Saturday, June 29, 2019

அமெரிக்க மோகம்?




அமெரிக்க மோகம் இன்னும் எவ்வளவு காலம்தான் மக்களை ஆட்டிப் படைக்கப்போகிறதோ தெரியவில்லை. சால்வடார் எனும் நாட்டின், சான் சால்வடார் எனும் இடத்தைச் சேர்ந்த 25 வயதான ஆஸ்கர் ஆல்பர்டோ மார்ட்டின் ரமிரேஷ், டனியா வனீசா தம்பதியின் இரண்டு வயது மகள் வலேரியா. சொந்த வீடு வாங்க ஆசை வந்ததால் வந்த வினை அமெரிக்கா நோக்கிச் சென்று கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவில் பக்கத்து நாடான மெக்சிகோவில் குடியேறி அங்கிருந்து அமெரிக்கா செல்ல அனுமதிக்குக் காத்திருந்து, கிடைக்காததால், கள்ளத்தனமாக மெக்சிகோ ரியோ கிராண்டே ஆற்றை நீந்திக்கடந்து அமெரிக்காவின் டெக்சாசு மாகாணம் பிரவுண்வில்லே நகரில் நுழையத் திட்டமிட்டுள்ளார். மகளை முதுகில் சுமந்தபடி நீந்தி ஆற்றைக் கடந்து வந்தவர், மகளை விட்டுவிட்டு மனைவியை அழைத்து வர எத்தனிக்க தந்தையை விட்டுப்பிரிய அஞ்சிய குழந்தை கதறியழுது, ஆற்றில் இறங்கியிருக்கிறது. குழந்தை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்ல காப்பாற்ற முயன்றவர் தானும் வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்படும் கொடுமையை மறு கரையிலிருந்து பார்த்து அதிர்ந்திருக்கிறார் மனைவி .. தந்தையின் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டிருந்தவாறு சட்டைக்குள் இருந்த குழந்தையுடன் இருவரின் உடல்களும் கரை ஒதுங்கியிருந்த கொடுமையான காட்சியைக் கண்டு உலகே இன்று கண்ணீர் சிந்துகிறது ..  சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது ..  
இந்த ரியோ கிராண்டே ஆற்றில் இந்த ஆண்டில் மட்டும் 322 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். முதன் முதலாக வட அமெரிக்கா உயிரினங்களே இல்லாத பனிபடர்ந்த பிரதேசமாகத்தான் இருந்துள்ளது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனா அல்லது சப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களே முதலில் குடியேறியவர்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அங்கு கிடைத்துள்ள மிகப்பழமையான எலும்புக் கூட்டை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகுதான் மெல்ல மெல்ல ஆரம்பித்து இன்று அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 இல் இந்தியாவின் 1 உரூபாய் என்பது அமெரிக்க டாலரை விட அதிக மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. அதன் பிறகு 1 உரூபாய்க்கு 1 டாலர் என்றானது. இன்று கிட்டத்தட்ட 77 உரூபாய் கொடுத்தால்தான் நமக்கு ஒரு அமெரிக்க டாலர் கிடைக்கும். உழைப்பால் உன்னதம் பெற்று சொர்க்க பூமியாக அவரவர் வாழும் இடத்தையே உருவாக்குதலே நிரந்தரம் என்பதை உணர வேண்டும் ....