


சரோஜினி நாயுடு ஒரு இந்து பிராமணக் குடும்பத்தில் , வேதமும், ஆகமமும் பயின்ற ,தத்துவ மேதை மற்றும் விஞ்ஞானியான அகோரநாத் சட்டோபாத்தியாயர் என்ற வங்காளிக்கும், வரத சுந்தரி என்ற வங்காள மொழிக் கவிஞருக்கும் , ஒரு பெரிய குடும்பத்தில் எட்டு குழந்தைகளின் மூத்தவராக, செல்ல மகளாகப் பிறந்தார். இவர் தந்தை ஐதராபாத் நகரத்தின் முதல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர். நிஜாம் பேரரசில் ஒரு கல்லூரியை நிறுவி, அதில் தானே ஆசிரியராகவும் பணி புரிந்ததோடு, பொது நலச் சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் இவருடைய தந்தை.


சரோஜினி அம்மையார் ஆரம்பக்கல்வியை ஐதராபாத் நகரத்திலும், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை சென்னையிலும் பயின்றார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே,மெட்ரிக்குலேசன் தேர்வை சென்னை மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக தேர்வு பெற்றார். இடையில் நான்கு ஆண்டுகால இடைவெளியில் பல்வேறு வகையான பிரிவுப் பாடங்களில் தம் கவனத்தைச் செலுத்தினார். 1895 ஆம் ஆண்டில் நிஜாம் கல்லூரி மூலமாக உபகாரச் சம்பளம் பெற்று, இங்கிலாந்து சென்று, அங்கு கிங்ஸ் கல்லூரியிலும், கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியிலும் தம் கல்வியைத் தொடர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுத் தேறிய முதல் பெண்மணி என்ற பெருமையும் பெற்றவர் கவிக்குயில். ஆங்கில இலக்கியத்தில் பெரும் புலமை பெற்று விளங்கினார்.


இங்கிலாந்தில் இருந்த சமயம் , இரண்டாயிரம் அடிகள் கொண்ட ஒரு நீண்ட கவிதை நாடகம் ஒன்றும், கற்பனைக் கதையையும், தம் கல்லூரி ஆசிரியர்களான எட்மண்ட் கோஸ்,ஆர்தர் சைமன்ஸ் ,இருவரிடமும் காட்டினார். அவருடைய இலக்கணச் சுத்தமான படைப்புகளைக் கண்டு ஆச்சரியம் கொண்ட அவர்கள், சரோஜினி அம்மையாரை கவிதை வடிக்கும் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினர். இதுவே அவருடைய அழகிய கவிதைகளுக்கான அடிப்படையாக அமைந்தது எனலாம். இதன் தொடர்ச்சியாகவே இவருடைய மிகப் புதுமையான, பிரபலமான, காதல் பாடல், குருவிப்பாடல், பல்லக்கு சுமப்போர் பாடல், நடிகர் பாடல், தாலாட்டு மற்றும் காட்டுப்பூ பாடல் சேணியன் பாடல் போன்ற அநேகம் பாடல்கள் உருவாகின. அலங்கார வார்த்தைகளும், நகைச்சுவையும்,ஆனந்தச் சுவையும் பொங்கி வழிந்த அவருடைய கவிதைகளில் பெரும் நாட்டம் கொண்ட அவருடைய ஆசிரியர்கள் எட்மண்ட் கோஸ் மற்றும் ஆர்தர் சைமன்சும் இக்கவிதைகளை புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பலனாக, 1905 ஆம் ஆண்டில்,முதல் தொகுப்பான The Golden Thershold ( தங்க வாசல்) மற்றும் 1912ல் The Bird of Time (காலப்பறவை) மற்றும் "The broken wing (1912)" என்ற தொகுப்புகளும் மலர்ந்தன. இந்நூல்கள் ஆங்கில சமுதாயத்தினரையும் பெரிதும் கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்து மேலை நாட்டவர்களுக்கும் விளங்கச் செய்தவர் இவரே. மிகப்பிரபலமான வங்கக் கவி தோருதத் என்பவருக்கு ஈடாக சரோஜினி அம்மையாரின் கவிதைகள் உள்ளதாக கோகலே வியந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.


மெல்லிய இதயமும், பளிச்சென்ற கருத்துகளும் கொண்ட , ஆங்கில கலாச்சாரமும், இந்தியக் கலாச்சாரமும் ஒருங்கே அமையப்பெற்ற கவிக்குயிலின் பாடல்களில், டெனிசன், ஷெல்லி மற்றும் எலிசபெத் பேரட் பிரௌனிங் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் தாக்கமும் இருந்தது. மிகுந்த கற்பனை வளமும், தாள லயமும், இசை வடிவமும் , காதல், பிரிவு, ஏக்கம், இறப்பு,வாழ்வின் அற்புதங்கள் என்று அனைத்து ஆழ்மன உணர்வுகளையும் அழகு கவிதைகளாக்கும் வல்லமை பெற்றவரானார்.இந்திய அரசும் ‘கேசரி ஹிந்த்’ என்னும் சிறப்பு வாய்ந்த பதக்கத்தைக் கொடுத்து அம்மையாரைக் கௌரவித்தது.


1898 ஆம் ஆண்டு தம் படிப்பை முடித்துக் கொண்டு, தாய் நாடு திரும்பியவர்,கோவிந்தராஜுலு என்கிற கீழ் சாதி என்று கூரப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு மருத்துவரை ,பிரம்மசமாஜ முறைப்படி ஐதராபாத்தில் மணமுடித்து, இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானார்.


தம்முடைய கவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் மூலம் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை வெகு எளிதாக இந்தியா மற்றும் வெளிநாட்டிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.1914 ஆம் ஆண்டு இலண்டனில் தேசதந்தை அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்தார். அக்கணம் முதல் அவருடைய நம்பிக்கைக்குரிய சீடர்களில் ஒருவரானார். அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் இ. கசின்ஸ் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார்.


பெண் கல்வி வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய தொண்டும் அளப்பரியது. ஒரு முறை ஐதராபாத் நகரில், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக பல்லோர் வீடு வாசல்களையும் இழந்து பரிதவித்து நின்ற போது, தம் இனிய பேச்சின் மூலம் அனைத்து இந்திய மக்களிடமும் உருக்கமான வேண்டுகோள் விடுத்ததன் மூலம் குவிந்த பொருள் கொண்டு துன்பமுற்றோரின் துயர் களையப்பட்டது. இதில் கிடைத்த வெற்றி அவரைத் தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள ஊக்குவித்தது.


தன்னுடைய நாவன்மையாலும், கவித்திறத்தாலும், இளைஞர்களை நாட்டு நலப்பணியில் ஈடுபடுத்தினார். இந்து - முஸ்லீம் ஒற்றுமை, சுய அரசாங்கம், சாதி மதமற்ற ஒருமைப்பாடு போன்ற கொள்கைகளை வலியுறுத்தினார். பால கங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே,சர்பிரோஸ்ஷாமேத்தா போன்ற பெருந்தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டு,அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1918ல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாநில அரசியல் மகாநாட்டிற்கு தலைமை வகித்தார். பெண்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்பதிலும், அவர்கள் சமையலறையைவிட்டு வெளியே வர வேண்டும் என்றும்,கைம்பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினார். இவருடைய நாவன்மையின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக காந்தியடிகள் ,தென் ஆப்பிரிக்க மக்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க இவரைத் தேர்வு செய்து அனுப்பினார்.


1924இல் தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு நடைபெற்ற காங்கிரசு கூட்டத்தில் உருக்கமாகப் பேசி மக்களை ஊக்குவித்ததோடு, நேட்டாலில் இந்தியர்களின் உரிமையைப் பறிக்கும் மசோதாவை சட்டமாக்க ஆங்கிலேயர்கள் முயற்சி எடுப்பதை அறிந்த அம்மையார், தம் பேச்சு மற்றும் செய்திகளின் மூலமாகவும், தம் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.

1928இல் காந்தியடிகளின் அறிவுரைப்படி அமெரிக்கா சென்று அங்கு வாழும் இந்தியர்களின் நாட்டுப்பற்றும், அவர்கள் கொண்டுள்ள சுதந்திர வேட்கையும் , அவர்களின் தியாகச் சிந்தையையும், அமெரிக்க மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஆழ்ந்த பேச்சை வழங்கினார். அமெரிக்க மக்களின் அனுதாபத்தையும் பெற்றார். காந்தியடிகள், மாளவியா ஆகியோருடன் சரோஜினி தேவியாரும், இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக சென்றார். மாண்டேகு சீர்திருத்தத்தை விமர்சித்ததோடு, ஆங்கிலேயர்களின் கொடுமைகளையும் அவர்கள் உள்ளம் நெகிழுமாறு தெளிவுபடுத்தினார்.


காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, 1930 ஆம் ஆண்டு சிறை சென்ற பிறகு ,சரோஜினி தேவியாரே அக்கூட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தினார்.அப்போது அண்ணலுடன் இவரும் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் அவருக்குச் சகோதரியாகவும், பணிப்பெண்ணாகவும் உடனிருந்து நல்ல முறையில் கவனித்துக் கொண்டார். தம் கவித்திறன் மற்றும் நகைச்சுவைப் பேச்சுத்திறன் ஆகியவற்றின் மூலமாக சிறைச்சாலை வாழ்க்கையைக் கூட இனிமையாக்க முடிந்தது அவரால். இந்த சமயத்தில் அவருக்கு இருதய நோய் ஏற்பட்டு, இங்கிலாந்து சென்று சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார்.


1940 ஆம் ஆண்டு, தம் உடல்நலம் குன்றிய சமயத்திலும், காங்கிரசு தலைவர்களின் பேச்சுரிமைக்காக நடத்திய அறப்போரில் தானும் கலந்து கொண்டு சிறை சென்றார். இவருடைய அழகு பேச்சுக்கலையையும், நகைச்சுவையையும் கண்டு மகிழ்ந்த காந்தியடிகள் அவருக்கு இந்தியாவின் வானம்பாடி என்ற சிறப்புப் பெயரையும் வழங்கி கௌரவித்தார். கோபாலகிருஷ்ண கோகலே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த போது சரோஜினி தேவியார் அவரைச் சென்று சந்தித்து, நெடு நேரம் அளவளாவி வந்தபோது, கோகலே,சுதந்திரப் போராட்டத்தில் திரும்பவும் முழு முனைப்புடன் பணி செய்யத் தனக்கு சக்தி கிடைத்து விட்டதாகச் சொன்னார். அன்று இரவு நிம்மதியான உறக்கமும் வரும் என்றார்.1942 இல் சரோஜினி நாயுடு திரும்பவும், “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்திற்காக முழக்கமிட்டு சிறை பிடிக்கப்பட்டார். 21 மாதங்கள் காந்தியடிகளாருடன் சிறைவாசம். அண்ணலுடன் அவருடைய பாசப்பிணைப்பு அதிகமானது. அவரை ‘மிக்கி மவுஸ்’ என்று செல்லமாக அழைப்பாராம், சரோஜினி அம்மையார்.


சிறையிலிருந்து விடுதலை ஆன பின்பு, 1944 ஆம் ஆண்டு, பிப்ரவரி 22ம் நாள் தன் இன்னுயிர் ஈந்த அன்னை கஸ்தூரிபாய் காந்தி அவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு அகில இந்திய மக்களிடம் வசூல் செய்த ரூபாய் 1 கோடி 31 இலட்சம்,தொகையை சௌபாத்தியில் அக்டோபர் 2,1944ல் நடந்த பொதுக்கூட்டத்தில் , அண்ணலின் 75வது பிறந்தநாள் விழாவில் வழங்கினார். இதுவே காந்தியடிகள் , அன்னை கஸ்தூரிபாய் காந்தி நினைவாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராம சேவை மையம் ஆரம்பிப்பதற்கு அடித்தளமானது. இம்மையம், கிராம மகளிருக்கு சுகாதாரம், கல்வி, பல்வேறு நலத்திட்டங்கள்,தொழிற்கல்வி பயிற்சி மையங்கள், அவர்தம் உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் , சுயமரியாதையை விளங்கச்செய்தல் போன்ற பல்வேறு பணிகளை பொறுப்பேற்றது இம்மையம். சுதந்திர இந்தியாவின் பெண்கள் முன்னேற்றத்திற்கு மற்றொரு மைல்கல் இச்சேவை மையம்.

மாபெரும் தியாகங்கள், போராட்டங்கள் என அனைத்தின் பரிசாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நம் இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தது. நம் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்தது. சுதந்திரக் கொடியின் வண்ணமைப்புக் குழுவில் சரோஜினி அம்மையாரும் இணைந்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அவருடைய சுவையான எழுச்சிமிகு சொற்பொழிவு அனைவர் உள்ளத்திலும் வீர உணர்ச்சியையும்,உரிமைக்குரலையும் நிலைநாட்டிச் சென்றது. பண்டிட் ஜவஹர்லால் நேரு நாட்டின் பிரதமர் பொறுப்பேற்க, இந்திய மாகாணங்கள் அனைத்திற்கும் இந்தியர்களே கவர்னர் பொறுப்பேற்றனர். ஐக்கிய மாகாணமான உத்திரப்பிரதேசத்திற்கு கவிக்குயில் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு தம் பணியை செவ்வனே செயலாற்றியதோடு, பல சிக்கல்களைத் தீர்க்கும் முகமாக மற்ற மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தார்.


1948 ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் இன்னுயிர் நீத்தபோது உலகமே பேரதிர்ச்சிக்குள்ளான சமயம் சரோஜினி தேவியாரும் தாங்கவொண்ணா துயரத்துடன்,காந்தியடிகளின் அஸ்தியை திரிவேணி சங்கமத்தில் கரைத்தார். அண்ணலின் மறைவிற்குப் பின்னர் அம்மையாரின் உடல் நலத்திலும் நலிவு ஏற்பட ஆரம்பித்தது. அதிக இரத்த அழுத்தமும், சுவாசக் கோளாறும் அவர் உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளது. மார்ச் மாதம் 2 ஆம் நாள் 1949 ஆம் ஆண்டு, லக்நோவில் அவர்தம் ஆழ்ந்த உறக்கம் துவங்கியது. ஜவஹர்லால் நேருஜி அவருடைய மறைவிற்கு மனம் வருந்தி உருக்கமாக ஆற்றிய உரையில், “ அரசியலில் அறத்தைப் புகுத்தினார் அண்ணல். கவியரசி சரோஜினியோ, அதற்கு கலையழகை ஊட்டினார். கவியாகத் துவங்கிய அவர்தம் வாழ்க்கையே ஒரு கவிதையாக மலர்ந்து விட்டது” என்று பாராட்டினார். தேசத்தலைவர்களுடன், லேடி மவுண்ட்பேட்டனும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்.

கல்வித்திட்டத்தில் கட்டாய இராணுவப்பயிற்சி சேர்க்க வேண்டும் என்ற இவரது கொள்கை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றும் போது இராணுவப்பயிற்சியில் இளைஞர்கள் உற்சாகமாக பங்குபெற முன்வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தார். அவருடைய ‘காலப்பறவை’, “தங்க இறகு’, விழித்தெழு’, ‘தங்க வாசல்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் இன்றளவும் அவர்தம் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன. கல்வி முறையில், சாலைப் போக்குவரத்தில், கிராம ஆட்சியில் அவர் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என முழங்கியதும் சிந்திக்கப்பட வேண்டியது. பெண்குலப் பெருமையை அகில உலகிலும் நிலைநாட்டிய பெருமையும் அவரைச் சாரும். பெண் குலத்திற்கு நல்லதொரு வழிகாட்டியாகவும், நல்லதொரு குடும்பத் தலைவியாகவும்,தியாகச் சிந்தை கொண்டவராகவும், பெண்குலப் பெருமையை நிலைநாட்டுபவராகவும் உலக சரித்திரத்தில் நீங்காத இடம் பிடித்தவர் அம்மையார்.


ஒரு கவிஞர் என்பவர், கற்பனைச் சோலையுள், மலர்ப்பூஞ்சோலைகளின் நறுமணத்தினூடேயும், இயற்கையின் இன்பத் தேனைப் பருகிக் கொண்டு அம்மயக்கத்தில் இனிய கானங்கள் மட்டும் இசைத்துக் கொண்டு, மக்களைப் பரவசப்படுத்தும் ஒரு இசைக்கருவியாக மட்டும் இராது, சக மனிதர்களின் துயரங்களிலும் பங்கு கொண்டு அவர்தம் துயர் தீர்க்கும் முகமாக, போர்க்களத்தினிடையேயும் பரணி பாடும் வல்லமை கொண்டவனாக இருப்பவனே சிறந்த கவியாக இருக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் கவியரசி சரோஜினி அம்மையார். ஓய்ந்து போன உழைப்பாளிகளுக்கும், துவண்டு போன மக்களுக்கும், தம் உரிமையைக் கூட உணராத பேதைப்பெண்டிருக்கும்,சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் விழிப்புணர்வையும், எழுச்சியையும் ஊட்டும் உன்னத கவிஞர் கவிக்குயில் சரோஜினி தேவியார் என்றால் அது மிகையாகாது. ”தலைசிறந்த பேச்சாளர்,பெருங்கவி, மிக வித்தியாசமான அழகு, ஆழ்ந்த , அதே சமயம் நகைச்சுவையும் கலந்த பேச்சு, நிர்வாகத் திறன்கள் மற்றும் சிறந்த தலைமைப் பண்பு” - அவருடைய இறுதி அஞ்சலியாக உத்திரப்பிரதேச அரசாங்கம் செலுத்திய பாராட்டு மொழிகள் மூலமாகவே இவர்தம் பெருமையை முழுமையாக உணர முடிகிறதன்றோ!

Wednesday, February 8, 2012

பெண்ணாலம்

பட்டொளிவீசும் பதின்மத்தின் தலைவாசலில்
பட்டுத்தெளியும் திருமணபந்தமெனும்
சிறைவாசம்.

கடமையே கண்ணாக கணவனின்
சுகசீவனமே
மாசற்ற கற்புநெறியாக

இனிய பதினாறில் இளம்தாயாகி
மறுபிறவியாய்
மகத்தான தலைப்பிரசவம்.

கனியும் காதலால் உறவுகளையும் சுமக்கும்
அச்சாணியாய்
குதூகலமான குடும்பபாரம்.

தளிர்நடை பயிலும் முன்பே மூத்தாளாக
உயரச்செய்த
வல்லமையான மறுபிரசவம்.

தொலைக்காட்சி திரைக்காட்சி அபூர்வமான
காலகட்டத்தில்
கட்டில்காட்சியே பொழுதுபோக்காய்!

தொன்விருட்சமாய் விழுதுகள்
இரத்த பந்தங்கள்
சூப்பிய பனங்கொட்டையாய் சுண்டியவதனம்.

பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
உரையும்கோட்டின்
உளைச்சலின் உச்சம்.

குருதியும்கொதித்து இருதயமும்துடித்து
பரிதவிக்கும்வேளை
கிடுகிடுக்குமோசை படபடக்குமுயிர்.

சரசரக்கும் பாசக்கயிறை வீசி
துடிதுடிக்கும் உயிரை
சிகரமேற்றும் சிலிர்ப்பு .

பட்டதெல்லாம் போதுமினித்துயர் படமுடியாதென்றே
பந்தபாசம் விலக்கி
பக்திநெறிப் பயணத்தின் ஆயத்தமாக

விழுதுகள் வேரூன்ற உற்றதுணை நாடி
கூப்பித்தொழும் முதிதையில்
மாலவனின் மாயலீலையால் காலனின்கயிறும் பொடிப்பொடியாக

பாசமும்வெல்ல நேசமும்சிறகடிக்க
படபட இதயமும்
மெதுமெதுவாய் துடிக்க

லப்..டப்….லப்…..டப் ஓசையுடன்
இதயக்கண் விழிக்க
பட்டதுயரே இதமாய் இனிக்க

கனிந்துநின்று கசிந்து உருகி
மாடாயுழைத்து ஓடாய்த்தேய்ந்து
தண்ணளி வீசும் பெண்ணாலம்!!!!

படத்திற்கு நன்றி :

http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Banyan_tree_on_the_banks_of_Khadakwasla_Dam.jpg

நன்றி : வல்லமை பிரசுரம்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...