நறுக்.. துணுக்…
பவள சங்கரி
நாசா உறுதிப்படுத்திய பூமியைப் போன்ற மற்றொரு கிரகம்!
அண்டவெளியில் , பூமியைப் போன்று உயிரினங்கள் சுகமாக வாழ்வதற்கு ஏற்புடையதாக வேறு ஏதும் கிரகங்கள் உள்ளதா என்பதனை அறியும் விதமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் விண்கலம் ஆய்வு செய்து கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு விஞ்ஞானிகளால் பூமியைப் போன்ற கிரகம் ஒன்று வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கெப்ளர் விண்கலம் மூலம் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதில் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .கெப்ளர் விண்கலத்தில் உள்ள அதி நவீன புகைப்படக்கருவிகள் சுமார் 600 இலட்சம் கோடி கி.மீ தூரத்தில் பூமி போன்றதொரு கிரகம் இருப்பதை உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். பூமிக்குக் கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால் அங்கு மென்மையான வெப்பநிலை நிலவுகிறதாம்.இதனால் திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கெப்ளர் 22பி என்று பெயரிடப்பட்ட அந்த கிரகம் பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரியதாக இருக்கலாம் என்றும், அதன் வெப்ப நிலைகள் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பானதொரு தொலைவிலிருந்து சுற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்பட்ட இந்த கெப்ளர் விண்கலம் சுமார் 155,000 நட்சத்திரங்களைக் கண்கானித்து வருகிறது. இத்தொலைக்காட்டி மூலம் இதுவரை கிரகங்கள் என்று அங்கீகாரம் பெறத்தக்கவைகள் என 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.