Thursday, August 20, 2026

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 40

 


63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறுத்தொண்ட நாயனார் (பகுதி – 1)

 

 திருதொண்டத்தொகையில் சுந்தரர் பெருமான், "செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க்கு அடியேன்" என்று புகழும் சிறுத்தொண்டர் நாயனார், காவிரி பாயும் சோழ நாட்டில் வளம் கொழிக்கும் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் மரபினில் அவதரித்தவர். இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். திருச்செங்காட்டங்குடி என்ற இந்த ஊர் தற்போது நாகபட்டினம் மாவட்டத்தில் நாகபட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர்.

சிவபெருமானிடம் மாறாத அன்பும் அதீத பக்தியும் கொண்டிருந்த சிறுத்தொண்ட நாயனார், அன்றாடமும் சிவனடியார்களுக்கு அமுது படைக்காமல் உண்பதில்லை என்ற மன உறுதியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்கு அவர்கள் விரும்பியவாறே எந்த உணவானாலும் இல்லையெனாது அகமகிழ்ந்து அமுது படைத்து வந்தார். அவர்களை வழிபட்டு, அவர்கள் முன்பு தம்மை மிகச் சிறியவராக எண்ணிப் பணிந்து, அவர்களுக்குப் பணிவிடைகளும் செய்துகொண்டிருந்த இவர் சிறுத்தொண்டர்என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு

  இன்றிப் பயின்று அவற்றால்

தெள்ளி வடித்து அறிந்த பொருள்

  சிவன் கழலில் செறிவு என்றே

கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று

  உதைத்த கழற்கு அன்பு

பள்ளமடையாய் என்றும் பயின்று

  வரும் பண்புடையார்

பரஞ்சோதியார் ஆயுர்வேதக் கலையும், அளவில்லாத வடநூல் கலையும், தூயப் படைத்தொழிலும், கற்று தேர்ந்தவற்றையும் சிவபெருமான்பால், சிவனடியார்பால் கொண்ட அன்பையும் ஒன்றாகக் கலந்து தெளித்ததால் அவர் கற்ற கலைகள் கலையின் பயனால் கிடைத்த உலகியல் இன்பங்கள் அனைத்தும் தூசு போல் பறந்து சிவன் கழலின் அன்பே நின்றது.

யானை ஏற்றம், குதிரை ஏற்றம், போர் செய்வது போன்றவற்றில் வல்லவராகத் திகழ்ந்த பரஞ்சோதியார் நரசிம்ம பல்லவரிடம் படைத் தளபதியாக பணியாற்றினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். வாதாபியில் பெரும் படைப்பலம் கொண்ட இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து, அங்கிருந்து பொன்னும் மணிகளும் நிதிக்குவியலையும், ஏராளமான யானைகள், குதிரைகள் போன்றவற்றையும் கவர்ந்து வந்தாலும் அவருடைய மனம் மேலும் போரில் ஈடுபட விரும்பவில்லை. பரஞ்சோதியாரின் வீரதீரத்தை வெகுவாகப் பாராட்டிய மன்னன், அவரைப் பார்த்து தாமே படையெடுத்துச் சென்றிருந்தாலும் வாதாபியை வென்றிருக்க முடியாது என்றபோது மக்கள் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்ற பரஞ்சோதியை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை என்றனர். இதைக் கேட்ட மன்னன், சிவனடியார்களுக்குத் தொண்டு செய்யும் அடியாரை போருக்கு அனுப்பி பெரும் பாவம் செய்துவிட்டேனே என்று வருந்தியவர் எம்பெருமானிடம் தம் பிழைப் பொறுத்தருளவும் வேண்டினார். அதுமட்டுமின்றி பரஞ்சோதியாரை அழைத்து மேற்கொண்டு அவர் தம் செம்மைநெறித் தொண்டைத் தொடர வேண்டும் என்று வேண்டி, நிறையப் பொன்னும் பொருளும் வழங்கி அரச மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தார். பரஞ்சோதியார் மன்னரிடம் விடைபெற்று தமது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார்.

வாதாபியில் புகழ்பெற்ற பிள்ளையார் வழிபாட்டைக் கண்டு தன் வெற்றிச் சின்னமாக விநாயகரை தமிழகத்திற்குக் கொண்டு வந்திருந்தார். திருச்செங்காட்டாங்குடியில் கணபதி ஈச்சுவரம் இறைவரை வணங்கி பல்லவ மன்னனிடமிருந்து பெற்ற பொன்னும் பொருளையும் ஆலயத் திருப்பணிக்கும், அடியார்களைப் பேணுவதற்கும் செலவு செய்து வரலானார். அல்லும் பகலும் பக்தி நெறியில் வாழத் தொடங்கிய பரஞ்சோதியார், திருவெண்காடு நங்கை என்னும் அருள் நிறைந்த மங்கையை திருமணம் செய்து கொண்டார். திருவெண்காடு நங்கையும் சிறுத்தொண்டரின் சிவவழிபாட்டிற்கும், சிவனடியார் தொண்டிற்கும் பெரிதும் துணை நின்றவர், அவருடன் சேர்ந்து அன்றாடம் சிவனடியார்களை அன்போடு வரவேற்று முறையாக உபசரித்து அவர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் வழக்கத்தை நியமமாகக் கொண்டிருந்தனர். சிவனடியார்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையெனாது அளித்து மகிழ்ந்திருந்தனர்.

இத்தகைய இல்லறத்தின் பயனாக, சிவபெருமானின் அருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு சீராளன் என்னும் திருநாமம் இட்டு சிறப்பாக வளர்த்து வந்தனர்.

நீராரும் சடை முடியார்

  அருளினால் நிறை தவத்துப்

பேராளர் அவர் தமக்குப்

  பெருகுதிரு மனை அறத்தின்

வேராகி விளங்கும்

  திரு வெண்காட்டு நங்கைபால்

சீராளத் தேவர் எனும்

  திருமைந்தர் அவதரித்தார்

சீராளத்தேவருக்கு அனைத்துச் சிறப்புகளையும் செய்துப் போற்றி அந்தந்தப் பருவத்துக்குரிய சிறப்புகளைச் செய்து பல விழாக்களையும் எடுத்து ஊர் மெச்ச வளர்த்து வந்தனர். மூவாண்டு நிறைந்தவுடன் முடி இறக்கியவர்கள், சீராளனின் பள்ளி செல்லும் பருவத்தில் பாடசாலையில் சேர்த்து, கலைகள் பல கற்கச் செய்து அவன் கல்வியில் சிறந்து விளங்குவதைக் கண்டு இன்புற்றிருந்தனர்.

 திருஞானசம்பந்தப் பெருமான் திருசெங்காட்டங்குடி ஈசனை வணங்க வந்தவரை, சிறுத்தொண்டர் வரவேற்றுத் தம் இல்லத்தில் தங்க வைத்தார். சிறப்பாக பணிவிடைகள் செய்து அவரை வணங்கினார். திருஞானசம்பந்தரும் உள்ளம் மகிழ்ந்து தன்னுடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரையும் சிறப்பித்துப் பாடியருளினார். சிறுத்தொண்டரின் திருத்தொண்டின் புகழ் அனைத்துப் பகுதிகளிலும் பரவியது. திருக்கையிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானும் மண்ணுலகிற்கு வர திருவுளம் கொண்டார். சிறுத்தொண்ட நாயனாரின் பக்தியையும் திருத்தொண்டின் சிறப்பையும் உலகறியச் செய்யும் எண்ணம் கொண்டார் சிவபெருமான். அடியார்கள் பலர் தங்களுக்கு எட்டாக்கனியாக விளங்கும் ஆண்டவனை நோக்கிப் போகும் வேளையில் அந்த சிவபெருமானே சிறுத்தொண்டரின் அன்பினை நுகர்வதற்கு வயிரவக் கோலத்தோடு புறப்பட்டு வந்தார். அவருடைய திருவிளையாடலும் ஆரம்பித்தது.

இத்தன்மை நிகழும் நாள்

  இவர் திருத்தொண்டு இருங்கயிலை

அத்தர் திருவடி இணைக் கீழ்ச்

  சென்று அணைய அவருடைய

மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து

  அருளுதற்கு விடையவர் தாம்

சித்தம் மகிழ் வைரவராய்த்

  திருமலைநின் றணைகின்றார். 

இறைவன் சோதனையால் அன்று சிவனடியார்கள் ஒருவரும் அமுதுண்ண வரவில்லை. சிறுத்தொண்டரும், அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும் கவலையோடு காத்திருந்தனர். பின்னர் சிறுத்தொண்டர் சிவனடியார்களை அழைத்து வருவதாகச் சொல்லிக் கிளம்பினார். அச்சமயம் ஈசனே கருஞ்சட்டை அணிந்து இடக்கையில் சூலம் ஏந்தி பைரவ அடியார் வடிவமேந்தி திருச்செங்காட்டங்குடி ஊருக்கு வந்தார். எதிரில் பார்ப்பவர்களையெல்லாம் சிறுத்தொண்டர் வீடு எங்கே என்று கேட்டுக்கொண்டே வந்து,  சிறுத்தொண்டர் வீட்டின் முன் நின்று அடியார்களுக்கு அமுதிடும் சிறுத்தொண்டர் இருக்கிறாரா அவரைக் காண வேண்டி வந்துள்ளேன் என்று அன்போடு கூறினார். சிறுத்தொண்டரது மனைவியாரும் மகிழ்வுடன் அடியாரை அமுதுண்ண அழைத்தார். பைரவத் துறவியாய் வந்த சிவபெருமான் மிகுந்த பசியுடையவராய்க் காணப்பட்டார். அவரிடம் தன் கணவர் உணவிடுவதற்காக அடியாரைத் தேடிச் சென்றுள்ளார் என்றும் அடியாரான அவரே அங்கு வந்திருப்பது தெரிந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வார், சிறிது பொறுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அடியார் வேடத்தில் வந்திருந்த பெருமானும் சிறுத்தொண்டர் வரும்வரை  தாம் கனபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருப்பதாகவும், அவர் வந்தவுடன் தாம் வந்த செய்தியை தெரிவிக்கவும் கூறி ஆத்தி மரத்தின் கீழ் சென்று அமர்ந்தார்.

அடியார்களைத் தேடிச் சென்ற சிறுத்தொண்டர் எங்கு தேடினும் ஒரு அடியவரையும் காணமுடியவில்லையே என்று மனைவியிடம் சொல்லி வருந்தினார். அவர் மனைவியாரும் பைரவ அடியார் வந்து சென்ற செய்தியைத் தன் கணவரிடம் கூறினார். அதைக் கேட்டவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாகச் சென்று ஆத்தி மரத்தின் கீழமர்ந்திருந்த அடியாரைக் கண்டு, அவர்தம் திருவடிகளைப் பணிந்து நின்றார். அப்போது அந்த பைரவ அடியார், அவரிடம், நீர் தான் சிறுத்தொண்டரா? என வினவியபோது அவரும் முகம் மலர, எத்தகுதியும் இல்லாத இச்சிறியோனை அன்பர்கள் இப்பெயரால் அழைப்பதுண்டு எனப் பணிந்துக் கூறினார். அடியேன் செய்த தவத்தால் அன்று அவரைக் கண்டதாகவும், தயை கூர்ந்து அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுதுண்ணல் வேண்டும் என்றும் பணிந்து கேட்டுக்கொண்டார்.

பைரவ அடியாரும், சிறுத்தொண்டரைப் பார்த்து தாம் அவரைக் காணும் ஆவலில்தான் வந்தாரேத் தவிர தமக்கு அவரால் உணவளிக்க முடியாது என்று கூறினார். இதைக் கேட்ட சிறுத்தொண்டரும் அவருக்கு வேண்டிய உணவை எப்படியாயினும் விரைந்து அமுது படைப்பதாக உறுதியளித்து பணிந்து நின்றார்.

அடியாரும் மிகவும் அதிர்ச்சியான அச்செய்தியைக் கூறியும் சிறுத்தொண்டரின் மனது எந்த வகையிலும் தம் நியமத்திலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை. தாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் உண்ணும் வழமையுடையவர் என்றும், அதுவும் பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை மட்டுமேதான் உண்போம்  என்றும், அந்த நாளும் அன்று தான் என்றும் கூறினார். ஆனாலும் தமக்கு அமுதளிக்க சிறுத்தொண்டரால் முடியாது என்றும் கூறினார். அது கேட்ட சிறுத்தொண்டர், சிவபெருமான் அருளால் தங்களிடம் அனைத்துச் செல்வங்களும், ஆடுகள், மாடுகள், என ஆநிரைகள் அனைத்தும் குறைவில்லாது உள்ளதாகவும், அவருக்கு அமுதாகும் பசு எதுவென தெரிவித்தால் அடியேன் விரைந்து சென்று சமைத்து, காலம் தவறாமல் அமுது படைப்பேன் என்றும் கூறினார்.

ஆனால் அந்த சிவனடியாரோ பசுவென்றால், அவர் எண்ணுவதுபோல் விலங்கினத்தைப் பற்றி தாம் கூறவில்லை என்றும், தாம் குறிப்பிடுவது நரப்பசு, அதுவும் ஐந்து வயது மிகாமல் இருக்க வேண்டும், அங்கத்தில் ஊனம் எதுவும் இல்லாதிருத்தல் வேண்டும், ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும். அதுவும் தாயார் பிடிக்க, தந்தை அரிந்து கொடுக்க வேண்டும். தாயும், தந்தையும் தம்முள் மனமுவந்த துன்பமின்றி, எந்தப் பிழையுமின்றி சமைத்த அந்த கரியினை மட்டுமே உண்பேன் என்று கூறினார். சிறுத்தொண்டரும், அவரைப் பணிந்து, சுவாமி அமுது செய்வதானால் அதுவும் தமக்கு அரியது அல்ல என்று திருவடியை வணங்கி இல்லம் வந்தார். கணவர் வருகையைக் கண்ட திருவெண்காட்டு நங்கை அடியார் விரும்பும் அமுது யாது என வினவினார்.

அச்சம் எய்திக் கறி அமுதாம்

  என்னும் அதனால் அரும் புதல்வன்

உச்சி மோவார் மார்பின் கண்

  அணைத்தே முத்தம் தாமுண்ணார்

பொச்சம் இல்லாத் திருத் தொண்டர்

  புனிதர் தமக்குக் கறி அமைக்க

மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார்

  வேறு கொண்டு அணைவார். 


சிறுத்தொண்ட நாயனாரும் தம் மனைவியாரிடம் பைரவ அடியார் திருவமுது செய்யும் முறை பற்றி விளக்கிக் கூறினார். திருவெண்காட்டு நங்கையாரும் அவ்வாறு அமுது செய்விப்போம் தடையில்லை என்றாலும், அப்படி ஐந்து வயதுப் பிள்ளையை யாரிடம் பெறுவது எனக் கேட்டார். சிறுத்தொண்டர் மனையாளின் முகம் பார்த்து எவ்வளவு பொன் பொருள் கொட்டிக் கொடுத்தாலும், தாம் பெற்ற பிள்ளையை யார் தருவார்கள். அப்படியேத் தந்தாலும், தங்கள் பிள்ளையைத் தாங்களே அரிந்து கொடுக்கும் பெற்றோர்கள் இந்த உலகில் எவரும் இருக்கவே மாட்டார்கள். அதற்கு மேலும் காலம் தாழ்த்துவது பயன் இல்லை. எனை இங்கு உய்ய நீர் பயந்தானை அழைப்போம் யாம் என்றார்.

தொடர்வோம்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 39


63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறப்புலி நாயனார்


“சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” என்று

திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனாரால் போற்றப்படுகின்ற

சிறப்புலி நாயனார் காவிரியாறு பாய்ந்தோடும் சோழ நாட்டின் பழமையான

திருவாக்கூர் திருத்தலத்தில் வேதம் போற்றும் அந்தணர் மரபில்

அவதரித்தவர். சேக்கிழார் பெருமானால் வள்ளலார் என்று போற்றிப்

புகழப்படும் மிகச் சிறந்த வள்ளன்மையுடன் விளங்கிய சிறப்புலியார்

தன்னிடம் உள்ளதனைத்தும் சிவபெருமான் அளித்தது என்று எண்ணி

அடியவர்கள் கேட்கும் முன்னமே அவர்களை எதிர்கொண்டு வணங்கி

இன்சொல் கூறித் திருவமுது அளித்து மகிழ்பவர்.

பொன்னி நீர் நாட்டின் நீடும்

பொற்பதி புவனத்து உள்ளோர்

இன்மையால் இரந்து சென்றோர்க்கு

இல்லை என்னாதே ஈயும்

தன்மையார் என்று நன்மை

சார்ந்த வேதியரைச் சண்பை

மன்னனார் அருளிச்செய்த மறைத்

திருவாக்கூர் ஆக்கூர்


சிவனடியார்களை உபசரிப்பதைத் தவிர வேறு சிந்தனையும் பற்றும்

அற்றவராக இருந்தார். இளவயதிலிருந்தே சிவபெருமான் மீது அதீத பக்தியும்

அன்பும் கொண்டிருந்தவர், அன்றாடம் ஐந்தெழுத்து மந்திரத்தை முக்காலமும்

நியமமாக ஓதி வேள்விகளைச் சிவாகம முறைப்படி நடத்தியும் மகிழ்வுற்றார்.

திருவாக்கூர் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி

சமேத தான்தோன்றீசுவரை அனுதினமும் வழிபட்டு வருவதைக்

கடமையாகக் கொண்டிருந்தார். இடியின் ஓசையையும் மூழ்கடிக்கும்

வேதங்களின் ஒலியால் நிறைந்திருந்த திருவாக்கூர் நகரம்,

மாயவரத்திலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

சிவனடியார்களின் மீது பேரன்பு கொண்ட சிறப்புலி நாயனார் நீறணிந்த

அடியார்களைக் கண்டதும் அன்புடன் அவர்களை வணங்கி திருவமுது

படைத்து மகிழ்வார். ஈடு இணையற்ற அன்பினாலும் விருந்தோம்பலினாலும்

மக்களால் பெரிதும் போற்றப்படார்.

இறையருளால் ஒரு சமயம், சிறப்புலி நாயனார் ஆயிரம் அடியார்களுக்கு

திருவமுது படைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது அடியார்கள் வந்துவிட்ட

நிலையில், இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என மன வேதனை

அடைந்தார். திருவாக்கூரில் கோவில் கொண்டிருக்கும் தான்தோன்றிநாதரை

மனமுருக வேண்டியபோது, சிவபெருமான் தாமே சிவனடியார் வேடம்

பூண்டு சிறப்புலி நாயனாரின் இல்லத்தில் நடக்கும் திருவமுதை ஏற்க வந்தார்.

அவரை பேரன்புடன் வரவேற்று திருவமுது செய்வித்த சிறப்புலியாருக்கு

மட்டுமின்றி சிவபெருமான் அங்கிருந்தோர் அனைவருக்கும் திருக்காட்சி

அருளினார். இதனால் திருவாக்கூர் தான்தோன்றீசுவரருக்கு “ஆயிரத்தில்

ஒருவர்” என்ற திருப்பெயரும் உண்டு. சிவனடியார் திருத்தொண்டில் சிறந்து

விளங்கிய சிறப்புலி நாயனார் இறுதியில் பேரின்பமான வீடுபேற்றினை

அடைந்தார்.


திருவாக்கூர் கோயில் மகாமண்டபத்தில் சிறப்புலி நாயனாருக்குத் தனி

சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு நோக்கிய நிலையில் சிறப்புலி

நாயனாருக்கு திருக்காட்சி அளித்த மூர்த்தியாகிய ஆயிரத்தில் ஒருவர்

சன்னிதியும் உள்ளது.

சிறப்புலி நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

உலகிலேயே சிறந்தது ஈதல் எனும் அறம் என்பார் ஔவை. கொடுப்பவர்கள்

உயர்ந்தவர்கள் என்றும், கொடுக்க மனம் இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள்

என்றும் ஔவையார் விளக்குகிறார். அடியவர்கள் எப்போதும் தன்னால்

இயன்றவரை அனைவருக்கும் உதவுபவர்கள். தங்கள் உடைமைகளையும்,

தங்களையுமே பிறருக்காக அளித்து மகிழும் வள்ளன்மை கொண்டவர்கள்.

சிறப்புலி நாயனாரும் அடியவரிடத்திலும் ஆண்டவனிடத்திலும் அளவிட

முடியாத பக்தியுடன் பலத் திருத்தொண்டுகள் புரிந்தார். பக்தியில் முதற்படி

தம்மிடம் உள்ளதை பிறருக்கு மனமுவந்து கொடுப்பது என்பதற்கு ஆதாரமாக

சிறப்புலியார் தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் மாரி போல வாரி

வழங்கும் தன்மையுடையவராக இருந்தார்.

ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த

போது அடியில் தாழ்ந்து

மூளும் ஆதரவு பொங்க

முன்பு நின்று இனிய கூறி

நாளும் நல் அமுதம் ஊட்டி

நயந்தன எல்லாம் நல்கி

நீளும் இன்பத்துள் தங்கி


நிதிமழை மாரி போன்றார்.

திருஞான சம்பந்தர் பெருமான் தமது தேவாரப் பதிகத்தில், “இன்மையால்

வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார்

வாழும் ஆக்கூரில் வாழும் மக்கள்” என்கிறார்.

அக்கிருந்த ஆரமும்

ஆடரவும் ஆமையும்

தொக்கிருந்த மார்பினான்

தோலுடையான் வெண்ணீற்றான்

புக்கிருந்த தொல்கோயில்

பொய்யிலா மெய்ந்நெறிக்கே

தக்கிருந்தார் ஆக்கூரில்

தான்தோன்றி மாடமே.


நன்மையான் நாரணனும், நான்முகனும் காண்புஅரிய

தொன்மையான், தோற்றம்கேடு இல்லாதான் தொல்கோயில்,

இன்மையால் சென்றுஇரந்தார்க்கு

இல்லைஎன்னாது ஈந்துஉவக்கும்

தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

சிறப்புலி நாயனார் அன்றாடம் எம்பெருமானின் அடியார்களுக்கு

வேண்டுவனவற்றையெல்லாம் அளித்து தொண்டாற்றி வந்ததால், சிறப்புலி

நாயனாரின் அறத்தினால் உளம் மகிழ்ந்து, ஆயிரமாவது அடியாராக

சிவபெருமானே நேரில் வந்து அவர் அளித்த திருவமுதை ஏற்றுக்கொண்டார்.


திருவாக்கூர் கோயில் இந்த நிகழ்வுக்குச் சான்றாக விளங்குகின்றது. இங்கு

இறைவன், 'ஆயிரத்தில் ஒருவர்' என்று போற்றப்படுகிறார்.

திருச்சிற்றம்பலம்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 38

 


63 நாயன்மார்கள் வரலாறு – 33 சாக்கிய நாயனார்

 

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்ற்!

வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி!

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!

 

    

தொண்டை நாட்டில், திருச்சங்க மங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சாக்கிய நாயனார். சாக்கியர் என்பது சாக்கிய மதத்தைச் சார்ந்தவர் என்ற பொருளாகும். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தெரியவில்லை. இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அனைத்து உயிர்களிடத்தும் அருளுடையவராக விளங்கிய சாக்கியர், பௌத்த மதத்தில் ஞானம் பெற முயன்றவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர் நெறி என்று உணர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். ஆனாலும் அவர் சாக்கிய உடையை மாற்றிக் கொள்ளாமல் அதே உடையிலேயே இருந்தார்.

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

 என்று சுந்தரமூர்த்தி நாயனார் இவரைப் புகழ்கின்றார்.

 

காணாத அருவினுக்கும்

  உருவினுக்கும் காரணமாய்

நீள் நாகம் அணிந்தார்க்கு

  நிகழ் குறியாம் சிவலிங்கம்

நாணாது நேடியமால் நான்

  முகனும் காண நடுச்

சேணாரும் தழல் பிழம்பாய்த்

  தோன்றிது தெளிந்தாராய்.

 

சிவலிங்க வழிபாடே சிறந்தது என்று மனம் தெளிந்த சாக்கியர் உள்ளம், நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்ட பின்னரே உண்ண வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டார். வெட்டவெளியில் கேட்பாரற்று இருந்த ஒரு சிவலிங்கத்தைக் கண்டு களிப்புற்றவர், செய்வதறியாது அருகிலிருந்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மீது எறிந்து வழிபட்டபோது சிவபெருமானும் அக்கல் அடியை இனிமையாக அன்புடன் ஏற்றுக்கொண்டார்.  இறைவன் மீது கொண்ட அளவிலாத அன்பினாலே அவன் திருவருளையே நினைந்து தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே கல் எறிந்த சாக்கியரை எம்பெருமான் மகிழ்ந்து ஏற்றார். மறுநாளும் சாக்கியர் சிவபெருமானைக் கண்டு களிக்க வந்தார். முதல் நாள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தவர், தாம் செய்த அச்செயல் இறைவன் திருவருளாலே நடந்துள்ளது என்று உணர்ந்து நாளும் அதையேச் செய்வது இறைவன் திருவுளம் என்றும் உணர்ந்தார்.

 

சாக்கியரின் கல்லெறியும் வழிபாடு இங்கனமே தொடர்ந்தது. ஒரு நாள் கல் வழிபாட்டைச் செய்ய மறந்து உணவு உண்ண அமர்ந்தவர், எம்பெருமானுக்கு கல்லெறியாமல் உண்ண வந்துவிட்டோமே என்று பேரன்புடன் கல்லை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார் சாக்கியர். அப்போது அவர் முன் சிவபெருமான் உமாதேவியுடன் தோன்றி திருக்காட்சி வழங்கினார். தேவாதி தேவர்களுக்கும் கிடைக்காத பெரும்பேறு சாக்கிய நாயனாருக்குக் கிடைத்தது. அவருக்கு சிவலோகமும் அன்போடு வழங்கினார் எம்பெருமான்.

 

சாக்கிய நாயனார் புராணம் சொல்லும் கருத்து

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரே நாயனார் சாக்கிய நாயனார். இவர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். சிவபெருமானை வழிபடுவோர் மலர் தூவியும், பதிகங்கள் பாடியும் வழிபடுவது வழக்கம். ஆனால் சிவபெருமானைக் கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார்.

பிறப்பதும், இறப்பதும் மனித இனத்தின் சாபக்கேடு என்பதை உணர்ந்த சாக்கிய நாயனார், நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்லப் போகிறோம் என்றும் சிந்திக்க ஆரம்பித்தார். பிறப்பையும், இறப்பையும் தவிர்க்க வேண்டுமென்ற கருத்து அவர் எண்ணத்தில் ஆழமாக ஊன்றிவிட்டது. கல்வியில் கரையிலாக் காஞ்சி மாநகருக்குச் சென்றார். காஞ்சி மாநகர் தத்துவக் கோட்டையாகத் திகழ்ந்த பொற்காலம் அது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சீன நாட்டில் இருந்து பலர் காஞ்சி மாநகர் வந்து தத்துவம் பயின்று சென்றதாகவும் வரலாறு அறியத் தருகின்றது. சாக்கிய நாயனார் காஞ்சி மாநகர் சென்று பல நூல்களை ஆராய்ந்து, பல அறிஞர்களின் உரைகளைக் கேட்டுத் தாமும் அறிஞராய்த் திகழ்ந்தார்.  

 

பௌத்தர்களின் அரிய  திரிபிடகம்” என்ற கலை நூலைக் கற்று அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிவுகளும் உண்மைப் பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிந்தார். தத்துவத்தின் ஈர்ப்பால் சாக்கிய மதத்தைச் சேர்ந்தவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர்நெறி என உணர்ந்தார். ஆனாலும் சாக்கியர் தோற்றத்திலேயே இருந்தார். சிவநெறியில் சிந்தை இருந்தாலும் புறத்தே சிவ வேடம் தரிக்காமல் சாக்கிய வேடத்திலேயே இருந்தார்.

 

 

எந்நிலையில் நின்றாலும்

  எக்கோலம் கொண்டாலும்

மன்னிய சீர்ச் சங்கரன் தாள்

  மறவாமை பொருள் என்றே

துன்னிய வேடம் தன்னைத்

  துறவாதே தூய சிவம்

தன்னை மிகும் அன்பினால்

  மறவாமை தலை நிற்பார்

 

வினை என்பது சடம். வினைச்செயல் செய்கின்ற உயிர் செய்கின்ற செயல், செயலுக்கேற்ற பலன், பலனைக் கூட்டுகின்ற இறைவன் இந்த நான்கும் சைவத்திற்கு அடிப்படை. இறைவன் வினைப்பயனைக் கூட்டுவிக்கின்றான். எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்புடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும், எனத் துணிந்து சாக்கியர் வேடம் தரித்தவாறே சிவபெருமானை வணங்கி வந்தார்.

 

செய்வினையும் செய்வானும் அதன்

  பயனும் கொடுப்பானும்

மெய் வகையால் நான்காகும் விதித்த

  பொருள் எனக் கொண்டே

இவ்வியல்பு சைவநெறி அல்ல

  வற்றுக்கு இல்லை என

உய்வகையால் பொருள் சிவன் என்று

  அருளாலே உணர்ந்து அறிந்தார்.

 

கண்ணுக்குத் தெரியாத அருவமாய் உள்ள மேனிக்கும், கண்ணுக்குத் தெரியும் உருவ மேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, நீண்ட பாம்பினை அணிந்த எம்பெருமான் சிவனை அறிந்து வழிபட சிறந்த அடையாளமான குறியாய் விளங்கும் சிவலிங்கம் தேடிய திருமாலும், நான்முகனும் காணுமாறு அவர்கள் நடுவே அனல் தூணாகித் தோன்றிய வடிவமே ஆகும் எனத் தெளிவு கொண்டார்.

 

செய்யும் வினை ஒன்று. செய்பவனான கருத்தா ஒன்று. பயன் ஒன்று. அதனை வழங்கி ஊட்டுபவனான இறைவன் ஒன்று என உண்மை காணும் வகையினால், விதியினால் கிடைக்கும் பொருட்கள் நான்காகும் என்ற தெளிவும் கொண்டார். இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிபையும், நிலை பெறும் தவத்தால் சிவபெருமானின் துணையால் பொருளாவது சிவனே ஆவார் என்பதனையும் உணர்ந்து அறிந்து கொண்டார்.

 

அகம் நிறைந்த பேர்

  உவகை அடங்காத ஆதரவால்

மகவு மகிழ்ந்து உவப்பார்கள்

  வன்மை புரிசெயலினால்

இகழ்வனவே செய்தாலும் இளம்

  புதல்வர்க்கு இன்பமே

நிகழும் அது போல் அதற்கு

  நீள் சடையார் தாம் மகிழ்வார்.

 

எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் இல்லை. செயல்புரிவார் உள்ளத்தில் திகழும் நினைவுகளுக்கே முதன்மை கொடுக்கிறோம்.

 

கல்லாலே எறிந்ததுவும் அன்பான

  படி காணில்

வில்வேடர் செருப்பு அடியும்

  திருமுடியில் மேவிற்றால்

நல்லார் மற்று அவர் செய்கை

  அன்பாலே நயந்து அதனை

அல்லாதார் கல் என்பார்

  அரனார்க்கு அஃது அலராமால்.

 

  சாக்கிய நாயனார் அச்செயல் தொடங்கிய நாளில் இறைவர் அருள் செய்த அச்செயல் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமையை எண்ணுபவராய்க் கல்லைச் சிவலிங்கத்தின்மீது எறிபவராய்த் துவராடையை அணிகின்ற சாக்கிய வேடத்தையும் தொடர்ந்தார். பெருந்தவமுடைய சாக்கிய நாயனார் சிவபெருமானின் அருட்செயலே அனைத்தும் என்ற உணர்வுடையவராக விளங்கினார். கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே என்பதற்கு ஆதாரமாக, வில்வேடரான கண்ணப்பரின் செருப்படியும், இறைவரின் திருமுடியில் பொருந்தப் பெற்ற தன்மையை அறிவோம். நாயனார் அன்பால் விரும்பிய அச்செயலை, அவர் எறிந்தது கல் என்பர் அறியாதார். ஆனால் அது எம்பெருமான் சிவனுக்கு மனமிக்க மலரேயாகும்.

 

சிவபெருமானை வழிபட தூய அன்பும், உண்மையான பக்தியும் இருந்தால் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார். வீரட்டானேசுவரருக்கு எதிரே சாக்கிய நாயனார் திருமேனி கையில் கல்லுடன் காணப்படுகிறது. வீரட்டானேசுவரர் திருமேனி மீது சாக்கியர் கல்லால் எறிந்ததால் ஏற்பட்ட வடுவும் காணப்படுகிறது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

 

திருச்சிற்றம்பலம்

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 37

 


63 நாயன்மார்கள் வரலாறு – 32 சோமாசிமாற நாயனார்

 

 அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் சோமாசிமாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
 பாடல் பெற்ற திருத்தலமான, மாஞ்சோலை சூழ்ந்த ஊரானஅம்பர்மாகாளம் (தற்போது "கோவில் திருமாளம்' என அழைக்கப்படுகின்றது),  சோழ வளநாட்டில் அமைந்துள்ள ஒரு புண்ணியத் தலமாகும். இவ்வூரில் வேதங்கள் பயிலும் மறையவர் குலத்தில் அவதரித்தவர் சோமாசிமாற நாயனார். சோமயாகம் செய்பவர்கள் சோமையாசி என்று அழைக்கப்பட்டனர். இதுவே பின்னாளில் சோமாசிமாற நாயனார் என்று மாறியுள்ளது. தவறாது மழைபொழியவும், உலகம் செழிக்கவும் செய்யப்படும் யாகமே சோம யாகம். இவர் சிவனடியார்கள் என்றால் அவர் எக்குலத்தவராயினும் பேதம் பாராட்டாது தொண்டு செய்வதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார்.

அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்

    அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்

உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்

    உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்

நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்

    நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே

இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை

    ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

எந்நாளும் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து, சிவபெருமானின் "நமச்சிவாய" எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் ஒழுக்கம் உடைய இவர் தம் இளம் வயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு வேண்டிய பொருள் உதவிகளையும், உணவுகளையும் அளிப்பதைத் தமது தலையாயக் கடமையாகவும் கொண்டிருந்தார்.

பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்த, சோமாசிமாற நாயனார்  பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலுக்குச் சென்ற சோமாசிமாற நாயனார் தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாரோடு திருவாரூர் திருக்கோவிலுக்கு வந்திருந்தனர். சோமாசிமாற நாயனார் அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இந்த நேரத்தில் சோமயாகத்தின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அவிர்ப்பாகத்தை எம்பெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. சுந்தரரின் பாதம் பணிந்தால் எம்பெருமானை எளிதில் அணுகமுடியும் என்று எண்ணியவர், சுந்தரரின் நட்பைப் பெறும் முயற்சியில், தினமும் அவருக்கு தூதுவளைக் கீரையைப் பறித்து பரவை நாச்சியாரிடம் அளிப்பார். பரவை நாச்சியாரும் சுந்தரருக்கு கீரையை சமைத்துப் போட, அவரும் தினமும் அவருக்கு யார் அந்த தூதுவளைக் கீரையைத் தருகிறார் என்று கேட்டார்.

 பரவை நாச்சியாரும், அவருக்கு சோமாசிமாற நாயனாரை அறிமுகம் செய்துவைத்தார். பணிந்து நின்ற சோமாசி மாற நாயனாரைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அவர்களுக்கு வேண்டுவது யாது என்று வினவினார். சோமாசிமாற நாயனாரும், தாம் செய்ய இருக்கும் சோமயாகத்தின் அவிர்ப்பாகத்தை எம்பெருமான் தாமே வந்து பெற்றுக்கொள்ள ஆவண செய்ய வேண்டும் எனத் தம் மனத்தின் ஆசையை அவரிடம் வெளியிட்டார். ஈசன் நிகழ்த்த இருக்கும் திருவிளையாடலைத் தம் மனக்கண்ணில் முன்னரே அறிந்துகொண்ட சுந்தரரும், இறையருளால் அனைத்தும் நலமாகும் என்று உறுதியளித்தார். வேள்விக்கான நாளும் வந்தது.

 

வேள்வி நிறைவுபெறும் தருணத்தில் அவிர்ப்பாகத்தை சமர்ப்பிக்க வேண்டுமென அனைவரும் ஈசனின் வருகைக்காகக் காத்திருந்தபோது, பறை ஒலியும் கேட்டது. தெருவில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு வேடன் பறையை இசைத்தபடி, தோளில் இறந்த மானின் உடல் கிடக்க நடந்து வந்துகொண்டிருக்கிறார். கைகளில் நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக்கொண்டு வரும் அவருடன், தலையில் மதுக்குடத்தைச் சுமந்தபடி வந்த அவர் மனைவி,  தன் முதுகில் இரு பிள்ளைகளையும் கட்டிக்கொண்டிருந்தாள்.

 

ஆனால் சோமாசிமாற நாயனாரோடு வேள்வியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேடரைக் கண்டதும், அதை அபசகுனமாகக் கண்டு அங்கிருந்து விலகி ஓடியபோது சோமாசிமாற நாயனாரோ, அனைத்தையும் அறிந்திருந்தவராக அவிர்ப்பாகத்தை எடுத்தார். நேரே அந்த வேடனிடம் எடுத்துச் சென்று அவரிடம் நீட்டினார். சுற்றியிருந்தவர்கள், எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டனர். அப்போதும் சோமாசிமாற நாயனாரோ மிகுந்த பக்தியோடு பணிந்து நின்று அவிர்ப்பாகத்தை வேடனின் கைகளில் அளித்தார். அப்போதுதான் அங்கு அந்த அதிசயம் நடந்தது. அந்த வேடன் நாயனார் அளித்த அவிர்ப்பாகத்தைப் பெற்ற அதே கணத்தில் இடப வாகனாக உமையம்மையோடும்விநாயகரோடும், முருகப் பெருமானோடும் பிரகாசமாகக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியைக் கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து கொண்டாடினர். 'காட்சி கொடுத்த நாயகர்' என்ற பெயரும் சோமாசிமாற நாயனாருக்கு உண்டாயிற்று.

 

சோமாசிமாற நாயனார் புராணம் சொல்லும் கருத்து

புகழ், பயன் என ஏதும் கருதாது உலக நலன்களுக்காகச் செய்யப்படும் வேள்விகளால் உலகத்தில் துன்பம் நீங்கும், மழை பொழியும், வளம் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

என்பார் ஞானசம்பந்தப் பெருமான்.

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!

என்னும் அப்பர் பெருமானின் வாக்கிற்கிணங்க, ஒருவர் எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர் ஈசருக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் என்று இயல்பினர். எப்போதும் சிந்தை தெளிய சிவன் ஐந்தெழுத்தை ஓதுபவர். அப்படிப்பட்ட அடியவர்கள் யாராயினும் வேறுபாடு கருதாது அவர்களைப் போற்றி வணங்கினார்.

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு

  அன்பர் என்றால்

அத் தன்மையர் தாம் நமை

  ஆள்பவர் என்று கொள்வார்

சித்தம் தெளியச் சிவன்

  அஞ்செழுத்து ஓதும் வாய்மை

நித்தம் நியமம் எனப்

  போற்றும் நெறியில் நின்றார்

அடியவர்களுக்குள் சாதி, இனம் பாராது, சிவபெருமானை அவர்கள் உருவில் கண்டு வணங்கல் வேண்டும். இக்கொள்கையை சோமாசிமாற நாயனார் கடைபிடித்து இறைவனையும், இறையடியார்களையும் போற்றினார். நாயன்மார்களில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள். தீண்டத்தகாதவராகப் பயிர் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாரிலிருந்து, வேடர் (கண்ணப்பர்), செம்படவர் (அதிபத்த நாயனார்) , வண்ணார் இனத்தைச் சேர்ந்தவர் (திருக்குறிப்புத் தொண்ட நாயனார், குயவர் (திருநீலகண்டர்) என்றும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் வரையில் அத்தனை சாதிகளையும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பார்க்கிறோம். இவர்களில் ஞானசம்பந்தர் உள்பட பன்னிரண்டு வைதிக பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் சோமாசிமாற நாயனாரும் ஒருவர்.

எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டபோதும், அத்வைதத்தின் அரும்பொருள் அறிந்த சோமாசி மாற நாயனாருக்கு அந்தக் காட்சியின் பொருள் விளங்கியது. அந்த வேடர் பிடித்துவந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்றும் கொம்பு, தாரைத் தப்பட்டைகளை எல்லாம் இந்திராதி தேவர்கள் என்றும் புரிந்துகொண்டார். அருகில் இருந்த வேடரின் மனைவியை அன்னை பார்வதி என்றும் அவள் முதுகில் இருக்கும் இரு மழலைகளும் 'விநாயகனும் முருகனும்' என்றும் தெளிந்தார்.  

 

 திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்தலமான திருமாளம் எனும் தலத்தில் ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராசப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முன்னதாகக் காலை 9 மணியளவில், சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாரும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமயாகத்தைத் தொடங்கி வைப்பர். சோமயாகம் செய்வதன் மூலம் மழைபொழியும் என்பது நம்பிக்கை. திருமாகாளம் மகாகாளநாதர் கோயிலில் பிராகாரத்தில் சோமாசிமாற நாயனார் அவர் மனைவி சுசீலை தனி சந்நிதி உள்ளது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

 

"திருச்சிற்றம்பலம்

 

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...