Thursday, September 23, 2010

வன [ தே]வதை.


சதுப்பு நிலக் காடுகளின் வளமை
வண்ண மலர்களின் அணிவகுப்பு
முள்ளோடிருந்தாலும் ரோசா அழகுதானே
மெல்லிய இதழ்களைக் காப்பதற்காகவே
முள்ளைப் படைத்திருப்பானோ அந்த மாயவன்?

விதவிதமான மணங்கள் மனத்தை நிரப்புகின்றன வனத்தில்
ரோசா கூட்டத்திற்கிடையே காகிதப் பூக்கள்
காகிதப் பூக்களும் காட்சிக்கு அழகுதானே?
மணமுள்ளதும், மணமில்லாததும், இரண்டும் இணைந்ததுதானே இயற்கை
இரசிக்கத் தெரிந்த மனம் இருந்தால் பிரபஞ்சமே அழகுதானே!


சதுப்பு நிலங்களையும் வரண்டு போகச் செய்யும்
இரக்கமற்ற குப்பைக் கூளங்கள்.................
உயிர் நீரை உள்வாங்கத் தடைச் செய்யும்
மக்காத அரக்கக் கூட்டம் - பிளாஸ்டிக் பொருட்கள்!


நகரத்தின் நாராச இரைச்சல் தாங்காத முயல் குட்டி ஒன்று,
வனத்தின் வண்ணம் நாடி துள்ளி வந்து
படைப்பின் பிரம்மாண்டங்கள் கண்டு அதிசயித்து,
மேடு, பள்ளம் அறியாமல் உற்சாகமாக சுற்றித் திரிந்தது.


அங்கே ஒரு எமதூதன் தனக்காக்க் காத்திருப்பதை உணராமல்,
வண்ண வண்ண நிறத்தில் காட்சிப் பிழையாக,
காற்றில் அலைந்து கொண்டிருந்த பொருட்களை,
புதுமையான தனக்கான உணவென எண்ணிய கொடுமை........
அந்தோ.............பரிதாபம்.................


Monday, September 20, 2010

'சுயம்' எங்கே இருக்கிறது ?

சிந்திக்க வேண்டியவைகள்

'நான்' மகிழ்ச்சியாக இருக்கிறேன். 'நான்' குலோப் ஜாமூன் உண்ணப் போகிறேன். 'எனக்கு' மனசே சரியில்லை, ஒரே குழப்பமாக இருக்கிறது.

இங்கே மகிழ்ச்சியாக இருக்கிற அந்த 'நான்' யார்? மனசே சரியில்லை என்று சொல்கிற 'நான்' [எனக்கு] யார்? குழப்பமான மனதைக் கண்டுபிடித்தது யார்? யார் மனது சரியில்லாமல் குழப்பமாக இருக்கிறது?...........................இதுதாங்க என்னோட பெரிய டவுட் இப்போ.....யப்பா.......கண்ணைக் கட்டுதே...........

'நான்' என் 'சுயம்' என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஆள் காட்டி விரலைத் திருப்பி என் மீதே காட்டுவதா? இல்லை தத்துவ ஞானிகளை நாடுவதா?

ஆதிகாலத்திய எகிப்தியர்கள் 'சுய' கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள் மற்றும் எண்ணங்கள் என்பது, 'ஹோமன்க்யூலஸ்' [homonculus] என்கிற குட்டி மனிதன் தலையினுள் உட்கார்ந்திருப்பதாக நம்பினார்கள்.

டெஸ்கார்ட்ஸ், [Descartes] ஆன்மா, மூளையில் உள்ள சுரப்பிகளில் [Pineal gland] உடலைத் தொடர்பு கொள்கிறது என்றார். மேற்கத்திய மதங்களோ, இந்தப் பிரச்சனையை வேறு விதமாக நோக்கியது. அதாவது, அழியக் கூடிய மூளைக்கும் அப்பால், அழிவேயில்லாத ஒரு 'சுயம்' அதாவது ஆன்மா இருக்கிறது என்றனர்.

ஆனால் பெரும்பாலான நவீன விஞ்ஞானிகள், 'மனம்' என்பது எப்பொழுதும் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே இருப்பதாகக் கருதுகின்றனர். பலவிதமான மதம் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள் இருந்தாலும், பலர் மனம் [mind] அல்லது 'சுய-விழிப்புணர்வு' [self-awareness] என்பதை, முன் பக்க மூளைப்பகுதியில் கார்டெக்சில் [cortex] உள்ள ஒரு பொருளே தவிர, "இயந்திரத்திற்குள் இருக்கிற பூதம்" அல்ல என்று கருதுகின்றனர். கார்டெக்சில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது பாதிப்பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டாலுமோ, ஒரு மனிதனின் 'சுய உணர்வு' ஏன் பழுது படுவதில்லை என்பதே விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

சில விஞ்ஞானிகள்,'சுய உணர்வு' என்பதே ஒரு பிரதி பிம்பம், மூளையின் முழுமையான செயல்பாடுகளின் விளைவாக கிடைக்கின்ற ஒரு வகையான உப பொருளாகவே கருதுகின்றனர்.

நரம்பியல் வல்லுனர்களோ நம்முடைய பல செயல்கள் மற்றும் தெரிவுகள் [choices] சுயநினைவுடனான பாதையில் செல்லாமல், தற்செயலாக நிகழக் கூடியதாகக் குறிப்பிடுகின்றனர்.

மனத்திட்பம் அல்லது துணிவு என்பதனை பயிற்சியளிக்கக் கூடிய மையம் என்று மூளையில் எதுவும் தனியாக இல்லையாம். அதைப் போலவே மூளை ஆய்வாளர் மைக்கேல்,'சுய உணர்வு' அல்லது நினைவு என்பதே ஒரு மாயத் தோற்றம் [illusion] என்கிறார்.

புத்த மதத்தின் போதனைகளில் 'சுயம்' என்பது தனிப்பட்ட பொருள் அல்ல. ஆனால் எண்ணங்கள், புலனறிவு, பொதுக்கருத்துக்கள் மற்றும் நொடிக்கு நொடி மாறும் உணர்வுகள் இவைகளின் கூட்டமைப்பேயாகும் என்கிறது.

தத்துவ மேதை சாக்ரடீஸ், 'சுயம்' ஒன்றுதான் ஆன்மாவை அடைக்கக் கூடிய சிறை என்கிறார்.

மனித மனத்தால், இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்வுகள் ஏற்றுக் கொள்ளப் பெற்று கருவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மறை பொருள் சுரங்கம் தான் மனித மனம்.

மனிதனுடைய புலனறிவிற்கு எட்டாதது மனம், உயிர், மெய்ப்பொருள் ஆகும். மனமானது எங்கே, எப்படி இயங்குகிறது என்பது பற்றி இன்று வரையில், மனதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிற விஞ்ஞானிகளுக்கும் புலப்படவில்லை.

உடலில் உயிர் இல்லாத போது, உணர்ச்சிகளும் இல்லை. உயிரே உணர்வாக மாற்றம் பெறுகிறது. உயிர் உணர்ச்சியாக மலரும் கட்டத்தில்தான் மனம் பிறக்கிறது. எனவே உயிர்தான் மனம்.

மனத்தை அறிவென்றும் அழைக்கின்றோம். எண்ணம், சொல், செயல் என்ற மூன்றிற்கும், இயக்கக் களமாக இருப்பது மனம். இத்தகைய பருப் பொருளான மனத்திற்கு ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. உயிர் பொதுவானது. ஆண், பெண் என்ற பேதமற்ற அத்தகைய மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருபவர்களே மாமனிதர்களாகிறார்கள்.

"ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டென் உள்ளமும் போய்
நான் கெட்ட வாபாடித் தெள்ளேனம் கொட்டாமோ"
என்று மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் அருள்கிறார்.
'நான்' கெட்ட நிலையில் அவர்கள் செயல்கள் யாவும் இறை செயலாகவே நிகழும்.

இப்போது சொல்லுங்கள்! என்ன நினைக்கிறீர்கள். நம்முடைய 'சுயம்' எங்கே இருக்கிறது ? யார் நம் எண்ணங்களை செயல்படுத்துகிறார்கள் ?...................

Friday, September 17, 2010

இந்திய திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள் - பாகம் -4


சுக்கா, மிளகா சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்? [பாகம் - 4 ]

அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு. அதன் போக்கை சரியாகக் கணிக்க முடியாது என்பதோடு, அதன் எல்லைகளை வரையறுப்பதும் கடினம். முரட்டுத் தனமும், மூர்க்கமும் கொண்டவர்கள், குறிப்பாக ஆண்கள் மட்டுமே அரசியலில் பங்கு பெற முடியும். மென் மணம் கொண்ட பெண்களுக்கு அரசியல் சரிப்பட்டு வராது, என்பதே பொதுவான கருத்தாக இருந்த காலகட்டத்தில் அருணா ஆசிஃப் அலி இதற்கு விதி விலக்கான, மற்றும் துணிச்சலான ஒரு சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்தார்.

அருணா ஆசிஃப் அலி சிறு வயதிலிருந்தே, மிகச் சுதந்திரமான எண்ணம் கொண்ட இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலை சிறந்த நாயகி. இவர் காந்தியடிகள் தொடங்கிய 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திய முன்னனித் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர். தில்லியின் முதல் மாநகரத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவரும் இவரே. 1964ம் வருடம், அமைதிக்கான லெனின் பரிசு இவரை தேடி வந்தது. இது மட்டுமல்லாமல், 1992ம் ஆண்டிற்கான ஜவஹர்லால் நேரு பரிசும், 1998ல் பாரத ரத்னா பட்டமும் இவரின் பெருமையை,தியாகத்தை உலக்குக்குப் பறைசாற்றியது.

அருணா கங்குலி, ஆசாரமான ஒரு வங்காள பிராமணக் குடும்பத்தில், 1906ம் ஆண்டு பிறந்த மூத்த குழந்தை. இவரும், இவருடைய சகோதரி பூர்ணிமாவும், லாகூரில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வெண்ட்டில், பள்ளிப் படிப்பை முடித்தனர். சிறு வயதிலிருந்தே இவர் ஒரு சுதந்திரப் பறவையாக இருப்பதையே அதிகம் விரும்பக் கூடியவராக இருந்தார். இவரைப் பொறுத்தவரை மதம் என்பது ஒரு மாயையாகவே இருந்தது..........

நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து 'மொண மொண' என்று
சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ!!!

என்ற சிவவாக்கியர் அருளிய பாடலைப் போன்று,
கண்ணிற்குப் புலப்படாத ஒரு விடயத்திற்கு, படையல் வைப்பதும், பிரார்த்தனை செலுத்துவதும் ஒரு வேடிக்கையான அனுபவமாகவே கருதினார்.

அருணா பள்ளியின் முதல் மாணவியாக திகழ்ந்ததால், வெகு எளிதாக பள்ளி தலைமை அன்னையின் கருத்தைக் கவர்ந்துவிட்டார். கிருத்துவ மதத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் பெண் துறவியாகும் விருப்பம் கொண்டார்.

மிக வைதீகமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த அருணாவின் இந்த முடிவு, பெரும் அதிர்ச்சியை, குறிப்பாக அவருடைய அன்னைக்கு ஏற்படுத்தியதன் விளைவு, அவர் லாகூர் பள்ளியிலிருந்து , நைனிதாலில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபை சாராத பள்ளியில் [Prostestant convent] சேர்க்கப் பட்டார். அருணா தன் பள்ளிப் படிப்பை அங்கேயே முடித்து, இங்கிலாந்தில் மேற்படிப்பு படிக்க பணம் சேமிக்கும் வகையில் கல்கத்தாவில் உள்ள கோகலே நினைவுப் பள்ளியில் பணியில் அமர்ந்தார்.

அருணா ஆங்கில இலக்கியத்தில் பெரு விருப்பு கொண்டவராக இருந்தார். இயற்கையிலேயே பெரும் உவகை கொண்டிருக்கிற, கபடமற்ற, துணிச்சலான குணம் கொண்ட அருணா, நல்ல ஆலிவ் நிறத் தோற்றமும், ஆழ்ந்த, அடர்ந்த நிறம் கொண்ட கண்களும் உடைய ஒரு அழகான இளம் பெண்ணாக இருந்தார். அவருடைய மேற்கத்தியக் கல்வி, அவருக்கு நாகரீகமான, அழகான உடை உடுத்தும் பழக்கத்தையும் ஏற்படுத்தியது.

அருணாவின் சகோதரி, பூர்ணிமா பேனர்ஜி அலகாபாத் நகரில் தன் கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்தார். அருணா கோடை விடுமுறைக்கு அங்கு சென்று தங்குவது வழமை. பூர்ணிமாவின் குடும்ப நண்பர், சிறந்த சட்ட வல்லுநர் மற்றும் காங்கிரசு கட்சி உறுப்பினருமான ஆசிஃப் அலியைச் சந்தித்தார். ஆங்கில இலக்கியத்தில் இருவரும் கொண்டிருந்த ஈடுபாடு, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இணைவதற்கான பாலமாக அமைந்தது.


ஆசிஃப் அலி தன்னுடைய விருப்பத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே வெளியிட்டார். அருணாவிற்கும் ஒரு வகையில் விருப்பமிருந்தாலும், அவருடைய பெற்றோரின், ஒப்புதலை நாட வேண்டிய தேவையும் இருந்தது. ஆனாலும் இவருடைய தந்தை, கோபமுற்றதோடு இதற்கு ஒப்புக் கொள்ளவும் மறுத்து விட்டார். மத வேறுபாடு மட்டுமே காரணமாக இராமல், ஆசிஃப் அலி அருணாவைவிட 22 வயது மூத்தவராக இருந்ததும் மற்றுமொரு காரண்மானது. ஆசிஃப் அலிக்கு அப்பொழுது, 41 வயது, ஆனால் அருணாவிற்கோ 19 வயதுதான். இவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது, டிசம்பர் மாதம் 1927ம் ஆண்டில்தான். அருணாவின் தந்தை உபேந்திரநாத் கங்குலி இறந்ததோ மார்ச் மாதம் 1928ம் ஆண்டு நைனிதாலில். ஆசிஃப் அலி தன்னுடைய இரங்கலைத் தெரிவிப்பதற்காக திரும்பவும் இவரின் இல்லத்திற்கு வந்தார். பிறகு கடிதம் மூலம் இவர்களின் தொடர்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. முடிவாக இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அருணா குல்சும் ஜமானி என்று பெயரிடப்பட்டார்.

இந்தத் திருமணம் அருணாவின் குடும்பத்தில் பெரும் புயலையே கிளப்பிவிட்டது.அருணாவின் மாமனும் மற்றும் அவரின் உறவினர்களும் கடுமையாக எதிர்த்ததோடு, பிடிவாத குணமுடைய தங்களின் மகளையும் இழக்கத் துணிந்தனர். ஆனால் அருணா அதற்காக துளியும் விசனப்படவோ, அசரவோ இல்லை. அந்த அளவிற்கு ஆசிஃப் அலியின் அன்பினால் கட்டுண்டு இருந்தார். பிற்காலத்தில் அருணா அவரைப் பற்றிக் கூறும் போது, பெருந்தன்மையும், தாராள மனதும் கொண்ட தன் கணவருக்கு ஈடாக உலகில் எந்தப் பெண்ணின் கணவனும் இருக்கவே முடியாது என்று பெருமை பொங்க உறுதி படக் கூறியிருந்தார்.

ஆசிஃப் அலி தன்னுடைய காதல் மனைவிக்கு எழுதிய உருது கவிதைகள் அனைத்தும், கருத்தாழம் மிக்கதாகவே இருந்தது. ஆனால் அருணாவிற்கு மொழி தெரியாததால், அவரால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. அதனால் அவர் உருது மொழியை வெகு சரளமாக பேசக் கூடிய வகையில் முழு மூச்சாகக் கற்று முடித்தார். ஆசிஃப் அலி அப்பொழுது காங்கிரசில் முழு ஈடுபாட்டுடன் இருந்தாலும், அருணா ஒரு சில உரையாடல்களில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.

அருணாவின் முதன் முதல் முழுமையான அரசியல் பிரவேசம் என்பது, உப்பு சத்தியாகிரகத்தில், தன் கணவர் கைது செய்யப் பட்ட போதுதான். இந்த சமயத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் 1 வருடம் அடைக்கப் பட்டார். திரும்பவும், 1932ம் ஆண்டு, மற்றொரு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக தில்லி மாவட்டச் சிறையில் அடைக்கப் பட்டார். அங்குதான் அவர், பெண் அரசியல் கைதிகளின் உணர்வுகளை மதிக்காத சிறை அதிகாரிகளின் போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு, போராட்டத்திற்கு முயற்சித்தார். இதன் தொடர்ச்சியாக அருணா ஆண்கள் சிறையான அம்பாலாவிற்கு அனுப்பப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

அம்பாலாவிலிருந்து விடுதலை அடைந்தவுடன், அருணா திரும்பவும் தலைநகரின் சமூக வாழ்வில் நுழைந்தார். அவருடைய இல்லம் சிறந்த விருந்தோம்பலுக்கும், அறிவார்ந்த வல்லுனர்களுக்கு வாழ்வாதாரமாகவே இருந்தது எனலாம். இதற்குப் பிறகு இவருடைய பொதுச் சேவை செயல்பாடுகள், அகில இந்திய பெண்கள் நல முன்னேற்றச் சங்கத்தின் கூட்டங்களில் பங்கேற்பதுடன் மட்டறுக்கப் பட்டது.

பிற்பாடு அவர் அரசியலில் திரும்ப நுழைந்த போதும், அவருடைய நிலைப்பாடு, காங்கிரசின் கொள்கைகளைவிட பொதுவுடமைக் கொள்கைகளை நோக்கியே இருந்தது. அவர் பொருளாதார ஏற்றத் தாழ்வு, சாதிபேதம், அல்லது , பாலியல் பாகுபாடு போன்ற காரணங்களுக்கான நலிவுகளைனைத்தையும் சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவர், ஜெய் பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, அச்சுத பட்டவர்தன் மற்றும் யூசுப் மெஹரலி போன்ற இளம் தலைவர்களின் அணியில் இணைந்தார்.

அருணாவின் பார்வையில் இந்தியர்களின் நாட்டுப்பற்று என்பது சமயம் சார்ந்த ஒன்றாக இருப்பதன் காரணத்தினாலேயே அதனை புனிதமான ஒரு காரியமாகக் கொண்டு தங்களுடைய நாட்டுப் பற்றுணர்வை, மதச் சின்னங்கள் மூலமே உணர்த்துகின்றனர். இந்துக்கள், 'ராம ராஜ்யம்' என்று குறிப்பிடுவதோடு, சிறைக்குச் செல்வதைக்கூட யாத்திரைக்குச் செல்வது போல உணரும் அத் தன்மையைக் குறித்து ஆச்சரியப்பட்டு பேசுவார். அவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இஸ்லாமிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டதன் விளைவு, இஸ்லாமிய மதப்பற்றுணர்வு மேலோங்கி இருந்தது. இதன் காரணமாகவே ராம ராஜ்யம் என்பதைவிட அக்பர் ஆட்சிக் காலத்தையே இலக்காகவும், வழிகாட்டுதலாகவும் கொண்டிருக்க வேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது.

ஆகஸ்ட், 1942ல், காங்கிரசின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராக ஆசிஃப் அலி பொறுப்பேற்றிருந்த போது, அவர் மும்பாயில் நடந்த 45வது, காங்கிரசு கூட்டத்திற்குத் தன் மனைவியையும் உடன் அழைத்துச் சென்றார். அந்தப் பொதுக்கூட்டப் பந்தலில் , அழகான, இளமையான, அந்த பெண்ணே அனைவரின் கருத்தைக் கவருபவராகவே இருந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்,காந்தியடிகளின் கொள்கைக்கிணங்க மக்கள் 'செய் அல்லது செத்துமடி' என்று ஆவேசமாக இருந்தனர். ஆகஸ்ட் 9ம் நாள் விடியற்காலை , பிரிட்டானிய ஆட்சியாளர்கள், முக்கியமான காங்கிரசு தலைவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதன் மூலம் மக்களை எளிதாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமென நம்பினர்.

இந்த கைது விவகாரத்தைக் கேள்விப்பட்ட அருணா தலைவர்களை ஏற்றிச் செல்வதற்காக விடப்பட்ட பிரத்யேக இரயில் காத்திருந்த புகை வண்டி நிலையத்திற்குச் சென்றார். அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும், அவர் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தார். அனைத்துத் தலைவர்களையும் சுமந்து கொண்டு வண்டி புறப்படத் தயாரானது. அதனைச் செல்ல அனுமதித்தால் புரட்சிச் சுடர் அணைந்து விடக்கூடுமே என்று துடித்துப் போனார் அருணா! அதை தடுத்து நிறுத்த வழி அறியாமல் தவித்தார்.

அருணா காங்கிரசு கூட்டம் நடக்கக்கூடிய கோவாலியா டேங்க் மைதானத்திற்கு, விரைந்து சென்று, சிலரின் தயக்கத்தினூடேயும், குறிப்பிட்ட நேரத்தில் காங்கிரசு கொடியை ஏற்றினார். காவலர்கள் உடனே வந்து கூட்டத்தைக் கலைக்கும் பொருட்டு, கண்ணீர் புகையை வீசினர். அதுமட்டுமல்லாமல் லத்தியால் பலமாகத் தாக்கவும் செய்தனர். இந்த நிகழ்வு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். அந்தக் கூட்டம் ஒரு ஊர்வலமாக காங்கிரசு இல்லம் நோக்கி நகரத் தொடங்கியது. அருணா தலைமை தாங்கிச் சென்ற போது, பிரிட்டானிய காவல் துறை அதிகாரி காங்கிரசு கொடியை இறக்கும்படி ஆணையிட்டார். அவர் சுதாரிப்பதற்குள் வெள்ளை சிப்பாயி முரட்டுத்தனமாக மிதித்து, அநாகரீகமாக நடந்ததைக் கண்டு வேதனையுற்றவர், ஆங்கில ஆட்சியிலிருந்து தம் நாடு சுதந்திரம் அடையும் வரை தாம் ஓய்வதில்லை என்று உறுதி பூண்டார்.

காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாளரின் போக்கும், அதனால் மக்களின் அவதியும் அருணாவை வெறுப்படையச் செய்ததோடு, மேலும் உறுதியான முடிவுகள் எடுக்கச் செய்தது. அவர் சிறைக்கு வெளியே இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் காங்கிரசு உறுப்பினர்களை நெறிப்படுத்துவதில் சுறுசுறுப்பானார். இதற்காக மும்பாயிலிருந்து தில்லிக்கு வந்த அருணாவை காவல் துறையினர், கலவரத்தை உண்டுபண்ணிய காரணத்திற்காக கைது செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அருணா, இயக்கத்தை உயிரோட்டமுடன் வைப்பதன் பொருட்டு, தான் வெளியே இருந்து செய்ய வேண்டிய பணிகளின் அவசியம் உணர்ந்தவராக, தன்னுடைய போக்கிடம் அறியாத நிலையிலேயே, தில்லியை விட்டு வெளியேறினார். தன்னைப் பிடிக்க முடியாத வகையில் தலைமறைவானார். அவரைப் பிடிப்பதற்கு 5000/- ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மிக சாமார்த்தியமாக முன்பின் அறியாதவர்கள் மற்றும் நண்பர்களுடன் தங்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். ஒரு முறை ஒரு ஆங்கிலப் பெண்மணியின் பணம் செலுத்தி விருந்தினராகக்கூடத் தங்கியிருந்தார். நல்ல நண்பர்கள் வீட்டிலும், மூத்த அரசு நிர்வாக அலுவலர்கள் வீட்டிலும், பிரச்சனை வரும்வரை மாறி, மாறி தங்கிக் கொண்டிருந் தார். இலட்சக்கணக்கான மக்கள் அவரைப் பாதுகாக்க துணிந்திருந்த வேளையில், கையளவேயான காவல் துறையினரால் என்ன செய்ய முடியும்?

1946ல் அவர் இருக்கும் இடம் அறியப்பட்டாலும், அவருக்கு எதிரான கைது அதிகாரம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் வீடு வாசல் துறந்து, சரியான வசதிகள் இன்றி, அலைந்து திரிந்து கொண்டிருந்த காரணத்தினால் இவருடைய ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதே சமயத்தில் கணவர் ஆசிஃப் அலியும், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளானார். மேலும் அருணாவின் தாயார், பூர்ணிமா பேனர்ஜியின் இல்லத்தில், மரணப் படுக்கையில் இருந்தார்.

தலைமறைவு வாழ்க்கை பூர்த்தியானவுடன், முதன் முதலில், பட்டுக்கம்பள வரவேற்பளித்தது, கல்கத்தா நகரம்தான். அவர் இலட்சக்கணக்கான மக்களை ஒருசேர சந்திக்கும் வண்ணம் தேசபந்து பூங்காவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தில்லி மாநகரத்திற்கு அவர் திரும்பிய போது, குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் முன்பை விட மிக அதிகமான மகிழ்ச்சியுடன் உறவாட முடிந்தது, அவரால்.

அருணா வெளிப்படையாக, காந்தியடிகள், நேரு மற்றும் மௌலானா ஆசாத் போன்ற பெருந் தலைவர்களின் கருத்துக்களில் வேறுபாடு கொண்டிருந்தாலும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பும், மதிப்பும் அவர்களுக்குள் பெரும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை.

அருணா, இடைக்கால அரசாங்கம் என்பதை கொள்கையளவில் விரும்பவில்லை. முன்மொழியப்பட்ட தேசிய இடைக்கால அரசாங்கம் என்பது, தேசியமானதாகவும் இல்லாமல், அரசாங்கமாகவும் இல்லாமல், இடைக்காலமாக இருப்பதற்கான ஆதாரமும் இருப்பதில்லை, என்பது அவருடைய கணிப்பாக இருந்தது. செப்டம்பர் மாதம் 1946ல், ஆசிஃப் அலி தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டது, அருணாவிற்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு ஆசிஃப் அலி, வாஷிங்டனுக்கு, இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். ஆனால் அருணா அவருடன் செல்லத் தயாராக இல்லை. இந்தியா ஒரு ஆரோக்கியமற்றத் தாயாக இருந்த நிலையில், அவளைக் குணப்படுத்த வேண்டிய கடமை தனக்கிருப்பதாக அவர் நம்பினார். தனக்கு விடுமுறை தேவைப்படும் வேளையில் அமெரிக்காவிற்குச் சென்று வரலாம் என்றிருந்தவர், காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த வேதனையானத் தருணத்தில் அமெரிக்காவில் இருந்தார்.

அருணாவின் பார்வையில் இரு களர் நிலங்கள் என்றால் அது, பெண்கள் மற்றும் மாணவர்கள் குறித்ததாகவே இருந்தது. இவர்கள்தான் ஒரு நாட்டின் எதிர்காலம் என்பதில் உறுதியாக இருந்தார். இளைஞர்களைப் பற்றிக் கூறும் போதெல்லாம், அவர்களிடமிருந்தே தனக்கு, அகத்தூண்டுதலும், ஊக்கச் சக்தியும் கிடைப்பதாகவே குறிப்பிடுவார்.

ஆசிஃப் அலி இறந்த 1953ம் வருடத்தில் அருணா சமூகத்தில் நலிவுற்ற பிரிவினர், குறிப்பாக பெண்களுக்காகப் பணிபுரியும், பல தரப்பினரின், பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தலைவியாகவே இருந்தார். பெண்களின் துயர் தீர்க்கும் வண்ணம் பல்வேறு துறைகளிலும் தன் தடம் பதித்து, உயரிய பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். அவர் தேசிய ஒருங்கிணைந்த இந்தியப் பெண்களின் நிறுவனத்தின் தலைவியாகவும், பாதுகாவலராகவும் இருந்தார். மேலும், அகில இந்திய பெண்கள் மகாநாட்டின் இணையான'தில்லி பெண்கள் லீக்'கின், செயலாளராகவும் இருந்தார்.

அருணா, பெண்கள் கூட்டங்களில் உரையாற்றுகிற சமயங்களிலெல்லாம், பெண்கள் தயக்கமின்றி, ஆண்களுடன் சேர்ந்து, நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உழைக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைப்பார். உதாரணமாக, ஆயிரக் கணக்கானப் பெண்கள் இரசியப் புரட்சியின்போது , முன்னிலையில் நின்று போராடிய சம்பவம், சீனாவில் பெண்கள் கொரில்லாக்களுடன் சேர்ந்து களமிறங்கிய சம்பவம் போன்றவற்றை விளக்குவார்.

அவர்,"ஏன் இந்தியாவில் மட்டும் என் சகோதரிகள் தன் கணவன்மார்களின், காலுறைகளைச் செப்பனிடும் பணியையே சிரமேற்கொள்வதோடு, கணவர் இல்லாத வேளைகளில், தேவையில்லாத புறளி பேசுவதிலும் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிடுகிறார்கள்", என்று வேதனைப்படுவார்.

அருணா, அறிவொளியைப் பரப்பக் கூடிய ஒரு பிரத்யேகப் பதிப்பகத்தை நிறுவும் பேராவல் கொண்டிருந்தார். அதன் விளைவாக 'லிங்க' [Link] என்கிற வாராந்தரியும் மற்றும் பிற்காலத்தில் 'பேட்ரியாட்' [Patriot] என்கிற தினசரி செய்தித்தாளையும் ஆரம்பித்தார். எம்.சலபதி ராவ், கே.எம்.பணிக்கர், வி.கே.கிருஷ்ண மேனன், போத்தன், ஜோசப், எஸ்.வைத்தியநாதன் மற்றும் பலரும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். மும்பாயிலிருந்த, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எ.வி.பாலிகா என்பவர் லிங்க் பதிப்பகத்தை நிறுவ பொருளாதார உதவிகள் செய்தார். லிங்க் பதிப்பகத்தை உருவாக்குவதிலும் ஆதரவளிப்பதிலும், பெரும்பாலும் அருணாவின் முழு நேர வேலையாக ஆனது.

1989 மற்றும் 90களில் அருணாவின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்தது. அவருடைய மனநிலையில் உறுதியும், தெளிவும் இருந்த போதிலும் அவருடைய உடல் நிலை ஒத்துழைக்காதக் காரணத்தினால் அவர் பொதுக் காரியங்களில் பங்கெடுக்க இயலாத நிலை ஏற்பட்டது. சிறிது, சிறிதாக எல்லாவற்றிலுமிருந்து, விலகி தனிமைப்பட்டு இறுதியாக ஜீலை மாதம் 1996ல் இயற்கை எய்தினார்.

அருணா ஆசிஃப் அலி பொறுமைக்கு இலக்கணமாகவும், 'சுயம்' என்பதன் முழு விளக்கமாகவுமே வாழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.

அவர் தன்னுடைய நேர்மை மற்றும் இரக்க குணம் காரணமாக தன்னை நெருங்கிய அனைவராலும் அன்பாகவும், மரியாதையாகவும் நடத்தப் பட்டார். தேசிய அளவிலும், உலக அளவிலும், கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னலமற்ற சேவை, தேசியவாதம், நாட்டுப்பற்று, இவையனைத்திற்கும் ஒரு முன்னுதாரணமாகவே வாழ்ந்து, இந்திய வரலாற்றில் ஒரு நிலையான இடம் பெற்றிருப்பவர் அருணா ஆசிஃப் அலி அவர்கள்!!

Thursday, September 16, 2010

சுவையான காளான் கறி [Rich Mushroom curry]







தேவையான பொருட்கள்;

மொட்டுக் காளான் - 3 பாக்கெட்
வெங்காயத்தாள் - 1/2 கட்டு
வெள்ளை வெங்காயம் - 2
தக்காளி[நடுத்தரமானது]-2
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீ.ஸ்பூன்
காய்ந்த மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடைந்த பாலேடு - 1/4 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - வதக்க
நெய் - 2ஸ்பூன்

செய்முறை;

1. வெங்காயத்தையும், தக்காளியையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

2. வெங்காயத்தாளை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

3.காளான்களை நன்கு கழுவி ஒரு துணியின் மீது பரப்பி ஈரம் வற்றியதும் ஒவ்வொன்றையும் 2 துண்டுகளாக வெட்டவும்.

4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் அதில் சீரகம், பச்சை மிளகாய், காளான்கள் இவற்றைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கி அதனுடன் வெங்காயத்தாளையும் சேர்க்கவும். பின்பு அதைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5. அதே வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.

6. இதனுடன் இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தக்காளி இவற்றைச் சேர்க்கவும்.

7. தக்காளி வெந்தவுடன் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்பு அரைத்த முந்திரிப் பருப்பு, கடைந்த பாலேடையும் சேர்த்துக் கலக்கவும்.

8. தீயைக் குறைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.

9. அத்துடன் வதக்கிய காளான்களையும் சேர்த்து கிளறி இறக்கவும்.

10. வாணலியில் சிறிது நெய் விட்டு, உறுகியதும், கரம் மசாலாத் தூள், சீரகத்தூள் இவற்றைச் சேர்த்து குழம்பின் மேல் ஊற்றி மெதுவாகக் கிளறி இறக்கவும்.

11. கொத்தமல்லித் தளையைத் தூவி அலங்கரிக்கவும்.


படத்திற்கு நன்றி.

Wednesday, September 15, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்





செவிக்குணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.

வயிற்றிற்கு ஈயப்படும் அந்த உணவு நாக்கிற்கும் சுவையாக இருந்தால் மட்டுமே, அது மனதையும் நிறைக்கும். மனது நிறையும் பொழுது, இயல்பான அமைதி நிலை பெற்று விடும். ஆக அமைதியான வாழ்க்கைக்கு சுவையான உணவே அடிப்படையாகும். அதே வேளையில் நல்ல சத்தான உணவும் அவசியமாகும். எந்தெந்த உணவு வகையில் என்னென்ன சத்து உள்ளதென்பதன் விழிப்புணர்வு இருந்தால் போதும். சரிவிகித உணவு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்', என்று சர்வ அலட்சியமாக சொல்லக் கூடியதாக இருப்பினும், இந்தக் காளான், கொழுப்புச் சத்து இல்லாத, குறைந்த கலோரிகளே உடைய, கனிமச் சத்து நிறைந்த ஒரு சத்தான உணவு வகையாகும். சில வகைக் காளான்கள், நோய் எதிர்ப்புச் சக்தியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிற தாவர வேதியியல் பொருட்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

இந்த காளான்,[Mushroom] பண்டைய நாகரீகத்திலும் சிறந்த உணவு வகையாகவும், மருந்து வகையாகவும் பயன் படுத்தப் பட்டுள்ளது. கற்காலத்தில், உலர்ந்த காளான்களை மரத்தூள்களைப் போன்று பயன்படுத்தி, பாதுகாக்கப் பட்ட, 5000 வருட பழமையான, பனிக்கட்டி மனித உடல், [Qetsi, the Iceman] ஆஸ்திரிய ஆல்ப்ஸில் கண்டுபிடிக்கப் பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

காளான், ஆசிய உணவு வகைகளில், பல்லாண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஜப்பானிய விஞ்ஞானிகள் இந்தக் காளான்களின் ஆரோக்கிய அனுகூலம் குறித்த ஆராய்ச்சியில் முன்னனி வகிக்கிறது. ஜப்பானிய ஆய்வின் படி சில வகைக் காளான்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிப்பதுடன், புற்று நோயை எதிர்த்துப் போராடுவதிலும் பெரும் பங்காற்றுகிறதாம். மேலும், சரவாங்கி, மூட்டு வலி போன்ற நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாகவும் உள்ளதாம். இதில் உள்ள 'க்ளுடமிக்'[glutamic acid] என்கிற அமினோ அமிலம், தொற்று நோய்களை எதிர்த்துப் போராடக் கூடிய வல்லமை வாய்ந்ததாகும்.

இதிலுள்ள மற்றொரு பொருளான 'எரிடாடினைன்', கொழுப்புச் சத்தை குறைப்பதுடன், அதிகப் படியான
கொழுப்பை வெளியேற்றச் செய்யக் கூடியத் திறனும் படைத்ததாகும். சில ஆய்வுகள் இதய நோய்கள் மற்றும் இரத்தக் கொதிப்பையும் கட்டுப் படுத்துவதாகவும் நிரூபித்துள்ளன. இதிலுள்ள போட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாகும்.

எளிதாகக் கிடைக்கக் கூடிய வெள்ளைக் காளான்களில், பெருஞ்சுரப்பி புற்று நோயைத் [prostate cancer] தடுக்கக் கூடிய 'செலீனியம்' நிறைந்துள்ளது. ஒரு அமெரிக்க ஆய்வின்படி, தங்கள் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவிலான செலீனியம் கொண்டிருப்பவர்கள், தேவையான அளவிலான [55mcg] செலீனியம் கொண்டிருப்பவர்களைவிட நான்கு அல்லது ஐந்து மடங்கு , அதிகமாக Prostate cancer வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கண்
டுபிடித்து உள்ளனர்.

அதிகளவில் க்ளுடமிக் அமிலம் நிறைந்திருப்பதன் காரணத்தினாலேயே காளான்கள் இயற்கையிலேயே நறு மணம் உடையதாக இருப்பதால், பல உணவுப் பண்டங்களுக்கு, மேலும், சுவையை
யும், மணத்தையும் அதிகப் படுத்தி, உண்ணும் ஆவலையும் தூண்டுகிறது.

நல்ல சுவையாக உண்ண விரும்புபவர்களே நன்கு சுவையாக சமைக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்பது முதுமொழி. அந்த வகையில் அடியேனும், நன்கு சமைக்கக் கூடியவளே. சில சூப்பரான காளான் ரெசிப்பிக்களைப் பார்க்கலாமா?

காளான் சாப்ஸ் [Mushroom chops]
தேவையான பொருட்கள்;

காளான் - 400 கி. [2 பாக்கெட்]
வெங்காயம் 2 பெரியது.
வெண்ணெய் - வதக்க
புளி - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிது

அரைத்துக் கொள்ளவும்;

பூண்டு - 6 பல்
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
சிகப்பு மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை;

1. ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து கொள்ளவும். இதில் காளான்களைப் போட்டு கழுவி எடுக்கவும். இதே போல் 4 முறை கழுவிக் கொள்ளவும்.

2. ஈரம் போக ஒரு துணியின் மேல் பரப்பி வைக்கவும்.

3. ஒவ்வொன்றையும் ஒரெ மாதிரி அளவாக 6 அல்லது 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

4. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

5. புளியை சிறிது நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

6. அரைத்த பொருட்களை புளிக் கரைசலுடன் சேர்க்கவும்.

7. இந்தக் கலவையில் 1/2 மணி நேரம் காளான்களைப் போட்டு ஊற வைக்கவும்.

8. வெங்காயத் தாளின் மேலே உள்ள வெங்காயத் தாள்களை பொடியாகவும், வெங்காயத்தை வட்டமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

9. நறுக்கிய வெங்காயத் தாள்களை அலங்கரிப்பதற்கு வைத்துக் கொள்ளவும்.

10. வட்ட வடிவ வெங்காயத்தை வெண்ணையில் பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும். [அலங்கரிப்பதற்கு]

11. வாணலியில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

12. அரைத்த கலவையில் ஊற வைத்த காளான்களை கலவையுடன் அப்படியே வாணலியில் சேர்க்கவும்.

13. இதை ஈரம் நன்றாக வற்றும் வரை நன்கு வதக்கி தீயை அணைக்கவும்.

14. பரிமாறும் கிண்ணத்தில் மாற்றியதும் வதக்கிய வெங்காயத்தையும், வெங்காயத் தாளையும் அலங்கரித்து பரிமாறவும்.

Monday, September 13, 2010

சாமிக்கு..............ஒரு கடுதாசி............



சாமி.........நீ நல்லாயிருக்கியா.....?
நான் ரொம்ப நல்லாருக்கேன்.........
அம்மா கருவறையிலே ஆனந்தமா சுத்தி வந்தப்ப,
'நீல வண்ண கண்ணா வாடா, நீ ஒரு முத்தம் தாடான்னு', அம்மா பாடிக்கிட்டே இருந்தப்ப கேட்க சுகமா இருக்கும்.............

பளபளப்பும், பகட்டுமான வெளி உலகம் அச்சுறுத்திய போது அம்மாவின் அரவணைப்பு பாதுகாப்பா தெரிந்தது........
அம்மாவும், அப்பாவும், பட்டு வண்ண மேனி, ரோசா மொட்டு இதழ்கள், நீலோர்ப்பழக் கண்கள், குண்டு கன்னம்..........இப்படி மாறி மாறிக் கொஞ்சினார்கள்.....

ஆனா திடீர்ன்னு அவங்களுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல...........
என்னைப் பாத்து, பாத்து வேதனைப் படறாங்க.........
இரவெல்லாம் தூங்காம அழறாங்க.........

நான் நல்லாத்தானே இருக்கேன்............
கள்ளங் கபடமற்ற அதே மழலை........
சலனமற்ற பார்வை..........
அழுது புரண்டு அழிச்சாட்டியம் பண்ணும் குணம்....
விருப்பப்பட்ட இடத்துல உச்சா போறது.........
சாப்பிடறது, தூங்கறது எல்லாமே என் விருப்பத்துக்கு ஏத்தா மாதிரிதான்..........


சுற்றங்கள் சூழ்ந்திருக்கும் அந்த சுகமானச் சூழலில் என்னைப் பற்றிய பரிதாபமான விசாரிப்புக்கள்.............
நான் மகிழ்ச்சியாத்தானே இருக்கேன்..........
அம்மாவும், அப்பாவும் என்னைப் பார்த்து அழுதா எனக்கும் அழணும் போல இருக்கு.............
அவங்க சொல்லறாங்க.........நான் ரொம்ப பெரிசாயிட்டனாம்........... அப்படீன்னா...... என்ன சாமி........?

எனக்குத்தான் ஒன்னியுமே புரியலியே...........
நான் என்னா செய்யட்டும்.......
உன்கிட்டேயே.......வந்துடட்டுமா............?


சாமியின் பதில் கடிதம்.

இயற்கை வெறும் அலங்கார மலர்களால் மட்டுமே ஆனது அல்ல...........
ஒரு கையில் சிறகும், மறு கையில் சுமையும் கொண்டதே வாழ்க்கை............
கல், மண், சேறு, சகதி இவையனைத்துமே இயற்கையில் அடக்கம்..........
பாரபட்சமற்றது மட்டுமே படைப்பாகும்...........
யாரையும், யாரும் திருப்திப் படுத்துவதற்காக யாரும் அவதரிப்பதில்லை..........
அவரவர் வினைப்பயன் என்பதற்கேற்றவாரே ஒருவரின் பிறப்பு நிச்சயிக்கப் படுகிறது......
ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணமும், கடமையும் உண்டு........
மாற்றம் தேவைப்படும் வேளைகளில் இயற்கை தானாகவே அதை நிகழ்த்தும்........

இயற்கை அன்னை தன் செல்வங்கள் அனைத்தையும் தானே அனுபவிப்பதில்லை.............
உலக உயிர்களுக்கு அர்ப்பணிப்பதற்காகவே மீண்டும், மீண்டும் உயிர்த்தெழுகிறாள்.........

சமூக வாழ்வியல் அமைப்பே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும், அறிவார்ந்த பண்பேயாகும்........
இன்று நீ ஒருவருக்கு செய்யும் உதவி, நாளை வேறு ஒருவர் மூலம் உனக்கே திரும்பி வரக்கூடும்.............
அது போலத்தான் தீமைகளும்..........
நன்மைகளும், தீமைகளும் சமமாக இணைந்ததே மனித வாழ்க்கையாகும்..........
என் நிலையில் உன் தேவையை நிறைவேற்றி, வழி நடத்தவே
நான் அனுப்பிய தேவ தூதர்களே உன் பெற்றோர்!!
அவர்களால் உன் உலகமே சொர்க்கமாகும்!!

Tuesday, September 7, 2010

நாமாவோம்.









நூல் பெயர் ; நாமாவோம்
நூல் தொகுப்பு ஆதாரம்; திருமதி. G. திலகவதி IPS
தொகுப்பாளர் ; ஜெ.ஜெயபாரதி
வெளியீட்டாளர் ; படிகள் படிப்பியக்கம், சித்தார்த்தா பள்ளி, ஈரோடு.
விலை ரூ 80/-




சக்தியும், சிவமும் இணைந்து ஒரே நேர்கோட்டில் பயனிக்கும் போதுதான் வாழ்க்கைச் சக்கரம் நிலையான திசையில் சுழலும் என்பதனை, அழகாகவும், தெளிவாகவும், பல வல்லுனர்கள் மூலம் நிரூக்கப்பட்ட ஆதாரங்களுடன் கூடிய இப்புத்தகம், ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு சிறந்த கையேடாகும்.

'சாகித்திய அகாடமி விருது' பெற்றிருக்கும் எழுத்தாளரும், காவல் துறை இயக்குநருமான திருமதி.ஜி.திலகவதிIPS, அவர்களின் தெள்ளுத் தமிழ் மற்றும், சமுதாய நற்சிந்தனையுடன் கூடிய, நச்சென்ற முன்னுரையுடனும், திரு எஸ்.கே.மயிலானந்தம் அவர்களின் வாழ்த்துரையுடனும், திருமதி ஜெ.ஜெயபாரதி அவர்களால்,தொகுக்கப் பட்டிருக்கும் இந்நூல் அனைத்துத் தரப்பினரும் பயன் பெரும் வகையில் அமைந்திருப்பது தான் இதன் சிறப்பம்சமாகும். இருபத்தியொரு வண்ண மலர்களாலான ஒரு அழகிய மாலையாகும் இந்நூல். ஆங்கில உரைகளை மருத்துவர் வி.ஜீவானந்தம், திருமதி ஜெயபாரதி மற்றும் திரு மு.சுப்பிரமணியம் ஆகியோர்கள், எளிய நடையில்,தூய தமிழில் அழகாக மொழி பெயர்த்துள்ளார்கள்.

முதல் மலராக, பெண் விடுதலை- பாலின நீதிக்கான அறைகூவல். நீதியரசர் வீ.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களால் மலர்ந்துள்ளது. பண்பாட்டுச் சங்கிலி மற்றும் குடும்பக் கட்டுக்குள் அடிமைப் பட்டுக் கிடக்கும் இந்தியப் பெண்களின் நிலை குறித்தும், பெண் சொத்துரிமை மற்றும் இந்து வாரிசுச் சட்டம் குறித்த காரசாரமான விவாதம் மற்றும், பெண்களுக்கு எதிரான, பாகுபாடுகளுக்கு எதிராக அமெரிக்காவில் 1950- 60களில் 'மக்கள் உரிமை இயக்கம்' எழுந்ததைப் போல நம் நாட்டிலும் எழக்கூடும். பேண்கள் வீட்டுப் பறவையாக வாழ இனியும் தயாராக இல்லை என்கின்ற தீர்க்க தரிசனமும் , மார்வாடிப் பெண்களின் வரதட்சனைக் கொடுமை போன்ற அநீதிகள் அழிய வேண்டுமானால், ஒரு பாலினப் புரட்சிக்கு வித்திட, இந்தியாவின் 30 கோடிப் பெண்களும் ஒன்று திரண்டு, அரசியல் சட்டம் சரத்து 15 [3] - 16 [ஏ] க்கு உட்பட்ட அனைத்து உரிமைகளையும் பெறப் போராட வேண்டும் என்ற அறைகூவலையும் விடுத்துள்ளார்.

ஏ.ஈ. ஆல்டிகர் அவர்களின் 'பெண் வரலாற்றுப் பார்வை' யில், வரலாறு என்பது [His story] 'அவனது' மகத்தான கதையைச் சொல்வதாகவே உள்ளது. ஆனால் 'அவள்' கதை [Her story] சொல்லப் படாத ஒன்றாகவே உள்ளது, என்கிற உண்மையை நிரூபித்துள்ளார். ஆண் ஏன் இப்படி அடக்கினான் என்பதோடு, பெண் ஏன் இப்படி அடங்கிப் போனாள் என்ற ஆதங்கத்தை, நவீன மனிதகுல வரலாற்றுக்கு முந்தய காலத்தில், பெண்ணின் பங்கு, பின் வேதகாலம், ஆணாதிக்க மைல் கற்கள், இதற்கான தீர்வுகள், என்று அனைத்தும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முனைவர் ரெஜினா பாப்பா அவர்களின், 'தமிழக வரலாற்றில் பெண்கள் 1950 வரை', என்ற மலரில், வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் பெண் பெற்றிருந்த இடம், அவளது நிலை, அதிகாரம், ஆளுமை, ஆகியவைகள் குறித்த விளக்கமாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் தான் விழிப்புணர்வுக் காலம் போன்ற ருசிகரமான தகவல்களும் ஆச்சரியப் படவைக்கிறது.....

'ஆணென்ன, பெண்ணென்ன'?, அடிப்படை உண்மைகள், 'மரியோ ஸ்காட்டோனின்', என்பவரால், புறத் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், பலம், பலவீனம் இவைகள் குறித்து ஆணிற்கும், பெண்ணிற்கும் உள்ள வேறுபாடுகள், அழகாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் விவரிக்கப் பட்டுள்ளது. ஜான் நிக்கல்சன் அவர்களின் 'பெண்மையின் வலிமை', என்ற அடுத்த மலர், பெண்ணியல் ஆய்வு பற்றிய விளக்கமாகும். 1 முதல் 18 வயது வரை, பாலின அடையாளம் உருவாகும் முறை விஞ்ஞானரீதியாகவும், சமூகப் பார்வையுடனும், அலசி ஆராயப் பட்டுள்ளது. அறிவியல்ரீதியாக, மூளை வளர்ச்சியில் ஆண் மற்றும் பெண்களுக்குள வேறுபாடுகள் குறித்த கண்ணோட்டம் நல்ல தகவலாகும்.

'வலிமையும்- சாதனைகளும்', என்ற ஜான் நிக்கல்சன் அவர்களின் கட்டுரையில் அறிவியல்ரீதியாக, இரு பாலரின் பலம் மற்றும் பலவீனங்கள், பெண்கள் பற்றிய தவறான கருத்துக்கள், உடல்ரீதியாக பெண்கள் எவ்வாறு மாறுபடுகிறார்கள் போன்ற பல் வேறு விதமான தகவல்களும் அடங்கியுள்ளன.

'உணர்ச்சி வசப்படுதல்', என்னும் அடுத்த கட்டுரை பேட்ரிக்கா சர்ச்லேண்ட் வில்லியம், எஃப் ஆல்மேன் என்பவரால் எழுதப் பட்டதாகும். 'பெண்ணும் கண்ணீரும் ஏற்புடை இணை, என்றும் ஆண் கண்ணீர் சிந்துவது அவமானகரமானது என்னும் நம்பிக்கை ஆழமாக உள்ளது. பெண் சாதிக்க முடியாததை, அவளது கண்ணீர் சாதித்து விடும் என்ற எண்ணமும் வலிமையாக உள்ளது. இவற்றிற்கெல்லாம் அறிவியல் காரணம் உண்டா என்பது போன்ற பல வினாக்களுக்கு இதில் அறிவியல் மற்றும் சமூகரீதியான விளக்கமும் உண்டு.

'பெண்களுக்கு மட்டும் ஏன் ஹிஸ்டீரியா?' என்ற வினாவிற்கு , பெண்கள் ஆரோக்கியச் சிறப்பிதழ், மாமியாரால் கொடுமைப் படுத்தப்பட்ட, புரியாத வயதில் பாலியல்ரீதியான வன்முறைக்கு உள்ளான, மற்றவர்களைப் போல அழகும், படிப்பும் தனக்கு இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையும், தன்மீது அக்கரை கொண்டவர் இல்லை என்ற மன உளைச்சல் இப்படி பல காரணங்கள் விளக்கப்பட்டுள்ளது. இளம் பெண்களுக்கான நல வாழ்வுக் குறிப்புகள் மிக பயனுள்ள தகவல்களாகும். மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வூட்டும் அரியத் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் செயலகத்தின் பாலியல் மேலான்மை அமைப்பின் வெளியீடான, பாலினம், பாலியல் பங்கு ஆகிய கட்டுரைகள் ஆண், பெண், பாலியல் பற்றிய, ஆய்வறிக்கையில், ஆண்மைக்குத் தொடர்புடையனவற்றிற்கு, துணிச்சல், இலட்சியம், உறுதித் தன்மை, தெளிந்த சிந்தனை, தைரியம், யதார்த்தவாதம், பலம் இன்னும் பலப்பல. ஆனால், பெண்மைக்குத் தொடர்புபடுத்தப்படுபவைகளாக பெரும்பாலும் குறைவான சுயமதிப்பீட்டை உண்டாக்கக் கூடிய, கவர்ச்சி, சார்ந்திருத்தல், உணர்ச்சி மிகுதி, பலகீனம், தாழ்ந்து போதல், அதிகமாகப் பேசுதல், கனவுலகில் சஞ்சரித்தல்,என நீண்டு கொண்டே போகும் பட்டியல்......பிறப்பு எண்ணிக்கையில் சமமற்ற நிலையின் பின் விளைவு, அதிலுள்ள தடைகள், அதற்கானத் தீர்வுகள், சமத்துவத்தினால் ஏற்படக் கூடிய நன்மைகள் இப்படி பல அரிய தகவல்கள் அடங்கியுள்ள இப்பகுதி சமூக ஆர்வலர்களின் பெரும் விருந்தாகும்.

ஸீஷ்மா சகாய் அவர்களின் பெண் சக்தி மேம்பாடு எனும் இப்பகுதியில், உலகளவில் பல வரலாற்றுத் தகவல்கள், பெண் தன் ஆளுமையை வளர்த்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள், போன்ற பல முக்கியத் தகவல்கள் அடங்கியுள்ளது.

'திறமை மட்டும் ஒருவரிடம் இருந்தால் போதாது, அதனைப் பயன்படுத்திட, செயல்படுத்தத் தேவைப் படுகிற சக்தி, ஆற்றல், அவரிடம் இருந்திட வேண்டும் என்ற, மார்த்தா சி. நஸ்பாம் அவர்களின் 'திறன் வல்லமை அணுகுமுறை' என்ற கட்டுரையில் ஆணித்தரமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனம், இந்திய தண்டனைச் சட்டத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்களும், தண்டனைகளும் என்ற கட்டுரையில், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கான தண்டனைகள் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளன.

தேசியப் பெண்கள் ஆணையத்தின் பெண்களுக்கான சமூக உரிமைகளும், பாதுகாப்பும், அதற்கான சட்டங்கள், மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு பிரகடனங்கள், உடன்படிக்கைகள் மற்றும் இந்திய அரசியலமைப்பு பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் இவையனைத்தும் சாமான்ய மக்களுக்கும் புரியும் வண்ணம் எளிதாக வழங்கப் பட்டுள்ளது.

இந்து திருமணச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தும், இந்திய அரசியல் சாசனம், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி இந்து திருமணத்திற்கான நிபந்தனைகள், மணமுறிவு கோருவதற்கான காரணங்கள், மறுமணம், ஜீவனாம்சம், அனைத்து மதச் சட்டங்கள் போன்ற மிக்கியமானத் தகவல்களும் வழங்கப் பட்டுள்ளன.

மத்திய மாநில சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை மூலம் கிடைக்கப் பெறும் நலிவுற்ற மகளிருக்கான நலத்திட்ட உதவிகள், அதனைப் பெறுவதற்கு அணுக வேண்டிய அலுவலர்களின் பட்டியலும் அதற்கான தகுதிகள் இப்படி பயனுள்ள தகவல்களும் உள்ளடங்கும்.

இறுதியாக தொகுப்பாளரின் பாலின நிகர்நிலைப் புது மொழிகள், இரு பாலர் கல்வி முறையே பாலின நிகர் நிலைக்கு அடித்தளம் என்கிற ஆணித்தரமான வாதங்கள்.ஆக சமூக சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், மாணாக்கர்கள், குடும்பப் பெண்கள் என்று பல தரப்பினருக்கும் பயன் தரக் கூடிய ஒரு கையேடு 'நாமாவோம்' என்ற இப்புத்தகம் என்றால் அது மிகையாகாது.........

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...