Wednesday, June 29, 2016

பொது சார்புக் கோட்பாடு


பவள சங்கரி

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு – theory of relativityஎன்ற தத்துவம். இதைத்தானே நம் பாட்டனார்கள் மிக இயல்பாக ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்று பண்டைக்காலம் தொட்டே கூறி வந்திருக்கிறார்கள்.
ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இந்த தத்துவத்தை அதாவது “நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல” என்ற கோணத்தில் தாம் கண்டறிந்த தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்தாராம். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞர்களில் ஒருவன் அவரிடம், “இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் இப்போது உங்களைப் பார்க்கிறேன், நீங்கள் இருப்பது உண்மைதானே?” என்று கேட்டானாம். அதற்கு ஐன்ஸ்டீன் அவனிடம் வானத்தில் அழகாக மின்னிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பார். அங்கு நட்சத்திரம் தெரிகிறதா?” என்று கேட்க அவன், “ஆம்” என்று பதிலளித்தான். உடனே ஐன்ஸ்டீன், “அந்த நட்சத்திரம் வெகு காலத்திற்கு முன்பே எரிந்து மறைந்து விட்டதொன்று. நீ இப்போது பார்க்கும் ஒளி அந்த நட்சத்திரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது வெளியிட்ட ஒளி மட்டுமே என்பதை விளக்கமாகக் கூறி அந்த இளைஞனுக்கு புரிய வைத்தபோது அவன் வாயடைத்து நின்றானாம்!.

அப்படியானால், நாம் காண்பவை அனைத்தும் பொய்யா? மெய் என்று ஏதும் இல்லையா? நாம் இருப்பதும் பொய்யா? வானும், நதியும் கடலும் மலையும் நீரும், ஊரும், வனமும், சோலையும், மான்களும் மீன்களும் என நாம் பார்க்கும் அனைத்தும் மெய்யில்லையா? அனைத்தும் பொய்யா?
நம்ம பாரதி பாடலை இப்ப கேளுங்க!
நிற்பதுவே நடப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் 
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? 
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் 
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ? 
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் 
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் 
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? 
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால் 
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? 
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? 
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை 
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

1 comment: