பவள சங்கரி
தலையங்கம் (வல்லமை இணைய இதழ்)
நம் நாடு முழுவதும் இன்று 65 வது குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்த நம் இந்தியாவை தம் குருதி மட்டுமல்லாமல் இன்னுயிரையும் ஈந்து, நம்மையெல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த தன்னலமற்ற தலைவர்களை நினைவுகூர்ந்து வணங்க வேண்டிய நாள் இது. வியாபாரம் செய்ய உள்ளே வந்து நம் நாட்டையே பிடித்துக் கொண்டவர்களிடமிருந்து அகிம்சை முறையில் போராடி 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுத் தந்தனர் நம் தேசத் தலைவர்கள். விடுதலைக்குப் பிறகு, நம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மக்களாட்சியை மலரச் செய்ய முயன்றனர். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நம் இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு தின, கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார்கள். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு இராஜேந்திரப் பிரசாத் அவர்கள். இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் தம் தாய்த் திருநாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.