Wednesday, November 25, 2015

விசுவரூபம்!

பவள சங்கரி






நல்லதாக ஒன்று வாங்க வேண்டும்
ஏன் இருப்பதற்கு என்னவாம்?
வண்ணம் பலவாய் இருந்தாலும்
திண்ணம் சமமாய் இருந்தாலும்
வடிவம் வேறான தோற்றம் 
அத்தனையும்  அசலில்லா நகல்கள்!

சற்றேனும் எதனுடனோ பொருந்தியிருக்கலாம்
எல்லாமே போகமும் மோகமும் தேடுவன
தங்கக்கூண்டில் அடைக்கத் துடிப்பன
முளைக்கத் துடிக்கும் சிறகை 
கிளைக்காமல் தடுக்கும் வளிவீச்சு
துள்ளலை எள்ளலாய் முடக்குவன
விள்ளலாய் வாழ்ச்சியை துய்ப்பன!

பொன்னில் மஞ்சளும் வெண்மையும்
வேறானாலும் திடமும் களமும் வேறல்ல
மஞ்சள்பொன் தொன்மையென்றால்
வெள்ளைப்பொன் நவீனம்தான்
மஞ்சளோ வெள்ளையோ எதானாலென்ன
முடங்கியதும் முடக்குவதும் தரத்தினாலே


விசுவரூபம் காட்டுமந்த ஒன்று வேண்டும்
விகாரமனம் வெளிப்படும் அதுவும் வேண்டும்
விடையில்லா வினாக்களை விடுவிக்கவும் வேண்டும்
விட்டிலாய் வீழாமல் காக்கவும் வேண்டும்.

பகடைகளாய் உருட்டுவோர் பதம்காட்ட வேண்டும்
பத்மவியூகம் அமைப்போர் நிறமும்காட்ட வேண்டும்
பழவினைகள் போக்குவோர் திறமும்காண வேண்டும்
பசப்புகள் பற்றாகாமல் விலகவும் வேண்டும்.

மாறுவேடங்கள் மாறாத மந்திரச் சொற்கள்
கூறுமடியார்போல் கூரான தந்திரச் சாடல்கள்
வீறுகொண்டெழும் வீணரின் விவகார நிந்தனைகள்
சேறுவீசும் சிற்றறிவின் சிலுமிசங்கள்
அனைத்தும் அசலான நகலுக்கு
அறச்சீற்றம் கொள்வதன்றி வடிகாலேதுமில்லையே?






Monday, November 23, 2015

எல்லாமே கணக்குதாங்க ...... !




கி.மு. 569ல் கிரேக்கத்தின் சமோஸ் தீவில் பிறந்தவர் பித்தகோரசு (Pythagoras of Samos). நரம்பிசைக் கருவியான மகர யாழ் இசைப்பதில் வல்லவரான இவர் இசைஞர் மட்டுமல்ல கவிஞரும்கூட. கணிதம், தத்துவஇயல், வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கி.மு. 535 ம் ஆண்டு வாக்கில் சாமோஸ் தீவிலிருந்து எகிப்து சென்ற பித்தகோரசு, அங்கு ஆயகலைகளைக் கற்றார்.
2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பித்தகோரசின் நம்பிக்கைகள் மற்றும் உயரிய தத்துவங்கள் இன்றளவிலும் நம் வாழ்க்கைக்கு இயல்புடையதாகவே இருப்பது ஆச்சரியம்தான் இல்லையா…

Monday, November 16, 2015

மௌனம் உறைந்த மனம் (வரலாறு அல்ல.. கற்பனைக் கதை)


பவள சங்கரி


மனத் தெளிவு மட்டுமே ஒரு சாமான்ய மனிதனை புத்தனாக்குகிறது. ஒரு புத்த பிக்குனி கதை கேளுங்கள்.

இயற்கை வளமும், இறை நலமும் ஒருங்கே உறையும் உன்னத மலை அது. அமைதி.. அமைதி.. எங்கும் பேரமைதி.. அமைதியின் அழகில் இறைமையின் வடிவாக வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலை. தெளிந்த நீரோடையின் இதமான குளிர் தென்றல் சுகமாக அணைத்திருக்க, பதமான பல்சுவையமுதாய் புள்ளினங்களின் மெல்லிய கீதங்கள். இரைச்சலற்ற இனிய நாதங்கள். இவையெல்லாம் மகுடமாய் அலங்கரிக்க மகாராணியாய் வீற்றிருக்கிறாள் அம்பிகைதேவி, பூத்துக்குலுங்கி மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பசுமை வேம்பின் தண்ணிழலில் தனி இராச்சியம் அமைத்தபடி ஆனந்த தியானத்தில் அமைந்திருந்தாள். எண்ணமெல்லாம் இசைக்களிப்பு! சுவாசமெல்லாம் கானத்தின் சிலிர்ப்பு! நேசமெல்லாம் இராகாலாபனையின் உயிர்ப்பு! உண்டியும், உறக்கமும் கூட மறந்த மோன நிலை! இசையே உணவாய், உணர்வாய் உயிர் மூச்சாய் உறைந்திருக்கும் உன்னத நிலை! இதுதான் அம்பிகைதேவியின் இறை நிலை. அவளின் அன்றாட வாடிக்கை. எத்தனைக் காலமாய் இப்படி கிடக்கிறாளோ, அறிந்தவர் எவரும் இலர். பலர் கண்களுக்கு கந்திற்பாவையாகத் தெரிபவள், சிலர் பார்வையில் மட்டும் உயிருள்ள ஓவியமாய், உன்னதக் காவியமாய் காட்சியளிப்பவள். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது. இளவரசன் இமயவர்மன் சிறந்த பௌத்த நெறியாளர். கருணையே வடிவாக, கடமையே உறவாக, மக்கள் நலமே பெரிதாக நினைத்து வாழ்பவன். அவனுடைய அன்றாடப் பணிகளுள் முக்கியமான ஒன்று அம்பிகைதேவி தரிசனம். பெரும்பாலும் கந்திற்பாவை காட்சியே காணக்கிடைத்தாலும் பலமுறை கனவிலும், சிலமுறை அரை நினைவிலும் அம்பிகைதேவியின் உருவைக் கண்டவன். அந்த தீப ஒளியில் கண்கள் கூசிட உள்ளம் மட்டும் பட்டொளியாய் பளிச்சென்று மின்ன, சிறிது சிறிதாக ஞானம் பெற்றவாறு புத்தம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தவன். புரியாத புதிர் ஒன்று கந்திற்பாவையிடம் இருந்ததையும் கண்டவன், என்றேனும் ஓர்நாள் அம்பிகைதேவி தனக்கு விடை பகர்வாள் என்று ஞானம் பெறக் காத்திருந்தான். தேடல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. கந்திற்பாவையின் கழுத்தைச் சுற்றிய யாழிசைக் கருவியின் உறுதியான நரம்புகள் நீண்டு நெளிந்து, சில நேரங்களில் இறுக்கியவண்ணம் இருந்தது. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வண்ணம் காட்டி காண்போரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்த அந்த மென்நரம்புகள் இடையூறாய் இருப்பதாக நினைத்து போகவர விலக்க நினைக்க, இமயவர்மனைத் தீண்ட விட்டால்தானே.. இறுக்கிய இசை நரம்பிற்கு இதயமில்லையோ என்றுகூட கருவினான் அவன். கேள்வி கேட்பாரும் இல்லாமல் பதிலளிக்கவும் முனையாமல் அசையா சடமாக கந்திற்பாவை … பரபரத்து துடித்த கையை , மடக்குவதைக் காட்டிலும் வேறேதும் செய்ய இயலா நிலை இமயவர்மனுக்கு. விடிவு காலம் வர வினையாவும் தீரும் என்று காத்திருந்தான் அவன்.

தமிழ் மொழியின் சொல்வளம்!

பவள சங்கரி


ஒரு பொருளின் தன்மைக்கேற்ப அப்பொருளின் பெயரைக் குறிக்க பல சொற்கள் பயன்படுத்துவது நம் மொழியின் தனிச்சிறப்பு. இது வேறு எந்த மொழியிலும் காணமுடியுமா என்பது ஐயமே… உதாரணமாக,
இலை என்று எடுத்துக்கொண்டோமானால் அதற்கு எத்தனை வகைப் பெயர்கள் பாருங்கள்…
நெற்பயிர் இலைகள் – தாள்
கருப்பஞ்செடி இலைகள் – தோகை
தென்னை, பனை மர இலைகள் – ஓலை
தாழை இலைகள் – மடல்
காய்ந்த இலை – சருகு
சில வகை இலைகளை – தழை என்கிறோம்..

வெண்பனி மனிதன் (கொரிய மொழிபெயர்ப்பு கவிதை)


பவள சங்கரி

சதாசர்வமும் பஞ்சுப்பொதியாய்
பனித்திவலைகள் பெறுவதினிது.
செல்லக்குட்டி நாய்போல்,
மீண்டும் நானொரு சிசுவாய் ஆவதினிது.
கூதாளிக்கால நெட்டை மரங்களினூடே
நோக்கமேதுமின்றி கடப்பதுவே
அற்புதமாம்.
அஃதேபோல் வெண்மை பாதச்சுவடுகளாய்
தனித்திருப்பதும் அற்புதமே.

எம்மை வாழ்த்தும்பொருட்டு
கூதாளியின் விளிம்பில் நிற்கும்
விருப்பமான ஒருவருடனே - எல்லோரும் விரும்பும் அந்த ஒருவருடனே-
இருப்பதும் இனிமையே.
ஒருவரையொருவர் மெலிந்த முதுகுகளை தட்டிக்கொடுத்தவாறு
உளமார்ந்து நகைப்பதும்
உன்னதமே.
இப்பஞ்சுப்பொதி பனித்திவலைகள்போல்
உள்ளார்ந்து நகைத்தலும்
உன்னதம்.
அற்புதம் -
வேதனையின் உச்சத்தில் நொந்ததோர்முறை
சோகத்தின் உச்சத்தில் நொந்ததோர்முறை
ஏழ்மையின் உச்சத்தில் நொந்ததோர்முறை
அதுவும்கூட அற்புதமே.
இவையனைத்தையும் வெண்மையாக்கும்
முடிவில்லாமல் முகிழும் பஞ்சுப்பொதி பனித்திவலைகள்
அற்புதமே.
அதீத
அறிவீனம்தான்,
ஆயினுமோர் வெண்பனி மனிதனாவதில்தான் எத்துனை ஆனந்தம்!

Saturday, October 31, 2015

அழுகுணிச் சித்தரும், கவியரசரும்!



வேதாந்தம், வைத்தியம், யோகம், ஞானம் முதலான பல நிலைகளில் பாடியுள்ளவர் அழுகண் சித்தர். அழுகண் சித்தர் பாடல் 200, ஞான சூத்திரம் 23 ஆகிய இரண்டு நூல்கள் படைத்தவர்.  அழுகணிச் சித்தர் என்றும் அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கப் பெற்றவர்.

    இந்தச் சித்தர்தான்  ஊரைப் பார்த்து , உலகையும் பார்த்து , தன்னையேப் பார்த்தும்  இப்படி அழுதாராம்.

     பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து   
   மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்  
    மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்   
   பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா.          
    - பாழாய் முடியாதோ.


நம்ம கவியரசர் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறதா ?



 திரைப்படம்: காட்டு ரோஜா
 பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
 இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
 இசை: கே.வி. மகாதேவன்
ஆண்டு: 1963


எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! 
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்!

வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

https://youtu.be/D22gJStL37I

Monday, October 26, 2015

ஆப்பிளும் கலீல் கிப்ரானும்!



ஆப்பிள் ஒன்றை  அசைபோடும் உமது பற்கள்  உம்மிதயத்தில்  இதையும் சேர்த்தே அசை போடட்டுமே:

உமது விதைகள் எமது உடற்கூட்டில் உறையட்டுமே,
உமது நாளைய மொட்டுக்கள் எமது இதயக்கூட்டில்  மலரட்டுமே,
ஓ, உமது மணமே எமது சுவாசமாகட்டுமே,
ஆம், நாமிருவரும் ஈருடல் ஓருயிராகக் கொண்டாடி மகிழ்வோமே காலந்தோறும்!

கலீல் கிப்ரான்


“And when you crush an apple with your teeth, say to it in your heart:
Your seeds shall live in my body,
And the buds of your tomorrow shall blossom in my heart,
And your fragrance shall be my breath,
And together we shall rejoice through all the seasons.” 
― Kahlil Gibran

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...