Saturday, December 10, 2011

கெப்ளர் விண்கலத்தின் வெற்றி!

நறுக்.. துணுக்…

பவள சங்கரி

நாசா உறுதிப்படுத்திய பூமியைப் போன்ற மற்றொரு கிரகம்!


அண்டவெளியில் , பூமியைப் போன்று உயிரினங்கள் சுகமாக வாழ்வதற்கு ஏற்புடையதாக வேறு ஏதும் கிரகங்கள் உள்ளதா என்பதனை அறியும் விதமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் விண்கலம் ஆய்வு செய்து கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு விஞ்ஞானிகளால் பூமியைப் போன்ற கிரகம் ஒன்று வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கெப்ளர் விண்கலம் மூலம் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதில் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .கெப்ளர் விண்கலத்தில் உள்ள அதி நவீன புகைப்படக்கருவிகள் சுமார் 600 இலட்சம் கோடி கி.மீ தூரத்தில் பூமி போன்றதொரு கிரகம் இருப்பதை உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். பூமிக்குக் கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால் அங்கு மென்மையான வெப்பநிலை நிலவுகிறதாம்.இதனால் திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கெப்ளர் 22பி என்று பெயரிடப்பட்ட அந்த கிரகம் பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரியதாக இருக்கலாம் என்றும், அதன் வெப்ப நிலைகள் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பானதொரு தொலைவிலிருந்து சுற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்பட்ட இந்த கெப்ளர் விண்கலம் சுமார் 155,000 நட்சத்திரங்களைக் கண்கானித்து வருகிறது. இத்தொலைக்காட்டி மூலம் இதுவரை கிரகங்கள் என்று அங்கீகாரம் பெறத்தக்கவைகள் என 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tuesday, December 6, 2011

பெற்ற மனது

பவள சங்கரி
இன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு வாரமாக பேரக்குழந்தைகளைப் பார்க்காமல் கண்ணில் கட்டியது போல் உள்ளது… மகளைஅடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் உள்ளூரிலேயே தேடிப்பிடித்து இந்த மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்தும் வாரம் ஒரு முறைதான் பேரக்குழந்தைகளையும்,மகளையும் பார்க்க முடியும்.
அப்படித்தான் மகள் மகிழ்ச்சியாகவா வருகிறாள்? வரும்போதெல்லாம், என் கணவர் இதை வாங்கிவரச் சொன்னார்… அதை வாங்கி வரச்சொன்னார் என்ற புலம்பல் வேறு. இவ்வளவு நாட்கள் மனைவி சமாளித்திருப்பாள் போல. ஒரு முறை கூடைதுபற்றி புகார் கொடுத்ததில்லை மகராசி…
மகள் வரும்போதே , “ அப்பா இந்த மாதம் இன்கம்டேக்ஸ்ல பணம் பிடிச்சிட்டான். செலவுக்குப் பணம் போதவில்லைப்பா.. கிரண்டர் ரிப்பேர் ஆயிடிச்சி, என்று இப்படி எதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டுதான் வருவாள். மகள் வரும்போதே இப்படி ஏதும் பிரச்சனையோடு வருவாள் என்று தெரிந்தே கையில் தயாராக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருப்பது வழமையாகிவிட்டது. இதில் மாப்பிள்ளைக்கு நேரில் வந்து கேட்பதற்கு கௌரவக் குறைச்சல் என்ற நினைப்பு வேறு…
மாப்பிள்ளையைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது. மகள் மட்டும் வந்து பார்த்துவிட்டுப் போவாளே தவிர மாப்பிள்ளை இந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப்படுப்பதில்லை! ஏன் என்றுதான் புரியவில்லை. மனைவியை இழந்து தன்னந்தனி மரமாக மனம் நொந்து நின்ற பொழுது, ஆதரவாக தோளை அணைத்துக் கொண்டு, நாங்கள் இருக்கிறோம் மாமா மனம் தளராதீர்கள் என்று சொன்ன சமயம் எவ்வளவு தெம்பாக இருந்தது மனதிற்கு. ஆனால் அதோடு சரி , இந்த முதுமைக் காலத்தில் தனிமைக் கோலத்தில் நரகமாய்ப் போன வாழ்க்கையில் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே புதிதாய்ப் பிறந்தது போன்று ஒரு உற்சாகம் வரும். அன்றுதானே மகளும் பேரக் குழந்தைகளும் தன்னைப் பார்க்க வருவார்கள். இப்படியே ஆறு மாதம் ஓடி விட்டதே… இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஓட்டமுடியும் தெரியவில்லை.மகள் வீட்டில் போய் அவளுடம் தங்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆனது ஆகட்டும் பார்ப்போம் என்று அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
ஏனோ அன்று ஒரே சூனியமாக இருந்தது மனதிற்கு. மகள் விட்டிற்குப் போய் குழந்தைகளுடன் சற்று நேரம் கழித்தால் தேவலாம் போல் இருந்ததோடு, மாப்பிள்ளையையும் பார்த்துவிட்டு, ஏன் தன்னைப்பார்க்க வருவதில்லை என்று கேட்டு விட்டும்வந்து விடலாம் என்று கிளம்பியாகிவிட்டது. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கும் நேரம் , பஸ் பிடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தாகிவிட்டது. மகள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டாள். சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிளம்பி வந்துவிட வேண்டும் என்ற முடிவோடு கதவை நெருங்கி , அழைப்புமணியை அடிக்கப் போனவர், மாப்பிள்ளையின் குரல் உரக்கக் கேட்கவும், அதுவும் தன் பெயர் அடிபடவும், தூக்கிய கையை அப்படியே நிறுத்திவிட்டு, அமைதியாக நின்று கொண்டார்.
“ ஏய், மதி, நாளைக்காவது மாமாவைப் பார்க்க நானும் வறேனே.. அவரைப்பார்த்து மூன்று மாதம் ஆகிவிட்டதே. என்னை மட்டும் ஏன் வரவிடமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறாய்.. ஒன்னுமே புரியல எனக்கு. பாவம் மனிதர் தனியா இருந்துகிட்டு எவ்வளவு நொந்து போயிருப்பார். ஆதரவா போய் நாலு வார்த்தை பேசக்கூட விடமாட்டேங்கற.. அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு?”
இதைக்கேட்டவுடன் அப்படியே தூக்கி வாரிப்போட்டு விட்டது. என் மகளா இப்படி.. ஏன் இப்படி செய்கிறாள்?
“ ஏங்க , நீங்க கூடவா என்னைப் புரிஞ்சிக்கல..?” என்றாள் குரல்கம்ம.
“ அம்மா இறந்த பிறகு பல முறை நானும் அவரிடம் , நம்முடனேயே வந்து தங்கிவிடும்படி சொல்லியும் அவர், பெண் வீட்டில் வந்து தங்குவது தன் தன்மானத்திற்கு இடம் கொடுக்கவில்லை என்று மறுத்து விட்டது உங்களுக்கும் தெரியுமில்லையா? அவருக்கு உங்க மேல உள்ள அதிகமான பாசமும் எனக்குத் தெரியும். உங்களைப் பார்க்காமல் ரொம்ப நாளைக்கு அவரால இருக்க முடியாது.
அது மட்டுமில்லை, அவர்கிட்ட போய் எப்பப் பார்த்தாலும் அது வேணும், இது வேணுமின்னு தொந்திரவு செய்யிறதுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. வாழ்க்கையில் தனிமை மட்டும் ஒரு சோகமில்லை, அதைவிட சோகம் தன்னால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதுதான். அப்படி ஒரு நிலை வந்தால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் போயிடும். இது அவருடைய ஆயுளைக்கூட குறைக்க வாய்ப்பிருக்கு இல்லையா. அதனால்தான் என் மனதை கல்லாக்கிக் கொண்டு நான் இப்படி நடந்துக்கறேன்” என்றாள் கண்ணீர்மல்க..
இதைக்கேட்ட தந்தையின் மனம் பாகாய் உறுகித்தான் போனது. உடனே ஓடிச்சென்று தன் மகளை அள்ளி அணைத்துக் கொள்ள இதயம் துடித்தாலும், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, எதையும் கேட்காதது போன்று வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டார் ஒரு முடிவோடு!
ஆம் , மறுநாள் மகள் மதிவதனி வந்து தன்னை உடன் வந்துவிடும்படி அழைக்கும் போது, தன்மானத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அவளுடன் சென்று கொஞ்ச நாட்களாவது தங்கி வர வேண்டும்…..
படத்திற்கு நன்றி :

Sunday, December 4, 2011

செவ்வி - கலீல் ஜிப்ரான்

செவ்வி


செவ்வியைப்பற்றித் தங்கள் கருத்தைக் கூற வேண்டும் என்று வேண்டிய ஒரு கவிஞனுக்கு கிப்ரானின் மறுமொழி:

எழிலை நீ எங்கே தேடுவாய், அவளே உன் பாதையாகவும், உன் வழிகாட்டியாகவும் இல்லாதவரை எவ்வாறு அவளை அடையாளம் காணப்போகிறாய்?

உம் பேச்சுக்களை நெய்பவளாக அவள் இல்லாதவரை எப்படி அவளைப்பற்றி பேசப்போகிறீர் நீவிர் ?

சஞ்சலம் கொண்டவரும், புண்பட்டவரும், “ அழகு அன்பானதும், சாந்தமானதும்” என்பார்கள்.

“ தம்பேழ் கண்டு அரை - நாணம் கொள்ளும் இளம் தாயைப் போன்று அவள் நடக்கிறாள் நம்மிடையே”

உணர்ச்சிவயப்பட்டவரோ, ”அழகு என்பது வல்லமையும், அசங்கியமுமான பொருள் என்பர்.
அவள் கொந்தளிப்போடு பூமியையே நமக்குக் கீழேயும், வானத்தை நமக்கு மேலேயும் புரட்டிப் போடுபவள்”

களைப்புற்றவரும், சோர்வுற்றவரும், ” செவ்வி என்பது அமைதியான முனகல்கள். அவள் நம் ஆன்மாவினுள் பேசுபவள், என்பர்.

நிழலின் அச்சத்தால் நடுக்கம் கொண்ட மெல்லொளி போன்று அவள் குரல் நம் மோனத்தை வளமாக்குகிறது.

ஆயினும், அமைதியற்ற ஒருவர் ,” மலைகளினூடே அவள் அலறிக் கொண்டிருப்பதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்பார்.
” அவளுடைய கதறலுடன், குளம்பொலியும், அத்தோடு சிறகுகளின் படபடப்பும், சிம்மத்தின் கர்சனையும் சேர்ந்தே வந்ததாம்”

இரவில் நகரத்துக் காவலாளியோ ,” செவ்வி கிழக்குப்புறத்திலிருந்து, உதயத்துடன் எழலாம் “ என்பார்.
உச்சிவேளை அலைக்கழிப்பில் உழைப்பாளிகளும், கால்நடைப்பயணிகளும், “ நாங்கள் அவளை ஆதவன் மயங்கும் சாளரத்திலிருந்து, தாரிணியின் மீது சாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டோம்” என்கின்றனர்.

குளிர்காலப்பனியில் கட்டுண்டு கிடந்தவரோ, “ அவள் குன்றுகளின் மீது குதியாட்டம் போடும் இளவேனிற்பருவத்துடன் சேர்ந்து வரலாம்,” என்பார்.

கோடையின் தகிப்பில் தவிக்கும் அறுவடைக்காரரோ, “ நாங்கள் , அவள் இலையுதிர் காலத்தின் இலைகளுடன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பதையும் , அவள் கேசத்தில் பனித்துளியையும் கண்டோம்”, என்கிறார்.

இவையெல்லாம் எழிலைப்பற்றி நீங்கள் சொல்வது.

இருப்பினும் , உண்மையில் நீங்கள் அவளைப்பற்றிப் பேசவில்லை. மாறாக உங்கள் நிறைவேறாத தேவைகளைப் பற்றியே பேசியிருக்கிறீர்கள்.
செவ்வி என்பது ஒரு தேவை என்பதில்லை ஆனால் அது ஒரு பேரானந்தம். ( மெய்மறந்த தெய்வீக இன்பம்)
அது வாய் வேட்கையுமன்று , முன் விரிந்த வெற்றுக்கரமுமன்று,
ஆயினும் ஒரு அழற்சியுற்ற இதயமும் , பரவசமான ஆன்மாவுமாகுமது.
அது நீங்கள் காணக்கூடியதாக உள்ள பிம்பம் அன்று, மற்றும் கேட்கக்கூடிய இசையுமன்று,
ஆயினும் அது நீங்கள் கண்களை மூடிக்கொண்டு காணக்கூடிய பிம்பமாகவும் , காதுகளை மூடிக்கொண்டு கேட்கக்கூடிய இசையுமாகவும் இருக்கும்.
அது குடையப்பட்ட மரப்பட்டையின் பலமற்ற பகுதியுமன்று, வளைநகத்தில் இணைந்த சிறகுமன்று.
ஆயினும் அது நித்தியம் மலர்ந்திருக்கும் சோலை மற்றும் நிதமும் பறந்து கொண்டிருக்கும் தேவதைகளின் கூட்டம்.

ஆர்பலீசு மக்களே, வாழ்க்கை தன்னுடைய புனிதமான முகத்தை வெளிப்படுத்தும் போது அந்த வாழ்க்கைதான் அழகு.
ஆனால் நீங்களே வாழ்க்கை மற்றும் நீங்களே அந்த திரை
கண்ணாடியில் தன்னையே வியப்புடன் உற்று நோக்கும் அமரத்துவம்தான் அழகு.
ஆனால் நீங்கள்தான் அமரத்துவமானவர்கள் மற்றும் நீங்கள்தான் அந்தக் கண்ணாடி.




கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும், ஆற்றின் நுழைந்து. -குறள் (130)


திருமந்திரம்: 1987

உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. - தந்தை பெரியார்



Tuesday, November 29, 2011

கிளீஸ் 581G

நறுக்… துணுக்..


பூமியிலிருந்து 123 டிரில்லியன் மைல்களுக்கு அப்பால் புதிதாக பூமி போன்று ஒரு கோளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! கிளீஸ் 581G என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் ஆச்சரியமானதும் , மகிழ்ச்சிகரமானதும் கூட!…..ஆஸ்ட்ரோ – பிசிகல் ஜர்னல் இந்த ஆய்வைப்பற்றிக் கூறும் போது திரவ நீர் இருப்பதும், பூமியின் புவியீர்ப்பு விசை போல 4 மடங்கு அதிகமாகவே அங்கு ஈர்ப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. நம்முடைய பூமி போலவே கிளீஸ் 581ம் நீள் வட்ட வடிவ பாதையில் சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைப் போலவே , இந்தக் கோளும் நட்சத்திரத்தை நோக்கி இருக்கக்கூடிய பகுதி ஒளியுடனும் மறுபுறம் இருண்டும் காணப்படுகிறதாம்… பூமி சூரியனைச் சுற்றுவதற்கு 365 நாட்கள் ஆவதைப்போல இது தன்னுடைய நட்சத்திரத்தை 37 நாட்களிலேயே சுற்றி விடுகிறதாம்.மேலும் ஆய்வுகள் தொடர்வதாக இலண்டனில் இருந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு வேளை நம் முன்னோர்களோ, பின்னோர்களோ அங்கன இருப்பாய்ங்களோ……? :roll:

Wednesday, November 23, 2011

எங்கே அவள்.......?

பவள சங்கரி










நான் உன்னைக் காதலிப்பேன்.
மரணமற்ற நித்ய காதலாகும் அது.
கதிரவன் குளிர்ந்துபோகும் வரை
நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை
நான் நித்தம் உன்னைக் காதலிப்பேன்
–ஷேக்ஸ்பியர்

அற்றைத் திங்களில்,நிலவொளியில் நீயிருந்தாய் என்னோடு இற்றைத் திங்களில் நிலவு மட்டுமே என்னோடு எங்கே சென்றாய் என் இனிய இதயமே என்று தொலைந்த தன் உயிரை மீட்டெடுக்கும் முயற்சியில், இந்த மூன்று ஆண்டு காலமும் தோல்வி மட்டுமே மிஞ்சிய சூழலில் தேடலையும் நிறுத்தாமல், என்றோ ஓர் நாள் தன் அழகு தேவதையைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் ஆதித்யா நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான். இந்த மூன்று வருடங்களில் அவள் வீட்டை நூறு முறையாவது வட்டமிட்டு வந்திருப்பான். பூட்டு மட்டுமே கண்ணில் பட தவித்துப் போய் திரும்புவான். இறுதியாக அவளைச் சந்தித்தது தங்கள் கல்லூரியின் இறுதி நாள் பிரிவு உபசார விழாவில். கல்லூரி முழுவதும் இவர்களின் நெருக்கம் தெரிந்த விசயம் என்றாலும், அன்று இருவரும் சேர்ந்து மேடையில் ஒரு நடன நிகழ்ச்சி கொடுத்து அனவருக்கும் அதனை பறைசாற்றியது இன்றும் பசுமையாக இருந்தது அவன் மனதில். மும்பையில் தன் சகோதரியுடன் சில நாட்கள் தங்கி வருவதாகச் சொல்லிச் சென்றவள், ஆறு மாதம் ஆகியும் திரும்ப வரவில்லை. இடையில் அவ்வப்போது தொலைபேசித் தொடர்போ மின்னஞ்சல் தொடர்போ இருந்தது. திடீரென அதுவும் நின்று போனது. எவ்வளவு முயன்றும் அவளுடைய தொடர்பை எட்ட முடியாமல், அன்றிலிருந்து பூட்டிய அவள் வீட்டை அவ்வப்போது சென்று பார்த்து விட்டு வருவதை வழமையாகக் கொண்டிருந்தான் நம் நாயகன் ஆதித்யா.

Tuesday, November 22, 2011

வாழ்க்கைத் தத்துவ முத்து!

நறுக்.. துணுக்…
பவள சங்கரி
நேற்று , ஈரோடையில் ஒரு பாலத்துக்கருகில் சென்றுகொண்டிருக்கும் வேளையில் காதில் விழுந்த வாழ்க்கைத் தத்துவ முத்துகள்!
சில்க் சிப்பாக்காரர் : சே, பணக்கார வீட்டில் கடைசிப் பையனாவும், ஏழை வீட்டில் மூத்த பையனாவும் பொறக்கவே கூடாது சாமி…..
கதர் சிப்பாக்காரர் : ஏனுங்க இப்படி அலுத்துக்கறீங்க…..?
சி.சி. : பின்ன என்னங்க…. பணக்கார வீட்டில கடைசி பையனா பொறந்தா, அண்ணங்காரன் எல்லாத்தையும் அனுபவிச்சிப்பிட்டு, மிச்சம் மீதியை குடுத்துப்போட்டு,இதில அதிகாரம் வேற…. அங்கன எளவுக்குப் போடா…. இங்கன கன்னாலத்துக்குப் போடா….. நோம்பி நாளும் அதுவுமா, வசூலுக்குப் போடான்னு கடுப்பேத்றானுவ…..ஏழை ஊட்டுல மூத்தவனா பொறந்தா கேட்கவே வாணாம்….. அத்தனை பாரமும் அவந்தலைமேலத்தானே……..
க.சி: அட… ஆமால்ல…. சரி ….சரி அடுத்த செம்மத்துல ஒத்தப்புள்ளையா பொறக்கோனுமின்னு நேந்துக்கோங்க………. :roll:
படத்திற்கு நன்றி - http://www.shutterstock.com/pic.mhtml?id=63255343
நன்றி - வல்லமை இணைய இதழ்.

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(27)

பவள சங்கரி

ஒரு மனிதனின் அடிப்படைக் குணத்தையே மாற்றக்கூடிய வல்லமை காலத்திற்கு உண்டு. அவரவரின் சூழ்நிலைகளே பல நேரங்களில் அவர்களை ஆளுகின்றது என்பதுமே நிதர்சனமாகிறது. அதனை எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும், அதன் போக்கிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் போது அந்த வெப்ப வீச்சின் கடுமை சற்று குறையவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் ரிஷி விதியின் போக்கிலேயேப் போக பழகிக் கொண்டதாகவே நினைத்துக் கொண்டிருந்தான். வந்தனா என்ற ஒரு மென்மை மனம் படைத்த தேவதை , தனிமைச் சிறையில் அகப்பட்டு வதை படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தன் மீது உயிரையே வைத்திருந்த ரம்யாவை விட்டு விலகி வந்தனாவை ஏற்றுக் கொண்டாலும், ஆறே மாதங்களில் அவள் உடல் நிலையில் மாற்றம் தோன்றி, இன்று அடிக்கடி மருத்துவமனைக்கு படை எடுப்பதே முக்கிய வேலையாகவும் இருக்கிறது. இதெல்லாம் பழகிப் போனாலும், முகத்தில் சிரிப்பு என்ற ஒன்றே மறைந்து போனதும் மறைக்க முடியாமல் போனது.

தனக்கு நன்மை செய்வதாக எண்ணி இப்படித் தன் வாழ்க்கையையே கெடுத்துக் கொண்டாரே… வாழ வேண்டிய வயதில், எந்த சுகமும் இல்லாமல் சோர்ந்த முகத்துடனும், சுரத்தில்லாத பேச்சுடனும், இருப்பதோடு, அதனை மறைக்க அவர் படும் பாடு அதைவிடக் கொடுமையானது. தன்னால், அலுவலகப் பணியைக்கூட ஒழுங்காக கவனிக்க இயலாத சூழலில், எந்த பொழுது போக்கும் இன்றி தன் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வரும் இந்த நல்ல இதயத்திற்கு ஏதாவது களிம்பு இட வேண்டுமே என்று மனம் துடித்தாலும், தன் இயலாமையை எண்ணி நொந்து போவதைத் தவிர ஏதும் செய்வதறியாது தவித்து நின்ற போதுதான், ரம்யா ஊரிலிருந்து வந்திருக்கும் செய்தி, அவள் போன் செய்து விசாரித்ததன் மூலம் தெரிந்தது. அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. ரம்யா விரைவில் வந்து தன்னைச் சந்திப்பதாகக் கூறியிருந்ததை நம்பிக் காத்திருந்தாள். அவளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்றும் எண்ணியிருந்தாள்.

அன்று காலை எழுந்ததிலிருந்தே உபாதைகள் ஏதுமின்றி சற்று உற்சாகமாகவே இருந்தது. தன் அன்பு கணவனுக்கு ஆசையாக சமைத்துப்போட மனம் ஏங்கியது. ரிஷிக்குப் பிடித்த பால் கொழுக்கட்டை செய்து அசத்த வேண்டும் என்று முடிவும் செய்து, மளமளவென செயலிலும் இறங்கினாள். பக்குவமாக குங்குமப்பூ போட்டு, சக்கரையும் சேர்த்து பதமாகக் காய்ச்சிய பாலில், ஒரே அளவில், நீள வடிவில் உருட்டி, பாலில் வேக வைத்து, அதை அழகான ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் போட்டு, அதற்கு தகுந்த அளவிலான வெள்ளியிலான வேலைப்பாடுகளுடன் கூடிய அன்னப்பச்சி வடிவிலான சின்ன கரண்டியும் வைத்து அந்தக் கிண்ணத்தை ஒரு சின்ன வெள்ளித் தட்டில் வைத்து அன்பாக எடுத்துச் சென்று கொடுத்தவள், அவனுடைய ஆச்சரியமான பார்வையில் சற்றே நாணித் தலை குனிந்தாள்.

“ ஏய் என்னது, இது காலங்கார்த்தாலே, பால் கொழுக்கட்டையெல்லாம் செய்து அசத்தறே…:

“ ம்ம்… இன்று என்ன நாள்னு நினைவில்லையா.. அதுக்குள்ள மறந்தாச்சா?”

“ என்ன நாள்.. ஓ உன்னோட பிறந்த நாள் இல்லையா…. சாரிடா . மறந்தே போயிட்டேன். ஓ…. எப்படி மறந்தேன்.. சே.. நீயாவது நேற்றே சொல்லியிருக்கலாமில்லையா”

“ பரவாயில்லை ரிஷி. நான் எப்பவும் பெரிசா பிறந்த நாள் எல்லாம் கொண்டாடறதில்ல. சாய்பாபா கோவிலில் அன்னதானம் செய்வேன். அத்தோடு சரி. முடிந்தால் இன்று போய் வரலாம். “

“ அதற்கென்ன வந்தனா, இப்பவே கிளம்பு போகலாம். ஆபீசிற்கு 2 மணி நேரம் பர்மிஷன் சொல்லிடலாம்”

“ இல்லை ரிஷி, மாலையில் போகலாம். அனாவசியமாக எதுக்கு பர்மிஷன் எல்லாம்…”

“ இல்லை, வந்தனா அஷ்டலட்சுமி கோவிலுக்கும் அப்படியே போயிட்டு வரலாமே.”

“ உங்களுக்கு விருப்பம்னா அப்படியே செய்யலாம்… எனக்கு இன்னொரு ஆசை ரிஷி. ரம்யா வந்திருக்கறதா சொன்னீர்களே. அவங்களை நம் வீட்டிற்கு இன்று டின்னருக்குக் கூப்பிடலாமா….?”

“ எதுக்கு வீணா சிரமப்படறே வந்தனா. அவளையும் கூட்டிக்கிட்டு ஏதேனும் ரெஸ்டாரெண்ட் போகலாமே…..”

“ இல்லை ரிஷி. ரம்யாவை வீட்டிற்குக் கூப்பிட்டு அவளுக்கு என் கையால ஏதாவது சமைத்து அசத்த வேண்டும் . சும்மா சிம்பிளா செய்யறேன். இன்று நல்லாத்தானே இருக்கேன்”

“ இல்லை, அவள் புரோகிரோம் எப்படியோ தெரியல. அவ வேற ஷார்ட் ட்ரிப்லதான் வந்திருப்பா போல. நான் கேட்டுப் பார்க்கிறேன் . பார்க்கலாம் என்றான்.”

“இல்லை போனை கொடுங்கள் நானே பேசுகிறேன்” என்றாள் விடாப்பிடியாக..

ரம்யாவும் சொன்னவுடன் சற்றே யோசித்தவள், தானும் ஊருக்குச் செல்வதற்கு முன் ஒரு முறையாவது வந்தனாவை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்ததால், ஒப்புக் கொண்டாலும், அன்று மாலை அனுவைச் சந்திப்பதாகச் சொன்னதும் நினைவில் வர சற்றே யோசித்தவள், தன்னுடன் அனுவும் வருவாள் என்பதையும் சொல்லி தான் வருவதை உறுதி செய்தாள்.

மாலை அனுவை வரச் சொன்னதன் காரணமே, மாறனின் தந்தையிடம், அவந்திகா பற்றி பேசும் போது அவளும் உடன் இருப்பது நலம் என்பதனாலேயே. அன்று இருவரும் சேர்ந்து சென்று மாறனின் தந்தையை சந்திப்பதாக இருந்தது. வந்தனாவின் பிறந்த நாள் என்று சொன்னதனால் அன்று மாறனின் வீட்டிற்குச் செல்வதை அடுத்த நாளுக்குத் தள்ளி வைத்து, அனுவையும் அழைத்துக் கொண்டு ரிஷியின் வீடு நோக்கிச் சென்றார்கள் இருவரும். அனுவிடம், தன் நண்பன் ரிஷியின் வீட்டிற்குச் செல்வதாக மட்டுமே சொல்லியிருந்தாள்.

வந்தனாவை முதன் முதலில் அன்றுதான் நேரில் பார்த்தாலும் ஏதோ பல காலம் அவளுடன் பழகியது போன்று ஒரு உணர்வை ஏற்படுத்தியது அவளுடைய நெருக்கம். அத்தனை கனிவு அவள் பார்வையிலும், உபசரிப்பிலும். நல்ல உயரமான, ஒடிசலான உடல் வாகுடன், இளஞ்சிவப்பு நிறத்திற்கு பாந்தமாக, நல்ல அடர் செந்நிற ஷிப்பான் புடவையில், ஒரு தேவதையாகவே காட்சியளித்தாள். கண்களைச் சுற்றி லேசான கருவளையமும், லேசான சோர்வும் மட்டுமே அவளை வித்தியாசப்படுத்தியதே தவிர மற்றபடி அவளுடைய அந்த கொடிய நோய்க்கான அறிகுறி நல்ல வேளையாக ஏதும் இல்லை.

அவளுடைய அன்பான உபசரிப்பில் அதிகமாகவே சாப்பிட்டார்கள் ரம்யாவும், அனுவும். அனுவைப்பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். எதைப்பற்றி வந்தனா கேட்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாளோ , அதைச் சரியாக கேட்டே விட்டாள் நேரிடையாக. அவளுடைய திருமணம் பற்றி வீட்டில் ஏதும் ஏற்பாடு செய்திருக்கிறார்களா, என்ற கேள்விக்கு, பதில் அளிப்பதற்கு முன் தன்னையறியாமல், ரிஷியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை அவளால். அவனும் அவள் கண்களை நேரிடையாகப் பார்க்கத் திராணியற்றவனாக தலையை தாழ்த்திக் கொண்டான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அனுவிற்கு இவர்கள் மூவருக்குள்ளும் ஏதோ விசயம் இருப்பது மட்டும் புரிந்தது. ஒரு வேளை தன் வரவு இவர்கள் வெளிப்படையாகப் பேசத்தடையாக இருக்கிறதோ என்று கூட எண்ண ஆரம்பித்தாள். ஆனாலும் ரம்யா அது போன்ற தர்மசங்கடமான சூழலை விரும்பாதவளாக, பேச்சை மாற்ற முயற்சித்தாள்.

“ஏன் நீங்களிருவரும் ஒரு முறை அமெரிக்கா வரக்கூடாது. வந்து சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே. ரிஷி அழைத்து வாருங்கள்” என்றாள்.

புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்த ரிஷியின் போக்கு அனுவிற்கு ஐயம் ஏற்படுத்துவதாகவே இருந்தது. எதிலும் ஒட்டாதது போல ஒரு விரக்தியான மன நிலையும் அவனிடம் தெரிந்தது ரம்யாவிற்கும் உறுத்தலாகவே இருந்தது. ஆனாலும் தன்னால் வேறு என்ன செய்ய முடியும். வந்தனாவும் விடாமல் திருமணச் சாப்பாடு விரைவில் போட வேண்டும் என்று உரிமையுடன் திரும்பவும் கேட்கவும், அதற்கு மேல் அவளிடம் மறுப்பு சொல்ல விரும்பாமல், புன்னகையுடன் ஆமோதிப்பது போன்று பாசாங்கு செய்தது அனைவருக்கும் புரியாமல் இல்லை. ஒரு வழியாக சமாளித்து வெளிவந்தவள் அனுவிடம் தப்பிக்க முடியாமல் நடந்தது அனைத்தையும் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள். அனைத்தையும் கேட்டவளின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது.

அடுத்து நடக்கப் போவது என்ன என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த இரகசியம் அல்லவா. பேச வார்த்தைகள் ஏதும் கிடைக்காதலால் இருவரும் மௌனமாகவே வந்து சேர்ந்தார்கள். ரம்யாவை அவள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு அடுத்த நாள் வந்து அவளை மாறனின் தந்தையிடம் அழைத்துச் செல்வதாக வாக்களித்து விட்டு, தன் ஏமாற்றத்தையும் மறந்து, ரம்யாவைப் பற்றி நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெயவம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை! என்ற பாடல் எங்கோ வானொலியில் ஒலிக்க தன்னையறியாமல் பெருமூச்சு வர வீட்டின் உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டாள் ரம்யா……….

தொடரும்.

படத்திற்கு நன்றி - http://www.google.com/imgres?imgurl

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...