Wednesday, July 28, 2010

வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க வேண்டுமா.........? வாருங்கள்..............















இன்பமும், துன்பமும் பிறர் தர வாரா !!

நம்முடைய வெற்றிக்கும், தோல்விக்கும் நாமேதான் முழு காரணமாகிறோம்.வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்,மற்றும் செய்யக் கூடாது? வாருங்கள் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும், புது வருடத்தில், நாம் ஒரு சில தீர்மானங்கள் எடுத்துக் கொள்கிறோம். அப்படி எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களை செம்மையாக நிறைவேற்றும் பட்சத்தில், நம்முடைய வாழ்க்கை தரம் உயரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடாமல் செய்ய வேண்டிய வேளையில் தவறாமல் செய்ய வேண்டும் என்கிற ஒரு தீர்மானம் எடுக்கும் பட்சத்தில், நாம் வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் முதல் படியாக அது மாறி விடுகிறது என்பதில் ஐயமில்லை.! அதனால் நாம் எக்காரணம் கொண்டும் நம்முடைய கடமைகளைத் தள்ளிப் போடுவதில்லை என்ற தீர்மானம் எடுத்துக் கொள்ளத் தயங்கக் கூடாது.

தாம் தள்ளிப் போடுபவர் இல்லையே என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தாலும், பெரும்பாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் தள்ளிப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

உதாரணமாக, பலர் சிரமமான காரியங்கள் என்பதற்காகவோ, நீண்ட வரிசையில் நின்று பில் கட்டுவது, பல நாட்களாக சேர்த்து வைத்திருக்கும் பரண் குப்பையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை முடிந்த வரை தள்ளிப் போட்டுத்தான் செய்கிறார்கள். ஆனால், சமீபத்தில் எடுத்த ஒரு ஆய்வறிக்கையின்படி 25%தினர், இது போன்ற பழக்கம், தங்கள் வாழ்க்கையில் ஒரு தீராத பிரச்சனையாக உள்ளதென்றும், 40%தினர், பல நேரங்களில் இந்தத் தள்ளிப் போடும் வழக்கத்தினால், பல வாய்ப்புக்களையும், வருமானங்களையும் கூட இழந்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.இதனால் எத்தனையோ, இழப்புக்களை சந்திக்கவும் நேரிடலாம்.

இந்த பழக்கம் விலைமதிப்பில்லாத நேரத்தை மட்டும் வீணடிக்காமல், மன அழுத்தத்தையும் அதிகரிக்க வல்லதாயினும், நம்முடைய குறிக்கோளை அடைவதிலும், கனவு நிறைவேறுவதிலும் தடைகளை ஏற்படுத்திவிடுகிறது. இது பிறவிப் பழக்கமோ, பரம்பரைப் பழக்கமோ அல்ல. இடையில் கற்றுக் கொள்ளும் ஒரு தீய பழக்கமே என்கின்றனர், வல்லுனர்கள்.இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு,முதலில், நாம் எந்த வகையில் நேரத்தை வீணடிக்கிறோம் என்பதை இனம் காண வேண்டும்.இதற்காகப் பல மனோதத்துவ நிபுணர்கள் பல வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர். அதைப் பற்றி பார்ப்போம்.

முதற்படி; எப்பொழுது,எப்படி, ஏன் தள்ளிப் போடுகிறோம்? நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு பகுதியில்தான் நாம் இதைச் செய்கிறோம். உதாரணமாக, பலர் தன் அன்றாடக் கடமைகள் எல்லாவற்றிலும் மிகத் தெளிவாக இருப்பவர்கள், வழக்கமான மருத்துவப் பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு, போன்றவற்றில் கோட்டை விட்டு டிடுவார்கள்.இதனைக் கண்டு பிடிப்பதற்கு, கடந்த 6 மாத காலத்தில் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் என்பதைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.நம்முடைய தொழில் சம்பந்தப்பட்டதாகவோ, சமூக வாழ்க்கை, பொருளாதாரச் செயல்கள், இப்படி எதுவாகவும் இருக்கலாம். இது எதனால் தள்ளிப் போடப் பட்டது? பயம், சலிப்பு, களைப்பு, நன்றாக செய்ய வேண்டும் என்ற பேராவலாகவும் இருக்கலாம். இல்லை வேறு ஏதாவது பொழுது போக்கில் ஈடுபட்டு, இதையெல்லாம் தள்ளிப் போட்டோமா? இதைக் கண்டறிந்தாலே அதிலிருந்து, எளிதாக மீண்டு விடலாம்.

இரண்டாம் படி; நாம் எப்பொழுதுமே மிக நன்றாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என எதிர் பார்ப்போமானால், எல்லாவற்றையும் குழப்பிக்கொள்ளாமல் நிதானமாக நன்றாகச் செய்யலாம் என்று தள்ளிப் போடுவோம். தகுதிக்கு மீறிய உயர்ந்த தரத்தை எதிர்பார்ப்பதை தவிர்த்தாலே, இது போன்று தள்ளிப் போடுதலைத் தவிர்க்கலாம், என்று நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜூலி, தன்னுடைய TIME MANAGEMENT FROM THE INSIDE OUT, என்கிற பத்திரிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதற்காக ஒழுங்கு முறையைக் கைவிட்டு விட வேண்டும் என்பது பொருளல்ல. தேர்ந்தெடுத்த ஒழுங்கு முறையைக் கடைப் பிடித்தாலே போதும்.எந்த வேலைக்கு அதிகப் படியான கவனம் தேவைப் படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.இப்படிச் செய்வதால் முக்கியமாகத் தேவையான இடத்தில் நம் நேரத்தைச் செலவிட முடியும்.

மூன்றாம் நிலை; ஒரு வேலையை நாம் தள்ளிப் போடுவதற்கான காரணம் பல நேரங்களில் நம் அணுகு முறையால் தான். உதாரணமாக, தாம் எழுத வேண்டிய கணக்குகள், அல்லது, வரவு செலவுக் கணக்குப் போடுவது போன்ற வேலையை இரவு 10 மணிக்கு மேல் செய்வது. நம்முடைய தெளிவான சிந்தனைக்கு முட்டுக் கட்டை போடக்கூடிய அந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது, தம் வேலையைத் தள்ளிப் போடத் தூண்டுகிறது.

இது போன்று தொடர்ந்து தள்ளிப் போடுகிறோம் என்றால், அந்த வேலையச் செய்யும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டும் சலிப்படையச் செய்யக் கூடிய வேலைகளைச் செய்ய முற்படும் போது விடுமுறை நாளையோ, ஓய்வாக இருக்கும் நேரத்தையோ தேர்ந்தெடுத்து, மனம் விரும்புகிற நல்ல பாடலோ, பிடித்த உணவு வகைகளோ, பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்ய முற்பட்டால எப்படித் தள்ளிப் போடும் எண்ணம் வரும்? எந்த வேலையாக இருந்தாலும், அதை விருப்பத்துடன் உற்சாகமாக, நகைச்சுவை உணர்வுடன்,ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.அப்படியும் செய்ய முடியவில்லையென்றால் வேறு யாராவது மூலமாக வேலையை முடிக்கப் பார்க்க வேண்டும். தம்முடைய பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்கப் பார்ப்பதால், அதை நிறைவேற்றுவதற்குரிய சக்தியையும், நேரத்தையும் விட அதிகமாக செலவிட வேண்டி வரும், என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நான்காம் நிலை; சில நேரங்களில் நாம் மிகவும் விரும்பிச் செய்யக் கூடிய வேலைகளைக் கூடத் தள்ளிப் போட நேரிடுகிறது. உதாரணமாக நல்ல அழகான கண்ணாடி ஓவியம் செய்து புதிதாகக் கட்டிய நம்முடைய வீட்டின் வரவேற்பறையில் மாட்ட வேண்டும் என்ற ஆசை. நம்முடைய மற்றப் பணிகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக இது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கலாம். கை வேலைகள் செய்கின்ற வேறு நண்பரையோ அல்லது பயிற்சி வகுப்பின் மூலமாகவோ ஒரு ஊக்கச் சக்தியைப் பெற்று, மளமளவென வேலையை முடிக்க முயல வேண்டும். அப்படி ஒரு வேலையை முடிக்கும் பட்சத்தில் ,அதை நமக்குப் பிடித்த உணவோடு, குடும்பத்துடன், கொண்டாடலாமே. சில நேரங்களில் ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதனால் அவமானப் பட்டுவிடுவோமோ அல்லது தவறாகப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகக் கூட தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்.இது போன்ற நேரங்களில் நாமே நன்றாக சிந்தித்து எதற்காக அஞ்சுகிறோம் என்பதைக் கண்டறிந்து, அதனைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும். முடியவில்லையென்றால், நண்பர்களிடம் ஆலோசனை பெற்றாவது, அக் காரியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும். அந்தக் காரியத்தின் மூலம் நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கின்ற பட்சத்தில் அதை எப்படியாவது முடிக்க முயல வேண்டும்.

அமெரிக்க வல்லுனர்களான ரீட்டா மற்றும் ஜூலி ஆகியோரின் ஆலோசனைப்படி, அன்றாடம் முடிக்க வேண்டிய வேலைகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, அதனை தம் கைப்பட எழுதிக் கொள்ள வேண்டும்.

தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை செய்யும் நேரத்தை நம்மையறியாமல் அது கைப்பற்றிவிடும்.

மிகவும் சலிப்படையச் செய்யக் கூடிய நீண்ட வேலையாக இருக்கும் பட்சத்தில், அதைப் பிரித்து ஒரு வாரத்திலோ அல்லது மாதக் கணக்கிலோ குறிப்பிட்டு நிர்ணயித்து சலிப்படையாமல் செய்து முடிப்பதற்கு வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

போனில் பேசுவது, படிப்பது, எழுதுவது, இப்படிப்பட்ட மன உற்சாகம் அளிக்கக் கூடிய செயல்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து விசயங்களையும் உள் வாங்கி, செம்மையாக நம் கடமையை நேரந்தவறாமல் செய்யும் போது, வெற்றி நிச்சயம்தானே!!!!!! .


இளைஞர்களே............எங்கே போகிறோம்?


வசந்த கால பொன்மாலைப் பொழுது. பரந்து, விரிந்து, விழுதுகள் ஊன்றி நிழல் பரப்பிக் கொண்டிருக்கும், நெடிதுயர்ந்த ஆலமரம். அதன் உச்சியில் இரு கிளைகள் சங்கமிக்கும் இணைப்பின் மடியில் ஒரு குச்சி வீடு, அழகிய குருவிக்கூடு. குருவிக் குஞ்சுகள் குக்கூ......குக்கூ........குக்கூ என்று விடாமல் கத்திக் கொண்டேயிருக்க, சர் என்று எங்கிருந்தோ பறந்து வந்த தாய்க் குருவி அந்த குஞ்சுகள் ஒவ்வொன்றுக்கும் உணவை ஊட்டிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பறக்கவும் கற்றுக் கொண்டிருந்தன அந்தக குருவிகுஞ்சுகள் நாட்கள்தான். குஞ்சுகள் மெல்ல, மெல்ல பறக்கவும் கற்றுக் கொண்டிருந்தன, அந்தக் குஞ்சுகள். சில நாட்களிலேயே நன்கு பறக்க கற்றுக் கொண்டு, தன் இரையைத் தானே தேடவும், தனக்காக கூடு கட்டிக் கொள்ளவும் பழகிவிட்டன. பறவைகள், மிருகங்கள் எல்லாமே இப்படித்தான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் சுதந்திரமாக இருக்கவே பழகிக் கொள்கின்றன.

ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சுக்கு ஊட்டி வளர்க்கும் இந்த சுதந்திரப் பண்பு மனிதர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமான ஒன்றாகும். தாங்கள், தங்கள் குடும்ப உறவுகளை சிரம் மேல் தாங்கி தங்கக் கூண்டில் எந்தப் பாதிப்பும் வராத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதனும் எண்ணக் கூடும். ஆனால் அதன் அளவு கோளில் ஒரு நிர்ணயம் வேண்டும். அதிக பாதுகாப்பு உணர்ச்சி, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்தைப் பாதிக்கச் செய்யும் பாச வலையாக மாறிவிடக் கூடாது . பெண் குழந்தைகளை பொத்தி வளர்க்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு அவர்களுக்கு தனித்து சுதந்திரமாக இயங்கக் கூடிய தைரியத்தையும், முடிவெடுப்பதில் ஒரு தெளிவையும் ,எப்பேர்ப்பட்ட, சூழலிலும் தன்னைத்tதானே தற்காத்துக் கொள்ளவும் , சுய கட்டுப்பாட்டுணர்வையும், சிறு வயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

இன்றைய காலகட்டத்தில், பெண் குழந்தைகளும், படிப்பு, மற்றும் பணி காரணமாக தனியாக வெளிநாடுகளில் கூடச் சென்று வருடக் கணக்கில் தங்க வேண்டிய சூழ்நிலை க்கு ஆளாகிறார்கள். அதிக கட்டுப் பாட்டுடன் வளரும் குழந்தைகள், முதல் முறையாக முழுமையான சுதந்திரம் பெறும் போது, காணாததை கண்டது போன்ற ஒரு நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கைச் சூழல் மட்டுமன்றி பெற்றோரின் கனவு, நம்முடைய இந்தியப் பண்பாடு கலாச்சாரம் அத்துனையையும் பதம் பார்த்துவிடுகிறது.

மதுரையிலிருந்து வந்த ஒரு பெண்ணும் சென்னையிலிருந்து வந்த ஒரு இளைஞனும் அமெரிக்காவிற்கு பணி நிமித்தம் சென்றவர்கள், கண்ணோடு கண் நோக்கியதன் விளைவு, இன்று இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து [?] கொண்டிருக்கிறார்கள். இதையறியாத பெற்றோர் அவர்களுக்கு இந்தியாவில் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திடீரென ஒரு நாள் இது தெரிய வரும் போது அவர்கள் நிலை என்னவாகப் போகிறது என்று ஒரு பெற்றோரின் நிலையிலிருந்து யோசிக்கும் போது பேரதிர்சியாக உள்ளது. நம் குழந்தைகள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெருமைப் படும் அதே வேளையில் நம் கலாச்சாரம் எப்படியெல்லாம் சீரழிகிறது என்று சிந்தித்தால் அடிவயிறு கலங்கத்தான் செய்கிறது.

இன்னும் இருக்கிறது................

Tuesday, July 27, 2010

அடடா.........டென்சன் பார்ட்டியா.........நீங்க?

அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் நேரம். இரண்டு சக்கர வாகனம் பழுது காரணமாக புறப்பட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்த நேரத்தில், மன உளைச்சல் அதிகமாகி, வண்டியை காலால் உதைத்தால், கால் தான் வலிக்குமே தவிர வண்டி நகராது.அதை உணர்ந்து,அடுத்து என்ன செய்ய வேண்டும், ஆட்டோ பிடித்து போகலாமா அல்லது நண்பரிடம் உதவி கேட்கலாமா,என்பதைத்தானே யோசிக்க வேண்டும்.

மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய பதற்றமான மனோநிலை, சக்கரை வியாதி, அல்சர், இரத்தக் கொதிப்பு போன்ற பல வியாதிகளை முன் மொழியும் என்பதும் அனைவரும் அறிந்ததே.


வாழ்க்கைச் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அதன் காரணமான மோதல்கள், மற்றும் சவால்களை எதிர் கொள்ள வேண்டிய தருணங்கள், இவை அனைத்தும் மன அழுத்தத்தை தவிர்கக முடியாததாக்கிவிடுகிறது. மன அழுத்தத்தை தவிர்க்க இயலாவிட்டாலும், இதன் பின் விளைவுகளையாவது நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். இதற்கான யதார்த்தமான, நிரூபிக்கப்பட்ட சில வழிமுறைகள் பற்றிக் காண்போம்.

முதன் முதலில் சரியான, நெறிமுறைப் படுத்தப்பட்ட வாழ்க்கை முறை, பெரும்பாலும் மன அழுத்தத்தைக் குறைக்க வல்லது என்பது வல்லுனர்களின் ஒருமித்த கருத்தாகும்.

இதனை திட்டமிடுவதற்காக நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய நேரமே, இதற்கான மூலதனம் ஆகும். அதாவது அந்த வாரத்திற்குரிய வேலைகளை முதலில் திட்டமிடல் வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் அந்த வாரம் முழுவதும், என்ன சமைக்கப் போகிறோம் என்பது வரை அனைத்து விபரங்களையும் முன் கூட்டியே முடிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.

வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் அந்த வாரத்திற்குரிய முக்கியமான அலுவல்கள், வங்கிக் கணக்கு வழக்குகள், வசூலுக்குச் செல்ல வேண்டிய நாட்கள் இப்படி அனைத்தையும் முடிந்த வரை வாரக் கடைசி நாளே, தீர்மானித்து, நாட்குறிப் பேட்டில் குறித்து வைத்து விட வேண்டும்.எல்லா வேலைகளையும் தானே பார்த்துக் கொள்ளும் பேர்வழி என்று, நேரம் போதாமல் மன அழுத்தத்தை ராக்கெட் வேகத்தில் எகிற விடாமல், குடும்பத்தில் உள்ளவர்களிடமோ, தமக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமோ பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

உணவின் மூலமாக ஆறுதல் பெற முடியும்.!
பெரும்பாலானவர்களுக்கு, மிகவும் மன உளைச்சலான நேரங்களில் ஏதாவது உணவு உட்கொண்டால், அது ஆறுதல் அளிப்பதாக இருக்கும். இதற்கான முதல் இடம் அரிசி உணவிற்குத்தான். மாவுப் பொருட்கள், மூளையில் சுரக்கின்ற செரோடினின் என்கிற இரசாயனப் பொருள் அளவை அதிகப்படுத்தி, முழு உடலுக்கும் ஒரு அமைதியைக் கொடுக்க வல்லதாம். இதன் காரணமாக மன அழுத்தத்தினால் வரக்கூடிய, கோபம், எரிச்சல் மற்றும் மனதை ஒருநிலைப் படுத்த முடியாத தன்மை போன்றவைகள் மட்டுப்படுத்தப் படுகிறது. இந்த மாவுப் பொருட்களின் சக்தி 2 முதல் 3 மணி நேரம் வரைதான் இருப்பதால் கலோரியின் அளவைக் கவனத்தில் கொண்டு அந்த உணவை 5 அல்லது 6 முறையிலான குட்டி உணவாகப் பிரித்து உண்ணலாம்.

சூழ்நிலைகளால் ஏற்படுத்தக் கூடிய மன அழுத்தத்தை சற்று நிதானமாகக் கையாண்டால், எளிதாக சமாளிக்க முடியும். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், சறிது சிந்தித்து , அந்த குறிப்பிட்ட விசயத்தை விட்டு சற்றே வெளியே வந்து, அடுத்தவர் நிலையிலிருந்து, யோசித்தாலே போதும்.அந்தச் சூழல் மிக எளிதாகிவிடும். பிறகு தாமே தீர்வையும் கண்டு விட முடியும்.

நடைப் பயிற்சி, மன அழுத்தத்தைக் குறைக்கும் மாயச் சக்தியாகும்.அன்றாடம் குறைந்தது, முப்பது நிமிடங்களாவது, நடக்கும் வழக்கத்தைக் கொள்ளவேண்டும். இது மன அமைதியுடன் உடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும்.

தினந்தோறும் முடிந்தவரை, ஒரு அரை மணி நேரமாவது, தான் மிகவும் விரும்பும் ஏதாவது ஒரு பொழுது போக்கில் ஈடுபடுவது நன்மை பயக்கும். முக்கியமாக குடும்ப விழாக்கள், நண்பர்கள் வீட்டு விழாக்கள் என்று இப்படி ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவ விடக்கூடாது.

தவிர்க்க முடியாத நெருக்கடியான சூழ்நிலையில் மன இறுக்கத்தை தளர்த்துவதற்கு மிக எளிமையான ஒரு சிறியப் பயிற்சியை பற்றி பார்ப்போம். இதற்கு, "வயிற்று சுவாசம் " என்று பெயர். இந்த மூச்சுப் பயிற்சியினால் நுரையீரல் முழுவதும் நிறைந்து மூளைக்கு அத்தியாவசியமான ஆக்சிஜனை துரிதப் படுத்துகிறது.

ஆழ்ந்த, நிதானமான மூச்சை மூக்கின் வழியாக எடுத்து, அது அடி வயிறு வரை செல்வதை உணர வேண்டும். இப்பொழுது நீண்ட, மெதுவான மூச்சை வெளிவிட வேண்டும். வயிறு அப்படியே உள்ளே போய் சம நிலையில் இருப்பதை கவனிக்க வேண்டும். உள்ளே இருக்கும் மூச்சு கண்டிப்பாக அமைதியையும், நிம்மதியையும் அளிக்க வல்லதாக கற்பனை செய்ய வேண்டும். அதே போல் மூச்சு வெளியே விடும் போது அதனுடன் சேர்ந்து மன அழுத்தமும் போய் விடுவதாக நினைக்க வேண்டும். இது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சிறந்த பயிற்சியாகும்.

எந்த காரியமாக இருந்தாலும் அதன் எளிதான பக்கத்தை மட்டும் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

சந்திரன், ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். அறுவை சிகிச்சை அரங்கிற்கு உள்ளே செல்லும் நேரம், அவருடைய மகனும், மனைவியும் கலங்கி, செய்வதறியாது நிற்க, உடனே, அவர்களுடைய குடும்ப நண்பர், வடிவேலு பாணியில்," ஃபீலிங்ஸ்ஸ்......... சரி சரி ஓவரா ஃபீல் பண்ணாதீங்க, இன்னும் 2 மணி நேரத்திலே வெளியே வந்துடுவாப்ல. அப்பறம் சண்டையை வைச்சுக்கலாம்", என்று சொல்லவும் எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டனர், சந்திரன் உட்பட. இலேசான மனதுடன் சென்று நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து திரும்பியும் விட்டார், சந்திரன். "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்", என்பார்கள்.நல்ல மனமார்ந்த சிரிப்பு, சதை இறுக்கத்தை தளர்த்தி, இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தி மன அழுத்தம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது.

மன அழுத்தமான நேரத்தில் காபி, கோகோ குளிர் பானங்கள் போன்றவைகள் நல்லதல்ல.

தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு சிறு ஓய்வாவது எடுக்க வேண்டும்.

தினந்தோறும் காலை வேளையில் அமைதியாக தியானம், பிரார்த்தனை, இவைகளை செய்வது நாள் முழுவதும், அதிகமான மன அழுத்தம் ஏற்படுத்தும் நார் அட்ரினலின் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களைக் கட்டுப் படுத்தி, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்கிறதாம்.

இறுதியாக ஒன்றை நாம் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, நம்முடைய உள்மன அமைதி என்பது நம்மிடம் மட்டுமேதான் உள்ளது. எந்த மருத்துவரும், எந்த மருந்தும் இதற்கு துணை புரியாது. அதை உணர்ந்து நாமே நம்மை அமைதியாக்கிக் கொள்ள வேண்டும்!!
,

Monday, July 26, 2010

ஓர வஞ்சனை

"ஏண்டா, கோபி, என்னடா குழந்தையை கவனிக்கிறீங்க? அவன் என்ன படிக்கிறான்னு, அவனோட பள்ளிக்குப் போய் விசாரிக்கிறீங்களா, இல்லையா? கான்வென்ட்டுல படிக்கிறான்னு பேரு. நாலு வார்த்தை சேர்ந்தா மாதிரி இங்கிலீசுல பேசத் தெரியல. இப்படியே போனா பின்னால மேற்படிப்பு, இண்டர்வியூன்னு வரும் போது ரொம்ப சிரமப் படுவான்"

" சரிப்பா, இனிமேல் சரியா கவனிச்சுக்கிறேன்".

அடுத்த வாரம் கோபியின் தங்கை அமெரிக்காவிலிருந்து தன் 2 வயது குழந்தையுடன் முதன் முறையாக வந்ததால் வீடே விழாக் கோலமாக இருந்தது.

"ப்ரீதி, தாத்தாவுக்கு வணக்கம் சொல்லும்மா".

குழந்தையும் அழகான மழலையில் வணக்கம் சொல்ல, தாத்தா குழந்தையை எடுத்து, அணைத்து , முத்தமிட்டு,

"அட, குழந்தை, எவ்வளவு அழகாத் தமிழ் பேசறா. ரொம்ப சந்தோசம்மா. எங்கே தமிழே தேரியாம வளர்ந்துடுவாளோன்னு பயந்துட்டிருந்தேன்.," என்று பாராட்டியதைப் பார்த்த மருமகளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை.

உடனே வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு ,கணவனிடம் சென்று, "உங்கப்பாவிற்கு இந்த ஓரவஞ்சனை ஆகாது. நம்ம பையனை மட்டும் தமிழ்லயே பேசறான்னு எப்படி திட்டினார். தான் மகள் வயத்து பேத்தி மட்டும் வணக்கம் சொன்னதற்கே அவ்வளவு சந்தோசப் படறாரு."

மருமகள் முனகுவதைப் பார்த்த மாமனார்,

"ஏம்மா, திரும்பிய பக்கமெல்லாம் ஆங்கில மொழியையே கேட்டு பழகிப்போன குழந்தை அழகான தமிழ்ல வணக்கம் சொல்லறது பாராட்டப் படவேண்டிய விசயமல்லவா?", என்றார்.

Sunday, July 25, 2010

யுக்தி

" என்னப்பா, பாலு எப்பப் பார்த்தாலும் இப்படி கடைசி நாள்தான் வந்து மின்சாரக் கட்டணம் கட்டுவியா? ஒரு நாலு நாள் முன்பாவது வந்து கட்டக் கூடாதா?"

மின்சாரக் கட்டண கவுண்டரில் பணம் வசூலிக்கும் கரிகாலன் என் பால்ய சிநேகிதன்.கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டால், அவன் கட்டிவிட்டு ரசீதை என் வீட்டில் வந்து கொடுத்துவிடுவான்.என் வீடு தாண்டித்தான் அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.அந்த உரிமையில் தான் என்னை அப்படிக் கேட்டான்.

"என்னப்பா பண்றது, என்வேலை அப்படி. வியாபார விசயமா அலையறதே என் பொளப்பா போச்சு. அடிக்கடி வெளியூர் பயணம் வேற போறதனால சரியான நேரத்திற்கு வரமுடிவதில்லை".

'அதுவும் சரிதான்.சரி, சரி கொடு, நல்ல வேளை இன்னைக்கு கூட்டம் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு. அட, என்னப்பா உன்னோட மின்சாரக் கட்டிணம் இந்த முறை ரொம்ப கம்மியா இருக்கு? எப்பவும் 3000க்கும் மேலே வரும். இந்த முறை அதிசயமா 1000 ரூபாய் கனிசமா குறைஞ்சிருக்கு. குடும்பத்தோட வெளியூர் போயிடீங்களா', என்றான் ஆச்சரியமாக.

அட, இல்லப்பா, ஒரு சின்ன யோசனை தோணிச்சு. அத எடுத்து வுட்டேன் பாரு, கனிசமா பில் குறைஞ்சி போச்சு, என்றேன்.

'அட, அப்படி என்னப்பா யோசனை? சொல்லு, நானும் முயற்சி பன்றேன், என்றான்.'பெரிசா ஒண்ணுமில்லப்பா.எங்க வீட்டில தேவையில்லாத இடத்திலெல்லாம், லைட் எரிஞ்சிக்கிட்டே இருக்கும். லைட் போட்டா அணைக்கவே மாட்டாங்க. ஃபேன், ஏ.சி போட்டாலும் அப்படித்தான். அது பாட்டுக்கு ஆள் இல்லாத நேரத்துலக் கூட ஓடிக்கிட்டே இருக்கும். மோட்டார் போட்டா, தண்ணீர் நிரம்பி வழிந்து போன பிறகு தான் நிறுத்துவாங்க. தண்ணீர் வேறு வீணாகும்.

பிள்ளைங்ககிடேயும் என் மனைவிக்கிட்டேயும், பல முறை எடுத்துச் சொல்லியும், எந்த பயனும் இல்ல. இப்ப என்ன பண்ணினேன் தெரியுமா?

என் மனைவியைக் கூப்பிட்டு, போன மாச பில் தொகையான 3600 ரூபாயை, அவள் கையில் கொடுத்து, இந்த மாதம், நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. கரண்ட் பில்லை முடிந்த வரை சிக்கனம் பண்ணினா, இதில எவ்வளவு பணம் மீதி வருதோ அதை உன் சிறுவாட்டுல சேர்த்துக்கோ, ',என்று சொல்லி விட்டேன்.

அவ்வளவுதான், அவள் ரொம்ப சாமார்த்தியமா கரண்ட்ட பயன் படுத்த ஆரம்பிச்சுட்டா. ஏ.சி. யைக் கூட போட்ட 2 மணி நேரத்தில ஆஃப் பண்ணிட்டு, இந்த குளிர்ச்சியே ரொம்ப நேரத்துக்கு இருக்கும், ஃபேன் போட்டா போதும்ன்னு சொல்லறா. இதுதான் எங்க கரண்ட் பில் குறைந்த ரகசியம்', என்றேன்.

'ஆஹா, அருமையான யோசனைப்பா. நானும் இதையே முயற்சி பண்ணறேன்', என்றான் கரிகாலன்