Saturday, May 5, 2012

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! - (3)


வீழ்வது உற்சாகமாக எழுவதற்காகத்தான்!

“நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது. ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது. நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை. மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.” டெஸ்ஸி தாமஸ்.

“டெஸ்ஸி தாமஸ் வெற்றிப் பாதையில் தமது கனவுகளைத் தொடர்ந்து முயலும் பல பெண்டிர் இதய உந்துதலோடு வேட்கையுடன் பின்பற்ற விரும்பும் பெண் விஞ்ஞானிகளுக்கு ஒரு மாடல்,” என்று கருதப் படுகிறார். - இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம்

”அவர் சேரும் போது அவரது ராக்கெட் பணியகத்தில் ஒரு சில பெண்டிரே வேலை செய்து வந்தார் என்றும், தற்போது 200க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் பல்வேறு போர்த்துறைப் பணிகளில் வேலை செய்து வருகிறார்கள் என்றும் கூறுகிறார். பெண் விஞ்ஞானிகளுக்கு அளிக்கும் இந்திய சிறப்புப் பரிசு (Shanthi Swarup Bhatnagar Award) கடந்த 50 ஆண்டுகளில் (1958-2010) பெற்றவர் 11 பெண்டிர். அதே சமயம் 2011ம் ஆண்டில் மட்டும் பரிசு அளிக்கப்பட்டவர் 3 பேர். டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்கு இந்திய சிறப்புப் பரிசோடு எதிர்காலத்தில் பாரத ரத்னா பட்டமும் கிடைக்க வாய்ப்புள்ளது.”

2008 ஆம் ஆண்டில் இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் (The Indian Women Scientists Association) அவருக்குச் சூடிய புகழுரையில், “வீட்டுக்கும், விஞ்ஞானப் பொறுப்பு வேலைக்கும் இடையே கட்டிய இறுக்குக் கம்பியில் விழாமல் நடந்து தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்ட பல அன்னையரைப் போன்றவர் என்று சொல்லிப் பாராட்டியது. இவரது குருநாதரான இந்தியாவிற்கு அசுர வல்லமை ஈந்த ராக்கெட் பொறியாளர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கீழ் பணி செய்தவர்.

விஞ்ஞானப் பெண்மணி பிரியம்வதா நடராஜன் நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. இராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், கணித மேதை இராமானுஜன் போன்ற இந்திய விஞ்ஞான மேதைகளின் வரிசையில் ஓர் உன்னத ஆராய்ச்சியாளாராய் அடியெடுத்து வைக்கிறார். நோபெல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகளான மேரி கியூரி, புதல்வி ஐரீன் கியூரி, (Marie Curie, Irene Curie) அணுப்பிளவை விளக்கிய லிஸ் மெய்ட்னர் (Lise Meitner) ஆகியோர் அணியில் பிரியா தடம் வைக்கிறார். அவர் முதன்முதல் கண்டுபிடித்து உலக விஞ்ஞானிகளுக்கு அறிவித்த “கருந்துளைப் பெருநிறை வரம்பு” உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “இராமன் விளைவு” (Raman Effect), “சந்திரசேகர் வரையறை” (Chandrasekhar Limit) போன்று “பிரியா வரம்பும்” (Black Hole Ultra-Mass Limit) விஞ்ஞான வரலாற்றில் சுடரொளி வீசும் மைல் கல்லாக விளங்கப் போகிறது. ஒளிமயமான எதிர்காலத்தில் பிரியாவுக்கு வெகுமதியாக வானியல் பௌதிக விஞ்ஞானத்துக்கு நோபெல் பரிசும் கிடைக்கவும் பெரியதோர் வாய்ப்புள்ளது
- சி. ஜெயபாரதன், கனடா
அக்கினி புத்திரி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear)

இது போன்று விஞ்ஞானம் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இன்று பெண்கள் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் கண்கூடாகக் கண்டாலும், இந்நிலையை அடைவதற்காக பெண் சமுதாயமும், கல்வியாளர்களும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த விளைந்தவர்களும் பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. ஆறாம் நூற்றாண்டிலேயே கிரேக்க நாட்டில் பெண் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். பெண்கள் கல்வி நிலையங்கள் கூட நடத்தியிருந்திருக்கிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் பெண்ணுரிமை பற்றிய பேச்சு மெல்ல பிரான்சு நாட்டில் தலை தூக்கியுள்ளது. 17ம் நூற்றாண்டில் பல பெண் எழுத்தாளர்கள் தோன்றி பெண்ணுரிமையை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேற்கிந்திய அடிமை கிளர்ச்சியிலும் இந்த பெண்ணீயவாதி எழுத்தாளர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். 18ம் நூற்றாண்டில் நடந்த பிரஞ்சுப் போராட்டத்தில் பெண்களின் பங்கு பெருமளவில் இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் பெண்கள் தங்கள் உரிமையைப் பற்றிய விழிப்புணர்வு பெற ஆரம்பித்தார்கள். ஆண்களைப்போல தாங்களும் சுதந்திரமாக இருக்கப் பிறந்தவர்கள்தான் என்ற விழிப்புணர்வும் கொண்டார்கள்.

ஆனால்,18ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் பொருளாதார சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்படும் வகையில் சட்டங்களும், குறியீடுகளும் ஏற்படுத்தப்பட்டு அவர்தம் வாழ்க்கை வீட்டோடு முடக்க்பபட்டது. குடும்பக் காரியங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு என்பதாக சுருக்கப்ப்பட்டது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பெண்கள் இயக்கம் ஊக்கம் பெற ஆரம்பித்தது எனலாம். உலக அளவில் இந்த விழிப்புணர்வு வெளிப்படையாக தெரிய ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில்தான். பெண்கள் திருமணம் என்ற பெயரில் பேரம் பேசப்பட்டு சொந்த உடமையாக்கப்பட்ட பொருளாக வடிவம் பெற்றதும் இந்த காலகட்டத்தில்தான். தேர்தலில் ஓட்டு போடும் ஜனநாயக உரிமைகூட மறுக்கப்பட்டதோடு சொத்து உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது.

இதே 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான், சீன நாட்டுப் பெண்களும் தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், சொத்துரிமை மற்றும் ஆண்களுடன் சம உரிமைப் போராட்டமும் மேற்கொண்டனர். இதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் சுதேசி இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராக, பெண்களும் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு பிரித்தானியப் பொருட்களை புறக்கணித்து ஒத்துழையாமை இயக்கத்திலும் தீவிரமாக பங்கெடுத்தனர். பிரித்தானியர்களிடமிருந்து தொற்றிக் கொண்ட வரதட்சணை பிரச்சனை பற்றிய வினாக்களும் எழுந்தன. மற்றொரு புறம் ஆப்பிரிக்கப் பெண்கள் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அடிப்படை உரிமைகளையும் வேண்டியும் போராட ஆரம்பித்தனர். எகிப்து போன்ற ஆப்ரிக்க நாடுகளில் பெண்களின் திருமண வயதும் உயர்த்தப்பட்டது. பெண்களின் ஓட்டுரிமை என்பது உலகளவில் பெரும்பிரச்சனையானதும் இதே காலகட்டத்தில்தான். ஓட்டுரிமை முதலில் நியூசிலாந்து நாட்டிலும், தொடர்ந்து, பிரிட்டான், அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வழங்கப்பட்டது. காலனிய இந்தியாவிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் வந்தது.

ரஷ்யாவின் சோசலிச இயக்கத்தில், பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டாலும், ஸ்டாலினின் ஆட்சிக் காலங்களில் விசயம் மோசமாகிப் போனது. சுய மரியாதையுடன் வாழும் உரிமை மற்றும் இனப்பெருக்க உரிமைகள் பறிக்கப்பட்டது. சீனாவிலும் சோசலிச இயக்கம், பெண்களுக்கு சம உரிமையைப் பெற்றுத் தந்ததன் மூலமாக குடும்பப் பொறுப்பையும், பணியையும் ஒருசேர நடத்திச் செல்லும் வாய்ப்பும் பெற்றார்கள். இந்த முதற்கட்ட பெண்ணுரிமைப் போராட்டம் மூலமாக ஓட்டுரிமையும், சொத்துரிமையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரஞ்சு நாட்டிலும் பெண்கள் தங்கள் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டதோடு, ஓட்டுரிமையையும் பெற்றுக் கொண்டார்கள்.

1960 முதல் 1980 வரை இரண்டாம் கட்ட பெண்ணுரிமை அலை வீசிய போதுதான், குறிப்பாக அமெரிக்காவில், வெடித்து அந்தத்தீ சுவாலை உலகம் முழுவதும் மளமளவென பரவியது. சிவில் உரிமைகள், கருக்கலைப்பு உரிமை உள்ளிட்ட பாலியல் விடுதலை, குழந்தை வளர்ப்பு, சுகாதார நலம், கல்வி, பணி மற்றும் இனப்பெருக்க உரிமைகள் ஆகியவைகள் முக்கியப் பிரச்சனைகளாக கருதப்பட்டது. பெண்களுக்கு கலாச்சார மற்றும் சமூக சமத்துவம் போன்றவைகள் பெண்ணிய அலையின் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. அதாவது பெண்கள் குடும்பப் பொறுப்பைச் சுமக்க மட்டுமே தகுதியானவள் என்ற கருத்து முறியடிக்கப்பட்டு, அவர்கள் ஆண்களுக்கு நிகராக தொழில் புரிவதிலும், பணியை மேற்கொள்வதிலும் சம உரிமை வழங்கப்பட்டது. அடுத்து, இது மெல்ல மெல்ல, உலகளாவிய நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது கலாச்சாரம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

குடும்பத்தில், உறவுகளில், பணியிடங்களில், சமூகத்தில் நிகழும் அவலங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்க வேண்டியவளானாள் பெண். ஒரு கொள்கையோ, கோட்பாடோ ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை மறுத்தாலோ,, அவளை அடக்கி வைக்கவும் அடிமைப்படுத்தவும் நினைத்தாலோ,, அவளிடம் புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர விடாமல் தடுத்தாலோ அவற்றைக் கண்டு போராடக் கூடிய துணிச்சலும் படிப்படியாக வளர ஆரம்பித்தது.

பொருளாதார சுதந்திரத்தை ஒரு பெண் பெற்றிருந்தாலும்கூட, சமுதாய, கலாச்சார சுதந்திரம் கிடைக்கும் போதுதான் நிலையான பொருளாதார சுதந்திரத்தைப் பெற முடியும். நன்கு படித்து, உயர் ப்தவியில் இருக்கக்கூடிய பெண்கள் இன்று நல்ல நிலையில் இருப்பதாக எண்ணினாலும், இந்நிலையை அடைவதற்கு உலகளவில் எத்துனைப் போராட்டங்கள், பெண்ணியவாதிகள் நீண்ட காலமாக நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எத்தனையோ சிந்தனையாளர்கள், முற்போக்குவாதிகள், எழுத்தாளர்கள் என தங்கள் தொடர் முயற்சிகள் மூலம்தான் இன்று நாம் இந்நிலையை எட்டியிருக்கிறோம் என்பதும் உண்மை. பீகாரிலோ, உத்திரப் பிரதேசத்திலோ, மத்தியப் பிரதேசத்திலோ ராஜஸ்தானிலோ இன்றளவும் இதுபோன்ற விவாதங்களுக்கு இடமே இல்லை.

ஆக, பெண் என்பவளும் தனக்கென்று ஒரு மனம், தனக்கென்று ஒரு நோக்கம், கருத்து என்று கொண்ட ஒரு தனிப்பிறவி என்பதை ஏற்றுக் கொண்டாலும், பெண்ணிற்கான எல்லை வீடு மட்டுமே என்ற குறுகிய வரம்புக்குள் பாதுகாப்பு என்ற போர்வையில் சமுதாயம் அவளை அடைத்தபோதும், அந்த எல்லையையும் மீறிக்கொண்டு, அந்த வரம்புகளையும் கடந்து, கல்வி மற்றும் தங்களுடைய தனித்துவ ஆளுமையாலும் பல்வேறு அழுத்தங்களையும், மீறி, சாதனை புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆடவரைக் களிப்பூட்டும் அலங்காரப் பொருளாக மட்டும் வாழாமல், வெளியில் வந்து சாதிக்கத் துடிக்கும் பெண்ணின் போராட்டத்தையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல நற்சிந்தனையாளர்கள பெரும் தொண்டாற்றிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் என்பவள் சார்பு நிலையில் மட்டுமே இயங்கக் கூடியவள் என்று முத்திரை குத்தப்பட்டு, அவள்தம் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட காலகட்டமான 18ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த (condorcet) காண்டார்செட் என்னும் தத்துவ மேதை
பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர்களின் கல்வியறிவை மேம்படுத்தி தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீட்டுக் கொண்டுவர உதவ வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். பெண்களின் மீது சமத்துவமின்மை, வெறுப்புணர்ச்சி போன்ற நியாயமற்ற தரக்குறைவான போக்கை ஆண்கள் கைவிட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். அக்காலகட்டத்தில் நடந்த தொழிற்புரட்சியும் பெண்ணுரிமைக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியதால் ஆண்களோடு சமமாக பெண்களும் இணைந்து பணியாற்றி சம உரிமை பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

இத்துனைப் போராட்டங்களுக்குப் பிறகு பெற்ற சுதந்திரத்தை இன்று பெண்கள் மிக நல்ல விதமாக பயன்படுத்திக் கொண்டு பல துறைகளிலும் மிகச் சிறந்து விளங்குவதும் கண்கூடாகக் காணமுடிகிறது!



--

Thursday, May 3, 2012

மறு முகம்




தோட்டத்தின் மகிழ மரத்தில் கூடுகட்டி வாழும் அந்த புள்ளிப்போட்ட புள் கூட்டம் தான் வைத்த அந்த ஒரு பிடி சோற்றில் உயிர் வாழுவது போல ஒரு மன நிறைவில் இன்பமாக இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நம் கதை நாயகி அங்கையற்கண்ணி, சமயலறை சன்னல் வழியாக. வழக்கம் போல. அன்றாடம் இரவு ஒரு பிடி சோறு தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும், பாத்திரத்தை சுத்தமாக கழுவி கவிழ்க்க கூடாது, காரணம் இறந்து போன நம் முன்னோர்கள் சில நேரங்களில் பசியுடன் வந்து தன்னை நினைத்து ஏதும் மிச்சம் வைத்திருக்கிறார்களா என்று சோதிக்க வருவார்களாம். இப்படி ஒரு பிடி சோறு இருந்தாலும் தன்னை நினைத்துத்தான் வைத்திருக்கிறார்கள் என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்களாம். அதனால் அன்றாடம் ஒரு பிடி சோறு வைக்க வேண்டும் என்பது தன் மாமியாரின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், இந்த ஒரு பிடி சாதத்தை அதிகாலையில் புள்ளினங்கள் பலதும் உண்டு பசியாறக் காண்பதில் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது. இது அன்றாட தியானம் என்பதானதொரு உன்னத விசயமாகவும் ஆகிவிடுகிறது.

வாசலில் பால்காரரின் மணியோசை கேட்டு தியானம் கலைந்து சென்று பாலை வாங்கிக் கொண்டு உள்ளே வந்து கடிகாரத்தைப் பார்ப்பதற்கு முன் தொலைக்காட்சியை போட்டுவிட்டுத் தான் மறு வேலை. அவளுடைய மானசீக குருவின் ஆன்மீக உரை ஒலிபரப்பாகும் நேரம் அது. அந்த பதினைந்து நிமிடம் யார் வந்து குறுக்கிட்டாலும் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிடுவாள். அதுவரை குழந்தைகளையும் எழுப்பிவிட மாட்டாள். கணவனுக்கு காபி கூட இதற்குப் பிறகுதான் கிடைக்கும். வாழ்வியல் தத்துவங்களை அழகாக ஒரு குட்டிக் கதையும் சொல்லி விளங்க வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அத்துனை தெய்வீகத் தொனி வீசும் அவர் சொற்பொழிவில் என்பது அங்கையின் எண்ணம். தன்னுடைய சில குடும்ப பிரச்சனைகளுக்குக்கூட ஏதோ ஒரு வகையில் ஒரு தீர்வு அவரிடமிருந்து வரும் என்று ஆழமாக நம்புவாள்.

“அங்கை.. என்னமமா.. காப்பி ரெடியா?”

“வரேன்.. வரேன். பால் காய்ந்துதானே ஆக வேண்டும். நானும் கூடவா காய முடியும்?”

“ அடடா நான் உன்னையும் சேர்ந்து காயவா சொன்னேன். சரி, அதிருக்கட்டும், இன்று உன் தங்கை குடும்பத்தோடு வரேன்னு சொன்னதாகச் சொன்னாயே, அவர்களை இருந்து சாப்பிட்டுவிட்டு போகச் சொல். ஏதாவது நல்ல சமையலாகச் செய்”

“ஓ.. சம்பாதிக்கிற மகராசர் அனுமதி கொடுத்தாச்ச்ச்ச்ச்ச்.. செய்துட வேண்டியதுதான்”

“இந்த குசும்புதானே வேண்டாங்கறது... நம்ம வீட்டிற்கு விருந்தாளியா வறாங்களே, நல்லபடியா கவனித்து அனுப்பனுமேன்னு ஒரு ஆசையா சொன்னா என்ன குதர்க்கமா பதில் சொல்ற... இதுல வேற காலையில தவறாம ஆன்மீக் உரை வேற.. இன்னும் மனம் பக்குவப்படாமலே இருக்கறயே?”

திரும்பி ஒரு முறைப்பை மட்டும் பதிலாக வீசிவிட்டுச் சென்றாள்.

அடுத்து பரபரவென வேலைகள், பம்பரமாக சுழன்று முடித்து கணவனையும், குழந்தைகளையும், அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் அனுப்பிவிட்டு அக்கடாவென கையில் ஒரு காப்பி கோப்பையுடன் உட்கார்ந்தபோதுதான் காலையில் கணவன் சொன்ன விசயம் நினைவிற்கு வந்தது.. எத்தனைதான் நல்ல விசயங்கள் செவிக்குணவான போதும், பாழாய்ப்போன இந்த பிறவிக்குணம் பொங்கலிட்டாலும் போகாது என்பது போலல்லவா ஆட்டம் கட்டுகிறது. இனி மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் பக்குவத்தை இழக்கக் கூடாது.. கோபம் சிறிதும் கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக முடிவு செய்த பின்புதான் மனம் அமைதியானது. சிறிது நேர ஓய்விற்குப் பிறகு போய் சுகமாக நீராடிவிட்டு, தங்கை வருவதற்காக ஏதாவது விசேசமாக சமைக்கலாம் என்று சமையலறை சென்று மளமளவென சமையலை முடித்தாள். தங்கையின் கணவர் மதிய நேர ஷிப்டிற்கு கம்பெனிக்குச் செல்ல வேண்டியவர் மனைவியையும் குழந்தையையும் கொண்டுவந்து விட்டுவிட்டு மதிய உணவு முடித்து கிளம்பி விடுவார். இன்று எப்படியும் சென்று தன் மானசீகக் குருவை சந்தித்தே தீருவது என்று தங்கையுடன் பேசி வைத்திருந்தாள். துணைக்குத் துணையாக தங்கை வரும்போது கணவனிடம் பேச்சு வாங்க வேண்டிய அவசியம் வராது....

உண்மையான தியானம் என்பது பற்றி ஐயா பேசிக் கேட்க வேண்டும். அந்தப் பேச்சைக் கேட்பதே ஒரு தியானம்தான். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக ஐயாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தும், முதன்முதலில் இந்த பேச்சுதான் அவளை அவருடைய பரம சிஷ்யையாக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் நல்ல பல சிந்தனைகளை சிந்தாமல், சிதறாமல் அத்துனை அழகாக அவர் சொல்லும் விதம், அவரை ஒரு நாளாவது நேரில் சென்று காலில் விழுந்து ஆசிகள் வாங்க வேண்டும் என்ற ஆவலை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருந்தது. கணவனிடம் வாதம் செய்து இரண்டு முறை அவரை சந்திப்பதற்காக மெனக்கெட்டு அத்தனை தூரம் சென்றும், ஐயா
வெளிநாடு சென்றிருந்ததால் பார்க்க முடியவில்லை. இந்த முறை எப்படியும் சந்தித்து ஆசி வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஐயா அடிக்கடி சொல்வது போல,

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

என்ற தாரக மந்திரம் மட்டும்தானே தன்னுடைய போராட்டமான மத்தியதர வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு வடிகாலாக இருக்கிறது. திருமூலரின் திருமந்திரமும், திருவாசகத்திற்கும் உருகும் பண்பும், வள்ளலாரையும், இராமகிருஷ்ண பரமஹம்சரையும், விவேகானந்தரையும் துதிக்கும் பேரானந்தமும் தனக்கு எங்கனம் வாய்த்திருக்கும். இப்படி குடும்பப் பிரச்சனையில் உழன்று, உழன்று மனம் நொந்து, டீவி சீரியலில் கரைந்துறுகி, பொழுதன்னிக்கும் கண்டவர்களிடமெல்லாம் புலம்பித் தீர்க்கும் ஒரு சராசரி குடும்பப் பெண் போலல்லவா ஆகியிருக்கும் இவள் நிலையும். ஆனால் இன்று எதையும் தாங்கும் இதயம் மட்டுமல்லாமல் நல்ல ஆன்மீக இலக்கியங்கள் வாசிக்கும் பழக்கமும் வாய்த்திருக்கிறதே. அதற்கு ஐயாவிற்கு காலம் முழுவதும் கடமைப்பட்டவளாக இருக்க வேண்டும். நேரம் போனதே தெரியாமல் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தவளுக்கு அழைப்பு மணியின் ஒலி நினைவுலகிற்கு மீட்டது.

வாசலில் தங்கை குடும்பம் நின்றிருந்தார்கள்.. குழந்தை மழலையில் பெரீம்மா என தேனிசையாய் ஒலிக்க அப்படியே வாரிச்சென்று குழந்தையை அணைத்துக் கொண்டாள் அங்கை. தங்கை கணவருக்கு உணவு பரிமாறி அவரை அனுப்பி விட்டு தாங்களும் சாப்பிட்டு ஓய்வெடுத்து, மகன் பள்ளிவிட்டு வந்தவுடன் அவனையும் அழைத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள் குழந்தையுடன். வழியெல்லாம் இன்று ஐயாவை எப்படியும் சந்திக்கும் வழி செய்ய வேண்டும் என்று தம் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டாள். அவள் வேண்டுதல் செவி சாய்க்கப்பட்டது அந்த தெரு முனைக்குச் செல்லும் போதே அங்கு வாகனங்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதில் தெரிந்தது...ஐயா இன்று ஊரில்தான் இருக்கிறார் என்பது புரிந்தது.

நன்கு பரந்த முன் வாசலில், இருக்கைகள் போடப்பட்டு, வருபவர்களை அமரச் செய்திருந்தனர். சுவரில் ஐயாவின் மிகப்பெரிய புகைப்படம். நெற்றி நிறைய திருநீரும் சிரித்த முகமும், அமைதி தவழும் முகமும் கையெடுத்து கும்பிடத் தோன்றியது. அங்கு அமர்ந்திருந்தவர்களை அப்படியே சுற்றி நோட்டம் விட்டவள் கரை வேட்டிக்காரர்களுக்கெல்லாம் இங்கு என்ன வேலை இருக்கும் என்று ஆச்சரியமாக பார்த்தாள்... ஏதோ மூன்று பேர் சேர்ந்து கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். கையில் இருந்த பெட்டியை அவ்வப்போது தொட்டுக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தங்கையின் குழந்தை அதற்குள் சிணுங்க ஆரம்பித்து விட்டாள். ஒரே இடத்தில் கட்டிப்போட்டது போல் இருந்தது அவளுக்கு போர் அடித்திருக்கும் போல.. சமாதானம் செய்து, கையோடு கொண்டு வந்திருந்த தின்பண்டங்களைக் கொடுத்தாலும், அவள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. சிணுங்கல் அழுகையாக மாறுவதற்குள் ஒருவர் ஓடிவந்து, குழந்தையை வெளியே எடுத்துச் செல்லுங்கள் இங்கெல்லாம் சத்தம் வரக்கூடாது என்றார். உடனே அங்கையற்கண்ணி குழந்தையை தங்கையிடமிருந்து வாங்கி வெளியே எடுத்துச் சென்றாள். பக்கவாட்டில் தோட்டம் இருந்த பக்கம் எடுத்துச் சென்று குழந்தைக்கு சற்று வேடிக்கை காட்டலாம் என்று சென்றவள் அங்கு இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்ததை வைத்து ஐயா அரசியலில் நெருங்கிய தொடர்புடையவர் என்பதை புரிந்து கொண்டதால் ஆச்சரியம் ஏற்பட்டது. ஏனோ மனதில் லேசாக ஒரு சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தன் கறபனையில் இருந்த ஐயாவிற்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது போன்று இருந்தது.. திடீரென்று வெளியில் ஒரே பரபரப்பு, சரசரவென்று கார்களின் அணிவகுப்பு, பரபரப்பாக அனைவரும் இயங்க ஆரம்பித்தார்கள். அதற்குள் வெளியிலிருந்து வேகமாக ஒரு மின்னல்வெட்டு பளிசென்று... அட.. இது திரைப்பட நடிகை ஜில்ஜில்ஸ்ரீ போலல்லவா இருக்கிறது என்று யோசித்த போதே, அருகில் இரண்டு பேர் , “போச்சுடா, இந்த அம்மா வேற வந்துடுச்சா, இன்னைக்கு ஐயாவை பாத்தாப்போலத்தான்..... “ என்று இழுத்துவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். மனதில் ஏதோ பெரிய கட்டு விட்டது போல தோன்றியது. ஏனோ அதற்கு மேல் அவளுக்கு அங்கு நிற்கவும் பிடிக்கவில்லை. தன் மனதில் தெய்வமாக நிலைத்திருக்கும் அந்த ஐயாவின் பிம்பத்தை இழக்க அவர் விரும்பவில்லை.... ஐயா சொல்லுகிற அந்த வாசகம் நினைவில் வந்து அவளை ஒரு முடிவு எடுக்க வைத்தது...

வாசகங்களை மனதில் கொள்ளுங்கள்
வாசித்தவ்ரை அல்ல!
படித்ததை நேசியுங்கள்
படிக்கச் செய்தவரை அல்ல.......

நன்றி : திண்ணை

Wednesday, May 2, 2012

கவிக்குயிலின் கவிமுகம்! - சரோஜினி நாயுடு




சரோஜினி நாயுடு (1879 – 1949) இந்திய ஆங்கிலக் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை, அரசியல் ஆர்வலர், சொற்பொழிவாளர், மற்றும் நிர்வாகி இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர், மற்றும் முதல் இந்திய மாநில கவர்னராக இருந்தவர். இளமையில் எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு பெண்ணாகவும் இருந்திருக்கிறார்.
“ எம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக காடுகள் மற்றும் மலைக்குகைகளின் காதலர்களாகவும், பெரிய கற்பனாவாதிகளாகவும், அறிஞர்களாகவும், பெருந்துறவிகளாகவும் கூட இருந்துள்ளார்கள்” என்ற இவரது வாதத்தின் தாக்கம் இவர்தம் கவிதைகளிலும் இருக்கக் காணலாம். பதின்மப் பருவத்திலேயே, பெருங்கவிஞர் ஆர்தூர் சைமன்ஸ், கவிக்குயில் சரோஜினி அம்மையாரைக் கண்ட விதமே ஒரு கவிதை.
“ அவள் கண்கள் ஆழ்ந்த குளம் – நீங்கள் அதன் மிக ஆழத்தில் விழத்தெரிவீர்கள் . பின்புறம்,பரந்து விரிந்த கூந்தலும், நீண்ட பளபளக்கும் உடையும், மெல்லிய இசை போன்ற அவருடைய இனிய குரலும், மிகத்தனித்தன்மை வாய்ந்தது” என்பார்.
என்மண்ட் கோஸ் அவரைப் பற்றிக் கூறும்போது, “பதினாறு வயதே நிரம்பிய சிறுமியாயினும், அற்புதமான மனப்பக்குவமும் அதிசயத்தக்க கல்வியறிவும், உலக ஞானமும் கொண்டவள்” என்று பாராட்டுகிறார்.
சரோஜினி நாயுடுவின் காதல் கவிதை இதோ:
Ecstasy
Cover mine eyes, O my Love!
Mine eyes that are weary of bliss
As of light that is poignant and strong
O silence my lips with a kiss,
My lips that are weary of song!
Shelter my soul, O my love!
My soul is bent low with the pain
And the burden of love, like the grace
Of a flower that is smitten with rain:
O shelter my soul from thy face!
பேரானந்தம்! (தமிழாக்கம்)
காதலே எம் காதலே, எம் கண்களைக் காப்புசெய்!
ஆனந்தக் களைப்புற்றிருக்கும் எம் கண்களை
கூசச்செய்கிறது அந்த அடர்ந்த ஒளி வெள்ளம்!
ஓ … எம் இதழ்களை மௌனமாக்கட்டும், ஓர் அன்பு முத்தம்
கீதமிசைத்து சோர்வடைந்திருக்கும் எம் இதழ்களிவை!
ஓ எம் காதலே, எம் ஆன்மாவின் உறைவிடமாயிரு!
வாதனையினால் வளைந்து கிடக்கிறது எம் ஆன்மா
அக்காதலின் சுமையே, அருளாய்
மழை மோதலால் துவண்ட மலராய்
உம்முடைய முகமலரில் புதையட்டும் எம் ஆன்மா!
படத்திற்கு நன்றி :

நன்றி : வல்லமை பிரசுரம்

Monday, April 30, 2012

உழைப்புக்கேத்த ஊதியம்.. ஒழுக்கத்துக்கேத்த சேமிப்பு!


வண்டிக்கார பழனியம்மாள் – சிறப்பு நேர்காணல்

அன்றாடம் ”வீட்டில் மாடாய் உழைத்து ஓடாய் தேய்கிறேன்” என்று குளுகுளுவென்று மின்விசிறியின் [மின்வெட்டு இருந்தாலும்.. இன்வேர்ட்டர் வைத்துக் கொண்டாவது] கீழ் உட்கார்ந்து கொண்டு வீட்டு வேலைகள் செய்வதற்கு, ஒரு உதவி ஆளையும் வைத்துக் கொண்டு, புலம்பித் தீர்க்கும் பெண்கள் மத்தியில் 31 வருடங்களாக மாடாகவே உழைக்கும் ஒரு பெண்மணியைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டு குடம் தண்ணீர் தூக்கினால், உடம்பிற்கு ஒத்துக் கொள்வதில்லை, டாக்டர் என்னை கனமான பொருட்கள் தூக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என்று ஒரு சாதாரண காய்கறிப் பையைக்கூட தூக்குவதற்கு அஞ்சி இன்னொருவர் உதவியை நாடும் பல பெண்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அத்தகையோருக்கிடையில் நாளொன்றிற்கு குறைந்தது 1500 கிலோ வரையான சுமைகளை சுமக்கிற பழனியம்மாளைக் காணும் போது ஆச்சரியமாகத்தானே இருக்கிறது.. ஆண்களுக்குச் சமமாக சுமை தூக்கும் தொழிலாளியாக வண்டிக்கார பழனியம்மாள் என்றால் வியாபார வட்டாரத்தில் தெரியாதவரே இல்லை எனலாம். ஆம், டெக்ஸ்டைல் சிட்டியான ஈரோடு மாநகரில் காலை பத்து மணி முதல் இரவு 10 மணி வரை கடைவீதி முழுவதும் திருவிழா போலத்தான் இருக்கும். சரக்கு லாரிகளும், மாட்டு வண்டிகளும், நிறை பாரத்துடன் உலா வருவதைக் காணலாம். ஜவுளி பைகள் சராசரியாக 115 முதல் 150 கிலோ எடை வரை இருக்கும். இதனை தான் ஒரு தனி ஆளாக தூக்கிக் கொண்டு வந்து தன் மாட்டு வண்டியில் அடுக்கி, அந்த வண்டியை ஓட்டிச் சென்று இறக்க வேண்டிய இடத்தில் தானே இறக்கிக் கொண்டுபோய் அடுக்கி வைத்து விடவேண்டியதுதான் இவருடைய அன்றாட தொழில். இது எப்படி சாத்தியம் என்று அவரைச் சந்திக்கும் வரை எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது…. இன்று உழைப்பாளர் தினத்தில் இவரைச் சந்திப்பது சாலச் சிறந்தது அல்லவா…?

ஆண்கள் செய்யக்கூடிய இந்த கடினமானத் தொழிலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

என்ற ஊட்டுக்காரவக இதே வேலைதானுங்க.. அவருக்கு துணையாத்தான் கூட போயிட்டிருந்தேனுங்கோ.. கொஞ்ச நாள் பழகின பொறவு, தனியா
எனக்கும் ஒரு வண்டி வாங்கிக் கொடுத்தாங்க…. அன்றிலிருந்து இந்த 31 வருசமா இதுதானுங்கோ பொழப்பு..

குடும்பம் பற்றி…?

எனக்கு நாலு பெண்ணுங்க… நாலு பேத்துக்கும் நல்ல இடத்துல கட்டிக் குடுத்திருக்குறோம். காதுக்கு, மூக்குக்குன்னு 3 பவுனு போட்டு கட்டிக் குடுத்தோம்.

உங்க கணவர் வரவில்லையா? தனியாக இந்த வயதில் சிரமப்ப்டுகிறீர்களே?

என்னங்க வயசாச்சி.. 49தான் ஆவுது. என்ற ஊட்டுக்காரரு கால்ல அடிபட்டு எலும்பு முறிஞ்சு போனங்காட்டி, வேலைக்கு வாறதில்லீங்க…

இப்பதான் மகள்களுக்கெல்லாம் திருமணம் செய்து விட்டீர்களே. இனி ஓய்வெடுக்கலாமே?

அதில்லீங்க. எம்பட தங்கச்சி இரண்டு குழந்தைகளையும் உட்டுபோட்டு ஊரைவிட்டே போயிட்டா. அவ புள்ளைகளை நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கனுமில்லீங்களா. அதுகளை ஹாஸ்டல் பள்ளிக்கூடத்துல சேத்தி படிக்க வக்கிறேனுங்கோ. அதான் இன்னும் கொஞ்ச நாளைக்கு பாடுபடலாம்னு..

உங்களோட வேலை எத்த்னை மணிக்கு தொடங்கும், வருமானம் என்ன அதைப்பற்றி சொல்லுங்களேன்?

காலைல ஒம்பது மணிக்கு வண்டி கட்டிக்கிட்டு வந்தா பொழுதோட ஆறு மணிக்கும் மேலயே ஆவுமுங்க வூடு போய்ச்சேர ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1500 வரை சம்பாதிக்கலாமுங்க. எவ்ளோ நேரம், எவ்ளோ விரைசா (விரைவாக) வேலை பாக்குறோமோ அதப் பொறுத்துதானுங்கோ….. ஒரு நாளைக்கு முடியலேன்னா சீக்கிரமா போயிடுவோம்..

வீடு வாசல்…?

அதெல்லாம் சொந்த ஊட்டுலதான் இருக்குறோமுங்க. காலைல பறக்க, பறக்க சோத்தை ஆக்கி வச்சிப்புட்டு, ஓடியாறணும்… எப்ப்டியோ காலம் ஓடிக்கிட்டிருக்குங்க….. உடம்புல தெம்பு இருக்குற வரை ஓடிக்கிட்டு இருப்போம்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்பது போல இத்துனை சிரமமான ஒரு பணியைக்கூட தன்னால் முடியும் என்று நிரூபித்து உள்ளதோடு, ஆண்களுக்கு நிகராக பாடுபட்டு, குழந்தைகளையும் கரை சேர்த்து, இன்று தங்கையின் குழந்தைகளுக்காக, இந்த 50 வயதிலும் 115 கிலோ மூட்டை எடையுள்ள ஜவுளி மூட்டைகளைச் சுமந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். காலையில் வரும் பொழுது கையில் ஒருதூக்குச் சட்டியில் பழைய சாதத்தை கொண்டு வந்து வைத்துக் கொண்டு, மதியம் நேரம் கிடைக்கும் போது அவசர அவசரமாக நான்கு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு, மாலை 7 மணி வரை கடுமையாக உழைத்து விட்டு வீட்டிற்குச் சென்று திரும்ப சமைத்து கணவனுக்கும் போட்டுவிட்டு தானும் நிம்மதியாக உடகார்ந்து சாப்பிட்டுவிட்டு படுத்தால் நிம்மதியாக ஒரு உறக்கம் எப்படி வரும் என்பதை அவருடன் இருந்த அந்த சில மணித்துளிகள் நன்றாகவே உணர்த்தியது… ஒரு சின்ன வியாதி கூட தன்னை நெருங்காமல் தன்னுடைய உழைப்புதான் இன்றுவரை தன்னையும், தன் குடும்பத்தையும் காத்து வருகிறது என்று திடமாக நம்பிக்கை கொண்டிருக்கும் பழனியம்மாவை மனதார வாழ்த்திவிட்டு வந்தோம்.

உண்ணும் உணவும், உடுக்கும் உடையும், பருகும் நீரும் அனைத்தும் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகளின் உன்னத உழைப்பால் நமக்குக் கிடைக்கிறது என்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டிய இந்நந்நாளில் அனைத்து உழைப்பாளி மக்களையும் மனதார வாழ்த்துவோம்! அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் நண்பர்களே.

நன்றி : வல்லமை