Monday, November 28, 2016

வந்துவிடு வனிதா.. !

பவள சங்கரி


ஓவியம் : நன்றி திரு. ஜீவா

சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில் நுழைந்து ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.அவள் களைப்பாகவும் இருந்தாள்.

Thursday, November 24, 2016

பப்பாளிசின்ன வயதில் நோட்டிற்குள் வைத்த மயிலிறகு குட்டிப் போட்டதா என்று கொஞ்ச நேரத்திற்கொரு முறை பார்க்கும் பழக்கம் இத்தனை வயசாகியும் இன்னும் விட்டபாடில்லை..  

Tuesday, November 22, 2016

உறுமீன்உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை...  நன்றி.


ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி)Monday, November 14, 2016

குழந்தைகள் தினம்!

அன்பு மலர்களே!
கவின்மிகு வனங்களே!
தொட்டால் சிணுங்கியாகிறாய்
அழகு வண்ணம் காட்டி
வலை வீசிமகிழ்கிறாய்!
குயிலின் குரலில் மதிமயக்கி
நினைவிழக்கச் செய்கிறாய்!
மயிலின் ஒயிலாய் வலம்வந்து
வாஞ்சை சேர்க்கிறாய்!
கனிந்த பார்வையில் கல்லையும்
கற்கண்டாய் ஆக்குகிறாய்!
இருண்ட வானில் இனிமையாய்
ஒளி பாய்ச்சுகிறாய்!
திரண்ட மேகமாய் நிறைந்து
நீர் வார்க்கிறாய்!
பனிமழையோ பகல்நிலவோ
பட்டொளிவீசி நிற்கிறாய்!
விழியின் அசைவில் வித்தாகி
விதியின் விருட்சமாகிறாய்!
பாடும் பறவையோ பசுவின்மடியோ
பரவசமாய் நேசமாகிறாய்!
பசுந்தளிராய் பக்கமிருந்து பரிவாய்
பூத்துக் குலுங்கி பசப்புகிறாய்!
புன்னகையெனும் கிரீடம் சூடி
புவியின் புத்தொளியாகிறாய்!
ஆயிரமாயிரம் காலம் ஆருயிராய்
ஆனந்தம்பாடி வாழ்வீர்நீவிர்!!

Thursday, November 10, 2016

சுட்டும் விழிச்சுடர்! - கொடிது .. கொடிது...

பவள சங்கரி


நேற்று காலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் ஏதோ படபடவென மெல்லிய சிறகசைக்கும் ஓசை கேட்டது. சற்றே திரும்பிப்பார்த்தபோது, அழகிய அந்த அடர்நீல வண்ண பட்டாம்பூச்சி என்னருகில் சன்னல் விளிம்பில் தம் சிறகை மெல்ல ஆட்டியபடி அழகு காட்டிக்கொண்டிருந்தது. புதிய 2000 உரூபாய் நோட்டின் சுவையான செய்தியைக்கூடத் தொடரத் தோன்றாமல் அதன் அழகிலேயே இலயித்திருந்த அந்த சுகமான தருணத்தில்தான் திடீரென ஒரு இராட்சசன் பல்லி உருவத்தில் வந்து கப்பென அதன் மென்சிறகைக் கவ்வியே விட்டது. என்ன செய்வது என்று அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அது அந்த சிற்றுயிரை மேலும் தன் வயமாக்கிக்கொள்ள யத்தனித்தது. சட்டென்று சுயநினைவு வந்தவளாக அந்த இராட்சசனை விரட்டிவிட்டாலும் அடுத்த சில மணித்துளிகள் அது துடிதுடித்ததைக் காணச்சகிக்கவில்லை. எப்படியும் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், செய்வதேதும் அறியாமலே உயிர் நீர் ஊற்றுவதாக எண்ணிக்கொண்டு என் விருப்ப தெய்வங்கள் அத்தனையையும் வேண்டிக்கொண்டு துளித்துளியாக நீர் தெளித்தும் பார்த்தும் ஒன்றும் பலனில்லை. இன்னும் மறக்க முடியாமல் மனபாரம் ஏற்படுத்தும் காட்சியது.. மனிதர்களின் வாழ்க்கைகூட இப்படித்தானே. எந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி மாறும் என்று தெரியாமலேதானே நம் விருப்பம்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..