Friday, March 8, 2013

பெண் எனும் சக்தி!



பவள சங்கரி


சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தோழிகளே! பெண் என்றாலே முதலில் தோன்றுவது, இறைவன் பெண்களுக்கென்றே தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ள தாய்மை வரம். இதனை அவரவர்கள் தத்தம் சூழலுக்கேற்ப, வயதிற்கேற்ப, மன  ஓட்டத்திற்கேற்ப, ஒரு பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ, தோழியாகவோ, காதலியாகவோ, பணிப்பெண்ணாகவோ, மனைவியாகவோ ஏதோ ஒரு கோணத்தில் நேசிக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் அவள் தம் வாழ்நாளில் கடந்து கொண்டுதானிருந்தாலும், தாய்மை என்ற அந்த உணர்வு மட்டும் ஒரு பெண்ணின் அனைத்துச் செயல்களின் அடிநாதமாக ஒரு மெல்லிய இழையாக ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதன் வழி நடப்போரின் வாழ்க்கை அமைதியாகச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த இயற்கை குணத்தை மீறும்போது அதற்கான சில எதிர் விளைவுகளைச் சந்திக்கவும் நேருகிறது.

மகளிர் தின வாழ்த்துக்கள்!


அன்புத் தோழிகளுக்கு ,

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! இன்று புதிதாய்ப் பிறந்தது போன்று ஒரு புத்துணர்வு. வருடா வருடம் வருகிற ஒரு தினம் என்றாலும், ஓடுகிற ஓட்டத்தில் மூச்சிறைக்காமல் சற்றே நின்று, நிதானித்து, ஓடிய பாதையை மெல்லத் திரும்பிப் பார்த்து, கடந்து வந்த கரடு, முரடுகள்,  பஞ்சுப் பொதிகள், மலரணைகள்,  மனித நேயச் சாரல்கள் என அனைத்தையும் அசை போடும் ஒரு இனிய தருணமாக இருக்கிறது. உதறித்தள்ள வேண்டிய உறுத்தல்களை சட்டை செய்யாமல், நல்ல நினைவுகளை அசை போட்டு மகிழ்வுறும் இனிய தருணமாக அமைத்துக் கொண்டால் அடுத்த படியை எட்டி வைக்க அது உதவி செய்யும் இல்லையா... வாழ்த்துக்கள் தோழிகளே. 

Wednesday, March 6, 2013

பாசச்சுமைகள்







பவள சங்கரி

காலை நேர பரபரப்பு ஏதுமில்லாமல் ஒரு மயான அமைதி..  சரியான இடைவெளியில் டொக்.. டொக்.. என்று செக்யூரிட்டி சிஸ்டத்தின் சத்தம் மட்டும் பலமாக ஒலிப்பது போல இருந்தது.  வீடு முழுவதும் ஊதுவத்தியின் நறுமணம். புகை வரும் திசை நோக்கிச் சென்ற கால்கள் பூஜை அறையில் ஜெகஜோதியாக விளக்குகளும், புத்தம் புது மலர்களின் மென்மணத்துடன் பளபளவென துடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெள்ளியிலான விக்கிரகங்கள். வரவேற்பறையில் அலங்காரமாக வீற்றிருக்கும் புத்தர் மற்றும், நடராசர் சிலைகளும்கூட குறைவில்லாமல் இருந்தது. சமயலறையில் சமையல் செய்வதற்குத் தோதாக அனைத்தும்  தயார் நிலையில் இருந்தது.

கனகலட்சுமி, மஞ்சள் பூசிய முகத்துடன், கருகருவென்ற தன் நீண்ட கூந்தலை, காதுகளின் இரு புறமும் ஒரு சிறு கற்றை முடியை எடுத்து தண்ணீர் சடை  போட்டு, நுனியில் சின்ன முடிச்சாக இட்டு, அதன்மீது சிறு மல்லிகைச் சரமும் சூடிக்கொண்டு நேரே பூஜையறைக்குள் சென்றவள், அன்றாட வழிபாட்டை முடித்து வந்தாள். இந்த 30 நாட்களாக வீடு நிசப்தமாக இருக்கிறது. மாமியார் இறந்து சடங்குகளெல்லாம் முடிந்து, உறவினர்கள் அனைவரும் திரும்பிச் சென்றாகிவிட்ட நிலையில் வேலையாட்களின் நடமாட்டம் மட்டுமே ஆறுதலளித்தது. ஒரே செல்ல மகளின் திருமணம் பேசி முடியப்போகும் வேளையில் மாமியாரின் மரணமும், அதைவிட கணவனின் திடீரென்ற புத்தி பேதலிப்பும் அவளை ரொம்பவும் வாட்டிவிட்டது. சம்பந்தமில்லாமல் ஏதேதோ உளறிக் கொண்டு, ஒழுங்கான சாப்பாடும், தூக்கமும் இல்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு, அவ்வப்போது அம்மா.. போயிட்டியா... ஏன் இப்படி பண்ணினே.....என்று மட்டும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் கணவனை நினைத்து அதைவிட வேதனையாக இருந்தது. 75 வயதில் தாயை பறி கொடுக்கும்போதும் கூட இந்த அளவிற்கு சோகம் தாக்குமா என்று அனைவருக்கும் ஆச்சரியம்தான்.

Monday, March 4, 2013

வாலிகையும் நுரையும் - கலீல் ஜிப்ரான் (13)




பவள சங்கரி

இரகசியங்கள் பொதிந்துள்ள மனத்தோர் மட்டுமே பொத்தி வைத்த நம் இரசியங்களையும் புனிதமாக்க இயலும்.

எவரொருவர் உமது துக்கங்களையன்றி, சுகங்களை மட்டுமே பகிருகிறாரோ அவர் சுவர்கத்தின் ஏழு வாயில்களின் ஒன்றின் திறவுகோலை இழந்தவராகிறார்..

ஆமாம் நிர்வாணம் என்ற ஒன்றுள்ளது.; உமது ஆடுகளை பசிய மேய்ச்சலில் ஓட்டிச்செல்லும் போதிலும், உம் குழந்தைகளை உறங்கச் செய்யும் தாலாட்டிலும், மற்றும் உமது கவிதையின் இறுதி வரிகளை அலங்கரிப்பதிலுமே இருக்கிறதந்த நிர்வாணம்..

நாம் அதை அனுபவிக்கும் வெகு காலத்திற்கு முன்பே நமது சுக துக்கங்களைத் தெரிவு செய்து விடுகிறோம் நாம்.

சோகம் என்பது இரு தோட்டங்களுக்கும் இடையிலானதோர் சுவர்.

உம்முடைய சுகமோ அல்லது துக்கமோ உயர்ந்து நிற்கும்போது அப்பெரும் புவனமே தாழ்ந்து போகிறது.

பெட்பு என்பது வாழ்வின் பாதி; அலட்சியம் என்பது இறவின் பாதி.

இன்றைய நம் சோகத்தின் மிகக் கைப்பானதொன்று என்றால் அது நம் நேற்றைய இன்பமே.

அவர்கள் எம்மிடம், “இப்புவியின் இன்பங்கள் மற்றும் அந்த மறு உலகின் அமைதிக்கும் இடையிலானதை தெரிவு செய்தாக வேண்டும் நீவிர்என்றனர்.
மேலும் அவர்களிடம், “ இப்புவியின் இன்பங்கள் மற்றும் மேலுலகின் அமைதி என இரண்டையும் தெரிவு செய்தேன். காரணம் எம் மனதிலந்த மாபெருங்கவி யாத்த அக்கவியோ  தேடுதலோடு இசைக்கவும் செய்கிறதுஎன்றேன், யான்..

நம்பிக்கை என்பது சிந்தனைச் சாத்தினால் என்றுமே நெருங்க முடியாத  மனதினூடேயானதோர் பாலைவனச்சோலை

உமது உயரத்தை அடையும் தருணம் மேலும் நீவிர் அந்த இச்சைக்காக விருப்பம் கொள்வீர்; மற்றும் உணவு வேட்கைக்காகவே பசி கொள்வீர் நீவிர்; மற்றும் மேலும் பெரும் நீர்வேட்கைக்காக தாகம்  கொள்ளக்கூடும் நீவிர்.

அந்த வளியிடம் உம் இரகசியங்களைப் பகிரும்போது அதனை அது மரங்களிடம் பகிருதலால் அவ்வளியை  குறை சொல்லலாகாது, நீவிர்.

அந்த வசந்தகால மலர்களனைத்தும் அத்தேவதைகளின் காலை உணவு மேசையினுடன் சம்பந்தப்பட்ட கூதாளியின் சுவனங்கள்தாம்.

Friday, March 1, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (4)


பவள சங்கரி


எல்லோரும் நல்லவரே!



சக மனிதர்களை பாரபட்சமின்றி நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எவரையும், எக்காரணம் கொண்டும் வெறுத்தல் ஆகாது. அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியும், தோல்வி அச்சமும் கொண்டவர்களே அடுத்தவரை வெறுத்துப் புறக்கணிக்க எண்ணுகின்றனர். ஒருவரை வெறுக்கும்போது, நம் மனதில் அவரைப் பற்றி அடிக்கடி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவதோடு, அவரால் நமக்கு பெரும் தீங்கு விளையப் போவதாகவும், அவர் நமக்கு பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் எண்ணி தேவையில்லாமல் சுய பச்சாதாபம் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த சுய பச்சாதாபம் என்பது நம் வெற்றியின் முக்கியமான ஒரு எதிரி எனலாம். தன்னம்பிக்கையை முற்றிலும் குலைக்கக்கூடியது. அது  மட்டுமல்லாமல் இந்த வெறுப்புணர்ச்சி, அதிகம் கோபம் கொள்ளுதல், பழி வாங்குதல், போன்ற செயல்களில் ஈடுபட்டு கால விரயம் ஏற்படச்செய்கிறது. அத்துடன் மனக்கவ்லை கொள்ளச்செய்து ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.

Thursday, February 28, 2013

தடையைத் தகர்த்தெரிந்த தன்னம்பிக்கை


பவள சங்கரி



உழைக்கும் கரங்கள்!


சென்னை அண்ணாநகர் பக்கம் செல்பவர்கள் காலை எட்டு மணி தொடங்கி மாலை ஆறு மணி வரை ஒரு 58 வயது பெண்மணி, முகம் நிறைய மஞ்சளுடன், புன்னகையும், நெற்றி நிறைய குங்குமமும் கண்கள் நிறைய கனிவும், உள்ளம் நிறைய அமைதியும் அணிந்து கொண்டு தலையில் பெரும் சலவைத் துணி சுமையுடன் நடமாடிக் கொண்டிருப்பதைக காணலாம். இவர் பெயர் நாகம்மா. தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் கையில் இருந்தால் எத்தகைய தடையையும் முறியடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்தான் இந்த நாகம்மா.. ஆம். தன்னுடைய 14 வயதில் அடிக்கடி உடல் நலிவுற்று அரசு மருத்துவமனையில் பலமுறை தங்கி மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. படிப்பும் பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்திருக்கிறது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு, நாகம்மாவிற்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாகவும், அவர் கடுமையான பணிகளோ, அல்லது திருமண வாழ்க்கையையோ மேற்கொண்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் முடங்கிப்போய் விடவில்லை நாகம்மா. தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார். இவர்  சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அதற்குரிய தன்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளைச் செய்து கொண்டிருந்திருக்கிறார். விதியின்  விளையாட்டு அதோடு நிற்காமல்  தன்னுடைய 17 வது வயதில் பெற்றோரையும் ஒருவர் பின் ஒருவராக இழக்கச் செய்துவிட்டது.. உடன் பிறந்த ஒரே சகோதரியும் திருமணம் செய்து கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இளம் வயதில் தனித்து விடப்பட்ட இந்தப் பெண்ணின் பாதுகாப்பற்ற சூழலை மனதிற்கொண்டு வேறு வழியின்றி, மருத்துவரின் ஆலோசனையையும் மீறி, தம் அன்புத் தங்கையை தம் கணவருக்கே மறுமணம் செய்து வைத்துள்ளார், இவருடைய அன்புச் சகோதரி. அந்த பாச தீபத்தின் தியாகத்தினால் நாகம்மா அன்று முதல் தன் சகோதரியுடனேயே, அவருடைய வாழ்க்கையையும் பங்கு போட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Tuesday, February 26, 2013

குடும்ப விளக்கு



பவள சஙக்ரி

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா!


எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மாவின் குரலில் உள்ளத்தை உருக்கும் இந்தப்பாடலைக் கேட்காமல் ஒருநாளும் பொழுது விடியாது கல்யாணிக்கு. விடியற்காலை 5 மணிக்கு குளித்து சுவாமி விளக்கேற்றி, வாசல் கூட்டித் தெளித்து, கோலம் போட்டு செம்மண் கரைகட்டி, சமையலறையில் நுழைந்தால் பம்பரமாய் சுழல வேண்டும்.

”கல்யாணி.. பேப்பர் வந்துடுத்தா?”

”வந்துடுத்துண்ணா.. அதோ அங்க டேபிளில் இருக்கே...”

“கல்யாணி.. காப்பி தரயாடீ... ?”

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...