பவள சங்கரி
பல நேரங்களில் பெறுபவர்களின் தன்மையின் அடிப்படையில் விருதுகள் பெருமைப்படுவதுண்டு. அந்த வகையில் இந்த முறை பத்மஸ்ரீ விருதும் பெருமை அடைந்துள்ளது!
2018 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஞானம்மாள் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் பிறந்தவர். 98 வயதான, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் யோகக் கலையில் கைதேர்ந்தவர். தற்போது கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வருகிறார். தமது தாத்தா மன்னார்சாமி என்பவடமிருந்து ஞானம்மாள் யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டுள்ளார். ஞானம்மாளின் மாணவர்கள், லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, போன்ற பல்வேறு நாடுகளின் யோகா போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளனர்.
1920 இல் பிறந்தவர் 98 வயதைக் கடந்தும் தம் முறையாகக் கற்ற யோகக்கலையை இன்றும் தொடர்வதோடு, பல ஆயிரம் பேர்களுக்கு முறையாகப் பயிற்சியும் அளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 600க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் தன் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்சியை அளித்துவருகிறார். ஒரு சித்த வைத்தியருக்கு வாழ்க்கைப்பட்ட இவருக்கு 2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே யோகா பயிற்றுநர்கள் என்பதோடு இவர்தம் மகன்கள், மகள்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள் என அனைவருமே யோகா ஆசிரியர்கள். தாங்கள் வசிக்கும் இடங்களில் யோகா பயிற்சி மையங்கள் வைத்து நடத்திவருபவர்கள். இவர்களும் பல பரிசுகளையும் வென்றவர்கள்.
தனக்குப் படிப்பு எதுவும் இல்லை என்றும் ஒன்றாம் வகுப்பு மட்டும் போனதுகூட நினைவில் இல்லை என்கிறார். யோகா மட்டுமில்லாமல் கிராமத்து வைத்தியத்திலும் தங்கள் குடும்பம்தான் ஊருக்குள்ளே அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்ததாகச் சொல்லும் ஞானம்மாள் பாட்டியின் வீட்டில் ஒருவரும் ஊசி, மருந்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டது இல்லையாம். தன் குடும்பத்தில் அனைவருக்கும் சுகப் பிரசவம் ஆனதற்கும் யோகாதான் காரணம் என்கிறார் ஞானம்மாள். இன்றுவரை இவருக்கு மூக்குக் கண்ணாடியின் தேவை ஏற்படவே இல்லை. ஊசியில் நூல் கோத்து, துணி தைக்கிற அளவு பார்வைத் திறன் இருக்கிறது என்பதோடு செவித்திறனும் நன்றாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மூட்டு வலி, கைகால் வலி என எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்.
தன் அம்மா 50 முக்கியமான ஆசனங்களைச் செய்வதோடு, பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்கள் செய்கிறவர் இந்திய அளவில் இவர் மட்டுமாகத்தான் இருக்கும் என்ற பெருமையும் பெற்றவர் என்கிறார் இவருடைய மூன்றாவது மகன் பாலகிருஷ்ணன். மேலும் தன் அம்மாவின் யு-டியூப் காணொளியை இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்றும் இவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
திருப்பூரில் சர்வதேச இளைஞர் யோகா கூட்டமைப்பு சார்பாக 2012-இல் நடந்த போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று அதன் மூலம் அந்தமான் சென்றிருக்கிறார். பிறகு 2013 பிப்ரவரியில் அந்தமானில் 60 பேர் கலந்துகொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே குடியரசுத்தலைவரிடம் பெண் சக்தி விருதைப் பெற்றுள்ள ஞானம்மாள் தற்போது மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
http://www.vallamai.com/?p=83023