Thursday, September 5, 2013

நன்றி சொல்லும் நேரமிது!


பவள சங்கரி


என்னை ஈன்றெடுத்து, பெயர் சூட்டி நல்லபடியாக, ஒழுக்க நெறி தவறாமல் வாழ வழிகாட்டி என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஊட்டி வளர்த்து, நல்ல கணவரைத் தேர்ந்தெடுத்து எம் வாழ்க்கையை மேலும் செம்மையாக்கி, இன்று வரை அதிகாலையில் முதல் வாழ்த்தாக எனதருமைப் பெற்றோரின் வாழ்த்தைப் பெறுவதில் மனம் இமையமாய் பெருமை கொள்கிறது. என் தந்தையின் அழகு தமிழ் வாழ்த்துரை என்றும் எம் மனதில் ரீங்காரமிடும் ஒன்று. ஆண்டவன் அருளால் இன்று போல என்றும் இதே அமைதியுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன். 

                                                    எனதருமைப் பெற்றோர்


எங்க குடும்பம் ரொம்ப பெரிசு! வெளிநாடுவாழ் என் குழந்தைகள் உள்பட இன்னும் பாதி டிக்கெட் குறைகிறது. விரைவில் முழு படத்தையும் எடுத்துப் போடுகிறேன்.....


நாட்கள் நிமிடங்களாகக் கரைந்துகொண்டிருக்கின்றன. செப்டம்பர் 4 நேற்று பிறந்தநாள் வழக்கம்போல் வந்தது. நண்பர்களின் வாழ்த்து மழை வழக்கம் போல் உற்சாகமளிப்பதாக இருந்தது. என்ன பேறு பெற்றோம் என்று மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இதற்கு நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை. இந்த முறை எனக்காக நண்பர்கள் எழுதிய கவிதைகளைப் பத்திரமாக, பொக்கிசமாக சேமித்து வைக்க வேண்டுமல்லவா? இதோ :


முனைவர் அண்ணாகண்ணன் - தமிழ் எடிட்டர் - யாஹூ


அயராத உழைப்பு, அன்பினில் திளைப்பு,
முயற்சியுள் முனைப்பு, முன்னேற்றும் படைப்பு,
செயல்வீரச் சிரிப்பு, சிந்தனைத் தெறிப்பு,
பயனாகும் நினைப்பு, பவளாவின் சிறப்பு.
ஆசிரியர் பவளசங்கரி, நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.


அன்புத் தோழி அருமை எழுத்தாளர், கவிஞர் ஷைலஜா என்கிற மைதிலி

செப்டம்பர் நான்கினில் பிறந்த
செந்தமிழ்ச்செல்வியே!
எப்போதும்  புன்னகைகொண்ட
எழில் பவள சங்கரியே!
செல்விருந்தோம்பிவருவிருந்தேற்கும்
வல்லமை நாயகியே!
எளிமையும் அன்பும் இன்முக ஓம்பலும்
என்றும் கொண்ட என் உயிர்த்தோழியே!
அறிவும் ஆற்றலும் ஆழ்ந்த புலமையும்
பரிவுடன் பற்றும் பாங்குடன் பழக்கமும்
உடையவர் நட்பினில் உன்னதம்  வாழ்க்கை!
அறிவினை விற்கும் வறிஞருக்கிடையில்
அறிந்ததைக்கொடையாய் வழங்கிடும் வள்ளல்
பலரது படைப்புகள் பயன் பெற அளிக்கும்
பன்முக மங்கை பவளசங்கரி வாழி நீ!



அன்பு நண்பர், அருமைக் கவிஞர் திரு சத்தியமணி


அவளா  யிரம்      தருவா        ளெனத்       திறமா     யெடுத்து
இவளே  யிதன்   தலைமை  யெனும்      பதவி       கொடுத்து
துவளா    மலரி   திருமா         லவன்          கவிச்        சீரெடுத்து
பவளா     யென   அருளா        ய்த்த‌மிழ்     சிவமே   உமையே


ஆசிரியர்  தினத்தில் சங்கம் வளர்க்கும் வல்லமை  இணைய ஆசிரியர்க்கும், 
அவருடன் செயலாற்றும் துணை ஆசிரியர்களுக்கும் அன்பு கனிந்த வாழ்த்துகள்.
தங்கள் சுயநலமற்ற பணி  தொடர அன்னை மீனாளும் அப்பன் சொக்கனும் 
துணையாகட்டும்.


S.Sathiyamani,
Director (Technical)
NIC, DIT, M/o IT And Communcation,
New Delhi
9868126406

நன்றி என்ற மூன்றெழுத்து வார்த்தையைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். 

அன்புடன்
பவள சங்கரி


Erode Tamilanban சீரத்தஅறிவும் செம்மாந்த தமிழ்த்தேர்ச்சியும்,சுடரும்சொல்லாற்றலும் வாய்க்கப்பெற்றதோடுபண்புநலமும் பெற்றுத்திகழும் திருமதிபவளசங்கரி தமிழ்த்தாயின் வாழ்த்துக்கு உரியவராதலால் நானும் வாழ்த்துகிறேன். Erode Tamilanban ஆய்வுக்கு உரிய படைப்பளித்த உங்களைவாழ்த்துகிறேன்.

Wednesday, September 4, 2013

பேராண்மை!


பேராண்மை!

"ஏண்ணா, கோவில் நடையைத் திறக்க நாழியாயிடுத்துன்னு பறந்துண்டு ஓடினேள்.... என்ன ஆச்சு, திரும்ப வந்துட்டேள்

என்னத்தச் சொல்ல.. வழக்கம் போலத்தான். அந்தப் பக்கத்தாத்துல புதுசா குடி வந்திருக்காளே அந்த தில்லிக்காரா.. அந்தப் பொண்ணு காலங்கார்த்தாலே வந்து நிக்கிறா.. நல்ல காரியமா போறச்சே இவோ மூஞ்சியில முழிச்சுட்டுப் போக சங்கடமா இருக்கு. கொஞ்சம் தூத்தம் கொண்டாடி. குடிச்சிப்பிட்டு கிளம்பறேன்

ஏண்ணா நம்மாத்தை விட்டு வெளியில் படியிறங்கறா வரையிலத்தான் சகுனம் எல்லாம் பார்க்க முடியும். தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிச்சப்பறம் யார், யாரோ வருவா.. போவா...  அதெல்லாம் சகுனத்தடையா நினைச்சா எப்படிண்ணா..

அப்படியில்லைடி.. புதுசா எதிர்த்தாத்துக்கு வந்திருக்கவா, அந்தப் பொண்ணு ஏதோ ஒரு காரணத்துக்கு கரெக்டா எதிர்ல வந்துட்றா.. அவளைப் பார்த்துட்டு அப்படியே கிளம்ப மனசு ஒப்பலைடி நேக்கு. நல்ல காரியம்  பண்றதுக்கு கிளம்பும்போது இப்படி வெறுங்கழுத்தோடவும், பாழும் நெற்றியோடவும் இருப்பவளைப் பார்த்துட்டுக் கிளம்ப மனசு என்ன்மோ பண்றது.. அதான் வந்து, தண்ணி குடிச்சுப்பிட்டு, சித்த நாழி கழிச்சி புறப்படலாம்னு வந்தேன்

அந்தப் பொண்ணு நம்ம பக்கத்துல இருக்கிற பள்ளியில டீச்சரா வேலை மாத்தி வந்திருக்காண்ணா.. குடும்பத்தோட வந்திருக்காங்க. அவ்ளுக்கு ஒரு பையனும் இருக்கான். ஐந்து வயசு இருக்கும். அவனையும் கூட்டிண்டு ஏதேதோ கிளாஸ், அப்பறம் பள்ளிக்கூடம் போவா.. தினமும் நீங்களும் அதே நேரத்துல கிளம்பறேள். இனிமேல் அரை மணி முன்னாலேயே கிளம்புங்கோ. அவ்ளோதானே. அதுக்கு ஏன் சலிச்சுக்கறேள்