Saturday, June 2, 2012

எளிமையும்.. வலிமையும்!


ஒருபிடி சோற்றுக்கு
ஒருநூறு காக்கைகள்
ஓரொரு பருக்கையாய்
ஓடிஓடி கொரிக்க
கூடிக்கூடி சமத்துவமும்
பாடிப்பாடி தத்துவமும்
நாடிநாடி களித்திருக்க
கோடிக்கோடி தானியங்களைக்
குடைந்து குடைந்து
குதூகலமாய் சேகரித்து
குற்றேவல் புரியும்
குழுவிற்கும் சிறுபங்கிட்டு
திருப்தியாய் கொண்டாடி
திட்டமிட்டு சிலம்பாடி
திருவாசகமாய் மலர்ந்தருளி
கனிரசமாய் கற்கண்டாய்
கருத்துகள் பரிமாறி
கசப்பையும் கச்சிதமாய்
உவர்ப்பையும் உற்சாகமாய்
உரைப்பையும் உறுதியாய்
உல்லாசமாய் உடமையாக்கி
பச்சைப்பொய்கள் பலபேசி
பச்சைக்கிளியின் முகமூடியில்
பகட்டாய்த் திரியும்
பருந்துக் கூட்டம்!

in and out chennai publication: Thankyou.

Friday, June 1, 2012

திருமணச் சந்தை


நன்றி :

In and Out Chennai Magazine



கல்லூரி வாழ்க்கை
விடைபெறும் நேரம்
தொழிலுக்கு வந்தனை
செய்யும் யோகம்.

டாலர் கனவுகளின்
முடிசூட்டுவிழா
நிறைவேறும் காலம்.

ஒழுக்கமும் உயர்வும்
நற்குடும்ப பாரம்பரியமும்
ஒருங்கே இணைந்த உன்னதம்.

திருமணச்சந்தையில்
நல்லதொரு கௌரவமான
வரவேற்பு.

வேட்டையாடி வென்ற
களிப்பில்
பெண்ணின் உற்றார்.

மகன் இல்லாத குடும்பத்தில்
வரமாய் வந்த
தங்கமனசுக்காரன்.

வலியின்றி வேதனையின்றி
பெற்ற மகனாய்
பட்டம் கட்டி
வாரிசாக்கிய வள்ளல்கள்.

விதையூன்றி நாத்துநட்டு
மரமாகி கனிகொடுக்கும் வேளையில
தேவதையின் கடாட்சம்.

வாழ்த்துமழை பொழியும்
பெத்தமனம்
கண்ணீர் மழையில்
நனையும் உள்மனம்.

காசியும் கயிலையும்
தரிசிக்க
அளித்த புண்ணியம்.

சக்தியாய் வந்த முன்காலம்
பக்தியாய்
மாறிய பின்காலம்.

சக்தியும் பக்தியும் எளிதாய்
அமையப்பெற்ற
பெற்றோரின் வசந்தகாலம்.

விலைபோன சக்தியும்
வரமாய்வந்த பக்தியும்!

தானமாய்ப் போன உறவும்
பாரமாய் ஆன நினைவும்!

சக்தியும் புத்தியும்
மகவு மகிழ்வாய் வாழ
பிரார்த்திக்கும்
பெத்த மனம்!





Wednesday, May 30, 2012

காற்றில் ஆடும் தீபங்கள்! (4)





துணிந்து நில்! தொடர்ந்து செல்!

வாலிபப்பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் மிக இனிமையானதொரு காலகட்டம். அதில் ஆண், பெண் என்ற பாகுபாடிற்கு அப்பாற்பட்டு இனிமையான கற்பனைகளையும், சுகமான கனவுகளையும் இதமாக ஏந்திச்செல்லும் பருவம். இதே பருவத்தில்தான் எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவெடுக்க வேண்டிய பொறுப்புகளும் இருக்கும். என்னதான் பெற்றவர்களின் தலையீடு அதிகம் இருந்தாலும், தங்களுக்கென்று சில சுயவிருப்புகளும், திட்டங்களும் வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சில இதமான, எளிமையான கனவுகளைக் கொண்டிருந்தாள் ஸ்ரீலதா.

சிறு வயதிலிருந்தே, தன் அம்மாவைப்போல நல்ல குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவள் மனதில் இருந்தது. வீட்டு வேலைகளில் படுசுட்டி. சமையல் செய்வது அவளுடைய இன்பமான பொழுதுபோக்கு. இவளைக் கட்டிக்கொண்டு போகப்போகிற குடும்பத்திற்கு மிக யோகமான நேரம்தான் என்று சொல்லாதவர்களே பாக்கியில்லை. ரோசா வண்ணமும், மெலிதான உடல்வாகும், செதுக்கி வைத்த சிற்பம் போன்ற அழகான தோற்றமும் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். பட்டப்படிப்பு முடிய சில மாதங்கள் இருக்கும்போதே வரன்தேட ஆரம்பித்தார்கள். ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் ராகுவும், கேதுவும் இருப்பதால் அதே போன்று உள்ள ஜாதகம் மட்டுமே பார்த்து மணம் முடிக்க வேண்டும் என்று ஜோசியக்காரர்கள் சொல்ல... அப்போது ஆரம்பித்த வேட்டை, நாட்கள் மாதங்களாகி வருடம் 2ம் ஓடிவிட்டது..

மாப்பிள்ளை தேடி அலுத்துப்போன பெற்றோர் ஒருவழியாக சரியாக பொருந்தியிருந்த ஜாதகம் வந்த திருப்தியில் மேற்கொண்டு காலங்கடத்தாமல் விரைவில் மணமுடித்தனர். திருமணம் முடிந்த முதல் வாரம் விருந்து, உறவினர் கேலி, என்று கொண்டாட்டமாகத்தான் நாட்கள் நிமிடமாகக் கழிந்தது. தேனிலவிற்காக குலுமணாலிக்கு டிக்கெட்டும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து மகளையும், மருமகனையும் அனுப்பி வைத்தனர். குளுகுளு குலுமணாலிக்குச் சென்று சேர்ந்தவுடன் ஆனந்தமாக தொலைபேசியில் அழைத்து தம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவள் பிறகு இரண்டு நாட்கள் சத்தமில்லாமல் இருக்கவும், மகள் போன் செய்யக்கூட நேரம் இல்லாமல் மாப்பிள்ளையுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தனர் பெற்றோர். ஆனால் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்காமல், பத்து நாள் டிரிப்பை நான்காவது நாளே முடித்துக்கொண்டு திடுதிப்பென்று வந்து நிற்கும் மாப்பிள்ளையையும், பெண்ணையும் பார்த்து அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தனர்.

அடுத்து இயந்திரமாக இருவரும் சாப்பிட மட்டும் வந்து போய் மற்றபடி ஆளுக்கொரு அறையில் முடங்கிக்கொண்டிருந்தனர். அடுத்த நாள் மாப்பிள்ளை தன் வீட்டிற்குக் கிளம்புவதாக சொன்னபோது, லதா மட்டும் தான் உடனே போகப்போவதில்லை சில நாட்கள் கழித்துதான் செல்லப்போவதாகக் கூறிவிட்டாள். மாப்பிள்ளையை தனியே அனுப்ப சம்மதமில்லாவிட்டாலும், லதா பிடிவாதமாக போக மறுத்ததால் மாப்பிள்ளையிடம் தாங்களே கொண்டுவந்துவிடுவதாக சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தனர். ஏகப்பட்ட குழப்ப ரேகைகளுடன் தலை குனிந்தவாறே சென்றவரைப் பார்த்து சற்று கலக்கமாகத்தான் இருந்தது.

மாப்பிள்ளை கிளம்பியவுடன் மகளை மெல்ல தாய் அருகில் சென்று தலையைக்கோதி, மெதுவாக என்ன நடந்தது என்று கேட்டவள் மகள், ‘ஓ’ வென்று அழ ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டனர் பெற்றோர். அவளை சமாதானம் செய்து மெதுவாக விசயத்தை வாங்கினர். கணினித் துறையில் பணி, கைநிறைய வருமானம், வீட்டிலும் செல்லப்பிள்ளை, சகவாசம் சரியில்லாமல் குடித்துப் பழகியிருக்கிறார்.. தேனிலவு சென்ற இடத்திலும் அளவிற்கதிகமாக குடித்துவிட்டு வாந்தி எடுத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் இதேபோல் நடந்து கொள்ளவும், லதாவிற்கு அருவறுப்பாக அங்கு இருக்கவே பிடிக்காமல் அடம்பிடித்து கிளம்பி வந்திருக்கிறாள். முன்பின் இது போலெல்லாம் நேரில் பார்த்திராத லதாவிற்கு இது அதிர்ச்சியையும், வெறுப்பையும் ஊட்டிவிட அதற்குமேல் பொறுக்க முடியாமல் கிளம்பி வந்திருக்கிறார்கள். பெற்றோருக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்துள்ளது. நன்கு விசாரித்துதான் இந்த வரனை முடிவு செய்திருந்தார்கள். ஆனால் எப்படியோ இதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இனி ஆகப்போவதை கவனிப்போம் என்று மனதை தேற்றிக் கொண்டாலும், இதை சீரணித்துக்கொள்வது வெகு சிரமமாக இருந்தது.

மகளை அழைத்துக்கொண்டு சம்பந்தி வீட்டில் நேரில் சென்று பேசி, இனி குடிக்கமாட்டார் என்று உறுதியுடன் சமாதானம் செய்து விட்டுவிட்டு வந்தாலும், அடுத்த சில நாட்களிலேயே மகள் திரும்ப கண்ணைக்கசக்கிக் கொண்டு வரவும், பெற்றவர்களுக்கு கோபம் தலைக்கேற, பிறகு இருகுடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, பிரச்சனை பெரிதாகிவிட்டது. இறுதியில் லதாவின் வாழ்க்கையில் மண் விழுந்தது. அவளும் ஒரே பிடிவாதமாக கணவனுடன் சென்று வாழப்போவதில்லை என்று உறுதியாக இருந்ததுதான் அவள் செய்த பெருந்தவறானது..

வாழ்க்கையில் தவறே செய்யாத மனிதரைப்பார்ப்பது எளிதல்லவே.. மேடு,பள்ளங்கள் நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வேற்படுத்த வேண்டிய பெற்றோரே, தெளிவில்லாமல் சண்டையை பெரிதுபடுத்திக் கொண்டிருந்ததன் விளைவு மகள் வீட்டோடு வந்து விட்டதுதான்.. மனது வைத்திருந்தால் எளிதாக கணவனை திருத்திவிட முடியும் என்று உறவினர்கள் பலரும் எடுத்துச்சொல்லியும் ஏற்றுக்கொள்ள இயலாமல் மறுத்து, இறுதியில் விவாகரத்தில் சென்று முடிந்தது.. மூன்று மாதத்தில் மறுமணம் செய்து கொண்டு மாப்பிள்ளை கவலை இல்லாமல் செட்டிலாகிவிட, லதாவின் வாழ்க்கை மட்டும் காற்றில் ஆடும் தீபமாக இன்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தங்கைக்கு திருமணம் செய்தாகிவிட்டது. மேற்கொண்டு படித்து இன்று கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.. மற்றொரு முறை மணமேடையில் ஏற மனமில்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறாள்.. காலங்கள் யாருக்காகவும் நிற்காதே... சற்று சுயமாக சிந்தித்திருந்தால் எப்படியாவது கணவனை திருத்தி நல்வழிப்படுத்த நம்பிக்கை கொண்டிருந்தாள் அவள் வாழ்க்கையும் இன்று நன்றாக இருந்திருக்கலாம்.. எல்லோருக்கும் வாழ்க்கையில் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்பு கிடைப்பதில்லை. பாதையில் கிடக்கும் கல்லையும், முள்ளையும் அப்புறப்படுத்திக் கொண்டே முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டியதுதான் முறை... நினைத்த வாழ்க்கையே அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. கிடைத்த வாழ்க்கையை தமக்குத் தோதாக மாற்றியமைத்துக் கொள்வதில்தானே ஒரு பெண்ணின் சாமர்த்தியம் இருக்க முடியும் அதைவிடுத்து வெறுத்து,விலகி ஓடுவதில் அர்த்தமில்லையே.. வாழவேண்டிய காலங்களை வீணே வேதனையில் கழிப்பதில் யாருக்கும் இலாபமில்லையே.. மகள் எப்படியும் ஒரு நாள் மறுமணத்திற்கு மனம்மாறி சம்மதிப்பாள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் பெற்றோர் காலங்கடந்து இன்று தங்களுடைய தவறையும் நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள்......

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம் (6)



கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! (பாரதியார்)



2004ஆம் ஆண்டு, உயர்திரு வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயம், சமூக சேவைக்கான உயரிய விருதான ’ஸ்ரீசக்தி புரஸ்கார் விருதை’ அளிக்கும் போது நம் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு நடந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.. ஆம் பிரதமரே பொது மேடையில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பெருமைக்குரிய அந்தப் பெண்மணி யார்? மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுசேரி என்னும் அடித்தட்டு மக்கள் வாழும் கிராமத்தில், கண்டாங்கிச் சேலையும், அள்ளிச்செருகிய கொண்டையும், தேய்ந்து போன ரப்பர் காலணிகளும், கரிய உருவமும், என்று மிக எளிமையான தோற்றம் கொண்ட சின்னப்பிள்ளைதான் அவர்! எழுதப்படிக்கக்கூடத் தெரியாத, கைநாட்டு மட்டும் வைத்துக் கொண்டிருந்தவர், தற்போது தம் பெயர் மட்டும் எழுத கற்றுத்தேர்ந்துள்ளவர், சின்னப்பிள்ளை, தம் 65 வயதில் பம்பரமாய்ச் சுழன்று, 9 மாநிலங்களில் 4 இலட்சம் பேர்கொண்ட மாபெரும் பெண்கள் இயக்கத்தை நிறுவி அதன் தலைவியாக உள்ளார். ’களஞ்சியம்’ என்ற இவருடைய அமைப்பிற்கு யு.என்.ஓ (UNO) நிறுவனம் உதவி செய்து அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை போன்ற 10 கிராமங்களைத் தத்து எடுத்து 4 1/2 கோடி செலவில் அக்கிராமங்களை புனரமைப்பு செய்திருக்கிறார். இவருடைய களஞ்சியம் அமைப்பு ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் வைப்புத்தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.150 கோடிக்கு மேல் அடித்தட்டு மக்களின் சேமிப்பு களஞ்சியங்களில் உள்ளது. மேலும் ரூ.800 கோடி ரூபாய் அளவிற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று ஏழை மக்கள் களஞ்சியங்களின் வாயிலாக தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள் . கிராமப்புற வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் பெறும் பொருட்டு, ஹாலந்து, மெக்சிகோ, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் பெண்கள் அமைப்புகள் இவரை அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தம்முடைய ஏழ்மை நிலையிலும், உறுதியான எண்ணம் கொண்டு சாதித்துக் காட்டியிருக்கும் இப்பெண்மணி இன்றும் வாழ்வது ஒற்றை அறை வீடு, தலித் மக்களுக்காக அரசால் ஒதுக்கப்படட குடியிருப்பு.

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சில மூன்றாம் உலக நாடுகள் தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் மாதிரியை தங்கள் நாடுகளிலும் செயல்படுத்த வேண்டும் என்பதை தங்களது ஆவலாகத் தெரிவித்துள்ளன. தானம் அறக்கட்டளையும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேம்பாட்டுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அப்பயிற்சிகளிலெல்லாம் ஸ்த்ரீ சக்தி சின்னப்பிள்ளை, பங்கேற்று தங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளதோடு பாடங்களும் நடத்தியிருக்கிறார். அதே போன்று திருமதி.சின்னப்பிள்ளைக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகுப்பின் பெயர்தான் 'ஸ்த்ரீ சக்தி புரஷ்கார்' அதில் மராட்டிய மாமன்னர் வீரசிவாஜியின் தாயார் திருமதி.ஜீஜாபாய் பெயரால் வழங்கப்பட்ட விருதே

நம் இந்தியாவில் பெண்கள் ஜனாதிபதியாகவும், பிரதம மந்திரியாகவும், முதல்வராகவும், சபாநாயகராகவும், எதிர்கட்சித் தலைவராகவும், விண்வெளி வீராங்கனையாகவும், ஆட்சியாளர்களாகவும், கல்வியாளர்களாகவும், தொழிலதிபர்களாகவும், தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். மருத்துவம், பொறியியல், விமான சேவை பைலட், விளம்பர மாடலிங், போன்ற எந்தத் துறையையும் விட்டுவைக்கவில்லை. பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்திருப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. பெண்கள் ஆண்களுக்குச் சமமாக சட்டரீதியான பல உரிமைகளையும் பெற்றுள்ளனர். பெண்கள் இன்று வேலைக்கு சென்று அலுவலகம், குடும்பம் என இருவேறு பொறுப்புகளையும் செவ்வனே நிர்வகிக்கின்றனர்.

ஆயினும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரம் இன்றும் சற்று பின்தங்கிய நிலையிலேயே உள்ளன என்பதும் நிதர்சனம் பொருளாதார முன்னேற்றத்திலும் பெரிதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட முக்கியமான கொடுமைகளான பெண் சிசுக்கொலை, பால்ய மணம், போன்றவைகள் பெருமளவில் தடுக்கப்பட்டிருந்தாலும் பாலியல் வன்முறை, வரதட்சணை கொடுமை, பேறுகால மரணம், ஊட்டச்சத்து குறைபாடு என பல பிரச்சனைகள் இன்றும் தொடர்கின்றன. அரசியல், தொழில், கல்வி, போன்றவற்றில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இன்னும் உயரவில்லை. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்படுவதில் இன்னும் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஏர் இந்தியாவில் கிட்டத்தட்ட 160 பெண் பைலட்டுகள் தவிர 5000க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இயற்கையிலேயே, பெண்களுக்கு ஆண்களைவிட மனோபலமும், தனித்திறன்களும் அதிகளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிக குளிர், அதிக வெப்பம் போன்றவைகளை தாங்கிக் கொள்ளும் சக்தியும் கூட பெண்களுக்கு அதிகமாக உள்ளது என்கின்றனர். பொதுவாகவே ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் விரைவாக நடை பழகுவதும், பேசப் பழகுவதும், விவரமாக செயல்கள் செய்வதும் கண்கூடாகக் காண முடிகிறது.

ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து வாழும் வகையில் சில பாகுபாடுகளுடன் படைக்கப்பட்டிருந்தாலும், பெண் என்ற அந்த படைப்பு மட்டும் பெரும்பாலும் வாதத்திற்கும், கிண்டலுக்கும் பல சமயங்களிலும் ஆளாவதும் நிதர்சனம். பொதுவாகவே உலகளவில் இதில் எந்த வேறுபாடும் இல்லை என்றே சொல்லலாம்.

பிரபல பெண்ணிய ஆய்வாளர் கேட்மில்லட் என்பவரின் ஒரு சுவாரசியமான புனைவு... ஒரு மரக்கிளையில் ஒரு பறவை சுகமாக ஒரு கூட்டில் வாழத் துவங்குகிறது. அதற்கு சிரமம் என்றால் என்னவென்றே தெரியாமல் நேரத்திற்கு உணவும் கிடைக்கிறது. ஆனால் ஒரு நாள் புயல் வீச புகலிடமும் இன்றி, பிழைக்க வழியறியாது மாண்டே போனதாம்......
ஒரு பெண்ணின் நிலையை சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறந்தது முதல் ஆண்களை அண்டிப்பிழைக்கும்படி பழக்குகிறார்கள். தந்தை, கணவன், சகோதரன், மகன் இப்படி ஏதோ ஒரு உருவில் ஆண்மகனின் பாதுகாப்பில் சுகமாக வாழப் பழகுபவள், சுயசிந்தனை என்பதே அறவே இல்லாத இல்லத்தரசியாக முடிசூட்டப்படுகிறாள். இந்த நிலையில் வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தால், உறவுகள் விலகிச் செல்ல ஆரம்பித்தால் அப்பெண்ணின் நிலை என்னவாக இருக்கும்.. கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்ற இருளில் சிக்கித் தவிக்கும் நிலையே உருவாகும் என்பதில் ஐயமேது?

இன்றளவிலும், இந்த நவீன யுகத்திலும், இது போன்று பெண்கள் எங்கும் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? தாய், மகள், மனைவி, சகோதரி என்ற பாதுகாப்பு வளையம் இருக்கும்வரை மட்டுமே வாழ்க்கை சுகமாகத்தான் பயணிக்கிறது.. அதன் பிறகு...?

20ம் நூற்றாண்டுகளில் மெல்ல வெளிவரத் துவங்கியவர்கள் இன்று படுவேகமாக முன்னேற்றப்பாதையில் விரைந்து கொண்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆயினும் இந்த முன்னேற்றம் பலவிதமான தியாகங்களின் அடிப்படையில் தான் கிடைக்கிறது என்பதையும் உணராமல் இல்லை.... குடும்பத்திலும், சமூகத்திலும் த்ங்களின் பங்களிப்பில் குறைபாடு ஏற்படுவதும் வேதனைக்குரிய விசயம்தான். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். நன்கு படித்த பெண்கள் வீட்டுப்பறவையாக இருக்க விரும்புவதில்லை. பணிக்குச்சென்று பொருளாதாரச் சுதந்திரம் வர ஆரம்பித்தாலே, குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது. அன்றாட வாழ்க்கையில், குழந்தைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறார்கள் என்றே சொல்ல முடிகிறது. அழகிய இல்லம் என்பது துண்டு துண்டாக்கப்படுகிறது.. ஆளுக்கு ஒரு திசையில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, சமீபத்திய Trust Law என்ற உலகம் தழுவிய பெண்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில், நம் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முந்நாள் மத்திய உள் துறை செயலாளர் (union Home Secretary) மதுகர் குப்தா ஓர் அறிக்கையில், 2009ம் ஆண்டு மட்டும் நம் இந்தியாவில் கிட்டத்தட்ட 10 கோடி பேர், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 40 சதவிகிதம் பேர் குழந்தைகள் எனவும் இந்திய மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ - 2009) தெரிவித்துள்ளது. இவ்வாறான ஆதாரங்கள் கையில் இருந்தும் இந்திய அரசோ, சட்ட ஒழுங்குத் துறையோ இதற்காக பெரிதாக எந்த குறிப்பிடும்படியான பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இன்றும் பெண்கள் தனியே வெளியில் செல்வதற்கு தயக்கம் காட்டும் சூழ்நிலையே உள்ளது. இதற்கு நம் கலாச்சாரம் என்ற போர்வையும் முக்கியக் காரணமாகிறது.

2011ம் ஆண்டு ஐ.நாவின் மனித உரிமை வளர்ச்சிப்பிரிவு வெளியிட்ட பாலின சமத்துவமின்மை (Gender inequality) அறிக்கையில் மொத்தம் 142 நாடுகள் உள்ளடங்கிய தர வரிசையில் இந்தியா 134ம் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, தினக்கூலி வேலை முதல் உயர் அலுவலகங்களின் பணிக்குச் செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் இது பொருந்துகிறது. கூலி வேலை பார்ப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரே விதமான உடல் உழைப்பிற்கு ஆணுக்கு, சராசரியாக பெண்ணைவிட 33% அதிக கூலி வழங்கப்படுகிறது. படித்து பட்டம் பெற்று உயரிய பணிகளில் தனியார் நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும் பணிக்குச் செல்லும் பெண்கள் இந்தப் பிரச்சினையை வேறு விதமாக சந்திக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் சம பதவிக்கு சம ஊதியம் வழங்கினாலும், பதவி உயர்வு என்று வரும் பொழுது பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். இன்று ஐ.டி. துறை மற்றும் வங்கிகள் அரசு நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ள பெண்களின் நிலையே இதற்கான ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். பிரபலமான திரைப்பட நடிகைகள் மற்றும் நடிகர்களின் சம்பளத்தில்கூட இதே ஏற்றத் தாழ்வுகளைக் காண முடிகிறது. பாலின சமத்துவமின்மை பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக வெளிப்பாடு கொண்டுள்ளது. கருத்துருவம், உயிரியல், சமூகவியல், வர்க்கம், பொருளாதாரம் கல்வி, சக்தி,மானுடவியல், உளவியல் என்று பல நிலைகளில் இந்த ஏற்றத் தாழ்வுகள் பல்கிப் பெருகியுள்ளதாக பெண்ணிய ஆய்வாளர்கள கணித்திருக்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்கள், தங்கள் பெண் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கும் ஆண் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கும் அனுப்புவதும், நடுத்தர வர்க்கத்தினர் தம் பெண்களை அரசு கலைக் கல்லூரிகளுக்கும் ஆண் பிள்ளைகளை பொறியியல் மற்றும், மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்புவதும் இன்றும் சாதாரணமாக பெரும்பாலும் காணக்கூடிய ஒன்றுதான். பெண் சிசுக்கொலை, வீட்டு வேலைகளில் சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளை மட்டும் ஈடுபடுத்துவது, போன்ற பலவிதமான ஏற்றத் தாழ்வுகள் பல முனைகளிலும் காணமுடிகிறது.

ஐ.நா.வின் அறிக்கையின்படி, உலகளவில் வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 5000க்குள்தான். ஆனால், இந்திய நாட்டின், குற்றப்பிரிவு இலாக்காவின் 2010ம் ஆண்டு அறிக்கையின்படி, ஒரு மணி நேரத்தில் 8391 பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆட்படுகிறார்கள் என்கின்றனர்.
பல தற்கொலைகளும் தூண்டப்படுகிறது. 100 கோடி பெண்கள் மற்றும் குழந்தைகள், பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள என்று என்.ஜி.ஓ. டிரஸ்ட் லா அறிக்கை கூறுகிறது. ’டைம்’ பத்திரிக்கையின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் வருடத்தில் 25000 பெண்கள் வரதட்சணை கொடுமையால் கொல்லப்படுகிறார்களாம்.

இந்தியாவில் பெரும்பாலும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை அற்ற சூழ்நிலை இருப்பதாக நம்புவதால் பெண் குழந்தை பிறப்பதையே விரும்புவதில்லை. பெண் சிசுக்கொலைக்கான முக்கியமான காரணமாகவும் இதுவே ஆகிவிடுகிறது. அதுமட்டுமின்றி, பல இடங்களில் பெண்ணே, பெண்ணிற்கு எதிரியாக இருக்கும் சூழ்நிலைகளே அதிகம் இருப்பதே காண முடிகிறது. ஒற்றுமை என்ற எண்ணமே சுத்தமாக இல்லாதிருப்பதாகவும் கூறுகின்றனர். பெண் சமுதாயம் மறுமலர்ச்சியடைய வேண்டுமாயின், தேவையற்ற வரட்டு கௌரவம், பிடிவாதம், பொறாமை, புறம் பேசுதல், தாழ்வு மனப்பான்மை, சகபெண்ணினத்தையே எதிரியாகப் பார்க்கும் போக்கு ஆகிய தீய குணங்கள் களையப்பட வேண்டும்.

தேவையற்ற ஆடம்பரங்கள், தான் பெண் என்று தனிப்பட்ட முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கும் அதிகப்படியான அலங்காரம், விளம்பரங்களின் கவர்ச்சியில் விட்டில் பூச்சியாய் வீழ்வது, போன்ற தேவையில்லாத விசயங்களைத் தவிர்ப்பதனாலும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் பழம்பெரும் கலாச்சாரத்தின் பெருமையை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் இன்று, சேர்ந்து வாழும் மேலைநாட்டு கலாச்சாரம் இன்று நம் நாட்டிலும் புற்று நோய் போல பரவி இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருப்பதும் வேதனைக்குரிய விசயமாக உள்ளது. பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, சுயமுன்னேற்றத்தை மட்டும் முன்னிறுத்தி தேவையற்ற மற்ற விசயங்களை புறந்தள்ளி வெற்றி நடைப்போட எண்ணம் கொண்டாலே தங்கள் சாதனையின் எல்லைக் கோட்டை எட்டிவிடும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பதே சத்தியம்!






Monday, May 28, 2012

ஞான ஒளி (கலீல் ஜிப்ரான்)


இதமான அமைதியின் ஊடே உம் இதயம் உணரும் இரகசியமாய் பகல், இரவுகளின் நீட்சி.
ஆயினும் உம் செவிப்பறையின் ஏக்கமாய்
உம் இதயஞான, கீதத்தின் ஓசைகள்.
சதாசர்வமும் உம் சிந்தையை நிறைத்திருக்கும் எண்ண அலைகள்
இனிய சொற்களாய் வடிவுறும் கலையும் அறியக்கூடுமே நீவிர்
உம் கனவுகளின் நிர்வாணமதை
உம்முடைய விரல்கள் தீண்டும் இன்பம் பெறட்டும்.
எஞ்ஞான்றும் நன்றே செய்மினே. நீவிர்
உம்மின் ஆன்மாவினூடே புதைந்து கிடக்கும் நன்மைகள் எழுச்சியாய்
விரையட்டும் முணங்குதலாய்; சாகரம் நோக்கி.
கண்காணா ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அக்கருவூலம்
உம் கண்களினூடே ஒளியாய் மின்னட்டும்.
ஆயினும் நீர் அறிந்திராத அச்செல்வங்களை
அளக்கும் அளவுகோல் ஏதும் இல்லாதிருக்கட்டும்:
உம் ஞானத்தின் ஆழத்தை ஊழியர்களோ அன்றி
உம் உளக்குறிப்பின் ரேகையோ கொண்டு நீவிர் தேடாமல் இருப்பீராக
காரணம் அளவையிலும்,கரையினுள்ளும் அடங்காத சாகரமாய் இருப்பதே அச்சுயம்.
யாம் கண்டோம் சத்தியத்தைஎன்றே செப்பாமல், “யாம் ஓர் சச்சமதைக் கண்டோம்என்று செப்புவது மேல்.
யாம் ஆன்மாவின் பாதையைக் கண்டோம்என்பதைவிட யாம் எம் பாதையின் மீது நடந்து செல்லும் அந்த ஆன்மாவை சந்தித்துவிட்டேன்என்றே சொல்லும்.
காரணம் அந்த ஞாதிரு சர்வ தளங்களின் மீதும் தம் சுவடியைப் பதிக்கக் கூடியது. ஒற்றைக் கோட்டின் மீதும் நடப்பதில்லை அந்த ஞாதிரு, நாணல் தளிராய் முளைப்பதும் இல்லை.
எண்ணிலடங்கா இதழ்களைக் கொண்ட தாமரையாய்த் தம்மையே மலரச்செய்கிற ஞாதிரு தாமேஅது.



On Self-Knowledge
Kahlil Gibran
Your hearts know in silence the secrets of the days and the nights.
But your ears thirst for the sound of your heart's knowledge.
You would know in words that which you have always known in thought.
You would touch with your fingers the naked body of your dreams.


And it is well you should.
The hidden well-spring of your soul must needs rise and run murmuring to the sea;
And the treasure of your infinite depths would be revealed to your eyes.
But let there be no scales to weigh your unknown treasure;
And seek not the depths of your knowledge with staff or sounding line.
For self is a sea boundless and measureless.


Say not, "I have found the truth," but rather, "I have found a truth."
Say not, "I have found the path of the soul." Say rather, "I have met the soul walking upon my path."
For the soul walks upon all paths.
The soul walks not upon a line, neither does it grow like a reed.
The soul unfolds itself like a lotus of countless petals.

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...