Wednesday, April 13, 2011

அறுசுவை அமுதம்

இனிய தமிழ் ‘கர’ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

சித்திரைப் பெண் சிரித்தோடி வரும் திருநாள். சித்திரைத் திருநாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழக்கங்களை நம் முன்னோர்கள் சுவைபட விளக்கியுள்ளனர். அதன் படி கொங்கு நாட்டில், இன்றும் பெரும்பாலானவர்கள் அதனைக் கடைபிடித்து வருகின்றனர் என்றே கொள்ளலாம்.

சித்திரைத் திருநாள்,ஸ்ரீராமபிரான், ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆதி சங்கரரும் அவதரித்த பொன்னான திருநாளாகும்.

முதல் நாளே வாசலில் சாணம் போட்டு மெழுகி, வண்ண கோலமிட்டு, அழகு மலர்களுடன் அலங்காரம் செய்து வைப்போம்.

விடியற்காலை, அதாவது பிரம்ம முகூர்த்த வேளையில் சித்திரைக் கனி மற்றும் பொன் ஆபரணம் வைத்து மஞ்சள் சரக்கொன்றை மற்றும் நறுமணம் கமழும் மலர்களும், மஞ்சள், குங்குமம போன்ற மங்கலப் பொருளும் வைத்து அதன் முகத்தில் தான் முதலில் விழிப்போம்.

காலையில் மங்கல நீராடி, அவரவர் விருப்ப தெய்வங்களை மனதார வணங்கி, அன்று அறுசுவை உணவும் உண்ண வேண்டும். அதாவது, வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களையும் குறிக்கும் வகையில், இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம் மற்றும் கசப்பு என்ற அறுசுவை உணவையும் அன்று உண்ண வேண்டும் என்பர்.

இந்தக் “கர” ஆண்டின் துவக்க நாளை கொண்டாட அறுசுவை உணவின் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.இனிப்பு வகை:


தேங்காய் பர்பி.

தேவையான பொருட்கள் :

1.2 கப் துறுவிய தேங்காய்.

2. 1 கப் பால் கோவா.[சக்கரை இல்லாதது]

3. 1 டே.ஸ்பூன் நெய்.

4. 1 கப் சக்கரை.

5. 2 கப் பால்

6. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்.

7. 1 சில்வர் இலை அலங்கரிப்பதற்கு.

செய்முறை :

1. ஒரு அடி கனமான பாத்திரம் எடுத்து, அதில் தேங்காய் துறுவல், ஏலக்காய் தூள், சக்கரை மற்றும் பால் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடமோ அல்லது செட்டியாகும் வரையோ வைத்திருக்க வேண்டும். நடுவில் கிளறி விட வேண்டும்.

2. கோவாவை அத்துடன் கலந்து, நன்கு கிளறி விடவும்.

3. நெய்யைக் கலந்து, நன்கு கிளறி விடவும்.

4. ஒரு குழி தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் பரப்பி, மேலே சில்வர் பேப்பர் அலங்கரம் செய்து ஆறவிடவும்

பிறகு அதனை தேவையான வடிவத்தில் துண்டு போடவும்.

புளிப்பு :

மாங்காய் பச்சடி :

தேவையான பொருட்கள் :

1 2 கப் பச்சை மாங்கயை சிறு சன்னமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவம்.

2 . 1 சுப் சக்கரை.

3.1 டீஸ்பூன் சீரகப் பொடி.

4. 1 டீபூன் - எள்ளு லேசாக நுணுக்கியது.

5 , 1/2ஸ்பூன் கடுகு.

6. 2 முழு சிகப்பு மிளகாய்

7 . தேவையான அளவு உப்பு

8. பெருங்காயம் ஒரு துளி.

9 .1 டிஸ்பூன் எண்ணெய்.

செய்முறை :

1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் அதில், கடுகு, சீரகப் பொடி, எள்ளு, பெருங்காயம் இவையெல்லாம் போட்டு, சிவந்தவுடன்,

2. அதில் உப்பு மற்றும் மாங்காய்த் துண்டுகளும் போட்டு அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

3. இறுதியாக சக்கரை சேர்த்து, நன்கு கெட்டியாகும் வரை சிறு தணலில் வேக விடவும்.

துவர்ப்பு :

விடாங்காய் பச்சடி :

1. விடாங்காய் ஓடை நீக்கி உள்ளிருக்கும் ஊனை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. அதில் தேவையான அளவு உப்பும் ஒரு பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3. இதை இப்படியே சாப்பிடலாம். அல்லது தேவையானால் தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளலாம்.

கசப்பு:

வேப்பம் பூ ரசம்:

வழக்கமாக ரசம் வைப்பது போல் வைத்து, அதில் வேப்பம் பூவை லேசாக வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அதை ரசத்தில் கொட்ட வேண்டும்.

காரம் :

காண்ட்வி :

தேவையான பொருட்கள் :

1. க்டலை மாவு - 1/4 கிலோ

2. தயிர் - 1/4 கிலோ

3. தண்ணீர் - 500 மி.லி.

4. பச்சை மிளகாய் 4 நன்கு அரைத்தது.

5. சீரகம் - 1/4 ஸ்பூன்.

அலங்கரிப்பதற்கு :

தேங்காய்த் துறுவல் - 1 டே.ஸ்பூன்.

கொத்தமல்லி இழை - 2 டே.ஸ்பூன்.

கடுகு தாளித்தது.

செய்முறை :

1. கடலை மாவை தயிருடன் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

2, அதனுடன், மிளகாய் விழுது, சீரகம், உப்பு, எல்லாம் கலந்து அடுப்பில் சிறு தீயில் வைத்துக் கிளறிவிட வேண்டும்.

3. கெட்டியானவுடன், அதனை ஒரு தட்டில் பரவலாக சன்னமாக வரும்படி ஊற்ற வேண்டும்.

4. ஆறியவுடன், அதனை சுருட்டி ரோல் போல செய்து, தேவையான அளவு கட் செய்து கொள்ளலாம்.

5. அதன் மீது தாளித்த கடுகையும், தேங்காய் துருவலும், மல்லி இலைகளும் தூவ வேண்டும்.



Tuesday, April 12, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 -( 3)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 -( 3.)


மனித உடல் என்பதே ஒரு வேள்விச் சாலை. தூய்மையான அந்த உடலுக்கு, அண்டம் அனைத்தையும் தம்முளவாக்கிய ஆண்டவனும் அடி பணிகிறான். காரணம் அந்த உடலில் கோவில் கொண்டிருந்த உயிரே சாட்சாத் அந்த ஆண்டவன் தானே! இதுவே கயைத் தத்துவம் என்பர்.

Apr 12, 2011

விந்திய மலைச் சாரலுக்கு வடக்கே, மகத நாட்டிலே சம்பகம் என்னும் பெயர் கொண்ட, தேன் சொரியும் மலர்கள் நிறைந்த வனத்திலே, ஆனந்த மலையெனத் திகழும் கோலாகல பர்வதத்திலே இத்திருத்தலம் அமைந்துள்ளது. அரக்கர் குலத்தில் அவதரித்த கயாசுரன் என்ற அசுரனின் பெயரால்தான், இத்தலம் கயை என்று அழைக்கப்படுகிறது.

கயாசுரனின் மெய்யான தவத்தை மெச்சிய காத்தல் கடவுளான விஷ்ணு பகவான், வேண்டிய வரம் அருள்வதாய் உறுதி கொடுத்ததைப் பார்த்த தேவர்கள் அஞ்சி நடுங்கினர். கயாசுரன் அப்படி என்னதான் வரம் கேட்டான்....?


“தேவர்கள், ரிஷிகள்,மந்திரங்கள், துறவிகள் இவர்களைக் காட்டிலும் என் உடல் புனிதமாக வேண்டும், என்னைத் தொடுபவர்களுக்கும் புனிதம் ஏற வேண்டும்” என்பதாகும்.அசுர குலத்தில் பிறந்த ஒருவருக்கு எத்துனை உயர்ந்த குணம்.......!

இவ்வரத்தின் பயனாய், நரகம் என்ற ஒன்றே செயலற்றுப் போய், தூய்மை வரம் சுவர்கத்திலேயே, இட நெருக்கடியை உண்டு பண்ணியதாம்.

’குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பர் பெரியோர்.

பிறவியால் சாதியா? செயலால் சாதியா?

இன்றளவும் விவாதத்திற்குரிய பிரச்சனை இது. வேதியர் குலத்தில் உதித்த இராவணன் தன் செய்கைகளினால் அசுர குலத்தவன் ஆனான்.அசுரர் குலத்தவரான பிரகலாதனோ, தேவர் உலகத்தினராகும் தகுதி பெற்றான். சத்திரிய குலத்தில் அவதரித்த விசுவாமித்திரரோ, பிரம்ம ரிஷியானாரே. அப்படித்தான் கயாசுரனும் தம் வரத்தால் மட்டுமன்றி, விஷ்ணு பகவான் தானமாக கேட்ட தன் உடலையே, நல்ல காரியம் என்பதனால் துளியும் யோசிக்காமல் மிக மகிழ்ச்சியுடன், தன் உடலைக் கீழே கிடத்தினான். அவன் படுத்த அந்த இடம்தான் மகத தேசத்தைச் சேர்ந்த சம்ப காரண்யம் என்ற மதுவனம், கோலாகலம் என்ற மலையைத் தலைக்கு உயரமாகக் கொண்டு, அவன் வேள்விக்குத் தன்னை அர்ப்பித்த இடமே கயை என்னும் சுதார சேத்திரமாகியது.இந்த வேள்வியில் பங்கு கொள்ள தேவர் உலகமே கூடியதாம்.


‘உயிர் ஒடுங்குவதற்கு இறை அனுமதி வேண்டும்’ என்பதும் உயிர் ஒடுங்கிய பின்னும் உடல் ஒடுங்கச் சிறிது நேரம் பிடிக்கும் என்பதையும் அவன் செயல்கள் உணர்த்தும். அந்த நேரத்தில் தேவர்கள் அவன் வேண்டும் வரம் கேட்கச் சொன்ன போதும் அவன் முக்தி வேண்டாமல், உலக நன்மைக்காக,வரம் கேட்டான்.


“ சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும் பூவுலகமும் இருக்கும் வரை எல்லாத் தெய்வங்களும், உருவமாகவோ, அருவமாகவோ இங்கேயே என்னில் உறைய வேண்டும். இந்த, தலம் தன் பெயரில் கயை என்று காலம் முழுவதும் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்பவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் பிரம்ம லோகம் சித்திக்க வேண்டும். அவர்களை எந்த பாவமும் தீண்டக் கூடாது.” என்ற வரம் கேட்டான்.

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார் கல்லால்
பிற வாழி நீந்தலரிது.

என்னும் ஐயனின் குறளுக்கு இலக்கணமாய் கயையில் விஷ்ணு பதம் அமைந்துள்ளது.

நம் முன்னோர்களுக்கு நாம் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையையும், நன்றியுணர்வையும் தெரிவிக்கும் வகையிலேயே, சிரார்த்தம் செய்யப்படுகிறது. நமது முந்தைய மூன்று தலைமுறைகளையும் நினைவு கூர்கிறோம். நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாராவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம்.கயைக்குச் சென்று பிண்டம் போட்டு,நன்றிக் கடன் செலுத்துவது,நம் கடமையாகும்.என்று பெரியவர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.


கயையிலே, தங்கள் முன்னோருக்கு மட்டுமன்றி, உற்றார், உறவினர், நண்பர், பகைவர் என்று எல்லோருக்குமே பிண்டம் போட்டு அவர்களுக்கு நற்கதியை கிடைக்கச் செய்யலாம்.தனக்கும், ‘ஆத்ம பிண்டம்’ போட்டு விஷ்ணு பதத்தில் ஒப்படைக்கலாமாம். இதனால்தான் கயைக்கு இத்துனை மகத்துவம் என்கின்றனர். பிராமணர்களைக் கொண்டு சிரார்த்தம் செய்வதற்கும் ஒரு புராணக்கதை நிலவுகிறது.


பல்குனி நதியில் பொதுவாகத் தண்ணீர் இருப்பதில்லை. ஊற்று நீரில் மூழ்கிப் பிண்டம் போடலாம். அடுத்த படியாக விஷ்ணு பத பிண்டம், பிறகு சிரார்த்தம். அஷய வடத்துக்குச் சென்று பிண்டம் போடுவது வழக்கம். அங்கே சிரார்த்தம் செய்தவருக்குக் கயை வாழ் அந்தணர்கள் மாலை போட்டு பித்ருக்கள் சுவர்க பதம் அடைந்ததாக்ச் சொல்லி வாழ்த்துவார்கள்.


கயை சென்று வருகிறவர்கள் அஷய வடத்தின் அடியில் ஒரு காய், ஒரு கனி, ஒரு கீரை இவற்றை உட்கொள்வதில்லை என்று விரதம் மேற்கொள்ள வேண்டுமாம்.ஆனால் நாங்கள் சற்று வித்தியாசமாக ஒரு முடிவு எடுத்தோம். அதாவது, அவரரிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள் ஏதாவதை விட்டு வருவது என்று. நான் சற்று அதிகமாகக் கோபப்படுவேன். அதை விட்டு விடுவது என்று முடிவு செய்து, முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.அதே போல் என் கணவரும், வியாபாரத்தில் இனி கடன் கொடுப்பதும், வாங்குவதும் முடிந்த வரை தவிர்ப்பது என்ற முடிவும் எடுத்து விட்டு வந்தோம். இன்றும் முடிந்த வரை காப்பாற்றுகிறோம்.


இரவு விஷ்ணு பதம் சென்று அபிசேகம் ஆகும் பொழுது பார்த்தால் விஷ்ணு பதம் பதிந்திருப்பதைக் கண் குளிர தரிசனம் செய்யும் பேரும் பெறலாம். ஆனால் நாங்கள் மதியமே தரிசனம் முடித்து கிளம்பி விட்டோம். பல வண்ண மலர்கள் மற்றும் குங்குமத்தினால் நிறைந்திருந்த விஷ்ணுபாத தரிசனம் பெற்று மன நிறைவுடன் புத்த கயா கிளம்பினோம்.

தொடரும்.


--
Apr 12, 2011
Apr 12, 2011
by coral shree







--



Sunday, April 10, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 4


தோள் கொடுக்கும் தோழமை பல நேரங்களில், மலை போன்ற துன்பங்களைக்கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் பனி போல உருகி ஓடச் செய்துவிடும்.
கணக்குப் பார்த்து வரும் காதலைப் போல, சூழல் பார்த்து வரும் நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நட்பில் பல வகை. தனக்கு மட்டுமே ஏவல் புரியும் சேவகனாக, தன் பெருமையைப் பறை சாற்றும் மத்தளமாகவும் இருந்தால்தான் அந்த நட்பு நிலைக்க முடியும் என்ற அவல நிலையுடைய நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல நட்பு என்பது, சிலருக்கு வெகு யதார்த்தமாக இளமைக் காலம் தொட்டே, தானாகவே சுகமான சுமையாக அமைந்துவிடும். ஆனால், பெரும்பான்மையோருக்கு, பல முறை சூடு பட்டும், வாழ்நாளில் பெரும் பகுதி தேடலிலேயே கரைந்து போய் விடுவதும் உண்டு. ஒருவர் வாழ்க்கையில், நல்ல பெற்றோர், நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கட்பேறு அமைவது எத்துனை அவசியமோ, அதைவிட ஒரு படி மேலாக, அமைதியான வாழ்க்கைக்கு நல்ல ஆத்மார்த்தமான நட்பும் அவசியமாகிறது. எந்த விதமான துயரங்களையும் கடக்கச் செய்யும் அசுர பலம் வாய்ந்தது நல்ல நட்பு.
அந்த வகையில் மாறன் பாக்கியசாலி என்றே சொல்ல வேண்டும். பள்ளி இறுதியாண்டில் முதன் முதலில் ரம்யாவைச் சந்தித்தான். தந்தையின் அலுவல் மாற்றத்தின் காரணமாக வட நாட்டிலிருந்து சென்னை வந்து சேர்ந்தவள். அதுவும் பள்ளி இறுதி ஆண்டு ஆனபடியால், டென்சனான ஒரு சூழலில் இவர்களின் முதல் சந்திப்பு…
பள்ளி இறுதி ஆண்டு, பிராஜெக்ட் வேலைகள் எல்லோரும் முடிக்கப் போகும் தருணத்தில், அப்போதுதான் புதிதாக வந்து சேர்ந்திருந்த ரம்யா, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல தவித்துக்கொண்டிருந்த நேரம். ஆசிரியரும் மற்ற மாணவர்களின் உதவியைப் பெற்று பணியை முடிக்கச் சொன்னாலும், ரம்யாவின் நுனி நாக்கு ஆங்கிலமும், ஆளை அடித்து வீழ்த்தும் அழகும் அவளிடம் நெருங்கிப் பழக, மற்ற மாணவர்களுக்கு சங்கோஜத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதே காரணம் மாறனுக்கு அவள் மீது பற்றும் ஒரு பாசமும் ஏற்படுத்தியது.
ஒரு நல்ல நட்பூவாக மலர்ந்தது, அவர்கள் சிநேகம். அதற்குப் பிறகு போட்டி நல்ல முறையில் இருந்தபடியால் இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, கல்லூரியும் மற்றும் பாடப் பிரிவும் இருவரும் ஒன்று போல் தேர்ந்தெடுத்துச் சேர்ந்த போது மீண்டும் போட்டி தொடர்ந்தது.
ரம்யாவின் சுறுசுறுப்பும் எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவளைப் படிப்பில் முதன்மை நிலையில் வைத்திருந்தது. மாறனும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை. இருவரும் இளங்கலை பொறியியல் படித்து முடித்து கேம்பஸ் நேர்முகத் தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தபடியால், இருவரும் ஒரு பிரபலமான கம்பெனியில் பணியில் அமர்ந்ததும், எல்லாம் விளையாட்டுத்தனமாக நடந்து முடிந்துவிட்டது.
இன்று இருவரும் ஒரே பிராஜெக்டில் பணி புரிந்தாலும், ரம்யாவிற்கு நல்ல தங்கும் இல்லம் ஏற்பாடு பண்ணிக் கொடுப்பதில் ஆரம்பித்து, ஒரு நல்ல பாதுகாவலனாக இந்த நட்பு மணம் வீசிக் கொண்டிருப்பது மற்ற நண்பர்களும் ஆச்சரியப்படும் ஒரு விசயமாகும்.
இரவு வெகு நேரம் தூங்காமலே ஏதேதோ, நினைவுகளின் அழுத்தம் கண்களில் குடிகொள்ள, காலை அசந்து உறங்கிவிட்டிருந்தான் மாறன்.
நல்ல ஆழ்ந்த உறக்கம், தொலைபேசி மணி ஒலித்தது வெகு தூரத்தில் கேட்டது.
“ஹலோ, மாறன்…. என்னப்பா இன்னும் துயிலெழவேயில்லையா…மணி என்னன்னு பார்த்தாயா?”
கண்ணைக் கசக்கிக்கொண்டு மணியைப் பார்த்தவன், அடடா, “ஒன்பது மணியா ஆகிவிட்டது” என்று பரக்கப் பரக்க எழுந்து காலைக் கடன்களை முடித்து அலுவலகத்திற்குத் தயாரானான்.
வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டி, அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தது. இரவு ஒரே நேர்க்கோட்டில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான வண்டிகள் இடையில் அங்கங்கே உறுவி எடுக்கப்பட்டிருந்தன. முழுவதுமாக வெண்பனி சூழ்ந்த ஒரு பனிக் குன்றாகக் காட்சியளித்தது… வழக்கமாகக் காலையில் சீக்கிரமாகவே அலுவலகம் கிளம்புபவனுக்கு.இந்தக் காட்சி சற்றே அரிதானது…….
சில்லென்ற குளிர்க் காற்று பலமாக வீச, தரையில் படிந்திருந்த வெண்பனியின் சறுக்கலில் மாட்டி விடாத வண்ணம், சர்வ எச்சரிக்கையுடன், அடி மேல் அடி வைத்து…. காலையில் இந்த அவசரத்தில், வெண்பனிக் குன்றாகச் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகளை விலக்குவது மிகச் சலிப்பான காரியமாக இருந்தது….. வேறு வழியில்லை என யோசித்துக்கொண்டே மளமளவெனக் காரியத்தை முடித்து வண்டியைக் கிளப்ப, பத்து நிமிடம்……..
காரிலேறி வழக்கம் போல ஒரு கையில் பிரெட்டையும் மறு கையில் ஸ்டியரிங்கையும் பிடித்துக்கொண்டு, காலை உணவை ஆரஞ்சு பழச் சாறுடன் முடித்துக்கொண்டான். ரம்யாவிற்கு போன் செய்து, தான் வழியில் இருப்பதைக் கூறலாம் என்று டயல் செய்தால், அவள் பிசியாக இருப்பது தெரிந்தது.
அலுவலகத்தில் நுழையும் போது, சற்று, மற்ற விசயங்களின் பாதிப்பு குறைந்தது போல ஒரு உணர்வு இருக்கத்தான் செய்தது.
“ஹாய், என்னப்பா…… இவ்வளவு லேட். எப்பவும் பங்க்சுவலா இருப்பாயே….” என்றவள், அப்போது தான் அவன் கண்களை நேராகப் பார்த்தவள், ஒரு குழப்பத்துடன் உற்று நோக்கினாள்.
அவன் பார்வை சற்றே தாழவும், ஏதோ உணர்ந்து கொண்டவளாக,
“என்னப்பா….. என்னாச்சு. அப்பா ஏதும் பேசினாரா? ஏன் அவந்திகாவைச் சந்திக்கச் சென்றாய் என்று கோபித்துக் கொண்டாரா…?” என்றாள்.
ஏனோ ரம்யா இவ்வாறு கேட்டவுடன், அவனையறியாமல், கண்கள் கலங்கி உள்ளம் பொங்க ஆரம்பித்தது. தான் இருக்கும் சூழலின் நிலை உணர்ந்தவனாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள பெரிதும் முயன்றான். இதை உணர்ந்த ரம்யா,
“சரி வா மாறன், கேண்டீன் வரை சென்று வரலாம். இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை” என்றாள். அவனுக்கும், தன் மனத்தில் உள்ளதைக் கொட்டினால் தான் அமைதி பெற முடியும் என்ற நிலை.
“சரி இப்ப சொல்லு, என்ன நடந்தது?” என்றாள் கேண்டீனில் ஒரு சேண்ட்விச் வாங்கி கையில் வைத்துக்கொண்டு.
எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்று எதுவுமே புரியாமல், ஒரு வினாடி தவித்தவன், நிதானமாகப் பேச ஆரம்பித்தான். பணி நேரமாக இருப்பதால் சுருக்கமாக, வேகமாகச் சொல்ல வேண்டுமே என்றும் நினைத்துக்கொண்டான்……..
“என்ன சொல்வது ரம்யா, ஆரம்பத்திலிருந்து நான் விரும்பிய அனைத்தும், தடையில்லாமல் கிடைத்து வந்த எனக்கு, வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் சோதனை வந்துவிட்டதே” என்றான் கண்கள் கலங்க.
அவன் முகத்தில் இருந்த வேதனையையும் கலங்கிய அந்தக் கண்களையும் காணச் சகியாதவளாக,
“ஹேய், என்னப்பா….இது? நீ இவ்வளவு மனம் நொந்து நான் பார்த்ததில்லையே. என்ன ஆச்சு, சொல்லு. எதுவானாலும் சரி பண்ணிடலாம். பதற்றம் இல்லாமல் அமைதியாக இரு மாறன். எந்தப் பிரச்சினையயும் நிதானமாகக் கையாண்டால், சரியான தீர்வு உண்டுன்னு நீயே அடிக்கடி சொல்லுவியே… இப்ப என்ன ஆச்சு மாறன், உனக்கு…?”
“இல்ல ரம்யா. இந்த விஷயத்தில் என்னால் அப்படி இருக்க முடியலை. என்னமோ தெரியல, அப்பா அவ்வளவு ஈசியா சொன்ன அந்த விசயம் என் மனத்தை இவ்வளவு பாதிக்கும்னு நானே நினைக்கல…..”
“அப்படி என்னதான் சொன்னாருன்னு சொல்லேன்..”
“திருமணப் பெண் போட்டோ மாறிப் போச்சுப்பா……. அப்படீன்னு சர்வ சாதாரணமாச் சொல்றார், ரம்யா…… அவந்திகா என் மனத்தில் சிம்மாசனமிட்டிருப்பதையும், அவள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்துக்கொண்டு வருவதையும் அவரிடம் நான் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது?”
“என்னப்பா…இது. ஏன் உங்கப்பா இப்படி இருக்கார்… இவ்ளோ ஈசியா போட்டோ மாறிப் போச்சுன்னு சொல்லியிருக்கார். நீ என்ன சொன்னே அவர்கிட்டே……?”
“என்ன சொல்றது ரம்யா…. எப்படி சொல்றது?”
“அட போப்பா… சொல்ல வேண்டிய நேரத்தில சொல்லாம இருக்கறது பெரிய தப்பாப் போயிடும். உனக்கு சிரமம்னா சொல்லு, அப்பாகிட்ட நான் பேசறேன்”
“இல்ல ரம்யா. அவந்திகாவோட ஜாதகம் எனக்குப் பொருத்தம் இல்லையாம். அதை அவர்கள் வீட்டில் திருப்பிக் கொடுத்துவிட்டாராம். அன்று ஏதோ அவசரத்தில் அவந்திகாவோட போட்டோவும் பயோடேட்டாவும் தவறி அனுப்பிட்டராம்.”
“சரி அதனால் என்ன? இப்ப திரும்பப் போய், உனக்கு அந்தப் பெண்ணை ரொம்பப் பிடித்த விசயம் பற்றிக் கூறி, மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டியது தானே”
“இல்லை ரம்யா, இப்ப பார்த்திருக்கிறது, என் ஒன்று விட்ட அத்தைப் பெண்ணை. அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த நேரத்தில் நான் எப்படி அவந்திகா பற்றிச் சொல்வது..?”
“ஓ, மணியாகிவிட்டது. சீட்டிற்குப் போகலாம் வா மாறன். மதியம் இது பற்றி பேசலாம். நீ ஒன்றும் கவலைப்படாதே. அவந்திகா உனக்குத்தான். இல்லாவிட்டால் அவள் ஏன் உன் கண்ணில் பட வேண்டும். இவ்வளவு நெருங்கி வர வேண்டும்?”
ரம்யாவின் வார்த்தைகள் சற்றே தெம்பளிக்கவும், உற்சாகத்தை வரவழைத்துக்கொண்ட மாறன், இருக்கைக்குச் செல்லத் தயாரானான், அப்பா அங்கே பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருப்பது தெரியாமலே…….
(தொடரும்………

Tuesday, April 5, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - 6


”மனிதர்கள் தங்களுடைய மனதின் உள்ளார்ந்த தன்மைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கையின் புறத்தன்மைகளை மாற்றிக் கொள்ள முடியும்” - வில்லியம் ஜேம்ஸ்.

அதாவது புற உலகம் என்பது நம்முடைய உள்மனத்தின் எதிர்வினையான பிரதிபலிப்பாகவே என்றென்றும் இருக்கிறது.

இதை உணர்ந்து கொள்ளும் போது சக மனிதர்களுடன் நம் பழக்கம் அன்புடையதாகவே இருக்கிறது.


சரி விசயத்திற்கு வருவோம். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் குறிப்பிட்ட நேரமே செலவிட முடிந்தது. காரணம் அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய உத்தர கோசமங்கை கோவிலில் திருவாசகம் முற்றோதல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. திருநெல்வேலியிலிருந்து 100 பெண்களும், ஆண்களும் வந்து திருவாசகம் முற்றிலும் ஓதுகிறார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. அதனால் விரைவாக வர வேண்டியதாகி விட்டது.



ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காலை 7 மணியளவில் கிளம்பி உத்தர கோச மங்கை 8.40 ம்ணியளவில் வந்து சேர்ந்துவிட்டோம்.



திரு உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவில், சேது வள நாட்டின் தலைநகரான இராமநாதபுரம் நகருக்கு தென்மேற்கே 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மங்களநாயகி அம்மன் சமேதராய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவில் மிகவும் பழமையும் , தொன்மையும் வாய்ந்தது. பாண்டி நாட்டு தலங்கள் 14 தோன்றும் முன்பே ஓர் இலந்தைத் தருவின் அடியில் சுயம்புவாக முளைத்த தூய மூர்த்தியாகிய திருக்கோவிலாகும்.



உத்தரம் என்றால் உபதேசம். கோசம் என்றால் ரகசியம். அதாவது உயர்ந்த தரமான வேதாகம ரக்சியத்தை தன்னில் பாதியாய் அமைந்துள்ள உமாதேவிக்கு உபதேசம் செய்த புண்ணிய தலமாகும்.

தாதாடு பூஞ்சோலை தத்தாய் நமையாளும்
மாதாடு பாகத்தன் வாழ் பதி என
கோதாட்டி பார்மேல் எல்லோரும் சிவபுரம் போற்
கொண்டாடும் உத்தரகோச மங்கை ஊர்


சிவபெருமானுக்கு சொந்த ஊரும் தங்கும் இடமும் பார்மேல் சிவபுரம் திரு உத்திரகோச மங்கையே என்று பாடுகிறார். காகபுஜண்ட மகரிஷிக்கு கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபம் விலகிட வழிபட்ட திருக்கோவிலாகும்

.சிவபுரம், தெட்சிண கைலாயம், ஆதி சிதம்பரம் என்னும் பல சிறப்பு பெயர்களும் கொண்ட இக்கோவில் மிகப் பிரம்மாண்டதாகவும், பழமை வாய்ந்ததாகவும் உள்ளது. விநாயகர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் இடம் மாறி அமைக்கப்பட்டுள்ளது கோவில் வாசலில் ப்ரும்ம தீர்த்தம் அமைத்து பிரம்மா வழிபட்டதும் சேதகை என்று சொல்லக்கூடிய தாழம்பூவிற்கு சாப விமோசனம் செய்தமையால் இத்திருக் கோவிலில் மட்டும் சுவாமிக்கு தாழம்பூ சாத்துப்படி செய்யப்படுகிறது.

காலை நேர வழிபாடு மனதிற்கு மிக இதமாக இருந்தது. மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், மயன், மண்டோதரி, பானாசுரன், வேத வியாசர், மிருகிண்டு மகரிசி, பானாசுரன், போன்றவர்கள் வழிபட்ட சுயம்புலிங்கத்தைக் காண கண் கோடி வேண்டும்.

உலகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்த பச்சை மரகதத்தால் ஆன ஸ்ரீநடராஜர் திருக்கோவில் இங்கு உள்ளது. பொதுவாக பெரும்பாலான ஆலயங்களில் நடராஜர் சன்னதி, ஆலயத்திற்குள்ளேயே தனிச்சந்நிதியாகவே இருக்கும். ஆனால் திரு உத்திரகோசமங்கை ஆலயத்திலோ, ஒரு ஆலயத்திற்குள்ளேயே, மற்றொரு திருக்கோவிலாக கருவரை,அர்த்த மண்டபம், மஹா மண்டபம், பிரகாரம் விமானங்கள் உள்பட தனிக் கோவிலாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு அருள்பாலிக்கும் 6 அடி உயரமுள்ள ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சந்தனக் காப்பிட்டு, மார்கழி மாத திருவாதிரை தினத்திற்கு முந்தைய நாள் சந்தனக் காப்பு களையப் பெற்று அபிசேக வேளையில், பச்சை வண்ண மேனியாய் தரிசிக்கும் வாய்ப்பு காணக் கிடைக்காத பெரும் பேராகும்.

இவ்வாலய ஸ்ரீநடராஜப் பெருமான் நவரத்தினங்களில் ஒன்றான மரகதத்தால் ஆனதால் இத்தலத்திற்கு ரத்தின சபை எனவும் சிறப்புப் பெயருண்டு.சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூசை சமயம் தனந்தோறும் பாடப்பட்டுவரும் ‘திருப்பொன்னூசல்’, மாணிக்கவாசாகப் பெருமானால், இந்த இடத்தில் தான் இயற்றி பாடப் பெற்ற சிறப்பையும் பெற்றது. ம்ணிவாசக்ப் பெருமானால் பாடல் பெற்ற இத்தலம், அவர்தம் திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புற புகழப்பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு சிறப்புக்களையுடைய இக்கோவிலை சுற்றி வலம் வரும் போதே மனதில் ஒரு ஆழ்ந்த அமைதி இருந்தது அனைவரின் முகத்திலும் அது பிரதிபலிக்கவும் செய்தது!

காலை சிற்றுண்டி எங்களுக்கும், மூற்றோதல் செய்ய வந்த குழுவினருக்கும் ஏற்பாடாகி இருந்தது. காலை சிற்றுண்டியை இனிதே முடித்து அனைவரும் முற்றோதல் நிகழ்ச்சிக்குத் தயாரானோம். இது மிக அருமையான ஒரு அனுபவமாகவும் அமைந்து போனது எங்களுக்கு........



400 பக்கங்கள் கொண்ட , மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட திருவாசக உரையின் ஆசிரியரான, ‘பெரிய புராணப் பேரொளி’ எனும் பட்டம் பெற்ற ஐயா தங்க விசுவநாதன் அவர்களின் தலைமையில் திருவாசக முற்றோதல் நிகழ்ந்தது சாலப் பொருத்தமாகவே இருந்தது.



சராசரியாக ஒரு 150 பெண்களும், 50 முதல் 60 ஆண்களும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை போன்று ஒன்று கூடி திருவாசகம், ஐயன் மனிவாசகப் பெருமான் பாடிய அதே தலத்தில் பாடியது ஒரு ஆன்ந்த எல்லைக்கே கொண்டு சென்றது எனலாம். ஆங்கிலத்தில் ‘Ecstasy', என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் உணர்வுப்பூர்வமாக அறிந்தேன் என்றால் அது மிகையாகாது.



ஆரம்பிக்கும் முன் சிவதீக்கை வைத்திருந்த அன்பர்கள் அனைவரும் அங்கேயே ஆண்டவன் திரு முன் சிவபூசை செய்து முடித்து பின்பு முற்றோதல் ஆரம்பித்தனர். இன்று கல்லூரி செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும், நாகரீகமாக உடை உடுத்தி அலங்காரம் செய்து கொண்டு சினிமா, பொழுது போக்கு அமசங்கள் என்று அலைவதைத்தான் அதிகமாகக் காணமுடிகிறது. இதற்கு மாறாக, பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு இந்த அளவிற்கு பக்தி வருவது சாத்தியமா என்று ஆச்சரியப் படும் வகையில் ஒரு இளைஞன், பெயர் மணிகண்டன் என்று
நினைவு, சிவ பூசை செய்வதோடல்லாமல், கையில் சிவலிங்கத்தை பெரிதாக பச்சை குத்திக் கொண்டு, அனைவருக்கும் ஓடி ஓடி உதவி செய்து கொண்டு........கண் கொள்ளா காட்சிதான்.



காலை 9.30 மணியளவில் ஆரம்பித்த முற்றோதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இடையில் , 12.30 மணியளவில், ஸ்படிக லிங்காபிசேகம் நடை பெறப் போவதாக அறிந்து நாங்கள் அந்த திருக்காட்சியை நாடி எழுந்து விட்டோம். ஆனால் முற்றோதல் குழுவினர் மட்டும் கருமமே கண்ணாயினராக விடாமல் திருவாசகம் ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அபிசேகம் முடிந்து திரும்ப வந்து முற்றோதலில் கலந்து கொண்டோம். இருந்தாலும் முழுவதும் முடிவதற்கு நீண்ட நேரம் ஆன படியால் எங்கள் பயணம் தொடர நாங்கள் முற்றோதலை முழுவதும் முடிக்க இயல்வில்லையே என்ற குறை இருக்கத்தான் செய்தது..............

அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது மாணிக்கவாசகர் அவதரித்த தலமான திருவாதவூர். செல்லும் வழியில் திருப்பூவணநாதரை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும். மாலை நான்கு மணியளவில் திரு உத்தரகோசமங்கையிலிருந்து கிளம்பினோம்.



திருப்பூவணம், வைகை ஆற்றின் தென்கரையில் மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.



திருப்பூவணநாதர் திருக்கோவில், வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள மிகப்பழமையான பாடல் பெற்ற தலமாகும்.திருஞானசம்பந்தப் பெருமான் திருப்பூவணநாதரை வழிபடும் பொருட்டு, அம்பாளின் தபசு செய்த இடமான ஆடித்தபசு மண்டபத்திலிருந்து வடகரையிலுள்ள திருப்பூவண நாதரை வணங்கி வழிபடும் போது ஆற்று மணல்களெல்லாம் சிவலிங்கமாகக் காட்சி கொடுக்க திருஞானசம்பந்தரோ செய்வதறியாது அங்கிருந்தே வழிபட சிவபெருமான் அருளால் நந்தியெம்பெருமான் தலை சாய்த்து ஐயனின் காட்சி கிடைக்க அருள் புரிகிறார்.

சிவலிங்கத்திற்கு வலப்புறம் அம்பாள் சந்நதியும் எதிர்புறம் தீர்த்தமும் உள்ளன. சுயம்புலிங்கமான பூவணநாதர் புட்பவணநாதர் என்றும் அம்மன் சௌந்தரநாயகி, அன்னபூரணி, மின்னம்மை என்ற திருப்பெயருடன் அருள்புரிகின்றனர். நேரம் மிகக் குறைவாக இருந்த காரணத்தினால் வெகு சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

திருப்பூவணநாதரின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு மனநிறைவுடன் கிளம்பி, இரவு 8 மணியளவில் திருவாதவூர் வந்து சேர்ந்தோம். அங்கு எங்களுக்காக அவ்வூர் மக்கள் பல்ரும், தேவார ஓதுவார்களும் காத்துக் கொண்டிருந்தனர்.


மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த திருத்தலம் என்ற உணர்வே மெய்சிலிர்க்கச் செய்தது. திருவாசகம் எனும் தேனை வழங்கிய மணிவாசகப் பெருமான் ஒரு மிகச் சிறந்த ஞானாசிரியர், தத்துவப் பேராசான், சிவஞானச் செல்வர் என்று இன்னும் பலவாறு போற்றிப் புகழப்படுபவர். சிந்தைக்கினிய, செவிக்கினிய பாடல்கள் மூலம் கல் மனமும் கரையச் செய்து கடவுளுக்கும் உயிர்க்கும் உறவுப்பாலம் அமைத்தவர்.

நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க !
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க !


மணிவாசகப் பெருமானின் அவதரிப்புத்தலமான திருவாதவூர், செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தலைநகரமாகிய மதுரையம்பதிக்குப் பதினைந்து கல் தொலைவில் அமைந்துள்ளது. இவருடைய தாய் சிவஞானவதி அம்மையார் மற்றும் தந்தையார் ஆதிசைவ மரபினரான சம்புபாதசிருதர் ஆவர்.

கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கிய மாணிக்கவாசகர் தம் பதினாறு வயதிற்குள் எல்லா நூல்களிலும் வல்லவராக சிறந்து விளங்கியதைக் கண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் அவரைத் தன் முதலமைச்சராக்கி, ‘தென்னவன் பிரம்மராயன்’ என்ற சிறப்புப் பட்டமும் வழங்கிச் சிறப்பித்தான். ஆனால் அவர்தம் மனமோ, மாதொரு பாகன்பால் மட்டில்லாப் பேரன்பு பூண்டொழுகியது.

ஐயா தங்கவிசுவநாதன் அவர்களின், திருப்பெருந்துறை சொற்பொழிவு நினைவில் வந்தது. அடியார் துன்பம் பொறாத ஆலவாய் அண்ணல், நரிகளைப் பரியாக்கித், தேவர்களைப் பாகர்களாக்கித் தாம் குதிரை வணிகரைப் போலப் பாய் பரிமேல் அமர்ந்து குதிரைப் படைகளுடன் மதுரை வந்து பாண்டியனிடம் ஒப்படைத்த வரலாற்றை அழகுற விளக்கினார்.


ஆண்டவனை அடையும் ஒரே வழி அவன் மீது மாறாத ஆழ்ந்த அன்பு ஒன்றேதான், என அவர் எளிமையாக விளக்கிய பாங்கு அனைவரையும் ஈர்த்தது. ஆம் பக்தி என்பதற்கு எத்தனையோ தத்துவங்களும், விளக்கங்களும், வியாக்கியானங்களும் கூறினாலும், அவையெல்லாம் ஆன்றோர்களும், சான்றோர்களும் மட்டுமே கடைப்பிடிக்கக் கூடியதாகவே உள்ளது. ஆனால் சாமான்யர்கள் ஆண்டவன் மீது பக்தி செலுத்த வேண்டுமானால், எங்கனம் அது சாத்தியம் ? அதைத்தான் ஐயா அவர்கள் எளிதாக புரியும் வண்ணம், மாணிக்கவாசகப் பெருமான் ஆண்டவன் மீது கொண்ட மாறாத பக்தி அவரை ஆண்டவனை நோக்கி அடி எடுத்து வைக்க வைத்தது. அவர் ஆழ்ந்த பக்தி என்ற அன்புடன் ஒரு அடி எடுத்து வைத்தால் ஆண்டவன் எட்டு அடி எடுத்து வைப்பானாம். அப்படித்தான் கைலாயத்திலிருந்து வந்த சிவனாரும், மதுரையிலிருந்து வந்த மனிவாசகரும் ஒன்றாகச் சந்தித்தனர். அந்த ஆழ்ந்த பக்தி ஒன்று சேர்த்தது.

கண்ணுக்குத் தெரிவது பருப்பொருள். நுண்மையும் பருப்பொருளும் சேராது. நுண் உடம்பு, ஒளி உடம்பு கண்ணுக்குத் தெரியும், ஆனால் கையால் ஸ்பரிசிக்க முடியாது. மணிவாசக்ப் பெருமானுக்கு மானுடமாக வந்து ஒளி செய்தார் தன்னையே ஒளிப்பொருளாக ஆக்கினார்.மணிவாசகப் பெருமானின் அன்பை நுகரும் பொருட்டேதான், இமய மலையிலிருந்து ஓடோடி வந்தாராம் அந்த சிவ பெருமான் !
இதே அன்புதான், காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனி வழங்கச் செய்தது. அதன் மூலம் அவரை ஆட்கொண்டது...ஆக அன்பில்லாமல் இன்பம் வராது...அது ஆண்டவனே ஆனாலும். அன்பு இல்லாது வந்த இன்பமும் நிலைக்காது !அதாவது அன்பு எனும் அந்த மொழி ஒரு மௌன மொழியாம். தந்தியில்லாத கம்பியைப் போன்றது, உள்ளத்து உணர்வுகள் !
மானுட ஆக்கை என்பது இறைவன் கொடுத்தது. அதைத் தன்னைப் போல ஒளி வடிவாக, பேரருள் வடிவாக மாற்றுவதற்காகவே படைக்கப்பட்டது. ஆண்டவனின் திருவருளை எண்ணி வியந்து 561,பாடல்கள் பாடி தம் அன்பை வெளிப்படுத்தினார் மாணிக்க வாசகர்.

அவருடைய பிறந்த ஊரில் அவருக்கு கோவில் சமீப காலங்களில் எழுப்பப்பட்டுள்ளது.இந்த அருமையான தலத்தில் மனமும், உணர்வும் ஒன்றுபட, அனைவரும் மாணிக்கவாசகரையும் வணங்கி வழிபட்டு, அங்கேயே எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவை உண்டு சுவைத்து, அவர்களுக்கு நன்றி பாராட்டிவிட்டு, காவிரிக்கரை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு 9 மணியளவில்தான் அங்கிருந்து கிளம்பினோம்.வழியில் ஆண்டவனின் அருள் வடிவத்தை தியானித்தவாறு ஊர் வந்து சேர்ந்தோம்!.

தொடரும்.

Monday, April 4, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 3

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!

மாறனுக்கு போனை எடுக்கும் போதே ஏதோ பதட்டமாகத்தான் இருந்தது. அவள் நல்ல பதிலாகச் சொல்ல வேண்டுமே கடவுளே என்று உள்ளூர வேண்டிக் கொண்டேதான் போனை ஆன் செய்தான்.

ஹலோ, நீங்கள் சற்று முன் பேசியவர்.......

’ஹலோ, யெஸ், நான் மாறன், ஃபிரம் சென்னை’,

’ஓகே, ஓகே, சாரிங்க....அப்பா இந்த பிரபோசல் சரியா வரலே என்று சொன்னார்கள். ஏதோ ஜாதகத்தில் பிரச்சனை , பொருத்தம் சரியாக இல்லை என்றார்கள். மன்னிக்கவும்’ என்றாள்.

‘ ஹலோ, இல்லைங்க, என் அப்பா அப்படி ஒன்றும் சொல்லவில்லையே. ஜாதகமும் சரியாக இருக்கிறது, சொந்தமும் வருகிறது, என்றுதானே சொன்னார்கள்’, என்றான் அவசரமாக, எங்கே அவள் அழைப்பைத் துண்டித்து விடுவாளோ என்ற பயத்தில்.......’

’ம்ம் ..இல்லை அப்படி இருந்தால் , அப்பா சொல்லியிருப்பாரே.....சாரி’, என்று தயக்கமாகச் சொல்லிக் கொண்டே துண்டித்து விட்டாள் இணைப்பை.

மாறனுக்கு இது சற்றும் எதிர்பாராத திருப்பம்.அவனால் நம்பவே முடியவில்லை. தவறு எங்கு நடந்திருக்கும் என்று கூட யூகிக்கும் மனநிலை இல்லை அவனுக்கு. எதற்கும் அப்பாவிற்கு போன் செய்யலாம் என்று முயற்சி செய்தான். அவர்களுக்கு எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணமே தோன்றியது.

“ தற்போது நீங்கள் டயல் செய்யும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் ”, என்று அப்பாவின் செல்பெசி மேலும் குழப்பத்தையே எற்படுத்தியது

.சே....ரொம்பவுந்தான் அவசரப்பட்டுவிட்டோமோ. இவ்வளவு தூரம் வந்தது வீணாகிவிட்டதோ என்று மனம் தவிக்க ஆரம்பித்தது.இடையில் என்ன நடந்திருக்கும் என்றே தெரியவில்லையே. அப்பா சொன்ன பிறகுதானே தாம் மேற்கொண்டு ஒரு ஆர்வக் கோளாரில் கிளம்பி இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. இப்படி நடுத் தெருவில் நின்று புலம்பும் படி ஆகிவிட்டதே. ஆனாலும் இன்னும் அவந்திகாவை வேற்று மனுஷியாக எண்ணி ஒதுங்க முடியவில்லையே! மன மேடையில் சிம்மாசனம் போட்டல்லவா ஏறி அமர்ந்து கொண்டிருக்கிறாள்.

சாலையின் இரு மருங்கிலும் அழகான பைன் மரங்களின் அணிவகுப்பு. பசுமையான அந்தமரங்களைப் பார்க்கும் போது லேசாக ஒரு நம்பிக்கை ஒளியும் வீசத் தொடங்கியது. ஆம் இது ஏதோ,தற்காலிகத் தவறாகத்தான் இருக்கும். விரைவில் மாறும், என்ற நம்பிக்கையும் துளிர்விட, அப்போது தான், தான் ரெஸ்ட் ஏரியாவில் நின்று கொண்டிருப்பது நினைவிற்கு வர, கழிவறைக்குச் சென்று முகம் கழுவி, புத்துணர்ச்சியுடன், அங்கிருந்த ஒரு பெரிய பெட்டிக் கடையில் சென்று, கொரிப்பதற்கு, சிப்ஸிம் கோக்கும் வாங்கிக் கொண்டு தன்னுடைய உல்லாச உந்தை நோக்கி வந்தான்.

மனம் சற்று தெளிவானதால் அவந்திகாவிற்கு திரும்பவும் பேசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.அவள் ஏதாவது முகத்தில் அறைந்தாற்போல பேசிவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் ஒரு புறம் இருந்தாலும், வேறு வழியில்லாமற் போனது அவனுக்கு.

‘ஹலோ, யெஸ்....’

‘ஹலோ, நாந்தாங்க சேம் மாறன் ஃபிரம் சென்னை’

‘ம்ம்..சொல்லுங்கள். என்ன விசயம்,’ என்றாள், பேச்சை அதிகம் வளர்க்க விரும்பாதவளாக.

‘ இல்லை, நான் இப்போது நியூ ஜெர்சியிலிருந்து, உங்களைப் பார்க்க வேண்டுமென்றே, இவ்வளவு தொலைவு வந்திருக்கிறேன். நம் பிரபோசல் நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாக என் அப்பா சொன்னதால் தான் நான் கிளம்பி வந்துவிட்டேன். உங்க அப்பா, ஏதோ அவசரத்தில் சரியாகப் பார்க்காமல் சொல்லியிருக்கலாமே’ என்றான் பெருந் தயக்கத்தோடு.

‘ அப்படியெல்லாம் இல்லை. அப்பா ரிலாக்ஸாக நாளிதழ் படித்துக் கொண்டிருந்த வேளையில் தான் நான் பேசினேன். அதனால் தவறு நேர வாய்ப்பில்லை.உங்கள் பக்கம் ஏதோ தவறு நடந்திருக்கலாமே.....’ என்றாள்

ஏனோ அவனுக்கு இந்த பதிலில் உடன்பாடு இல்லை. இதே போக்கில் இந்த நல்ல காரியம் குறித்து, பேசுவதில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், வேறு வழியிலலாத நிலையில்,

‘ இல்லைங்க. ஏதோ சிறு தவறு நடந்திருக்கலாம். என் அப்பா இப்போது குல தெய்வம் கோவில் தரிசனத்திற்காக எங்கள் கிராமத்திற்குச் சென்றுள்ளார்கள். அதனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள டவர் கிடைக்கவில்லை. இன்னும் சற்று நேரம் பொறுத்து முயற்சி செய்தால் கட்டாயம் அப்பா தெளிவு படுத்துவார்....’ என்றான் அவள் பதிலை எதிர் பார்த்தபடி.

சற்று தயக்கத்தின் பின் அவள்,’ ம்ம்....அவ்வாறு இருக்க வாய்ப்பு இருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படி இருந்தாலும் அதை பெரியவர்கள் பேச வேண்டியது தான் முறை.அதனால் இதைப் பற்றி மேற்கொண்டு பேச ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்று இழுத்தாள்.

‘ இல்லைங்க. ஒரு நிமிடம், இணைப்பைத் துண்டித்து விடாதீர்கள். இது ஏதோ சிறு தவறாகத்தான் எனக்குப் படுகிறது. நான் இப்போது தங்கள் வீட்டின் அருகில்தான், ஒரு ரெஸ்ட் ஏரியாவில் நின்றிருக்கிறேன். தங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால், கிளம்பி இங்கே வந்தால் நாம் நேரில் பேசலாமே.......... அதற்குள் என் அப்பாவிற்கு தொடர்பு கிடைத்தால் அனைத்தும் தெளிவாகி விடும் அல்லவா. அதனால்...’ என்று தயங்கினான்.

அவளும், ‘ இல்லைங்க, அதெல்லாம் சரி வராது. எனக்கு இப்போது நேரம் இல்லை. என்னால் அங்கெல்லாம் வர முடியாது. முன்பே திட்டமிட்ட வேறு சில பணிகள் இருக்கிறது. மன்னித்து விடுங்கள்’ என்றாள் நாசூக்காக.....

‘இல்லை, ஒரு இருபது நிமிட டிரைவ்தான் உங்களுக்கு.அதனால் நீங்கள் நேரில் வந்தால்......’

அவன் பேச்சை மேலும் வளர்க்க விரும்பாதவளாக, ‘சாரிங்க, அதெல்லாம் சரி வராது. எனக்கு வேறு முக்கியமான வேலை இருக்கிறது, மன்னியுங்கள், பை....’ என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டாள்.

என்ன இது கொஞ்சம் கூட நாகரீகமே தெரியாதவளாக இருக்கிறாளே... நான் இத்தனை முறை எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளவில்லையே இந்த பெண். ஒரு வேளை திமிர் பிடித்தவளாக இருப்பாளோ. ..

எது எப்படியோ இதற்கு மேல் அவளிடம் பேசுவதில்அர்த்தமில்லை என்றேத் தோன்றியது. சரி திரும்ப ஊருக்காவது கிளம்பலாம் என்று நினைத்து காரில் ஏறப்போனவனை, ‘ஹலோ...மாறன்’ என்ற குரல் நிறுத்தியது.

‘ ஹலோ, மாறன், எப்படி இருக்கிறாய்...... நீ எப்படிப்பா இங்கே....’ என்றான் .நண்பன் தினேஷ்.

‘ அட நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய்.நீ எப்போது இங்கு வந்தாய். பெங்களூரில் தானே இருந்தாய்’ என்றான் யோசனையாக.

‘ ஆமாப்பா, இப்பத்தான் இங்கு வந்து 1 மாதம் ஆகிறது. உன்னை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. நானே உன்னை தொடர்பு கொள்ள நினைத்திருந்தேன். சரி செட்டில் ஆகிவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்றிருந்தேன். இன்னும் மாற்றி மாற்றி எதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது கூட ஒரு நண்பரை பார்த்து விட்டுத்தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்’ என்றான்.

’ ஓ அப்படியா, மனைவியும் கூட்டி வந்துவிட்டாயா...’ என்றான்.

திருமணம் சமீபத்தில்தான் ஆகியிருந்தது தினேஷிற்கு.

‘ ஆம். இருவரும்தான் வந்திருக்கிறோம். வாப்பா வீட்டிற்குச் செல்லலாம், இங்கிருந்து ஒரு 10, 15 நிமிட டிரைவ்தான்’ என்றான்

சற்றே தயங்கியவன், தினேஷ் திரும்பவும் கட்டாயப்படுத்தவும், சரி அவன் வீட்டில் சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு போகலாமா என்று யோசித்தான்....

ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடனும் கோவிலில் ஐயர் கூறிய விசயம் மனதிற்குள் எதோ குழப்பத்தை எற்படுத்திக் கொண்டே இருந்தது. என்ன இப்படி ஆகிவிட்டதே......

‘ என்னண்ணா. ஒரே யோசனையாக இருக்கேள். இன்னும் கோவிலில் ஐயர் சொன்னதைப் பற்றியே யோசிச்சிண்டிருக்கேளா.. விடுங்கோன்னா,எல்லாம் அந்த அம்பாள் பார்த்துப்போ. தேவையில்லாமல் மனசை குழப்பிக்காதீங்கோ....எல்லாம் நல்லபடியா நடக்கும்’ என்றாள்.

அவள் தைரியமாக பேசியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், ராமச்சந்திரனுக்கு, ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்தது. தன் மகனின் ஜாதகத்தில் இருக்கும் சில தோசங்கள் கூட இதுபோன்ற தடைகளை ஏற்படுத்தக் கூடும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்ததால் குழப்பம் மேலும் அதிகமானது.

சரி, எப்படியோ அந்த அம்பாள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இருக்க வேண்டியதுதான்.

மாறன் போட்டோ பார்த்திருப்பானோ என்னவோ. நமக்கு போன் செய்திருந்தாலும் லைன் கிடைத்திருக்காது. அவனுக்கு போன் செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணியவர், உடல் அசதி காரணமாக , சற்றே ஓய்வெடுத்து விட்டு பிறகு மகனிடம் பேசலாம் என்று எண்ணியவர் பயணக் களைப்பு காரணமாக கண்ணயர்ந்து விட்டார்...காலையில் பேசிக் கொள்ளலாம் என்ற முடிவுடன்.

காலையில் மகனுடன் பேச வேண்டுமென்ற ஆவலில் வெகு சீக்கிரமே எழுந்துவிட்ட ராமச்சந்திரன் ம்கனுக்குப் போன் செய்யலாம் என்று தொலைபேசியின் அருகே செல்வதற்குள், மணி தானே ஒலிக்க ஆரம்பித்தது......

‘ஹலோ,’

‘ஹலோ, அப்பா, எப்படி இருக்கீங்க. கோவிலுக்குச் சென்று விட்டீர்களா. நான் உங்களுக்கு முயற்சி பண்ணிக் கொண்டே இருந்தேன்.’

‘சொல்லுப்பா, எப்படி இருக்கிறாய். உன்னிடம் முன்னாடியே சொல்ல மறந்துவிட்டேன். இரவு வந்து பேசலாம் என்றிருந்தான். அசதியில் தூங்கிவிட்டேன்’ என்றார்.

‘ பரவாயில்லைப்பா...... சரி இருக்கட்டும். நானே உனக்குப் போன் செய்ய வேண்டுமென்றுதான் இப்போது எழுந்து வந்தேன்... பெண்ணின் போட்டோ பார்த்தாயா, உனக்குப் பிடித்ததா. நீ சின்ன வயசில் பார்த்திருப்பாய் அவளை. உனக்கு அத்தை முறைதான் ஆகிறது அவள் அம்மா.உனக்குப் பிடித்த மாதிரியே அழகா பாடுவா பெண்...’ என்றார் அப்பா.

எங்கோ இடிக்கிறதே. அப்பா சொல்வதைப்பார்த்தால்,
‘ அப்பா, பெண் என்ன செய்கிறாள் என்று சொன்னீர்கள், ‘ என்று தயங்கியவாறே கேட்டான்.

‘ அதுவா, அவள் ஸ்டேட் பாங்க்கில், வேளச்சேரி பிராஞ்சில் இப்போது இருக்கிறாள்’ என்றார்.

என்னது சென்னை வேளச்சேரி பிராஞ்சிலா......பேங்கிலா.........அவனுக்கு தலையே சுற்றுவது போலிருந்தது.....

தொடரும்.

Sunday, April 3, 2011

மது ஏன் அப்படி செய்தாள் ?


மது ஏன் அப்படி செய்தாள் ?

வீடு கலகலத்துக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை சமயம் என்பதால், குடும்பத்தின் முக்கிய நபர்கள், அத்தனை பேரும் வந்தாகி விட்டது.வெகு தூரத்தில் இருக்கிற மும்பை அத்தை,மற்றும் மலேசியா மாமா, என்று எல்லோரும் வந்தாகி விட்டது. திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள்தானே இருக்கிறது. மது எல்லோருக்கும் செல்லப் பெண். அதனால் தான் உயர் அரசுப்பணியில் இருக்கும் தில்லி மாமா கூட தவறாமல் வந்திருக்கிறார். எல்லோரிடமும் உண்மையான பாசத்துடன் பழகும் அவள் குணம் அனைவரையும் சட்டென கவர்ந்து விடும். தொலைவில் இருக்கும் உறவினர்களைக் கூட குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கும் இனிய வழக்கமும் கொண்டதும் அவ்ள் மேல் அனைவரும் பாசமாக இருப்பதற்கான காரணங்கள். இந்த வயதில் முதியோர் இல்லம், மனநலம் குன்றிய குழந்தைகள் எய்ட்ஸ் நோயாளிகள் என்று ஏதாவது ஒரு முகாமில் தான் அவளுடைய விடுமுறைகள் கழியும். தயங்காமல் எவரிடமும் உதவி கேட்டு தேவைப்பட்டவர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதிலும் திறமை அதிகம் அவளுக்கு.

நல்ல பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த புண்ணியம் பல நல்ல குணங்கள் அவளிடம் இயல்பாகவே இருந்தது. குடும்பத்தில் பெரும்பாலும் எல்லோரும் நல்ல தங்க நிறத்தில் இருக்கும் போது தான் மட்டும் தொட்டால் ஒட்டிக் கொள்ளுவது போல ஒரு அடர் கருப்பு நிறத்தில் ஏன் பிறந்தோம் என்று பெரும் மனக்குறை அவளுக்குண்டு. அம்மாவிடம் அடிக்கடி அது பற்றி கேட்டுத் தொணப்புவாள். அம்மாவும், மது வயிற்றில் இருந்த போது தான் மிகவும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டதால், நிறைய இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்டதால் குழந்தையின் நிறம் கருத்துப் போய்விட்டது என்று சொல்லி சமாளிப்பாள்.. ஆனால் மதுவிற்கு அந்த விசயம் கொஞ்சம் உறுத்தல்தான். தான் ஏதோ இந்த நிறம் காரணமாக குடும்பத்தில் இருந்து அன்னியப்பட்டு நிற்கிறோமோ, என்று கூடத் தோன்றியது அவளுக்கு.

திருமணப் பேச்சு வந்தவுடன், தன் சொந்த அத்தையின் மகனையேத் திருமணம் முடிக்க பெற்றோரும், பாட்டி தாத்தாவும் ஆசைப்பட்டனர். சொந்தம் விட்டுப் போகக்கூடாது, என்பதும் ஒரு காரணம். அத்தையிடம் முதலில் கூறிய போது, அத்தை சற்றே யோசித்து விட்டுக் கூறுவதாகச் சொல்லியது, பாட்டிக்கும், தாத்தாவிற்கும் வருத்தம் அளித்தது. ஆயினும் அத்தை கூறிய காரணம் அவர்களை சமாதானப் படுத்தியது. ஆம், மெழுகுச் சிலை போன்று பளபளவென ஆறடி உயர்ந்து நிற்கும் தன் அத்தை மகன் அனந்தன் எங்கே, கருமை நிறமாக, 5 அடியில் அவன் கழுத்து வரை மட்டுமே இருக்கும் தான் எங்கே என்று நினத்துத் தான் அவளும் ஒப்புதல் சொல்லாமல் இருந்தாள். ஆனால் மாமா மட்டும், என்னம்மா, இது நிறத்தில் என்ன இருக்கிறது. உன் படிப்பு, உன் குணம் இவற்றின் முன் என் மகன் சாதாரணம், என்றார்.

மது, பொறியியல் பட்டம் பெற்று, இப்போது ஐ.ஏ.எஸ். தேர்விற்கு படித்துக் கொண்டிருப்பவள். படிப்பு முடித்து திருமணம் என்றால் நாட்கள் கடந்து விடும், தாங்கள் இருக்கும் போதே ஒரு நல்ல காரியம் நடத்திப் பார்க்க வேண்டுமென்ற தாத்தா பாட்டியின் ஆசை தான் வென்றது. ஆனால் ஏனோ அத்தை மட்டும் முழு மனதாக ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை. அவர் முகத்தில் ஒரு வாட்டம் இருந்து கொண்டேதான் இருந்தது. தன் ஒரே மகன் திருமணம் என்ற பெரிய மகிழ்ச்சியெல்லாம் இல்லாமல் ஏனோதானோ வென்றுதான் காரியங்கள் செய்து கொண்டிருந்தார். பெரியவர்கள் மீதிருந்த மரியாதையில் தடை ஏதும் கூறாமல் இருந்திருப்பார் போல. தன் மகனை விட அதிகம் படித்திருக்கிறாளே என்ற எண்ணமும் இருந்திருக்கலாம் அத்தைக்கு.

நிச்சயதார்த்தம் முடிந்து 15 நாட்கள் தான் இருக்கும். அதற்குள் திருமணம் வந்துவிட்டது. வீட்டில் அனைவரும் கலகலப்பாக இருந்த போதும், மதுவின் மனதில் மட்டும் ஒரு சலனம் இருந்து கொண்டே இருந்தது. ஊர் முழுவதும் திருமணப் பத்திரிக்கை விநியோகம் முடிந்து விட்டது. வீட்டில் குலதெய்வ வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. திருமணத்தின் போது மண்டபத்தின் வாயிலில் வைப்பதற்காக பிரம்மாண்ட பேனரும் கூட தாயாராகி வந்து விட்டது! அத்தை மகனும், மாமன் மகளும்,அழகாக சிரித்துக் கொண்டு அனைவரையும் கும்பிட்டு வரவேற்பது போன்ற படம் ...... . ஊரின் அத்தனை முக்கிய பிரமுகர்களும் பெரும்பாலும் கலந்து கொள்ளக் கூடும் என்பதால் ஏற்பாடுக்ள் பலமாகவே இருந்தது.

வாழ்க்கைச் சக்கரம் சுழலும்போது அது பல நேரங்கள் பார பட்சமின்றி எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போட்டு விடும். அது மனித மனங்களாக இருந்தாலும் கூட அதற்குக் கவலை இல்லை. கால தேவனுக்கு பெரியவன், சிறியவன், அறிவாளி, மூடன், மூர்க்கன், என்ற பாகுபாடெல்லாம் கூட கிடையாது. நியாயத் தராசில் அனைத்தும் சமம்.

குலதெய்வ வழிபாடு அழகாக நடந்து முடிந்தது.அன்று செவ்வாய்க்கிழமையாதலால் துர்க்கைக்கு நெய் தீபமேற்றி வழிபடும் பழக்கம் அத்தைக்கு உண்டு. திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஏகப்பட்ட வேலைகள். இருந்தாலும் பல வருடங்களாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் தெய்வ காரியம் அதை நிறுத்தக் கூடாது என்பதற்காக எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு கோவிலுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

கோவிலில் கூட்டம் அதிகமில்லை என்றாலும், வாடிக்கையாக இந்த நேரத்தில் தீபமேற்ற வரும் பெண்கள் வந்திருந்தனர். அப்போது தன் தோழி மாலதியைப் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டே மளமளவென தீபம் போடுவதற்காக, எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, சாரை அங்கிருந்த மண் கலையத்தில் பிழிந்து விட்டு அப்படியே அந்தப் பழத்தின் பகுதியை, அழகாக திருப்பி விளக்காக மாற்றி, அந்த இரு தீபத்திற்கும், ஐந்து முகமாக மஞ்சள், குங்குமம வைத்து, திரி போட்டு , நெய் விட்டு தீபமேற்றினாள். அந்த நேரத்தில்தான் மாலதியிடம், புதிதாக வந்த ஒரு பெண் அத்தையைக் காட்டி, இவர் பெரிய ஐயா வீட்டு பெண் தானே என்று கேட்டுவிட்டு அவளருகில் வந்து ஏதோ குசுகுசுவென இரகசியம் சொன்னாள். அதைக்கேட்ட மாலதியின் முகம் போன போக்கு சரியில்லை. மிக அதிர்ச்சியான செய்தியாக இருக்கும் போல, பாவம். உடனே மாலதியோ தன் முகத்தைப் பார்க்கவும், அத்தைக்கு ஒன்றும் புரியவில்லை. மாலதி திரும்பவும் அந்தப்பெண்ணிடம்

“ உண்மையைச் சொல், விளையாட்டாக நீ ஏதும் சொல்லவில்லையே “ என்றாள்.

அந்தப் பெண்ணும், “ சே, சே, அப்படியெல்லாம் விளையாடக் கூடிய விசயமா இது? அதுவும் மது என் கல்லூரித் தோழி. அவளைப் பற்றி, தேவையில்லாமல் ஒரு தவறான செய்தி சொல்ல வேண்டிய அவசியம் தான் என்ன “ என்றாள்.

இவர்களின் பேச்சில் மதுவின் பெயர் அடிபடவும், சற்றே ஆச்சரியமாக, “ உனக்கு எங்கள் மதுவைத் தெரியுமா, நீ அவள் தோழியா” என்றாள் அத்தை யோசனையுடன்......

மாலதியோ, அவசரமாக ,” அம்மா, நீங்க வீட்டிற்கு கிளம்புங்கள். இந்தப்பெண் ஏதோ உளறுகிறாள் என்று நினைக்கிறேன். எனககு ஒன்றும் விளங்கவில்லை. திருமணத்திற்கு இன்னும் இரண்டே நாள் இருக்கும் போது இப்படிச் சொல்கிறாள் இந்தப் பெண். இதெல்லாம் சாத்தியமில்லை, நீங்கள் வீட்டிற்கு கிளம்பிச் சென்று பாருங்கள் “ என்று சொன்னவுடன், அவள் வார்த்தையில் இருந்த பரபரப்பு தன்னை மேற் கொண்டு ஏதும் பேச விடாமல், சுவாமியை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு, தாயே நீயே துணை என்று சொல்லிக் கொண்டே கிளம்பினாள் வேகமாக!

வீட்டில் உள்ளே அத்தை நுழைவதற்கும், வெளியே சர்ரென கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வெளியே எட்டிப்பார்த்தால், காரிலிருந்து மது கழுத்தில் மாலையுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். தன் கண்ணையே நம்ப முடியாதவளாக கண்ணை தேய்த்துக் கொண்டு திரும்பவும் பார்த்தால், முன் புறமிருந்து தன் மகன் அனந்தன் இறங்குவதையும்..........ஆனால் அவன் கழுத்தில் மாலை இல்லை...

மது குனிந்து காரினுள் எட்டிப் பார்த்து கையை நீட்டுவது தெரிந்தது. இரண்டு கைகளையும் குழந்தை போல நீட்டிக் கொண்டு கபடமில்லாமல் சிரித்துக் கொண்டு, மாலையை ஆசையாக தொட்டுப் பார்த்துக் கொண்டு, விகல்பமில்லாமல், துள்ளிக் கொண்டு இறங்கிய அந்தப் பையன் கழுத்தில் மணமாலை!

அடக் கடவுளே! என்ன நடக்கிறது இங்கே. மாப்பிள்ளை பக்கத்தில் இருக்க நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணத்திற்கு 2 நாட்களே இருக்கும் நிலையில் வேறு எவனையோ இழுத்துக் கொண்டு வந்திருக்கிறதே, இந்த கழுதை. என்ன துணிச்சல் இவளுக்கு. இதற்கு இந்த மடையன் அனந்தன் வேறு காவலா, ஒன்றுமே புரியாமல் தலை சுற்ற, அண்ணீ.......என்று போட்ட கூச்சலைக் கேட்டு, குடும்பமே வெளியில் ஓடி வர...

அத்தனை பேரும் மதுவின் மணக்கோலம், வேறு ஒருவனுடன், கண்டு அதிர்ச்சியில் வாயடைத்து நின்றுவிட்டனர். மதுவிற்கும், என்ன சொல்வது, எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது. தான் திருமணம் செய்து கொண்ட சூழலின் நிதர்சனம் இவர்களுக்குப் புரியுமா........பெருங் குழப்பமாக இருந்த வேளையில், அனந்தன் மெதுவாக தொண்டையைச் செருமிக் கொண்டு,

” மது, மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு உள்ளே வாம்மா. உள்ளே போய் பேசிக் கொள்ளலாம். ஏதோ நினைத்துக் கொண்டவனாக, தன் தாயின் புறம் திரும்பி, ‘அம்மா, ஆரத்தி எடுக்கனுமே, கொஞ்சம் கொண்டுவருகிறீர்களா, “ என்றான்.

அவன் அம்மாவோ ஏதோ சொல்லக் கூடாத மோசமான வார்த்தையைச் சொல்லிவிட்டது போல, வெறுப்பாக மகனைத் திரும்பிப் பார்க்க, சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அனந்தன், அவர்களை அங்கே நிற்கச் சொல்லி, தானே உள்ளேச் சென்று பணியாளின் உதவியுடன் ஆரத்தி எடுத்து வந்தான். அனைவரும் அதிர்ர்சியில் உறைந்திருந்த அந்த நேரத்தில், ஆரத்தியை பல காலமாக வீட்டில் சமையல் வேலை பார்க்கும், முத்தம்மா பாட்டியையே எடுக்கச் சொல்லி அவர்களை உள்ளே கூட்டிவர முற்பட்டான்.

திடீரென சுய நினைவு வந்தவளாக மதுவின் தாய், “ அடிப்பாவி, இப்படி தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டாயே. என்ன வந்தது உனக்கு. இதற்குத்தான் பொது சேவை அது இதுன்னு ஊரைச் சுத்தினாயா, பாவி படுபாவி “ என்று கத்திக் கொண்டே அடிக்கப் போனவளைத் தடுத்து நிறுத்திய அனந்தன், ‘அத்தை அவசரப்படாதீர்கள், உள்ளே வாருங்கள். என்ன நடந்ததுன்னு சொல்கிறேன்” என்றான்.

சீ, இந்த கேடு கெட்ட சிறுக்கி மட்டும் வீட்டுக்குள்ள வரவேக் கூடாது. இனி என் கண் முன்னால் நிற்கும் தகுதியே இவளுக்கு இல்லை.......ஐயோ, எங்கள் மானம், மரியதை எல்லாமே போய்விட்டதே. இனி எப்படி நாங்கள் வெளியில் தலை காட்ட முடியும். குடும்பத்தோடு நாண்டுகிட்டுச் சாக வேண்டியதுதான்.” என்று பெரும் குரலில் கத்த ஆரம்பித்து விட்டார்.

அத்தையோ, “ அடிப்பாவி, சண்டாளி...என்ன நெஞ்சழுத்தமடி உனக்கு. எவனோடயோ ஓடற கழுத, நிச்சயதார்த்தம் செய்வதற்கு முன்னாலேயே ஓடித் தொலைய வேண்டியதுதான....... ஊரெல்லாம் பத்திரிக்கை வைச்சு அழைச்சப்புறம் இப்படி ஒரு காரியம் பண்ணிட்டயேடி பாவி.....உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கனும்....எல்லாம் படிச்சிருக்கிற திமிரு......” என்று ஆவேசம் வந்தவள் போல் குதித்தாள்.

தாத்தாவும், பாட்டியும் அதிச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார்கள்.

அனந்த்னும் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். சொன்னால் இவர்களால் புரிந்து கொள்ள முடியுமா, அல்லது அதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமோ, தெரியவில்லையே என்று யோசித்து எப்படியும் சொல்லித்தானே ஆக வேண்டுமென்று பேச ஆரம்பித்த போது,.....

” ஹை.......அங்கொரு மது.......பெரிய மது எவ்வளோ அழகா இருக்கா.......என்று ஓடிப்போய் அந்தத் திருமண மண்டபத்தில் வைக்க வேண்டிய பேனரில் இருந்த மதுவின் படத்தை ஆசையுடன், தடவிக் கொடுத்துக் கொண்டு, குழந்தையென கலகலவெனச் சிரித்துக் கொண்டிருந்தான் அந்த மாப்பிள்ளைப் பையன், சூழ்நிலை பற்றிய உணர்வே இல்லாமல்!

அடுத்த பேரிடி அனைவருக்கும், என்ன இது இப்படி, என்ன பண்ணுகிறான் இவன்......வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசிக்கும் போதே, மது நிதானமாக மாலையை கழட்டி வைத்துவிட்டு, அவனருகில் சென்று,

” வினு, இங்க பாருங்க இப்படில்லாம் பண்ணக் கூடாது. அமைதியா இருக்கனும் தெரியுமா. “

“ இல்ல...இந்த மது அழகா இருக்கா பாறேன்...அதான் அவளுக்கு ஒரு கிஸ் குடுக்கலாமுன்னு போனேன்.......”

“ அதெல்லாம் பண்ணக் கூடாது, வந்து இங்க உக்காருங்க” என்றாள் மது.

அவள் சொன்னவுடன் அமைதியாக சரி என்று தலையை ஆட்டிக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான் வினு.

ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. இடி மேல் இடி......என்ன இது இந்த பையன் இப்படி இருக்கானே என்று யோசிப்பதற்குள், அனந்தன் பேச ஆரம்பித்தான்.

“ தாத்தா, மதுவைப் பற்றி முழுசா புரிஞ்சிக்கிட்டவரு நீங்க. உங்க அம்மா மாதிரியே தயாள குணம் மதுவிற்கு என்று நீங்கள் தானே எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பீர்கள். இன்று அதை நிரூபித்துவிட்டு வந்திருக்கிறாள் உங்கள் பேத்தி. ஆம் தாத்தா, இவர் வினு, சிறு வயதில் அதிக காய்ச்சல் வந்து ஜன்னி வந்ததால், மூளை சிறிது பாதிக்கப்பட்டுவிட்டது. சரியாக படிப்பு வரவில்லை. மற்றபடி சொன்னதைக் கேட்டுக் கொள்வார். எந்த பிரச்சனையும் இல்லை இவரால். இவருக்கென்று இருப்பது, இவருடைய பெற்றோர் மட்டும்தான். ஆனால் அவர்களும் சென்ற மாதம் ஒரு விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

மது இவருக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று ஒரு ஏழைப் பெண்ணாகப் பார்த்து முடிவு செய்து வைத்திருந்தாள். இன்று காலைதான் அந்தப் பெண்ணுடன் திருமணம் நடக்க நிச்சயிக்கப் பட்டிருந்தது. நாங்களும் அதற்குத்தான் கிளம்பிப் போனோம். அங்கு போனவுடன் நிலைமையே மாறிவிட்டது. அந்த மணப் பெண் கடைசி நேரத்தில் இவரை மணக்க மறுத்து விட்டாள். அவள் பெற்றோர் பணத்திற்கு ஆசைப்பட்டு, இவரின் நிலை குறித்து அந்த பெண்ணிடம் ஏதும் கூறாமலே திருமணத்தை முடிவு செய்திருக்கிறார்கள். அதை அறிந்து கொண்டவள் இறுதியில் மறுத்து விட்டாள். எவ்வளவு சொல்லியும் சேட்கவில்லை. அந்த நேரத்தில்தான் மது திடீரென இந்த முடிவு எடுத்து விட்டாள்.நான் கூட சொன்னேன், வேறு பெண் பார்த்து இவருக்கு திருமணாம் செய்து வைக்கலாம் என்று. ஆனால் அவளோ, இவரின் பெற்றோர் பல நாட்களாக இவருக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் எதுவும் சரிவராததால் மிகுந்த வேதனை கொண்டிருந்ததாகவும் கூறினாள். திருமணம் முடித்தால் அவர் மனநிலை பூரணமாக குணமாகும் வாய்ப்பு நிறைய இருப்பதாக மருத்துவர் கூறியிருப்பதாகவும் கூறினாள். அது மட்டுமில்லாமல், இவரின் பெற்றோரும் இறந்து போனதால் வேறு ஆதரவும் இல்லாத நிலையில் தனி மரமாக நிற்கும் மனிதரைப் பார்க்க பாவமாக இருப்பதாகவும் கூறி வருந்தினாள் அதனால்தான் நானும் ஒப்புக் கொளள வேண்டியதாகிவிட்டது......

எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்தாலும், விரைவில் சரியாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் மது வெகு இயல்பாக வினுவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குள்ளே சென்றாள்........



--


Tuesday, March 29, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2. 1

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை. - பகுதி - 2-1

காசிப்பயணம். -1.

முன் காலத்தில் காசி யாத்திரை போவதென்றால், இறுதிப் பயணம் என்பதாகவே சொல்வார்கள். காரணம் போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் எத்துனை சிரமப்பட்டாலும், காசி விசுவநாதரை தரிசிப்பதையே வாழ்நாளின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர் பல்லோர்.

ஆனால் இன்றைய நிலையே வேறு. எத்துனை விதமான போக்குவரத்துகள். அதுவும் இந்த விமானப் பயணம் எளிமையாக்கப் பட்டவுடன், ஆண்டவனின் தரிசனம் பெறுவது எளிதான வரமாகிவிடுகிறது. காரணம், பழைய காலம் போன்று குடும்பம், தொழில் என்று அனைத்தையும் விட்டு மாதக்கணக்கில் நேரம் செலவிட வேண்டிய தேவை இருப்பதில்லை. எல்லாம் அவன் செயல்!

நாங்கள் கோவையிலிருந்து விமானம் மூலம் முதலில் தில்லி சென்று அங்கிருந்து காசி செல்வதாக முடிவெடுத்திருந்தோம் காரணம் எங்கள் மகள் தன் குடும்பத்துடன், அமெரிக்காவிலிருந்து, தில்லி வந்து எங்களுடன் சேர்ந்து கொள்வதாகத் திட்டம். இந்த இடத்தில் முதலில் நான் இன்னம்பூர் ஐயாவையும், திரு தேவ் அவர்களையும் நினைவு கூறாவிட்டால் நன்றி மறந்தவளாவேன். ஆம் நாங்கள் தில்லி பயணம் என்று ஆரம்பித்தவுடனே இ ஐயா , எனக்கு ஒரு அருமையான நண்பர் தில்லியில் இருக்கிறார். அவர் ஒரு நல்ல பத்திரிக்கை ஆசிரியர், அவர் பெயர் பெண்ணேஸ்வரன், மிக நல்ல மனிதர் என்று அறிமுகப்படுத்தினார். திரும்பவும் என் கணவரிடமும் கூறினார். ஆனால் நாங்கள்தான் ஏன் அவருக்கு சிரமம் கொடுக்க வேண்டும் என்று அமைதியாக இருந்து விட்டோம். ஆனால் திரு தேவ் ஐயாவோ, தானே திரு பென் ஐயாவை தொடர்பு கொண்டு எங்களைப் பற்றிச் சொல்லி முடிந்த உதவி செய்யுமாறு கூறிவிட்டார்.

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்பவர்கள் உலகில் வெகு சிலரே. அதில் திரு பென் சாரும் ஒருவர். அத்துனை நல்ல உள்ளம் கொண்ட மனிதர். தில்லியை சென்று அடைந்தவுடன், எங்களை முதன் முதலில் தொடர்பு கொண்டவர் அவர்தான். மனிதர் நாங்கள் போன் செய்து பேச வேண்டும் என்று கூட எதிர்பார்க்கவில்லை. பல் வலியினால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு, பல மணி நேரங்கள் மருத்துவமனையில் செலவிட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த அந்த சூழலில் கூட எங்களை மறக்காமல், தானே போன் செய்து தொடர்பு கொண்டார். அது மட்டுமல்ல, விமான நிலையத்திற்கே எங்களுக்கு காரும் அனுப்பி வைத்தார். ஆக தில்லி மாநகரத்தின் புறாக்கூட்டம் கூட பென் சாருக்குப் பிறகுதான் எங்களுக்கு அறிமுகம்! வட நாட்டுப் பயணம் எங்களுக்கு புதியதாகினும் பென் ஐயாவின் தயவால், மிக எளிதாக வாகன வசதி, தங்கும் இடம் (அதுவும் மிகவும் பாதுகாப்பான மற்றும் குறைந்த வாடகையில்) மட்டுமன்றி, பாராளுமன்றம் பார்ப்பதற்கான அனுமதியும் வாங்கிக் கொடுத்தார். ஒரு நல்ல சகோதரர் அங்கு இருந்தால் என்னென்ன உதவிகள் ஒரு சகோதரிக்குச் செய்வாரோ, அத்தனை உதவிகளும் செய்தாரவர். ஆனால் இத்தனைக்கும் அந்தப் பயணத்தின் போது ஒரே முறைதான் அவரைச் சந்திக்க முடிந்தது. டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி மதியம் 14.50 க்கு தில்லி சென்று அடைந்தோம். காலை 11.40 க்கு கோவை விமான நிலையத்தில் கிளம்பி 2 மணி 10 நிமிடத்தில் தில்லி சென்று அடைந்தோம்.

அன்று மாலை நாங்கள் தங்கியிருந்த வேதாந்த மடத்திலிருந்து, விமான நிலையம் வெகு தொலைவு அல்ல என்பதும் ஆறுதலாக இருந்தது. காரணம் நாங்கள் சென்ற அந்த டிசம்பர் மாதம் உச்சமான குளிர்காலம். நாங்கள் தேவையான குளிர் உடைகள் அனைத்தும் எடுத்துச் சென்றிருந்ததனால், ஓரளவிற்காகவாவது சமாளிக்க முடிந்தது. ஆனால் பனி மூட்டம் மிக மோசமாக இருந்த காரணத்தினால் ஓட்டுநர் மிகவும் சிரமப்பட்டார், பாதையைக் கனடுபிடிப்பதற்கு. அன்று எங்களுடைய முக்கிய நிகழ்ச்சியே பென் சாரைச் சந்திப்பதுதான். அன்று மாலை அவரைச் சந்தித்து நானும் என் கணவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். அந்த சில மணித்துளிகளில் வெகு சரளமாக தன் வாழ்க்கைப் பற்றியும், தில்லி வாழ்க்கை முறை பற்றியும், தன் பத்திரிக்கை வளரும் விதம் பற்றியும் மிக இயல்பாக பல நாட்கள் பழகியவர் போல பேசிக் கொண்டிருந்தார். அன்று இரவு கடுங்குளிர் காரணமாக வெளியில் எங்கும் செல்லும் எண்ண்ம் வரவில்லை. அடுத்த நாள் காசிப் பயணம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்து முடித்தோம்.

வருண பகவான் ஆசி கூறும் விதமாக தூறல்களாக இட்டு, குளிர்ந்து, இறைவன் தண்ணளி போல் விளங்கியது.


22 ஆம் தேதி மதியம் 14.20 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலமாக தில்லியிலிருந்து, கிளம்பி 15.45 மணிக்கெல்லாம் வாரணாசி வந்தடைந்து விட்டோம்.

நாங்கள் கிளம்பிய தினம் டிசம்பர் 21 ஆம் திகதி, புனித திருவாதிரைத் திருநாள். அன்று சிவபெருமானுக்கு மிக விசேசமான நாள். திருவாதிரை விரதம் என்பது சைவ சமயப் பெண்களுக்கு மிக முக்கியமான ஒரு விரதமாகும். இந்த விரதம் மட்டும் எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது என்பர் பெரியோர். திருமணம் ஆகாத பெண் குழந்தைகள் தனக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டியும், திருமணம் ஆன பெண்டிர் தன் கணவர் நீண்ட ஆயுளுடனும், சகல செல்வங்களுடன் மனம் நிறைந்து வாழ்வதற்கும் ஆண்டவனிடம் விண்ண்ப்பிக்கும் ஒரு விரதமாகும்.

இளையான்குடி மாற நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவனடியார்களுக்கு உணவு அளித்தபின்பே தங்கள் பசியாறும் வழக்கமுடையவர்கள். கடும் வறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த வேளையில், வயலில் விதை நெல் விதைத்திருந்தனர். இளையான்குடி மாறனாரும் அவர்தம் மனைவியாரும் உணவு உண்ணாது இருந்த நாளில் இறைவர் அவர் இல்லத்தில் எழுந்தருள, அவருக்கு உணவு சமைக்க வழி அறியாத தம்பதியர், வயலில் விதைத்த விதை நெல்லை வாரி கொண்டு வர செல்கின்றனர். புள்ளும் உறங்கும் நள்ளிரவு வேளையில், வயலுக்குச் சென்று கொண்டுவந்த நெல்லை அலசி உமி நீக்கி, அதை வீட்டில் இருந்த கொஞ்சம் வெல்லத்தைப் போட்டு, களி செய்து அதை ஆண்டவனுக்குப் படைக்கின்றனர். ஆண்டவன் மீது இந்த தம்பதியர் கொண்ட மாறாத அன்பு உலகிற்கு தெரிய வருகிறது. ஆண்டவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. இந்த நாளைத்தான் நாம் திருவாதிரை என களி செய்து வைத்து ஆண்டவனுக்குப் படைக்கின்றோம். இதையே தெய்வப் புலவராம், சேக்கிழார் பெருமான்,

உள்ளம் அன்பு னொண் டுக்கவோர் பேரிடாக்
கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்
புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார்
வள்ளலார் இளையான்குடி மாறனார்.

வாரணாசியில் விமானம் விட்டு இறங்கி அங்கிருந்து முன் கட்டணப் பதிவு ஊர்தி எடுத்துக் கொண்டு நாங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த ஆச்சி மடம் நோக்கி கிளம்பினோம். விமான நிலையத்திலிருந்து கோவில் இருக்கும் இடம் சுமாராக 22 கி.மீ. இருக்கும். வழி நெடுக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தினால்,ஸ்ரீ காசி நாட்டுக் கோட்டை நகர சத்திரம், சென்று அடைவதற்கு 1 மணி 20 நிமிடங்கள் ஆகிவிட்டது. ஊரே கோவிலாக இருக்கும் அதிசயம் அங்கு காணலாம். அதாவது பழமை மாறாத தெருக்கள்,அதைவிட நாங்கள் தங்கியிருந்த சத்திரம் பற்றி கூற வேண்டும். குறைந்தது 400 ஆண்டுகள் பழமையான கட்டிடம். அங்கங்கு வர்ணம் மட்டும் பூசி புதுப்பித்துள்ளார்கள். காலத்திற்கேற்றவாறு குளிர்சாதனங்கள் போன்ற வசதிகள், இவை மட்டும் தான் சற்றே புதுமையைத் தோற்றுவிக்கிறது. நாங்கள் சென்று சேர்ந்தது மாலை நேரம். 198 வருடங்கள் பழமையான கட்டிடம், மிக உயரமான படிகள், மூன்று மாடிகள் பெட்டியையும் தூக்கிக் கொண்டு ஏற வேண்டும். வெளி ஆட்கள் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

எப்படியோ பெட்டியையும் தூக்கிக் கொண்டு மேலே ஏறிச் சென்று அங்கு அந்த சத்திரத்தின் மேனேஜரைச் சென்று பார்த்தோம். எங்களைப் பார்த்தவுடன், என்ன....என்ன வேண்டும்........என்றாரேப் பார்க்கலாம்!

அவ்வளவு கரடு முரடாகக் கூடவா ஒரு புதிய மனிதரிடம் நடந்து கொள்வார்கள் என்று எண்ணியதென்னவோ உண்மைதான். ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்த போது தவறாக நினைத்ததற்கான வேதனை இருக்கத்தான் செய்தது. ஒருவரைப் பார்த்தவுடன் எடை போடுவது எவ்வளவு முட்டாள்தனம். என்பதற்கும் ஒரு உதாரணமானது அந்த சம்பவம்.

காசி விசுவநாதர் ஆலயத்திற்கு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக நித்ய பூசைக்கான நைவேத்தியங்கள் மேற்படி சத்திரத்திலிருந்துதான் செல்கிறது. அவர்கள் கொடுக்கிற அனுமதிச்சீட்டு எடுத்துக் கொண்டு போனால் இரவு நேர அர்த்த சாம பூசை முழுவதும் சுவாமியின் திருமுன் அமர்ந்து திவ்யமாக தரிசனம் பெறலாம் அங்கேயே சத்திரத்திலேயே முன் கூட்டியே பதிவு செய்தால் மூன்று நேர உணவும் தயார் செய்து கொடுக்கிறார்கள். அன்று இரவே அபிசேகம் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. இறைவன் திருமுன் அமர்ந்து, குடம் குடமாக பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என அனைத்து அபிசேகம் மற்றும் திருமணக் கோல அலங்காரமும் கண்டது கண் கொள்ளா காட்ட்சிகள். ஆண்டவன் திருமேனி அத்துனை அழகு, அதுவும் பெரிய வெள்ளியிலான ஐந்து தலை நாகம் கவசம், குடை பெரிய மாலைகள் என சுவாமியின் அலங்காரம் கண் கொள்ளா காட்சி!

கிழக்கு ரயில்வே, வடக்கு ரயில்வே இந்த இரண்டு ரயில்வேக்களை இணைக்கும் மோசல் சராய் ஜங்சனில் இருந்து காசி (ராஜ்காட் ஸ்டேசன் ) 7 மைல் தூரத்தில் இருக்கிறது. இதற்குப் பிறகுதான் பனாரஸ் கண்டோன்மென்ட் ஸ்டேசன் இருக்கிறது. காசி இரயில் நிலையத்திலிருந்து விசுவநாதர் கோவில் சுமார் 2 மைல் தூரத்தில் இருக்கிறது. காசி நகரத்தின் வடக்கில் வருணா நதியும், தெற்கில் அசி நதியும் கங்கை நதியில் கலக்கின்ற காரணத்தால், காசி வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது. ஆதி காலத்திலிருந்தே காசி இந்துக்களின் புனிதத் தலமாக இருந்து வந்துள்ளன.

சிவபெருமான், தன்னுடைய திரிசூலத்தின் மீது கால்களை வைத்து நின்று காசி மாநகரத்தைப் படைத்தார் என்பர் முன்னோர். பகவான் சங்கரர் இந்த காசி நகரத்திலிருந்துதான் வந்தார் என்றும் நம்பப்படுகிறது.ஆகவே எந்த ஒரு உயிரினமும், தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து, சிவலோகம் சித்திக்கப் பெறுவார்கள் என்பதும் ஐதீகம். ஆகையால் பலர் காசியிலேயே இறந்துவிட வேண்டும் என்ற பேராவலில், தங்கள் இறுதிக் காலங்களை இங்கேயே கழிக்க விரும்புகிறார்கள்.

காசி விசுவநாதர் கோவில் ஔரங்கசீப் அழித்து விட்டதால், தற்போது உள்ள கோவில் மகாராணி அகல்யா பாயினால் கட்டப்பட்டது என்கின்றனர். இதுமட்டுமன்றி பஞ்சாப் நாட்டு அரசர் ராஜா ரஞ்ஞித் சிங் என்பவர் தங்கங்களையும் பதித்து வைத்துள்ளார் என்கின்றனர். காசி விசுவநாதர் ஆலயத்தின் கோபுரம் 51 அடிகள் உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டுள்ளது.இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிப்பதாக உள்ளது இதன் சிறபம்சமாகும். கசி விசுவநாதரின் ஆலயத்தில் சாவன் மாதத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கின்றனர்.

இந்தோர் மகாராணி அகல்யா தேவியால், 1785 இல் கட்டப்பட்ட இக்கோவிலில் ரஞ்ஞித் சிங் ராஜாவால் 22 மனு தங்கம் வைக்கப்படுள்ளது என்கிறார்கள். அன்று இரவு இராக்கால பூசை முடிந்து சத்திரம் திரும்ப,11 மணி ஆகிவிட்டது. திவ்ய தரிசனத்தின் இன்பமான நினைவுகள் மனதிற்கு ஆழந்த அமைதியை ஏற்படுத்தியது. இதுதானே ஆன்மீகத்தின் நிதர்சனம்!

அடுத்த நாள் காலை விசுவரூபதரிசனமும், அபிசேகமும், விடியற்காலை 3 மணிக்கே ஆரம்பித்து விடும் என்றார்கள். அதற்கும் செல்வது என்ற முடிவுடன் தான் படுத்தோம். ஆனால் பயணக் களைப்பு மற்றும் இரவு நேரம் கழித்து வந்ததாலும் காலை எழுந்து கிளம்ப சற்று கால தாமதம் ஆகிவிட்டது. அந்த பயங்கரக் குளிரிலும், கொதிக்கும் வெண்ணீர் குளியல் இதமாகத்தான் இருந்தது. 7 மணிக்குத்தான் கிளம்பி கோவிலுக்குச் செல்ல முடிந்தது. நாமே நம் கையால் ஆண்டவனுக்கு பாலபிசேகம் செய்யும் வரமும் மற்ற வட நாட்டுக் கோவில்கள் போல இங்கும் கிடைக்கும்.

கோவிலுக்குச் செல்வதற்காக அறையை விட்டு வெளியே வந்தபோது மேனேசர் ஒரு தம்பதியினரிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பின் அறியாதவர்களிடம் கூட இப்படி இவ்வளவு கோபம் காட்ட முடியுமா என்று. உதவி என்று வருபவர்களுக்கு சற்று இன்முகத்துடன் பழகினால் நன்றாக இருக்குமே என்று உள்ளத்தினில் உறுத்தியது, முகத்தில் தெரிந்து விட்டது போல. இல்லாவிட்டால், சேவை செய்வதற்காக வந்திருந்த ஒரு முதியவர், தானே அருகில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த மனிதரை தவறாக எண்ண வேண்டாம், வேலைப்பளு அவரை அப்படி கோபப்படச் செய்கிறது. அவர்கள் முன் பதிவு செய்யாமல் திடீரென்று வந்து ரூம் கேட்கிறார்கள், அதனால்தான் அவர் டென்சன் அகி விட்டார். வாடிக்கையாக வருபவர்களாதலால், தவிர்க்கவும் முடியாமல் தடுமாறுகிறார். உடனே நான், இருந்தாலும்.......என்று இழுத்தேன்.

அவருக்கு லேசாக என் மீது கோபம் வந்தது போல இருந்தது. நெற்றியில் முடிச்சு விழ என்னை உற்று நோக்கியவர், பேசாமல் திரும்பிப் போனவர், என்ன நினைத்தாரோ திரும்ப வந்து, எங்கள் அருகில் வந்தவர், அம்மா அவரைப் பற்றி, நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் அம்மா, அவர் மாமனிதர் அம்மா என்றார்.. எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அப்பொழுது அவர் கூறிய விசயம் கேட்டு நாங்கள் மிகவும் நெகிழ்ந்துப் போனதோடு, இன்றளவும் அவரிடம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். .......

ஒரு முறை சில வருடங்களுக்கு முன்பு, ஒரு பெரியவர் காசி விசுவநாதர் தரிசனத்திற்காக வெகு தொலைவில் இருந்து வந்தவர், இங்கு வந்து கடுமையான நெஞ்சு வலி வந்து அவதிப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவ மனையில் சேர்த்து தன் கைக்காசு 40000 வரை செலவு செய்து, அவரின் உறவினர்கள் வருவதற்குள் அந்தப் பெரியவரை காப்பற்றி விட்டாராம். அவருடைய உறவினர்கள் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி சொல்லி பணமும் திருப்பிக் கொடுத்து விட்டுச் சென்றனராம். அது மட்டுமல்லாமல், துபாய்நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணை கூட்டி வந்து காசியில் விட்டுச் செல்ல அந்தப் பெண்ணும் மொழியும், வழியும் தெரியாமல் தவிக்க, சத்திரம் வந்து சேர்ந்த அந்த நடுத்தர வயது பெண்ணை எடைப்பாடி பக்கம் உள்ள அவருடைய சொந்த கிராமத்திற்கு தன் செலவிலேயே டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பியுள்ளார். இதையெல்லாம் அவர் எங்களிடம் சொல்லிவிட்டு பின்பு வேகமாக நிற்காமல் சென்று விட்டார். ஆனால் எங்கள் உள்ளம் நெகிழ கண்கள் பணிக்க தவறாக நினைத்ததற்கு மானசீகமாக வருத்தமும் தெரிவித்தோம்............

DSC06493.JPG

காலையில் சென்று விசுவநாதர் ஆலய தரிசனம் முடிந்து அன்று விசாலாட்சியையும் தரிசித்து விடுவது என்று கிளம்பினோம். இரவு கங்கை ஆர்த்தி சென்று பார்க்க வேண்டும் என்றும் திட்டம். காலை நேரம் கூட்டம் மிக நெரிசல். செக்யூரிட்டி செக்கிங், மிக கடுமை. பல அடி தூரத்திற்கு முன்பே, செக்கிங் ஆரம்பமாகிறது. புகைப்படம் எடுக்கும் வாய்ப்பே துளியும் இல்லை. செல்பேசி கூட எடுத்துச் செல்ல இயலாது. ஒரு புகைப்படம் கூட காசி விசுவநாதர் ஆலயத்தை எடுக்க முடியவில்லையே என்று வருத்தமாகத்தான் இருந்தது. தங்கக் கோவில் அழகை ஊனக் கண்ணால் ரசித்து, மனக்கண்ணால் ஆழ்ந்து நோக்கி, உள்ளிருத்தி சேமித்துக் கொள்வது மட்டுமே ஒரே வழி.

அண்ணபூரணி கோவில் விசுவநாதர் ஆலயம் அருகிலேயே உள்ளது. இக்கோவில் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அண்ணப்பூரணியை வீட்டில் வைத்து வழிபட்டாலே உணவிற்குப் பஞ்சம் இருக்காது என்பார்கள். கோவிலின் மகிமையைப்பற்றிக் கூறவும் வேண்டுமோ. தீபாவளி சமயம் மூன்று நாட்கள் மட்டுமே அண்ணப்பூரணி தங்கச்சிலை பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. நாங்கள் சென்ற சமயம் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

காசி ஒரு மாபெரும் தீர்த்த தலமாக இருப்பதற்கு மற்றொரு காரணம், அத்தலம் 1500 ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் கோவில்கள் உள்ளடங்கிய ஒரு ஆன்மீக உலகம் எனலாம். காசி விசாலாட்சி கோவில் ஒரு குறுகிய சந்தில், மீர் காட் அருகில் உள்ளது. இக்கோவிலின் அழகைச் சொல்லி முடியாது. லட்சுமி தேவியின் அம்சமான விசாலாட்சி கோவில் மன நிம்மதி அளிக்கும் மற்றொரு தலமாகும்.

அன்று இரவே கங்கா ஆர்த்தி செல்ல திட்டமிட்டோம். முன்கூட்டியே படகு ஏற்பாடு செய்து கொண்டோம். கரையில் இருந்தும் தரிசனம் செய்யலாம். ஆனால் கூட்டம் அலை மோதுவதால், படகில் சென்று தரிசிக்கலாம் என்றால் அங்கும் நெரிசல்தான். இருந்தாலும் மன நிறைவுடன் முழு பூசையும் கண்டு பரவசமடையும் வாய்ப்பும் அமைந்தது. ஒன்பது படித்துறைகளில் ஒரே நேரத்தில் இந்த பூசை நடைபெறுவதும் சிறப்பு. நூற்றுக்கணக்கான மணிகள் ஒலிக்க, மேள தாளங்கள் முழங்க, ஏழு அர்ச்சகர்கள் ஒரே வரிசையில் நின்று கொண்டு ஒரே நேரத்தில் தீபாராதனைகள் செய்யும் காட்சி பரவசமூட்டக் கூடிய ஒன்றாகும். காசி செல்பவர்கள் எக்காரணாம் கொண்டும் தவிர்க்கக் கூடாத நிகழ்ச்சியாகும் இது. இறுதியில் ஐந்து முறைகள் செய்யும் ஆர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.

இன்னும்பல கோவில்கள் காசியிலேயே தரிசிக்கப் போகிறோம்.

தொடரும்.


--

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...