Thursday, March 8, 2018

சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!



ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது தனிமனிதர்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அமைய முடியும். அத்தகைய தனிமனித வளர்ச்சியின் ஆணி வேராக இருப்பவர்கள் பெண்கள் மட்டுமே.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் மட்டுமல்ல வாழ்வாதாரத்தின் அடிப்படையிலேயே பெண்தான் இருக்கிறாள் என்பதே நிதர்சனம். ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பான்மையான சமூக அமைப்புகள் பெண்களின் தன்னலமற்ற சேவையின் மூலமே கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது பாலின வேறுபாடுகளின்றி, சமுதாய முன்னேற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பும் உள்ளது. தற்போது பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சம ஊதியம், சம கல்வி, சம வேலை வாய்ப்புகள் என பல்வேறு வகையான வாய்ப்புகளும் பெருகி வருவதும் கண்கூடு. கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அங்கே புல்விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அதனால் அவனுக்கு மட்டுமே பயனுண்டு. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமைக்கும் பயன்படுகிறது. அக்கல்வியால் குழந்தைகளை நன்றாகப் பேணி வளர்க்கவும் முடிகிறது. ஆம் கல்வி கற்ற பெண் தன் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க முடிகிறது.

சமுதாய அமைப்பு என்று எடுத்துக்கொண்டால் அதில் பெண்கள் பெற்றுள்ள செல்வாக்கு மட்டுமே அந்நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமையும். அத்தகைய வளர்ச்சிக்குப் பெண் கல்வி மட்டுமே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதாவது நற்பண்பை வளர்க்கக்கூடிய அறிவைப் புகட்டுவதும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கக்கூடியதுமான திறன்களை உருவாக்குவதுமே பெண் கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருக்க வேண்டும். சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு இயங்க வேண்டுமாயின் கல்வியின் அவசியத்தை முதலில் உணர்தல் வேண்டும். சமுதாயத்தில் உன்னதமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்றால் அது பெண் கல்வி மட்டுமே. ஆம் பல துறைகளிலும் ஆண்களுக்குச் சரி நிகராக முன்னேறிவரும் இன்றைய பெண்கள்தான் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகிறவர்கள் என்றால் அது மிகையல்ல. அத்தகைய கல்வி, இலட்சிய வேட்கை மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு முன்னேற்றம், புதிய சிந்தனையில் நாட்டம், ஆகியவற்றை முன்னெடுக்கக்கூடியதாக அமைய வேண்டும்.

ஆதிகாலந்தொட்டு பெண்கள் வீரம், விவேகம், உழைப்பு, பொறுப்பு, பொறுமை என அனைத்திலும் ஆண்களைக்காட்டிலும் சிறந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர். புலியை முறத்தால் விரட்டியப் பெண்மணிகள் சங்க காலத்திலேயே இருந்துள்ளனர். வயலில் இறங்கி பாரபட்சமின்றி ஓயாது உழைத்தவர்கள் அக்காலத்திலும் இருந்தனர். ஆயினும் கல்வி கற்பதில் மட்டும் பெண்களுக்கான எல்லைக்கோடு அழுத்தமாகவே பதியப்பட்டிருந்தது.
ஆனால் இன்றைய நிலையே வேறு. “புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாரதிதாசனின் வார்த்தைகளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரம் இல்லாமல் அடிமைத்தளையில் சிக்குண்டு கிடக்கும் பெண்கள் உருவாக்கும் சந்ததியினரின் துணிவும், தன்னம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிடுகின்றன.
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றார் பாரதி.

அதாவது, பெண்களை எண்ணத்தால், சொல்லால், செயலால் என எவ்வகையிலும் இழிவுபடுத்தும் அறிவற்ற செயலை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்பதே இதன் பொருள்.
ஆனால் இன்றைய நிலையில் அன்றாடம் ஊடகங்களில் பெண்கள் பலவகையிலும் இழிவுபடுத்தப்படும் செயல்பாடுகளில் முன்னணியில் நிற்கின்றன. விளம்பரங்களில் தேவையின்றி பெண்களை அரைகுறை ஆடைகளுடன், மோசமான பாலுணர்வைத் தூண்டுகின்ற உடல் மொழிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று மிகக் கேவலமாக நடத்துவதைக் காணமுடிகிறது. தொலைக்காட்சி தொடர்களில் மேலும் ஒருபடி மோசமாக, பெண்களை கலாச்சார சீர்கேடுகளை ஊக்குவிப்பவர்களாக புனையப்படுவதுதான். குடும்பத்தில் வன்முறைகளை எப்படி செயல்படுத்துவது என்பதை பெண்களைக்கொண்டு வகை வகையாகத் திட்டமிட்டு காட்சிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொலை, கொள்ளை, கர்பத்தைக் கலைத்தல், பாலியல் வன்கொடுமைகள் போன்ற கொடுமைகளை சர்வ சாதாரணமாகப் பெண்கள் செய்வதுபோலக் காட்சியமைப்பதை எந்தத் தணிக்கைக் குழுவும் கண்டுகொள்வதில்லை என்பது வேதனையான விசயம். பண்பாடு மற்றும் கலாச்சார சீரழிவிற்கு மிக முக்கியமான காரணிகளில் முதன்மையாக இருப்பது ஊடகங்கள் என்பதை மறுக்கவியலாது.

ஒரு பெண்ணின் வாழ்வியல் என்பது ஆரம்பம் முதல் கல்வியில் தொடங்க வேண்டும். மகாகவி பாரதி சொல்வது போன்று,
“அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன. முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி; மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது என்பது கருத்து”
(சக்கரவர்த்தினி கட்டுரை-பக்.83) என்கிறார்.

ஓரளவிற்கேனும் படித்த பெண்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்பதோடு அரசியல் செயல்பாடுகளிலும் பங்கேற்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் பல நன்மைகள் விளைகின்றன. இன்று கணினித் துறையில் இருக்கும் பெண்கள் பல நாடுகளுக்கும் பயணம் செய்து தங்கள் அறிவின் மேன்மையை வெளிப்படுத்தி புகழ் பெறுகிறார்கள். அதுமட்டுமட்டுமின்றி அங்குள்ள புதுமைகளை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும் முனைவதன் மூலம் பாரதியின் கனவை நினைவாக்குகின்றனர்.
கல்வி, ஆளுமை, சுதந்திர உணர்வு, அச்சமின்மை, என ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டெழுந்து வெற்றிவாகை சூடிவரும் புதுமைப் பெண்களை பரவலாகக் காணமுடிகிறது.
எதிர்படும் சவால்களனைத்தையும் சமாளிக்கும் வல்லமையையும் பெற்றிருக்கிறார்கள். ஆக சமுதாயப் புரட்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள எந்த தடையும் இல்லாத வகையில் பெண்கள் இன்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்கள்.
பொருளாதார முன்னேற்றம் என்பது மட்டுமே ஒருவரின் உண்மையான வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியதாகும். குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரமும், முன்னேற்றமும் மிகவும் அவசியமானதாகும். இன்றைய உலகமயமாக்கல், பொருளாதார மறு சீரமைப்பு போன்றவைகளால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் பெருகி வருவது பெண்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. பலர் தொழில் துறைகளிலும், உற்பத்தித் துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர்.
சிலகாலம் முன்பு தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பணிபுரிவது மட்டுமே பெண்களின் வழமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய நிலையில் மற்றைய உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும், சமுதாயத்தில் பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுய தொழில் செய்வதிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றியும் கண்டு வருகின்றனர் என்பதும் மகிழ்வான செய்தி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவின்படி அரசியல், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய அனைத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் பெண்களின் சுதந்திரமான பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்றும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
இத்தனைச் சட்டங்களும், கல்வியறிவும் இருந்தாலும் பெண்களுக்கு போதுமான அதிகாரங்களும் வாய்ப்புகளும் குறிப்பிட்ட மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதும் உண்மை. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இந்திய சமுதாயம் ஆணாதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்றே சொல்லமுடிகிறது. அலுவலகங்களில் ஒரே விதமான பணிகளுக்கு ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு குறைந்த அளவிலுமே சம்பளம் வழங்கப்படுகிறது. கூலி வேலை செய்யும் தொழிலிலும் இதே நிலையே உள்ளது.

பெண்களும் பொறுப்பு தரப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட்டு தாமே முன்வந்து முக்கியமான பொறுப்புகளை ஏற்கவேண்டும்.
ஆயினும் பாரம்பரியமாக குடும்பம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கும் பெண்களும்கூட பொருளாதார நிலையில் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைதான் இன்று இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து சுயமாக நின்று தொழில் புரிய முன்வரும் பெண்களும் தொழிலில் சந்திக்கும் சவாலை விட பன்மடங்கு சவால்களையும் பிரச்சனைகளையும் தங்கள் சமுதாயம், குடும்பம் போன்றவற்றில் அதிகமாகவே சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களைப் போன்றல்லாமல் பெண்கள் குடும்ப பொறுப்புகளையும் சேர்த்தே சுமக்க வேண்டியுள்ளது. ஆனால், அவள் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்ப பொறுப்பையும் இயல்பாக ஏற்கும் நிலையே இருக்கிறது. பல காலங்களாக பழக்கத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமே குடும்பம், குழந்தைகள் பராமரிப்பு என்று இருக்க வேண்டும் என்ற நிலையில் மாற்றங்கள் கொண்டுவருவது எளிதாக இருப்பதில்லை. சமுதாயத்தில் எந்த மட்டத்தில் இருக்கும் ஆண்களும் இதனை புரிந்து கொள்ள முயல்வதில்லை.
இதுமட்டுமின்றி, தேவையான அளவிற்கு உழைப்பதற்கும், சவால்களை சமாளிப்பதற்குரிய பக்குவம் பெற்றிருந்தாலும் பெண்கள் எதிலும் சுயமாக முடிவு எடுக்க முடியாத வகையில் பெற்றோர், கணவர், உறவினர்கள் என்று பலரின் தலையீடுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. தொழில் விசயங்களிலும் இந்த தலையீடு இருப்பதால் பல நேரங்களில் அது வெற்றி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்பதும் நிதர்சனம்.
வெற்றி பெற்ற பெரும்பாலான பெண் தொழிலதிபர்கள், ஆண்களை விட பன்மடங்கு அதிகமாக உழைத்தவர்களாகவோ அல்லது குடும்பத்தின் முழுமையான ஒத்துழைப்பு பெற்றவர்களாகவோ இருப்பவர்கள்.
பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களும், சலுகைகளும் நிறைய இருக்கின்றன. இவைகள் பற்றிய விழிப்புணர்வுடன் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில் துவங்கி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தொழில் தொடங்க முன் வரவேண்டும்.
அனைத்திற்கும் மேலாக பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராடுவதோடு தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் தயங்கக்கூடாது.
ஒரு நாட்டின் புகழ் அந்த நாட்டின் மக்கள் தொகையைக் கண்டு மதிப்பிடப்படுவதில்லை. மாறாக அந்நாட்டிலுள்ள சிறந்த மேதைகள், சிந்தனையாளர்கள், நல்ல தலைவர்கள், பண்பாளர்கள் ஆகயோரின் எண்ணிக்கையைக் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அப்படிப்பட்ட நல்ல குடிமக்களை உருவாக்கும் தாய்க்குலத்தை சுதந்திரமாக செயல்படவும், துணிவுடன் சவால்களை எதிர்கொள்ளவும் வழியமைக்க வேண்டும்.
சேமிக்கின்ற நல்ல பழக்கமும், குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்கும் திறமையும் பெண்களிடம் தான் அதிகமாக உள்ளது என்பதையும் மறுக்கவியலாது.
தற்கால பெண் சாதனையாளர்களில் மறக்க முடியாதவர்கள் என்றால், துர்காபாய் தேஷ்முக், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தவர். ஆந்திர மகிளா பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அர்த்தமற்ற சமூகக் கட்டுப்பாடுகளை பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என முழங்கியவர். நம் நாட்டில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்தவர். பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ, பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். ‘சமூக சேவைகளின் அன்னை’ என்று புகழாரம் சூட்டிய இந்திரா காந்தி இவரை தனது குருவாகக் கொண்டார். இரும்புப் பெண்மணி என்று போற்றப்பட்டவரான இவர் தமது இறுதிமூச்சு வரை பெண்கள், குழந்தைகளின் நலனுக்காகவே பாடுபட்டவர்.

டாக்டர் சாந்தா, உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தவரும் இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இணைந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 61 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்வது வழக்கம்.
மன நோயாளிகளின் புனர் வாழ்விற்கு வழியமைத்த டாக்டர் சாரதா மேனன் , இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மற்றும் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பெண்மணி. பத்ம பூசண் விருது, அவ்வையார் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
கலைமாமணி ருக்மணி அருண்டேல் போன்றோர். தங்கள் வாழ்நாள் முழுவதும் முழுமையான அர்ப்பணிப்புடன் எதிர் நீச்சல் போட்டு சாதனை புரிந்தவர்கள் இவர்கள்!

நன்றி http://www.vallamai.com/?p=83834

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...