” எப்படி மேடம் நீங்க எப்பவுமே இவ்வளவு உற்சாகமாக இருக்கீங்க ? உங்களுக்கு டென்சனே வராதா ? பிரச்சனைகளே கிடையாதா ? “
வங்கியில் வேலை பார்க்கும் என் கசினைப் பார்த்து பல வருட காலமாக இப்படி கேட்காதவர்களே இல்லை எனலாம். அவ்வளவு உற்சாகமானவர் அவர். அவருடன் பழகும் நபரும் வெகு எளிதில் அதே மூடுக்கு வந்துவிடுவார்கள். இது அவருக்கு மட்டும் எப்படி சாத்தியம் என்று ஆய்ந்த போதுதான் எனக்கு பல உண்மைகள் புரிந்தது.......
இளமையை விரும்பாதவர்கள் இந்த உலகில் எவரும் இலர். பிரச்சனை இல்லாத மனிதரே இவ்வுலகில் இருக்க முடியாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான தீர்வு அந்த பிரச்சனை ஆரம்பித்த இடத்திலேயே உண்டு. அதாவது நம்மிடமேதான் அதற்கான தீர்வு உண்டு. ஆனால் அதை உணர்வதற்கு நோயற்ற தேகமும், அமைதியான மனதும் அவசியமாகிறது. இதைச் சாதிப்பதற்கு இயற்கை தந்த வரப்பிரசாதம்தான் ‘வாக்கிங்’. சுகமான நடை. எந்த விசேடமான முயற்சியும் இதற்காக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
எல்லா வயதினருக்கும் வாக்கிங் செல்வது நல்ல பழக்கமாக இருந்தாலும், 30, 40, 50 - களில் இருப்பவர்களுக்கு மிகவும்விசேடமான பலன்களை அளிக்கவல்லது. எந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. அதுமட்டுமல்லாது 30 வயதிற்குப் பிறகு வரக்கூடிய பெரும்பாலான நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது. எப்படி என்கிறீர்களா ? மேலே படியுங்கள்.
பெரும்பாலானவர்கள் முப்பது வயதில் வாழ்க்கையின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகின்றனர். குழந்தைகளும், பொறுப்புகளும் மட்டுமல்லாமல் எடையும் கூடிப்போய் விடுகிறது. பெண்களென்றால், இப்பிரச்சனை இரட்டிப்பாகிறது. அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வின்படி பொதுவாகவே பெண்கள் முப்பது வயதில் சுறுசுறுப்பு குறைந்து காணப்படுவதாக கூறுகின்றனர். எடை கூடுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகிறது. இன்று பெரும்பாலானவர்கள் கணிணித்துறை போன்றவற்றில் பணிபுரிபவர்கள் அதிகப்படியான நேரங்களை உட்கார்ந்தே கழிப்பதனால் உணவின் செரிமானத்தின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. உடலில் பல கோளாறுகள் உறுவாக இதுவே முதற்காரணமாகி விடுகிறது.
உடற்பயிற்சி மற்றும் வாக்கிங் இந்த நிலையை மாற்றி, கட்டுக்குலையாத மேனியை அளிப்பதுடன் அத்தோடு குறைந்த கலோரி உணவையும் உண்ணும் போது பலன் இரட்டிப்பாகிறது. அதாவது தினமும் 40 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வாரத்திற்கு நான்கு நாட்களும், மற்ற மூன்று நாள்கள் மற்ற உடற்பயிற்சி செய்தாலே போதும் என்கிறார் மில்லர் என்ற ஆய்வாளர். இதுவே ஆரோக்கியமான வாழ்விற்கு மூலதனமாகும்.
வாக்கிங் போவதால் கிடைக்கக்கூடிய மற்றொரு பலன் - முழு நேர சக்தி. காலை அல்லது மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது. இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், சக்தியுடனும் இருக்க முடிகிறது. 40 வயதுகளில் வாழ்க்கையில், பல முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிடுவதால், அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுவதால், அதன்பின் விளைவுகளை சமாளித்தாக வேண்டியுள்ளது. இதற்கும் வாக்கிங் போவதற்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கலாம்.
ஸ்ட்ரெஸ் விடுதலை :- ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது இரத்தக் கொதிப்பும் இதயத் துடிப்பும் அதிகமாகிறது. அழுத்தம் அதிகமாகும் போது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுவதால், சாதாரண சளியிலிருந்து, கான்சர் வரை எந்த நோயாக இருந்தாலும் எளிதாக தாக்கிவிட வாய்ப்பு உள்ளது. வாக்கிங் செல்லும் போது நம் மூளைப்பகுதி பீட்டா எண்டார்ப்பின்ஸ் [ Beta Endorphins] அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால் நாள் முழுவதும் கலகலப்பாக இருப்பதற்கு வழி கிடைத்து, மனச்சோர்வு, கவலை முதலியவற்றிற்கு டாடா காட்டலாம்.
நோய் தடுப்பு :- வாக்கிங் அல்லது சாதாரண உடற்பயிற்சி பழக்கம் உள்ள்வர்களால் கான்சர் போன்ற வியாதிகளினால் இறப்பு நேர்வதைக்கூட தள்ளிப்போட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமல்லாமல் 50 சதவிகிதம் இதய நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். வாக்கிங் போன்று மிதமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் பக்கவாதத்தைக் கூட [ஸ்ட்ரோக் ] தடுக்க முடியுமாம்.
தோல் சுருக்கம் :- வயது ஏறி, சதை குறைய ஆரம்பிக்கும் போது தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. முறையான உடற்பயிற்சி இதனைக் கனிசமாகக் குறைக்கிறது. தேவையான சதையும் கூடி, தோல் சுருங்குவதையும் கட்டுப்படுத்துகிறது.
50 வயது, மெனோபாஸ் காலம், ஹார்மோன்கள் மிகக் குறைவாக சுரக்கக்கூடிய காலமாதலால், பலவிதமான மாற்றங்களை உடல் எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஒரு சில எளிதான உடற்பயிற்சிகள் இந்த வயதிற்குரிய பல பிரச்சனைகளை எளிதாக தடுத்து நிறுத்தி விடுகிறது. முதுமையை வெல்ல வேண்டுமானல் இன்றிலிருந்து வாக்கிங் செல்ல ஆரம்பியுங்கள்.
இதயத்தைப் பாதுகாக்கக் கூடிய ஈஸ்ட்ரோஜன் இழப்பினால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், HDL என்கிற நன்மை கொழுப்பை அதிகப்படுத்தி, LDL எனப்படும் தீய கொழுப்பை குறைத்து இரத்தக் கொதிப்பையும் தடுக்க வாக்கிங் உதவுகிறது. பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய தூக்கமின்மையை சரிகட்டி, ஆழ்ந்த அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
மூட்டு வலி :- உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனையால், லட்சக்கணக்கானவர்கள், வயது வரம்பின்றி, பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி, தேவையான வாக்கிங், அத்துடன் எளிமையான உடற்பயிற்சி இவை கொண்டே பெரும்பாலும் சரி செய்து கொள்ளலாம். அதிகமான வலி நிவாரணிகள் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற, ஹார்மோன் குறைபாட்டினால், எலும்பு வலுவிழந்து, முறிவு ஏற்படக்கூடிய அபாயத்திலிருந்து வாக்கிங் காப்பாற்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவையனைத்திற்கும் மேலாக “வாக்கிங்”, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவல்லது. சுயமரியாதை, தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான தோற்றம் இவையெல்லாம் வாக்கிங் வழங்கும் போனஸ்!